
ஆம்!
‘ஆராத்ரிகா அபூர்வன்’ என்பது தான் அவளது முழுப் பெயர்!
அபூர்வன் எப்போதும்,’ஆரா’என்று தானே அழைப்பான்! அதனால் அவளே தனது அந்த ஆராத்ரிகா என்ற முழுப் பெயரை மறந்து விட்டுத் தான் இருந்தாள்!
ஆனால் இன்றோ அவளின் மணாளனே அந்தப் பெயரை ஞாபகப்படுத்தி விட்டானே!
அதைக் கேட்டுத் திடுக்கிட்டாலும் அவளும் சளைக்காமல் பதில் கூறத் தொடங்கி விட்டாள்.
“ஆமாம். நான் ஆராத்ரிகா அபூர்வன் தான்! இதை என்னப் புதுசாவா கண்டுபிடிச்சு இருக்கீங்க? நீங்க ரொம்ப பாவம்ங்க! காரிகாவைப் பத்தி
அவ்ளோ உழைப்பைப் போட்டுத் தேடுறீங்களே? அவளோட நம்பர் அண்ட் அட்ரஸ் கொடுக்காத ஒரே காரணத்துக்காக அப்படி ஒரு ஆளே இல்லன்னு நினைச்சுட்டு எல்லா இடத்திலும் விசாரணை நடத்திட்டு இருக்கீங்க! மனசு ரொம்ப வலிக்குது அபூர்வன்! ப்ளீஸ்! இதோட நிறுத்திக்கோங்க! இதுக்கு மேலே சத்தியமாக எனக்குப் பொறுமையே இல்லை” என்றவளோ அபூர்வனுக்குத் தன் மேல் நம்பிக்கை இல்லாமல் தனது கல்லூரிக்குச் சென்று விசாரித்ததை அறிந்து கொண்டதில் இருந்து ஆராவிற்கு மனம் முழுவதும் பாரமாக இருந்தது.
அதனாலேயே இதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு அவனிடம் கேட்டுக் கொண்டாள் மனைவி.
“ஓகோ! அப்பறம்? வேற? என்னம்மா நினைச்சுட்டு இருக்கே? உனக்கு மட்டும் தான் கோபம் வருமா? தேவையே இல்லாமல் நீ ரியாக்ட் பண்றதைப் பார்த்தால் எனக்கு எவ்வளவு கோபம் வருது தெரியுமா? அதென்ன உடனே உங்களுக்கு டிவோர்ஸ் வேணுமோ? அந்த அளவுக்கு உங்களுக்குக் காரிகாவோட ஃப்ரண்ட்ஷிப் முக்கியமா?”என்ற அபூர்வனும் ஒரு அளவிற்குத் தானே பொறுமையாக இருப்பான்?
எனவே இதை இப்போதே பேசி முடித்து விட எண்ணி இவளிடம் ஆவேசத்துடன் பேச ஆரம்பித்தான்.
“ரெண்டு பேரும் இன்னுமா பைகளை எடுத்துட்டு வர்றீங்க? சீக்கிரமாக வாங்க” என்ற நீலவேணியின் குரல் ஒலித்ததும், தான் பேசுவதை நிறுத்தி விட்டான் அபூர்வன்.
“இதைப் பத்தி அப்பறமாகப் பேசிக்கலாம்”எனத் தற்காலிகமாக இந்த விவாதத்தை நிறுத்தி விட்டு இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.
“முதல்ல ஜூஸ் குடிங்க. வாம்மா ஆரா உட்காரு. இனிமேல் நம்மக் கூட்டணி தான்”என்று மருமகளை வாஞ்சையுடன் அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டு அவளிடம் பழச்சாறு அடங்கிய தம்ளரைத் கொடுத்தார் நீலவேணி.
அதைப் பார்த்துப் புன்னகைத்த அபூர்வனும் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டு,
“அப்பா! நாம ரெண்டு பேரும் இனிமேல் ஒரு கூட்டணி ஆகிடலாம். இவங்களுக்கு டஃப் குடுக்கலாம்”என்று கலகலப்புடன் பேசினான்.
