
மரம் தேடும் மழைத்துளி 9
தம்பி பட்டி ஊருக்கு சென்ற லிங்கத்தின் குடும்பம், ஒன்றாக அமர்ந்து ஆலோசனை செய்தார்கள். ஒருவாரம் விடுமுறை இருக்கும் நிலையில், மேலும் 15 நாட்கள் விடுமுறையை அதிகப்படுத்தி கொண்டு. கல்யாணத்தையும் சேர்த்து முடித்துவிட்டு. ஊருக்கு கிளம்பலாமே என்று லிங்கத்திடம் கேட்க.
லிங்கமும் சம்மதம் தெரிவித்து. தன்னை அழைத்துச் செல்லும் காண்ட்ராக்ட் நிறுவனத்திடம் பேசி. ஒரு மாதமாக, லீவு நாட்களை அதிகப்படுத்தி எடுத்துக் கொண்டான்.
விடுமுறை எடுத்த கையோடு, சம்மந்தியின் குடும்பத்தில் விசயத்தை சொல்லி. மேற்கொண்டு வேலைகளை கவனிக்க எண்ணினார் குருசாமி.
போன் மூலம் கிருஷ்ணனை அழைத்தார்கள்.
கிருஷ்ணனுக்கு புதிதாக வந்திருக்கும் அழைப்பு எண்ணை தெரியாததால், போனை எடுத்த எடுப்பிலேயே “யாருங்க?” என்று வினாவினார்.
குருசாமி, “இது சேத்தூர் கிருஷ்ணனோட போன்தானே?”
கிருஷ்ணன், “நான் கிருஷ்ணன்தான் பேசுறேன் நீங்க யாருங்க?”
“நான் தம்பி பட்டி குருசாமி பேசுறேன்”
“சொல்லுங்க சம்பந்தி, உங்க நம்பரை பதிவு பண்ணி வைக்கல. அதனால எனக்கு தெரியல.”
“இருக்கட்டும் சம்மந்தி, நான் ஒரு முக்கியமான விஷயம் பேசறதுக்கு கூப்பிட்டேன். எங்க லிங்கத்துக்கு லீவை ஒரு மாசம் எடுத்துக்க சொல்லி கொடுத்திருக்காங்க. இந்த ஒரு மாசத்துக்கு முன்னாடியே கல்யாணத்தை முடிச்சிட்டு ஊருக்கு போகட்டும். நாங்க அம்மனும், சாமியும் தனியா தானே இருக்கோம். மருமகள் எங்க கூட இருக்கட்டும்னு ஆசைப்படுறோம். நீங்க என்ன சொல்றீங்க?
“இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு சம்பந்தி, எப்ப கட்டி கொடுத்தாலும் அவ உங்க வீட்டு மருமக தானே, நீங்க எப்படி செய்யணும்னு சொல்றீங்களா, அப்ப, அப்படியே செஞ்சுடுவோம்.”
“சரிங்க சம்பந்தி, நானும் எங்க ஊரு ஜோசியர் கிட்ட முகூர்த்ததுக்கு நாள் குறிச்சிட்டு வீட்டுக்கு வாரேன். அதோட சேர்ந்து வேலையை கொஞ்சம் விறுவிறுப்பா பார்த்தோம்னால், சுலபமா காரியம் முடிஞ்சிடும்.”
“சரிங்க சம்பந்தி,” என்று இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருப்பதை. லட்சுமி அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தார்.
லட்சுமி, “என்னங்க கல்யாணத்தை வர்ற முகூர்த்தத்திலேயே வைக்கணும்னு சொல்றாங்களா?” என்று ஆசையோடு ஆர்வமாக கேட்டார்.
“ஆமா லட்சுமி, சோசியரை பார்த்து, நாளும் நல்லா இருந்தா, வெரிசையா முடிச்சிரணும்னு சம்பந்தி ஆசைப்படுறாரு.”
லட்சுமி, ஆகாயம் நோக்கி வணங்கியபடி “அந்த மலைப்பேச்சியாத்தா மலைப்பு தட்டாம கூட்டிட்டு போகணும்.” என்றவர் கிருஷ்ணனிடம் “சரவணன் ஊருக்கு போகணும்னு சொன்னான். அவனை போக வேண்டாம்னு சொல்லி, கல்யாண வேலைக்கு ஒத்தாசைக்கு வச்சுக்கோங்க. முருகனையும் கூப்பிட்டு துணைக்கு வச்சுக்கோங்க. யாரும் இல்லாத அனாதை மாதிரி ஒத்தையிலே கிடந்து கஷ்டபடாமல் எல்லா வேலையும், பகுந்து செஞ்சுகிட்டு இருங்க.”
