
மரம் தேடும் மழைத்துளி 15
“கொடுந்து தும்பத்துலையும் துளி சந்தோசத்தை கொடுத்துட்டாள் அந்த பேச்சியத்தா…” என்று கிருஷ்ணன் சொன்னதும் லட்சுமி புரிந்து கொண்டார்.
“ருக்கு நாளு தள்ளி போயிருக்கா?” என்று லட்சுமி கேட்கும் வரையில் அதைப்பற்றி சிந்திக்கவில்லை ருக்கு.
ருக்மணி மனதிற்குள் கணக்கிட்டு பார்த்து “பத்து நாள் தள்ளி போயிருக்கு த்தே…”
பார்வதி, “கடவுளே இது என்ன சோதனை? இது சணிச்ச (ஜனித்த) நேரம், என் பிள்ளை இப்படி கெடக்கிறானே…” என்று மனதிற்குள் புளுங்கி கொண்டார்.
டாக்டர்கள் இருவர், நர்ஸ் இருவர் என்று நால்வர் அந்த அறைக்குள் வேகமாக நுழைந்தார்கள். அதுவரையில் அறைக்குள் முகாமிட்டிருந்த சொந்த பந்தங்கள் அனைவரும் வேக வேகமாக வெளியே வந்து நின்றார்கள்.
டாக்டர்கள் கவனிக்கின்ற நோயாளியின் உறவினரில், ஒருவர் மட்டும் உள்ளே சென்று விவரங்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதேபோல முருகனை டாக்டர் குழு சூழ்ந்திருக்கும் போது. கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு கதிர் உள்ளே சென்றான்.
இரண்டு மருத்துவர்களும் அவர்களாக ஆங்கிலத்தில் சில உரையாடல்களை செய்து கொண்டார்கள். பின்னர் கிருஷ்ணனை பார்த்து “டிரீட்மென்ட் போயிட்டு இருக்கு. எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் இருக்கிற காயங்களை டிரெஸ்ஸிங் பண்ணி இருக்கோம். எக்ஸ்ரேல எலும்பு முறிவு எதுவும் தெரியல. தலையில தான் பலமா அடிபட்டு இருக்கு. கழுத்து எலும்பு கொஞ்சம் கிராக்கா இருக்கு. கண்ணு முழிக்கட்டும். வேற எங்கெல்லாம் வலிக்குதுன்னு அவரா சொன்ன பிறகு ட்ரீட்மெண்ட் எடுப்போம்.”
“எப்பையா கண்ணு முழிப்பான்?” என்று கிருஷ்ணன் மருத்துவரிடம் கேட்க.
“இன்னும் மூணு நாலு மணி நேரத்துல கண்ணு முழிச்சிருவாரு இப்போ வலி தெரியாம இருக்க ஊசி போட்டு இருக்கோம். முழிச்சதுக்கு அப்புறம் வலிக்குதுன்னு சொன்னார்னால் எந்த எந்த இடம்னு செக் பண்ணிடுவோம். “
கிருஷ்ணன், “வேற எந்த பாதிப்பும் இல்லையா ய்யா?”
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல.”
கிருஷ்ணன் “காது வழி ரத்தம் வந்ததா…”
“ஒன்னும் பயப்பட வேண்டாம். தலையில அடிபட்டதனால அப்படி இரத்தம் வந்து இருக்கும். தலையில் தையல் போட்டு இருக்கு. கொஞ்சம் ஆறவும் ஸ்கேன் பண்ணி பாத்துருவோம். அடி பலமா விழுந்ததால கன்னத்துல எலும்பு எதுவும் உடஞ்சிருக்கலாம்”.
“அப்போ தலைய போட்டோ எடுக்கலையா ஐயா?”
“காலைல தலைய படம் புடிச்சுடுவோம்.”
“ராத்திரி அவன் கண்ணு முழிக்கும் போது பக்குவம் பார்க்கிறதுக்கு.”
“24 மணி நேரமும் ஆட்கள் இருப்பாங்க ஐயா. நீங்க வருத்தப்படவே வேண்டாம். இவர் எந்த நேரம் கண்ணு முழிச்சாலும். படியை விட்டு இறங்குனதும் டாக்டர்களாக உட்கார்ந்து இருக்கிற ரூம் இருக்கும். அங்கே யாராவது ஒருத்தங்க இருப்பாங்க. நீங்க நேரா வந்து அங்க சொல்லுங்க.”