அப்போது ஆராவிடம் கண்ணைக் காட்டி விட்டுப் பெற்றோரிடம் தாங்கள் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் ஆரா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைக் கூறலானான்.
“அப்பா, அம்மா உங்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொண்டு வந்து இருக்கோம்! இங்கே வந்ததுக்கு அப்பறம் தான் அதைச் சொல்லனும்னு நினைச்சோம்”என்று அவன் அந்த விடயத்தைப் பற்றிக் கூறத் தொடங்கியதுமே ஆராவின் அருகில் சென்று அவளை எழுப்பி அவளது கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டான் அபூர்வன்.
தான் கர்ப்பம் ஆனதைத் தான் அவர்களிடம் கணவன் கூறப் போகிறான் என்பது தெரிந்ததும் அவனிடமிருந்து தன்னுடைய கைகளை விடுவித்துக் கொள்ளவில்லை ஆரா.
“என்ன விஷயம்?”என்று அவர்களிடம் ஆவலாக கேட்டார் நாச்சிமுத்து.
அதில் மெலிதானப் புன்னகையுடன் ஆராவைப் பார்த்தான் அபூர்வன்.
பிறகு அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு அவர்களது கால்களில் விழுந்தான்.
அதில் நெகிழ்ந்து போய்,”சந்தோஷமா இருங்க”என்று வாழ்த்தியவர்கள் என்ன விஷயம் என்பதைத் தெரிந்து கொள்ள அவா கொண்டனர்.
“சீக்கிரமே உங்களுக்குப் பேத்தியோ/ பேரனோ வரப் போறாங்க! ஆரா கர்ப்பமா இருக்காள்”என்றவுடனேயே,
நாச்சிமுத்துவும், நீலவேணியும் திடீரென்று கிடைத்த இந்த இன்ப அதிர்ச்சியில் பேச்சின்றி நின்றனர்.
நீலவேணியின் எதிரில் வந்து நின்று,
“இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானேம்மா?”என்று உணர்ச்சித் துடைத்தக் குரலில் கேட்டான் அபூர்வன்.
என்ன தான் அவர் தன் தவறை உணர்ந்து இருந்தாலும் அவரது ஊசிக் குத்தல் பேச்சால் எத்தனை நாட்கள் ஆராவை நினைத்து வருந்தி இருக்கிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்!
“அபூ!”எனத் தன் கணவனை அழுத்தமாக அழைத்தாள் ஆரா.
‘எதுவும் கூறாதே!’என்பதே அந்த அழுத்தத்திற்கானக் காரணம்!
ஆனால்,”ப்ளீஸ் ஆரா!”என்று அவளிடம் கெஞ்சி விட்டுத் தன் தாயிடம் பதில் வேண்டி நின்றான் அபூர்வன்.
தன் மனைவிக்கு உதவிக்கு வராமல் அமைதியாக நின்றார் நாச்சிமுத்து.
அவரும் தானே நீலவேணியின் வார்த்தைகளைக் கேட்டு இருக்கிறார்.
எனவே அபூர்வன் தன் மனதில் உறுத்திக் கொண்டு இருப்பதை எல்லாம் வெளிப்படுத்தட்டும் என்று அமைதியாக இருந்து விட்டார்.
“இவ எங்கிட்ட உங்க அம்மா இப்படி சொல்லிட்டாங்களேன்னு ஒரு வார்த்தை சொல்லி இப்போ வரைக்கும் சண்டையே போட்டது இல்லம்மா! ஆனால் எனக்குத் தான் கஷ்டமா இருந்துச்சு! எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி இருக்கறப்போ குழந்தை இல்லைன்னு இவளை மட்டும் திட்டினா எப்படி? நியாயமாகப் பார்த்தால் என்னையும் தானே நீங்க திட்டி இருக்கனும்?”என்றவனின் சொற்கள் யாவும் சரியானதாக இருக்கவே நீலவேணியும் கண்களில் நீர் துளிர்க்கப் பேசத் தொடங்கினார்.
