
அன்றிரவு வரைக்கும் தன்னுடைய தந்தையுடனேயே சோபாவில் அமர்ந்து பேசி விட்டு அவரிடம் சொல்லிக் கொண்டு உறங்குவதற்காக அறைக்கு வந்தான் அபூர்வன்.
அங்கே நிர்மலமான வதனத்துடன் அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்த மனைவியைப் பார்த்தான்.
இவள் தானா? இன்று முழுவதும் என்னை கதிகலங்க வைத்தவள்? தன் ஆராவிற்குக் தன்னைக் காதலிப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியாதென்று அல்லவா நினைத்தேன்? ஆனால் சிறிது நாட்களுக்கு முன்பு இருந்து இப்போது வரைக்கும் நடந்தவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தவனுக்கு உடல் சிலிர்த்தது.
“நீ என்னோட ஆராவா? என்று எனக்கே சந்தேகமாக இருக்கும்மா? எப்பவும் அபூன்னுப் பேசறவ, இப்போ எல்லாம் ஹாலில் எல்லாரும் இருக்கிற அப்போ மட்டும் தான் அப்படி கூப்பிட்ற! இனிமேல் நான் உங்கிட்ட இதை எல்லாம் எதுக்கு செய்றன்னுக் கேட்கவே மாட்டேன்! உன் வயித்துல நம்மக் குழந்தை வளந்துட்டு இருக்கு. அதனால் உனக்கு மனசளவுல எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க மாட்டேன்! உனக்காக நான் உங்கிட்ட தோத்துட்டேன்னு நினைச்சுக்கிறேன். அப்போ தான் நீ சந்தோஷமாக, நிம்மதியாக இருப்ப!”என்று மெலிதாக முணுமுணுத்து விட்டு அவளது உச்சந்தலையில் தன் இதழ்களைப் பதித்தவன் அவளை எப்போதும் போல் கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்கினான் அபூர்வன்.
அடுத்த நாள் காலையில்,”நான் இதை எப்படி இவ்வளவு சாதாரணமாக விட்டுட்டேன்? இவ்ளோ கவனக்குறைவாக இருந்துட்டேனேங்க!”என்று அவர் தன் கணவரிடம் புலம்பித் தீர்ப்பது அறையில் இருந்து தயாராகி வந்த அபூர்வன் மற்றும் ஆராவிற்குக் கேட்டது.
“ஏங்க! நான் இவ்ளோ சொல்லிட்டு இருக்கேன்! எதையும் காதில் வாங்கிக்காமல் இருக்கீங்களே! ஏதாவது சொல்லுங்க? அப்போதாவது ஒரு மணி நேரமாகப் பொலம்புனதுக்கு எனக்கு நிம்மதியாக இருக்கும்ல”என்று குறைபட்டுக் கொள்ளவும்,
அதில் அவர் பேசுவதைக் கேட்க முடியாமல் விழி பிதுங்கி அமர்ந்து இருந்த நாச்சிமுத்துவைப் பார்த்த அவர்களது மகனும், மருமகளும் கலகலவென்று சிரித்து விட்டனர்.
உடனே அவர்களைப் பார்த்ததும் மீண்டும் புலம்பத் தொடங்கி விட்டார் நிலவேணி.
“இன்னும் நல்லா சிரிங்க!”என்றவரோ,
மேலும் தொடர்ந்து,”நீ மாசமாக இருக்க! நேத்துச் சாயந்தரம் உனக்கு உளுந்தங்களி செஞ்சுத் தர்றேன்னுச் சொல்லி இருந்தேன்! அதுக் கூட ஞாபகம் இல்லாமல் இருந்தேன்னு நினைக்கும் போது நான் எல்லாம் என்ன மனுஷி?”என்றதைக் கேட்டு,
“அதனால் என்னம்மா? அதை இன்னைக்குச் செஞ்சிக் கொடுத்துரு. அவ்வளவு தான்!”என அவரைச் சமாதானம் செய்தார் நாச்சிமுத்து.
