Loading

மதிய உணவு இடைவேளையின் போது, அவனை அழைத்த அவனது டீம் லீடரோ,”நீங்க ஏன் இப்போ எல்லாம் அடிக்கடி லீவ் போட்றீங்க மிஸ்டர். அபூர்வன்?”எனக் கேட்டிருந்தார். 

 

அதற்கு,”என் வொய்ஃப் ப்ரக்னன்ட் ஆக இருக்காங்க சார். அதனால் தான் செக்கப்புக்குக் கூட்டிட்டுப் போக லீவ் போட வேண்டியதாக ஆயிடுச்சு”என அவரிடம் விஷயத்தை தெரிவித்தான்.

 

அதைக் கேட்டதுமே,”அப்படியா? கங்கிராட்ஸ் சார். எப்போ எங்க எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்கப் போறீங்க?”என்றவரிடம், 

 

“தாங்க்யூ சோ மச் சார். கண்டிப்பாக சீக்கிரமே எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்கிறேன் சார்”என்று வாக்குறுதி அளித்தான் அபூர்வன். 

 

“நான் சும்மா தான் கேட்டேன் சார். ஆனாலும் ஒரு சஜஷன் சொல்றேன்! நீங்க இது வரைக்கும் போட்ட லீவ் போதும்! இனிமேல் அதிகமாக லீவ் எடுத்துக்காதீங்க! ஏன்னா, இதுக்கப்புறம் இப்படி ஆச்சுன்னா விஷயம் எம். டி – யோட காதுக்குப் போயிடும்! அப்பறம் டெலிவரி அப்போ உங்களுக்கு லீவ் கிடைக்காமல் போயிடப் போகுது!”என அவனுக்கு அறிவுரை வழங்கினார் டீம் லீடர். 

 

“ஓகே சார். இனிமேல் நான் ரெகுலரா ஆஃபீஸூக்கு வந்துடுவேன்”என்றுரைத்து விட்டு மாலையில் வீடு திரும்பியதும், 

 

தனது தாய், தந்தையிடம்,”ஆராவுக்கு இப்போ உடம்புக்குப் பரவாயில்லையா? வாமிட் வருதா?”என்று மனைவியைப் பற்றி விசாரித்தான் அபூர்வன். 

 

“இன்னைக்கு அவ வாந்தி எடுக்கலைடா. ஆனால் கொஞ்சம் அமைதியின்மையாக இருக்கிறாள்! நீயும் அவ கூடச் சண்டைப் போடாமல் சமாதானமாக இரு!”என மகனுக்கு அறிவுறுத்தினார் நீலவேணி. 

 

“சரிங்கம்மா. நான் ரூமுக்குப் போய் ஆராவைப் பார்த்துட்டு ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வர்றேன்”என்றவனிடம், 

 

“அப்படியே அவளையும் கூட்டிட்டு வா. அவ கூடச் சேர்ந்து காபி குடிக்கலாம்”எனக் கூறி அவனை அனுப்பி வைத்தார்கள் அவனது பெற்றோர். 

 

உடனே மாடிக்குச் சென்று தங்களது அறைக்குள் நுழைந்தவனோ கட்டிலில் உட்கார்ந்திருந்த மனைவியிடம்,

 

“என்னம்மா இப்போ ஹெல்த் எப்படி இருக்கு? நம்மக் குட்டி என்ன சொல்றாங்க?”என அவளது வயிற்றில் கையை வைத்து தங்களது மகவை மெல்ல வருடிக் கொடுத்தான் அபூர்வன். 

 

அதில் நெகிழ்ந்து போய்,”அம்மாவைத் தொல்லைப் பண்ணாமல் சமர்த்தாக இருக்காங்க!”என்று அவனிடம் கூறிப் புன்னகைத்தாள் ஆராத்ரிகா. 

 

“நான் போய் ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வர்றேன். உன்னையும் கீழே கூட்டிட்டு வரச் சொன்னாங்க”என்றவாறே அந்த அறையிலிருந்த குளியலறைக்குள் நுழைந்து விட்டான். 

 

உடனே கட்டிலில் இருந்து மெல்ல எழுந்து தனது புடவை மற்றும் தலையைச் சரி செய்து கொண்டுக் கணவனுக்காக காத்திருந்தாள் அவனது மனைவி. 

 

சிறிது நேரம் கழித்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்து விட்டிருந்தான் அபூர்வன். 

 

அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் கீழே இறங்கிச் சென்றனர். 

 

ஆராத்ரிகாவின் உடல்நிலையைப் பற்றி விசாரித்து விட்டு அவர்கள் இருவருடன் சேர்ந்து காபி அருந்தினார்கள் நாச்சிமுத்து மற்றும் நீலவேணி. 

