
அத்தியாயம் – 20
“என்ன நித்து ரொம்ப டல்லாயிருக்க மாதிரி இருக்கு” கண்ணாடியின் முன்பு நின்று முகத்தில் வருத்தம் தெரிய ஏதோ யோசித்து கொண்டிருந்தவளை பின்னாலிருந்து வந்தணைத்தான் ரிஷி மித்ரன்,…
காலையில் அவன் கொஞ்சம் கோபமாக பேசிவிட்டு போனதை எண்ணி, அன்று முழுக்க வருத்தத்துடன் வலம் வந்தாள், பாட்டியும் தாத்தாவும் கூட அவள் முகத்தை கணித்து, “உடம்பு எதுவும் சரியில்லயாடா? ரிஷி ஏதாவது சொன்னானா?” என கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து விட்டார்கள், அம்மா நியாபகம் வந்து விட்டது என கூறி பாட்டியின் மடியில் கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டவளுக்கு உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும், அதற்கு பிறகு சகஜமாகவே உரையாட ஆரம்பித்திருந்தாள், அறைக்கு வந்த பின்னர் மீண்டும் ரிஷியின் கோபவார்த்தைகள் நினைவு வந்து வேதனை படுத்தவே, அவனை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தாள் கண்ணாடியின் முன்பு நின்று, அப்போது தான் அறைக்கு வந்த ரிஷி அவளை அணைத்து விசாரித்தான்,…
கணவனின் வருகையை அறியாதவள், அவனது அணைப்பில் யோசனையிலிருந்து வெளி வந்தாள், “ஒன்னுமில்ல” என்றாள் அவன் கேள்விக்கு பதிலாய்,….
“இல்லையே,…. முகமே காட்டி கொடுக்கிதே ரொம்ப ஃபீலிங்ல இருக்கனு” என கேட்டுக் கொண்டே அவளை தன் பக்கம் திருப்பி அவள் இடையை சுற்றி தன் கரங்களால் வளைத்தவன்,… “என்ன உன் லவ்வர் நியாபகமா?” என்றான்,….
அவன் மீண்டும் மீண்டும் கருணாவை லவ்வர் லவ்வர் என கூறுவது அவளுக்கு கோபத்தை தரவே, அவனை முறைத்து விட்டு அவனை பிடித்து தள்ளி விட்டவள், எதுவும் பேசாமல் அறையை விட்டே நகர முயல, அந்த கணம் போனவளின் கரம் பிடித்து இழுத்து தன் மீது போட்டவன் அவளுடன் கட்டிலில் சரிந்தவாறு… “இப்போலாம் உனக்கு அதிகமா கோபம் வருது, இல்ல நித்து” என்றான் அவள் மூக்கை பிடித்து ஆட்டியபடி,…
அவள் எதுவும் பேசவில்லை, அவனை முறைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொள்ள,… “அட” என அவளை தூக்கி தன் மீது போட்டுக் கொண்டு,.. அவளது முதுகில் கரத்தை படரவிட்டு அவள் எழ முடியாதளவிற்கு அணை போட்டுவிட்டு, அவள் முகம் பார்த்தவன்…. “பேச மாட்டியா நித்து” என்றான் தன் பார்வையால் அவள் முகத்தை அளந்தபடி,….
அப்போதும் அவள் பேசவுமில்லை, அவன் முகத்தையும் பார்க்கவுமில்லை, அவள் அவன் மீதிருந்தாலும் அவள் பார்வை முழுக்க வேறு பக்கம் தான் இருந்தது, அவளது செயலை புருவம் உயர பார்த்தவன், இதழோர சிரிப்பொன்றை வெளியிட்டு,…. “நித்து என்னை பாரேன்” என்றான் மீண்டும், அப்போதும் அவள் பார்க்கவில்லை,….
“உனக்கு அவ்வளவு வீம்பாடி” என்றவன் எட்டி அவளது மூக்கை கடித்து வைக்க, வலியில் “ஷ்ஷ்” என்று முணங்கினாளே தவிர, அவனை பார்க்கவில்லை,…
“நான் வேணும்னா உன்னை இப்போதே கருணா கிட்ட கொண்டு போய் விட்டுடட்டுமா” அவனது சொல்லில் அவளது பார்வை அவன் முகத்தில் வந்து நின்றது, அவள் விழிகளில் சந்தோசத்தை காணவில்லை அவன், அதனை உணர்ந்த அவன் மனம் துள்ளி குதிக்க, அடுத்த கணம் அவளது இதழை கவ்விக்கொண்டான் காதலோடு, அவனை தடுக்க நினைத்தவளும், வழக்கம் போல் அவன் முத்தத்தில் உருகி அவனுடன் மூழ்கி முத்தெடுத்தாள்,…..
