15 மாயோனின் மலரோவியம்

Loading

மாயோன் 15

அவளது அமைதியை உணர்ந்து பக்கம் வந்தவனை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தவள் ” நீங்க தான் அந்த விக்ரமனா? ” என்று தான் கேட்டாள்…

தான் இதுவரை கேட்டது அனைத்தும் பொய் என்று அவன் கூறிவிட மாட்டானா? என்ற எதிர்பார்ப்பில் அவள் கேட்க…

” ஸ்ரூதி ” என்றவனின் அழைப்பில் தன்னிலை அடைந்தவள்… பயத்தில் விக்கித்து பின்னே நகர்ந்தாள்.. அவனது இந்த அழைப்பே உணர்த்தியது அவன் தான் விக்ரமன் என்று..  தான் கேட்டது அனைத்தும் உண்மை என்று அறிந்து பலவீனமா உணர்ந்தவள், ஆயிரம் கேள்விகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்…

” ஸ்ரூதி நான்… ” என்றவன் அவளது கரம் பற்ற போகவும்,

” வேண்டாம்.. என் பக்கத்தில வராதீங்க, ” என்று கை நீட்டி தடுத்தவள், அவனை தாண்டி செல்ல போகவும், அவளது கரத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன் ” கொஞ்சம் நிதானமா நான் சொல்லுறதை கேளுடி” என்க…

” வேண்டாம் நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்… நீங்க சொன்ன வரைக்கும் போதும்…  அதை நான் நம்பின வரைக்கும் போதும், என்னை விட்டுடுங்க ” என்றவள் வெளியே செல்ல போகவும், வாசலை மறைத்து கொண்டு நின்றான் சத்யன்..

அவனை பார்த்து விட்டு திரும்பி விக்ரமனை பார்த்த கீர்த்தி ” தள்ளி போக சொல்லுங்க ” என்று சொல்லவும்…

” சத்யா நீ போ… நான் பாத்துகிறேன்” என்ற விக்ரமன் கீர்த்தியை தன் பக்கம் பிடித்து இழுக்க..  அவனது கரத்தில் திமிறி கொண்டிருந்தவள், தன்னையும் மீறி கோவத்தில் விக்ரமனை வேகமாக பிடித்து தள்ளினாள்.

அவனோ தன்னை நிலைப்படுத்திகொண்டு அவளை பார்க்க… அவளோ அருகில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து அவனை நோக்கி வீசி எறிந்தாள்.

அவள் எறிந்த பூ ஜாடி ஒன்று விக்ரமனது நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருக்க… இன்னும் கோவம் அடங்காதவள் மேலும் பொருட்களை எல்லாம் எடுத்து அவனை நோக்கி வீசீனாள்.. அவனோ அவள் செயலுக்கு எதிர்வினை புரியாமல் அதே இடத்திலேயே நின்றுகொண்டிருந்தான்…

விக்ரமனது நெற்றியில் ரத்தம் வழிவதை கண்டு கோவமான சத்யா

” அவ்ளோ தைரியமா உனக்கு ” என்று கேட்டபடி கீர்த்தியை  அடிக்க கை ஓங்கவும், கீர்த்தி பயத்தில் கண்களை மூடிக் கொள்ள, அவனது கையை பிடித்து தடுத்து நிறுத்தியிருந்தான் விக்ரமன்…

சத்யனோ விக்ரமனை புரியாமல் பார்க்க… ” வேண்டாம் ” என்று விக்ரமன் கூறவும், தனது கையை பின்னோக்கி எடுத்து கொண்டான் சத்யன்.

” போதும் நீ போ.. நான் பாத்துகிறேன் ”

” சார்… ரத்தம் வருது ”

” உன்னை போக சொன்னேன்… போடா ” என்று விக்ரமன் உரக்க பேசவும் ‘ சரி ‘ என்று கூறி சத்யன் அங்கிருந்து சென்றான்..

அவன் சென்றபிறகு கீர்த்தியின் பக்க திரும்பிய விக்ரமன் ” ஸ்ரூதி சில விஷயம் உனக்கு சொன்னா புரியாதுடி கொஞ்சம் நிதானமா இரு.. உனக்கு ஏதாவது ஆகிட போகுதுடி ” என்றான் பரிதவிப்புடன்..

” இதுக்கு மேல என்ன ஆகணும்.. எப்படி நிதானமாக இருன்னு சொல்ல முடியுது உங்களால… என் அக்காவை கொல்ல நினைச்சு என் குடும்பத்தை அழிச்ச உங்க கூட இவ்ளோ நாள் இருந்திருக்கேன்.. உங்க கையால சாப்பிட்டு இருக்கேன், இதை எல்லாம்  நினைக்கும் போது என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு.. என் குடும்பம் உங்ககிட்ட இவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சது தெரியாமல் உங்களை போய் நல்லவன்னு நம்பியிருக்கேனே? ” என்றவள் தலை தலையாக அடித்து கொண்டு அப்படியே கீழே அமர்ந்தாள்…

அவள் செயல் கண்டு பயந்தவன் ” ஸ்ரூதி ” என்று பக்கத்தில் போகவும் அங்கு உடைந்து கிடந்த பொருளை தூக்கி மீண்டும் அவன் மீது எறிந்தாள்…

” என் பக்கத்துல வந்தீங்க? அவ்ளோ தான்.. ” என்று எச்சரித்தவள் “என் குடும்பத்தை அழிக்க நினைச்ச உங்களை போய் இத்தனை வருஷம் என் மனசுல சுமந்திருக்கேனே!! என்னை நெனச்சா எனக்கே அருவருப்பா இருக்கு” என்று கோவத்தில் தன் மனதில் உள்ள ஆதாங்கத்தை அவள் உரைக்க.. புருவம் சுருக்கி அவளை பார்த்தான் விக்ரமன்.

