Loading

“அவ யாருமில்லாம தனியா நின்னத நீங்கப் பார்த்தீங்கத் தானே! சின்ன வயசுலருந்து அவளை எனக்குத் தெரியும்ப்பா. அப்பா அம்மா தாத்தானு எல்லாருமே அவளுக்குச் சந்தோஷம் மட்டுமே கொடுத்து வளர்த்தாங்க. கஷ்ட நஷ்டம் தெரியாம வளர்ந்த பொண்ணு. அதனாலேயே ரொம்ப சின்னப்பிள்ளதனமா தான் நடந்துப்பா! அப்படிபட்டவ யாருமில்லாம அனாதை போல நின்னதைப் பார்த்தப்ப என் நெஞ்சே வெடிச்சிடும்ன்ற அளவுக்கு வலிச்சிதுப்பா! எனக்கே அப்படி இருந்துச்சுனா அந்தச் சூழ்நிலைல அவளோட வலி எப்படிபட்டதா இருந்திருக்கும்னு யோசிங்க” கண்களில் கவலையைத் தேக்கி பேசியிருந்த பவானியையே பார்த்திருந்த நந்தன்,

 

“உன்னைப் போல ஃப்ரண்டு கிடைக்க அவ கொடுத்து வச்சிருக்கனும் வனிமா” உணர்ந்து கூறினான்.

 

“ம்ப்ச் இல்லப்பா! அவ சந்தோஷமா நல்லா வாழுறதுல தான் எந்த மாதிரி ஃப்ர்ண்ட்டா அவளுக்கு நான் இருந்திருக்கேன்றது தெரிய வரும். அவளோட நல்வாழ்வு தான் இப்ப எனக்கு முக்கியம். என் குடும்பமோ உங்க குடும்பமோ நமக்கு எந்தவித இடைஞ்சலும் தராம உங்க வாழ்க்கை என்னமோ செய்யுங்கனு நம்மளை விட்டுட்டாங்க! எனக்கு இப்ப உங்க அனுமதி மட்டும் தான் வேணும். நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியாவது இவ கல்யாணத்தை நடத்தனும். அதுக்கு உங்க உதவி வேணும்ப்பா” அவனின் கைப்பற்றிக் கெஞ்சுதலாய் உரைத்தாள்.

 

“என் பொண்டாட்டிக்கு நான் ஹெல்ப் செய்யாம யாரு செய்வாங்களாமா?” அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவாறு அவனுரைக்க, மன நிறைவாய் புன்னகைத்தாள் பவானி.

 

அதன் பிறகு இருவருமாய் அவர்களின் எதிர்கால வாழ்வை பற்றிய திட்டமிடலில் சில மணி நேரத்தை செலவழித்த பின்னரே அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

 

****

 

அலைக்கடலருகில் மணற்பரப்பில் திருமண மேடை போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 

முழுவதுமாய் வெள்ளையும் பிங்க் நிற ரோஜா பூக்களைக் கொண்டு அவ்விடம் அலங்கரிக்கப்பட்டிருத்தது.

 

மேடையில் மத்தியமாய் இதய வடிவின் இடையில் நித்திலன் நிவாசினி எனப் பெயர்கள் வடிவமைக்கப்பட்டிருக்க,

அதே பிங்க் மற்றும் வெள்ளை நிறத்திலான தாவணி அமைப்பிலான அந்த உடையில், கோர்ட் சூட்டுடன் மேடையில் நின்றிருந்த நித்திலனின் அருகில் வந்து நின்றாள் நிவாசினி.

 

வரவேற்பு நிகழ்வு ஆரம்பமாக, இருவரிடமும் மாலை கொடுத்து மற்றவருக்கு அணிவிக்கக் கூறினார் அந்த முதியவர்.

 

நிவாசினிக்கு சற்றாய் உறக்கம் கலைந்தாலும் கனவு கலையாதிருக்க, விழிப்பிலிருந்த அவளின் மூளை, ‘அது தாத்தா தானே’ எனக் கேள்வியெழுப்ப, கனவிலேயே அவள் அவரை உற்று நோக்க, மீண்டுமாய் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றாள் அவள்.

 

அந்த முதியவரின் கையிலிருந்த மாலையை இருவரும் வாங்கிக் கொண்டு மற்றவருக்கு அணிவிக்க, அங்கிருந்த அனைவரும் கரவொலியெழுப்பினர்.

