விழி வழியே சரணடைந்தேன் -13

Loading

அத்தியாயம் 13

 

நித்யாவும் கனியும் மதிய உணவை பேசி கொண்டே சமைக்க காலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே வந்தாள் கனி. 

 

கதவை திறந்தவள் கணவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனோ அவளின் ஆச்சர்யத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விட்டு “ஐ மிஸ்ட் யூ சோ மச் கனி” என்றான். 

 

நித்யாவும் வெளியே வந்து விட கனி தான் அவனின் செயலில் நெளிந்து கொண்டிருந்தாள். 

 

“வீட்ல ஆள் இருக்கும் போது இப்படி தான் செய்வீங்களா?” என்று சிணுங்க “சாரி சிஸ்டர்” என்று நித்யாவை பார்த்து சொன்னவன் அவளின் காதுக்கருகில் “நேத்தே பேசிருந்தா அப்பவே முடிச்சிருப்பேன்” என்று கிசுகிசுத்தான். 

 

“பேசாம கைய கழுவிட்டு சாப்பிட வாங்க” என்றவள் அவசரமாக சமையலறைக்கு சென்று பொரியலை வதக்கி விட்டு அனைத்தையும் டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள். 

 

அவன் உணவு உண்ண அமர்ந்ததும் நித்யாவுடன் சாப்பிடலாம் என கனி காத்திருந்தாள். 

 

“சிஸ்டர் எத்தனை பேர் தான் இருக்கோம்.. தனி தனியா சாப்பிடுறதுக்கு பதில் ஒண்ணாவே சாப்பிடலாம்” என்றவன் அவர்களுக்கும் பரிமாறி விட்டே சாப்பிட ஆரம்பித்தான். 

 

அவனின் செயலில் சிறிதும் வெட்கம் இல்லை. பெரிய அலுவலகத்தை ஆளுபவன் எனும் திமிர் சிறிதும் இல்லை. நித்யாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது. கனியை விட அவன் தான் பார்த்து பார்த்து பரிமாறினான். சாப்பிட்டு முடிந்ததும் கீதன் கிளம்பவும் மாத்திரை எடுத்து வந்தாள் கனி. 

 

அதை உண்டவன் “நைட் பெரிய சர்ப்ரைஸ் இருக்கு” என்று கூறி விட்டு செல்ல முகம் சிவக்க நின்றாள் கனி. 

 

“போதும் போதும் அண்ணாவை சைட் அடிச்சது.. ஐம் சோ ஹேப்பி பார் யூ கனி.. ஆண்கள் என்றாலே இப்படி தான் இருப்பேன்னு இருக்குறவங்க மத்தியில் இப்படியும் சில நல்லவர்கள் இருக்க தான் செய்யுறாங்க.. எப்பவுமே ஹேப்பியா இரு” என்று சொல்லி விட்டு சிறிது நேரத்தில் அவள் கிளம்பி விட கனி தான் நைட் சர்ப்ரைசை குறித்து யோசித்து கொண்டிருந்தாள். 

 

 

“டாக்டர் ஹவ் இஸ் ஷி?” சித்தார்த்தின் பதட்ட குரலில் மருத்துவர் மென்மையாக சிரித்தார். 

 

“ஷி இஸ் ஆல்ரைட் சித்தார்த்.. இன்னும் சிறிது நேரத்தில் கான்ஷியஸ் வந்துடும்.. நீங்க கொடுத்த முதலுதவியும் நல்லது தான்” என்று கூறி மருந்துகளை எழுதி கொடுக்க பென்னிடம் அதை வாங்கி வர சொன்னான். 

 

தலை விண் விண்ணென்று வலிக்க மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள் கனிஷ்கா. தலையில் பாறாங்கல் வைத்து அழுத்தியது போல் இருந்தது. சுற்றிலும் கண்களை சுழற்றி பார்க்க சித்தார்த் அமர்ந்திருப்பது தெரிந்தது. 

 

“ம்ம்… ம்ம்ம்..” என்று முனக அந்த சத்தம் அவனை எட்டவே இல்லை.

 

“டேய்..” அவளின் சத்தம் சிறிது அவனை கலைக்க நிமிர்ந்து பார்த்தான்.

 

“கியூட்டி எழுந்திட்டியா?” என்று அருகில் வர வலித்த தலையை பிடித்தவாறு எழ முயற்சித்தாள். 

 

“சாரி கியூட்டி..” என்றவன் அவளின் கால் கட்டுகளை அவிழ்த்து விட “என்னை என்னடா பண்ணுன? எனக்கு வலிக்குது.. என் வீட்டுக்கு போகணும்” என்று கத்தியவளை சிறிதும் லட்சியம் செய்யாதவன் தன் அறைக்கு சென்று மடிக்கணினியை எடுத்து வர கனிஷ்கா முகம் வெளுக்க பார்த்தாள்.

 

கண்ணாடி அறைக்குள் வந்தவன் அவளை பார்த்தவாறே அதில் ஒரு பொத்தானை அழுத்த சட்டென அவளின் சத்தம் நின்றது. அவளின் கண்கள் எதையோ தேட கைகளில் இறுக்கம் வந்தது. 

