
சாதுர்யாவுக்கும் உடல்நிலை இப்போது நன்றாகி விட்டது. இப்போதெல்லாம் ரங்கனின் பார்வைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறாள். பாட்டியும் தாத்தாவும் பேசிக்கொண்டிருந்தது அவள் மனதில் ஒருவித எண்ண அலைகளை உண்டு பண்ணி இருந்தது.
டீன் ஏஜ் எனும் விடலை பருவத்தில் காண்பதில் எல்லாம் அழகு தேடும் மனம். தன்னை யாராவது கொஞ்சம் தாங்கினால் கூட பெருமையாக உணரும் பருவம். தாங்குபவன் நானாக இருந்துவிட்டால் பெண் அவளுக்கு தலைக்கு மேலே பெருமை வட்டம் இருக்கும். ஆணாக இருந்தால், ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வை பட்டால் கூட ஏதோ இமயமலையை ஏறிச்சென்ற சந்தோஷம். ரங்கன் மனதிற்குள் யாரோ ஒருத்தி இருக்கிறாள் தான். அவள் யாரென்று ரங்கன் இப்பொழுது இருக்கும் நிலையில் யாரிடமும் சொல்ல போவதில்லை.
அதேசமயம் சாதுர்யா மனதில் ரங்கன் இந்த ஒரு வாரத்தில் செய்தவைகள் அவன்மீது தனது அத்தான் என்ற உறவை மீறி, தனது தோழன் என்ற எல்லைக் கோட்டைத் தாண்டி அவளுக்குள் அவன் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான். இந்த விஷயங்கள் ரங்கனுக்கு தெரியுமோ தெரியாதோ அவன் மீதான பற்று பாவை அவளுக்கு வேற கோணத்தை நோக்கி பிரயாண படுவது எவ்வளவு தூரம் சரி? பொதுவாக இந்த வயதில் ஏற்படும் ஈர்ப்பு நிலைத்து நிற்பதில்லை. ‘பப்பி லவ்’ என சொல்லப்படும் பாதையை சார்ந்ததாக இருக்கலாம்.
இவளது எத்தகையது என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படியே எல்லாம் சரியாக வந்தாலும் கூட மாலதி ஒத்துக் கொள்வாளா என்பதும் தெரியவில்லை.
காலம் வைத்திருக்கும் பரீட்சைகளில் சாதுர்யா எவ்வளவு சாதுர்யமாய் காய்களை நகர்த்தி விதியை தன்பக்கம் வளைக்க போகிறாள் என்பது போகப்போகத்தான் தெரியும்.வீட்டில் விழா என்பதனை மீறி, நண்பன் என்ற எல்லையை தாண்டி ரங்கனின் ரசனை மிகுந்த பெண்ணவள் மீதான பார்வை. ரங்கன் அவன் அவசர அவசரமாய் அவளுக்காக ஆடைகளும் நகைகளும் வாங்கி வந்தது, எல்லோருக்கும் முன்பாக விஷயம் தெரிந்தவுடன் அவளை அவன் கையாண்ட விதம், அவனது அக்கறை, பாசம் என்று அவன் மீதான இந்த உணர்வுபூர்வமான நேசத்திற்கு வித்திட்டு
இருக்கலாம். விடுமுறை முடிந்த பிறகு அந்தப் பெண் மீண்டும் தில்லிக்கு சென்றாக வேண்டும்.
அங்கு போன பிறகு மேற்படிப்பு அது இதுவென்று எவ்வளவு இருக்கிறது. அவற்றையெல்லாம் சரியாக செய்து பிறகுதான் இது போன்ற விஷயங்களை யோசிக்க முடியும். அதற்குமுன் எவ்வளவோ மாறுதல்கள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ரங்கன் இப்பொழுதே படித்துக் கொண்டே தனது தந்தையுடன் தொழிலில் ஈடுபட ஆரம்பித்து விட்டான். அவனை அவனது தந்தை மேற்படிப்புக்காக வெளிநாடு அனுப்புவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அவன் மனதில் உள்ளது வேறு யாருக்கும் தெரியாது. எல்லாவற்றையும் மீறி இருவருக்கும் திருமணம் முடியுமானால் அது தெய்வம் இட்ட முடிச்சு என்று தான் கொள்ள வேணும்.சாதுர்யாவின் எண்ணம் மட்டுமல்ல…எந்த பெண்ணுக்குமே ஆணின் அக்கறை, அவன்பால் சாய்க்க தான் செய்யும். இதில் மாற்றம் ஒன்றும் இல்லை.
