Loading

 

மறுநாள் காலை பவானி தனது மெத்தையில் அமர்ந்து ஒரு கையில் காபிக் கோப்பையுடன் காபியை அருந்தியவாறே மறுகையில் கைபபேசியினைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அச்சமயம் கண்விழித்த நிவாசினி, எழுந்து சோம்பல் முறித்தவளாய் பவானியின் மெத்தைக்கருகில் சென்றாள்.

 

அவளைப் பார்த்து, “ஹே என்னடி அதிசயமா இருக்கு. சீக்கிரமா எழுந்துட்ட?” ஆச்சரியமாய்க் கேட்டாள் பவானி.

 

நிவாசினி பவானியின் மடியில் தலை வைத்து அவளிடையைக் கட்டிக் கொண்டவளாய் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டாள்.

 

நிவாசினி உணர்ச்சிவசப்படும் போதும் மிகுந்த வேதனையில் இருக்கும் போது மட்டுமே இவ்வாறு ஆறுதல் தேடுவாள் என்பதை உணர்ந்த பவானியும் அவளின் தலைக்கோதி, “என்னாச்சு என் ஹாசினி செல்லத்துக்கு” எனக் கேட்டாள்.

 

பவானியின் முகத்தை நிமிர்ந்து பார்த்த நிவாசினியின் விழிகளில் அலைப்புறுதலைக் கண்டவள், “என்னடி என்ன குழப்பம் உனக்கு? இந்த ரெண்டு நாளா தான்டி அந்தத் துள்ளலும் சந்தோஷமுமா இருந்த பழைய ஹாசினியா நீ மாறிட்டனு சந்தோஷப்பட்டுட்டு இருந்தேன். அதுக்குள்ள என்னாச்சு?” வருத்தமான குரலில் கேட்டாள் பவானி.

 

“ரொம்பக் குழப்பமா இருக்கு பவா!” என்றவள் கனவில் நித்திலனை கண்டது முதல் நேற்று நிகழ்ந்த நிகழ்வுகள் வரை அனைத்தையும் உரைத்தாள்.

 

“இது எப்படிடி சாத்தியம்? நிஜமாவே அவரை நேர்ல பார்க்கிறதுக்கு முன்னாடி கனவுல பார்த்தியா?” ஆச்சரியக் குரலில் கேட்டாள் பவானி.

 

ஆமெனத் தலையசைத்த நிவாசினி,

“அவரில்லாம என்னால வாழவே முடியாதுங்கிற அளவுக்கு அவர் மேல அன்பு பாசம் என்னமோ ஒன்னு! அது என்னனு கூடத் தெரியலை! ஆனா அவர் கூடவே இருக்கனும், அவருக்காகவே வாழனும்னுலாம் தோணுது. அவரோட மொத்த அன்பும் எனக்காகவே மட்டும் தான் இருக்கனும்னு மனசு கிடந்து தவிக்குது. நேத்து கனவுல அவர் காதலைச் சொன்னப்ப அப்படியே மனசு எவ்ளோ லேசாச்சு தெரியுமா! நிஜமாவே என்னை ஒருத்தர் உயிருக்குயிரா காதலிக்கிறாருங்கிற உணர்வுல தான் நேத்து அவ்ளோ சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன். அதுவே அவர் எனக்கில்லைனு தெரிஞ்சப்போ வந்த வலி இருக்கே! வார்த்தைல சொல்ல முடியாதுடி அதை”

 

நிவாசினி நித்திலன் மீதான தனது உணர்வுகளை உணர்வுபூர்வமாய் உரைத்திருந்த விதத்தில், ஆச்சரிய அதிர்ச்சியில் உறைந்து போனாள் பவானி.

 

“சரி இப்ப என்ன சொல்ல வர நீ?” நித்திலன் விஷயத்தில் இவள் என்ன முடிவு செய்திருக்கிறாள் என அறிந்து கொள்ள எண்ணி பவானி இவ்வாறாய் கேட்க,

 

“அவரைக் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன்” பவானியின் மடியிலிருந்து எழுந்தமர்ந்தவாறு கூறினாள் நிவாசினி.

 

“லூசாடி நீ!” கத்தியிருந்தாள் பவானி.