” என் பாதுகாப்புகாக உங்க கூட இருந்தேன்னு நினைக்கிறீங்களா? இல்லை… அது மட்டும் காரணம் இல்லை.. எனக்கு உங்களை முன்னாலயே தெரியும்… இன்னிக்கு , நேற்று இல்லை நாலு வருசமா தெரியும்… இப்போ பாக்குற ஹீரோவா இல்லை, ” என்றவள் வலியுடன் அவனது முகம் பார்க்க… முகத்தில் எந்த வித உணர்வின் பிரதிபலிப்புமின்றி அவளை பார்த்துகொண்டிருந்தான் விக்ரமன்

” உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு எனக்கு தெரியல, நாலு வருஷத்துக்கு முன்னாடி  ஹோலி பண்டிகை அன்னைக்கு  உங்க கிட்ட  விளையாட்டா பேசிட்டு போய்ட்டேன்.. அப்போ உங்க முகத்தில் கலர் இருந்ததால எனக்கு உங்களை சரியா அடையாளம் தெரியல… அடுத்த நாள் அதே இடத்தில் உங்களை பார்த்தேன். உங்களோட அந்த கார், அப்புறம் உங்க கையில் இருந்த இந்த வாட்ச், இதோ இப்போ கூட உங்க கையில் அதே வாட்ச் தான் இருக்கு… இது எல்லாம் அது நீங்க தான்னு எனக்கு அடையாளப்படுத்தியது… அதுக்கு அப்புறம் என்னையும் அறியாமல்  ஒவ்வொரு நாளும் உங்களை எதிர்பார்த்திட்டு இருந்தேன்… அப்போ அந்த உணர்வுக்கு என்ன பேருன்னு எனக்கு தெரியல, அது ஆர்வமா, அன்பா, எதிபார்ப்பா என்னன்னு எனக்கு சொல்ல தெரியல, ஆனால் உங்களை எனக்கு பிடிச்சுது, ஒவ்வொரு நாளும் உங்களை எதிர்பார்த்தேன்… லீவ் நாள் எல்லாம் எப்போடா லீவ் முடியும் உங்களை பார்க்கலாம்ன்னு ஆசையா இருக்கும்.. அப்படியே எட்டு மாசம் ஓடி போச்சு..  உங்க பேரு கூட எனக்கு தெரியாது, எனக்கு தெரிஞ்சது எல்லாம் என்னை மட்டுமே பார்க்க கூடிய அந்த கண்களும்.. உங்க முகமும் மட்டும்  தான். அதுக்கு அப்புறம் நீங்க என்னை பார்க்க வரல, எனக்கு இதை யார் கிட்ட சொல்லி, எப்படி கேக்குறது ஒண்ணுமே தெரியல…  இதை சொன்ன மத்தவங்க என்னை என்ன நினைப்பாங்க அப்படிங்குற தயக்கத்திலயே அதை பத்தி நான் யார்கிட்டயும் சொல்லிக்கல…

எனக்கு அப்போ பதினேழு வயசு… ஆனால் உங்களுக்கு எப்படி வயசு அதிகமா இருந்திருக்கும்… சோ உங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்கும் அப்படின்னு நானா நினச்சுக்கிட்டேன்.. காரணமே இல்லாமல் அழுகை வந்தது அப்போ எனக்கு அது ஏன்னு புரியல, புரிஞ்சுக்குற பக்குவமும் இல்லை.. அப்புறம் ஒருவருசத்துக்கு அப்புறம் நீங்க நடிச்ச ஒரு படம் பார்த்தேன் அப்போது தான் தெரிஞ்சுது நீங்க நடிகர் அப்படிங்குறது… உங்க பேர் கூட அப்போ தான் எனக்கு தெரியும். எப்படியும் உங்களுக்கு என்னை நியாபகம் இருக்காது, அப்படியே ஞாபகம் இருந்தாலும் நீங்க நடிகரான அப்புறம் என்னை பத்தி யோசிக்கவா போறீங்க அப்படின்னு நெனச்சு உங்களை பத்தின ஞாபகம் வரும் போது எல்லாம் மனசை மாத்திக்க முயற்சி பண்ணினேன்… ஆனால் உங்க பிம்பம் என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு… அப்படியே ரெண்டு வருஷம் ஓடிப்போச்சு… மறுபடியும் உங்களை என் காலேஜில பார்த்தேன். விவரிக்க முடியாத அளவுக்கு அவ்ளோ சந்தோசமா இருந்தது.. அன்னிக்கு உங்க கவனத்தை என் பக்கம் திருப்பனும்ன்னு நெனச்சு தான்,  உங்களை பத்தி அப்படி பேசினேன்…   ‘முதல் முறை பாக்குற பொண்ணு கிட்ட இப்படி தான் நடந்துப்பீங்களான்னு ‘  கேட்டது கூட உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கான்னு தெரிஞ்சுக்க தான்..  நீங்க  என் கிட்ட அப்படி நடந்து கிட்ட அப்போ எனக்கு பதட்டமும்,  நடக்கமும் இருந்ததே தவிர உங்க மேல கோவமோ, எரிச்சலோ வரல இதே உங்க இடத்தில் வேற யாராவது இருந்திருந்தால்  அப்போவே கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி இருப்பேன். எல்லாத்துக்கும் அடங்கி போய் பக்கத்தில இருந்திருக்க மாட்டேன்.. அன்னிக்கு உயிருக்கு பயந்து ஓடி வரும் போது கூட அந்த இடத்தில் உங்களை பார்த்த உடனே உயிர் வந்த மாதிரி இருந்தது.. எனக்கு எதுவும் ஆகாது, என் பக்கத்துல நீங்க இருக்கீங்க, எல்லாம் சரியாகிடும்ன்னு நம்பினேன்.. ஆனால் அந்த உயிர் பயத்தை கொடுத்ததே நீங்க தான்னு இப்போ தான் எனக்கு புரியுது… இவ்ளோ பெரிய துரோகத்தை எனக்கு ஏன் பண்ணீங்க?  நீங்க என்னை திட்டும் போதும், கஷ்டப்படுத்தும் போதும் கூட உங்க கூட சண்டை போடணும்னு நெனச்சு இருக்கனே தவிர.. உங்களை விட்டு போகணும்னு ஒரு நிமிஷம் கூட யோசிச்சது இல்லை… நான் உங்களை விட்டு போகணும்னு நினைச்சிருந்தால் உங்களால என்னை தடுத்திருக்க முடியாது… நான் உங்களை விட்டு போகணும்னு நினைக்கல காரணம் உங்களை எனக்கு பிடிக்கும்… ஆனால் என்னோட இந்த அன்பை பலவீனமாக்கி உங்க தேவைக்கு பயன்படுத்தியிருப்பீங்கன்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கல ” என்றவள் இயலாமையுடன் அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்திருக்க… விக்ரமனோ சிலையாக நின்றிருந்தான்.

பெண்களது மன எண்ணத்தை அறிந்தவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை… அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்… பெண்களிடம் ரகசியம் தங்காது என்பது உண்மை தான், ஆனால் அந்த ரகசியம் அவர்களுக்கானது எனும் பொழுது அது ரகசியமாகவே அவர்களது மனதில் புதைந்து போகும் ..

