
மறுநாள் பொழுது விடிந்ததும் சீக்கிரமே எழுந்து விட்டு அங்கே வீட்டில் செய்வதைப் போல் கோலம் போட்டு விட்டுப் பால் காய்ச்சிக் காபியையும் தயாரித்துக் கோப்பைகளில் ஊற்றிக் கொண்டு வந்தாள் ஆராத்ரிகா.
கையில் செய்தித்தாள் வைத்திருந்த மாமனாரிடம் காபியைக் கொடுக்க,
அவரும்,”குட்மார்னிங்மா”என அவளுக்குக் காலை வணக்கத்தைப் புன்னகையுடன் கூறி காப்பிக் கப்பை எடுத்துக் கொண்டார் நாச்சிமுத்து.
தன் அத்தையைத் தேடியவள் அவர் அப்போது தான் குளியலறையில் இருந்து வந்தவரிடம் காப்பிக் கோப்பையைத் தந்தாள்.
“இதை நீ ஏன்மா செய்ற? நீங்க லேட்டா எழுந்திரிக்கட்டும்னு நான் தான் குளிச்சுட்டுக் காப்பிப் போட்டு எடுத்துட்டு வரலாம்னு இருந்தேன்! அதுக்குள்ள நீ முழிச்சுட்டியா?” எனக் கேட்டவாறே அதை வாங்கிப் பருகினார் நீலவேணி.
“ஆமாத்தை! அது தான் நான் இங்கே வந்துட்டேனே? இனி உங்களுக்கு எதுக்குச் சிரமம்?”எனப் புன்னகையுடன் அவருக்குப் பதிலளித்தாள் ஆரா.
“இன்னைக்கு நீ காபி போட்டால், நாளைக்கு நான் காபி போட்றேன். சமையலும் அப்படியே செய்வோம்மா. அப்போ தான் நாம நல்லா பொழுது போகப் பேசிக்க முடியும். இவரு பேப்பர், புக்குன்னுப் படிக்க ஆரம்பிச்சுடுவாரு. அபூர்வன் ஆஃபீஸ் போய்டுவான். நாம ஜாலியாகப் பேசிட்டு வேலையப் பாக்கலாம்”என அவரது குரலில் உற்சாகம் இழையோடியது.
“சூப்பர் ஐடியா அத்தை! ஜமாய்ச்சுடலாம்” என்றாள் ஆராத்ரிகா.
இவர்கள் பேசியது நாச்சிமுத்துவிற்கும், அறையில் இருந்து வந்த அபூர்வனுக்கும் தெளிவாகக் கேட்டது.
தந்தையும், மகனும் தாங்கள் ஒருவரையொருவர் பார்த்து நிம்மதியாகப் புன்னகைத்துக் கொண்டனர்.
“வாடா அபூர்வா! காபி எடுத்துக்கோ”என அபூர்வனை அழைத்தார் நீலவேணி.
ஆனால் எதையோ யோசித்து விட்டு அவன் கோப்பையை எடுக்கப் போனதும் வேகமாகத் தடுத்தார்.
என்னவென்று கண்ணைச் சுருக்கி அவரைக் கேள்வியாகப் பார்த்தான் அபூர்வன்.
“பல் விளக்கினியா?”என அவனை அதட்டலாகக் கேட்டதும், அதில் கணவனைப் பார்த்துப் பக்கென்று சிரித்து விட்டாள் ஆராத்ரிகா.
உடனே அவளை முறைத்து விட்டு,”அம்மா! ப்ரஷ் எல்லாம் பண்ண மாட்டேன்! எனக்கு இப்போவே காப்பிக் குடிக்கனும் போல இருக்கு”என்று அன்னையிடம் அடம் பிடித்தான் அபூர்வன்.
அவன் தன்னிடம் கோபித்துக் கொண்டாலும் கூட,”நீ பிரஷ் பண்ணிட்டு வந்தால் தான் காபி”எனத் தானும் அவனிடம் கறாராக கூறி விட்டார் நீலவேணி.
“இந்த விஷயத்தில் நீங்களும், உங்க மருமகளும் ஒரே மாதிரி இருக்கீங்கம்மா! பிரஷ் பண்ணிட்டு வந்தே காபியைக் குடிக்கிறேன்”என்று வேண்டா வெறுப்பாக பல் துலக்கச் சென்றான் அபூர்வன்.