*****************
“நித்து நாம வெளியே எங்கேயாச்சும் போலாமா” என்றான் ரிஷி,… கணவனின் கோப வார்த்தையால் வருத்தத்தில் இருந்தவள், அவன் மேலும் மேலும் கருணாவை பற்றியே பேசவும், அவனிடம் பேசவே கூடாது என்ற ஒரு முடிவோடு தான் இருந்தாள், எவ்வளவோ முயன்று கொஞ்ச நேரம் அவனிடம் பேசாமல் போக்கு காட்டியவள், அவனது ஒற்றை முத்தத்திலேயே மயங்கி கிறங்கி அவனுள் ஐக்கியமாகி போனாள், இரவு நடந்த ஊடலுடன் சேர்ந்த கூடலில் அவளது கோபமும் மொத்தமாக குறைந்திருக்க, வழக்கம் போல சகஜமாக உரையாட தொடங்கியிருந்தாள், அவனுக்கு வேண்டிய உடைகளை அயர்ன் செய்து, குளித்து முடித்து வந்தவனிடம் அணிந்து கொள்வதற்காக நீட்டிக் கொண்டிருந்த சமயம் தான் அவன் அக்கேள்வியை கேட்டான் திடீரென்று,…
“என்ன திடீர்னு வெளியேலாம் கூப்பிடுறீங்க” காரணம் இல்லாமல் அழைக்க மாட்டானே என்ற யோசனையுடன் தான் வினவினாள்,…
“நமக்கு கல்யாணமாகி ஒருமாசம் ஆக போகுது, இதுவரை என் பொண்டாட்டியை வெளியே எங்கேயும் அழைச்சிட்டு போகல இல்லயா? அதான்” இடுப்பில் டவலுடன் நின்றவன் அவளை தன்னருகே இழுத்து, அவளை இடையோடு அணைத்தான்,….
“எங்கே போலாம்” அவனது அணைப்பை இதமாய் அனுபவித்துக் கொண்டே விழிகள் பளிச்சிட ஆர்வமாய் வினவினாள்,….
“நீயே சொல்லு, உனக்கு எங்கே போகனும்னு ஆசை” என்றான் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி,.
“கோயிலுக்கு போலாமா?” அவளிடமிருந்து இதை எதிர்பார்க்காதவன், கொஞ்சம் ஏமாற்றமாய் அவளை பார்த்துவிட்டு அவளது ஆசையை நிராசையாக்க விரும்பாமல்,… “ம்ம்… போலாமே” என்றுவிட்டு,…. “வேற” என்றான்,…
“வேற என்ன? கோயிலுக்கு மட்டும் போயிட்டு வீட்டுக்கு வந்துடுவோம்” அவள் உதட்டை சுழித்து கூற,… “ஏதாச்சும் ரொமாண்டிக்கான பிளேஸ் சொல்லுவன்னு எதிர்பார்த்தேன் நித்து, இட்ஸ் ஓகே எனக்கு வாச்சது அவ்வளவு தான்” என்ற புலம்பலுடன் அவன் விலகி கொள்ள,…. “நாம வேணும்னா கோயிலுக்கு போயிட்டு ஹோட்டல் எங்கேயாச்சும் போயிட்டு வருவோமா” அவன் முகம் சிறுத்துவிட்டதில், அவசரமாக யோசித்து ஒரு ஐடியா கொடுத்தாள்,…
“ஹோட்டல்க்கா?” என நெற்றி சுருங்க கேட்டவன் “போலாமே,… கேண்டில் லைட் டின்னர், என் வைஃப் கூட போகணும்னு கல்யாணத்துக்கு முன்னாடிலிருந்தே ஆசை, இன்னைக்கு அந்த ஆசையை நனவாக்கிடலாம்” என்று கண்கள் மின்ன கூறியவன்,… “நான் ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுறேன், நீ ரெடியா இரு” என உடையணிந்து முடித்தவன், மனைவி கையில் பரிமாறியதை உண்டு விட்டு, வேலைக்கு கிளம்பினான்…..
