
தன் வீட்டிற்குள் நுழைந்து எப்போதும் போல் தனது அன்றாட வேலைகளை முடித்தவனோ, தனது மனைவியிடம் அவளது கடந்த கால வாழ்க்கை முழுவதும் தனக்குத் தெரிந்து விட்டது என்பதை தப்பித் தவறிக் கூட அவளிடம் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை அவன்.
ஆனால் அதை அவளிடம் எப்போது தெரியப்படுத்த வேண்டும் என்பதையும் எப்போதோ முடிவு செய்து விட்டிருந்தவனோ, அன்றைய நாள் முழுக்க மன நிம்மதியுடன் வலம் வந்தான் அபூர்வன்.
அவனது அந்த திடீர் உற்சாகமான மனநிலை மற்றும் உடல் மொழியைக் கவனித்து விட்டு,”என்ன ரொம்ப ஜாலி மூட்ல இருக்கீங்க போலவே?”என்று ஆர்வம் தாளாமல் அன்றிரவு உறங்கும் நேரத்தில் கணவனிடம் கேட்டிருந்தாள் ஆராத்ரிகா.
“ம்ஹ்ம். ஆமாம்மா. நம்மப் பிரச்சினைகள் எல்லாமே கொஞ்ச நாளில் முடிஞ்சுப் போகப் போகுது. அதனால் தான் நான் ரொம்பவே சந்தோஷமாக இருக்கேன்”என்றிருந்தான்.
அதில் சற்றுத் திடுக்கிட்டுப் போனவளோ,”நமக்கு இடையில் என்னப் பிரச்சினை இருக்கு அபூ? எல்லாமே நல்லா தானே போயிட்டு இருக்கு? ஆனால் நாம அடுத்த தடவைச் செக்கப்புக்குப் போகும் போது நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசனும்”என அவனிடம் உரைக்க,
“நானும் அப்போ உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசனும்னு தான் காத்திருக்கேன்ம்மா. அது என்னன்னு உன் மூளையைப் போட்டுக் கசக்கிப் பிழிஞ்சு யோசிச்சுட்டு இருக்காமல் நிம்மதியாகத் தூங்கு! நான் உங் கூடவே தான் இருப்பேன். உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்!”என்று அவளுக்கு வாக்களித்தான் அபூர்வன்.
அதில் அவனது மார்பில் தனது முகத்தை அழுத்தமாகப் புதைத்துக் கொண்டு,”சாரி அபூ!”என்று தன் கணவனிடம் மனதார மன்னிப்புக் கோரினாள் ஆராத்ரிகா.
உடனே அவளது பிறை நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு,”ஹேய்! ஒன்னும் இல்லம்மா. நீ தூங்கு!”எனக் கனிவுடன் கூறி அவளை மெலிதாக அணைத்துக் கொண்டு அவளது முதுகை வருடிக் கொடுத்து உறங்க வைத்து விட்டுத் தானும் தூங்கிப் போனான்.
அபூர்வன் மற்றும் ஆராத்ரிகாவிற்கும் திருமணம் நிகழ்வதற்கு முன்னர் இருவரும் ஒரே அலுவலகத்தில் தான் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அப்பொழுது எல்லாம் இவர்கள் இருவருக்கும் இடையே இயல்பான உரையாடல்கள் எதுவும் நிகழ்ந்தது கிடையாது.
ஆனால் நாட்கள் செல்லச், செல்லத் தனது அலுவலகத்தில் பட்டாம்பூச்சியாக அனைவருடனும் பேசிச், சிரித்துக் கொண்டிருந்த ஆராத்ரிகாவின் துறுதுறு குணத்தினால் கொஞ்சம், கொஞ்சமாக அவள் மீது ஈர்ப்பு உருவாகி விட்டது அபூர்வனுக்கு.
அதனாலேயே அவளது குறும்புத்தனங்களை ரசித்தவனோ, நாளடைவில் அவளை விரும்பவும் ஆரம்பித்து விட்டிருந்தான்.