“உண்மை தான் அபூர்வா! இவளை நான் திட்டிட்டே தானே இருந்தேன்? கல்யாணம் ஆன உடனேயே குழந்தை வரனும்ன்ற ஆசையில் தான் அப்படி சொன்னேன்! ஆனா அதையெல்லாம் கேட்டு இவ மனசு இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும்ன்றதை நினைக்கும் போது என்னால் நான் சொன்னதை ஏத்துக்கவே முடியலை! அதுவும் நீங்க வீட்டை விட்டுப் போன அப்போ இவரும் எனக்கு நிறைய எடுத்துச் சொன்னாரு! அப்போ தான் என் மருமகளைத் தேவையே இல்லாமல் திட்டிட்டு இருந்து இருக்கேன்னுப் புரிஞ்சுச்சு! ஆனால் நாம எல்லாரும் இவ்ளோ நாள் காத்திருந்தோமே அதனால் இந்தக் குழந்தை நம்ம எல்லாரோட மனக் கஷ்டத்தைப் போக்க வந்துருக்கு! நான் பேசினதுக்கு எல்லாம் என்னை மன்னிச்சிருங்க!”என்று அவர் கேட்பதற்குள் அபூர்வனும், ஆராவும் அவரை அடுத்துப் பேச விடாமல் கைகளைப் பற்றிக் கொண்டனர்.
“இல்லம்மா. விடுங்க. உங்க கிட்ட என்னோட ஆதங்கத்தைச் சொன்னேன்! அவ்ளோ தான்! மத்தபடி நாம எல்லாரும் இனிமேல் ஒன்னாகச் சந்தோஷமா வாழலாம்”என்று கூறித் தாயை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் வகையில் பேசி முடித்தான் அபூர்வன்.
“அவர் சொல்றதும் சரி தான் அத்தை. இந்தக் குழந்தை வந்த நேரம் எல்லாம் நல்லதே நடக்கும்”என்று தானும் மாமியாருக்கு ஆறுதல் அளித்தாள் ஆரா.
இதுவரை அமைதியாக இருந்து விட்டு இப்போது வாய் திறந்து,”வேணிம்மா! நம்ம மகனையும், மருமகளையும் பிரிஞ்சு இருந்தது போதும்! பேரக் குழந்தைக் கூட விளையாடனும்னு எனக்கு ஆசை வந்துருச்சு! அதனால் குழந்தைப் பிறந்ததும் அவன் கூட நாம பிஸி ஆகிடலாம்”என்று மனைவிக்கு அறிவுறுத்தினார் நாச்சிமுத்து.
“அது தான் சரிங்க. நான் சாப்பிட்ற வேலையைக் கவனிப்போம். அபூர்வா, ஆரா வாங்க. ஏங்க நீங்களும் வந்து உட்காருங்க. எல்லாரும் ஒன்னாக சேர்ந்து சாப்பிடுவோம்”என்று மூவரையும் உணவுண்ண அமரச் சொல்லி விட்டு அவர்களுக்கு உணவுப் பரிமாறினார்.
“ஆராம்மா! நீ மாசமாக இருக்கறது முன்னாடியே தெரிஞ்சு இருந்தால் உளுந்தங்களி செஞ்சு இருப்பேன்! நாளைக்குங் செஞ்சுத் தர்றேன்! இப்போ பாயாசம் செஞ்சு இருக்கேன் பாரும்மா. இதைக் குடிச்சிப் பாரு”என்று ஆராவிற்கு ஒரு தம்ளரில் பாயாசத்தை ஊற்றிக் கொடுத்தார் நீலவேணி.
அதேபோல் தங்கள் மூவருக்கும் தம்ளரில் பாயாசத்தை ஊற்றி வைத்தார்.
“பாயாசம் செம்ம டேஸ்ட் ஆக இருக்கு அத்தை”எனக் கூறி அதை ரசித்துக் குடித்து முடித்து விட்டு,
“நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க அத்தை”என அவரையும் உட்கார வைத்து நால்வரும் ஒன்றாக, மகிழ்ச்சியாக உணவருந்தி முடித்தனர்.