அவன் போன நிமிடத்திலிருந்தே சாயந்தரம் கணவனுடன் வெளியே செல்லும் போது என்ன உடை உடுத்தலாம் என்று தான் அலமாரியை ஒரு வழியாக்கி கொண்டிருந்தாள் நித்யா, கணவனுடன் முதல் முறை வெளியே செல்ல போகிறாள், அவன் கண்ணிற்கு இன்று, தான் கூடுதல் அழகாக தெரிய வேண்டும் என்பதற்க்காகவே மணி கணக்காக உடையை தேர்வு செய்து கொண்டிருந்தாள், தாய்க்கு அழைத்து தான் எந்த உடையில் அழகாய் இருப்பேன் என்று வினவினாள், திடீரென்று மகள் போன் பண்ணி இதை ஏன் கேட்கிறாள் என்பது புரியாத செந்தூரம், காரணத்தை கேட்க, அவள் கூறவில்லை, தன் கேள்விக்கு விடை கேட்டு நின்றாள், அவரும் “உனக்கு புடவை நல்லா இருக்கும்டா” என பதில் கூறவும் விடை கிடைத்து விட்ட திருப்தியில் பிறகு பேசுவதாக கூறிவிட்டு வைத்து விட்டாள், செந்தூரம் தான் எதுவும் புரியாமல் மகனிடம் புலம்பினார்,…
செவ்வந்தியிடமும் விசாரித்தாள், தனக்கு என்ன உடை நன்றாக இருக்கும் பாட்டி என்று கேட்டாள், அவளின் முகத்தை ஆராய்ந்தவர் கேள்வி கேட்டு குடையாமல் “புடவை நல்லா இருக்கும் கண்ணு” என்றார்,…
“தேங்க்ஸ் பாட்டி” என கூறி அவரது கன்னத்தில் சந்தோஷமாக முத்தம் ஒன்று வைத்தவள், அறைக்கு ஓடினாள்,… “பேத்தி முகத்துல இன்னைக்கு ஒரு வித தேஜஸ் தெரியுதுல செவ்வந்தி” மனைவியிடம் மகிழ்ச்சியுடன் விசாரித்தார் தர்மா,…
“ஆமாங்க, நேத்து தான் கூம்பி போன முகமா வலம் வந்தாளேன்னு, பார்க்க பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, இன்னைக்கு மலர்ந்த முகமா பார்த்த பிறகு தான் என் மனசுக்கும் நிம்மதியா இருக்கு, ஒரு நாள் சந்தோசமா இருக்கா, ஒரு நாள் முகத்தை தொங்க போட்டுக்கிட்டு இருக்கா, நம்ம பேரன் பேத்தியோட வாழ்க்கையில என்ன நடக்குதுன்னே தெரியல, ரெண்டு பேரும் சந்தோசமா தான் இருக்காங்க, ஆனா ஏதோ பிரட்சனை இருக்க மாதிரியும் சில நேரம் தோணுதுங்க” என்று புலம்பினார் செவ்வந்தி,…
“கவலை படாத செவ்வந்தி, புதுசா கல்யாணமானவங்க, போக போக புரிஞ்சிக்கிட்டு சரியாகிடுவங்க, நமக்குள்ள வராத மனஸ்தாபமா? ஒன்னு சொன்னாலே கோச்சுகிட்டு முகத்தை தூக்கி வச்சுப்ப, அப்படி பார்த்தா என் பேத்தி தங்கம், உன் பேரன் தான் முரடன்” என்றான் சைடு கேப்பில் மனைவியையும் குத்திக் காட்டிக் கொண்டே,…
“என்னை இழுக்கலன்னா உங்களுக்கு தூக்கம் வரதே” என கழுத்தை நெடித்துக் கொண்டு அவர் எழுந்து சென்று விட,.. “பார்த்து செவ்வந்தி, வயசான காலத்துல கழுத்து சுளுக்கிக்க போகுது” என மனைவியை கிண்டல் செய்தவர், அவர் நின்று திரும்பி பார்த்து முறைக்கவும், வாய்விட்டு சிரித்தார் ஆனந்தமாக,… “இந்த கிண்டல் கேலியையெல்லாம் அடக்க என் கொள்ளு பேரனோ பேத்தியோ வருவா, அப்போ உங்களை வச்சுக்கிறேன்” என்று கூறியவரின் இதழும் புன்னகையில் விரிந்திருந்தது,…
சில மணி நேர தேர்ந்தெடுப்பிற்கு பிறகு, பேபி பிங்க் நிற டிசைனர் புடவை ஒன்றை தேர்ந்தெடுத்த நித்யா அதற்கு மேட்சிங்கான ஆபரணங்களையும் தயாராக எடுத்து வைத்தாள், பாட்டியிடமும் தாத்தாவிடமும் உணவுன்னும் கொஞ்ச நேரம் கதை அளந்தாள், ரிஷியுடன் வெளியே போக போகின்ற விஷயத்தை கூற ‘ஓஹ்… இதான் விஷயமா?’ என இரு மூத்தவர்களும் அர்த்தமாக பார்த்து சிரித்துக் கொண்டவர்கள், நித்யாவை எதுவும் சீண்டவில்லை,….