 

“யாரு எவருனே தெரியாதவரை கல்யாணம் செஞ்சிக்கப் போறேனு சொல்ற! போன வாரம் வரைக்கும் உனக்காக மாப்பிள்ளை தேடி அத்தனை ஃபோட்டோ காமிச்சேனே! ஒருத்தரை கூடப் பிடிக்கலை, எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு சொன்னியே! இப்ப என்னாச்சு உனக்கு? இந்தக் கனவுலாம் நம்பாத ஹாசினி, எனக்கு என்னமோ எதுவும் சரியாபடலை” என்றாள் பவானி.

 

“ம்ப்ச் பவா! அவரைப் பத்தி விசாரிக்காம எப்படி நான் மேரேஜ் செஞ்சிப்பேன்? அவருக்கு எதுவும் லவ் அஃபையர்(affair) இருக்கா? இல்ல எதுவும் மேரேஜ் ஆகிருக்கா? இவர் எப்படிபட்ட ஆளு? எந்த மாதிரியான நேச்சர்? இதெல்லாம் விசாரிக்கனும்டி! விசாரிச்ச பிறகு எல்லாமே நல்லவிதமா என் மனசுக்குப்பட்டா தான் மேரேஜ் செஞ்சிப்பேன்” நிவாசினி கூறவும் பவானி ஆசுவாசமானாள்.

 

“இப்ப தான்டி எனக்கு மூச்சே வருது! லவ்வு கிவ்வுனு யாரும் தப்பான ஆளுகிட்ட நீ சிக்கிடக் கூடாதேனு பயந்துட்டேன்டி” என்றவளாய் தண்ணீரைப் பருகினாள் பவானி.

 

தன் மீதான அவளின் அக்கறையில் மனம் கனிந்து போக, அவளின் தோளில் சாய்ந்த நிவாசினி, “டோன்ட் வெர்ரிடி! உனக்குப் பிடிக்காததை எப்பவும் நான் செய்ய மாட்டேன். எனக்குனு இருக்கிறது நீ மட்டும் தானே” கண்களில் நீர் சூழ நிவாசினி கூறவும்,

 

 

“அதான் சொல்றேன்! உனக்குனு இருக்கிற நானும் மூனு மாசத்துல கல்யாணமாகி போய்டுவேன்! நீயும் என் கூட வந்து தங்கிக்கோ இல்ல மேரேஜ் செஞ்சிக்கோனு தான் இத்தனை நாளா உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்” மென்சிரிப்புடன் அவளின் தலையைக் கோதியவளாய் உரைத்தாள் பவானி.

 

“ஹ்ம்ம்ம்” என்ற பெருமூச்சுடன் எழுந்து நின்ற நிவாசினி,

 

“நித்தலன் எல்லா விதத்துலயும் எனக்கு ஒத்து வருவாருனா கண்டிப்பா உன்னோட மேரேஜ்க்கு முன்னாடியே இவரை நான் மேரேஜ் செஞ்சிக்கிறேன்டி! ஆனா இவர் ஒத்து வர மாட்டாருனா நீ என்னை மேரேஜ் செய்யச் சொல்லி கம்பெல் செய்யக் கூடாது” என்றாள்.

 

‘ஹப்பாடா எப்படியோ கல்யாணத்துக்காவது சம்மதிச்சிட்டாளே! ஆண்டவா அந்த நித்தலனை எப்படியாவது என் ஹாசினியோட சேர்த்து வச்சிடு!’ மனத்திற்குள் அவசரமாய் கடவுளிடம் வேண்டுதலை வைத்தாள் பவானி.

 

பவானியின் முகப்பாவனையில் அவளின் வேண்டுதலை அறிந்து கொண்ட நிவாசினி, “இதெல்லாம் என் முருகனோட ப்ளான் தான் என் பவி செல்லம். அதனால கண்டிப்பா நித்திலன் நல்லவரா தான் இருப்பாரு” பவானியின் இரு கன்னங்களையும் கிள்ளித் தலையை ஆட்டியவளாய் நிவாசினி கூற,

 

“அடியேய் வலிக்கிது விடுடி” பவானி அதட்டவும், இன்னும் வலிக்குமாறு அவள் கன்னத்தைக் கிள்ளி விட்டு ஓடியவளாய் குளியலறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டினாள் நிவாசினி.