இரவு அறைக்குள் வந்ததும் தன் மனைவியை அணைத்தவாறே அமர்ந்து கொண்டான் அபூர்வன்.
அதில்,”அபூர்வன்”என ஆரம்பித்தவளது இதழுக்கு முத்தம் வைத்து விட்டு விலகிக் கொண்டு,
“அபூன்னுச் சொன்னியே? அதுக்குள்ளே அபூர்வன் ஆகிட்டேனா?”என்று அவளிடம் ஏக்கமாகக் கேட்க,
“அது அத்தை, மாமாவுக்காகக் கூப்பிட்டது! அவங்களுக்கு நம்ம விஷயம் எதுவும் தெரியக் கூடாது. அதே சமயம் நீங்க அதை அட்வாண்டேஜ் ஆக எடுத்துக்காதீங்க”என்று எச்சரிக்கை விடுப்பதைப் போல் பேசியவளது கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்து விடவும்,
“சரி, சரி. காரிகாவோட கதையைச் சொல்லு ஆரா பேபி. கேட்போம்”என அவளது எச்சரிக்கையை ஒரு பொருட்டாக கூட மதிக்காதவனைப் பார்த்து முறைத்தாள் அவனவள்.
“நீங்க கிண்டல் பண்றீங்கள்ல? நான் என்ன சொன்னாலும் அது உங்களுக்குப் புரியாமல் தான் போகப் போகுது! சரி! எப்படி வேணும்னாலும் கிண்டல் பண்ணிக்கோங்க! அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை! நான் .கதையைச் சொல்றேன். அதுக்கு அப்பறமும் நீங்கச் சந்தேகப்படாமல் இருக்கீங்களான்னுப் பார்க்கிறேன்”என்றவளது குரல் மென்மையாக இருந்தாலும் கூட அதில் அடிபட்ட வலி அப்பட்டமாக பிரதிபலித்ததை உணர்ந்து,
“நான் உன்னை எப்பவும் சந்தேகப்பட மாட்டேன் ஆரா! காரிகாவைப் பத்தி தெரிஞ்சுக்கனும்றது தான் என்னோட நோக்கம்! மத்தபடி என் பொண்டாட்டியைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்! நீ கதையை மட்டும் சொல்லு”எனத் தனது ள்ளத்தில் இருந்தவற்றை அப்படியே அவளிடம் வார்த்தை மாறாமல் அழுத்தமாக கூறி விட்டிருந்தான் அபூர்வன்.
“ஓகே; காரிகாவை அந்தப் பையன் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செஞ்சதை நினைச்சு அவ அவ்ளோ அழுதுட்டு இருக்கவும் எனக்குப் பார்க்கக் கஷ்டமாக இருந்துச்சு! என்னால் முடிஞ்ச அளவுக்குச் சமாதானம் செஞ்சுப் பார்த்தேன்! ஆனால் முடியல! அவ அவ்ளோ மன அழுத்தத்தில் இருந்தாள்! இப்படி இதையே யோசிச்சுட்டே இருக்கிறவளை என்னச் செஞ்சு சமாதானம் செய்யப் போறோம்ன்றது தெரியாமல் இருந்தேன்! இப்படி மனதளவில் பலவீனமாக இருக்கிறப் பொண்ணுத் தற்கொலை செய்துக்கவும் வாய்ப்பு இருக்கு! அதனால் அவ கூடவே இருந்து எல்லாத்தையும் எடுத்துச் சொன்னேன்!”என்றதும்,
அதைக் கேட்டு அபூர்வனுக்குமே அந்தப் பெண்ணின் மனநிலைரைப் பற்றிக் கவலையாகத் தான் இருந்தது. உடனேயே அவளது மனமும், உடலும் தனக்கு நடந்த அனர்த்தத்திலிருந்து விடுபட்டு விடுமா? ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் அந்தப் பெண் இன்னுமே உடைந்து போயிருந்து இருப்பாளே!
ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் இருந்த போதும் கூட அவளால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு தான் இருந்து இருந்து இருக்கிறாள்!