“ஸ்ருதி ” என்று அழைத்தபடி அவன் மீண்டும் அவளை நெருங்க…

” என் பக்கத்துல வராதீங்க… நான் உண்மையா நெனச்ச நீங்க முழுசா பொய் மட்டும் தான்..  என் குடும்பத்தை அழிக்க நெனச்ச உங்க கூட வாழனும்னு நெனச்ச நான் எவ்ளோ பெரிய முட்டாள்… என்னை முட்டாளா நெனச்சதால தானே இப்படி ரெட்டை வேசம் போட்டு  ஏமாத்தி இருக்கீங்க”

” அப்படி எல்லாம் இல்லடா ”

” வேண்டாம் உங்களோட எந்த காரணமும் எனக்கு வேண்டாம்.. இந்த நடிப்பை வேற எங்கயும் வச்சிக்கோங்க… இப்போ கூட உங்களை எதுவும் பண்ண முடியாமல் இருக்குற என்னோட இயலாமையை நெனச்சு என் மேலயே எனக்கு கோவம் வருது… என் வாழ்க்கையில் என் மாமாவுக்கு அப்புறம் நான் நம்பின ஒரே ஆளு நீங்க மட்டும் தான்… கடைசியில என்னை நம்ப வச்சு கழுத்தை அறுத்துடீங்களே இப்போ உங்களுக்கு சந்தோஷமா? ” என்றவள் அருகில் உடைந்து கிடந்த பீன்கான் துண்டை எடுத்து தனது கையில் ஆழமாக கீறி கொண்டாள்…

அதனை பார்த்து பதறியபடி விக்ரமன் அவள் பக்கம் வர… அவனை கை நீட்டி தடுத்தவள் ” என்னை தொட்டீங்க ” என்றபடி அந்த பீங்கான் துண்டை தன் கழுத்தில் வைத்தவள் ” அறுத்துட்டு செத்துடுவேன்… உங்களை மாதிரி ஒரு ரத்தவெறி புடிச்ச மனுசனோட இருந்ததை நினைக்க…நினைக்க… வெறுப்பா இருக்கு ” என்றவளை கோவமாக பார்த்தவன் நொடியில் அவள் கையில் இருந்த பீங்கான் துண்டை பறித்து கீழே போட்டபடி அவளது கழுத்தை பிடித்து தன் பக்கம் இழுத்தான்… அவ்ளோ எந்த வித உணர்வுமின்றி அவனை பார்த்தாள்..

” ஆமாடி நான் தப்பானவன் தான்… ரத்தவெறி பிடிச்ச மிருகம் தான்…  கொலை கூட பண்ணி இருக்கேன், வேற என்ன தெரியணும் உனக்கு ஹான்… யாரும் என்னை புரிஞ்சுக்க வேண்டாம், புரிஞ்சுக்கணும்னு நான் எதிர்பார்க்கவும் இல்லை… இப்போ என்ன உனக்கு என்னை விட்டு போகணும் அவ்ளோ தான… இனி நீ நினைச்சாலும் உன் கண் முன்னாடி நான் வரமாட்டேன்… ” என்றவனை பார்த்து உணர்வின்றி சிரித்தவள்…

” உங்களை நம்புன பாவத்துக்கு உங்க கையாலயே என்னை கொன்னுடுங்க ” என்று அவள் வார்தைகளை அமிலமாக வீச… தடுமாறி போனவன் அவள் மீதிருந்து தனது கையை அகற்றினான்… கைகளில் ஏற்பட்ட காயத்தால் கண்களில் இருள் சூழ அவள் அங்கேயே மயங்கி சரிய போகவும்… தன்னையும் அறியாமல் அவனது கரம் அவளை தாங்கி பிடித்திருந்தது…

பின்னர் அவளது காயத்தை சுத்தம் செய்து கட்டு போட்டு விட்டவன் அவளை மகிழன் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான்… அவள் இன்னும் மயக்கத்தில் இருக்கவே அவளை மகிழனிடம் ஒப்படைத்தவன்..

” அவளை கவனமா பார்த்துக்கோ… அப்புறம் உங்க அத்தை பாதுகாப்பா தான் இருக்காங்க.. தனியா ஒரு வீட்டுல வச்சு அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்த்துட்டு தான் இருந்தோம்… இப்போ நல்லாவே குணமாகிட்டாங்க… நீங்களும் இனி அங்கயே இருங்க.. கொஞ்ச நாள் தனியா எங்கயும் வெளியே போக வேண்டாம்… ” என்றவன் மயக்கத்தில் இருந்த கீர்த்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து வந்தவன்… நேராக தனது வீட்டிற்குள் நுழைந்தான்…

முன் அறையில் உடைந்து கிடந்த பொருட்களை எல்லாம் பார்த்தவனது இதழ்கள் வலிமிகுத்த புன்னகையை உதிர்க்க… தனது அறைக்குள் நுழைந்து கண்களை மூடி அமர்ந்தவனுக்கு கடந்த காலம் அனைத்தும் கண்முன்னே காட்சிப்படமாகியது…

*******

நான்கு வருடங்களுக்கு முன்பு…

சரத்தும், அதியனும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்…

” டேய் இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா என் மானமே போய்டும்டா ” என்று சரத் கூற…

” இதுக்கு மேல போறதுக்கு என்ன இருக்கு பிரதர் ” என்றான் அதியன்..

” அடேய் கேஸ் பயில் பண்ணிட்டா என் கேரியர்ல அது பெரிய பிளாக் மார்க் ஆகிடும்டா ”

” அந்த அளவுக்கு பயம் இருக்கிறவன், இந்த மாதிரி தப்பு எல்லாம் பண்ணாமல் இருந்திருக்கனும் ”

” அடேய்.. நீயும் தான் இப்போ என் கூட இருக்க ”

” ஆமா.. ஆனால் நான் ஒன்னும் உன்னை மாதிரி புலம்பிட்டு இல்லயே ”

” சரி விடு இப்போ என்ன  தான்டா பண்ணுறது அண்ணா வேற ஊருல இல்லை..  யாரு கிட்ட ஹெல்ப் கேக்குறது தாத்தா கிழவனுக்கு தெரிஞ்சா என்னடா ஆகும் ”

” ஒன்னும் ஆகாது நாளைக்கு ஹெட் லைன்ல் சக்ரவர்த்தி குடும்ப வாரிசுகள் விபச்சார வழக்கில் கைதுன்னு வரும்.. எப்படியும் அண்ணா வந்து நம்மல ஜாமீன்ல எடுத்திடுவாரு… அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போனால் அந்த தாத்தா கிழவன் நமக்கு சொத்துல விஷம் வச்சு கொன்னுடுவான்… சிம்பிள்”

” டேய் நீ வேற பயம் காட்டாதடா, ” என்ற சரத் அருகில் இருந்த ஒரு கான்ஸ்டபிளின் தோளை சுரண்ட .. அவர் இவர்களுக்கு தெரிந்த போலீஸ் என்பதால் அவரிடம் பேரம் பேச தொடங்கினான் சரத்…