மூன்று மணியிலிருந்தே தயாராக ஆரம்பித்து விட்டாள் நித்யா, பார்த்து பார்த்து மிகவும் நேர்த்தியாக புடவை உடுத்தினாள், கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்தாள், தங்க வளையல்கள் இருந்தாலும் அந்த புடவைக்கு ஏற்ற நிறத்தில் கண்ணாடி வளையல்கள் இருந்ததால் தங்க வளையல்களை விட இது நன்றாக இருக்கும் என எண்ணி கண்ணாடி வளையல்களையே அணிந்து கொண்டாள், காதில் பிங்க் நிற கற்கள் பதித்த அழகான டிசைனர் தோடு, கழுத்திலும் அதற்கு மேட்சான சிம்பிளான நெக்லஸ், அதோடு அவளது தங்க தாலி, தலையை தளர பின்னி மல்லிகப்பூவை அதிகமாகவே சூடிக் கொண்டாள்,….
முகத்திற்க்கு இன்று பிரைமரில் ஆரம்பித்து ஃபவுண்டேஷன், காம்பக்ட் பவுடர் வரை அனைத்தையும் பூசினாள், கண்ணின் மேல் பட்டையில் ஐ லைனர், கண்ணிற்கு கீழே காஜல் இட்டதோடு விட்டுவிட்டாள், புருவத்திற்கு லேசாக கருமை தீட்டிக் கொண்டு, உதட்டிற்கும் சாயம் பூசிக் கொண்டாள்,…….
வழக்கமாக கண்ணிற்கு காஜல் வைப்பாள் அவ்வளவே, கடைசியாக தாய் வீட்டிற்கு மறு வீடு சென்ற போது உதட்டுசாயம் போட்டுக் கொண்டாள், இன்று கொஞ்சம் கூடுதலாகவே அழகு சேர்க்கனும் என்று சில அழகு சாதன பொருட்களை சேர்த்து உபயோகப்படுத்திக் கொண்டாள்,… கண்ணாடியையும் ஒருமுறைக்கு பல முறை பார்த்துக் கொண்டவளுக்கு எல்லாம் பக்காவாக இருப்பது இருந்தது, அதே நேரம்…. “நித்து ரெடியா” என்றவாறு சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தான் ரிஷிமித்ரன்,….
வந்தவன் மனைவியின் அழகு முகத்தை கண்டு மெய்மறந்து நின்றுவிட்டான், அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை இவள் இவ்வளவு அழகாக தயாராகுவாள் என்று, மறுவீட்டு பங்சனின் போது கூட இவ்வளவு அழகாக இருக்கவில்லை, இன்று ரதியை போல் மின்னினாள், கணவனின் விழுங்கும் பார்வை அவளை நாணி சிவக்க வைக்க, தலை குனிந்து கொண்டாள், ஏற்கனவே அவள் அழகில் மயங்கி நின்றவன், அவளது வெட்கி சிவந்த முகம் கண்டு அவன் உணர்ச்சிகள் புடைத்தெழுந்து அவன் ஆண்மையை விழிக்க வைத்தது,… “நி.. நித்து ப்ரோக்ராம் கேன்சல்” அவனது தாபமான குரலில் சட்டென நிமிர்ந்தவள்,…”என்னது, ஏன் மித்து, நான் ஆசை ஆசையா ரெடியானேன்” என்றவளின் முகம் விழுந்து விட்டது,…
“பொய் சொல்லாம சொல்லு, நிஜமா வெளியே போகணும்னு தான் நீ ரெடியானியா? இல்ல நான் உன் மடியிலேயே கிடக்கணும்னு எதுவும் வேற மாதிரி பிளான் போட்டு ரெடினானியா” அவன் சொல்லின் அர்த்தம் புரிந்து, வெட்கம் நெடித்து தள்ள, உதட்டை கடித்து தன் உணர்சிகளை அடக்கி கொண்டவளின் அருகில் வந்தவன், அவளது இதழை அவளது பற்களுக்கிடையிலிருந்து தன் விரல்களால் எடுத்து விட்டு,…”நோ நித்து, இது எனக்கு சொந்தமானது, அதை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாத” என அவளது இதழை வருடிக் கொண்டே கூற,… “மித்து” என்று கூற வந்தவளின் இதழ்கள் நொடியில் அவன் வசமிருந்தது….