“அவர் என்கிட்டேயும் இப்படித் தான் அடம் பிடிப்பார் அத்தை”என அபூர்வனின் அட்டகாசத்தை மாமியாருடன் பகிர்ந்து கொண்டாள் ஆராத்ரிகா.
“அவன் மாறவே மாட்டான்மா”என்று கூறிச் சிரித்துக் கொண்டார் நாச்சிமுத்து.
“அவன் பிரஷ் பண்ணிட்டு வந்ததும் அவனுக்கு மட்டும் காபியைச் சூடு பண்ணிக் கொடுத்துடு. இப்போ நீ உட்காரு”என்று அவள் கைகளில் இருந்த காபி டிரேயை வாங்கிச் சாப்பாட்டு மேசையில் வைத்து விட்டு அவளுடன் உரையாட ஆரம்பித்தவரோ,
“உனக்கு மசக்கையால் அப்பப்போ மயக்கம் வர்ற மாதிரி இருந்தால் நல்லா ரெஸ்ட் எடு ஆரா. இந்த மாதிரி நேரத்தில் வாந்தியும் வரும்! அடிக்கடி புளிப்பாகச் சாப்பிடத் தோனும். அவன்கிட்ட சொல்லி மாங்காய், நெல்லிக்காய்ன்னு வாங்கிட்டு வரச் சொல்றேன். அதுக்காக மாங்காயை அதிகமாக சாப்பிடாதே! சூடு பிடிச்சிக்கும்! அதனால் கொஞ்சமாகச் சாப்பிடு”எனக் கர்ப்பம் தரித்திருக்கும் மருமகளுக்குப் பொறுப்பாய் அறிவுரைகள் வழங்கினார் நீலவேணி.
“சரிங்க அத்தை”என்று அவர் கூறிய ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டாள் ஆராத்ரிகா.
“ரொம்ப குளிர்ச்சியாகவும் குடிக்கக் கூடாது. அதுனால ஐஸ் போடாம ஜூஸ் குடி. அதை விட நிறைய பழங்கள் சாப்பிடும்மா! சூட்டை அதிகமாக்குறப் பழங்கள் சாப்பிடாதே! இந்த நேரத்தில் தேவையே இல்லாமல் கோபம், எரிச்சல் எல்லாம் வரும். அதை முடிஞ்ச அளவு வராமல் பாத்துக்கோ! இல்லன்னா உனக்குத் தான் சிரமமாக இருக்கும். எதுவா இருந்தாலும் அபூர்வன்கிட்ட சொல்லு. இல்லையா, அத்தைக்கிட்ட வந்து சொல்லு! நான் பாத்துக்கிறேன்”என இவர் இங்குக் கர்ப்பக் காலத்தில் என்னென்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்? எப்படி மனதை சாந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது முதற்கொண்டு அவளுக்கு எடுத்துரைத்து முடித்திருந்தார்.
ஆனால் அவர்களது எதிரே நின்றிருந்த ஜீவனைத் தான் நீலவேணியும், ஆராவும் சட்டையே செய்யவில்லை.
தான் பல் துலக்கி விட்டு வந்ததும் அங்குப் பேசிக் கொண்டிருந்த தனது அன்னை மற்றும் மனைவியைக் குறுகுவென்று பார்த்துக் கொண்டே நிற்க, அதைக் கண்ட நாச்சிமுத்துவிற்கோ சிரிப்புத் தாளவில்லை.
“அடேய்! நீ எவ்வளவு நேரமாக இப்படியே நின்னுட்டு இருக்கப் போற? அவங்களைக் கூப்பிட வேண்டியது தானே? உன் வாயில் என்னப் புண்ணா?”எனச் சிரித்து முடித்ததும் அவனிடம் கேட்டார்.
“அப்பா! நீங்களுமா? அவங்களைப் பாருங்கள்! நான் வந்து நின்னது கூடத் தெரியாமல் சுவாரசியமாகப் பேசிட்டு இருக்காங்க!”எனத் தன் தாய் மற்றும் மனைவியைப் பற்றித் தந்தையிடம் புகாரளித்தான் அபூர்வன்.