சாதுர்யா, ஒருவேளை சாதிக்கப் பிறந்தவளாக இருக்கலாம். மற்ற பெண்களின் வாழ்க்கைக்கும் அவளது வாழ்க்கைக்கும் கூட நிறையவே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பெண்களின் உணர்வு வரையறைக்குள் தான் அவளும் இருக்கிறாள். அவளுக்கும் இது போன்ற உணர்வுகள் வருவது இயல்புதான்.
ஆனால் அவளது இந்த உணர்வுகள், ஏதாவது ஒரு விதத்தில் ரங்கனை சுழற்றி அடிக்க போவது மட்டும் உறுதி. பெண்ணவள் ஆண் அவனை அன்பினால் கொள்ள போகிறாளா, இல்லை… உயிரோடு கொல்ல போகிறாளா?
பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் இந்த சமயத்தில் இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்குமா என்ன?
விடுமுறை நாட்கள் முடிந்தது ரங்கன் சென்னை சென்று விட்டான். அவனுக்கு சி. ஏ தேர்வுக்கு அட்டவணை வந்துவிட்டது. அதனால் அவன் பரிட்சைக்கு முன்பாக வைக்கப்படும் சில கோச்சிங் வகுப்புகளுக்கு சென்றாக வேண்டும்.
‘முதல்முறை எழுதும் தேர்விலேயே வெற்றி பெற்றாக வேண்டும். இதுவும் ஒருவகையில் முதலீடுதான்’என்று அவன் தந்தை பல முறை கூறிவிட்டார். அதற்கு என்ன அர்த்தம் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். தேவையில்லாமல் தனது வாய்ப்புகளை கெடுத்துக்கொள்ள அவனுக்கு எந்த பிடித்தமும் இல்லை.
புத்தக மூட்டையுடன் ரேணுகா சொல்லி அனுப்பியிருக்கும் ‘ நேரா நேரத்திற்கு சாப்பிடு,ஒழுங்காக தூங்கு ‘போன்ற அறிவுரைகளையும் மூட்டை கட்டிக்கொண்டு சென்னை நோக்கி பிரயாண பட்டான் ரங்கன். கிளம்பும் முன் ஸ்ரீரங்கத்திற்கு சென்று பாட்டி தாத்தாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டவன் நேரே தனது மாமன் மகளிடமும் சென்று நான் கிளம்புகிறேன் என்று சொன்னதுதான் தாமதம். பெண் அவள் கண்கள் தனது வேலையை செய்ய ஆரம்பித்து விட்டது. பல வருடங்கள் கழித்து அவனை பார்த்ததும், அவன் தன்னுடனேயே இந்த விடுமுறை முழுவதும் இருப்பான் என்று நினைத்ததன் ஞாபகம் வந்தவளாக, ‘இவ்வளவு சீக்கிரம் நீ போய் தான் ஆகணும ரங்கா’ என்றவளை இமை கொட்டாமல் பார்த்தவன் தனது கைகள் கொண்டு அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
“ நீ நல்லா படிக்கணும் சது… திருப்பியும் அடுத்த எக்ஸாம் லீவுல மீட் பண்ணலாம். கொஞ்சமாவது மெச்சூரிட்டிய வளர்த்துக் கோ. உடம்பை பாத்துக்கோ, கோபத்தையும் ரவுடி மாதிரி நடந்துக்கறதையும் குறைச்சுக்கோ” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.
‘’நான் உனக்காகத்தான் எங்க அப்பா அம்மா கூட ஊருக்கு போகலை’’ என்று சொன்னவளை வினோதமாக பார்த்தவன் அப்பா அம்மாவை விட நாம் முக்கியம் இல்ல சது என்றான். ஏனோ அவள் இவ்வாறு செய்தது அவனுக்கு பிடிக்கவில்லை.