“ஆமா லட்சுமி, நீ சொல்றது சரிதான். கூட பிறந்தவள் கல்யாணத்துக்கு விருந்தாளி மாதிரி வந்துட்டு போகவா? இருந்து கல்யாணத்த முடிச்சுட்டு மெட்ராசுக்கு போகட்டும்.”
வெளியில் நண்பர்களை சந்திக்க சென்றிருந்த சரவணன், வீடு நுழைந்ததும்.
லட்சுமி, “வா… சரவணா, உன்னை பத்தி தான் பேசிகிட்டு இருந்தோம்.”
சரவணன், “என்னம்மா… என்ன விஷயம்?”
“நம்ம சுந்தரிக்கு கல்யாணம் இந்த வாரத்திலேயே முடிஞ்சிடும்னு தோணுது. அதனால கூடவே இருந்து. கல்யாண வேலையை பார்த்து. அவளை, அவ மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு. நீ மெட்ராசுக்கு போ.”
“மாப்பிள்ளைக்கு இன்னும் ஒரு வாரம் தான் லீவுனு சொன்னாங்களே ம்மா…”
கிருஷ்ணன், ஆமா சரவணா, ஊருக்கு போனதும் மனசு மாறி இருக்கும் போல. கல்யாணம் முடிச்சு, பெத்தவங்களுக்கு ஒத்தாசையா மருமகளை வீட்டில விட்டுட்டு போகணும்னு மாப்பிள்ளை ஆசைப்படுறார்போல இருக்கு. அதுவும் நல்லது தானே. நம்மளுக்கும் புள்ளையை சீக்கிரமா கரைசேர்த்த மாதிரி போச்சு. அவகளுக்கும் ஒரு வருஷத்துக்குள்ள பேரன் பேத்திய பாத்துடலாம்னு ஆசைப்படுறாங்களோ என்னவோ.”
இவர்களின் உரையாடலுக்கு நடுவே கிருஷ்ணனுக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது கிருஷ்ணன் சொல்லுங்க சம்பந்தி
“வர ஞாயிற்றுக்கிழமை நல்ல முகூர்த்தமாம். ஆனால் ஒரு வாரத்துல ஒரு வேலையும் பார்க்க முடியாதே. அதனால அடுத்த மூர்த்தம்மா பார்க்க சொன்னேன். அதுக்கு அடுத்து வர வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தம்னு சொல்லி இருக்காங்க. நானும் பந்தல் போடணும், பத்திரிக்கை அடிக்கணும். ஊரை கூப்பிடனும். ஊருக்கு வாரேன். மிச்ச சொச்ச வேலைகளை, என்ன ஏதுன்னு பேசி பெருக்கி செஞ்சிடுவோம். கல்யாணத்துக்கு முதல் நாள் பரிசம் போட்டுடுவோம். வார ஞாயிற்றுக்கிழமைக்கு, மூர்த்த துணிகளை எடுக்க திருநெல்வேலி போயிட்டு வந்துருவோம்.”
“சரிங்க சம்பந்தி நீங்க பத்திரிக்கை கொடுக்க வர வேண்டிய அவசியம் இல்லை. சரவணனை, அனுப்பி வைக்கிறேன். கொடுத்து விடுங்க. உங்க தரப்பு வேலையை மும்மரிச்சு பாருங்க. நாங்க இங்கிட்டு பிள்ளைக்கு தேவையான துணிமணிகளை, பாத்திரங்கள் வாங்கி வைக்கிற வேலைதான். அதை நிதானமா பாத்துக்கிட்டு இருக்கோம்.”
“இப்படி திடுதிப்புனு கல்யாணம் முடிக்கணும்னு கேக்குறேன்னு உங்களுக்கு வருத்தம் ஒன்னும் இல்லயே சம்பந்தி.” என்று குருசாமி கிருஷ்ணனிடம் கேட்க.
“சம்பந்தி உங்கள வருத்தப்பட என்ன இருக்கு? அவுக நேரம் கூடி வந்திருக்கு. நம்ம தடுத்து நிறுத்தினாலும் தடுக்க முடியுமா?”
“அதுவும் சரிதான். இந்த வருஷம் என் மகன் கல்யாணம். அடுத்த வருஷம் என் பேரன் மொட்டை.” என்று சந்தோசம் பொங்க சொன்னார் குருசாமி.