“மித்து கோயிலுக்கு போகும் போது சுத்த பத்தமா போகணும், நாம இதை வந்து வச்சுக்கலாமா?” கணவன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதை கண்டு அவசரமாக கூறினாள் நித்யா….
அவளை விட்டு கொஞ்சமாய் விலகி, அவள் முகம் பார்த்தவன், அவள் வெளியே போக ஆசையாய் இருக்கிறாள் என்பதை அறிந்து, தன் உணர்வுகளை அடக்கி கொண்டு,… “ஓகே நித்து,… நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்” என அவள் நெற்றியில் அழுத்தமாக காதல் முத்திரையை பதித்து விட்டு, முதலில் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள குளியலறைக்குள் நுழைந்தான்,…
கணவனுக்காக ஏற்கனவே அவள் உடை எடுத்து வைத்திருக்க, குளியலறையிலிருந்து வெளி வந்தவன், அவள் நீட்டிய சட்டையை பார்த்து விட்டு,… “இது வேணாம் நித்து” என்றுவிட்டு, வேறொரு சட்டையை கையில் எடுத்தான்,…
அவள் புடவைக்கு மேட்சான நிறத்தில் இருந்தது அந்த சட்டை,… “மேட்சிங் மேட்சிங்” என கண்சிமிட்டி கூறியவன், அதனை அணிந்து கொண்டான்,… தானும் அவள் கணவனும் ஒரே கலர் உடையில் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது அவளுக்கு, என்றோ ஒருநாள் ஒரு புதுமண தம்பதிகளை ஒரே நிற உடையில் கண்ட போது, தனக்கும் திருமணமானாள் இது போல் ஒரு முறையாவது ஒரே நிறத்தில் உடையணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தாள், தற்போது அவளுக்கு அது நியாபகம் வந்தது, முகம் பூரித்து போனது,….
“கிளம்பலாமா நித்து” என்றான் சட்டைக்கு மேட்சாக பேண்ட்டும் அணிந்து, கேசத்தை அழகாக வாரி, கையில் வாட்ச்சுடன் ஆணழகனாக தயாராகி நின்றவன்,…. வழக்கத்தை விட இன்று அதிக ஹேண்ட்சமாக தெரிந்தான் அவள் கண்களிற்க்கு, முழுக்கை சட்டையை அவன் முழங்கை வரைக்கும் மடித்துவிட்டிக்கும் அழகே தனியாக தெரிந்தது, வெளிப்படையாக சைட் அடித்தாள் அவனை,….
“நித்து…. நிஜமா எனக்கு வெட்கமா இருக்கு நீ இப்படியெல்லாம் பார்க்கிறத பார்த்து” அவன் இதழ் விரிந்த புன்னகையுடன் கூற, அவளது இதழிலும் புன்னகை மலர்ந்தது, இன்னும் கொஞ்ச நேரம் நின்றாலும் பிளானை மாற்றி விடுவான் என்று,.. “கிளம்புவோமா” என்று தானே அவனது கரத்துடன் தன் கரம் கோர்த்து அறையை விட்டு வெளியேறினாள்,… பாட்டி தாத்தாதவிடம் இருவரும் சொல்லிவிட்டு புறப்பட தயாராக, தன் பேரன் மற்றும் பேத்தியின் ஜோடி பொறுத்தத்தை கண்டு வாய்பிளந்து நின்றவர்களும், வெளியே யார் கண்ணும் பட்டுவிட கூடாது என்பதற்காக அவர்களுக்கு திருஷ்டி கழித்து தான் அனுப்பி வைத்தார் செவ்வந்தி…
“ஏன் செவ்வந்தி, வெளியே போயிட்டு வீட்டுக்குள்ள வரும் போது தானே திருஷ்டி கழிப்பாங்க” என்ற கணவனிடம்,… “அதுகென்ன, போயிட்டு வந்த பிறகும் நான் திருஷ்டி கழிப்பேன்” என்று திருஷ்டி கழித்த பிறகே சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தார் இருவரையும்….
