
அத்தியாயம் 12
நாட்டில் குற்றத்திற்கா குறைச்சல்? உடல் உறுப்புகளை திருடுவது, இரத்தத்தை விற்பனை செய்வது, மருத்துவ ஊழல், பொருளாதார ஊழல், களவு, கொலை என பல அதன்போக்கில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதை நிறுத்த எவ்வளவு தான் முயற்சி எடுத்தாலும் பலன் பூச்சியம் தான். தண்டனைகள் அதிகமாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். ஆனால் தண்டனையே குறைவு எனும் போது குற்றங்கள் எப்படி குறையும்? தைரியமாக செய்ய தான் தோன்றும்.
வில்சன் உடல் உறுப்புகளை திருடுபவன். அனைவரும் தான் இறந்த பிறகு கண் தானம் செய்வார்கள். உடல் மற்ற பாகங்களை இன்னொரு மனிதனின் உடலில் வாழ சம்மதம் சொல்வார்கள். ஆனால் வில்சன் அவர்களுக்கு சாவின் கோரத்தை காட்டி விட்டு உறுப்புகளை எடுத்து கொள்வான். இத்தனை வருடங்களில் வெளியில் விஞ்ஞானி வேஷம் போடுபவன் செய்யும் முதல் தொழில் இது தான். சித்தார்த் மனிதர்களை இறந்த பின் பயன்படுத்துவான். இருவருக்குமான வித்தியாசம் இவ்வளவு தான். ஆனால் சித்தார்த் என்னதான் திருட்டு வேலை செய்தாலும் பெண்கள் விஷயத்தில் நெருப்பு தான். வில்சன் மாதிரி போகும் இடத்தில் எல்லாம் பாயமாட்டான்.
சித்தார்த் தனது அறையில் இருந்து கண்ணாடி அறையின் கேமரா புட்டேஜ் பார்த்து கொண்டிருந்தான். அங்கு ஒரு கட்டிலில் கனிஷ்கா படுக்க வைக்க பட்டிருக்க சுற்றிலும் மருத்துவ உபகரணங்கள் அவளை சூழ்ந்திருந்தது. அவளுக்கு சிப் பொருத்தி இரண்டு நாட்கள் ஆகின்றன. நேரடியாக தலையில் அறுவை சிகிட்சை செய்து பொருத்தியதால் அவளுக்கு இன்னும் சுயநினைவு வரவில்லை. அவனும் இரண்டு நாள் பொறுத்து பார்த்து விட்டான். ஏதோ அவளின் இந்த மௌனம் அவனுக்கு பிடிக்கவில்லை. அவளுடன் சண்டையாவது போட்டு கொண்டிருக்க வேண்டும் என மனம் ஏங்கியது.
அந்நேரம் பென் மருத்துவரை அழைத்து வர கண்ணாடி அறைக்குள் அவருடன் சென்றான் சித்தார்த்.
“அவளுக்கு ஏன் இன்னும் கான்ஷியஸ் வரல டாக்டர்?”
“இந்நேரத்திற்கு வந்திருக்கணும் சித்தார்த்.. எனக்குமே ஹாஸ்பிட்டல் அட்மிட் பண்ணலாமான்னு தோணுது” என்று கூற மறுத்தான் சித்தார்த்.
“இன்னும் அவளுக்கு இந்த நாட்டின் சிட்டிசன் அதிகாரம் கிடைக்கல.. இப்போ வெளில கொண்டு போனா ரிஸ்க்.. இங்கேயே ட்ரீட்மெண்ட் பண்ணலாம்” என்று கூற “இன்னும் ஒரு நாள் வெயிட் பண்லாம் சித்தார்த்.. அதுக்கு அப்புறமும் கான்ஷியஸ் வரலன்னா அடுத்து யோசிக்கலாம்” என்று கூறிவிட்டு அவளை செக் செய்து விட்டு சென்றார்.
