13 மாயோனின் மலரோவியம்

Loading

மாயோன் 13

கீர்த்தியோ அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் பால்கனி பக்கம் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்… அப்போது கிழே விழுந்து கிடந்த கிடந்த செல்போனின் மீது அவளது கண்கள் பதிய முகத்தை சுளித்தபடி பார்வையை சுழலவிட்டாள்…

வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளின் கைகள் தானாக தனது  மோதிரத்தை கழட்டியது… அது இவள் ஆசைப்பட்டு கேட்டதனால் மகிழன் வாங்கி கொடுத்ததாகும்…அதனை பார்த்தவளின் கண்கள் தானாக கலங்கி போனது… ஆழ்ந்த பெருமூச்சு விட்டு தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள், மீண்டும் மோதிரத்தை தன் விரலில் மாட்ட போகும் நேரம், அது தவறி கீழிருந்த அறையின்  ஜன்னலின் மேல்  திண்டில் விழுந்தது… ” அய்யோ ” என்று பதறியவள் கீழே குனிந்து பார்த்தாள்.

” கீழ விழுந்திருந்தால் கூட பரவாயில்லை, இப்படி விழுந்துடுச்சே இப்போ எப்படி எடுக்குறது ” என்ற சிந்தனையுடன், பால்கனி கம்பியை தாண்டி குனிந்து நின்று தன் கைகளை கொண்டு அந்த மோதிரத்தை எடுக்க பார்த்தாள்… ஆனால் அது அவளுக்கு எட்டவில்லை… உடனே அருகில் சுற்றும் முற்றும் தேடியவளுக்கு கண்ணில் ஒரு கம்பி தென்பட்டது… அதனை எடுத்து கொண்டு மோதிரத்தை கீழே தள்ளி விட பார்த்தாள்… கீழே விழுந்த பின்பு, வாசல் வழியே கீழே இறங்கி சென்று எடுத்துவிடலாம் என்று எண்ணியிருந்தாள்… ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது…

“அய்யோ இதுவும் எட்ட மாட்டிங்குதே, இப்போ என்ன பண்ணுறது? பேசாமல் கம்பி வழியா இறங்கிடுவோமா!” என்று யோசித்தவள், கம்பியின் மீது கால் போட்டு அமர்ந்தபடி மோதிரத்தை எடுக்க முயற்சிக்க… ஒருகட்டத்தில் பிடிமானம் இன்றி அப்படியே அந்த பக்கம் சரிந்தாள்…

நொடியில் சுதாரித்து கொண்டு, பால்கனி கம்பியினை பிடித்து கொள்ள முயற்சி செய்யவும்… அப்போது அங்கு கூர்மையாக இருந்த கம்பி ஒன்று அவளது கையினை பதம் பார்த்தது..  அதில் நிலைதடுமாறி   கீழே விழுந்தாள் கீர்த்தி…

அவள் கீழே விழுந்த சத்தம் கேட்டு அங்கிருந்து ஓடி வந்த தோட்டக்காரன்… ” ஐயா ” என்று சத்தம் கொடுக்க…

அவனது சத்தம் கேட்டு வெளியே வந்த விக்ரமன், என்ன? என்று பார்க்க… அங்கு கீர்த்தியோ கையை பிடித்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்…

கீழே விழுந்த வேகத்தில் கீர்த்தியின் கை முட்டியில்  பலமாக அடிப்பட்டிருந்தது … காயத்தின் வலி பொறுக்க முடியாமல் அழது கொண்டிருந்தாள்…

அவளை அந்நிலையில் பார்த்த விக்ரமனுக்கு கோவம் தலைக்கேறியது .. அவனது சினம் கொண்ட பார்வையை உணர்ந்து தலை குனிந்து கொண்டாள் கீர்த்தி.

கோவமாக அவள் அருகில் வந்தவன், எதுவும் பேசாமல் அவளை கைகளில் தூக்கி கொண்டு, நேராக அவளது அறைக்குள் நுழைந்தான்…

அறைக்குள் வந்து, அவளை மெத்தையின் மீது தூக்கி போட்டவன்…  “அறிவில்லையாடி உனக்கு ? என்ன வித்தை காட்டி கீழ விழுந்த ? கையையும்,காலையும் வச்சுட்டு சும்மா இருக்க முடியாதா உன்னால! கை, காலு உடைஞ்சு போயிருந்தால் என்னடி பண்ணுவ? ” என்று சினம் கொண்டு  கேட்க..

ஏற்கனவே வலியில் துடித்து கொண்டிருந்தவளுக்கு அவனது கோவமான கேள்விகள் மேலும் எரிச்சலை கொடுத்தது… ” என் கை தானே உடைஞ்சா பரவாயில்லை, அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை? நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்! என் காலு, என் கை அதுல உங்களுக்கு என்ன வந்தது… உங்க வீட்டுல இருக்கிறதால நான் ஒன்னும் உங்களுக்கு அடிமை கிடையாது… நான் இப்போவே இங்க இருந்து போறேன்… எனக்கு ஒன்னும் உங்ககிட்ட  இப்படி பேச்சு வாங்கிட்டு, இங்க இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை ” என்று வீரமாக பேசியவள்… ‘ சும்மா எப்போ பாரு ஏதாவது சொல்லி திட்டிக்கிட்டே இருக்க வேண்டியது, நான் என்ன வேணும்னா கீழ விழுந்தேன்’ என்று அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டாள்…

அவள் பேசுவதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தவன்… அடுத்த நொடியே ” ஏய் எழுந்துருடி ” என்று உரக்க கூறினான்.

அந்த சத்தத்தில் கீர்த்தி ஒரு நொடி அதிர்ந்து அவனை விழிவிரித்து பார்க்க… ” வெளியே போ ” என்று  வாசல் பக்கம் கை காட்டினான் விக்ரமன்.

ஒரு நொடி அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை அதன் பிறகு தான் ‘ ரொம்ப பேசிட்டோமோ? ‘ என்று யோசித்தவள், வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் அழுத்தமாக இருந்தாள்…

இங்கே இருந்து வெளியே சென்றபின், விக்ரமன் ஏதாவது செய்து விடுவானோ! என்று பயம் அவளுக்கு அதிகமாகவே இருந்தது.. அதனால் தான் இங்கிருந்து செல்ல தயங்கினாள்.