சரவணன் போன் மூலம் தான் வேலை செய்த கம்பெனிக்கு, தன்னுடைய லீவைப் பற்றிய தகவல் சொல்லிவிட்டு. கல்யாண மும்முரத்தில் அங்கும் இங்கும் ஓடித் திரிந்தான்.
அனைவரும் விறுவிறுப்பாக வேலை செய்துகொண்டு, சுந்தரியின் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.
சென்னையில், சரவணன் எடுத்த நீண்ட நாள் விடுமுறையை கணக்கில் கொண்டு. வேலையை விட்டு வெளியேற்ற தீர்மானித்திருந்தார்கள்.
முருகன் வீட்டில்.
ருக்மணியும் முருகனும் தம்பதிகளாய் வாழ ஆரம்பித்த பிறகு… ருக்மணிக்க்கு முருகன் மேல் இருந்த பயம் சற்று குறைந்து, மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறி இருந்தாள்.
முருகன் வீடு, சரவணன் வீட்டுக்கு நெருக்கமான பங்காளி வீடு என்பதால். சுந்தரியின் திருமணத்திற்கு முருகன் குடும்பத்திலிருந்து, அவர்களால் இயன்ற உதவிகளை செய்து கொண்டு இருந்தார்கள்.
ருக்மணி, “முருகனிடம், “உங்க சின்னம்மா, முருகையா ஒத்தையில ஒரு குடும்பத்தை சமாளிச்சவன். ஒத்தையா நின்னு தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி முடிச்சவன்னு. உங்களை பெருமையா பேசுறாங்க மாமா.”
“ஒன்ணா பொறந்துட்டோம் ருக்கு. அவளை ஒன்னும் இல்லாம இன்னொரு வீட்டுக்கு அனுப்பலாமா? அது பாவம் இல்லையா? ஏதோ என்னால இயன்றதை கொடுத்து கட்டி வைச்சேன். எங்க மாமா தங்கமான மனுசன் உன்னால முடிஞ்சதைப் போட்டால் போதும்னு சொல்லி, அவர் பிள்ளைக்கு கட்டிகிட்டாரு. அந்த நேரம் எங்க சித்தப்பாவும், தகப்பன் ஸ்தானத்துல நின்னு. எல்லா உதவியும் செஞ்சாரு. இதுல நான் மட்டும் பெருமைப்பட என்ன இருக்கு? எங்க சின்னம்மா எப்போதும் என்னை தூக்கி வச்சே பேசுவாள்.”
“ஹான் உண்மையை சொல்றாக. உசத்தி பேச என்ன இருக்கு.?” என்று உண்மையான மரியாதையோடு பேசினாள்.
கபடம் நிறைந்த முருகனது மனத, அவள் தன்னை உயர்த்திப் பேசுவது எதற்காக என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டது. “ சுந்தரி கல்யாணத்துக்கு ஒத்தாசையா இருக்கிறதால, சின்னம்மா பெருமையா சொல்லி இருப்பாளா என்னமோ”
“மாமா நானும் ஏற்கனவே போன வேலைக்கு திரும்பவும் போகட்டுமா?” என்று கொஞ்சலோடு காதலை தூவி முருகனிடத்தில் கேட்க.
“அப்படி வாடி வழிக்கு, நீயி திட்டம் இல்லாமல் பேசுற ஆள் கிடையாதே…”என்று கருவிக்கொண்டு. கொதித்து வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு. அவளிடம் பாசாங்காக பேசத் தொடங்கினான்.
“ஏன் ருக்கு, உன்னை, நான் நல்லா பாத்துக்க மாட்டேன்னு நினைக்கிறயா?
உன்னை சந்தோஷமா வச்சுக்க, எனக்கு வசதி பத்தாதுனு நீயும் வேலைக்கு போகணும்னு நினைக்கிறாயா?”
மகிழ்ந்து பூரித்திருந்த முகம் சுண்டிப்பாேய் விட்டாள் ருக்மணி. பதில் ஏதும் பேசாமல் அமைதியான ருக்மணியை தேற்றும் விதமாக.
முருகன், “ஏய் ருக்குமணி, என்ன பிரகாசமான மூஞ்சி, இப்படி இருண்டு போச்சு. வேலைக்கு போறதுன்னால் தாராளமா போயிட்டு வாடி.,”
“இல்ல மாமா, நீங்க கொண்டு வந்து கொடுக்கிறதுலயே… நான் குடும்ப நடத்திக்கிறேன்.” என்று சொன்ன ருக்மணி, அவனோடு நின்று பேசாமல் அகன்று சமையல் கட்டுக்குள் புகுந்தாள்.