யோசனையுடன் அமர்ந்து விட்டான் சித்தார்த். அவனுக்கு அவளின் பழைய நினைவுகளோடு வாழ விருப்பம் இல்லை. அந்த நினைவுகளில் இவனுக்கு சிறிதும் இடம் இருக்காது. எனவே தான் அவனின் நினைவை மட்டும் அவளுக்குள் புகுத்த சிப் அவளுக்குள் பொருத்தினான். ஆனால் இப்போதைய அவளின் நிலை கொஞ்சம் பதட்டத்தை கொடுத்தது.
“கியூட்டி ஐ நீட் யூ பேட்லி.. எப்போ கண் முழிச்சு பார்ப்ப?” என்று கேட்க அவனின் பாசத்தை புரிந்து கொள்ள அவள் நல்ல நிலையில் இல்லை.
“சார் கேசவன் காலிங்..” என்று பென் சொல்ல வாங்கி பேசினான்.
“சார் ஒன் பேட் நியூஸ்.. வேலு இஸ் டெட்..” என்று கூற “வாட்?” என்று அதிர்ந்த சித்தார்த்தின் இன்னொரு மனம் சந்தோஷத்தில் குதித்து கொண்டிருந்தது.
“எப்படி ஆச்சு?”
“கிடைச்ச பணத்தில் மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்திருக்கான்.. லாரி அடிச்சிட்டு போயிடுச்சு.. ஸ்பாட் அவுட்”
“அவங்க வீட்ல என்ன நிலைமை? அவனுக்கு கொடுத்த பணம் எல்லாம் என்ன ஆச்சு? அவனை தொடர்ந்து கண்காணிச்சிட்டு தானே இருந்த?”
சித்தார்த் கேட்க “எஸ் சார்.. மிச்சம் இருந்த பணத்தை எடுத்துட்டோம்.. ஜார்ஜ் சார்கிட்ட குடுத்துட்டேன்.. வாட் நெக்ஸ்ட் சார்?” என்று கேட்டான்.
“நத்திங் கேசவ்.. இனி கனிஷ்கான்னு ஒருத்தியையே அவங்க மறந்துடுவாங்க” என்று சிரித்தவன் தன் அருகில் படுத்திருந்த கனிஷ்காவை பார்த்தான்.
“கியூட்டி நீ அவனை விரும்பல தானே? நீ அவனை விரும்பியிருந்தாலும் இனி உனக்கு நான் மட்டும் தான்” என்றவன் பென்னிடம் “வேலு இஸ் டெட்.. நீ நம்ம வேலைக்கு வேற ஆள் தேடு.. பட் குடும்ப பெண் வேண்டாம்” என்று கூற பென் வெளியேறினான்.
சித்தார்த் மட்டும் அதே அறையில் அவளின் அருகில் காத்து கொண்டிருந்தான். இதுவரை தோன்றாத ஒரு ஏக்கம் இவளின் மீது மட்டும் வர அவளுக்காக தவமிருந்தான். வெளியுலகத்துக்கு நல்லவன் வேஷம் போட்டாலும் பலபேரின் சாபத்தை பெற்று கொண்டவன் தான். அத்தனை சாபங்களும் ஒரே நேரத்தில் பலித்ததோ இன்னும் அவன் மனம் விரும்பிய பெண் அவன் முன்னே சிறிதும் உணர்ச்சியில்லாமல் கிடக்கிறாள். ஒருவேளை அவளே வாழ விரும்பவில்லையோ? யோசிக்க யோசிக்க அவனுக்கு தலை வலி தான் மிஞ்சியது.
என்னவாக இருந்தாலும் இனி அவள் அவனின் பொறுப்பு. இந்த நாட்டை விட்டு வெளியேற விட மாட்டான். அவளை விட்டு கொடுக்கவும் மாட்டான். அவனின் மனகுமுறல் அவளை எட்டியதோ கனிஷ்காவின் உடல் தூக்கி தூக்கி போட்டது.