” என்னடி நீ தானே வெளியே போகணும்ன்னு சொன்ன? இப்போ என்னென்னா அமைதியா இருக்க, வெளியே போடி… ” என்றவனை எதிர்நோக்க முடியாமல் தலை குனிந்தவளின் மன ஓட்டத்தை நன்கு உணர்ந்தவனது இதழோரம் இகழ்ச்சியான புன்னகை வெளிப்பட்டது…

மீண்டும்  அவன் ‘வெளியே போ… வெளியே போ… ‘என்று கூற ஒருகட்டத்தில் தன்மானம் தலை தூக்க காயம் பட்ட தன் கரத்தை, மறுகரம் கொண்டு வருடி கொண்டவள் ” போதும்  போறேன்…  ” என்று கூறி கொண்டே வலியுடன் தனது பையில் ஆடையை எடுத்து வைக்க தொடங்கினாள்…

அதனை பார்த்த விக்ரமன்  ” ஹெலோ மேடம் இது எல்லாம் நான் உங்களுக்கு வாங்கி கொடுத்தது!  அப்படியே இதையெல்லாம் சுருட்டிட்டு ஓடிடலாம்னு பாக்குறியா ? எல்லாத்தையும் இங்கயே வச்சிட்டு போ… இதோ இப்போ நீ போட்டு இருக்குறது கூட நான் வாங்கி கொடுத்த ட்ரெஸ் தான் சோ அதையும் கழட்டி கொடுத்துட்டு போ…” என்று அவன் கூற, தன் நெஞ்சை பிடித்து கொண்ட கீர்த்தி…

” எல்லாத்தையும் உங்க கிட்ட கொடுத்துட்டா, அப்ரோம் நான் எப்படி வெளியே போறது ” என்று கண்களை உருட்டி கேட்க…

”  என்கிட்ட கேட்டால்? நான் என்ன பண்ணுறது… சூடு,சுரனை, வெட்கம் , மானம் இது எல்லாம் உனக்கு இருந்தால், நான் வாங்கி கொடுத்த எதையும் நீ இங்க இருந்து எடுத்துட்டு போக கூடாது…  புரிஞ்சுதா? ” என்று அவன் கூற கீர்த்தியின் கண்களில் இருந்து அருவியாக நீர் கொட்டியது…

” இது எல்லாம் உங்களுக்கு அந்நியாயமா தெரியல? ” என்று அவள் தான் இயலாமையை எண்ணி நொந்தபடி கேட்க…

”  தெரியல ” என்று அவன் அசால்ட்டாக பதில் கொடுக்க… கீர்த்திக்கு பத்தி கொண்டு வந்தது…

தன்னுடைய பழைய ஆடையை கூட அங்கேயே விட்டுவிட்டு தானே சென்னைக்கு வந்தாள், இவன் இப்படி கூற அவளும்  என்ன தான் செய்ய முடியும்…

முகத்தை சுருக்கி அவனை பாவமாக பார்த்தவள் ” நான் உங்களை எவ்ளோ நல்லவன்னு நெனச்சேன், நீங்க போய் இப்படி எல்லாம்… ” என்று  அப்பாவியாக கேட்டாள்.

 

அதற்கு பதில் கொடுக்காமல் அவளை பார்த்தவனது கண்கள், காயம்பட்ட அவளது கரத்தில் படிந்ததும்….

உடனே பஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்து அவள் அருகில் அமர்ந்தான்… அவளோ கலங்கிய விழிகளுடன் அவனை நிமிர்த்து பார்க்க… அவளை முறைத்து பார்த்தபடியே விக்ரமன் வலிக்க, வலிக்க அவள் காயங்களுக்கு மருந்திட்டு, கட்டு போட்டு விட்டான்…

அவன் மருந்திட்டு முடிக்கவும் வெடுக்கென தன் கையை அவனிடமிருந்து உருவிக்கொண்டாள் கீர்த்தி… அவள் செயலில் கோவம் அடைந்தவன், வேண்டுமென்றே காயம் பட்ட கரத்தினை பிடித்து முதுகிற்கு பின்னால் மடக்க, அவளோ வலியில் அலற தொடங்கினாள்.

” ஆஆ… ப்ளீஸ் வலிக்குது விடுங்க ” என்று அவள் வாய் திறந்து கூறிய பின்னர் தான் அவளது கரத்தினை விடுவித்தான் விக்ரமன்…

அவன் பிடித்து முறுக்கியதில், கட்டினை மீறி காயத்தில் இருந்து ரத்தம் வழிய… அதனை பார்த்து  கண்களில் கண்ணீருடன்… அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளை முறைத்து பார்த்தவனது கண்ணில் வேலைகார பெண் கீர்த்திக்காக வைத்து விட்டு சென்ற உணவு தட்டு படவே…

” இன்னும் சாப்பிடலயா நீ ,  சாப்பாடு கூட இன்னும் சாப்பிட்டு முடிக்கல அதுக்குள்ள பிரச்சனையை இழுத்துட்டு வந்தாச்சு…” என்றவன் ”  ஒழுங்கா சாப்பிட்டு தூங்கு… ” என்றபடி எழுந்து கொண்டான்…

” சாப்பிடமாட்டேன், எனக்கு உங்க சாப்பாடு  ஒன்னும் வேணாம்… நான் போகணும், எனக்கு உங்க கூட இருக்க பிடிக்கல… நீங்க என்னை கஷ்டபடுத்துறீங்க” என்றவள் காயம்பட்ட தன் கரத்தை வலியுடன் பார்க்க…

 

” நீ சும்மா இருந்தால் நான் ஏன் உன்னை கஷ்டபடுத்த போறேன் ” என்று இம்முறை அவன் தன்மையாகவே கூறினான்…

” இல்லை, நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம், எனக்கு பிடிக்கல நான் போறேன்.. ” என்றவள் எழுந்து சென்று தன் பையை தோளில் மாட்டிக்கொண்டு கதவினை திறக்க போகவும்… விக்ரமன் கோவத்தில் அருகில் இருந்த ஒரு மர நாற்காலியை எடுத்து கதவருகில் இருந்த சுவரின் மீது வீசி அடிக்க… அது ” டோம் ” என்ற சத்தத்துடன் உடைந்து சிதறியது…  கதவருகில் ஏதோ உடைந்த சத்தம் கேட்டு கீர்த்தி பயத்தில் செய்வதறியாது அதிர்ந்து பின்னால் திரும்பி பார்க்க…  விக்ரமனோ அவளை அனல் தெறிக்க பார்த்துக்கொண்டிருந்தான்…

அவனது தோற்றமே அவனது கோவத்தை எடுத்து கூற… எச்சில் விழுங்கியபடி அவனை நடுக்கத்துடன் எதிர்நோக்கியவள், மெதுவாக பூனை போல பம்மி கதவினை திறக்க பார்க்க…

நொடியில் அவள் அருகில் வந்து அவளது கழுத்தினை பற்றி தூக்கினான் விக்ரமன். பயத்துடன் அவனிடமிருந்து விடுபட முடியாமல் போராடிக்கொண்டுருந்தாள் கீர்த்தி.