வெளியறையில் நின்றிருந்த முருகன், மீசையின் நுனி முடியை கடித்துக் கொண்டு மர்ம சிரிப்பு சிரித்தான். “நீ வேலைக்கு போய் சம்பாத்தியம்பண்ணி புருஷனை மதிக்காமல் ஆட்டம் போடுவே. நான் உன்ன பார்த்து சந்தோஷப்படுவேனா? நீ என்னைக்கும் எனக்கு கீழ அடிமையாதாண்டி இருக்கணும்”.
சமையல் அறைக்குள் சென்ற ருக்கு, எதற்காக சென்றோம் என்று புலப்படாமல். அடுப்பின் ஓரமும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடத்தின் ஓரமும், பாத்திரங்களின் ஓரமாக நின்று. புளுங்கிக் கொண்டிருந்தாள்.
வெளியில் இருந்து உள்ளே வந்த பார்வதி, நடு வீட்டில் நின்று கொண்டிருந்த முருகனைப் பார்த்து, “ருக்குவை எங்கடா? சித்தப்பா கூப்பிடுறாரு. சுந்தரியை பொண்னழசிட்டு போக வந்திருக்காங்க. நம்ம கோமதியும், ருக்குவும் கூட போகட்டும்னு சொன்னாரு.”
“ஏன் ரெக்க கட்டி பறக்கிற? அவள், பொண்ணு கூட போகல. கோமதி மட்டும் போகட்டும்.” என்று சலிப்பாய் சொன்னான்.
“எதுக்குடா? திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவளுக்கு மேலுக்கு சுகம் இல்லை.”
‘எங்க இருக்கிறா அவள்?”
“இந்த வீடு பெரிய அரண்மனை. இதுல எங்க இருக்கான்னு தேடி பிடிக்கிறது ரொம்ப சிரமம். முத்தம் (முற்றம்) முத்தத்தை விட்டால் பத்தி, பத்தியை விட்டால் அடுப்படி. இதுல தானே எங்கேயாவது இருப்பா. பாரு.” என்று சொல்லிவிட்டு வெளியேறி சென்றான்.
பார்வதி, ருக்மணியை தேடி அடுப்படிக்குள் எட்டிப் பார்க்க, அங்கே தண்ணீர் குடத்தை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள்.
ருக்கு என்று ருக்மணியின் தோள்பட்டையை பார்வதி தொட்டதும் உணர்வுற்று திரும்பி “ஹான் அத்தே” என்றாள்.
“ ஏன் இப்படி திகைச்சு போய் நிக்கிறே?”
“எனக்கு எதுவுமே சரியா விளங்கல. மாமா சில நேரம் அன்பை கொட்டி பாத்துக்குறாரு. ஒரு நேரம் அதிகாரமா பேசுறாரு. ஒரு நேரம் குதர்க்கமா நடந்துக்கிறாரு. எதுக்காக இப்படி நடந்துக்கிறாரு? என்கிட்ட மட்டும் தான் இப்படி நடந்துக்கிறாரா? இல்ல உங்ககிட்டையும் இப்படி நடந்துப்பாரா?
பார்வதி திகைப்பாய் விழித்தார்.
“வேலைக்கு போகவாங்கற ஒரு கேள்விக்கு, விருப்பம் இருந்தா போனு சொல்லனும்.விருப்பம் இல்லாட்டி போகாதன்னு சொல்லனும். பேச்சு அதோட முடிஞ்சு போச்சு. ஆனால் போகக் கூடாது என்கிறதை அதிகாரமா சொல்லாமல், ஏதேதோ கதை சொல்றாரு. ஒருத்தர் வருத்தப்பட்டால் எதிர்க்க இருந்து பார்க்கிறவங்க, இரக்கப்படுவாங்க. ஆனா நான் வருத்தப்படுறதை பார்த்து, அவர் கண்ணு ரெண்டும் மின்னலா சிரிக்குது. என்ன புத்தின்னு எனக்கு புரியல!
பார்வதி, “அவன் ஏதாவது புளுக்கத்துல அப்படி நடந்திருப்பான்.”
“அதுதான் எனக்கு விளங்கல. நான் பேசும்போது மட்டும் அவருக்கு எதனால மனசு புளுங்குது.