” தம்பி புது ஏசி ரொம்ப கோவகாரர் இந்த சிபாரிசு எல்லாம் அவர்கிட்ட எடுபடாது ” என்று அவர் கூற

” சரி உங்க போனையாவது கொடுங்க ” என்றவன் யாருக்கும் தெரியாமல் அவரிடம் இருந்து போனை வாங்கி அதியனிடம் கொடுக்க… அவனோ அவனை புரியாமல் பார்த்தவன் ‘என்ன’என்று புருவம் உயர்த்த…

” வேற வழியே இல்லை, என்னால கம்பி எண்ணி கலி எல்லாம் தின்ன  முடியாது அவனுக்கு போன் பண்ணு ” என்று சரத் கூற மறுத்தான் அதியன்…

” டேய் நான் டாக்டர்டா இது எல்லாம் வெளியே போனால் அது என் தொழிலுக்கே அவமானம் புரிஞ்சுக்கடா ”

” அந்த எண்ணம் இருந்தால் நீ இந்த மாதிரி தப்பு எல்லாம் பண்ணி இருக்கவே கூடாது ”

” அதி ப்ளீஸ் எனக்காக ”

” சரி நான் நம்பர் டயல் பண்ணுறேன்… ஆனால் நான் உதவி கேட்டன்னு அவன் கிட்ட சொல்ல கூடாது…”

” உன் பேரை சொன்னா தான்டா வருவான் என் பேரை சொன்னா உள்ளயே கிடந்து சாகட்டும்னு விட்டுடுவான் ”

” சரி என்னமோ பண்ணித்தொலை  ” என்ற அதியன் விக்ரமனது நம்பரை டயல் செய்து சரத்திடம் கொடுக்க.. சரத்தும் அதை யாருக்கும் தெறியாமல் அந்த கான்ஸ்டபிள் இடம் கொடுத்தான்…

” அண்ணா இந்த மாதிரி அதியன்னு ஒருத்தன் போலீஸ்ல மாட்டி இருக்கான், போலீஸ் கையில சாவடி வாங்கிட்டு இருக்காருன்னு சொல்லுங்க… முடிச்சா இப்போவோ அப்போவோன்னு இழுத்துட்டு இருக்கான்னும் சொல்லுங்க அப்போ தான் வருவான் ” என்று சரத் கூற.. அவரும் சரி என்று தலையாட்டி விட்டு அங்கிருந்து சென்றார்…

” ஏன்டா அதி… நம்ம தாத்தா கிழவனும் அவன் வயசுல பயங்கர ஆட்டம் போட்டத வரலாறு சொல்லுது… அப்போ ஏன்டா நம்மல மட்டும் இப்படி போட்டு சாவடிக்கிறான்… ”

” அதெல்லாம் அப்படி தான்டா..  வயசுல ஆடுறவரை ஆடிட்டு வயசான அப்புறம் அடங்கிட வேண்டியது தான்.. அப்போ யாராவது ஏதாவது கேட்டால்.. அந்த காலத்தில் நான் எல்லாம் ராமர் மாதிரின்னு பொய் சொல்லி ஊரை ஏமாத்த வேண்டியது தான்… நீ கூட அறுவது வயசுல இந்த டயலாக்கை தான் சொல்லுவ பாரேன் ” என்று கூறி அதியன் சிரிக்க அவனை முறைத்து பார்த்தான் சரத்…

விக்ரமன் அழைப்பை ஏற்கவும் சரத் கூறியதை போலவே அந்த காவலரும் அவனிடம் விஷயத்தை கூற.. ” சரி எந்த ஸ்டேஷன்…  ” என்று முகவரியை கேட்டறிந்து கொண்டான் விக்ரமன்…

” அவன் எப்படி இருக்கான் அடி பலமா ? ” என்று விக்ரமன் கேட்கவும்…

” உங்க ப்ரென்டுக்கு பெருசா எந்த அடியும் இல்லப்பா ” என்று அந்த காவலர் கூற…

” பிரென்ட் இல்லை பிரதர் ” என்று அழுத்தமாக கூறினான் விக்ரமன்..

 

அடுத்த அரை மணிநேரத்தில் விக்ரமன் அந்த காவல் நிலையத்திற்கு வந்தான்…

அதியனும், சரத்தும் பேசிக்கொண்டிருக்க, முதலில் விக்ரமனை அங்கு கண்டது என்னவோ சரத் தான்..

” டேய் வந்துட்டான்டா ” என்ற சர்த், அதியனின் தோளில் கை வைக்க.. அவன் கண்கள் காட்டும் திசையில் தன் பார்வையை திரும்பிய அதியன்.. அங்கு விக்ரமனை கண்டதும்! ஏதோ தன் சொந்த வீட்டில் இருப்பது போல இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன்… நேர்த்தியாக அணிந்திருந்த சட்டையின் மேல் மூன்று பட்டன்களை திறந்து விட்டு கொண்டு அவனை எதிர்பார்வை பார்த்தபடி திமிராக அமர்ந்திருந்தான்.

உள்ளே நுழைந்த விக்ரமனின் கண்களுக்கு பொறுக்கி போன்று காட்சியளித்தான் அதியன்.. அவனது தோற்றம் கண்டு நொடியில் விக்ரமனது முகம் இறுகி போனது..

அதியன் விரும்பியதும் அதை தானே!

அப்போது தன் அறையில் இருந்து வெளியே வந்தான்..  அசிஸ்டன் கமிஷ்னரும், விக்ரமனது நண்பனுமான விஜய்.

வெளியே வந்தவன் அங்கு விக்ரமனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை ” விக்ரமா நீ எங்க இங்க? நாளைக்கு தான் நம்ம வீட்டுக்கு வரணும்னு நினைச்சிட்டு இருந்தேன் ” என்று சொன்னவன் விக்ரமனது அருகில் வந்து நின்றான்.

அங்கு விஜயை கண்டதும் விக்ரமனது முகத்தில் சிறு மகிழ்ச்சி ஏற்பட்டது…

அவர்களது உரையாடலை அங்கிருந்து கேட்டுக்கொண்டிருந்த  அதியனும், சரத்தும் இதழ்களை பிதுக்கியபடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்…

” ஒரு சின்ன பிரச்னைடா அது தான் ” என்ற விக்ரமனது பார்வை அதியனின் மீது பதிய… அதை கண்ட விஜய்

” என்னடா பிரச்னை? ” என்று அதை அறியும் எண்ணத்துடன் கேட்டான்.

” அவங்க ரெண்டு பேர் மேலயும் என்ன கேஸ் பையில் பண்ணி இருக்கு ” என்று விக்ரமன் கேட்க..