“பென் கால் தி டாக்டர்..” என்று கத்தியவன் சிறிதும் தாமதிக்காமல் அவளுக்கு முதலுதவி அளிக்க தொடங்கினான்.
____________
காலையில் கீதனுடன் அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தாள் கனி. இந்த ஒரு மாதத்தில் தன் படிப்பிற்கு மொத்தமாக விடை கொடுத்து கீதனுக்கு உதவி கொண்டிருக்கிறாள். ஆரம்பத்தில் அவனும் படிப்பு முக்கியம் என்று சொல்லி பார்த்து விட்டான். கனி தொழில் முக்கியம் என்று வாதாடியதால் கடந்த ஒரு மாதமாக அவனுடன் தொழில் கற்று வருகிறாள்.
“சாப்பாடு எல்லாம் எடுத்து வச்சாச்சா? கிளம்பலாமா?” என்று கேட்டு கொண்டே வந்தான் கீதன்.
மெரூன் கலர் பார்மல் ஷர்ட் மற்றும் கருநீல நிற பேன்ட் அவனை இன்னும் அழகாக காட்ட வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள் கனி. அதை ரசித்தவாறே அருகில் வந்தவன் அவளின் இதழில் முத்தமிட்டு விட்டு “இப்படியே பார்த்துட்டு நின்னா ஆபீஸ் நம்ம வீட்டுக்கு வராதுமா” என்று கூற வெட்க சிரிப்புடன் அவனுடன் சென்றாள் கனி.
அலுவலகம் வரும் வரை கனி ஏதோ யோசனையிலேயே இருந்தாள். கீதன் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தான். அவள் யோசித்தாலே வில்லங்கம் தான். ஆனால் வீட்டிற்கு வந்த பின் கேட்டு கொள்ளலாம் என்று நினைத்து விட அவளே ஆரம்பித்தாள்.
“ஏங்க..”
“என்னமா?” அதற்குள் அலுவலகம் வந்துவிட பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு அவள் புறம் சரிந்தான்.
அவனை பார்த்து முறைக்கவும் “சொல்ல வந்ததை சொல்லி முடி..” என்றான்.
“நாம இன்னைக்கு கோவிலுக்கு போகலாமா?”
“போகலாமே.. ஈவினிங் கூட்டிட்டு போறேன்”
“சரிங்க” என்று அமைதியாகி விட கீதனுக்கு அவள் ஏதோ செய்ய போகிறாள் என மட்டும் புரிந்தது. அன்று அலுவலகத்தில் கொஞ்சம் அதிக வேலையால் கீதன் கிளம்ப தாமதம் ஆகி விட கனி அவனின் முன் காளி அவதாரம் எடுத்திருந்தாள்.
“சாரிமா.. வெளிநாடுல எக்ஸ்போர்ட் பண்ணுற விஷயத்தை பற்றி கொஞ்சம் டீடைல்ஸ் எக்ஸ்பிளனேஷன் கொடுக்க வேண்டி இருந்தது.. அந்த மீட்டிங்ல லேட் ஆகிடுச்சு” என மன்னிப்பு வேண்ட கனி சிறிதும் இறங்கவில்லை.
“எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா? உங்களை நம்பி என்ன ஒழுங்கா நடந்திருக்கு..” என்று கத்தி விட்டு செல்ல கீதன் தான் ஒன்றும் புரியாமல் நின்றான்.
கோவிலுக்கு போகும் சின்ன விசயத்திற்கு எதற்கு இவ்ளோ கோபம் என்று அவளை சமாதானப்படுத்த சமைத்ததும் வீண் தான் ஆனது. அவள் சாப்பிடாமல் என்றைக்கு அவன் சாப்பிட்டிருக்கிறான்? அனைத்தையும் ப்ரிட்ஜில் எடுத்து வைத்து விட்டு வரவும் கனி தூங்கியிருந்தாள்.