“எந்த கோயிலுக்கு போலாம் நித்து, ரெகுலராக போற கோயிலுக்கு தானே” என கேட்டான் காரை ஓட்டிக் கொண்டிருந்த ரிஷி,…
“இல்ல,… அங்கே இல்ல, குகை கோயிலுக்கு போங்க” நித்யா கூற,… “குகை கோயிலா? அது எங்கே இருக்கு” என்றான் புரியாதவனாய்,…
“நீங்க போங்க, நான் வழி சொல்றேன், ரொம்ப தூரம் எல்லாம் இல்ல கொஞ்சம் பக்கத்துல தான்” என்றவள், அவனுக்கு வழி கூற தயாரானாள்,…..
“அந்த கோயில்ல அப்படி என்ன ஸ்பெஷல், ஏன் அங்கே போலாம்னு சொல்ற?” ரிஷி சும்மா தெரிந்து கொள்ளும் நோக்கில் கேட்க,… “ஸ்பெஷல்னு எதுவும் இல்ல, சும்மா போகணும்னு தோணுச்சு, கல்யாணத்துக்கு முன்ன தோழிங்களோட அங்கே போவேன் அடிக்கடி, இப்போ உங்க கூட போகணும்னு சின்ன ஆசை” என்றாள்,…
அவள் சொன்ன கோயில் காட்டுப்பகுதி போலிருந்த திசையில் இருந்தது, வழி கூறிக்கொண்டே வந்தவளிடம்,… “ஏன் நித்து இந்த காட்டுப்பகுதில கோயில் இருக்கா என்ன” என ஆச்சரியமாக கேட்டான் அவன்…
“ஆமா மித்து, சக்தி வாய்ந்த அம்மன் கோயில் அது, நாம என்ன வேண்டிக்கிட்டாலும் நடக்கும், அவ்ளோ மகத்துவம் இருக்கு அந்த அம்மனுக்கு” என்றவளிடம் “ஓஹ்” என்பதோடு அவன் நிறுத்திக் கொள்ள,… அவளோ “நிறுத்துங்க நிறுத்துங்க” என வேகமாக நிறுத்த சொன்னாள்,…
“இதுக்கு மேல ரோடு இல்ல நித்து, நிறுத்தி தான் ஆகணும்” என்றவன்,… “எங்கே கோயிலயும் காணோம், சாமியையும் காணோம்” என்றான் சுற்றி ஆராய்ந்தபடியே,…
“கொஞ்ச தூரம் நடந்தா வந்துடும், வாங்க இறங்கலாம்” என்றவள், அவனுடன் இறங்கி நடந்தாள், பெரிய பயங்கரமான காட்டுப்பகுதியெல்லாம் அல்ல அவ்விடம், சுற்றிலும் மரங்கள் படர்திருந்தது, பார்ப்பதற்கு சிறியகாடு போல் காட்சியளித்தது, பறவைகளின் கீச்சிடும் சத்தம், இயற்கையான காற்று என மனதிற்கு இதத்தை அளிக்கும் விதமாக இருந்தது, கணவனுடன் கைகோர்த்தபடி சின்ன சின்ன பேச்சுகளுடன் நடத்தவள் குகை போல் இருந்த அவ்விடத்திற்குள் நுழைந்தாள், அம்மன் சிலை முன்பு நின்று வணங்கினர் இருவரும், அவ்விடத்திற்கு வந்த நித்யாவின் முகத்தில் ஏனோ இன்று ஒரு வித பரவசத்தை பார்க்க முடிந்தது, அதை கவனித்த ரிஷியும் “என்ன நித்து, ரொம்ப உற்சாகமா இருக்க, என்ன மேட்டர்” என்றான்
“அதெல்லாம் எதுவும் இல்ல மித்து, எப்போ இங்க வந்தாலும் இப்படி தான், என்னமோ தெரியல, இந்த கோயில், இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும், இங்க வந்தா மனசுக்கு புத்துணர்ச்சி கிடைச்ச மாதிரி இருக்கும்” என்றவள், “நீங்க எப்படி ஃபீல் பண்ணுறீங்க, உங்களுக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?” என்றாள் ஆர்வமாய்
சுற்றி இடத்தை ஆராய்ந்துவிட்டு… “ம்ம்… பிடிச்சிருக்கு” என்றவன், அவள் அமர்ந்து கொண்டிருந்த பெரிய கல்லின் அருகில் தானும் அமர்ந்து, அவளுடன் சின்ன சின்ன கதைகள் பேசினான்,….