மீதமிருந்த விடுமுறை நாட்கள் முழுவதும் அவள் ஸ்ரீரங்கத்தில் தான் இருந்தாள். ரங்கன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள்ளே சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதிகம் வெளியே போவதையும், படபடவென்று எப்பொழுதும் பேசிக் கொண்டே இருப்பதையும் குறைத்து கொண்டு விட்டாள். லட்சுமி அம்மாளுக்கும் தாமோதரனுக்கும் அவள் நடத்தை ஆச்சரியத்தை உண்டு பண்ணாலும், வயதுக்கு வந்துவிட்ட பெண் இதற்கு மேலும் குழந்தை தனமாகவே நடந்துகொண்டால் சரிவராது என்று யோசித்ததால் மேற்கொண்ட அவளிடம் எதுவும் பேசவில்லை, கேட்கவில்லை.
இதோ அதோ என்று மூன்று மாத விடுப்பு காலம் முடிந்து விட்டது. அவள் மீண்டும் தில்லி கிளம்பிவிட்டாள். நடுவில் இரண்டு முறை ரங்கன் அழைத்திருந்தான். ஒரு முறை போன் செய்து பேசினாள் அவனுடன்.
தான் அதிகமாக வகுப்புகளுக்கு சென்று கொண்டிருப்பதால் நேரம் கிடைக்கும்போது ‘நானே அழைக்கிறேன் நீ போன் செய்ய வேண்டாம்’ என்று விட்டான் ரங்கன். அவன் சொன்னது மனதிற்கு தைத்தாலும் அவன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிந்ததால் அமைதியாகி விட்டாள்.
ஆனால் ரங்கனிடம் ஏதோ மாற்றங்கள் என்பது அவளுக்குத் தோன்றியது. வழக்கமான ரங்கன் இல்லை அவன். தனது அத்தான் ரங்கனுக்கு இவ்வளவு கூர்மையாக பேச தெரியுமா என்று சாத்துர்யா இந்த மூன்று மாதங்களில் ஆச்சரியப்பட்டு போனாள்.
பதினொன்றாம் வகுப்பில் கணிப்பொறி மற்றும் அறிவியல் பிரிவை எடுத்தாள். படிப்பு அவ்வளவு வைத்துக் கொண்டதால் வேறு எதைப்பற்றியும் அவளால் மேற்கொண்டு சிந்திக்க முடியவில்லை. தன் மனதில் விதைக்கப் பட்டு இருந்த விதை… அதன் நிலை என்ன?
**********************************************************
ரத்னாவின் நிச்சயதார்த்த விழா இனிமையாக முடிந்துவிட்டது. மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் சீரையும் பணத்தையும் கொடுக்க பெண்வீட்டார் தயாராக இருக்கும்போது மனக்கசப்பு இருக்க இடம் ஏது? அவர்கள் கேட்கும் நகை தொகை பற்றி ஆழ்ந்த யோசனை ஒன்றும் ரத்னாவுக்கு இல்லை. பள்ளி சென்று கொண்டிருந்த சிறுமிக்கு அடுத்தது கல்லூரி படிப்பிற்கு மட்டும் தான் கனவு இருந்திருக்க முடியும். மற்றவற்றைப் பற்றி எல்லாம் அவளுக்கு ஒன்றும் யோசனையில்லை.
நான்கு மாதங்களுக்கு பிறகுதான் ரத்னாவின் ஜாதக அமைப்பின்படி திருமணம் செய்ய முடியும் என்று ஜோதிடர் சொல்லிவிட, சங்கரனுக்கு அந்த நான்கு மாதங்களும் நான்கு யுகங்களாய் தோன்றியது. ரத்னாவுக்கு அதுபோன்ற எந்த எண்ணங்களும் ஏனோ வரவில்லை. அவளைப் பொறுத்தவரை அத்தை மகனுடன் திருமணம் ஏற்பாடு ஆகி இருக்கிறது. இந்த ஏற்பாட்டில் அவளுக்கு பூரண சம்மதமே. அத்தை மகனையும் நிரம்பவே பிடித்திருக்கிறது. ஆனால் சங்கரன் போல் பிரிவுத்துயர் எல்லாம் அவளுக்கு இல்லை. இந்த நான்கு மாதங்களுக்குள் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் வந்து விடும்.
குறைந்தபட்சம் திருமண சமயத்தில் அவள் பன்னிரண்டாவது வகுப்பு முடித்து இருப்பாள்.