உடனே நாச்சிமுத்து சிரித்ததையும், அபூர்வன் அங்கு வந்து நிற்பதையும் அவர் கூறக் கேட்டு விட்டு இப்போது அவனது முகபாவனையையும் பார்த்து தாங்களும் விழுந்து, விழுந்து சிரித்தனர் ஆராவும், நீலவேணியும்.
“இதுக்குத் தான் நான் பிரஷ் பண்ணாமலேயே காபிக் குடிக்கிறேன்னு சொன்னேன்( போங்க ! எனக்கு இன்னைக்கு ஃபுல்லா காபியே வேணாம்”
எனச் சோகமாய்க் கூறி விட்டுத் தந்தையின் அருகில் சென்று அமர்ந்து விட்டான்.
உடனே,”அச்சோ! அபூர்வா சாரிடா”என மகனைச் சமாதானம் செய்யும் வகையில் அவனிடம் வந்தார் நீலவேணி.
அதேபோல், ஆராவும் அவனைச் சமாதானப்படுத்த அவனது மறுபக்கம் வந்தாள்.
உடனே தாயிடம் அழகாக குறுநகை புரிந்தவனோ,
“சாரி அபூ”என்ற மனைவி தன்னைப் பிரத்தியேகமாக அபூ என்று அழைத்ததும் அவளுக்கு மட்டும் தெரியுமாறு நன்றாக முகத்தைத் திருப்பிக் கண்களைச் சிமிட்டி இதழ் குவித்து,”ஐ லவ் யூ பேபி”என்று முணுமுணுத்தான் அபூர்வன்.
அதில் ஆராவும் அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள்.
“சரி விடு. நான் உனக்குப் புதுசாகவே காபி போட்டு எடுத்துட்டு வர்றேன். ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க”என அவர்களிடம் கூறி விட்டுக் கணவனை முறைத்துப் பார்த்து,
“நீங்க என்னங்க பிள்ளையைக் கிண்டல் பண்ணிச் சிரிச்சிட்டு இருக்கீங்க? பாவம் அபூர்வன்! இனிமேல் அவனைக் கிண்டல் பண்ணக் கூடாது”என்று அவரை மிரட்டி விட்டுச் சென்றார் நீலவேணி.
“இதென்ன வம்பாக இருக்கு? இவ்வளவு நேரம் இவ தானே மகனைப் பார்த்துச் சிரிச்சுட்டு இருந்தாள்? இப்போ என்னடான்னா என்னைத் திட்டிட்டுப் போறாள்?”எனப் புலம்பி விட்டுத் திரும்பிப் பார்த்தால் தந்தையை முறைத்துக் கொண்டிருந்தான் அபூர்வன்.
உடனே அதில் சுதாரித்துக் கொண்டு,”ஆரா! நீங்கப் பேசிட்டு இருங்க. நான் வாக்கிங் போய்ட்டு வர்றேன்”என அப்படியே அங்கேயிருந்து கழண்டு கொள்ளும் விதமாக எழுந்து வாயிற்புறம் நடந்தார் நாச்சிமுத்து.
“வாக்கிங்கை முடிச்சிட்டு வீட்டுக்குத் தானே வருவீங்க. அப்போ பார்த்துக்கிறேன்”என அவருக்குத் கேட்குமாறு கூறி விட்டு,
தன் மனைவியின் முகத்தை ஆராய்ந்தவனோ அது சோர்ந்து போய் தெரிந்ததால் அவளிடம் அக்கறையாகப் பேசத் தொடங்கினான்.
“உனக்கு வாந்தி எதுவும் வர்ற மாதிரி இருக்காம்மா?”