அப்போது தான், தாங்கள் இருவரும் தங்களது இரவு உணவைச் சாப்பிடவில்லை என்பதே அவர்களுக்கு ஞாபகப்படுத்திற்கு வந்தது.
உடனே தன் மாமியாரிடம் சென்று,
“அத்தை விடுங்க! மாமா சொன்ன மாதிரி நேத்து இல்லைன்னா இன்னைக்குக் களி செஞ்சுக் கொடுங்க. இது ஒரு விஷயமா என்ன? நீங்க ஃபீல் பண்ணாதீங்க ப்ளீஸ்!”என ஆறுதலாகப் பேசினாள் ஆராத்ரிகா.
“என்ன இருந்தாலும் நான் செஞ்சது தப்பு தான் ஆராம்மா”என்றவருக்கு மனம் ஆறவே இல்லை.
ஆனால் அபூர்வனோ பொறுத்துப், பொறுத்துப் பார்த்து விட்டுத் தானே அடுக்களைக்குள் சென்று காபி கலந்து கொண்டான்.
“என்னடா நீயே காபி போட்டுக்கிட்டே?”எனக் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு மகனை ஏசினார் நீலவேணி.
“அதானே! உங்களுக்கு எங்களைப் பார்த்தால் மனுஷிங்களாகத் தெரியலையா? எங்ககிட்ட கேட்டால் நாங்கப் போட்டுத் தர மாட்டோமா?”என்று ஆராவும் அவனை வறுத்தெடுத்தாள்.
“ஓகோ! உங்ககிட்ட கேட்டால் மட்டும் உடனே போட்டுக் கொடுத்துடுவீங்க பாருங்க! பல்லை விலக்கிட்டு வா! மூஞ்சியைக் கழுவிட்டு வா! அப்படின்னுச் சொல்லி டார்ச்சர் பண்ண வேண்டியது! இதுக்கு ஒரு முடிவுக் கட்டலாம்னு தான் நானே காபி போட்டுக்கிட்டேன்”என்று
அவர்களுக்கு விளக்கம் அளித்து விட்டு,
“அம்மா உங்களுக்காவது காபிப் போட்டுக் கொடுத்தாங்களா? இல்லை, இவங்களோட புலம்பலிலேயே காபிக் குடிக்கறதையே மறந்துட்டிங்களாப்பா?”என்று நாச்சிமுத்துவிடம் அவரது நிலைமையைப் பற்றி விசாரித்தான் அபூர்வன்.
“அதெல்லாம் ஆச்சுப்பா! எனக்குக் காபி போட்டுக் கொடுத்துட்டுத் தான் உங்க அம்மா புலம்பவே ஆரம்பிச்சாங்க! இன்னும் முடியிற பாடில்ல!”என்று அவரிடம் இருந்து சலிப்பாகப் பதில் வந்தது.
அதில் அவர்கள் இருவரையும் முறைத்த மாமியாரிடம்,”அவங்களை விடுங்க அத்தை”என்று நீலவேணியுடன் முக்கியமான விஷயம் பேசப் போவதைப் போல் அவரது அருகில் செல்லப் போனாள் ஆராத்ரிகா.
அப்போது காபியைப் பருகி முடித்திருந்த அபூர்வனோ மனைவியின் கையைப் பிடித்தான்.
“இன்னைக்கும் நான் ஆஃபீஸூக்கு லீவ் போட்டுட்டேன்! எனக்கு உன் கூடவே இருக்கனும்னுத் தோனுது! அதனால் நாம ரூமுக்குப் போகலாம். அம்மா! ஆராவுக்கான ஜூஸை ரூமுக்குக் கொண்டு வாங்க!”என்று தாயிடம் தெரிவித்து விட்டுத் தன் மனைவியை அழைத்துக் கொண்டுத் தங்களது அறைக்குச் சென்றான் அபூர்வன்.
அவனது முகத்தைக் கவனித்த ஆராத்ரிகாவோ,’ஒருவேளை கண்டுபிடிச்சதை சொல்லப் போறாரோ?’என்று யோசித்தது அவளது மனம்.