கிருஷ்ணன் கை கூப்பி ‘’அப்ப சந்தோஷங்க ஐயா.”
மருத்துவர்கள் அடுத்த படுக்கையில் இருக்கும் நோயாளியை பார்க்க சென்று விட்டார்கள். கிருஷ்ணன் அந்த அறையை விட்டு வெளியே வந்து, தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் “ஒரு பிரச்சனையும் இல்லன்ட்டாக.” என்று சொல்ல
“எங்க ஆத்தா பேச்சி, என்னை கை விட மாட்டாள்.” என்று கடவுளுக்கு நன்றி சொன்னார் பார்வதி.
ருக்மணி, “இது போதும் தாயே! உனக்கு ரொம்ப நன்றி.” என்று மனதுக்குள் வணங்கி கொண்டாள்.
லட்சுமி, “ஒன்னும் பிரச்சனை இல்லனால் இன்னும் கண்ணு முழிக்கலையேங்க.?”
“ஒரு மூணு மணி நேரத்துல கண்ணு முழிச்சிருவான்னு சொன்னாக’.
சரவணன், கதிரை பார்த்து, “ரொம்ப நேரம் ஆச்சு மாமா கடையெடுத்து வைக்கும் முந்தி சாப்பிட்டு வந்துரலாம்.”
கதிர், “இருக்கட்டும் மாப்ள எனக்கு பசிக்கல. நீங்க எல்லாரும் போய் சாப்பிட்டு வாங்க.”
லட்சுமி, “அது எப்படி பசியாம இருக்கும்? மத்தியானம் சாப்பிட்டதோட இங்க வந்துட்டீக. இப்ப மணி என்ன ஆகுது? பத்தை தாண்டிருக்கும் இல்ல.”
கிருஷ்ணன், “மாப்ள பசியாத பழம் சாப்பிட்டுருப்பாக. எங்களுக்கு பசிக்குது மாப்பிள்ளை. எங்க கூட துணைக்கு வாரும். என்று கதிரை அழைத்துக் கொண்டு. ருக்கு… நீ முருகனுக்கு துணைக்கு இரு. நாங்க சாப்பிட்டு உனக்கு ஏதாவது வாங்கிட்டு வாரோம். என்று சொல்லிவிட்டு. “வாங்க சாப்பிட்டு வந்துடுவோம்.” என்று அனைவரையும் அழைத்தார்.
பார்வதி, “நான் இங்க இருக்கேன். நீங்க போய் சாப்பிட்டு வாங்க. என் புள்ள இப்படி கிடக்கயிலே . எனக்கு எங்கனே சோறு இறங்கும்?.”
கிருஷ்ணன், “நீங்க சாப்பிட வேண்டாம். கடைக்கு வாங்க. அவ அவளோட புருஷனை பார்த்துப்பா.” என்று கட்டாயப்படுத்தி பார்வதியை அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
மேல் தளத்திலிருந்து கீழ்த்தளத்திற்கு படியிறங்கும் போது பார்வதி, லட்சுமியிடம் “எப்படி பதையாம நிக்கான்னு பார்த்தையா?”
லட்சுமி, “அதான க்கா… அவ புருஷனுக்கு அடிபட்டதும் மயங்கிட்டாளோன்னு நான் கூட சந்தோஷப்பட்டுட்டேனே க்கா…”
பார்வதி, “அவன் கொடுமைப்படுத்திட்டான். அதை நான் மறுக்கல. இப்படி உயிர்போற நிலையில கிடக்கானே…. அய்யோ பாவமேனு ஒரு ஈரம் தட்டுப்படலயே லட்சிமி.”
கிருஷ்ணனை கைகாட்டிய லட்சுமி, “அது புரியாத இந்த மனுஷன். அவளை கூட இருக்க வச்சுட்டு வந்திருக்காரே… அவன் கூட இருந்தாலும் மனசு இளகிடுவாளா? நீ வேணா பாரு. நம்ம வருந்தண்டியும் (வரும்வரை) வாசல்லயே காவகெடப்பாளே தவிர. உள்ள போய் எட்டி பார்த்திருக்க மாட்டாள்.”
“அவளுக்கு புடிக்காத புருஷனை பார்த்துட்டால் கொமட்டிக்கிட்டு வந்துடுமே.”