எப்போதும் அவனுக்கு மாத்திரை எல்லாம் எடுத்து கொடுத்துவிட்டு அவன் தூங்கிய பின் தான் உறங்குவாள். இன்று அவளின் செய்கை வித்தியாசமாக பட அவனும் அவளை அணைத்து கொண்டே உறங்கினான்.
அடுத்த நாள் காலையில் கனியை பார்க்க அவளின் கல்லூரி தோழி நித்யா வந்திருந்தாள். கீதன் சீக்கிரமே கிளம்பி விட கனி அன்று விடுப்பு எடுத்து வீட்டில் தான் இருந்தாள். நித்யாவை பார்த்ததும் கனிக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“ஹே வா நித்து வாட் அ சர்ப்ரைஸ்?” என்று அவளை அணைக்க நித்யாவும் அவளை அணைத்து கொண்டாள்.
அவளுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்தவள் “என்னடி நீ மட்டும் தனியா வந்திருக்க.. உன் எழில் மாமா வரலையா? எப்போ கல்யாணம் ஆச்சு? சொல்லவே இல்ல” என்று பேச நித்யா அமைதியாக இருந்தாள்.
“என்னாச்சு நித்து? உன் பேச்சுக்கு இப்போ என்னை திருப்பி கலாய்ச்சிருப்பியே”
ஒரு வெறும் புன்னைகையே பதிலாக கிடைத்தது. “நீ எப்படி இருக்க கனி?”
“பார்த்தா தெரியலையா.. மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று கூற எழுந்த நித்யா வெளியில் சென்று ஒருவன் கைப்பற்றி உள்ளே அழைத்து வந்தாள்.
வந்தவனை பார்த்ததும் அதிர்ந்து எழுந்து விட்டாள் கனி. “நீ.. நீ எப்படி இங்க?” என்று திணற “என் ஹஸ்பண்ட் ரிஷி” என்றாள் நித்யா.
“வாட்?” கனிக்கு பேச்சே வரவில்லை. கல்லூரி தொடங்கிய நாளில் இருந்து நித்யா எழில் மாமா என்று பேசாத நாளில்லை. அப்படி பட்டவள் இன்று ரிஷியை திருமணம் செய்யும் அளவிற்கு என்ன கட்டாயம் வந்தது?
“ஏண்டி? எழில் கூட கல்யாணம் என்ன ஆச்சு?”
“நினைச்சது எல்லாம் நடக்கணும்னு எதிர்பார்த்தால் இங்க எல்லாருமே சந்தோசமா தான் இருப்பாங்க கனி.. எழில் மாமாக்கும் எனக்கும் கல்யாணம்னு முடிவு பண்ணுன அன்னைக்கு என் மாமாவோட முறைபொண்ணு சௌந்தர்யா விஷம் குடிச்சிட்டா.. கேட்டதுக்கு எழில் இல்லனா செத்துடுவேன்னு அங்கேயே தன் கையை அறுக்க போயிட்டா.. கடைசியில் அவள் காதல் தான் வின் பண்ணுச்சு.. எங்க ரெண்டு பேர் காதலையும் மனசுக்குள் புதைச்சிட்டு எழில் மாமா அவளையும் நான் ரிஷியையும் கல்யாணம் பண்ண வேண்டிய சூழல்” அவளின் குரலில் இன்னும் காதலின் வலி தெரிந்தது.
“ரிஷியை எப்படி?” என்று கனி கேட்க “பேமிலி பிரண்ட் பையன்” என்று கூறினாள்.
ரிஷி அமைதியாக நின்றான். கனிமொழியின் நிலையை அவனால் நேரில் பார்க்க முடியவில்லை. என்னதான் அவன் இப்போது அவளை நல்ல நிலமையில் பார்த்திருந்தாலும் அவனின் காதல் கைகூடாமல் போனது வலிக்க தான் செய்தது.
நித்யாவை பார்த்தவன் “பேசிட்டு கூப்பிடு நித்து.. வந்து கூட்டிட்டு போறேன்” என்று கூறி விட்டு வெளியேறினான்.