ஆனால் தன்னவளைக் கரங்களில் இருத்திக் கொண்டுத் தனது தோளில் அவளது தலையைச் சாய்த்துக் கொண்டான் அபூர்வன்.
அதற்கு அடுத்த நொடியே அவள் அவனைப் பிரத்தியேகமாக அழைக்கும் வார்த்தை ஆராவிடம் இருந்து வெளிப்பட்டு விட்டது.
“அபூ”
அதைக் கேட்டதுமே தன் கண்களை மூடி அந்த உச்சரிப்பை ரசித்தான் அவளவன்.
சில நொடிகளுக்குப் பின்,”என்னம்மா?”
எனத் தன் தோளில் முகம் புதைத்து இருந்தவளது உச்சியில் இதழ் பதித்தான் அபூர்வன்.
“நீங்க எந்த விஷயத்தைப் பத்தி என்கிட்ட கேட்க இவ்வளவு தயங்குறீங்க?”எனக் கணவனிடம் குறும்பாய்க் கேட்டாள் ஆராத்ரிகா.
அதில் வெண்பற்கள் தெரியப் புன்னகைத்த அபூர்வனோ, தன மனைவியின் கண்களில் இதழ் பதித்தான்.
“என்ன மிஸ்டர். அபூர்வன். எதையுமே கேட்காமல் சிரிச்சுட்டே இருக்கீங்க? விஷயம் என்னன்னுச் சொல்லுங்க?”
என் கணவன் இப்போது தன்னிடம் காரிகாவைப் பற்றிக் கேட்கப் போகிறானோ! என்று அவனை ஆர்வமாக நோக்கினாள் ஆராத்ரிகா.
“இல்லை ஆராம்மா. எனக்கு அந்த விஷயத்தை விட உன் உடல்நிலை தான் ரொம்ப முக்கியம்! அதை தவிர எனக்கு வேற எதுவும் தேவையில்லை! காரிகாவோட விஷயத்தை இதோட முடிச்சுக்கலாம்! அவங்க தான் நம்ம வீட்டுக்கே வந்துட்டுப் போயிட்டாங்களே? அதுவே என்னோட எல்லா சந்தேகத்தையும் கிளியர் பண்ணிடுச்சுன்னு மனசுக்கு நிம்மதியாக இருக்கு. இனிமேல் நீ தயங்காமல் காரிகா கிட்ட பேசு. அவங்க பாவம்ல? இப்போ அவங்க தன்னோட வீட்டுக்காரர் கூட இல்ல போல! அவங்களோட கண்ணிலேயே அதைப் பத்தின சோகம் டன் கணக்கில் வழிஞ்சுட்டு இருந்ததைப் பார்த்தேன்”என்றதைக் கேட்டுத் திருதிருவென முழித்த மனைவியின் கன்னத்தைக் கிள்ளி,
“நீ என்னை இப்பவுமே நம்பலையா?”என்றிருந்தான் அபூர்வன்.
“சந்தேகம் இல்லை. ஆனால் நீங்க கண்டிப்பாக ஏதோ திருட்டுத்தனம் செஞ்சி இருக்கீங்க! அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது! ஒருவேளை உங்களுக்கு என் மொபைல் பாஸ்வேர்ட் தெரிஞ்சுடுச்சோ? அது எப்படி முடியும்? நான் அதை உங்களுக்குச் சொல்லலையே!”என்று தன் நெற்றியை ஆள்காட்டி விரலால் தட்டிக் கொண்டே யோசித்தாள் ஆராத்ரிகா.
“உன் மொபைல் பாஸ்போர்ட் எனக்குத் தெரியாது! அது எனக்குத் தேவையும் இல்லை. உனக்குத் தெரியாமல் நான் எந்த வேலையும் பார்க்கப் போறதும் இல்லை”எனக் கூறி விட்டு அவளது தாடையில் அழுத்தமாக முத்தம் கொடுத்து,
“ஒன்னுமே இல்லாத விஷயத்தைப் பத்தி ரொம்ப யோசிக்காத ஆரா”என்று மனைவியிடம் இவ்வாறு கூறிக் கொண்டு இருக்கும் போதே அவர்களது அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்து,”இந்தாம்மா”என்று பழச்சாற்றைத் தன் மருமகளிடம் கொடுத்து விட்டுப் போனார் நீலவேணி.