” இங்கேயிருந்து போய்டுவியா?  ” என்று அவன் புருவம் உயர்த்தி கேட்க… அவளோ  அவன் பிடியில் மூச்சு விட முடியாமல் திமிறி கொண்டிருந்தாள்…

” பதில் சொல்லுடி விட்டுட்டு போய்டுவியா ? ” என்று கண்கள் சிவக்க கேட்டவனின் விழிகளை மிரட்சியுடன் பார்த்தவள்… ” இல்லை ” என்று கஷ்டப்பட்டு தலையசைக்க… இதழ் வளைத்து சிரித்தவன், அவளை கீழே இறக்கி விட்டான்…

அவன் கீழே இறக்கி விடவும் கழுத்தை பிடித்து கொண்டு இருமியவள் அவனை நடுக்கத்துடன் பார்க்க..அவளது பயம் உணர்ந்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன்…

” மறுபடியும் வீட்டு விட்டு வெளியே போறேன்னு சொல்லி, உன் காலு வீட்டு வாசல் படி தாண்டி போச்சு .. காலை உடைச்சிடுவேன்… புரியுதா? ” என்று குரல் உயர்த்தி கூற… அதனை கேட்டு, அவள் மேலும் அழுதாளே தவிர அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை…

” என்ன பார்த்துட்டே இருக்க… வா வந்து சாப்பிடு ” என்றவன் அவளது கரத்தினை பற்றி சோபாவில் அமரவைக்க…

” எனக்கு வீட்டுக்கு போகணும்… என்னை விடுங்க… எனக்கு பயமா இருக்கு ” என்று அவள் குழந்தை போல முகத்தை தூக்கி வைத்து கொண்டு அழ தொடங்கினாள்…

“இவ்ளோ சொல்லியும் மறுபடியும் அங்கயே வந்து நிக்கிற இல்லை   ” என்றவன்… தனது இடது கை கொண்டு காயம்பட்ட அவளது கரத்தை பற்றி மீண்டும் முறுக்கினான்…

அவளோ வலியில் அலற தொடங்கவும்… ‘ ஷ்…’ என்றவன்… கத்திய அவளது வாயில் இட்லியை திணித்தான்…

மருண்ட விழியுடன் அவனை பார்த்தவள், இட்லியை மெல்லவும் முடியாமல் வலியை பொறுத்து கொள்ளவும் முடியாமல் தவித்து முழித்தாள்…

” இப்போ இந்த இட்லியை நீ முழுங்கல… இன்னொரு கையையும் உடைச்சி கடைசி வரை உன்னால சாப்பிடவே முடியாமல் பண்ணிடுவேன் ” என்றவன் கையில் அழுத்தம் கொடுக்க… அவளோ அமைதியாக அவன் கொடுக்கும் இட்லியை உண்ண துவங்கினாள்… நாலு இட்லியையும் அவளுக்கு ஊட்டி முடித்தவன்…

” நான் சொல்லுறதை எல்லாம் கேட்டுட்டு அமைதியா இருந்தால், என்னை நல்லவனா பார்ப்ப… இல்லை என்னை கெட்டவனா பார்ப்ப… புரியுதா? ” என்றவனை புரியாமல் பார்த்தாள் கீர்த்தி…

” என்ன புரியுதா? பதில் சொல்லு ? ” என்றவன் அவளது தாடையை பற்றி கேட்க… அவனை நிமிர்ந்து பார்த்தவள்…

‘ இல்லை ‘ என்று தலையாட்ட… ” அது தானே… பார்த்தேன்… உனக்கு புரிஞ்சால் தான் நான் ஆச்சர்ய படனும்… ” என்று அவன் சலித்து கொள்ள…

சட்டென ” இப்போ புரியுது ” என்றாள், பெண்ணவள் …

அவனோ ‘அப்படி என்ன புரியுது ? ‘ என்பது போல அவளை பார்க்க…

” உங்க கிட்ட பேச கூடாதுன்னு புரியுது ” என்றவள் விம்மி விம்மி அழ.. அவளை சலிப்பாக பார்த்தான்.

‘ கடவுளே… இந்த தத்தியை வச்சிட்டு நான் என்ன பண்ண போறேனோ ! ‘என்றவன் மௌனமாகி போனான். அப்போது சதிஷிடம் இருந்து விக்ரமனுக்கு அழைப்பு வந்தது…

” சார் என்ன ஆச்சு ஏன் இவ்ளோ லேட் ? ஸ்பாட்ல எல்லாரும் உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. ” என்று சதீஷ் சொல்ல…

” ம்ம்ம் வரேன்… ” என்று கூறி அழைப்பை துண்டிந்தவன்… கீர்த்தியை ஆழ்ந்து பார்த்தபடி வெளியே சென்றான்…

அவன் சென்றபிறகு எழுந்து வந்து கதவை திறக்க முற்ப்பட்டாள் கீர்த்தி… ஆனால் அது லாக் செய்யப்பட்டிருக்க… அவனை  வாய்க்கு வந்தபடி திட்டியவள் அப்படியே சோபாவில் சாய்ந்து அமர்ந்து,  தூங்கி போனாள்…

****

அதியனை கோவிலுக்கு அழைத்து வந்தான் சரத்… ” நீ மட்டும் போய்ட்டு வா ” என்று கூறிய சரத் கோவிலின் உள்ளே வராமல் வெளியவே நின்று கொண்டான்…

அவன் குணம் அறிந்த அதியனும் அவனை தொல்லை செய்யாமல் தான் மட்டுமே கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கினான்…

இறைவனை கைகூப்பி வணங்கியவனது, விழியோரம் தன்னிச்சையாக கண்ணீர் வழிந்தது…

” நான் பண்ணது சரின்னு சொல்ல மாட்டேன் தப்பு தான்… ஆனால் அந்த நிலையில் எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல… அப்படி ஒரு தப்ப பண்ணிட்டேன். ஆனால் அது அந்த அளவுக்கு அவளை காயப்படுத்தும்னு நான் யோசிக்கல…  அவளை இழக்குற தைரியம் எனக்கு இல்லாத ஒரே காரணம் தான்  அப்படி ஒரு தப்பை என்னை பண்ணவச்சது..  ‘அவள் நடந்த எல்லாத்தையும் கெட்ட கனவா நெனச்சு மறந்துடுவேன்னு சுலபமா  சொல்லிட்டு  போயிட்டாள்’ ஆனால் என்னால தான் இப்போ வரை எதையும் மறக்க முடியல… ஏன் என்னை இவ்ளோ பலகீனமா படைச்ச, நான் யாரை எல்லாம் என் மேல  உண்மையான அன்பு வச்சு இருக்காங்கன்னு நெனச்சனோ அவங்க யாருமே என் அன்புக்கு உண்மையா இல்லை… அன்பு எதிர்பார்த்து அன்பு செலுத்துறது தப்பு தான்… ஆனால் ஏன் என் மனசை மட்டும் யாருமே புரிஞ்சுக்கவே இல்லை… உனக்கே தெரியும் என் வாழ்க்கையை பகிர்ந்துக்கு அவள் எனக்கு வேணும்னு நெனச்சனே தவிர அவள் வாழ்க்கையை கெடுக்கணும்னு நான் ஒரு நாளும் நினைச்சதே  இல்லை… நான் இப்போவும் வேண்டிக்குறது ஒன்னே ஒன்னு தான் என் வர்ஷா நல்லா இருக்கணும்… நான் இல்லைனாலும் அவள் சந்தோஷமா இருக்கணும்… கண்டிப்பா இருப்பாள். ” என்று  இறைவனிடம் வேண்டியவன் வெளியே வந்தான்…

” என்னடா சிறப்பான தரிசனமா? ” என்று சரத் கேலி பேச அவனை முறைத்தவன்.  எதுவும் பேசாமல் காரினுள்  அமர்ந்து கொண்டான்…

பேசியபடியே இருவரும் வந்து கொண்டிருக்க… அப்போது சரத் கவணமில்லாமல், வண்டியை எதிரில் வந்த ஒரு வேன் மீது மோதினான்… சரத் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவனுக்கு பெரிதாக எந்த அடியும் படவில்லை…  ஆனால் அதியன் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் மோதிய வேகத்தில் தலையில் அடிபட்டு அப்படியே மயங்கமானான்… பின்னர் அதியனை மருத்துவமனையில் கொண்டு வந்து  சேர்ந்தான் சரத்…

