Loading

 

​மரம் தேடும் மழைத்துளி — 17

 

​ருக்மணியின் தாயார் மாரியம்மாள், தனது மருமகனுக்கு நேர்ந்த விபத்தை அறிந்து, கோமதி புறப்பட்டு வரும் நாளில் அவளுடன் சேர்ந்து திருநெல்வேலிக்கு வர எண்ணியிருந்தார். ஆனால், கோமதி தனது கணவனிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்றுவிட்டாள்.

​கோமதி திருநெல்வேலிக்குச் சென்றதை அறிந்த பிறகே, மாரியம்மாள் தனியாகத் திருநெல்வேலிக்குப் புறப்பட்டு வந்தார். கோமதி இரவு 8 மணி வரை திருநெல்வேலியில் இருந்துவிட்டுச் சேத்தூருக்குக் கிளம்பிச் சென்றாள்.

​மாரியம்மாள் இரவு 9 மணிக்குத் திருநெல்வேலி மருத்துவமனையில் அவர்கள் இருக்கும் இடத்தை ஒருவழியாக விசாரித்து வந்து சேர்ந்தார்.

​அதுவரையில் கலக்கம் கொள்ளாமல் இருந்த ருக்மணி, தாயைப் பார்த்தவுடன் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டாள். மாரியம்மாள் ருக்மணியைக் கட்டியணைத்து அழுது தீர்த்தார்.

​அதன் பிறகு மாரியம்மாள், ருக்மணிக்குத் துணையாகத் திருநெல்வேலியிலேயே தங்கிக்கொண்டார்.

 

​அடுத்த நாள் காலையில் முருகனுக்குக் கழுத்தெலும்பு சீர்படுத்தப்பட்டுக் கட்டு போடப்பட்டது. திரவ ஆகாரங்களை உணவாகக் கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தார்கள்.

​அன்றே முருகன் தனக்கு எங்கெங்கு வலி எடுக்கிறது, தன்னால் என்ன செய்ய முடிகிறது என்று மருத்துவரிடம் விளக்கம் கொடுத்தான்.

​அனைத்து வலிகளுக்கும் மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைத்தாளில் எழுதிக் கொடுத்து, அவனைப் பொது வார்டுக்கு (Normal ward) மாற்றம் செய்தார்கள்.

 

​முருகன் பொது வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணன் – லட்சுமி தம்பதியர், சுந்தரியின் மாமனார், மாமியாரையும் சுந்தரியையும் அழைத்துக் கொண்டு முருகனைக் காணத் திருநெல்வேலிக்கு வந்து சென்றார்கள்.

 

​முருகனின் நண்பர்களான கதிர், கணேசன், கருப்பு ஆகியோர் அவரவர் குடும்பத்தோடு ஆளுக்கு ஒரு நாளாக வந்து பார்த்து, நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்கள்.

​முருகன், ஒருவரது துணையோடு மெல்ல எழுந்து நடந்து சென்று கழிவறைக்குக் (Bathroom) போகும் அளவுக்கு நான்காவது நாளே தேறியிருந்தான்.

​சரவணன், அந்த வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் சேத்தூருக்குச் சென்று, மறுநாள் புதிய வேலைக்குச் செல்லவிருப்பதால், பெரியம்மா மற்றும் அண்ணனிடம் விஷயத்தைச் சொல்லி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான்.

 

​ருக்மணி மற்றும் பார்வதியின் அதீத கவனிப்பில் முருகனின் உடல்நலம் தேறிக்கொண்டே வந்தது.

 

​அதே நேரத்தில், தனியாகவே மாடிக்கும் தரைத்தளத்திற்குமாக அலைந்து திரிந்த ருக்மணி, உறுதி செய்யப்படாமல் இருந்த தன் கருவைப் பறிகொடுத்தாள்.

​ருக்மணி மாரியம்மாளிடம், “எம்மா… தலைக்கு ஊத்திட்டேன். இதுக்காக எதுவும் எடுத்துட்டு வராம போயிட்டேன். மெடிக்கல் ஷாப்ல கேட்டுப் பாரு, அவங்க ஒன்னு கொடுப்பாங்க. அதோட இதையும் சேர்த்து வாங்கிட்டு வந்துரும்மா,” என்று தன்னுடைய தேவையை ரகசியமாகச் சொல்லி மாரியம்மாளை அனுப்பி வைத்தாள்.

 

​விவரம் அறிந்த பார்வதி, ‘முடிந்தது சனியன்’ என்று எண்ணிக்கொண்டு தன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

 

​முருகன் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்துவிட்டு வீடு திரும்பிய பிறகு, ஒரு மாத காலம் ஓய்விலிருந்து விட்டு மீண்டும் வேலைக்குச் சென்றான்.