 

“பன்னி எருமை” என அவளை வசை மொழிந்த பவானி, தனது கன்னத்தைத் தடவியவாறே அவள் போன திசையைச் சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

 

‘இப்படி இன்னும் சுட்டித்தனம் செஞ்சிட்டு குட்டிப் பொண்ணா சுத்திட்டு இருக்க இவளை தனியா விட்டுட்டுப் போக எப்படித் தான் அவளோட அப்பா அம்மாக்கு மனசு வந்துச்சோ?’ மனத்திற்குள் எண்ணிப் பெருமூச்செறிந்தாள் பவானி.

 

குளித்து முடித்து இருவருமாய் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த நேரம், “நான் நந்தன் கிட்ட நித்திலன் பத்தி விசாரிக்கச் சொல்லிருக்கேன் ஹாசினி” என்றாள் பவானி.

 

“வாவ் சூப்பர்டி! நான் கூட நித்திலன் பத்தி எப்படி விசாரிக்கிறதுனு தான் யோசிச்சுட்டு இருந்தேன்! அபி அண்ணாவே விசாரிப்பாங்கனா ஐம் சோ ஹேப்பி! எனக்காக எவ்ளோ யோசிக்கிற நீ” எனக் கூறி அவளை அணைத்து முத்தமிட்டாள்.

 

“அய்யே இந்த கிஸ் பண்ற பழக்கத்தை எங்கிருந்துடி கத்துக்கிட்ட” தனது கன்னத்தைத் துடைத்தவாறே பவானி கேட்க, ஈஈஈஈ என இளித்து வைத்தாள் நிவாசினி.

 

“ஆனாலும் உன் புருஷனுக்குக் கொண்டாட்டம் தான்! அவர் கேட்காமலேயே நீயே அள்ளி அள்ளி கொடுப்பப் போலயே” பவானி கேலிச் செய்ய,

 

“ச்சீ போடி” நாணினாள் நிவாசினி.

 

“பார்ரா வெட்கம்லாம் வருது இந்தப் பொண்ணுக்கு” மீண்டுமாய் கேலியைத் தொடர, “நான் டிபன் எடுத்துட்டு வர போறேன்” எனக் கூறி அவ்வறையை விட்டு ஓடியே விட்டாள் நிவாசினி.

 

நிவாசினியை இவ்வாறு பார்க்க மனம் நெகிழ்ந்து போனது பவானிக்கு.

 

அவளை இத்தனை மகிழ்வாய் காண எத்தனை நாள் ஏங்கித் தவித்தாள் இவள்.

 

அவளின் வேதனையைப் போக்கும் வழியறியாது எத்தனை நாள் கலங்கியிருக்கிறாள். பவானியின் மனம் மீண்டுமாய் அனைத்தும் சரியாய் நிகழ வேண்டுமெனக் கடவுளிடம் வேண்டிக் கொண்டது.

 

மாலையில் அலுவலகம் முடிந்து இருவருமாய் அவர்களின் தங்கும் விடுதியினை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த சமயம் இவர்களின் அருகினில் சடன் பிரேக் போட்டு தனது ஈருருளியை (பைக்) நிறுத்தினான் அவன்.

 

அவனின் அச்செயலில் இரு பெண்களும் சற்றுப் பதறி நகர்ந்தவர்களாய் அவ்வாகனத்தைப் பார்த்தனர்.

 

அதில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து, “பக்கி இப்படியா வந்து பயமுறுத்துவ” எனக் கூறி அவன் கையில் அடித்தாள் பவானி.

 

அவளின் பேச்சில் மெலிதாய் அவன் சிரிக்க, “ஹே அபி அண்ணா! எப்படி இருக்கீங்க?” குதூகலகமாய்க் கேட்டாள் நிவாசினி.

 

“நல்லா இருக்கேன்டா! நீ எப்படி இருக்க? இவ உன்னை ஒழுங்கா கவனிச்சிக்கிறாளா? இல்ல உன் சாப்பாட்டையும் சேர்த்து அவளே சாப்பிட்டு உன்னைப் பட்டினி போடுறாளா? முன்ன விடக் குண்டாயிட்ட மாதிரி இருக்காளே?” பவானியை மேலும் கீழுமாய்ப் பார்த்தவாறு அபிநந்தன் கூறவும்,

 

பவானி அவனை நன்றாய் முறைக்க, நிவாசினி வாய்விட்டுச் சிரித்தாள்.

 

“உங்க ஆளை ஓட்டலனா உங்களுக்குத் தூக்கம் வராதே” எனச் சிரித்த நிவாசினி,

 

“போங்க மேடம் உங்களைக் கூட்டிட்டுப் போகத் தானே அண்ணா வந்திருக்காங்க! நான் ரூம்க்கு போறேன் நீங்கப் பேசிட்டு வாங்க” பவானியிடம் கூறி விட்டு நிவாசினி நடையைத் தொடர்ந்தாள்.