 

“இதையா தேடுற?” என்று தன் கையில் இருந்த அவளின் பழைய ஆடையை கேட்க இல்லை என்றாள். 

 

“வேற என்ன தேடுற?” 

 

அவளின் செயலிலும் தேடலிலும் ஒரு நேர்த்தி இல்லாததை கண்டவன் அருகில் சென்று அவள் தோளை தொட புரியாமல் பார்த்தாள். பழைய கனிஷ்கா என்றால் இந்நேரம் ஒரு அறை விட்டிருப்பாள். 

 

“உன்னோட பெயர் என்ன?” 

 

அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் கண்களை ஆழ்ந்து நோக்கினாள் அவள். 

 

“ஹூரே.. வாவ்..” சித்தார்த்தின் சத்தம் அந்த அறை முழுவதும் பரவ பென் “சார்..” என்று அழைத்தான். 

 

வெளியே வந்த சித்தார்த் “பென் நாம சாதிச்சிட்டோம்.. அவ முழுசா என் கட்டுபாட்டிற்கு வந்துட்டாள்.. நாம சாதிச்சிட்டோம் மேன்” என்று கட்டியணைக்க பென் சந்தோஷத்தில் பூரித்தான். 

 

இது அவர்களின் பல வருட கனவு. அதை விட தவம் என்றே சொல்லலாம். எப்போதும் இறந்து போனவர்களின் மூளையில் சிப் பொருத்தி அவர்களை செயல் பட வைப்பவர்களுக்கு உயிரோடு இருப்பவர்களின் மூளையை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது ஒரு ஆசை. அதுவும் பேராசை. இன்று கனிஷ்காவின் மூலம் அது நடந்து விட சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் சித்தார்த். 

 

ஒருவரின் மூளையும் மனதும் சில நேரம் ஒரே மாதிரி யோசிக்கும். மூளை சொல்வதை மனம் மறுக்கும். மனம் சொல்வதை மூளை எதிர்க்கும். ஆனால் இரண்டும் ஒரே இடத்தில் செயல்படும். அவ்வளவு சீக்கிரம் ஒருவருடைய சிந்தனையை கலைத்திட முடியாது. சித்தார்த் இன்று கனிஷ்காவின் மூளையையே உறைய வைக்க முயற்சித்திருக்கிறான். அவனின் கையில் இருக்கும் மடிகணினி அந்த சிப்பை அவன் சொல்லும் படி யோசிக்க வைக்கும். அவன் ப்ரோக்ராம் பண்ணியதும் அப்படி தான். அவளின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அனைத்தும் அவனை சுற்றியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். 

 

இதற்கு பெயர் காதலா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வான். ஆனால் அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு எப்போதும் உண்டு. அவளின் வலியில் அவனின் நெஞ்சம் கசியும். அவள் அவனுக்கு வேண்டும். மொத்தமாக வேண்டும். அவளின் உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனின் வாசனை மட்டுமே இருக்க வேண்டும். அது காமமா காதலா என்னவென்றே பிரித்தறிய முடியாத உணர்வு. அவளை சுவாசிக்க விரும்புகிறான். அவளுடன் வாழ ஆசை படுகிறான். ஆனால் அது காதல் இல்லை என்பான். 

 

காதலுக்கு அவன் கொடுக்கும் விளக்கம் பெரிதல்ல. காதல் என்ற வார்த்தையை வெறுப்பவன் அவன். ஒரு பெண் காதல் என்று வந்து நின்றால் அவளை வைத்து உயிரோடு ஆராய்ச்சி செய்து விடுவான் அவன். பெண்கள் மீது அப்பேற்பட்ட நம்பிக்கை. ஆனால் இந்த பெண் மட்டும் என்ன ஸ்பெஷல் என்பது அவன் ஒருவனே அறிந்த உண்மை. 

 

தன் சந்தோஷத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியவன் பென்னிடம் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு கனிஷ்காவிடம் தான் சென்றான். அவளோ அவன் விட்டு சென்ற நிலையிலேயே இருந்தாள். அவளின் மூளை அவனை தவிர்த்து எதுவும் யோசிக்க மறுத்தது. இது சாத்தியமா என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. அவளின் மனத்திலும் மூளையிலும் ஒருவன் பெயர் மட்டுமே இருந்தது. அது சித்தார்த். இன்னொரு புறம் எதையோ யோசிக்க தூண்டியது. ஆனால் இப்போதைய நினைவுகளோ இவன் ஒருத்தனே போதும் என்று சொல்ல அவன் வந்ததும் மெலிதாக புன்னகைத்தாள்.

 

“கியூட்டிபை..” அவளின் கன்னத்தை கிள்ளியவன் பார்ட்டி உடைகளை எடுத்து கொடுத்து விட்டு வெளியே சென்றான். அரைமணி நேரம் கழித்து உள்ளே வந்தவனின் தோற்றத்தில் மெய் மறந்து நின்றாள் அவள். 