​அவனுக்கு வேலை தந்துகொண்டிருக்கும் பெரிய கொத்தனார், அவனுக்கு இலகுவான வேலையாகவும், நிழலில் இருந்து பார்க்கும் வேலையாகவும் கொடுத்துப் பார்த்துக்கொண்டார்.

 

​சரவணன், ஆலையில் (Mill) புதிய மின்சாரப் பணியாளராகப் (Electrician) சேர்ந்து ஒரு மாத காலத்தை நிறைவு செய்துவிட்டு, முதல் மாதச் சம்பளத்தை வாங்கித் தன் தாயாரின் கையில் கொடுத்து ஆசி பெற்றான்.

 

​லட்சுமி, “இந்தச் சம்பளம் நிறைவான சம்பளமாக இருக்கிறது. அதனால் இந்த வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வீட்டிலேயே இருந்து கொள்,” என்று அறிவுறுத்தினார்.

 

சரவணனும் ஒப்புக்கொண்டான்.

 

​கிருஷ்ணரும் லட்சுமியும் ஒன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, சுந்தரிக்கு வரன் பார்த்துக் கொடுத்த தரகர் வந்தார்.

 

​கிருஷ்ணன், “தரகர் ஐயா, வாங்க,” என்று அமர்ந்திருந்தபடியே வரவேற்றார். “கொஞ்சம் சாப்பிடுங்க.”

 

​தரகர், “நான் இப்போதான் சாப்பிட்டு வாரேன். நீங்க சாப்பிடுங்க,” என்றார்.

 

​புதிய ஆண்கள் முன்னிலையில் பெண்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்றும், பெண்ணும் ஆணும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்றும் எண்ணிய காலம் அது. அதனால்…

 

​லட்சுமி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை எடுத்துக்கொண்டு போய் சமையலறையில் வைத்துவிட்டு, கைகளைக் கழுவிக்கொண்டு தரகருக்குக் குடிக்கச் செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

 

​“நீங்க சாப்பிட வேண்டியதுதானேம்மா… எனக்காகச் சாப்பாட்டை எடுத்து வச்சுட்டீங்க,” என்று சொன்னபடி செம்பைக் கையில் வாங்கிக்கொண்டார் தரகர்.

 

​“நான் காலையிலேயே காபி குடிச்சிட்டேன்யா… பசி எடுக்கல. இவருக நேரத்துக்குச் சாப்பிடணுமேன்னு சாப்பாட்டை வச்சுட்டு உட்கார்ந்தேன். நீங்க ஒன்னும் நினைக்காதீங்க,” என்று பெருந்தன்மையாகச் சொன்னார் லட்சுமி.

​கிருஷ்ணன்,

 

“தரகர் ஐயா வந்தா… ஏதாவது நல்ல செய்தியாத்தான் இருக்கும்,” என்றார்.

 

​தரகர், “அது என்னவோ நிஜம்தான். நம்ம செங்கமலபுரத்துல ஒரு பொண்ணு ஜாதகம் வந்திருக்கு. உங்க வீட்ல மாப்பிள்ளை இருக்கான். ஜாதகத்தைக் கொடுக்கிறேன் பாருங்க. பொருத்தம் இருந்தால் பொண்ணைப் போய் பார்த்துட்டு வருவோம்.”

 

​லட்சுமி, “மெட்ராஸ்ல நல்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போதே சொல்லியிருந்தா கல்யாணம் முடிச்சு வச்சிருக்கலாம். இப்ப உள்ளூர்க்குள்ள வேலை பார்க்கிறானே, பொண்ணு கொடுக்கச் சம்மதிப்பாங்களா?” என்று கேட்டார்.

 

​“ஒத்தப் பொண்ணைப் பெத்தவங்க, மாப்பிள்ளை உள்ளூருக்குள்ள இருந்தா நல்லதுன்னுதான் யோசிப்பாங்க. இதைப் பத்தியெல்லாம் நினைக்க மாட்டாங்கம்மா.”

 

​கிருஷ்ணன், “அப்ப சந்தோஷம் தரகர் ஐயா. பொண்ணு போட்டோ கொடுத்திருக்காங்களா?” என்றார்.

 

​“பொருத்தம் இருந்தா பொண்ணை நேரிலேயே பார்த்திடலாம்,” என்று சொல்லிச் சிரித்தார் தரகர்.

​லட்சுமி, “நேர்ல பார்க்கும்போது பொண்ணு நல்லா இல்லாட்டி?” என்றார்.