லட்சுமி, “இவளுக்காகத்தான் அந்த காலத்து ஆளுக, வேலைக்காரனுக்கு பிள்ளை மேல சாக்குனு சொல்லி வச்சிருக்காக போல இருக்கு க்கா…”
“அப்போ பிள்ளை உண்டாகி இருக்கிறதும், பொய்யின்னு சொல்றியா லட்சுமி?”
கிருஷ்ணன், கதிர், சரவணன் தனியாக பேசிக்கொண்டு நடந்து சென்றாலும். இவர்கள் இருவரது பேச்சையும் கிருஷ்ணன் மட்டும் ஒரு காதில் வாங்கிக் கொண்டுதான் முன்னே நடந்து கொண்டிருந்தார்.
கிருஷ்ணன், “என்னத்தை நடிச்சாலும் பத்து மாசம் கழிச்சு புள்ளை பிறந்தானுமே. உங்க மருமக மட்டும் கூட ரெண்டு மாசம் ஆகும்னு சொல்லமுடியுமா? அப்ப உண்மை எது? பொய் எதுன்னு தெரிஞ்சிட போகுது மதினி.”
லட்சுமி, “பின்னாடி பார்த்துகிட்டு நடக்காதீக. முன்னாடி பாதையை பார்த்து நடந்து போங்க.” என்றார் கடுப்பாக.
சரவணனும் கதிரும் இவர்களது பேச்சைக் கேட்டு சிரித்து விட்டார்கள்.
கூரை கடை ஓட்டலில் ஐந்து பேரும் ஒன்றாக அமர்ந்து பரோட்டா செட்டுகளை வாங்கி உண்டார்கள். ருக்மணிக்கு ஒரு பரோட்டா செட்டை பார்சல் வாங்கிக் கொண்டார்கள். மீண்டும் மருத்துவமனைக்கு செல்லும் வேளையில்…
கிருஷ்ணன், “மதினி… முருகனுக்கும், அவன் பொண்டாட்டிக்கும் நடந்த சண்டையிலே… இனிமேல் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டு. முறுக்கிக்கிட்டு இருந்த பிள்ளை. இவ்வளவு தூரம் இறங்கி வந்து. கூடவே நிற்கிறது பெருசு. அதை குறை கண்டுபிடிக்காமல். இப்படியே இரண்டு பேத்தை ஒன்னு சேர்த்து வைக்கிறதுக்கு வழிய பாருங்க. நீங்களே இன்னும் எத்தனை நாளைக்கு கூடவே இருந்து கஞ்சி ஊத்திருவீக?” என்று எதார்த்தத்தை எடுத்துச் சொன்னார்.
பார்வதி, “நானும் அவக ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்னு தான்ய்யா நினைக்கிறேன். ஆனா அவன் கிடக்கிற கெடயை பாத்துட்டு. ஒத்தசொட்டு கண்ணீரு வரலையேன்னு ஒரு வேதனை எனக்கு. மத்தபடி அவளை குறை சொல்லணும்னு எனக்கு ஆசையா?”
கதிர், “அந்த புள்ளைய, அவன் கலங்காம பார்த்துக்கிட்டு இருந்தான்னால், இந்த நேரம் கலங்கியிருப்பாள். அது பெரிய குத்தம் இல்லத்தே… நீங்க பெரிய மனுஷி. மன்னிச்சு விட்ருங்க.”
கிருஷ்ணன், “மாப்ள வாயவே தொறக்கலனு நெனச்சேன். ஒத்த வார்த்தை சொன்னாலும், நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க.”
லட்சுமி, கதிரை “அப்ப மாமியார்மாருக வாய தொறந்து பேசவே கூடாதுன்னு சொல்றீங்களா மருமகனே?” என்றார்.
சரவணன், “அவரு அப்படி சொல்லலம்மா. நல்லா பேசுங்க. நல்லதை பேசுங்கன்னு சொல்றாரு.”
இவர்கள் பேசிக் கொண்டே வரும் நேரத்தில், இத்தனை நேரமும் முருகன் அருகில் இருந்த ருக்மணி. இப்போதுதான் டாய்லெட்டுக்குள் சென்றாள்.
முருகன் அருகில் யாரும் இல்லாமல் இருப்பதை பார்த்த பார்வதி, “நான் சொல்லல அவ பக்கத்துலையே போயிருக்க மாட்டானு.”
கழிவறையை விட்டு வெளியே வந்த ருக்மணியை பார்த்ததும் அந்த பேச்சை அப்படியே விழுங்கிக் கொண்டார்.