 

அந்த முதியவர் நிவாசினியின் முகம் பற்றி நெற்றியில் முத்தமிட, அவளின் மூளை, ‘இது தாத்தாவே தான்’ என அடித்துக் கூறியது.

 

“என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்க எனக்கும் உரிமை இருக்காக்கும்” எனக் கூறிய நித்திலன் அவளிடை பற்றித் தன்னருகே இழுத்து நெற்றியில் முத்தமிட, அவள் நாணத்தில் தலை கவிழ, அங்கிருந்த அனைவரும் ஓ வெனக் கடலலைக்கு நிகராய் ஆர்ப்பரிக்க, அந்த முதியவர் முகம் விகசிக்கச் சிரித்திருந்தார்.

 

அவள் தனது முகத்தைச் சற்றாய் நிமிர்த்திப் பார்க்க, அங்கே காண கிடைத்தது அவனது வலது கண்ணிற்கு நேராய் சற்று கீழே கன்னத்தில் ஒரு மச்சம். அம்மச்சத்திலேயே அவளின் பார்வை தேங்கி நிற்க,

 

“முத்தம் கொடுக்கனும்னு ஆசையா இருந்தா இப்பவே கொடுக்கலாம் ஹனி! நான் ஒன்னும் உன்னை மாதிரி வெட்கப்படலாம் மாட்டேன்” குறும்பாய் கண் சிமிட்டி அவள் விழி நோக்கி அவன் கூறவும் வெட்க முகத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

 

அந்த வெட்கத்தின் பூரிப்பில் கன்னம் சிவக்க கண் விழித்த நிவாசினிக்கு வெகு பரவசமாய் இருந்தது அந்த விடியல்.

 

அதன்பின்பு தான் கனவில் கண்டதை பவானியிடம் உரைத்திருந்தாள் நிவாசினி.

 

“தாத்தாக்கு இந்தக் கல்யாணத்துல பரிபூரணச் சம்மதம்னு இந்தக் கனவு மூலமா தெரியுதுடி” தாத்தாவின் ஆசி இத்திருமணத்திற்குக் கிடைத்து விட்டதாய் எண்ணிப் பூரிப்பாய் அவள் உரைத்திருந்தாள்.

 

“தாத்தா ஆசி வழங்குறது இருக்கட்டும். நீ கட்டிக்க ஆசைபடுற ஆளு முதல்ல ஒத்துக்கனுமே! உன்னோட அடி மனசு ஆசைகள் தான் இப்படிக் கனவா வருது நிவாசினி! ரொம்ப எக்ஸ்பெக்டேஷன் வச்சிக்காதமா. பின்னாடி அது நடக்கலைனா மனசொடஞ்சி போய்டும்டி” ஆதுரமாய் அவளின் தலை கோதியவாறு கூறினாள் பவானி.

 

“இல்லை பவா! இது கண்டிப்பா என் ஆசைனால வர்ற கனவு இல்ல! எனக்கும் நித்தலனுக்கும் ஏதோ முன் ஜென்ம பந்தம் இருக்கு. இது எனக்காக என் தாத்தாவும் முருகனும் செய்ற செயல். அதனால கண்டிப்பா அவருக்கு என்னை பிடிக்கும். நீ ஒன்னும் குழப்பிக்காத” பவானிக்கு இவள் ஆறுதல் உரைக்க,

 

“சரி இந்தக் கனவை பத்தி நீ யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு. கல்யாணத்துக்குப் பிறகு நித்திலன்கிட்ட கூடச் சொல்ல வேண்டாம். ஏதோ உனக்கு மனநோய் இருந்ததா நினைச்சிடப் போறாங்க! நான் நந்தா கிட்ட கூட உன் கனவு பத்திலாம் எதுவும் சொல்லாம எஃப் எம்ல கேட்ட குரல் வச்சி உனக்குப் பிடிச்சிடுச்சு ஒரு முறை நேர்ல பார்த்திருக்கேனு தான் சொல்லிருக்கேன்” என்றவளாய் அவளிடம் சத்தியம் வாங்கினாள் பவானி.

 

“உன்னோட கவலை எனக்குப் புரியுது பவிமா. கண்டிப்பா இந்தக் கனவைப் பத்தி யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன். போதுமா” நிவாசினி கூறியதும் சற்று ஆசுவாசமான பவானி,

 

“இவளை முதல்ல ஒரு சைக்காட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போகனும்” என மனத்தில் எண்ணிக் கொண்டாள்.