ஆனால் அலுவலகத்தில் இருக்கும் அனைவரிடமும் சிரித்த முகமாகவே உரையாடும் ஆராத்ரிகாவிடம்,“நான் உங்களை இங்கே ரொம்ப நாளாகவே கவனிச்சிட்டுத் தான் இருந்தேன்! எனக்கு உங்களோட கேரக்டர் அண்ட் ஆட்டிட்யூட் ரொம்பப் பிடிச்சிருக்கு! நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”என்று தனது காதலை வெளிப்படுத்தி இருந்தான் அபூர்வன்.
அவளோ அதைக் கேட்டதுமே கட்டுக்கடங்காத கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டே,”நீங்க ஒழுங்காக இங்கேயிருந்து போயிடுங்க! இல்லைன்னா நான் உங்களை என்னப் பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”என்று அவனுக்கு எச்சரிக்கை விடுக்க,
“இங்கே பாருங்க. நான் எந்த தவறான நோக்கத்திலேயும் உங்ககிட்ட புரபோஸ் பண்ணலை! நான் உண்மையிலேயே உங்களை லவ் பண்றேன்”என அவளுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க முயன்றவனை இடைநிறுத்தி,
“ஹேய்! ஒரு தடவை சொன்னால் உங்களுக்குப் புரியாதா? என் கண்ணு முன்னாடி நிற்காமல் முதல்ல போங்க!”என்று அவனை அங்கேயிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினாள் ஆராத்ரிகா.
உடனே அவளது கோபத்தை இன்னும் அதிகப்படுத்தாமல் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டான் அபூர்வன்.
அவன் சென்றதும் தான், தன்னிலை அடைந்து, தனது வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டாள்.
தனது காதலை மறுத்து விட்டிருந்தாலும் கூட ஆராத்ரிகாவைத் தொந்தரவு செய்யாமல் அவளது செயல்களை மௌனமாக கவனித்துக் கொண்டு தான் இருந்தான் ஆடவன்.
தனக்குக் கல்லூரியில் நிகழ்ந்த அந்த மோசமான சம்பவத்திற்குப் பிறகு எப்பொழுதுமே விழிப்புணர்வுடன் தான் இருப்பாள் ஆராத்ரிகா.
அதனாலேயே தன்னிடமிருந்து தள்ளி இருந்து கொண்டுத் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் அபூர்வனை வெகு விரைவிலேயே கண்டு கொண்டாள்.
ஆனாலும் அவன் தன்னைத் தொல்லை செய்யாமல் தொலைவில் இருந்து கொண்டதால் அவனிடம் தானாகவே போய் பேசிப் பிரச்சினையைப் பெரிதாக்க விரும்பாமல் தனது போக்கில் இருந்து விட்டாள் ஆராத்ரிகா.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தனக்கு அரணாக இருந்து கொண்டிருக்கும் அபூர்வனைத் தானும் ஆழமாக கவனிக்கத் தொடங்கினாள்.
அவனது ஒவ்வொரு அசைவுகளையும், மற்றவர்களிடம் முக்கியமாக அவன் மற்றப் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தையும் மிகுந்த முனைப்புடன் கண்காணித்தாள் எனலாம்!
அதை தானும் அறிந்து கொண்டாலும் கூடத் தன்னை இந்தளவிற்குக் கண்காணிக்கும் ஆராத்ரிகாவின் உள்நோக்கம் தான் என்ன என்பதை அவள் வாயாலேயே சொல்லட்டும் அது வரையிலும் காத்திருப்போம் என்று தானும் தன் இயல்பில் இருந்து மாறாமல் இருந்தான் அபூர்வன்.
அதேபோல் சில மாதங்களாக அவனது குணநலன்கள் மற்றும் இயல்பான செய்கைகளை, மற்றவர்களிடம் பேசும் விதங்களை எல்லாம் நன்றாக கவனித்து அவனை முழுவதுமாக அறிந்து கொண்டு விட்ட ஆராத்ரிகாவிடம் இருந்த தயக்கம் சுக்குநூறாக உடைந்து போய் அவன் மீது காதல் துளிர்த்து விட்டிருந்தது!
ஒரு வழியாகத் தானும் அபூர்வனைக் காதலிக்கத் தொடங்கி விட்டதை அவனிடம் சொல்வதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அவனது முன்னால் சென்று நின்றிருந்தாள்.
அவளது அந்தத் திடீர் வருகையைக் கண்டு ஆச்சரியத்துடன் பார்க்கவும்,”ஹாய்! உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசனும்”என்றிருந்தாள் ஆராத்ரிகா.