அதியனும்  பெரிதாக எந்த அடியும் இல்லை  என்றாலும் அவன் இரண்டு நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாகடர் வழியுறுத்த… சரத்தும் மும்பை செல்லும் பயணத்தை ஒத்திவைத்தவன், அதியனுக்கு துணையாக மருந்துவமனையில் இருந்து அவனை கவனித்துக்கொண்டான்…

****

மதியம் வேலைக்கார பெண் கீர்த்திக்கு உணவினை கொடுத்து விட்டு விக்ரமன் கூறியபடி மீண்டும் கதவை தாழிட்டு விட்டு சென்றுவிட்டாள்… பசிக்காக உணவை உண்ட கீர்த்தி, தன் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள்…

எப்படியும் அவன் இரவு வருவான் அப்படி வந்தால் நன்றாக சண்டை போடவேண்டும் என்று எண்ணி அவள் காத்து கொண்டிருக்க… அவனோ வரும் வழியே தெரியவில்லை… காத்திருந்து, காத்திருந்து பார்த்தவள், ஒருகட்டத்தில் தன்னையும் அறியாமல் தூங்கி போனாள்…

விக்ரமன் இரவு  பதினொரு மணி போல ஷூட்டிங் முடிந்து திரும்பி வந்தான்… வந்தவன் நேராக கீர்த்தியின் அறைக்குள் நுழைய… அவளோ மெத்தையில் கால்களை குறுக்கி குழந்தை போல உறங்கி கொண்டிருந்தாள்…

அவள் படுத்திருந்த தோற்றம் கண்டு, களைப்பு மறந்து புன்னகைத்தவன்,  அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

காயம் பட்ட அவளது கரத்தினை மெல்ல வருடி விட்டு நெற்றியில்  சிறு முத்தம் வைத்தவன், புன்னகை முகம் மாறாமல்  தன் அறையை நோக்கி சென்றான்…

அடுத்த நாள் காலையில் எழுந்த கீர்த்தி வேலைக்கார பெண்ணிடம் அபிமன்யுவை பற்றி கேட்க… அவளோ அவன் விடியற்காலையிலேயே இங்கிருந்து சென்று விட்டதாக கூறினாள்… அதனை கேட்டு கீர்த்திக்கு மனதில் பிள்ளை கோவம் துளிர்க்க… ” நேத்து என்னை எவ்ளோ கஷ்டபடுத்திட்டு ஒரு சாரி கூட கேக்கல… இப்போ கூட நான் எழுந்துக்கும் முன்னே கிளம்பி போயாச்சு… எதை பத்தியும் கவலை இல்லை… இந்த ஆம்பளைங்களே இப்படி தான்… ” என்று சலித்து கொண்டவள் நொடி நேரம் நிறுத்தி ” இல்லை…இல்லை… என் மகி மாமா அப்படி கிடையாது… அவரு என்ன இந்தாளு மாதிரி சிடுமூச்சியா என்ன ? என் மாமா தான் இந்த உலகத்திலயே பெஸ்ட் ” என்றவளுக்கு தன் மாமனை எண்ணி மனம் கனத்து போக இதழில் தோன்றிய புன்னகை கூட நொடியில் விழியில் கண்ணீராக மாறியது…

நேரத்திற்கு நேரம் அவள் இருக்கும் இடம் தேடி வந்து உணவு கொடுக்கபட்டது… அவளும் கடமையே என்பதை போல அதனை உண்பவளுக்கு மனம் முழுக்க வெறுமையான உணர்வு..

நேற்று போலவே இன்றும் விக்ரமன் அவளை காண வராமல் இருக்க… கீர்த்திக்கு எதையோ இழந்துவிட்டது போல ஒரு உணர்வு தோன்ற ஆரம்பித்தது…

மனம் வெறுமையா இருப்பதை உணர்ந்தவளால் அதற்கான காரணத்தை தான் அறியமுடியவில்லை…

ஷூட்டிங் முடிக்க இருவாரம் என பேசப்பட்டிருந்த இடத்தில் தனது தனிப்பட்ட வேலைக்காக, அதனை ஒரே வாரத்தில் முடித்து கொடுத்து விட்டு இங்கிருந்து மீண்டும் மும்பைக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான் விக்ரமன்… அதற்காக அடுத்து வந்த  மூன்று நாட்களுக்கு இரவு பகல் பாராமல் படப்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்…

 

அதனால்  அவன் எப்போது வீட்டிற்கு வருவான்… எப்போது திரும்பி செல்வான்! என்பதே கீர்த்திக்கு தெரியவில்லை… இப்போது எல்லாம் பதினோரு மணி வரையிலும் அவன் வருவானா என்ற எதிர்பார்ப்புடன் விழித்திருப்பாள்.. ஆனால் அவன் வர இரவு பன்னிரண்டு மணியை தாண்டி விடும்… ஆனால் எப்போது வந்தாலும் கீர்த்தியின் அறைக்கு சென்று அவளை பார்த்துவிட்டு தான், தனது அறைக்குள் செல்வான்…

அவள் தூங்கும் நேரம் வீட்டிற்கு வருபவன், அவள் விழித்துக் கொள்ளும் நேரம் வீட்டில் இருப்பது இல்லை.

என்ன தான் பிடிக்காது என்றாலும்  நம்முடனே இருந்த ஒரு நபர் இன்று இல்லை என்றால் நம்மை அறியாமலேயே நம் மனது அவரை தேட தொடங்கி விடும்.. அதே நிலை தான் இப்போது கீர்த்திக்கும்.  அவன் மீது எல்லை இல்லாத கோவம் இருந்தாலும் அதனை நேருக்கு நேராக அவனிடம் சண்டையிட்டே காட்டவேண்டும் என்பது அவள் எண்ணம்…

எதற்கெடுத்தாலும் தன்னை திட்டிக்கொண்டே இருப்பவனை ஒரே வீட்டில் இருந்தும்  மூன்று நாட்களாக பார்க்க முடியவில்லை என்பது கீர்த்தியின் மனதில் ஒரு இனம்புரியாதா தேடலை உருவாக்கியது… தேடல் தானே காதலின் முதல் படி. ஆனால் அதை அவள் உணரவில்லை, அறியாமலேயே அவளது மனம் அவனை தேட தொடங்கி இருந்தது…

அவளது தேடல் தொடங்கும் நேரம் அவனது தேடல் முடிந்திருந்தது…

கோமாவில் இருந்த நந்தினி கண்விழித்திருந்தாள்…

மருத்துவமனையில் இருந்த நந்தினி, சுயநினைவு பெற்று மெல்ல தன் கண்களை திறக்க முயற்சித்தாள்… கடினப்பட்டு இமைகளை பாதி திறந்தவளுக்கு கண் பார்க்கும் கட்சிகள் அனைத்தும் மங்கலாக தெரிய.. மேலும் இமைகளை விரிக்க முடியாமல் கண்களை மூடி கொண்டாள்…

மெதுமெதுவாக மீண்டும் கண்களை திறந்து, தான் இருக்கும் இடத்தை பார்க்க முயற்சித்தவளுக்கு காட்சிகள் சரிவர தெரியவில்லை…

‘நான் எப்படி இங்க வந்தேன்..என்ன ஆச்சு எனக்கு?’  என்று யோசித்து பார்த்தவளுக்கு சத்யன் பேசிய அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகம் வர.. தான் ஏமாற்றப்பட்டதையும், தன்னுடைய காதல் பொய்யானதையும் அவளால் தாங்கிகொள்ளவே முடியவில்லை…

கொல்லும் எண்ணம் கொண்டு பழகியவனையா உயிருக்கு உயிராக காதலித்தோம்!