 

“ஆராவுக்கு அடுத்தச் செக்கப் எப்போன்னுப் பார்க்கிறேன்”என்று மனைவியிடம் கூறி விட்டு அவளது பரிசோதனைக் கோப்பை எடுத்து அதில் தேதியைப் பார்த்து விட்டு, 

 

“இன்னும் நாலு நாளில் செக்கப் போகனும். ரெடியா இரும்மா”என்று மனைவிக்கு அறிவுறுத்தினான் அபூர்வன். 

 

“சரிங்க”என்றிருந்தாள் ஆராத்ரிகா. 

 

அவளுக்கு இப்போது தனது கணவனுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து விட்டிருந்தது. 

 

ஏனெனில் அவள் தனது முன்னாள் தோழி நிஹாரிகா தனக்கு உதவி செய்வதாகச் சொல்லி விட்டுப் எதிர்பாராத விதமாகப் பாதியிலேயே கைவிட்டு விட்டுப் போனதை எண்ணி மனதளவில் தளர்ந்து போயிருந்தாள் ஆராத்ரிகா. 

 

அதனாலேயே தன்னை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டிக் கணவனின் அருகாமைக்காக ஏங்கினாள். 

 

அதனால் எப்போதுமே தன்னுடைய தோளில் சாய்ந்து கொண்டும், தனது விரல்களைப் பிடித்து விளையாடிக் கொண்டும் இருந்த மனைவியின் மனநிலையைப் புரிந்து கொண்டு அன்றிரவு அவளைக் குழந்தையைப் போல் தாங்கினான் அபூர்வன். 

 

ஏனெனில், அவனுக்குத் தான், தனது மனைவியின் கடந்த காலம் மற்றும் இப்போது அவள் அனுபவித்துக் கொண்டு இருக்கும் மன வலி மற்றும் மன அழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்டிருந்தானே! 

 

அதனாலேயே அன்றிரவு அவளைத் தனது மார்பில் சாய்த்துப் படுக்க வைத்துக் கொண்டான். 

 

கணவனின் கைச்சிறைக்குள் அடைக்கலமாகி இருந்த ஆராத்ரிகாவோ அவனை ஆழ்ந்து நோக்கினாள்.

 

அதைக் கண்டு கொண்டு,”என்னாச்சு ஆரா? தூங்கலையா?”எனக் கேட்டு விட்டு அவளது தலைமுடியைக் கோதிக் கொடுத்தான் அபூர்வன். 

 

“ம்ஹூம்! இல்லை அபூ. எனக்குத் தூக்கம் வரலை”எனப் பதிலளித்தாள் ஆராத்ரிகா. 

 

“மாத்திரைப் போட்டும் தூக்கம் வரலையா உனக்கு?”என்றவனிடம், 

 

“இப்போதைக்கு வரலைங்க. நான் உங்க கிட்ட ஒரு கேள்விக் கேட்கலாமா?”என்று கேட்கவும், 

 

“எதுவாக இருந்தாலும் கேளு ஆரா”என அதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டு, அவளது கரு தாங்கிய வயிற்றைத் தனது கைகளால் தடவிக் கொடுத்தான் அபூர்வன். 

 

“உங்களுக்கு ஆண் குழந்தை இஷ்டமா? பெண் குழந்தை இஷ்டமா?”என அவனிடம் வினவ, 

 

“எனக்கு ரெண்டுக் குழந்தையும் இஷ்டம் தான்ம்மா!”என்று மென்மையான மொழிந்தான். 

 

“ஏங்க! உங்களுக்கு ரெண்டுக் குழந்தையுமே பிடிக்கும்னு சொல்றீங்களே? ஆனால் முதலில் எந்தக் குழந்தைப் பிறக்கனும்னு ஆசைப்பட்றீங்க?”என்று அவனிடம் வினவினாள் ஆராத்ரிகா. 

 

“பெண் குழந்தைப் பிறக்கனும்னு ஆசைப்பட்றேன்ம்மா”என்று ஆசையாக கூறியவனைப் புன்னகையுடன் ஏறிட்டுப் பார்த்து, 

 

“ஏன்? என்னக் காரணம்னுத் தெரிஞ்சிக்கலாமா?”என்றாள் ஆர்வமாக. 