அதில் தனது புருவத்தை உயர்த்தி,”என்ன விஷயத்தைப் பத்திப் பேசனும் மேடம்?”என அவளிடம் கேட்டான் அபூர்வன்.
அதற்கு,”அதை இங்கே வச்சுப் பேச முடியாது சார். பிரேக் டைமில் கேன்டீனுக்கு வந்துடுங்க”என்றவளிடம்,
“ஹலோ! எக்ஸ்கியூஸ்மி! நீங்கப் பாட்டுக்கு வந்து எங்கிட்ட ஏதோ முக்கியமாகப் பேசனும், கேன்டீனுக்கு வாங்கன்னுக் கூப்பிட்டால் உடனே நான் வந்துடனுமா என்ன? முதல்ல அது என்ன விஷயம்னுச் சொல்லுங்க!”என்று அவனுக்கு அவளது அழைப்பின காரணம் தெரிந்தாலும் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கும் விதமாகப் பேசினான் அபூர்வன்.
உடனே அவனை முறைத்து விட்டு,”நீங்க ஒன்னும் வரவே வேண்டாம்!”என்று அங்கேயிருந்து நகரப் போகவும்,
அதில் பதறிப் போய்,”ஹலோ! மிஸ். ஆராத்ரிகா! நான் சும்மா விளையாண்டேன்! நான் கண்டிப்பாக பிரேக் டைமில் கேன்டீனுக்கு வந்துட்றேன்ங்க. இதை மனசில் வச்சிட்டு நீங்க வராமல் இருந்துடாதீங்க!”எனத் தவிப்புடன் கூறியவனைக் கண்டுப் புன்னகைத்து விட்டுத் தன் இடத்திற்குச் சென்று வேலையைப் பார்க்கலானாள் ஆராத்ரிகா.
தாங்கள் இருவரும் பேசி வைத்ததைப் போலவே தங்களது அலுவலகத்தில் இருந்த சிற்றுண்டிச் சாலையில் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தார்கள் அபூர்வன் மற்றும் ஆராத்ரிகா.
“நீங்க எங்கிட்ட என்ன விஷயமாகப் பேசக் கூப்பிட்டு இருக்கீங்க?”என்றவனிடம்,
“நீங்க கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி எங்கிட்ட உங்க லவ்வைச் சொன்னீங்கள்ல?”எனத் தயக்கத்துடன் வினவ,
உடனே தனது விழிகள் இடுங்க,“ஆமாம். அதை தான் அப்போவே நீங்க நிராகரிச்சிட்டீங்களே”எனப் பட்டென்று சொல்லி விட்டான் அபூர்வன்.
அதில் தனது முகம் வெளிறிப் போய்,”ஆமாம். நிராகரிச்சேன் தான்! ஆனால் இப்போ உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு! நானும் உங்களை லவ் பண்றேன்! என் லவ்வை ஏத்துக்குவீங்களா?”என்று தானும் அவனிடம் தடாலடியாக கேட்டிருந்தாள் ஆராத்ரிகா.
அதைக் கேட்டதும் அவனது கண்களோ வியப்பில் பெரிதாக விரிந்து போயிற்று!
அதைக் கண்டு மெலிதாக குறுநகையை உதிர்த்தாள்.
உடனே தானும் தனது மலர்ந்து, விகசித்த முகத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்து,”நீங்க உண்மையாகவா சொல்றீங்க?”என்றிருந்தான் அபூர்வன்.
“ம்ஹ்ம். நான் எனக்கு உங்க மேலே உண்மையிலேயே லவ் வந்துடுச்சுங்க! ஆனால் எனக்குக் கொஞ்சம் பயமாக இருக்கு!”என்றவளைக் குழப்பமாக நோக்கி,
“என்னப் பயம்?”என்க,
“ஏன்னா, எங்கப்பா, அம்மா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க! நான் ஒரு ஹோமில் தான் வளர்ந்தேன்! இப்போ வேலைக்குச் சேர்ந்ததும் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருக்கேன். இப்போ எனக்குப் புதுசாக ஒரு உறவு கிடைக்கப் போகுதுன்றதை நினைச்சா சந்தோஷமாகவும் இருக்கு, அதே சமயத்தில் நான் நம்மக் கல்யாண வாழ்க்கையில் சரியாகப் பொருந்திப் போவேனான்றதை நினைச்சுப் பயமாகவும் இருக்கு!”என்றவளோ,
அதை தொடர்ந்து அவனிடம் தனது கல்லூரி வாழ்க்கையைப் பற்றியும், தனக்கு இருக்கும் இரண்டு தோழிகளைப் பற்றியும் அவனிடம் கூறாமல் மறைத்து விட்டிருந்தாள் ஆராத்ரிகா.