“இல்லைங்க. களைப்பாக இருக்கு. வேற எதுவும் பண்ணல”என்றதுமே எழுந்து சென்று ஒரு தலையணையை எடுத்து வந்து அவளது முதுகிற்குப் பின்னால் வைத்து அவளை அதில் சாய்ந்து கொள்ளச் செய்த போது, காப்பி நிறைந்தக் கோப்பையைக் கொண்டு வந்து மகனின் கைகளில் திணித்து விட்டு,
“ஒரு பத்து நாள் கழிச்சு ஆராவைக் கூட்டிட்டு ஹாஸ்பிடல் போய்ச் செக்கப் பண்ணிட்டு வரனும்டா அபூர்வா! குழந்தை ஆரோக்கியமாக இருக்கான்னுப் பாத்துட்டு இந்தச் சமயத்தில் என்னென்னப் பண்ணனும்னு, பண்ணக் கூடாதுன்னுத் தெளிவாக அவங்ககிட்ட கேட்டுட்டு வரனும்”என்றவருக்குத் தன் மருமகள் மற்றும் அவள் வயிற்றில் உருவாகி இருக்கும் தங்களது பேரக் குழந்தையின் நலன் மிகவும் முக்கியம் என்று எண்ணி மொழிந்து இருந்தார் நீலவேணி.
“நம்ம ஃபேமிலி டாக்டர் கிட்டே தானேம்மா டெலிவரி பார்க்கப் போறோம்? நான் நாளைக்கு நேரில் போய்ப் பேசி அப்பாயஇட்மெண்ட் வாங்கிட்றேன்”எனத் தாயிடம் சொல்லி விட்டுக் காபியைக் குடித்து முடித்திருந்தான்.
இந்த உரையாடலில் கலந்து கொள்ளாமல் இவர்களது பேச்சை மட்டும் மௌனமாக கேட்டுக் கொண்டு இருந்தாள் ஆராத்ரிகா.
“உங்கப்பாவை எங்கேடா காணோம்?”என்றார் நீலவேணி.
“அவர் எங்கிட்ட இருந்து தப்பிச்சு வாக்கிங் போயிருக்கார்ம்மா”என்றிருந்தான் அபூர்வன்.
“ஓஹ் சரி”என்றவரோ,
“இப்போ எண்ணெய்ப் பலகாரம் சாப்பிட்டால் வாந்தி வந்துடும். அது தான் உனக்குத் தோசை வேண்டாம்! நீ இட்லி சாப்பிடுறியா ஆரா?”என மருமகளிடம் சம்மதம் கேட்டார் நீலவேணி.
“சரிங்க அத்தை. எனக்கு ஒரு மாதிரி தலை சுத்துது. நான் அரை மணி நேரம் கழிச்சு சாப்பிட்றேனே?”என்றாள் ஆராத்ரிகா.
“சரி தான்ம்மா. தலை சுத்தலுக்கு ஜூஸ் மட்டும் குடி. இட்லியை நீ சொன்ன மாதிரி லேட் ஆகச் சாப்பிடு” எனச் சொல்லி விடவும்
“நான் இன்னைக்கு லீவ் தான் போட்றேன். அதனால் எதுவாக இருந்தாலும் எங்கிட்ட சொல்லு! உன்னை உடனே ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போயிட்றேன். உன்னைக் கஷ்டப்படுத்திக்காமல் ஓய்வெடு”என்று, தான் எல்லாம் பார்த்துக் கொள்வதாக அவளுக்கு உறுதி அளித்தான் அபூர்வன்.
“சரி. நான் போய் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வர்றேன்”என்று கூறிச் சமையலறைக்குச் சென்று விட்டார் நீலவேணி.
அந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்தார் நாச்சிமுத்து.
தந்தையைக் கண்டதும் அவரைச் சாதாரணமாக கேலி செய்வதைப் போல் அவரிடம் பேச்சுக் கொடுக்கும் வகையில்,
“என்னப்பா அதுக்குள்ளேயே வந்துட்டீங்க? நான் இன்னும் உங்களை முறைச்சுட்டுத் தான் இருக்கேன்”எனத் தன் முகத்தில் பொய்யான முறைப்பை வரவழைத்துக் கொண்டான் அபூர்வன்.
“நீ என்னை அப்பறமாக முறைச்சுக்கோ. ஆராவோட ஃப்ரண்ட் ஒரு பொண்ணு வந்துருக்காங்க”என்று அவனிடமும், தன் மருமகளிடமும் விஷயத்தைக் கூறிய நாச்சிமுத்துவோ, தன் பின்னால் திரும்பிப் பார்க்க அந்தப் பெண் இன்னும் வீட்டிற்குள் வரவில்லை என்பதை அறிந்ததும் வெளியே சென்று,
“உள்ளே வாம்மா! என் மருமகளும், மகனும் ஹாலில் தான் இருக்காங்க”என்று அவளை உள்ளே அழைக்கும் விதமாகப் பேசினார் நாச்சிமுத்து.