 

​“அப்படி நினைக்காதீங்கம்மா… பொண்ணு லட்சுமி கடாட்சமா இருக்கும்,” என்று உறுதியளித்தார் தரகர்.

​லட்சுமி, “அப்ப சரி. நீங்க பார்த்திருக்கீங்கள்ல, அது போதும். சரி இருங்க, காபி கொண்டாரேன்,” என்று சொல்லிச் சமையலறைக்குள் சென்று காபி தயாரித்துக் கொண்டிருந்தார்.

 

​கிருஷ்ணன் சாப்பிட்டு முடித்துக் கைகளைக் கழுவிக்கொண்டு எழுந்தார். தரகர் கொடுத்த ஜாதகத்தை வாங்கிப் புரட்டிப் பார்த்தார்.

 

​தரகர், “நமக்கு ஜோசியமும் தெரியுமோ?” என்று ஆர்வமாய்க் கேட்டார்.

​கிருஷ்ணன், “ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்தது ஒரு குத்தமாய்யா? ஜோசியம் தெரியாது. பொண்ணோட பேரு என்னன்னு பார்க்குறதுக்காகப் புரட்டிப் பார்த்தேன்,” என்றார்.

 

​“ஓ…. சரி, சரி,” என்று தலையாட்டிவிட்டார் தரகர்.

​கிருஷ்ணன், ஜாதகத்தில் இருந்த பெண்ணின் பெயரைத் தன் மனைவி காதுகளில் கேட்கும்படி சத்தமாக வாசித்தார். “பொண்ணு பேரு சுபத்ரா,” என்றார்.

 

​லட்சுமி காப்பியை இரண்டு டம்ளர்களில் எடுத்துக்கொண்டு சிரித்தபடியே வந்தார்.

 

“எங்க ஊரு பக்கம் மேனாமினுக்கிகளைச் ‘சிமித்திரை’னு சொல்லுவாங்க. செங்கமலபுரத்துல சிமித்திரைனு பேரே வச்சிருக்காங்களா?” என்றார்.

 

​“பொண்ணுக்குப் பேரு சிமித்திரை இல்லம்மா, சுபத்ரா,” என்று தரகர் விளக்கம் அளித்தார்.

 

​கிருஷ்ணன், “பொண்ணோட அப்பாவுக்கு டி.ராஜேந்தர் படம்னா ரொம்ப இஷ்டம் போல. அதனால கதாநாயகி பேரையே பொண்ணுக்கு வச்சிட்டாரு,” என்றார்.

 

​லட்சுமி, “அது என்ன படம்ங்க?” எனக் கேட்க,

 

​கிருஷ்ணன், “’ஒரு தலை ராகம்’ படத்துல அவளோட பேரு சுபத்ரா,” என்றார்.

​லட்சுமி செல்லக் கோபத்தோடு,

 

“நீங்களும் வாலிபத்துல சினிமா கொட்டகை தவறாமல் அலைஞ்சிருக்கீங்க போலவே!” என்றார்.

​தரகர்,

 

“சந்தோஷமா இருந்தாலும், வருத்தமா இருந்தாலும் சினிமாவுக்குப் போயிடுவோம். எங்களுக்கு வேற என்ன பொழுதுபோக்கு உண்டு?” என்றார்.

 

​லட்சுமி, “சரி சரி, நாங்க ஜாதகத்தைப் பார்த்துட்டுத் தகவல் சொல்றோம்,” என்று சொல்லித் தரகரை அனுப்பி வைத்தார்.

​மாலையில், சரவணன் வீட்டுக்கு வந்தவுடன் அவனுக்குப் பெண் பார்க்கப் போகும் தகவலைத் தெரிவித்தார்கள். சரவணன் மறுப்புச் சொல்லாமலும், சம்மதம் தெரிவிக்காமலும் அமைதியாக இருந்து கொண்டான்.

 

​கிருஷ்ணன், சரவணனின் மௌனத்தைச் சம்மதத்திற்கான அறிகுறியாக எடுத்துக்கொண்டு, அடுத்தகட்ட வேலைகளைத் தொடர்ந்தார்.

 

​கிருஷ்ணன் – லட்சுமி தம்பதியினர் மறுநாள் சரவணன் மற்றும் சுபத்ராவின் ஜாதகங்களை எடுத்துக்கொண்டு ஜோதிட நிலையத்திற்குச் சென்றிருந்தார்கள்.

 

‘​சரவணனுக்கும் சுபத்ராவிற்கும் பத்துக்கு ஏழு பொருத்தம் நன்றாக இருந்தது, திருமணம் செய்யலாம் என்று ஜோதிடர் தெரிவித்தார்.