“நீ முதல்ல ஜூஸைக் குடி”என அவள் பழச்சாற்றைப் பருகுவதை ரசனையுடன் பார்த்தான் அபூர்வன்.
‘ஆமால்ல! நான் ஏன் கவலைப்படனும்? காரிகா தான் வீட்டுக்கே வந்துட்டுப் போய்ட்டாளே? அப்படின்னா, அவ பாதுகாப்பாகத் தான் இருக்காற்ன்றதை மறைமுகமாக எங்கிட்ட சொல்லிட்டுப் போக வந்துருக்காப் போல! நாம தான் வீணாகப் பயந்து, கனிஷ்காவையும் பயமுறுத்தி விட்ருக்கோம்’என்று மனதினுள் நினைத்துக் கொண்டே பழச்சாற்றைக் குடித்து முடித்திருந்தாள் ஆராத்ரிகா.
“என்னோட குட்டிச் சுட்டியே! நீங்க செம்ம அறிவாளியான ஆள் தான்! அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உங்கப் பகுத்தறிவுத் திறனைக் கொஞ்ச நேரத்துக்கு ஆஃப் பண்ணி வச்சுட்டு இப்போ புருஷன்கிட்ட பேசுங்க! அப்படியே எதையாவது யோசிச்சு உங்க மூளையை வேலைப் பாக்க விட்டுட்டே இருந்தால் அப்பறம் அது சோர்ந்து போய், இனிமேல் எந்த வேலையும் பார்க்க முடியாதுன்னு போராட்டம் பண்ணப் போகுது! பீ கேர்ஃபுல் ஆராம்மா”எனத் தன்னைக் கிண்டல் செய்தவனைப் பார்த்து முறைப்பதற்குள் ஆராவிற்கு உமட்டல் எடுத்தது.
உடனே தன் வாயைக் கைகளால் மூடிக் கொண்டு வாஷ்பேஸினிற்குச் சென்று வாந்தி எடுத்தாள்.
அவள் பின்னாலேயே சென்று அவள் வாந்தி எடுத்து முடித்ததும் தாங்கிப் பிடித்துக் கொண்டுக் கட்டிலில் கொண்டு வந்து அமர வைத்து விட்டுத்,
தனது அன்னைக்குச் செல்பேசியில் அழைப்பு விடுத்து,”அம்மா! ஆரா வாந்தி எடுத்துட்டா? வந்து என்னன்னுப் பாருங்க”எனக் கூறி அழைப்பை வைத்தான் அபூர்வன்.
ஆரா வாந்தி எடுத்தாள் என்பதை தன் மகனின் வாயிலாக கேட்டதும் உடனே அங்குச் வந்திருந்தார் நீலவேணி.
கட்டிலில் சோர்ந்து அமர்ந்து இருந்த ஆராவின் முகத்தைப் பார்த்து விட்டு,
“ஆராம்மா! இப்போ கொஞ்ச மாசம் இப்படித் தான் வாந்தியா வரும்! ஜூஸ் ஃபுல்லா வெளியே வந்துடுச்சா?”எனக்
கண்களில் கனிவு பொங்க அவளிடம் விசாரித்தார்.
“ஆமாம்மா. எல்லாத்தையும் வாமிட் பண்ணிட்டா?”என்றான் மகன்.
“அபூர்வா! நீ பதறாமல் இரு. இதெல்லாம் கர்ப்பக் காலத்தில் இருக்கிறது தான்னு இவகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். இரு வரேன்”எனச் சமையலறைக்குள் சென்று கையில் எலுமிச்சையுடன் வந்து அதை ஆராவிடம் கொடுத்து விட்டு,
”இதைக் கையில் வச்சுக்கோ. வாந்தி வர்ற மாதிரி இருந்தால் இதை முகர்ந்து பார்த்துரு. அப்படியும் வாந்தி வந்தால் சங்கோஜப்படாமல் எடுத்துடு. சரியா?”என்றதும் அவர் கொடுத்த எலுமிச்சையை முகர்ந்து பார்த்து விட்டு அவரிடம்,”சரிங்கத்தை”என்று பதில் அளித்தாள் ஆராத்ரிகா.