“ஒரு வழியாக அவளைச் சமாதானப்படுத்தி சாப்பிட வச்சுத் தூங்க வச்சேன்! ஆனால் எனக்குமே அந்த விஷயமும், அவளை நினைச்சும் ரொம்பக் கஷ்டமாக இருந்துச்சு”என்றளவது கைகள் தன்னிச்சையாக நடுங்க ஆரம்பித்து விட்டது.
அதைக் கவனித்து விட்டு மனைவியின் கைகளைப் பற்றி ஆதரவான அழுத்தத்தைக் கொடுத்தான் அபூர்வன்.
“அந்தப் பையன் மேலே போலீஸில் புகார் கொடுத்ததும் வேலைக்கு ஆகலை! அப்பறம் அதில் இருந்து அவ முழுசாக வெளிய வர்றதுக்கே ஒரு மாசம் ஆச்சு”என்று வருத்தத்துடன் மொழிந்த மனைவியிடம்,
“சரி ஆரா. அதுக்கு அப்பறம் எல்லாம் நல்லபடியாக தானே போச்சு?”எனக் கேட்க,
அதற்கு,’இல்லை’என்பதைப் போல் மறுப்பாகத் தலையசைத்து,
“போலீஸில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தது அவங்கப்பா, அம்மாவுக்குத் தெரிஞ்சு அவங்க இவளை எப்பவும் போல் துரதிர்ஷ்டம்ன்னுத் திட்டினாங்க”என்றவளுக்கு இப்போதும் அவை எல்லாம் தன் கண் முன்னால் நடப்பது போன்றதொரு உணர்வு இருந்தது.
காரிகாவின் சொந்தங்கள் யாவரும் கூடி இருந்த சபையில் தகாத வார்த்தைகளைப் பேசி அவளைக் கூசச் செய்து அவளது நிலையில் இருந்து ஒரு முறைக் கூட யோசித்துப் பார்க்காமல் மகளைப் படிக்க வைப்பது தங்கள் கடமை அவ்வளவே என்பதைப் போல் அங்கேயிருந்து சென்று விட்டனர் அவளது பெற்றோர்.
“கொடுமையான விஷயம் தான் ஆரா! அந்த நேரத்தில் தானே அவங்கப்பா, அம்மா அந்தப் பொண்ணுக் கூட இருந்து இருக்கனும்? அப்படி என்ன அவ்ளோ துரதிர்ஷ்டமானப் பொண்ணு அந்தக் காரிகா? சரி! இப்போ தான் அவளுக்குக் கல்யாணம் ஆகிருச்சே? தன்னோட ஹஸ்பண்ட் கிட்டே பேசி இதுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டி இருக்கலாமே? அவங்கப்பா, அம்மாவைக் கேள்விக் கேட்கச் சொல்லி இருக்கலாமே? அவருக்கு இதெல்லாம் தெரியுமா? அப்படி விஷயம் தெரிஞ்சிருந்தால் அதுக்கப்புறம் அவர் என்ன சொன்னார்? தன்னோட மனைவிக்காக என்ன முயற்சி எடுத்தார்?”எனக் காரிகாவின் கணவனைப் பற்றிய பேச்சை எடுத்தான் அபூர்வன்.
அதற்குள் தனது கண்களை சுழற்றி ஒரு கொட்டாவியை விட்டு, விட்டு,
“எனக்குத் தூக்கம் வருதே! நம்மக் குழந்தையும் தூங்கனும்! மீதிக் கதையை நாளைக்குச் சொல்றேன் அபூர்வன்”என்று அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி அபூர்வனை அழுத்திச் சொல்லும் குறும்புக்காரியின் நெற்றியில் இதழ் பதித்தவன் அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு உறங்கினான் அவளது கணவன்.
ஆனால் அடுத்த நாளே தனக்கு ஏற்படப் போகும் அதிர்ச்சியைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து இருந்தால் இப்படி நிம்மதியாக உறங்கி இருப்பானோ? என்பது சந்தேகம் தான்!
– தொடரும்