அதைக் கேட்டதும் தனது கண்களில் கனிவு நிறைந்து வழிய,”ஹேய்! அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்ம்மா”என அவளுக்குத் தைரியம் அளித்தான் அபூர்வன்.
அவனது விழிகளில் வெளிப்பட்ட கண்ணியமும், அவனது வார்த்தைகளில் தென்பட்ட உறுதியும் அவளுக்குள் தெம்பை உருவாக்கி விட்டிருந்தது எனலாம்!
அதனாலேயே அவனிடம்,”நாம சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாமாங்க?”என்றவளிடம்,
“கண்டிப்பாக ம்மா. நான் எங்க வீட்டில் நம்ம விஷயத்தைப் பத்தி உடனே பேசுறேன்!”ஏன்றவனோ,
அவளுக்கு வாக்களித்த மாதிரியே அன்று மாலையே தனது பெற்றோரிடம் தனது காதல் விஷயத்தை தெரிவித்து விட்டு அவர்களது விருப்பத்தைக் கேட்டிருந்தான் அபூர்வன்.
முதலில் ஆராத்ரிகாவின் பின்புலத்தைக் கேட்டு விட்டு அதற்கு மறுப்புக் கூறினர் நாச்சிமுத்து மற்றும் நீலவேணி.
ஆனால்,’கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’என்றப் பழமொழிக்கு ஏற்ப அவர்களை எப்படியோ தனது விருப்பத்திற்குச் சம்மதிக்க வைத்து விடவும்,
அதற்குப் பிறகு இதை ஆராத்ரிகாவிடம் சொல்லி அவளைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி வைத்தான் அபூர்வன்.
தன்னவனின் பெற்றோரைப் பார்த்ததுமே அவர்களைத் தனது பெற்றோராகவே எண்ணி சகஜமாகப் பேசத் தொடங்கினாள் ஆராத்ரிகா.
சிறிது நேரத்திலேயே அவளது துறுதுறு சுபாவம் தன்னைப் போலவே தன் பெற்றோரையும் ஈர்த்து விட்டதைக் கண்டு மனநிறைவு அடைந்தான் அபூர்வன்.
அதற்குப் பின், தங்களது மகனுக்கும், ஆராத்ரிகாவிற்கும் அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே நிச்சயம் மற்றும் மூன்று மாதங்கள் கழித்து திருமணத்தையும் நடத்தி வைத்து விட்டிருந்தார்கள் நாச்சிமுத்துவும், நீலவேணியும்.
தங்களது திருமணம் முடிந்ததும் ஒரு வருடங்களாகத் தங்களுக்குக் குழந்தை இல்லாததால் தனது மனைவியைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்த தாயின் மீது கோபம் உண்டாகித் தன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி இருந்தான் அபூர்வன்.
அதற்குப் பின்னர் தான், தனது தவறை உணர்ந்து கொண்டு மகன் மற்றும் மருமகளிடம் வந்து மன்னிப்புக் கோரினார் அவனது தாய் நீலவேணி.
அந்த நேரத்தில் தனது மனைவியின் தோழியின் கதை, அவள் கர்ப்பம் தரித்து இருக்கும் விஷயம் மற்றும் அவளது தோழிகளால் அவளுக்கு ஏற்படும் தொல்லைகள் ஆனால் இறுதியில் அதற்கு மூலக் காரணமே தனது மனைவி தான் என்பதையெல்லாம் அறிந்து கொண்டு அதன் காரணத்தையும் கண்டுபிடித்து விட்டு இப்போது தனது மார்பில் முகத்தைப் புதைத்த வண்ணம் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் சிகையைக் கோதிக் கொடுத்து விட்டுத் தானும் உறக்கத்தில் ஆழந்து போனான் அபூர்வன்,
– தொடரும்

