Loading

மரம் தேடும் மழைத்துளி 10

 

வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சுந்தரியை சேத்தூரிலிருந்து தம்பிபட்டிக்கு பெண் அழைத்துச் சென்றார்கள்.

 

சுந்தரி, பெற்றோரையும் பிறந்த வீட்டையும் பிரிந்து, புகுந்த வீட்டுக்கு செல்வதால், பிரிவு துயரம் தாங்க முடியாது அழுதாள். தாயை கட்டியணைத்து சிறிது நேரம் அழுதவள். தகப்பனை பார்த்ததும் பொறுக்க முடியாமல் அழுதாள். அண்ணனை பார்த்து இனி அவனோடு சண்டை பிடிக்க முடியாது என்று அழுது, அனைவரையும் அழவைத்துவிட்டாள்

 

சுந்தரியோடு, கோமதியும், பக்கத்து வீட்டு பெண்கள் இருவரும் தம்பி பட்டிக்கு சென்று இருந்தார்கள்.

 

சரவணன் வீட்டில், மறுநாள் திருமணத்திற்கு செல்வதற்கு தேவையான உபகரணங்களையும். பொருட்களையும் எடுத்து வைத்து தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

 

முருகன், பெண் அழைப்பு நிகழ்வு முடியும் வரை சரவணன் வீட்டில் இருந்துவிட்டு. சுந்தரியை அழைத்து சென்ற வேன் புறப்பட்டதும், அவனது வீட்டுக்கு சென்றான்.

 

ருக்மணி, பெண் அழைப்பு விழாவில் கலந்து கொள்ளாமல், தனது வீட்டின் மாடியில், தனி அறையில் தனிமையாக இருந்து கொண்டாள்.

 

பார்வதி, விழாவிற்கு வந்திருந்த சொந்தங்களிடம். ருக்மணிக்கு உடல்நிலை சரியில்லை. என்று சொல்லிக்கொண்டு இயல்பாக நடந்து கொள்வதைப் போல நடித்துக் கொண்டிருந்தார்.

 

முருகன் வீட்டுக்கு சென்றதும். இரவு உணவையும் எடுத்துக் கொள்ளாமல், ருக்மணியை தேற்றி. நாளை காலை நடக்க இருக்கும் திருமணத்திற்கு உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாரானான்.

 

மாடி அறையில், தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் மல்லார்ந்து படுத்திருந்த ருக்மணி, முருகனின் நடவடிக்கைக்கான காரணம் விளங்காமல். பிரமை பிடித்தது போல உத்திரத்தை பார்த்துக் கொண்டு. ஒவ்வொரு நாளிலும் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து கொண்டு இருந்தாள்.

 

அறைக்குள் வந்த முருகன், அணிந்திருந்த சட்டையை ஆணியில் மாட்டி விட்டான்.

 

ருக்மணியின் அருகில் வந்து படுத்தான். “ருக்கு மாமா மேல கோவமாடி?” என்றபடி அவள் மேல் தனது கையை போட்டான்.

 

பதில் சொல்லாமல் படுத்திருந்த ருக்மணி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

 

முருகன் அவளது செவிப்புரத்தில் முகம் புதைத்தான்

மகிழ்வில்லை என்றாலும் மறுப்பேதும் சொல்லவில்லை.

முருகன் தன்னை திருப்தி படுத்திக் கொண்டான்.

ருக்மணி தன்னை இயல்பாக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். முயன்று ஒரு ஒரு வழியாய் உறங்கிப் போனாள்.

 

மறுநாள் அதிகாலையில் அனைவரும் விழித்து கொண்டார்கள். திருமணம் நடப்பதால் விரைந்து புறப்பட ஆயத்தமானார்கள்.

 

முருகன் வீட்டில் ஒருவர் பின் ஒருவராக குளித்து தயாரானார்கள்.

 

சரவணன் வீட்டிலும் ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டார்கள்.

 

காலை 6:00 மணிக்கு, இவர்களை அழைத்துச் செல்ல வேன் வந்து நின்றது.