 

“நீ தான் எனக்கு முதல் குழந்தை! அதில் எந்த மாற்றமும் இல்லை! ஆனால் நீ ஆசிரமத்தில் வளர்ந்ததால் உன்னோட சொந்த அப்பா, அம்மாவோட அன்பு உனக்குக் கிடைக்கலைன்னு நீ கண்டிப்பாக ஏங்கி இருப்ப! நீ அதை எங்கிட்ட சொல்லாமல் இருந்தாலும் உன் மனசுக்குள்ளே அந்த ஏக்கம் இப்போ வரைக்கும் கண்டிப்பாக இருக்கும்! அதனால் நான் உன்னையும், நமக்குப் பெண் குழந்தைப் பிறந்தால் அந்தக் குழந்தையையும் தாயுமானவனாக இருந்து பார்த்துக்கனும்னு ஆசைப்பட்றேன்ம்மா. உன் வாழ்வில் உனக்கு நடந்த எல்லா கெட்டதையும் என்னோட அன்பான கவனிப்பாலும், காதலாலும் மறக்கடிக்கனும்னு ஆசைப்பட்றேன்!”என்றவனைத் தன் கண்களில் கண்ணீரையும், இதழ்களில் புன்னகையையும் தேக்கிக் கொண்டு அவனைக் கட்டிக் கொண்டு, 

 

“அபூ! ஐ லவ் யூ! நீங்க எனக்கு இருந்த பயத்தையும், தயக்கத்தையும், பாதுகாப்பின்மையான உணர்வையும் உடைச்சுத் தகர்த்துட்டீங்க! தாங்க்யூ!”என அவனுக்கு நெகிழ்வுடன் நன்றிக் கூறி விடவும், 

 

அதில் பொய்க் கோபமடைந்து,“ஹேய்! ஒழுங்காகத் தூங்குடி!”என்று அறிவுறுத்தி விட்டு அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள அவனது பாதுகாப்பான அணுகுமுறையால் மன அமைதி அடைந்த பெண்ணவளோ நிம்மதியான உறக்கத்தை மேற்கொண்டாள் ஆராத்ரிகா. 

 

சிறிது நேரத்தில் அபூர்வனும் தானும் நித்திரையில் லயித்து விட்டிருந்தான் அபூர்வன். 

 

அதற்கடுத்த நாள் கண் விழித்த ஆராத்ரிகாவோ, தனக்கு அருகில் நிர்மலமான முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து விட்டுத் தன்னவனுக்குத் தன் மேலிருக்கும் காதல் எந்தச் சூழ்நிலையிலும் குறையப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டு இவ்வளவு நாட்களாக இவனிடத்தில் தானும், தன்னுடைய தோழிகளும் ஆடிய நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தாள் ஆராத்ரிகா. 

 

ஆனால், அவளுக்கே தெரியாமல் அவளது வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கனிஷ்காவிடம் கொஞ்சம், கொஞ்சமாக கேட்டுத் தெரிந்து கொள்ள உறுதி பூண்டிருந்த அவளது கணவனோ, 

 

அன்று தனது அலுவலகத்திற்கு எப்போதும் போல் கிளம்பிப் போய்ச் சமர்த்தாக வேலையைப் பார்த்து முடித்து விட்டு மாலையில் ஒரு பேக்கரியில் அமர்ந்து முட்டைப் பப்ஸ் மற்றும் ஒரு காபியை ஆர்டர் செய்து விட்டு,’நீ இப்போ ஃப்ரீயாக இருந்தால் கால் பண்ணும்மா’என்றக் குறுஞ்செய்தியைக் கனிஷ்காவிற்கு அனுப்பி வைத்து விட்டு அவளது பதிலிற்காக காத்திருக்கும் நேரத்தில் காபியைப் பருகலானான். 

 

ஆனால் அவனை வெகு நேரம் காத்திருக்க வைக்காமல் அவளிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

 

உடனே அதை ஏற்றுக் காதில் வைத்து,”ஹலோ”என்றிருந்தான் அபூர்வன். 

 

“ஹலோ அண்ணா. இப்போ தான் காலேஜில் இருந்து வீட்டுக்கு வந்து ரெஃப்ரஷ் ஆனேன். நீங்க வீட்டில் இருந்து பேசுறீங்களா என்ன?”என அவனிடம் விசாரித்தாள் கனிஷ்கா. 

 

“அதெப்படி வீட்டில் இருந்து இந்த விஷயத்தைப் பேச முடியும்மா? நான் ஒரு பேக்கரியில் இருந்துப் பேசிட்டு இருக்கேன்”என்று பதிலளிக்க,

 

“ஓஹோ! சரிண்ணா”என்றவளிடம்,

 

”அந்த நிஹாரிகா பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க? அந்தப் பொண்ணோட வீட்டில் எல்லாம் சரி ஆயிடுச்சாம்மா?”என்றான் அபூர்வன். 