அவர் கூறியதைக் கேட்டதும்,”என்னோட ஃப்ரண்ட்டா? யாரு அது?”என்ற ஆராவிற்குக் குழப்பமும், அதிர்ச்சியும் அவற்றுடன் சேர்த்து அதிர்ச்சியும் வந்திருக்காதா பின்னே?
ஏனெனில் அவளது தோழிகள் நிறைய பேர் திருமணம் முடித்து வெளிநாட்டில் போய்த் தங்கி இருக்க, இங்கு இப்போது இந்தியாவில் இருந்து தன்னைப் பார்க்க வந்திருப்பது யாரென்று? குழம்பியபடியே உள்ளே வரப் போகும் தனது தோழியைப் பார்க்க ஆவலாக இருந்தாள் ஆராத்ரிகா.
அவளது ஆவலை உச்சபட்ச அதிர்ச்சியாக மாற்றும் வகையில் உள்ளே வந்து நின்றாள் அவளது பிரியத்திற்குரியத் தோழி.
“ஹேய் ஆரா பேபி!”என்று குதூகலத்துடன் ஆராவிடம் வந்த அந்தப் பெண் அவளைக் கட்டிக் கொண்டாள்.
அவளது விழிகளில் இருந்து வெளியேறிய கண்ணீரே கூறிற்று, இவர்கள் இருவரும் சந்தித்து வெகு மாதங்கள் ஆகி விட்டு இருக்கும் என்பதை!
“இதென்னடி சின்னப் பிள்ளை மாதிரி அழுதுக்கிட்டு இருக்கிற? ஒழுங்காக கண்ணைத் துடைச்சிக்கோ”என அவளிடம் கடிந்து கொண்டாள் ஆராத்ரிகா.
அவளைச் சமாதானம் செய்தாலும் கூட அவளது வரவுக் கொடுத்த அதிர்ச்சி இன்னும் ஆராவிற்குக் குறையவில்லை.
தன்னுடைய இந்த நெருங்கிய நண்பித் தன் வீடு வரைக்கும் இப்படி தைரியமாக வருவாள் என்பதை இவள் நிச்சயமாக அறிந்திருக்கவில்லை!
“ஹேய் பேபி! நீயே கர்ப்பமாக ஆக இருக்கிற, நான் பாட்டுக்கு உன்னை இப்படி நெருக்கமாக கட்டிப் பிடிச்சுட்டு இருக்கேன் பாரு! அப்பறம் என் மேல்இந்த ஜூனியர் ஆரா கோபப்பட்டு விடப் போறாங்க”எனக் கூறிக் கலகலப்பாகச் சிரித்தாள் அவள்.
“ஆஹான்! என் குழந்தைக்குக் கண்டிப்பாக உன் மேல் கோபமே வராது! உன் மருமகளாச்சே! இரு! என் வீட்டாளுங்க எல்லாரையும் உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இவர் தான் என் மாமனார் நாச்சிமுத்து”என்று அவளுக்குத் தன் மாமனாரை அறிமுகம் செய்து வைத்தாள் ஆராத்ரிகா.
உடனே அவரும் அந்தப் பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“நீங்க ரெண்டு பேரும் தான் ஏற்கெனவே ஆகிட்டீங்களே!” என்றவளோ,
“இவர் தான் என்னோட ஹஸ்பண்ட்! பேர் அபூர்வன்”எனத் தன் கணவனை அவளிடம் அறிமுகம் செய்து வைத்து விட்டவளோ, மற்றவர்களுக்குத் தெரியாமல் அபூர்வனைப் பார்த்து மர்மச் சிரிப்புச் சிரித்தாள் ஆராத்ரிகா.
அதில் மனைவியைக் குழப்பத்துடன் பார்த்த நேரத்திலேயே அவனுக்குத் தன் தோழியை அறிமுகம் செய்து வைக்கும் விதமாக,
“இவ என்னோட ரொம்ப நெருங்கிய நண்பி! இவளோட பேர் காரிகா”என்றிருந்தாள் ஆராத்ரிகா.
– தொடரும்