 

கிருஷ்ணன், “சரவணா… பெரியப்பா வீட்டில இருந்து எல்லாரையும் கூப்பிட்டு வா… லட்சுமி, எங்க அக்கா மாமாவை வரச் சொல்லு. சரவணா, அப்படியே ருக்குவோட அம்மா, வந்துட்டாங்களான்னு கேளு. வேணு வந்துருச்சு. வெரசா கிளம்பு சொல்லு.”

 

சரவணன் ஓடி சென்று, முருகன் வீட்டில் “பெரியம்மா வேனு வந்துருச்சு. எல்லாரும் கிளம்பி வாங்க.” என்று சொல்லிவிட்டு அடுத்த வீடுகளில் வாங்க, வேணு வந்திருச்சி என்று சொல்லிவிட்டு. மீண்டும் முருகன் வீட்டை எட்டிப் பார்த்து, “பெரியம்மா, உங்க சம்பந்தகாரம்மா வந்துட்டாங்களான்னு சேர்த்து கூட்டிட்டு வாங்க.” என்று சொல்லிவிட்டு விரைந்து சென்றான்.

 

அதேபோல லட்சுமியும், அவரது சொந்த பந்தங்களை அழைத்து வேனில் ஏறச் சொன்னார்.

 

முருகன் வீட்டில்.

 

பார்வதி, “இரண்டு பேரும் சீக்கிரம் போய் வேன்ல இடத்தை பிடிங்க.”

 

ருக்மணி, “நீங்க வேணுக்கு போங்க அத்தை. நான் மாமா கூட கொஞ்சம் பேசணும். பேசிட்டு வரேன்.”

 

பார்வதி அப்படியே நின்று போனார்.

 

முருகன், “என்ன பேசணும்?” என்று மிதப்பாக கேட்டேன்.

 

இனிவரும் காலங்களில் ஒருவரை ஒருவர் வீழ்த்த நினைப்பது வேண்டாம் என்று தீர்மானித்திருந்தாள் ருக்மணி. அதனால் இன்றோடு பிரச்சனையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடு. முருகனை பேச அழைத்தாள்.

 

“என்ன பேசப் போகிறாள்?” என்று எதிர்நோக்கி காத்திருந்த பார்வதியை, நீங்க போய் வேன்ல ஏறுங்க த்தை. ரெண்டு நிமிஷத்துல பேசிட்டு. அவரோட வாரேன்.” என்று மறுமுறைம் சொன்னாள்.

 

முருகன், “அம்மாவும் இருக்கட்டும். என்ன சொல்லணுமோ சொல்லு.”

 

ருக்மணி, பேச ஆரம்பிக்கும் முன், கண் கலங்கி முருகனை உற்று நோக்கினாள்.

 

“மாமா என்னை மன்னிச்சிடுங்க. நான் ஏதாவது உங்ககிட்ட தப்பா நடந்து இருந்தால் தயவு செஞ்சு மன்னிச்சு அதை மறந்துடுங்க.”.

 

பார்வதி, “நீ என்னம்மா தப்பு செஞ்சே வா… வேணு கெளம்பிடும்.” என்று துரிதப்படுத்துவது போல், அந்த பேச்சை துண்டிப்பதற்கு எண்ணினார்

 