 

அவனின் ஈருருளியில் ஏறிக் கொண்டாள் பவானி.

 

நிவாசினி மற்றும் பவானி இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்ததும், பவானி சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர, நிவாசினி வேறொரு மென் பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தாள்.

அதன்பின் வேலைப்பளுவின் காரணமாய் வாழ்வின் போக்கில் இருவரும் தொடர்பற்று போக, ஒரு வருடத்தில் பவானி தன்னுடன் பணிபுரியும் அபிநந்தனைக் காதலிக்கத் தொடங்கினாள்.

 

பவானியின் வீட்டில் இவளுக்காகத் திருமணத்திற்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பித்த சமயம், அவள் தனது காதலை வீட்டினில் உரைத்தாள்.

 

அபிநந்தனின் வீட்டில் இக்காதலுக்கு எவ்வித எதிர்ப்பும் வராதிருக்க, பவானியின் வீட்டில் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

 

நான்கு வருடப் போராட்டத்திற்குப் பிறகு இவர்களின் காதலை அவளது வீட்டினில் அனைவரும் ஏற்றுக்கொண்ட சமயம், நிவாசினி தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த நிலையில் அனாதரவாய் நின்றாள்.

 

அவளுக்கு ஆதரவளித்து மணம் முடித்து வைத்த பின்னரே தான் மணம் செய்து கொள்வதென முடிவெடுத்த பவானி, அதை அபிநந்தனிடம் கூற, இத்தனை வருடக் காத்திருப்பிற்குப் பின்னும் மீண்டுமாய்க் காத்திருக்கச் சொன்னால் அவனும் தான் என்ன செய்வான்? ஆறு மாதம் வேண்டுமானால் திருமணத்தை ஒத்தி வைக்கலாமெனக் கூறியிருந்தான்.

 

அந்த ஆறு மாதத்தில் நிவாசினிக்கு நல்வரனாய் பார்த்து மணமுடித்து வைத்து விடலாமென எண்ணியிருந்தாள் பவானி. ஆனால் நிவாசினியோ அவளுக்கிருந்த விரக்தி மனநிலையில் தனக்குத் திருமணமே வேண்டாமென வம்படியாய் இருந்து விட்டாள்.

 

தற்பொழுது இன்னும் மூன்று வாரத்தில் பவானிக்கு திருமண நிகழயிருக்க, நிவாசினியைத் தனித்து விட வேண்டியிருக்குமே என வெகுவாய் வருந்தினாள் பவானி. இந்நேரத்தில் நிவாசினியே வந்து திருமணம் செய்து கொள்வதாய் உரைத்ததில், உடனே நித்தலனைப் பற்றி விசாரிக்க அபிநந்தனிடம் கூறிவிட்டாள் பவானி.

 

அபிநந்தனின் வாகனம் அங்கிருந்த பூங்காவில் சென்று நிற்க, இருவருமாய்ப் பூங்காவிலிருந்த ஒரு சிமெண்ட் திண்டில் சென்று அமர்ந்தனர்.

 

“என்ன மேடம் கோபம்லாம் போய்டுச்சா என் ரூல்ஸ் ரங்கம்மா” பவானியின் கைப்பற்றியவனாய் கேட்டான் அபிநந்தன்.

 

முகத்தைச் சுளித்தவாறு அவனிடமிருந்து தனது கையை உருவியவாறே, “நித்தலனை பத்தி விசாரிச்சீங்களா இல்லையா?” எனக் கேட்டாள் பவானி.

 

“அதுக்குள்ள எப்படிமா விசாரிக்க முடியும்? அவர் என்ன ஐடியிலயா வேலை செய்றாரு உடனே விசாரிக்க! மீடியால இருக்க என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லி வச்சிருக்கேன். இன்னும் டூ டேஸ்ல ஃபுல் டீடையில்ஸ் வந்துடும்” பொறுமையாய் அவன் கூறவும் சரியெனத் தலையசைத்தாள் பவானி.

 

“ஏன் உனக்கு நிவாசினி மேல இவ்ளோ பாசம்னு தான் எனக்குப் புரியவே இல்ல வனிமா” என்றான் அபிநந்தன்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்