” இன்னும் கேஸ் பையில் பண்ணல விக்ரமா.. ஹோட்டல் பாரில் பிரச்சனை பண்ணி இருக்காணுங்க பத்தாததுக்கு, போதையில் அங்க இருந்த பொண்ணு கிட்ட மிஸ் பிகேவ் பண்ணதா சொல்லி புகார் வந்து இருக்கு ”

” யார் கம்பளைன்ட் கொடுத்தது ”

” தனிப்பட்ட முறையில் யாரும் கம்பளைன்ட் கொடுக்கல.. கால் வந்தது.. போய் பார்த்த அப்ரோம் தான் தெரிஞ்சுது… அங்க இருந்த பார் டான்சர் கிட்ட ரேட் பேசி தப்பா நடக்க முயற்சி பண்ணி இருக்கானுங்க… அதை என்னன்னு கேட்க வந்த ரெண்டு பேரை அடிச்சு சண்டை போட்டிருக்கானுங்க ” என்று விஜய் கூறி கொண்டிருக்க… நேராக அதியனது அருகில் வந்தான் விக்ரமன்,

” எழுந்திரு ” என்று அவன் கட்டளையாக கூற.. ஆர்ப்பாட்டம் இல்லாமல் எழுந்து நின்றான் அதியன், சரத்தோ யாருக்கோ வந்த விருந்து என்றவாறு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

” அவன் சொல்லுறது உண்மையா ” என்று விக்ரமன் கேட்க.

இதழ் வளைத்து கேலியாக சிரித்த அதியன் ” ஆமா ” என்று கூறிய அடுத்த நொடியே விக்ரமனது கரம் அதியனது கன்னத்தில் இடியாக இறங்கியது…

அவன் அடித்த வேகத்தில் உதட்டோரம் உதிரம் வழிய, அதனை தன் பெருவிரல் கொண்டு  துடைத்தபடி எதிரில் இருந்த விக்ரமனை நிமிர்ந்து பார்த்தான் அதியன்.. அந்த பார்வையில் ‘அவளோ தானா இன்னும் அடி’ என்ற அர்த்தம் மறைந்திருந்தது…

விக்ரமன் மீண்டும் அவனை அடிக்க… அதனை கண்ட சரத் எழுந்து வந்து, விக்ரமனை எதிர்க்க முன் வரவும்… அவன் நெஞ்சில் கைவைத்து தடுத்து நிறுத்திய அதியன். ‘ நீ அடி ‘ என்பது போல விக்ரமனை நிமிர்ந்து பார்த்தான்.

விக்ரமனது இந்த செயலை கண்ட விஜயும் விரைந்து வந்து  அவனை தடுத்தான் ” என்ன விக்ரமா இது? ” என்று கொஞ்சம் சத்தமாகவே அவன் பேச…

” விஜய் எனக்கு ஒரு உதவி வேணும் ”

” என்னடா? ”

” இவனுங்க மேல கேஸ் எதுவும் பையில் பண்ண வேண்டாம்?

” ஏன்டா ? இவனுக்கும் உனக்கு என்ன சம்பந்தம் ”

” இந்த தருதலை என் தம்பிடா ” என்று கூறிய விக்ரமன் அதியனை அனல் தெறிக்க பார்க்க..

அவன் கூறிய ‘ தம்பி ‘ என்ற வார்த்தையை கேட்டு அதியனது உதடுகள் விரக்தியாக விரிந்து கொண்டது.

விஜய் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்தாலும். விக்ரமனுக்காக அவர்கள் இருவரது மீதும் எந்த வித புகாரும் பதிவு செய்யாமல் விடுவித்தான்…

அந்த பெண்கள் யாரும் இவர்கள் மீது புகார் கொடுக்க முன்வராததால், வார்ன் செய்து அனுப்பிவிடலாம் என்று தான் விஜயும் நினைத்திருந்தான்… அதனால் விக்ரமன் கூறியவுடன் ‘சரி’ என்று கூறி இருவரையும் விடுவித்தான்…

சரத்தும், அதியனும் வெளியே வரவும், தனது கார் அருகில் நின்றுகொண்டிருந்த விக்ரமன் ” எப்படி இருக்க அதியா? ” என்று கேட்க… உணர்வின்றி சிரித்து கொண்டான் அதியன்.

அவனது சிரிப்பின் அர்த்தம் உணராதவனா விக்ரமன்?

நேராக அவன் அருகில் வந்த விக்ரமன், கழட்டி விட பட்டிருந்த அதியனது சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக மாட்டி விட்டான்.

அதியனோ அவனை தடுக்கவும் இல்லை, அவனது முகத்தை பார்க்கவும் இல்லை… பின்னர்  கலைந்திருத்த அவனது முடியை சரி செய்தவன் ” ஏன்டா இப்படி இருக்க ? ” என்று வலி நிறைந்த குரலில் கேட்டான்.

அதனை கேட்ட அடுத்த நொடி அதியனது கண்கள் கலங்கி போனது, அது விகர்மனுக்கு தெரியாமல் மறைத்தபடி திருப்பி கொண்ட அதியன் ” வா சரத் போகலாம் ” என்று கூறி அங்கிருந்து செல்ல பார்த்தான்.

“நானே உன்னை வீட்டுல விட்டுடுறேன் ” என்று கூறி அவனை தடுத்தான் விக்ரமன்.

” ஒன்னும் வேண்டாம் ” என்று சரத் வெடுக்கென்று கூற..

” நான் உன்கிட்ட பேசல.. ” என்று கூறி சரத்தை முறைத்தவன்… “அதியா வா ” என்று கூறி காரின் முன் பக்க கதவை திறந்து விட்டான்.

” நீங்க யாரு எனக்கு ? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் ? நான் எதுக்கு உங்க கூட வரணும் ” என்று அதியன் எங்கோ பார்த்தபடி கேட்கவும்,

” அதை என் முகத்தை பார்த்து சொல்லு, நான் போயிடுறேன் ” என்று அழுத்தமாக கூறிய விக்ரமனை திருப்பி பார்த்த அதியன். ஒருவார்த்தை கூட பேசவில்லை… பேசமுடியவில்லை என்று தான் கூறவேண்டும்…

அவன் மீது ஆயிரம் கோவம் இருந்த போதிலும் வார்த்தைக்கு கூட அவனை தன்னில் இருந்து பிரித்து யோசிக்க முடியவில்லை அதியனால்… அந்த மௌனமே அவன் கொண்ட உண்மையான அன்பு…

 

அதியனின் அமைதியை கண்ட சரத், அவனது கரத்தை பற்றி முன்னே இழுத்து செல்ல… விக்ரமனை திரும்பி பார்த்த அதியனது கண்களில் வலியும், ஏமாற்றமும், கோபமும் நிறைந்திருந்தது. அதை கண்ட விக்ரமனுக்கு மனம் கனத்து போனது…

ஏழு வயது சிறுவனாக தனது கரத்தை பற்றி கொண்டு” என்னை விட்டு போகாத விக்ரமா, நானும் உங்கூடவே வரேன்.. என்னையும் உன் கூடவே அழைச்சிட்டு போ, எனக்கு இங்க பிடிக்கலடா என்னை விட்டு போகாத” என்று கதறி அழுத அதியனது கள்ளமில்லா முகம், அவன் கண் முன் வந்து போனது…

******

பூபாலன் சக்ரவர்த்தி… சக்ரவர்த்தி குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு மொத்த சொத்திற்கும் ஒரே அதிபதி..