“கிளம்புவோமா மித்து, இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும், இங்க லைட் எல்லாம் கிடையாது” அவள் கூற,… “சரி வா” என்றவன் அவளது கரத்தை பற்றி அழைத்து சென்ற நேரம் திடீர் சலசலப்பு, யாரோ நடப்பது போல் இருந்தது அந்த சத்தம்,…
“என்ன சத்தம் அது” ரிஷிக்கு மட்டும் கேட்கவில்லை, நித்யாவின் காதிற்கு கேட்டுவிடவே, அவனிடம் வினவினாள்…
அவளுக்கு பதில் கூறாமல் தன் கூர்விழிகளால் சுற்றி ஆராய்ந்தவனின் கழுகு விழிகளில் விழுந்து விட்டது தங்களை சுற்றி மறைந்து நின்ற நபர்கள்…. அவர்கள் தங்களுக்கு தெரியாமல் மறைந்து இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் கெட்ட எண்ணமாக தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டவன், மனைவியை தான் பார்த்தான், அவன் பார்வைக்கான அர்த்தம் புரியாமல் அவள் அவனை ‘என்ன’ என்பது போல் பார்க்க,.. அவளது கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டவன்…. “நித்து ஓட ரெடியா இரு” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,…
“என்ன” அவள் புரியாமல் நெற்றி சுருக்க,… “ஓடு” என்றவன், அவளை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான், நித்யாவிற்கு அவன் செயல் எதுவும் புரியவில்லை, அவன் இழுத்த இழுப்பிற்கு ஓடிக் கொண்டிருந்தவள், தங்களது பின்னால் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்கவே, திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள், ஐந்தாறு பேர் கையில் ஆயுதத்துடன் அவர்களை தான் துரத்திக் கொண்டு வந்தனர், பார்த்ததும் மனம் படபடத்தது, சேலையை ஒரு கையால் பிடித்து தூக்கிக் கொண்டு இந்த முறை பயத்தில் அவனுடன் ஓடினாள்,….
தங்கள் காரை நெருங்கியதும் அவளுக்கு மூச்சு வந்தது போல் இருக்க, அவள் கணவனோ காரையும் தாண்டி ஓடினான், “மி.. மி..த்து” மூச்சு வாங்க அவனை அழைக்க முயன்றாள், முடியவில்லை, அவனோ முகத்தில் இறுக்கம் குடிகொள்ள, முன்னால் தெரியும் வழியில் ஓடிக்கொண்டிருந்தான் தீவிரமாக,…
கொஞ்ச நேரத்திலேயே மெயின் ரோடு வந்து விட்டது, அந்த வழியாக தான் அவர்களும் வந்தார்கள், தெரிந்து தானே அவன் அவளை அழைத்துக் கொண்டு ஓடி வந்தது, சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றை நிறுத்திவிட்டு, மனைவியை ஏற சொன்னவன், அவனும் ஏறுவான் என்று பார்த்தால் ஆட்டோ ஓட்டுனரிடம் தான் யார் என்பதையும், அட்ரஸையும் கூறி அந்த அட்ரஸில் நித்யாவை பத்திரமாக விட்டுவிடும்படி கூறினான்,…..
“நீங்க வரலையா? தயவு செஞ்சு என்கூட வந்துடுங்க” ஓடி வந்ததில் மூச்சு இன்னமும் வாங்க, அவன் கரத்தை பற்றிக் கொண்டு கூறினாள் நித்யா,…..
“நான் வருவேன் நித்து, நீ போ, ஜாக்கிரதை” என்றவன், அவள் சொல்ல சொல்ல கேட்காமல் ஓட்டுனரை வண்டியை எடுக்க சொன்னான், ஆட்டோ புறப்பட்டு விட, நித்யா கண்ணீர் வழிந்தோட அவனை ஆட்டோவிலிருந்து பார்த்துக் கொண்டே சென்றாள்,….