 

“அவ படிப்பு முடிஞ்சதுமே காலேஜில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்குப் போன ஒரு மாசத்திலேயே தன்னோட வீட்டை எதிர்த்து வெளியே வந்து ஹாஸ்டலில் தங்கிட்டாள்ண்ணா! அதுக்கு உதவி பண்ணியதே ஆராவும், நானும் தான்! இப்போ அவ தன்னோட வாழ்க்கையை ரொம்பவே நல்லா வாழ்ந்துட்டு இருக்காள்!”என்றதைக் கேட்டதும், 

 

“அப்பறம் எதுக்கும்மா அந்தப் பொண்ணோட கதையையும், தன்னோட கதையையும் சேர்த்து எங்கிட்ட சொல்லி என்னைக் குழப்பி விட்டாள் ஆரா?”எனக் குழப்பத்துடன் வினா எழுப்பவும், 

 

அதற்கு,“அவ உங்களை இழக்க விரும்பலைண்ணா. அதனால் தான் இப்படி ஒரு திட்டம் போட்டு அதுக்கு என்னையும், நிஹாரிகாவையும் சம்மதிக்க வச்சா”என்று விடையளித்தாள் கனிஷ்கா. 

 

“அந்தத் திட்டம் என்னன்னு எங்கிட்ட தெளிவாகச் சொல்லும்மா?”என்றிருந்தான் அபூர்வன். 

 

உடனே தன்னிடமும், நிஹாரிகாவிடமும் தங்களது தோழி ஆராத்ரிகா சொன்னதையும், அதற்கு அவளுக்காகத் தங்கள் இருவரிடமும் கேட்டுக் கொண்ட விஷயத்தையும் அவனிடம் ஒன்று விடாமல் ஒப்புவித்து முடித்திருந்தாள். 

 

அதைக் கேட்டதுமே தனது காதல் மனைவியை நினைத்து மிகவும் மனம் நொடிந்து போய்,”நான் அவளை எந்தளவுக்கு லவ் பண்றேன்னுத் தெரியுமாம்மா? அவ இப்படி எங்கிட்ட எல்லாத்தையும் மறைச்சி இருக்கான்றதை என்னால் இப்போ கூட நம்பவும் முடியலை, ஏத்துக்கவும் முடியலை!”என்றவனோ, 

 

ஒரு ஆழ்ந்த மூச்சு எடுத்துக் கொண்டு,”சரிம்மா. ரொம்ப தாங்க்ஸ். எனக்குக் கடைசியாக ஒரு உதவிப் பண்றியாம்மா?”என்று அவளிடம் கசந்து போன குரலில் வினவினான் அபூர்வன். 

 

அவனது குரலில் வெளிப்பட்ட அந்த உணர்வைக் கவனித்து விட்டு,”ஏன்ண்ணா இப்படி விரக்தியாகப் பேசுறீங்க? எல்லாம் சரியாகிடும்! நான் இப்போ உங்களுக்கு என்ன உதவிச் செய்யனும்ண்ணா?”என்றாள் தீர்க்கமாக. 

 

“எனக்கு இந்த விஷயத்தில் அந்த நிஹாரிகா பொண்ணோட உதவியும் தேவைப்படுதும்மா? அந்தப் பொண்ணுக்கிட்டே உன்னால் பேச முடியுமா? ஏன்னா, உங்களுக்குள்ளே இப்போ காண்டாக்ட் – யே இல்லன்னு சொன்னியே! அதான் கேட்கிறேன்ம்மா”என அவளிடம் வேண்டிக் கேட்டுக் கொள்ளவும், 

 

“அவளை நாங்க எதுக்காகவும், எப்பவுமே காண்டாக்ட் செய்யக் கூடாதுன்னு ரொம்ப ஸ்ட்ராங் ஆகச் சொல்லிட்டுப் போயிட்டாள்ண்ணா! அவளை காண்டாக்ட் பண்ணி வர வைக்கிறது சாத்தியமான்னுத் தெரியலை. ஆனால் ஆராவுக்காகவும், உங்களுக்காகவும் நான் அவ கிட்ட பேசிப் பார்க்கிறேன். அதே சமயம் அவ தன்னோட நம்பரை மாத்தாமல் இருக்கனும்”என்று கூறியிருந்தாள் கனிஷ்கா. 

 

“உன்னால் முடிஞ்ச அளவுக்கு அந்தப் பொண்ணுகிட்டே பேசிப் பாரும்மா. இல்லைன்னா விட்ரு! ஆனால் நீ எனக்காக இந்த உதவியைச் செய்வ தானேம்மா?”என அவளிடம் கலக்கத்துடன் கேட்டிருந்தான் அபூர்வன். 

 

“நான் உங்களுக்குக் கண்டிப்பாக உதவி செய்வேன் அண்ணா”என்று அவனுக்கு உறுதி அளிக்கவும், 

 

“ரொம்பத் தாங்க்ஸ்ம்மா”என்று அவளிடம் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டுத், தான் ஆர்டர் செய்த காபி மற்றும் முட்டைப் பப்ஸிற்கானப் பணத்தைச் செலுத்தி விட்டு அங்கேயிருந்து கிளம்பித் தனது வீட்டிற்குச் சென்று சேர்ந்து விட்டிருந்தான் அபூர்வன். 

 

                        – தொடரும்

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்