தேவி இவரது முதல் மனைவி.. பெரும் வசதி படைத்தவர்… ஆனால் அவரது பேச்சிலும், செயலிலும் அந்த ஆடம்பரம் சிறிதும் இருக்காது…

இருவருக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்ற நிலையில்… உடனே பூபாலன் இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டார். அவர் பெயர் லதா

அவரது இந்த செயலில் மொத்தமாக நொறுங்கி போனார் தேவி.. இருந்தும் தன் இயலாமை தான், அவரது இரண்டாம் திருமண வாழ்க்கைக்கு காரணம் என்று எண்ணியவர் ஒதுங்கி நின்று கொண்டார்…

திருமணம் ஆன அடுத்த வருடத்திலேயே லதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது அவனுக்கு ராஜன் சக்ரவர்த்தி என்று பெயர் சூட்டினர்…

ராஜன் பிறந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு தேவி கர்ப்பம் தரித்தார்… தனது கண்ணீரை கண்டு கடவுள் தனக்கு கொடுத்த வரமாக அதை எண்ணினார்… அதனால் கருவில் இருந்த குழந்தையை பொத்தி பொத்தி பாதுகாத்தார்..

ஒன்பது மாதத்திற்கு பிறகு அழகான ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்த தேவி அவனுக்கு அர்ஜுன் சக்ரவர்த்தி என்று பெயர் சூட்டினார்…

சொத்திற்காக தேவியை திருமணம் செய்து கொண்டதாலோ என்னவோ பூபாலனுக்கு தேவியின் மீது பெரிதாக எந்த ஈர்ப்பும் இல்லை .. ஆனால் லதாவின் மீது அதீத காதல் கொண்டிருந்தார்… அதே போல லதாவின் குழந்தை ராஜன் மீதும் அவருக்கு அதீத அன்பு இருந்தது… ஆனால் அந்த அன்பு அர்ஜுன் மீது இருந்ததா? என்று கேட்டால் அது கேள்வி குறி தான்…

ஆனால் பூபாலன் கொடுக்காத  தந்தை பாசத்தையும் சேர்த்து தாயான தேவி அர்ஜுனுக்கு கொடுத்து அவனை கண்ணுக்கு கண்ணாக வளர்த்தார்…

அடுத்து சில வருடங்களில் லதா மீண்டும் கர்ப்பம் தரிக்க.. அவருக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது… அவனுக்கு மோகன் சக்ரவர்த்தி என்று பெயர் வைத்தனர்.

ராஜன்,அர்ஜுன் மற்றும் மோகன் என்று பூபாலனுக்கு மூன்று மகன்கள்…

ராஜன் தன்னுடைய 23 வது வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.. அவருக்கு தன் அன்னை லதாவை விட பெரிய அன்னை தேவியின் மீது பாசம் அதிகம்… அதற்கு காரணம் தேவி மாற்றான்  பிள்ளைகள் என்று கூறி யாரிடமும் பாகுபாடு காட்டியது கிடையாது… அவருக்கு மூன்று பிள்ளைகளும் ஒன்று தான்… ஆனால் லதாவிற்கு அப்படி இல்லை… இயல்பான பொறாமை குணம் இருந்தது.

ராஜன் தன் பெரிய அன்னையின் மீது கொண்ட பாசத்தால் தன் மகனுக்கு “தேவன் சக்ரவர்த்தி” என்று பெயர் சூட்டினான்…

 

தேவன் பிறந்து பதிமூன்று வருடம் கழித்து தான் அர்ஜுன் திருமணம் செய்து கொண்டார்… அவருக்கு ஒரே ஒரு மகன் அவன் தான் அபிமன்யு.

தேவிக்கு தன் தந்தையின் பெயரை தன் பேரனுக்கு வைக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது, அதனை அறிந்து கொண்ட அர்ஜுனனும்… தன் மகனுக்கு ” விக்ரமன் அபிமன்யு ” என்று பெயர் சூட்டினான்…

சக்கரவர்த்தி குடும்பத்தில் பிறந்தும் தன் பெயருக்கு பின்னால் சக்ரவர்த்தி என்று கூறிக்கொள்ளாத அவர்கள் குடும்பத்தின் ஒரே வாரிசு விக்ரமன் மட்டுமே..

அர்ஜுனுக்கு திருமணமான அடுத்த வருடத்தில் மோகனுக்கும் திருமணமானது… அவனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவர்கள் தான் சரத், மற்றும் அதியன்..

 

சரத் மற்றும் அதியனின் இரண்டாவது வயதில் மோகனும் அவனது மனைவியும் ஒரு விபத்தில் இறந்து விட.. தாய், தந்தையை இழந்த அவர்கள் இருவரையும் அர்ஜுனும் அவனது மனைவி ஜோதியும் தான் பார்த்து கொண்டனர்.. விக்ரமனுக்கும் அதியனுக்கும் கிட்ட தட்ட நான்கு வயது வித்தியாசம் இருக்கும்…

சிறுவயதிலிருந்தே அதியனையும், சரத்தையும் விக்ரமன் தான் தனது கைக்குள் வைத்து பார்த்துக்கொண்டான்..

சரத் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு தேவன் சொல்லிற்கேற்ப நடக்க ஆரம்பித்தான்… அதனால் சிறுவயதில் இருந்தே விக்ரமன் மீது அவனுக்கு பிடித்தம் இருந்தது இல்லை… ஆனால் அதியன் அப்படி அல்ல எந்நேரமும் விக்ரமனுடனே அலைவான்… எதற்கெடுத்தாலும்  ‘விக்ரமா…விக்ரமா… விக்ரமா ‘ என்று தான் இருப்பான்.  அர்ஜுனையும், ஜோதியையும் அம்மா, அப்பா என்று தான் அழைப்பான்.