 

*****

 

அவள் வழமையாய்ச் செல்லும் முருகன் கோவிலில் கண் மூடி தியானத்தில் அமர்ந்திருந்தாள் நிவாசினி.

 

அவள் மனமெங்கிலும் நித்திலனின் உருவமே ஊர்வலம் போக, முருகனில் நிலைக்கொள்ள வேண்டிய மனத்தை எவ்வளவு இழுத்துப் பிடித்தாலும் அது நித்திலனிடமே சென்று நின்றது.

 

மனத்தின் அலைபுறுதலில் நெற்றிச் சுருங்க கண்களைத் திறந்தவளின் எதிரில் புன்னகையுடன் அவளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் நித்திலன்.

 

‘தான் கனவு காண்கிறோமா?’ என கண்களைக் கசக்கி விட்டு திகைப்புடன் பார்த்தாள்.

 

தனது மனத்தின் எண்ண அலைகளால் தான் அவனின் உருவம் தனக்குத் தெரிகிறதென எண்ணி தலையை உலுக்கி விட்டு மீண்டுமாய் கண்களை மூடியவளின் மனமோ தற்போது தான் கண்ட உருவத்தை மனக்கண்ணில் காண்பிக்க,

 

‘கனவுல எப்பவுமே அவருக்குத் தலைல சுருளையா அடர்த்தியா முடி இருக்குமே! ஆனா இப்ப பார்த்த உருவத்துல மண்டை லேசா தெரியுற அளவுக்கு முடி குறைவா இருந்துச்சே!’ என்ற எண்ணம் தோன்றிய நொடி,

 

‘அப்ப அவரை நிஜமா நேர்ல தான் பார்த்தோமா?’ என அதிர்ந்து மீண்டுமாய்க் கண்களைத் திறந்து பார்த்தாள்.

 

அதே புன்சிரிப்புடன் அவளைப் பார்த்திருந்தான் நித்திலன்.

 

அவளது கண்கள் அவனின் தலைமுடியில் ஆரம்பித்து அவனது கன்னத்திலிருந்த மச்சத்தினைத் தொட்டு அவன் கைகளிலிருந்த, நிநி என்ற டாட்டூவில் நிலைக்கொண்ட சமயம், அவள் காண்பது கனவில்லை, நிஜமெனப் புரிந்தது.

 

ஆயினும் ஊர்ஜிதம் செய்து கொள்ளத் தனது கைகளைக் கிள்ளிப் பார்த்தவள், “ஆஆஆ” என அலறியவளாய் ‘வலிக்குதே அப்ப உண்மை தான்’ மனத்தோடு எண்ணியவாறு அவனை அவள் பார்த்திருக்க, அவளின் இந்தச் செய்கையில் வாய்விட்டுச் சிரித்திருந்தான் நித்திலன்.

 

அவனின் அச்சிரிப்பை ரசித்துப் பார்த்திருந்தாள் அவள்.

 

 

“எவ்ளோ நேரமா இப்படியே என்னை சைட் அடிக்கிறதா ப்ளான்?” சிரித்தவாறு அவளைப் பார்த்துக் கேட்டான்.

 

அவனின் இக்கேள்வியில் தன்னிலைப் பெற்றவளாய், ‘அய்யோ இப்படியா பார்த்து வைப்ப ஹாசினி’ என மனத்திற்குள் தன்னை திட்டிக் கொண்டவளாய் சங்கோஜ முகப் பாவனையுடன் புன்னகைத்தாள்.

 

அவளின் இந்த அசௌகரியத்தைப் போக்க எண்ணியவன், “ஓகே ஜஸ்ட் ரிலாக்ஸ். நான் ஒன்னும் உங்களைத் தப்பா நினைக்கலை!” எனக் கூறி அவளை மேலும் அவளை சங்கோஜப் படுத்தியவன்,

 

“உங்க உடம்பு இப்ப எப்படி இருக்கு?” அவளின் நலனை அறிய எண்ணி கேட்டான்.

 

“அன்னிக்கு என்னை யாரோ தெரியாத ஆளு போலத் தானே பார்த்தீங்க! இப்ப மட்டும் என்ன அக்கறை?” அவளை மீறி வந்திருந்தது இந்த வார்த்தைகள்.

 

அவளின் மனம் அவனை அவளுக்கு வெகு நெருக்கமானவனாய் உணர்த்தியதனால் வந்த சொற்கள் இவை.