என்று எண்ணியவளுக்கு தன் மீதே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவம் வந்தது…

அவள் கொண்ட காதல் அவளை முழுவதும் முட்டாளாக்கி விட்டதை எண்ணி, தன் உணர்வுகளை வெறுத்தாள்..

இதற்கெல்லாம் காரணம் அந்த விக்ரமன் என்று உணர்ந்தவளுக்கு அவனை கொல்லும் அளவிற்கு வெறி வந்தது…  கோவத்தில் கண்கள் சிவக்க… அதிக யோசனை காரணமாக அவளுக்கு லேசாக தலைவலிக்க ஆரம்பித்தது, அதனால் தன் உடல்நலம் கருதி யோசனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கண்களை மூடி கொண்டாள் நந்தினி.

 

சிறிதுநேரத்திற்கு பிறகு அந்த அறைக்குள் நுழைந்த பரதன், அங்கே  இருந்த செவிலியரிடம் நந்தினியை பற்றி கேட்க, அவரும் பதில் கூறி கொண்டிருந்தார்…

அறையில் சத்தத்தை கேட்டு, மெல்ல கண்விழித்த நந்தினி அங்கு பரதனை கண்டு ஒரு நொடி அதிர்ந்தாள்… ‘ இவனா? இவன் இங்க இருக்கான் அப்படின்னா! விக்ரமனுக்கு நான் இங்க இருக்குறது தெரியுமா? நான் குணமானது தெரிஞ்சா கண்டிப்பா என்னை கொன்னுடுவானுங்க… இப்போ என்ன பண்ணுறது? ‘ என்று யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது…நிச்சயம் விக்ரமன் கூறி தான் இவன் நம்மை கவனிக்கிறான் என்று…

இப்போது தன்னை வெளிப்படுத்தி மாட்டிக்கொள்ள விரும்பாத நந்தினி, அமைதியாக கண்களை மூடிக்கொண்டாள்..

அப்போது பரதனுக்கு, விக்ரமனிடமிருந்து அழைப்பு வந்தது…

அழைப்பை ஏற்றவன் ” சொல்லுங்க விக்ரமன் அண்ணா” என்று பேச.. விக்ரமனது பெயரை கேட்டு, நந்தினியின் முகம் நொடியில் மாற.. காதுகளை கூர்மையாக்கி, அவன் பேசுவதை கேட்க தொடங்கினாள்…

” நான் ஒரு நம்பர் அனுப்புறேன்… அந்த பெர்சன் இருக்குற இடத்தை மட்டும் எனக்கு கண்டுபுடிச்சு சொல்லு ” என்று கூறி அதியனது நம்பரை பரதனது எண்ணிற்கு அனுப்பி வைத்தான்…

” யாரோட நம்பர் அண்ணா இது ஏதாவது பிரச்சனையா? ”

” ஏன்? எதுக்குன்னு அவசியம் காரணம் சொல்லனுமா? ” என்று விக்ரமன் கடினமாக வினவ…

” அப்படி எல்லாம் இல்லை அண்ணா… நான் கண்டுபிடிக்க ஏற்பாடு பண்ணுறேன், அப்புறம் கீர்த்தி உங்க கூட தான் இருக்குறதாக  சத்யா சொன்னான்..  ” என்று கேட்டவனுக்கு தன்னையும் மீறி ஒரு கிண்டல் புன்னகை அரும்பியது..

” ம்ம்ம் அதுக்கு இப்போ என்ன? ”

” இல்லை… இப்போவாது உங்க லவ்வை சொல்லிடுவீங்களா? இல்லை இன்னும் வருஷம் ஆகுமான்னு கேட்டேன் ”

” நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி எனக்கு அவள் மேல எந்த காதல்  இல்லை புரியுதா? ”

” அப்போ உங்களுக்கு அவளை பிடிக்காதா? ”

” பிடிக்கும்… ஆனால் அது காதல் இல்லை…  தேவை இல்லாமல் பேசி என்னை எரிச்சலாக்காத… அந்த நம்பரை ட்ரேஸ் பண்ணி சொல்லு ” என்று காட்டமாக பேசியவன் அழைப்பை துண்டித்தான்…

இதனை கேட்டு நந்தினிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. ‘கீர்த்தி விக்ரமன் கூட இருக்காளா? ஏதோ காதல் அப்படி இப்படின்னு பேசிக்கிறாங்க என்ன நடக்குது? கீர்த்தி எப்படி அவன் கிட்ட? அப்போ பையில் இருக்குற இடம் அவனுக்கு தெரிஞ்சு இருக்குமோ ? இல்லை இருக்காது… கீர்த்திக்கு எதுவும் தெரியாது.. சோ அவள் சொல்ல வாய்ப்பில்லை… ஒருவேளை அந்த க்ளு எல்லாம் விக்ரமன் கையில் கிடைச்சு இருந்தாள்… ஒஹ் காட் அப்படி மட்டும் ஒன்னு  நடந்தால் எங்க எல்லாரோட லைப்பும் போய்டும் இப்போ என்ன பண்ணுறது? இதை முதலில் எப்படியாவது சரத் கிட்ட சொல்லி ஆகணும்… ‘  என்றவள் யோசனையுடன் படுத்திருந்தாள்…

நர்ஸிடம் பேசிவிட்டு ஒரு கான்ஸ்டபிளை மட்டும் நந்தினி அறைக்கு வெளியே காவலுக்கு வைத்து விட்டு அங்கிருந்து சென்றான் பரதன்… இரவு நேரம் என்பதால் அந்த இடம் அமைதியாக இருந்தது…

பரதன் அங்கிருந்து சென்றுவிட… தப்பித்து செல்ல சரியான தருணம் எதிர்பார்த்து காத்திருந்தாள் நந்தினி…

*******

இரவு பனிரெண்டு மணி போல வீட்டிற்கு வந்தான் விக்ரமன்..