இப்படியே வருடங்கள் கடந்தன…

இடையில் உடல்நல குறைவு காரணமாக பூபாலனின் இரண்டாம் மனைவி லதா இறந்து விட்டார்…

ஒரு நாள் தேவி பாட்டி.. விக்ரமன், சரத் மற்றும் அதியன் என மூன்று பேருக்கும் மகாபாரத கதையை கூறி கொண்டிருந்தார்…

அந்த கதையை கூறி முடித்த தேவி பாட்டி, அவர்கள் மூன்று பேரையை நோக்கி “இந்த கதையில் உங்களுக்கு பிடித்த மட்டும் பிடிக்காத கதாபாத்திரம் எதுன்னு சொல்லுங்க”  என்று கேட்டார்…

சரத்தோ முந்தி கொண்டு” தூங்கிட்டேன் பாட்டி.. கதை கேட்டவரை எனக்கு சகுனியை தான் புடிச்சி இருக்கு, வேணும்னா இன்னொரு முறை கதை சொல்லுங்க, வேற யாரையும் பிடிக்குதா பார்ப்போம் ” என்று கூறுவிட்டு அடிக்கு பயந்து  அங்கிருந்து எழுந்து ஓடி விட்டான்.

சரத் எப்போதும் விளையாட்டு குணம் கொண்டவன், அதனால் அவனது பதிலும் விளையாட்டு தனமாக தான் இருக்கிறது என்று எண்ணிய தேவி பாட்டியும் அதனை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.. அடுத்ததாக அதே கேள்வியை விக்ரமனிடம் கேட்டார் தேவி…

” நீ சொல்லு ” என்று விக்ரமனிடம் பாட்டி கேட்க..

” ரொம்ப பிடிச்சது கர்ணன் பாட்டி. பிடிக்காதது தர்மன் பாட்டி ” என்று அவன் கூற…

அவனை கேள்வியாக பார்த்த தேவி ” ஏன் தர்மரை பிடிக்கல ”  என்று கேட்க…

” தர்மர் திரௌபதியை வைத்து சூதாடினது தப்பு தான பாட்டி அதனால பிடிக்கல.. ” என்றான் விக்ரமன். அவனது பதிலை கேட்டு தேவியின் இதழ்கள் மெல்ல விரிந்து கொண்டது… பின்னர் அதே கேள்வியை அதியனிடம் கேட்டார்..

” எங்க என் அதி குட்டி சொல்லுங்க உங்களுக்கு யாரை பிடிக்கும், பிடிக்காது ”

” எனக்கு இந்த கதையில் பிடிச்சது, பிடிக்காதது ரெண்டுமே கிருஷ்ணர் தான் பாட்டி… ” என்ற அதியன், காரணம் கூறாமல் அங்கிருந்து எழுந்து சென்றான்…

செல்லும் அவனை புரியாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் விக்ரமனும், தேவியும்…

 

விக்ரமனின் தந்தை அர்ஜுனும், தாய் ஜோதியும் மருத்துவர்கள்… தேவனது தந்தை ராஜனின் மருத்துவமனையில் தான் இருவரும் பணிபுரிந்தனர்…

 

இப்படியான சூழ்நிலையில் தான் அவர்களது மருத்துவமனையில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஐம்பத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்தனர்..

மேலும் மூன்று பேர் மரணமடைந்தனர்…

அந்த மூன்று பேரில் இருவர் வர்ஷாவின் தாயும்,தந்தையும்… மீதம் ஒருவர் பரதனின் தந்தை ஆவர்… பரதனின் தாய் அவன் பிறந்த போதே இறந்து விட அவனது  தந்தை அவனை தனியா தான் வளர்த்து வந்தார்…

ஆக தாய்,தந்தையை இழந்து தவிக்கும் அந்த இரு குழந்தைகளுக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அர்ஜுன் எடுத்த ஒரு முடிவு தான் அவர்களை இந்த குடும்பத்தில் இருந்து பிரித்து விட்டது…

இந்த விபத்தின் போது விக்ரமனுக்கு கிட்டத்தட்ட 11 வயது… அதியன், சரத் மற்றும் பரதனுக்கு 7 வயது வர்ஷாவோ மூன்று வயது குழந்தை…

விபத்தில் பாதிக்கபட்ட  குடும்பத்திற்கு பணத்தை கொடுத்து    சரி செய்து விடலாம் என்று முடிவு செய்தார்கள் ராஜனும், பூபாலனும்..

ஆனால் அர்ஜுனோ தாய், தந்தையை இழந்த அந்த இருவரையும் தானே தத்து எடுத்து வளர்க்க முடிவு செய்து, பத்திரிக்கைக்கு செய்தி கொடுக்க போவதாக பேசிக்கொண்டிருக்க… அதனை கேட்டு பூபாலனுக்கும், ராஜனுக்கும் கோவம் அதிகமனது…

அந்த முடிவில் குடும்பத்தில் பெரிய சண்டை உருவானது…

” யார் சொத்தை யார் சொந்தம் கொண்டாடுறது… அப்படியே நீ அவங்களை தத்து எடுத்து தான் வளர்ப்ப அப்படின்னா இனி உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இப்போவே வீட்டை விட்டு வெளியே போ ” என்று ஆக்ரோசமாக கூறினார் பூபாலன்… அதனை கேட்டு 24 வயதான தேவன் சக்கரவர்த்திக்கு மனதில் அவ்வளவு மகிழ்ச்சி உருவானது…

அதன் பிறகு தேவி குறுக்கிட்டு தான் அந்த பிரச்சனையை சரி செய்தார்…

தேவியின் வேண்டுதலுக்கு இணங்க வர்ஷாவையும், பரதனையும் அர்ஜுன் தத்தெடுக்க வில்லை… ஆனால் அவர்களை தங்களுடன் வைத்து பார்த்து கொள்கிறோம் என்று கூற… அதற்கும் மறுப்பு தெரிவித்தார் பூபாலன்…

மூன்று வயதே ஆன அந்த சிறு பிள்ளையை அனாதை இல்லத்திற்கு விட அர்ஜுனுக்கு மனம் வரவில்லை…

” உங்க விருப்பப்படி நான் அந்த குழந்தைகளை தத்தெடுக்க மாட்டேன்… எனக்கும் அவங்களுக்கும் அதிகார பூர்வமாக எந்த உறவும் இருக்காது.. நாளை பின்ன இதனால உங்க சொத்துக்கும் குடும்பத்துக்கும் எந்த வித பிரச்சனையும் வராது… ஆனால் நான் தான் அவங்களை வளர்க்க போறேன். வெறும் ஒரு பாதுகாவலராக மட்டும் … அதுல நீங்க தலையிட முடியாது ”

” அப்போ உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை… கண்ட அனாதைங்களுக்கு எல்லாம் என் வீட்டுல இடம் கொடுக்க முடியாது ” என்று பூபாலன் தன் பிடியில் இருந்து சிறிதும் இறங்காமல் பேசினார்…