கிருஷ்ணன் தனது கையில் வைத்திருந்த சாப்பாடு பொட்டலத்தை கொடுத்து. “நீ போய் சாப்பிடும்மா’ என்றதும்.
ருக்மணி மறுப்பு சொல்லாமல் கையில் வாங்கிக் கொண்டாள்.
பார்வதி, “போய் சாப்பிடு எதுக்கு நின்னுகிட்டு இருக்க?”
“பசி இல்லை. பசிக்கும்போது சாப்பிட்டுகிறேன்.” என்றால் ருக்மணி
மேற்கொண்டு ருக்மணியை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. லட்சுமி, “சுந்தரி வீட்டுல ஒத்தையில இருப்பா”.
கிருஷ்ணன், “சரி முதலில் என்று தன்னுடைய பைக்குள் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து பார்வதியின் கையில் கொடுத்து. இதை சாப்பாட்டு செலவுக்கு வச்சுக்கோங்க. நாங்க போயிட்டு மேற்கொண்டு என்ன தேவைன்னு பார்த்து எடுத்துக்கிட்டு வாரோம். சுந்தரி தனியா இருக்கா.” என்று சொல்லிவிட்டு. கதிரை பார்த்து “மாப்பிள்ளை நம்ம கிளம்புவோம்.” எனும் போது
கதிர், நீங்க கிளம்புங்க மாமா. நான் கூட இருக்கேன். பொம்பளைகளால் அங்கிட்டு இங்கிட்டு அலைய முடியாது. தூக்க செய்ய ஒரு ஆம்பள இருக்கணும்.”
சரவணன், “வீட்ல அக்காவும் தனியா இருப்பாக மாமா. நீங்க கிளம்புங்க. நானு அண்ணன் கூட இருக்கிறேன்.”
கதிர், “மாப்பிள்ளை நீங்க கூட இருக்கிறீகளா? அப்ப சரி. நான் கிளம்புறேன்.” என்றதும்
கிருஷ்ணனும் லட்சுமியும் சரவணனை கேள்வியாய் பார்த்துவிட்டு.
கிருஷ்ணன், “சரி சரவணா. கூட இருந்து பாத்துக்கோ.” என்று சொன்னவர் லட்சுமி கதிரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
அந்த மருத்துவமனையின் விதானத்தில், ஆங்காங்கே நோயாளிகளின் உறவினர்கள் படுத்துக் கொண்டார்கள். அதைப்போல பார்வதியும் சரவணனும் அந்த அறையில் ஒரு ஓரத்தில் முடங்கி கொண்டார்கள். ருக்மணி முருகன் அருகில் அமர்ந்திருந்தாள்.
ருக்மணியை போன்றே இன்னும் சில நோயாளிகளின் உறவினர்களில் ஓர் இருவர், அவர்களது அருகில் அமர்ந்திருந்தார்கள். சிலர் அந்த படுக்கையின் அருகில், தரையில் படுத்து இருந்தார்கள். ருக்மணிக்கு முருகனின் பரிதாபமான நிலையை எண்ணும்போது உறக்கம் வரவில்லை.
முருகனின் அருகில், அவனது ஆழ்ந்த சுவாசத்தின் கதகதப்பில் இருந்த பயம். இப்போது அவளுக்கு தோன்றவில்லை. அவனை வேண்டாம் என்று வெறுத்து ஒதுங்கியவள். அவன் வேண்டும் என்று கடவுளிடம் மனதார வேண்டிக் கொண்டிருக்கிறாள்.
“என்னை மன்னிச்சிடுங்க மாமா. நீங்க அழிஞ்சு போகணும்னு நான் ஒரு போதும் நினைச்சதில்ல. ஆத்திரத்துல வார்த்தையை அள்ளி கொட்டிட்டேன். நான் சொன்ன நாசமாபோங்கற வார்த்தை உங்கள இப்படி சீரழிச்சிருக்காது மாமா. இது ஏதோ சாமி செஞ்ச சதி வேலை. நீங்க செஞ்ச ஒவ்வொரு காரியமும் எனக்கு கோபம் வந்தது உண்மைதான். அதுக்காக நீங்க செத்துப் போயிடனும்னு நான் நினைச்சது இல்ல மாமா. நீங்க உங்க குணத்தை மாத்திக்கணும்னு மட்டும் தான் ஆசைப்பட்டேன்.” என்று மனதார முருகனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள்.