வந்தவன் நேராக கீர்த்தியின் அறைக்குள் நுழைய… அவனுக்காக தூங்காமல் காத்திருந்தவள், அவனது வருகையை உணர்ந்து கண்விழித்து மெத்தியில் இருந்து எழுந்து அமர்ந்துகொண்டாள்…

அவளது அசைவு தெரியவும் ” ஏய் நீ இன்னும் தூங்கலயா? ” என்றவன் மின் விளக்குகளை ஒளிரச்செய்தான்…

அவனை பார்த்து மென்மையாக புன்னகைத்தவள், ” எப்போவும் இவ்ளோ லேட்டா தான் வருவீங்களா? ” என்று கேட்டாள்…

” ம்ம் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு ஆமா நீ சாப்பிட்டியா ? ”

” ம்ம்ம் நீங்க? ”

” இல்லை இனி தான். நீ தூங்கு, நானும் சாப்பிட்டு தூங்குறேன் ” என்றவன் வெளியே செல்ல பார்க்க…

” இவ்ளோ லேட்டா தான் சாப்பிடுவீங்களா? ” என்ற அவளது கேள்வியில் அவனது கால்கள் அப்படியே நின்றது…அவளை திரும்பி பார்த்தவன்,

” இல்லை இன்னிக்கும் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு ” என்று புன்னகை முகமாக கூறியவன்,வெளியே செல்லும் நேரம்…

” நானும் சாப்பிடல ” என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு  கூறினாள் கீர்த்தி…

பதில் எதுவும் பேசாமல் வெளியே சென்றவன்.. அவளுக்கும், தனக்கும் தோசை செய்து எடுத்து வந்தான்…

அவளது கையில் உணவினை கொடுத்தவன் ” சாப்பிடு ” என்று கூறி, தானும் உண்ண தொடங்கினான்.. கீர்த்தியோ அவனையே இமைக்கமால் பார்த்தபடி, உணவை உண்டுகொண்டிருந்தாள்…

அதனை அறிந்தவனும்! அவளை நிமிர்ந்தும் பாராமல் அமர்ந்திருந்தான்…  சாப்பிட்டு முடித்தவன், அவளிடமிருந்த தட்டினை வாங்க, கை நீட்டினான்…

” இல்லை நானே ” என்று அதனை தர மறுத்தவளை ஒரு பார்வை பார்த்தவன் ” பரவாயில்லை கொடு, ” என்று கூறி அவளிடமிருந்து உணவு தட்டினை வாங்கிக்கொண்டு ”  நீ தூங்கு ” என்று கூறி வெளியே செல்ல போகவும், அவனது கரத்தினை பற்றி நிறுத்தினாள் கீர்த்தி…

அவனோ அவளை புரியாமல் பார்க்க… ” ப்ளீஸ் கொஞ்சம் நேரம் ஏதாவது பேசுங்களேன், இல்லன்னா சண்டையாவது போடுங்க.. எனக்கு ரொம்ப லோன்லியா பீல் ஆகுது… ” என்றவளது விழிவழியே கண்ணீர் வழிந்தது…

அவளது கண்ணீரை கண்டு, அருகில் அமர்ந்தவன் “ஏன்டா? ” என்று அக்கறையாக கேட்க…

” ஒன்னும் இல்லை.. நீங்களும் வீட்டுல இல்லை, சண்டை போட கூட யாரும் இல்லாமல் ரொம்ப கஷ்டமா இருந்தது…”என்றவளது பதிலில் மென்மையாக புன்னகைத்தான் விக்ரமன்…

” சரி இப்போ சண்டை போடலாமா? ” என்றவன் தனது சட்டையை கைமுட்டி வரை மடக்கிவிட..  பயந்து போனாள் கீர்த்தி ..

” இந்த மாதிரி சண்டை இல்லை… ” என்றவளது குரல் வேறுபட்டை உணர்ந்து, சத்தமாக சிரித்தவன்..

” ம்ம் .. அப்போ வேற எப்படி சண்டை போடணும் ” என்று  குறும்பாக கேட்டவனது கண்கள் அவளை ஆசையாக பார்த்தது…

அவளோ பதில் எதுவும் பேசாமல் தலைகுனிந்து கொள்ள… அவளது கரம் பற்றி பால்கனி அருகில் அழைத்து வந்த விக்ரமன் நிலவினை ரசித்தபடி அவளை பக்கவாட்டாக திருப்பி பார்க்க… அவளோ அமைதியா நிலவினை பார்த்துக்கொண்டிருந்தாள்…

” இந்த உலகத்திலேயே உங்களுக்கு யாரை ரொம்ப புடிக்கும் ? ” என்று  நிலவினை பார்த்தபடியே  அவனிடம் கேள்வி  கேட்டாள் கீர்த்தி..

” என் அம்மாவை ரொம்ப பிடிக்கும் ” என்று கூறியவனை பார்த்து பொய்யாக முறைத்தவள்…

” அம்மாவை எல்லாருக்கும் தான் பிடிக்கும், அவங்க இல்லாமல் வேற யாரை ரொம்ப பிடிக்கும்” என்று கேட்டவளின் பக்கம் திரும்பியவன்..

” நீ எதிர்பார்க்குற பதிலை நான் சொல்ல மாட்டேன் ” என்று கூறி, அவளது மூக்கின் நுனியை பிடித்து தன் பக்கம் இழுத்தான்…

” நான் எந்த பதிலையும் எதிர்பார்க்கல ? ” என்றவள் அவனிடம் இருந்து விலகி நின்றாள்..

” அப்படியா? ம்ம்ம் அப்போ சொல்லுறேன்.. எனக்கு இன்னொருதங்களை ரொம்ப பிடிக்கும் ” என்றவனது கரம் அவனது இடது பக்க மார்பை இதமாக வருடி கொண்டது…

” அங்க யாரு இருக்கா? ” என்றவள் ஆர்வமாக அவன் முகம் பார்க்க… திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன், பதில் கூறாமல் மௌனமாக புன்னகைத்தபடி” உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் ” என்று கேட்டான்..

” என் மாமா  ” என்று அவள் நொடியும் தாமதிக்காமல் பதில் கொடுக்க… இமை உயர்த்தி அவளை மெச்சுதலாக பார்த்தான்…

” அப்படி என்ன,உன் மாமா உனக்கு ஸ்பெஷல் ”

” என் மாமா தான், எனக்கு அப்பா,   அம்மா, சிஸ்டர் ,பிரதர்,  பிரென்ட் எல்லாமே!! ஆனால் இப்போ அவரு??  ” என்றவளுக்கு தன்னையும் அறியாமல் விழியோரம் கண்ணீர் வழிய, அதனை பார்த்து நொடியில் விக்ரமன் முகம் மாறியது…

” க்கும்… ” என்று குரலை செருமியவன் ” நமக்கு பிடிச்சவங்க எப்போவும் நம்ம கூடவே தான் இருப்பாங்க ” என்று கூறினான்..

வலி மறைத்து, அவனை பார்த்து புன்னகைத்தவள் ” எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு… என் உள்மனசு சொல்லிகிட்டே இருக்கும் என் மாமா, அக்கா, அம்மா யாருக்கும் எதுவும் ஆகலன்னு, அந்த மனசு கொடுக்குற நம்பிக்கையில தான் நான் இன்னும்  உயிரோட இருக்கேன்” என்றவளை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்தான்  விக்ரமன்.

 

” எனக்கு ஒரு உதவி பண்ணுறீங்களா? ” என்று முகத்தை அழகாக வைத்து கொண்டு அவள் கேட்கவும்…” என்ன உதவி? ” என்றான் மென்மையாக..