“இரண்டு மணி நேரம் கழிச்சுக் களி செஞ்சு எடுத்துட்டு வர்றேன். வெறும் வயித்தோட இருக்கக் கூடாது”எனக் கூறி விட்டு அறையிலிருந்து வெளியேறி வரவேற்பறைக்குச் சென்று விட்டார் நீலவேணி.
“என்னம்மா! மருமகளுக்கு இப்போ பரவாயில்லையா?”என அவரிடம் வினவினார் நாச்சிமுத்து.
“சோர்ந்து தெரியுறாங்க. குடிச்ச ஜூஸ் எல்லாம் வெளியே வந்துடுச்சு. களி கிண்டிக் கொடுக்கனும். அதைச் சாப்பிட்டால் தெம்பா இருப்பா. இதைத் தான் அப்போவே சொன்னேன்! நான் இருக்கேனே!”என்று அவர் மறுபடியும் ஆரம்பிக்க அதைப் பொறுக்க இயலாத நாச்சிமுத்துவோ அவரது பேச்சை இடைநிறுத்தி,
“மறுபடியும், மறுபடியும் இதையே பேசாதே வேணி. மருமகளுக்காக களியைக் கிண்டுற வேலையைப் பாரு”என்றவரோ,
விடிந்ததில் இருந்து இப்படியே மனைவியின் புலம்புவதைக் கேட்டுக் கொண்டு இருக்கிறாரே! ஆனாலும் மனையாளும் நிறுத்தவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.
அதனாலேயே களியைக் காரணம் காட்டி அவரை அமைதியடையச் செய்து விட்டார் நாச்சிமுத்து.
அதே சமயம் காரிகாவிற்குக் கால் செய்த கனிஷ்காவோ,”நீ ஏன்டி ஆராவோட வீட்டுக்குப் போன? அவளோட பிரச்சனையைத் தீர்க்கிறதுக்குத் தானே நாம ரெண்டு பேரும் அவளுக்கு உதவி செய்துட்டு இருக்கோம்? அது உனக்கு ஞாபகத்தில் இருக்கா? அதோட அவ கன்சீவ் ஆக இருக்கறது உனக்கும் தெரியும் தானே? அப்பறமும் அங்கே போயிருக்கியே! இது தான் உன்னோட ஃப்ரண்ட்ஷிப்பா? அவளுக்கு அதிகமாக டென்ஷனை ஏத்தி விட்டுட்டு வந்துருக்கியே! உனக்கும் கொஞ்சமாவது அறிவு இருக்காடி?”என்றவளுக்கு ஆராவின் நலனில் மிகுந்த அக்கறை இருந்தது.
எனவே காரிகாவிற்குப் பேச சந்தர்ப்பமே அளிக்காமல் அவளைச் சகட்டுமேனிக்குத் திட்ட ஆரம்பித்து விட்டாள் கனிஷ்கா.
“சாரிடி! நான் ஆரா கிட்டயும் சாரி கேட்டதாகச் சொல்லிரு! நீங்க ரெண்டு பேரும் எப்பவும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸாகச், சந்தோஷமாக இருங்க! நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்! நான் இனிமேல் ஆரா கூட ஃபோனில் பேச முடியுமானு தெரியலை! அதை நினைச்சா தான் எனக்கு வருத்தமாக இருக்கு! ஆனால் என்னால் உங்களுக்கு இனிமேலும் கஷ்டம் வரக் கூடாது கனி”என உருக்கமாகப் பேசி விட்டுத் தோழியின் பதிலைக் கேட்காமலேயே அழைப்பைத் துண்டித்து விட்டிருந்தாள் காரிகா.
– தொடரும்