இத்தனை நேரம் இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சோடு ஓடி வந்தவன், மனைவியை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்ட நிம்மதியில் ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டு சாவகாசமாக திரும்பினான், அவனையும் அவன் மனைவியையும் துரத்திக் கொண்டு வந்தவர்கள் அப்போது தான் அவ்விடம் வந்து சேர்ந்தனர் மூச்சு பலமாக வாங்க, அவன் இவ்வளவு நேரம் பயந்து ஓடி வருகிறான் என்ற எண்ணத்தில் அவனை துரத்திக் கொண்டு வந்தவர்கள், தற்போது தங்கள் முன்னே துணிச்சலாக விழிகளில் ஒருவித கொடூரத்துடன் நின்றவனை பார்த்து கொஞ்சம் ஜர்க் ஆக, அவனை நெருங்காமல் அப்படியே நின்று விட்டனர்,…
அவனோ விழிகளில் அனலை தேக்கி அவர்களை முறைத்தவன், அவர்களை நோக்கி காலடி எடுத்து வைக்க, மிரண்ட விழிகளுடன் நின்றவர்கள், அவனது விழிகளில் தெரிந்த ரௌத்திரத்தை கண்டு, வந்த வழியில் ஓடினர், இப்போது துரத்திக் கொண்டு ஓடுவது ரிஷியின் முறையாயிற்று, ஓட ஓட அவர்களை வெளுத்து கட்டினான், தன்னை தாக்க வந்தவர்களை தன் ஆளுமை கொண்டு சுலபமாக தாக்கி வீழ்த்தினான், தன் போலீஸ் டிப்பார்மென்டிற்கு அழைத்து அவர்களை வர சொன்னவன், அந்த ஆறுபேரையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, சிலவற்றை அவர்களிடம் உரைத்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டான்….
இங்கு நித்யா அழுகையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவள், அழுகையை நின்றபாடில்லை, தன் கணவனுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்று பூஜை அறையிலேயே விழிகளை மூடி பிராத்தனை செய்தபடி அமர்ந்து விட்டாள், அவள் கண்ணெதிர்க்கவே அவர்களை தாக்க ஆறுபேர் துரத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள், அவர்கள் கையில் ஆயுதம் வேறு, சொல்ல சொல்ல கேட்காமல் தன்னுடன் வராமல் இருந்துவிட்டாரே ஆதங்கத்தோடு சேர்ந்து பயமும் வேதனையும் அவளை ஆட்டி படைக்க, இறைவனின் காலடியில் விழுந்து விட்டாள், பாட்டி தாத்தா கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை, அவர்களை பயமுறுத்த வேண்டாம் என்றே வாயை கம் போட்டது போல் மூடிக் கொண்டாள், ஆனால் அழுகையை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை, ரிஷி இல்லாமல் நித்யா மட்டும் வந்திருப்பது வேறு அந்த மூத்தவர்கள் இருவரின் வயிற்றிலும் புளியை கரைத்தது, தன் பேரனுக்கு எதுவும் ஆகாது என்று உள்ளுணர்வு கூறினாலும் நித்யாவின் அழுகை அவர்களை பயத்தோடு வேதனையையும் அடைய செய்ய, அவளோடு சேர்ந்து அவர்களும் பிராத்தனையில் ஈடுபட்டனர், அவள் கரத்தை அழுத்தமாய் பற்றி ஆறுதல் அளித்தனர், ஒன்றரை மணிநேரம் நித்யா அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை,…
கண்டிப்பாக மனைவி பயந்து போயிருப்பாள் என்பதாலேயே ஸ்டேஷனுக்கு கூட செல்லாமல் வீடு வந்து சேர்ந்தான் ரிஷி, ரிஷியை முழுதாக கண்ட பிறகு தான் பிரிந்த உயிர் தன் உடலில் வந்து சேர்ந்ததை போல் உணர்ந்தாள் நித்யா, இடம் பொருள் என எதையும் உணரவில்லை, அவனை கண்ட நொடி ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டவள் வெடித்து அழுதாள், மனைவியின் அழுகை முதலில் அவள் தனக்காக தவிக்கிறாள் என்று சந்தோசத்தை தந்தாலும், கூடிக் கொண்டே போன அழுகையால் மனம் பதற, அவளை சமாதானம் செய்ய ஆரம்பித்திருந்தான், அப்போதும் அவள் அழுகையை நிறுத்தவில்லை, பெரியவர்களிடம் சொல்லிவிட்டு அவளை கையோடு அறைக்கு அழைத்து சென்றான், பெரியவர்களும் தங்கள் பேரனை கண்டுவிட்ட நிம்மதியில், அவன் மனைவியை அவனால் தான் சமாதானம் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் அனுப்பி வைத்தனர், அறைக்கு வந்த பிறகும் அவள் அழுகை நிற்கவில்லை, “ஏய் நித்து, இப்போ நடந்து போச்சுன்னு இப்படி ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்க, நான் என்ன செத்தா போயிட்டேன்” அவனது சொல்லில் அழுகையை கூட்டியவள்,… “தயவு செஞ்சு இப்படியெல்லாம் பேசாதீங்க” என்று அவனை கட்டி அணைத்துக் கொண்டவள்.. “உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சு அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்றாள்,…