” என் மாமா வாங்கி கொடுத்த மோதிரம் கீழே விழுந்துடுச்சு… அன்னைக்கு கூட அதை எடுக்க பொய் தான் கீழே விழுந்தேன்… இப்போ அதை எடுத்து கொடுக்குறீங்களா? ப்ளீஸ் ” என்றவளை பார்த்து இதமாக புன்னகைத்தவன் ” சரி எங்க இருக்கு? ” என்று கேட்டான்…

“உங்க போன்ல பிளேஷ் லைட் ஆன் பண்ணுங்க ” என்று அவள் கூறவும், அவனும் ஆன் செய்து அவளிடம் கொடுக்க… அவளும் மோதிரம் விழுந்து கிடந்த இடத்தை அவனுக்கு காட்டினாள்…

அவனோ உடனே பால்கனி கம்பியை ஒரு கையால் பிடித்து கொண்டு, மறுகையால் சன்னல் மேல் திண்டின் மீது இருந்த மோதிரத்தை எடுத்தான்…

அதனது செயல் கண்டு பதறிய கீர்த்தி ” பார்த்து கீழே விழுந்துடாதீங்க  ?  ” என்று கூற…

” ஐயம் ஓகே ” என்றவன் ஒரு கையால் கம்பியை  பிடித்து தொங்கிக்கொண்டிருக்க…

போனை அருகில் இருந்த டேபிளின் மீது வைத்து விட்டு… அவனை நோக்கி கையை நீட்டியவள் ” என் கையை பிடிச்சுக்கோங்க,  நான் உங்களை மேல தூக்குறேன் ” என்று சீரியஸான முகப்பவனையுடன்   கூற, அவனோ சத்தமாக சிரித்துவிட்டான்.

” எதுக்கு சிரிக்கிறீங்க? என் கையை பிடிங்க, கீழே விழுந்திட போறீங்க ”

” ஒஹ் அப்போ மேடம் என்னை மேல தூக்கிடுவீங்களா ? ” என்று சிரித்து கொண்டே கேட்க…

” ஆமா ” என்றவள் தன் துப்பட்டாவை எடுத்து இடையில் கட்டி கொண்டு ”  கையை பிடிங்க தூக்குறேன்  ” என்று கூறி அவனை நோக்கி கரத்தினை நீட்ட… பொய்யாக அவளை முறைத்தவன், ஒரே தாவில் பால்கனி கம்பியின் மீது கால்வைத்து மேலே ஏறி வந்தான்..

அவளோ அவன் செயலை அதிர்ந்து பார்க்க… அடுத்த நொடியே அவளது கரத்தினை பற்றி, அவளது கண்களை ஊடுருவி பார்த்தவன், அந்த மோதிரத்தை அவளது கரத்தில் போட்டு விட்டான்.. இவை அனைத்தும் ஒரே நொடியில் நிகழ்ந்து விட, நடந்ததை உணரவே அவளுக்கு நேரம் தேவைப்பட்டது..

” நாளைக்கி என் கூட ஷூட்டிங்க்கு வரியா ? ” என்றவனது கேள்விக்கு கீர்த்தி தானாக தலையசைத்து சம்மதம் கூறினாள்…

” ம்ம்ம் குட் நயிட் ” என்றவன் வெளியே சொல்லும் முன் அவனை தடுத்து நிறுத்திய கீர்த்தி… ” இங்கயே தூங்குங்க ” என்று கூறினாள்…

” என்ன ? ” என்றவன் அவளை  புரியாத பார்வை பார்க்க…

“அது..  நீங்க இங்கயே தூங்கினால் நாளைக்கு என்னை எழுப்ப ஈஸியா இருக்கும் இல்லை.. நானும் நீங்க ஷூட்டிங் கிளம்புறதுக்குள்ள ரெடி ஆகிடுவேன் ”

” இல்லை வேண்டாம் … நாளைக்கு ஷூட்டிங் பத்துமணிக்கு தான், சோ நீ மெதுவா எழுந்தா கூட போதும், இப்போ தூங்கு ”

” ப்ளீஸ் ” என்றவளது முகத்திற்கு மறுப்பு கூற முடியாமல் அவனும் அவள் அருகில் சென்று ஓரத்தில் படுத்து கொண்டான்… அவன் அருகில் இருக்கிறான்! என்ற எண்ணத்தில் நிம்மதியாக உறங்கினாள் கீர்த்தி…

பாதி இரவில் கீர்த்தி அவன் மீது காலையும், கையையும் தூக்கி போட, அவள் ஸ்பரிசம் கொடுத்த உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், தவித்து போனவன்  இதற்கு மேலும் இங்கு இருந்தால் அது அவளது பெண்மைக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டு.. அவளது நெற்றியில் முத்தமிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்…

******

சிறுது நேரத்தில்  செவிலியர் கண் அசந்து தூங்கிவிட… அதனை அறிந்து இது தான் இங்கிருந்து செல்ல சரியான தருணம் என்று எண்ணிய நந்தினி மெல்ல தன் கையில் மாட்டபட்டிருந்த ட்ரிப்ஸை நீக்கியவள்… சத்தம் வராத  வண்ணம் மெதுவாக கீழே இறங்கியவளுக்கு தலை சுற்றுவது போன்று இருக்க.., சுவரில் கைகளை ஊனி தன்னை நிலைப்படுத்தி கொண்டவள்… பின்னர் அறை கதவை திறக்க பார்க்க… அந்த சத்தம் கேட்டு செவிலியர் கண் விழித்து கொண்டார்…

கண்விழித்தவர் நந்தினியை பார்த்து ” மேடம்… நீங்க ” என்று அதிர்ச்சியுடன் கேட்க… நொடியில் அவரது வாயை தன் கைகொண்டு மூடிய நந்தினி அந்த பெண்ணை சுவரில் சாய்த்து ‘ ஷ் ‘ என்று விரல் கொண்டு சைகை செய்தவள், மெதுவாக கதவினை திறந்து வெளியே பார்க்க…அங்கே கான்ஸ்டபிள் இல்லை, அவர் புகைபிடிக்க வெளியே சென்றிருந்த நேரம் அது… அதனை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள் நந்தினி…

செவிலியரோ நந்தினியின் பிடியில் இருந்து மெல்ல தன்னை விடுவித்து கொண்டு ”  என்ன பண்ணுறீங்க? உங்களுக்கு சரி ஆகிடுச்சா… இருங்க நான் போய் டாக்டரை அழைச்சுட்டு வரேன், அதுவரை நீங்க ஓய்வு எடுங்க…இப்படி எல்லாம் பெட்ல இருந்து அனாவசியமா எழுந்துக்க கூடாது ” என்று அந்த செவிலியர் சற்று குரல் உயர்த்தி கூற… அவளை பார்த்து ஏளனமாக சிரித்த நந்தினி ” நீ எனக்கு அட்வைஸ் பண்ணுறியா? எனக்கு சரியாகிடுச்சு இதுக்கு மேல இங்க இருக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை ” என்றவள் கதவை திறந்து வெளியே செல்ல பார்க்க…

” என்ன பண்ணுறீங்க? நீங்க இப்படி போக கூடாது… நீங்க இப்படி போன என்னை தான் கேள்வி கேட்பாங்க, என் வேலைக்கு தான் பிரச்சனை வரும்..  நான் இப்போவே டாக்டர் கிட்ட இன்போர்ம் பண்ணுறேன்” என்று பதறிய செவிலியர் வெளியே செல்ல பார்க்க… கோவமான நந்தினி, நர்சின் தலையை பிடித்து சுவரில் ஓங்கி அடித்தாள்… அடித்த வேகத்தில் செவிலியர் அப்படியே அந்த இடத்திலேயே மயங்கி கிழே சரிந்தாள்…

அதனை பார்த்து இதழ் வளைத்து சிரித்த நந்தினி… மெல்ல கதவை திறந்து கொண்டு வெளியே ஆட்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவள்… தன் முகத்தை துடைத்து கொண்டு வெளியே வந்தாள்..