“இல்லத்தே… முதல் முதலா இந்த வீட்டுக்குள்ள வந்ததும் வராததுமா, நான் எங்க அம்மாவோட கிளம்பி போயிட்டேன்னு மாமா மனசுக்குள்ள ஒரு வருத்தம் இருந்திருக்கும். எனக்கு இப்படி நடந்துக்கிட்டது பெரிய விவகாரமா மாறும்னு தோணல. சின்ன பிள்ளைகள் விளையாட்டுல சண்டை வந்துச்சுன்னா, ஓடிப்போய் அதுகளோட அம்மா கிட்ட சொல்லி அழுங்க. அதுபோல நானும் எங்க அம்மா கிட்ட சொல்லி அழுதுட்டேன். எங்க அம்மாவும் பின்னாடி நடக்கிற விஷயத்தை யோசிக்காமலே கூட்டிட்டு போயிருச்சு. அது இந்த குடும்பத்தை நான் அவமதிச்சதாத்தானே அர்த்தம். அந்த நினைப்பு இன்னமும் மாமா மனசுக்குள்ள இருக்குமோன்னு எனக்கு தோணுது. அப்படி நான் இந்த குடும்பத்தை அவமதிச்சதுகாக நீங்க ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க. என்னை சமாதானப்படுத்த வந்த மாமா, என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு கூட்டிட்டு வந்தாக. சத்தியமா சொல்றேன். நீங்க என் காலில் விழனும்னு நான் ஆசைப்படல. நானே எதிர்பாராமல் நீங்க அப்படி செஞ்சிட்டிங்க. நீங்க கால்ல விழுந்ததை நினைச்சு நான் ஒரு நாளும் சந்தோஷ பட்டதில்லை. நீங்க கால்ல விழுந்து, மன்னிப்பு கேட்டு, கூட்டிட்டு வராட்டிலும், நான் அன்னைக்கு உங்க கூட கிளம்பி வந்து இருப்பேன். அதுவும் உங்க மனசை பாதிச்சிருந்தா என்ன மன்னிச்சிடுங்க மாமா. எங்க வீட்டுல நானும் எங்க அம்மாவும் மட்டும்தான். எங்க அம்மா சமயத்துல பாதியை மறந்து மீதிய பேசும். நானும், அதுக்கு அம்மா மாதிரி அறிவுரை சொல்லி, அதட்டுவேன். அதுபோல இப்பவரைக்கும் நான் நடந்துக்கிட்டேனான்னு தெரியல. ஒருவேளை உங்களை நான் அதட்டி கண்டிச்சு சொல்லி இருந்தால் அதுக்காகவும் என்னை மன்னிச்சிடுங்க மாமா.” என்று தனது நிலையை பற்றிய விளக்கத்தை, விரிவாக சொன்னாள் ருக்மணி.

 

முருகன், பார்வதியை பார்த்து, பார்த்தயா ம்மா… உன் மருமகளை. நேத்து வேலைக்கு போகவான்னு கேட்டாள். நான் உன்னை வச்சு காப்பாத்துற அளவுக்கு சம்பாதிக்கலையான்னு ஒத்த வார்த்தை கேட்டதுக்கு என்னவெல்லாம் பேசுறானு பாத்தயா ம்மா.”

 

இத்தனை நேரமும் பூடகமாக பேசிக் கொண்டிருந்த விஷயம் என்னவென்று இப்போதுதான் பார்வதிக்கு தெளிவாக தெரிந்தது. ஆனாலும் வாய் திறக்கவில்லை.

 

“ஏன் ருக்கு… அப்போ இத்தனை நாளா, உன் மேல கோவத்துல வஞ்சம் வளர்த்துக்கிட்டு இருக்கேன்னு நினைச்சியா? நானும் என் பொண்டாட்டி என்கிற உரிமையிலே, உன்ன ரெண்டு வார்த்தை அதட்டி பேசுனதை எல்லாம், வஞ்சத்தை மனசுல வச்சு பேசுறதா நினைச்சுட்டு இருந்தியா?”

 

“நான் அப்படி சொல்ல வரல மாமா. அப்படி ஏதாவது தெரியாத்தனமா தப்பு செய்து இருந்தால், மனசுல வச்சுக்காதீங்கன்னு உங்ககிட்ட மன்றாடி கேட்கிறேன். இனிமேலாவது எல்லார்கிட்டயும் எப்படி பேசுறீங்களோ அதேபோல என்கிட்டயும் பேசுங்கனு உங்க கிட்ட கேட்கிறேன்.”

 

பார்வதி, “அவன் எதையும் மனசுல நினைக்கல. நீயும் எதையும் மனசுல வச்சுக்காதே. இந்த நிமிஷமே ரெண்டு பேரும், மனசுல இருக்கிற குப்பையை தூக்கி வெளியில் எறிஞ்சிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் அன்போடு இருக்க பாருங்க. இதோட இந்த பேச்சை விட்ருங்க. இனிமேலும் இது தொடரக்கூடாது. வாங்க நமக்காக வண்டி காத்து கிடக்கு கிளம்புவோம்.” என்று பார்வதி சொல்ல.

 

முருகன், ருக்மணியின் அருகில் வந்து, அவள் கண்ணம் தொட்டு. “நான் அப்படி எதுவும் நினைக்கல ருக்கு, வா… கல்யாணத்துக்கு போகலாம்.” என்று மென்மையாக வருடி அழைத்தான்.