​திருமணத் தரகருக்கு ஜோதிட நிலையத்திலிருந்து தொலைபேசி (Phone) மூலம் தகவலைத் தெரிவித்தார் கிருஷ்ணன். “நாளை மறுநாள் பெண் பார்க்க வருவதாகப் பெண் வீட்டில் சொல்லச் சொன்னார்.”

 

​அதேபோலச் சரவணனிடமும், “நாளை மறுநாள் பெண் பார்க்கச் செல்லவிருப்பதால் விடுமுறை எடுத்துக் கொள்,” என்று தகவல் தெரிவித்தார்கள்.

 

​சுந்தரிக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொல்லப்பட்டது. சுந்தரி நாளை மாலையில் தனது மாமியாருடன் ஊருக்கு வருவதாகத் தெரிவித்தாள்.

​அதேபோலக் கோமதிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோமதியும் நாளை மறுநாள் காலையில் வந்துவிடுவதாகத் தெரிவித்தாள்.

​பக்கத்து வீட்டில் இருக்கும் பார்வதியிடம் நாளை மறுநாள் பெண் பார்க்கப் போக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதேபோல முருகன் – ருக்மணிக்கும் பெண் பார்க்கப் போகும் விஷயத்தைத் தெரிவித்தார்கள்.

​அனைத்துச் சொந்தங்களும் ஒன்று கூடிச் சரவணனுக்குப் பெண் பார்க்கச் சுபத்ராவின் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்கள்.

 

​சுபத்ராவின் வீட்டில், அவளுடைய தோழிகள் மீனா மற்றும் உமா உடன் இருந்து சுபத்ராவுக்குப் புடவை கட்டக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 

​சுபத்ராவின் தாயார் அன்னம், “சட்டுனு நாலு மடிப்பை வச்சுக் கட்டி விடுங்கடி. மிச்சத்தை மாமியார் வீட்டுக்குப் போய் அவ கத்துக்கட்டும்,” என்றார்.

 

​மீனா, “நாங்க சொல்லிக் கொடுக்கிற மாதிரி அங்கே பொறுமையா சொல்லிக் கொடுப்பாங்களா?” என்றாள்.

 

​அன்னம், “நீங்க பொறுமையா சொல்லிக் கொடுத்தும் இவ கத்துக்கிட்டாளா என்ன? மாமியார் நாலு போடு போட்டுச் சொல்லிக் கொடுத்தா உடனே கத்துக்கப் போறாள்,” என்றார்.

 

​சுபத்ரா, “அம்மா… செத்த சும்மா இருக்கியா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றதுக்கு இன்னும் நிறைய நேரம் கிடக்கு. அதுக்கு முந்தி நீ ஏன் இப்படிப் படுத்துறியோ?” என்றாள்.

 

​அன்னம், “இன்னும் நிறைய நேரம் கிடக்குன்னு அதுக்காகச் சேலையை மட்டுமே கட்டிக்கிட்டு இருப்பியா? இவளுங்க சேலை கட்டச் சொல்லிக் கொடுக்குறாங்களா, இல்ல உன்னை வச்சுப் பழகிட்டு இருக்காங்களானு தெரியல. தள்ளுங்கடி,” என்று இருவரையும் புறந்தள்ளிவிட்டுச் சேலையின் தலைப்பை வாங்கி மடிப்பு வைத்தார். “இதைச் சொருகுடி,” என்று கையில் கொடுத்துவிட்டு, முந்தானையை எடுத்து மாராப்புப் போட்டுவிட்டு, “மத்ததைச் சரி பண்ணி விடுங்கடி,” என்று உமாவிடம் சொல்லிவிட்டு, “சீக்கிரம் ரெடியாகு,” என்று சுபத்ராவுக்குக் கட்டளையிட்டுவிட்டு வெளியேறினார்.

 

​உமா, “இந்த மாதிரி ஈஸியாக் கட்டிவிட எங்களுக்குத் தெரியாதா? பார்டர் இடுப்புல வர்ற மாதிரி வைக்கிறதுக்கு உனக்குச் சொல்லிக் கொடுக்கலாம்னு பார்த்தோம். உங்க அம்மா விட மாட்டேங்குறாங்களே,” என்றபடி மற்ற அலங்காரங்களைச் செய்துகொண்டிருந்தாள்.

 

​மீனா, “இந்தத் தொல்லையே வேண்டாம்டி. எப்போதும் போலச் சுடிதாரே போட்டுக்க. மெட்ராஸ், மதுரையிலெல்லாம் பொம்பளைங்க சுடிதார் போட்டுக்கிட்டுச் சுத்துறாங்க. நம்ம ஊரு மோசம் எங்கேயும் இல்லை,” என்றாள்.

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்