எப்படியாவது அப்பாவிடம் கெஞ்சி, தபாலில் படித்தாவது ஏதாவது ஒரு டிகிரி வாங்குவதற்கு முயல வேண்டும் என்று மனதிற்குள் உறுதி செய்துகொண்டாள்.
ரத்னாவின் பெற்றோருக்கோ திருமணம் ஏற்பாடு செய்வதற்கு நான்கு மாதம் அவகாசம் இருக்கிறது என்ற ஆசுவாசம். திருமணமும் இங்கு திருச்சூரில் தான் என்று விட்டாள் திலகம். இப்பொழுதெல்லாம் திலகம் சிவனின் தங்கையாக நடந்து கொள்வது இல்லை.
மணமகனின் அம்மா என்ற ரீதியில்தான் அவளது அதிகாரம் தூள் பறக்கிறது. முடிந்தவரை கெத்து காண்பித்து விட வேண்டும் என்று பையன் வீட்டார் என்ற கம்பீரத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் திலகமும் அவள் கணவர் சேகரனும். சங்கரனின் தங்கை கூட அத்தை மகளிடம் பழகுவது போல் அல்லாமல் நாத்தனார் முறையில் பழக ஆரம்பித்து விட்டாள்.
திலகம் சொல்வதை வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் சிவன். அவருக்கு அருணாச்சலம் பற்றிய கவலை எல்லாம் இப்போது இல்லை. அன்னபூரணி மீது அவருக்கு பூரண நம்பிக்கை உண்டு.
யார் என்ன சொன்னாலும் செய்தாலும் அன்னபூரணி நமது மகளை நல்லபடியாக வைத்துக் கொள்வாள் என்ற ஆணித்தரமான எண்ணம் அவருக்கு. ஆனால் ரத்னாவின் வாழ்க்கையை நினைத்து தான் சிவனுக்கு பயம் அதிகமாகி விட்டது. தனது சின்ன மகளை வேறு எங்காவது நல்ல இடம் பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கலாம். அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் நிச்சயதார்த்தம் நடக்கும் இந்த நாட்களிலேயே அவருக்கு வந்துவிட்டது.
ஆனால் இவ்வளவு நடந்த பிறகு வேற என்ன செய்ய முடியும் மேற்கொண்டு திருமணத்தை நடத்த வேண்டியது தான். அவர் மனதுக்குள் ஒரு சலிப்பும் ஆயாசமும். ஏற்கனவே பாறுவை கண்டால் திலகத்திற்கு ஆகாது. ரத்னா கொஞ்சம் கொஞ்சம் அம்மாவின் சாயலை கொண்டு இருந்தாள். அது வேறு திலகத்திற்கு ரத்னாவை மருமகளாக ஏற்க அவ்வளவு தூரம் பிரியமாக இல்லை. ஆனால் சங்கரனுக்கு ரத்னாவை பிடித்திருந்தது.
சிவன் தனது மூத்த மகளுக்கு நல்ல பெரிய இடத்தில் திருமணம் நிச்சயம் செய்திருந்தார். ரத்னாவுக்கு அண்ணன் மணமகன் பார்த்துக்கொண்டிருக்கிறான், என்று இன்னும் ஏதேதோ கணக்குகள் போட்டு இந்த திருமணத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டாள் திலகம். ஆனால் தனது அண்ணியின் மீது உண்டான வெறுப்பு, ரத்னாவை தனது அண்ணன் மகளாக பார்க்கவிடாமல் வெறுப்பு என்னும் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்க வைத்துவிட்டது.
சங்கரன் ரத்னாவுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எவ்வளவுதான் யோசித்தாலும், திலகம் அதற்கெல்லாம் விடுவாளா என்பது எனக்கு சந்தேகம் தான்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் ஓடிக் கொண்டிருக்க உமாவின் மனதிலோ குருபரன் பற்றிய பயம் ஆட்கொண்டது. அவனுக்காக பயந்துதான் ரத்னா விற்காக இவ்வளவு சீக்கிரம் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யச்சொல்லி தந்தையை வற்புறுத்தியது .