 

அவளின் இந்த உரிமையான பேச்சில் மகிழ்வுற்றவன், “சாரிங்க! அன்னிக்கு அண்ணன் அண்ணி கூட இருந்தாங்க. அவங்க முன்னாடி நான் எந்தப் பொண்ணுகிட்ட பேசினாலும் உடனே அவங்க அந்தப் பொண்ணுக்கு என்னைக் கட்டி வைக்க ப்ளான் பண்ணுவாங்க. பாவம் அவங்களையும் குறை சொல்ல முடியாது. எப்படியாவது எனக்குக் கல்யாணம் செஞ்சி வைக்கனுமேன்ற கவலை அவங்களுக்கு” என்றான்.

 

‘ஏன்? என்னை கல்யாணம் செஞ்சிக்கச் சொல்லி உங்க அண்ணி கேட்டா என்ன தப்பு? என்னைக் கட்டிக்க உங்களுக்கு விருப்பமில்லையா? நான் தான் உங்களையே நினைச்சிட்டு இருக்கேனா?’ சட்டென அவளின் முகம் சுருங்கிப் போனது.

 

“ஆனா அண்ணா அண்ணி உங்ககிட்ட கேட்கிறதுக்கு முன்னாடி நானே பேசி உங்க விருப்பத்தைத் தெரிஞ்சிக்கனும்னு நினைச்சு தான் அவங்க கிட்ட உங்களை இன்ட்ரோ பண்ணலை” தயங்கியவாறே கூறினான்.

 

அவளுக்கு அவனது இந்தப் ப்ரபோசல் புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது.

 

மேலும் தொடர்ந்தவன், “ஆனா கொஞ்சம் நேரம் கழிச்சி உங்ககிட்ட பேசலாம்னு அன்னிக்கு வந்தேன்ங்க. அதுக்குள்ள நீங்க கிளம்பிப் போய்ட்டீங்க! அதுக்குப் பிறகு தினமும் இந்த நேரத்துக்குக் கோவிலுக்கு வந்து நீங்க வருவீங்களானு உங்களுக்காகக் காத்துக்கிட்டு தான்ங்க இருந்தேன். அன்னிக்கு பிறகு இன்னிக்கு தான் நீங்க கோவிலுக்கு வந்திருக்கீங்க”

அவள் எவ்விதமாய் இதற்கு எதிர்வினை ஆற்றுவாளோ என்ற படபடப்புடன் தான் கூறியிருந்தான் நித்திலன்.

 

இறக்கை கட்டி பறந்தது அவளின் மனம்.

 

இமை சிமிட்டாது அவனையே தான் பார்த்திருந்தாள்.

 

பூரிப்பாய் அவளும், பரிதவிப்பாய் அவனும் ஒருவரையொருவர் பார்த்திருக்க, இது வரை அவள் கண்ட கனவுகளெல்லாம் அவளின் மனத்தினில் ஊர்வலம் போயின.

 

அவளின் பதிலுக்காய் அவன் ஆர்வமுடன் காத்திருக்க,

 

“இந்த நிநி யாரு?” புருவம் உயர்த்தியவளாய் கேட்டாள் அவள்.

 

முறுவலித்தான் அவன்.

 

“நீங்க யாருனு நினைச்சீங்க?” அவளைப் போலவே புருவம் உயர்த்திச் சீண்டலாய் அவன் கேட்க,

 

“நான் யாரையும் நினைக்கலையே?” தன்னைக் கண்டு கண்டானோ என்ற சிந்தனையுடனே உரைத்தாள்.

 

“உங்க முழுப் பேரைத் தான் அப்படிப் பச்சை குத்தியிருக்கீங்கனு நினைச்சேன்” அவள் தட்டுத் தடுமாறி கூறியதில் வாய்விட்டு சிரித்தவன்,

 

“ஆஹாஹாஆஆஆன் நம்பிட்டேன்” நான் உன்னை நம்பவில்லை என்ற பாவனையில் ராகமாய் இழுத்துக் கூற,

 

“நம்பலைனா போங்க! எனக்கென்ன?” கோபமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

“நிரஞ்சன் நித்திலன்! நிரஞ்சன் என் அண்ணா பேரு” என்றான் அவன்.

 

சட்டென மகிழ்ந்தவளாய் அவன் புற

ம் திரும்பியவள், மறுநொடி “ஓஹோ” என ஸ்ருதி இறங்கக் கூறினாள்.

 

அவளின் மனமோ எதையோ எதிரிப்பார்த்து ஏமாந்த நிலையில் துவண்டது.

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்