 

வைட் கலர் ஷர்ட் அதன் மேலே கருப்பு நிற கோட் அதற்கு தோதான பேன்ட் மற்றும் கழுத்தை ஒட்டிய மெல்லிய செயின், கையில் பிராண்டட் வாட்ச், வலது கையில் அவளுக்கு தேவையான சாப்பாடு என வர ஒன்றும் சொல்ல முடியாமல் பார்த்து கொண்டே நின்றாள். 

 

“அங்க நிறைய பேச வேண்டி இருக்கும்.. அதுவரைக்கும் தாங்க சாப்பாடு தேவை” என்றவன் ஸ்பூனால் ஊட்டி விட தான் பாதி அணிந்திருந்த உடையில் இருக்கிறோம் என்பதை மறந்து வாயை திறந்தாள். 

 

அவனோ ஊட்டுவதில் மட்டுமே குறியாக இருப்பதை போல் காட்டி கொண்டான். ஆனால் பார்வையோ அவளின் அசைவுகளை பார்த்து கொண்டது. ஓயாமல் பேசி கொண்டே சாப்பிட்ட அவளும் அவனுக்கு புதிது. இப்போது அவன் என்ன செய்தாலும் அவள் மறுப்பு சொல்ல போவதில்லை. ஆனால் பார்ட்டி இருப்பதால் அடக்கி வாசித்தவன் அவள் உணவு உண்டு முடித்ததும் தட்டை கொண்டு வெளியேறினான். கனிஷ்காவும் ஆடையணிந்து முடியவும் அவசரமாக உள்ளே நுழைந்தான் சித்தார்த். 

 

“கியூட்டி இன்னைக்கு நடக்க போறது என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான விஷயம்.. அதனால் அங்க என்ன நடந்தாலும் என்ன பேசினாலும் உன் நினைவில் நான் மட்டும் தான் இருக்கணும்.. ஓகே.. எதையும் யோசிக்க கூடாது” என்றவன் அவளின் இதழை ஒற்றி விட்டு செல்ல அவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட பெண்ணாக அவனின் பின் சென்றாள். 

 

*************

 

“ஏலே என் பையன் செத்து போனதும் உன் திமிரை காட்டுற இல்ல.. இன்னைக்கு நானா நீயான்னு பாத்துடலாம்” என்று மங்களம் தலைமுடியை இழுத்து சொருகி விட்டு சண்டைக்கு செல்ல அவரை தூசாக கூட மதிக்காமல் நின்றார் அந்த மனிதர்.

 

“இங்க பாருங்கம்மா.. பேங்க்ல லோன் எடுத்து வீட்டை கட்டினா மட்டும் போதாது.. அதை திருப்பி கொடுக்கணும்.. இல்லன்னா இப்படி தான் பண்ணுவாங்க.. அது தான் ஓட்டு வீடு ஒன்னு இருக்கே.. இதை நாங்க ஜப்தி பண்ணிக்குறோம்” என்று வந்தவர் கூற தலையில் அடித்து கொண்டு கத்தினார் மங்களம். 

 

மகன் வேலு இருந்த வரை அவன் பணம் கொடுக்க இப்போது வருமானம் இல்லாமல் பேங்க் லோன் அடைக்க தடை பட்டு விட்டது. வீட்டை பேங்க் எடுத்து கொள்ள தன் ஓட்டு வீட்டிற்கே புலம்பி கொண்டு சென்றார். 

 

போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் கேவலமாக பார்க்க அவமானம் தாங்க முடியாமல் கனிஷ்காவின் தந்தை வீட்டிற்கு சென்றார். 

 

“உம் பொண்ணு எவன் கூடவோ ஓடி போனதுக்கு என் மவன் செத்தான்.. இப்போ என் வீடும் போச்சு.. நீ எல்லாம் நல்லா இருப்பியா?” 

 

அவரின் கத்தல் கனிஷ்காவின் தந்தைக்கு குத்தியது. தன் பெண்ணால் தானே இவ்வளவும் என்றவர் “சம்மந்தி உங்க வீட்டுக்கு தேவையான பணத்தை என் வீட்டை வித்தாவது தரேன்.. இப்போ அமைதியா போங்க” என்று கெஞ்ச “இன்னும் ரெண்டு நாளைல என் வீடு தேடி பணம் வரணும்.. இல்ல உன் வீட்ல நீ நிம்மதியா இருக்க மாட்ட பாத்துக்கோ” என்று கத்தி விட்டு சென்றார் மங்களம்.

 

இதுவரை பெண் ஓடி போய் விட்டாள் என்று கேலியாக பார்த்த மக்கள் இன்று இன்னும் அருவருப்பாக பார்க்க அந்த அவமானமே அவரை சாகடித்தது. அடுத்த இரண்டு நாளில் வீட்டை விற்று கிடைத்த பணத்தை மங்களத்திடம் கொடுத்தவர் தன் மனைவி பிள்ளைகளுடன் பெங்களூர் சென்று விட்டார். 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்