 

முருகன் மனது இரங்கி விட்டான். என்று எண்ணிக்கொண்டு, ருக்கு, “சரி மாமா” என்று உடன் புறப்பட்டாள்.

 

சேத்தூரில் இருக்கும் அனைத்து சொந்தங்களையும், அந்த ஒற்றை வேனில் அடைத்து பிடித்து ஏற்றிக்கொண்டு. தம்பிபட்டி கிராமத்திற்கு சென்றார்கள்.

 

வெள்ளிக்கிழமை காலையில், முகூர்த்த நேரம் 9 மணி முதல் 10:30 மணி வரை என்பதால், பெண் வீட்டார் அனைவரும் காலை எட்டு மணிக்கு கல்யாண வீட்டிற்கு சென்று விட்டார்கள்.

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெரு நகரங்களில் மட்டுமே திருமண மண்டபங்கள் இருந்தது. கிராமப்புறங்களில் கோவில்களில் திருமணம் செய்துவிட்டு. வீட்டுக்கு அருகில் இருக்கும் காலி இடங்களில் பந்தலிட்டு. பந்தி பரிமாறுவார்கள்.

 

ஆனால் தம்பி பட்டி ஊரின் பெரிய குடும்பம் குருசாமியின் குடும்பம் என்பதால், அவரது வீட்டுக்கு முன்பு இருந்த பெரும் நிலப்பரப்பில் கல்யாணப் பந்தல் இட்டு. மேடை அலங்காரம் செய்திருந்தார்கள். வீட்டுக்கு பின்புறம் இருந்த காலி இடத்தில் உணவு பரிமாறும் இடமாக அமைத்திருந்தார்கள். பெண் வீட்டினர் அனைவரும், சுந்தரியை தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று. சுந்தரியை அலங்காரம் செய்து கொண்டு காத்திருந்தார்கள்.

 

முகூர்த்த நேரம் தொடங்கியதும், மாப்பிள்ளையின் வீட்டில் மேளதாளங்கள் முழங்க சுந்தரியை அழைக்க வந்தார்கள்.

 

சுந்தரி தங்கி இருந்த அந்த வீட்டில் இருந்த அனைத்து சொந்தங்களும், சுந்தரியோடு சேர்த்து கால்நடையாகவே மேளத்தின் பின்பு நடந்து வந்து மனவறையை அடைந்தார்கள்.

 

மச்சினன் முறையுடைய சரவணனும், முருகனும், லிங்கத்தை அழைத்துச் சென்று கல்யாண உடையை அணிவித்து. அழைத்து வந்து மனவறையில் அமர்த்தினார்கள்.

 

சுந்தரியை, ருக்மணி அன்னமயில் மற்றும் கோமதியும் அழைத்துச் சென்று. புது பட்டாடை அணிவித்து. பூ அலங்காரம் செய்வித்து. அழைத்து வந்து மணவறையில் லிங்கத்தின் அருகில் அமர்த்தினார்கள்.

 

ஊரார் முன்னிலையில், உறவினருக்கு மத்தியில், லிங்கம் மங்கல நாணை எடுத்து, சுந்தரியின் கழுத்தில் பூட்டி. தன்னுடைய மனவாட்டி ஆக்கிக் கொண்டான்.

 

சுற்றி இருந்த சொந்தங்கள் எல்லாரும் மலர் மாரி பொழிந்து. மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

மணமக்கள் இருவரும் மனவறையில் எழுந்து நின்று, சுற்றி இருந்த சொந்த பந்தங்களை கை கூப்பி வணங்கி நின்றார்கள்.

 

லட்சுமியும் கிருஷ்ணனும் மகளின் திருமண வைபவத்தை கண்டு கண்கலங்கி நின்றார்கள்.

 

அதேபோல சுசிலாவும் குருசாமியும் ஆனந்தக் கண்ணீர் வழிய பூரித்து நின்றார்கள்.

 

வந்திருந்த சொந்த பந்தங்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.

 

சொந்த பந்தங்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு, சிறு பொம்மைகள் பரிசாக கொடுக்கப்பட்டது.

 

அனைவரும் மகிழ்வோடு மீண்டும் சேத்தூர் நகரத்திற்கு திரும்பினார்கள்.

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்