” நீங்க ஹாஸ்பிட்டலை சரியா கவனிக்கமால் விட்டதால தான் இந்த விபத்தே நடந்தது… தப்பு எல்லாம் நீங்க பண்ணிட்டு… உங்க தப்புக்கு பரிகாரம் பண்ண நினைச்ச என் மகனை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுறீங்க ” என்று தேவி சண்டைக்கு வர… பூபாலன் கோவத்தில் தேவியை அடித்து விட அவரோ அந்த இடத்திலேயே மயங்கி சரிந்து தன் உயிரை விட்டார்…

மனைவி இறந்த வருத்தம் சிறிது கூட பூபாலனது முகத்தில் தெரியவில்லை ” விட்டது சனி ” என்பது போல தான் முகத்தை வைத்து கொண்டு அவருக்கு காரியம் செய்தார்…

தன் தந்தையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்த அர்ஜுன் தன் தாயின் மூன்றாம் நாள் காரியம் முடியவும் அங்கிருந்து செல்ல முடிவு செய்தான்…

 

” நாங்க போறோம்! இப்படி பட்ட உங்க  சொத்தும், சொந்தமும்  எனக்கும் என் குடும்பத்துக்கும் வேண்டாம்.. என் அம்மா இல்லாத இந்த வீடு எனக்கு சுடுகாடு மாதிரி ” என்றவர் தன் மனைவியையும், மகனையும் அழைத்து கொண்டு செல்ல பார்க்க…

ஏழு வயதே ஆன அதியனுக்கு நடக்கும் எதுவும் புரியவில்லை…  ஆனால் விக்ரமன் தன்னை விட்டு செல்கிறான்.  என்பது மட்டுமே அவனுக்கு புரிந்தது.. தனது கரத்தை பிடித்து கொண்டிருந்த தேவனின் கரத்தில் இருந்து, தனது கரத்தை விடுவித்து கொண்டு நேராக விக்ரமனிடம் ஓடி வந்த அதியன் ” விக்ரமா எங்க போற? எப்போ வருவ நானும் உங்கூடவே வரேன்.. ஏன் எல்லாரும் கோவமா பேசிக்கிறீங்க.. எனக்கு பயமா இருக்கு என்னையும்  இங்க இருந்து அழைச்சுட்டு போ ” என்றவன் விக்ரமனது கரத்தை இருக பற்றிக்கொண்டான்…

விக்ரமனோ அர்ஜுனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து  ” அப்பா நம்ம அதியன் ப்பா இவனையும் நம்ம கூடவே அழைச்சிட்டு போகலாம் ப்பா ப்ளீஸ் ப்பா ” என்று கேட்க… அர்ஜுனும் மறுப்பு சொல்லாமல் இன்னொரு கையில் அதியனை பிடித்து கொண்டு  அங்கிருந்து அழைத்து செல்ல முயலவும்…

” நில்லு ” என்ற பூபாலனின் குரல் அர்ஜுனை தடுத்து நிறுத்தியது..

” அவன் இந்த குடும்பத்தோட வாரிசு… அவன் இங்க தான் இருப்பான்… ” என்ற பூபாலன் தனது அருகில் இருந்த தேவனை ஒரு பார்வை பார்க்க…

அவரது பார்வையின் அர்த்தம் உணர்ந்த தேவனும் விரைந்து அர்ஜுனிடம் வந்தவன்.. அவரது கரத்திலிருந்து அதியனின் கரத்தை பிடித்து இழுத்தான்..

அர்ஜுனின் கரத்தில் இருந்து அதியனது கரம் விடுபட… விக்ரமன் விரைந்து வந்து அதியனது கரத்தை பற்றி கொண்டு, அவனை தன் பக்கமாக இழுத்தான்…

” என்னை விடு தேவாண்ணா நான் அர்ஜுன் அப்பா கூட போறேன்… என்னை விடு ” என்ற அதியனது கரத்தை பிடித்து தேவன் வலுக்கட்டாயமாக இழுக்க… மறுபுறம், விக்ரமனின் கரத்தை விடாமல்  பற்றி கொண்டான் அதியன்..

” அதியன் எங்க கூட தான் இருப்பான்… நாங்க அவனை அழைச்சிட்டு போறோம் ” என்று விக்ரமன் கூற…

அர்ஜுனின் அருகில் வந்த தேவன் ” என்ன இவனை காரணம் காட்டி நாளைக்கு சொத்துல பங்கு வாங்கலாம்னு பிளான் பண்ணுறீங்களா சித்தப்பா… இது பிச்சைக்கார தனமா இல்லை ” என்று நக்கல் குரலில் கேட்க… கண்கள் சிவக்க தேவனை முறைத்து பார்த்த அர்ஜுன்…

” விக்ரமா அவன் கையை விடு.. நமக்கு இந்த வீடும் வேண்டாம், இந்த வீட்டுல இருக்கவங்களும் வேண்டாம் ” என்ற அர்ஜுன் விக்ரமனை அழைக்க…

” அப்போ அதியன் நம்ம கூட வரட்டும் பா… அவன் நம்ம அதியன் பா ”

” உன்னை வான்னு சொன்னேன் விக்ரமா ”

” இல்லை பா அதி…. ”

” இப்போ வர போறியா இல்லையா ” என்று அர்ஜுன் குரல் உயர்த்தி பேச 11 வயது சிறுவனால் தன் தந்தையை எதிர்த்து என்ன தான் செய்ய முடியும்… மௌனமாக கண்கள் கலங்கி நின்ற விக்ரமன் அதியனது கரத்தில் இருந்த கரத்தை எடுக்க தனது பிடியை தளர்த்தினான்..

விக்ரமன் தன் பிடியை தளர்த்தியது தன் தந்தையின் மீது கொண்ட  கொண்ட நம்பிக்கை.. அவர் எது

செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் என்ற எண்ணம்.. அது அவரது சொல்லுக்கு அவன் கொடுத்த மதிப்பு…

ஆனால் அன்று அது அதியனுக்கு விக்ரமன் தன்னை விட்டுவிட்டான் என்ற எண்ணத்தை தான் கொடுத்தது… அவனுக்கு தன் மீது உண்மையான பாசம் இல்லை அதனால் தான் தன்னை விட்டுவிட்டான்… என்று எண்ணி அதிர்ச்சியுடன் விக்ரமனை வலி நிறைந்த பார்வை பார்த்தான் அதியன்…

அப்போது அவன் கண்களில் தெரிந்த வலியும்… வேதனையும்… ஏமாற்றமும் இன்றும் அவனது கண்களில் தெரிந்தது… அந்த கண்கள் தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு அன்று போல இன்றும் விடையளிக்க முடியாமல் தவித்து நின்றான்… விக்ரமன்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்