வெளியே வரும் போது தான், தான் அணிந்திருந்த ஆடையை கவனித்தாள்… அது பேசன்ட்ஸ் அணியும் உடை. இதனை அணிந்து கொண்டு வெளியே சென்றால் நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள், பிரச்சனை ஆகிவிடும் என்று யோசித்தவள்… மீண்டும் தன் அறைக்குள் வந்து அங்கு மயங்கி கிடந்த அந்த செவிலியரின் ஆடையை தான் அணிந்து கொண்டு… அவளுக்கு தன் ஆடையை அணிவித்தவள்… செவிலியர் வேடத்தில் யார் கண்ணுக்கும் அகப்படாமல்  வெளியே வந்தாள்…

மருத்துவமனை கேட்டை விட்டு எப்படி வெளியே செல்வது என்று அவள் யோசித்து கொண்டே பார்க்கிங் பக்கம் நின்று கொண்டிருக்க…

அவளது நல்ல நேரமோ என்னவோ, சரத்தின் நண்பன் சிவாவின் மனைவிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்க… அவனோ தன் மனைவிக்கு காவலாக தாயை வைத்துவிட்டு பார்கிங்கில் நின்று யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான்…

பேசிக்கொண்டே அவன் எதார்த்தமாக திரும்பி பார்க்க.. முதலில் அவனுக்கு நந்தினியை சரிவர அடையாளம் தெரியவில்லை… யாரோ செவிலியர் என்று நினைத்து பார்வை திருப்பி கொண்டான்..

ஆனால் அப்போது அவனை கண்ட நந்தினிக்கும் உடல் சோர்வு கரணமாக அவனை சரிவரஅடையாளம் தெரியவில்லை… ஆனாலும் அறிந்த முகம் போல தோன்ற அவன் அருகில் மெதுவாக நடந்து வந்தாள்…

அப்போது மீண்டும் சிவா திரும்பி பார்க்க… தனக்கு எதிரில் நந்தினியின் முகம் மிக தெளிவாக தெரிய… ” நீ ” என்று அவன் அதிர்ச்சியில் யோசனையுடன் நிற்க…  அவளோ அவன் அதிர்ச்சியை சிறிதும் கண்டுகொள்ளாமல் ” நீ லாயர் சிவா தானே ” என்று கேட்டவளுக்கு கண்களில் இருள் சூழ ஆரம்பிக்கவும்… தன் தலையை உலுக்கி மீண்டும் அவனை பார்த்தாள்…

“ஆமா நான் சிவா தான், நீ நந்தினி தானே?  என்ன இது கோலம்?  நீ கோமாவில் தானே இருந்த!! எப்போ சரி ஆச்சு ? ” என்று அவன் அடுக்கடுக்காக கேள்வி கேட்க… எரிச்சலான நந்தினி…

” நான் அதை எல்லாம் பொறுமையா சொல்லுறேன்… முதலில் என்னை இங்க இருந்து அழைச்சுட்டு போ ” என்று கூற… அது தான் அவனுக்கும் சரி என்று தோன்றியது…

உடனே தன் மனைவியின் கைபேசிக்கு ‘ வெளியே செல்வதாக ‘ குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு நந்தினியை அழைத்து கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான்…

நந்தினியோ உடல் சோர்வின் காரணமாக காரின் பின்பக்க இருக்கையிலேயே படுத்துகொண்டாள்…

அதனை கண்ட சிவா, இந்த தகவலை சரத்திடம் கூற வேண்டும் என்ற எண்ணத்தில், அவனது எண்ணிற்கு அழைக்க… அது வழக்கம் போல ஸ்விட்ச் ஆப் என்று வந்தது… வேறு வழி இல்லாமல் அதியனுக்கு அழைத்தான்…

சிவாவின் எண்ணை திரையில் பார்த்த அதியன், அலைபேசியை சரத்திடம் கோவதுடன் நீட்டினான்… அவனும் அதே கோவம் மாறாமல் போனை வாங்கி பார்க்க… அழைத்தது சிவா என்று தெரிந்து உடனே அழைப்பை ஏற்றான்…

” சொல்லுடா என்ன விஷயம் ”

” ஒரு குட் நியூஸ்… நீ எப்போ மும்பைக்கு வருவ? ”

” இன்னிக்கு தான் சென்னை வந்தோம்…  அதிக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட், அதான் வர முடியல… நாளைக்கு மார்னிங் பிளைட்க்கு தான் டிக்கெட் புக் பண்ணி இருக்கு, சோ வந்திடுவோம் ”

” வந்திடுவோம்னா? அதியனும் வரானா? ”

”  ம்ம்ம் ” என்ற சரத் போனை எடுத்து கொண்டு ஹோட்டலில் இருந்து வெளியே வந்தான்…

” நான் எவ்ளோ சொல்லியும் அவன் கேட்கலடா… நானும் உன்கூட மும்பை வருவேன்னு ஒரே தொல்லை பண்ணுறான்… வேண்டாம் சொன்னாலும் ஏன்? எதுக்குன்னு ஆயிரம் கேள்வி கேப்பான்… அது தான் என்ன பண்ணுறதுன்னு தெரியாமல் அவனையும் அழைச்சிட்டு வரேன்… ”

” சரிவிடு இப்போ அவன் இங்க வந்தா வரட்டும்… நான் பாத்துகிறேன்… அப்புறம் சொல்ல வந்த விஷயத்தையே மறத்துட்டேன் பாரு… நந்தினி இப்போ என் கூட தான் இருக்காள், கோமாவில் இருந்து கண்முழிச்சிட்டா போல ” என்றவன் அவளை பற்றி கூற…

” இப்போ அவள் உன் பக்கத்துல இருக்காளா? போனை அவள் கிட்ட கொடு ” என்று அவன் கூறவும்

நந்தினியை எழுப்ப முயன்றவன்… அவளை எழுப்பி அவளிடம் போனை கொடுத்தான்…

” ஹெலோ அதி” என்று நந்தினியின் குரல் உயிர்ப்பே இல்லாமல் வெளிவந்தது…

” அதி இல்லை சரத் ”

” ஹான் சரத் ”

” இப்போ எப்படி இருக்க..  அந்த பையில் ” என்று அவன் கேட்கவும் தான் நந்தினிக்கு தெளிவு பிறந்தது…

” ஆமா சரத்… பைலை எப்படி எடுக்கனுங்குறது கீர்த்திக்கு தான் தெரியும்… அப்புறம் இன்னொரு விஷயம் அவள் இப்போ விக்ரமன் கூட தான் இருக்காளாம் ” என்றவள்… பரதன் பேசி, தான் கேட்ட அனைத்தையும் சரத்திடம் கூறினாள்.

அதனை கேட்டு  எதிர்முனையில் இருந்தவனுக்கு பேச்சே வரவில்லை…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்