ஆனால் ஜாதகம் ஜோசியம் என்று ஏதேதோ காரணங்களால் ரத்னாவின் திருமணம் நான்கு மாதத்திற்கு தள்ளி போனது உமாவிற்கு பெருத்த ஏமாற்றத்தையும் பயத்தையும் கொடுத்தது. அவள் பயம் அர்த்தம் அற்றது அல்ல. அவன் வீட்டிற்கு வந்து இருந்தபோது ரத்னாவை பார்த்த பார்வை, இப்பொழுதும் உமாவிற்கு நடுங்குகிறது. அவன் ரத்னாவின் ஆடைகளை மீறி பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த சிறுமியின் உடல் அழகை அந்த பொறுக்கியின் கண்கள் லேசர்பார்வை கொண்டு அளவிட்டு கொண்டிருந்தது. வீட்டில் இதைப்பற்றி எல்லாம் முழுமையாக உமா சொல்லவில்லை. சொன்னாலும், வீட்டில் உள்ளவர்கள் பயப்படுவார்கள் தவிர வேறு பயன் ஏதும் கிடையாது. ரத்னாவின் மனதில் அச்சம் தலை தூக்கிவிடும். இதெல்லாம் நடைபெற விடாமல் அந்த பெண்ணிற்கு நல்ல சிறந்த ஒரு வழியை கொடுத்து அவளை நகர்த்தி விட வேண்டும் என்றுதானே உமா இவ்வளவு பிரயத்தன பட்டது.
இந்த நான்கு மாதங்களிலும் குருபரனின் கண்களில் தன் தங்கை விழாமல் இருக்க வேண்டுமே, ‘அம்மே பகவதி, அவள் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு செல்ல வேண்டுமே’ என்று அவள் மனதில் ஓயாமல் தங்கை பற்றிய பிரார்த்தனைகள்.
சொன்னாலும் சொல்லாவிட்டாலும், தன் தங்கையின் நல்வாழ்விற்காக இவ்வளவு யோசிக்கும் உமா , நல்லா அக்கா தான்! பெற்றோருக்காக, குடும்பத்துக்காக தன்னைத்தானே தியாகம் செய்யும் அந்தப் பெண் நல்ல மகளும் தான்.
இவள் போன்று பெண்களின் தியாகத்தில்தான் பல குடும்பங்கள் வாழ்கின்றன.
“ராகாயியின் தியாகம் ஒரு வகை என்றால் உமாவின் தியாகம் இன்னொரு வகை. இவற்றுக்கு நிச்சயம் விலை இல்லை.”
திருச்சூரில் இருந்து பூங்குவளை வந்ததில் இருந்து ரத்னாவுக்கு கல்யாணம் பற்றிய எண்ணங்களும் குழப்பங்களும் சுற்றி வளைத்தது. அவளுக்கு சங்கரன் பற்றிய யோசனைகளும் தயக்கங்களும், பயமும் உண்டு.
விழா முடிந்து பத்து நாட்களில் சங்கரன் வந்தான். வந்தவன் ரத்னாவை கிணற்றடிக்கு அழைத்து சென்று, அவளுடன் தனியாக பேச முயற்சி செய்ய, ஐயோ பாவம், அவளுக்கு வார்த்தை தொண்டை குழியில் சிக்கிக்கொண்டது. அவளால் பதட்டமின்றி நிற்கவும் முடியாது தளர்ந்து அருகிருந்த துணி தோய்க்கும் கல்லில் தொய்ந்து அமர்ந்து கொண்டாள்.அவன் உயரத்திற்கு பள்ளிக்கூடம் முடித்திருந்த ரத்னா மிகவும் சிறியவளாக தெரிய, மீண்டும் திகைத்து நின்றான் சங்கரன். ‘ச்சை, யோசிக்காமல் வீட்ல சொல்றாங்கன்னு சின்ன பிள்ளையை கல்யாணம் செய்ய ஒத்துகிட்டது தப்போ ‘என மீண்டும் அவனுக்குள் அழுத்தம்.
ரத்னா சுரிதார் அணிந்திருந்தாள். ஒரு வேளை அதான் சின்ன பெண்ணா தெரியுறாளோ என்று யோசித்து ‘இனி நீ சேலை காட்டுறியா ‘என்றவனின் பார்வை கொண்டே புரிந்து கொண்டாள் ரத்னா. அவளுக்கு மனதில் சிரிப்பூ அலையாய் பொங்கியது.
சரி எனும் ஒற்றை வார்த்தை வெளி வர அவளிடம் தவித்து, பின்னர் அப்படியும் இப்படியுமாய் வெறும் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். அவள் கைகள் சிலிர்த்து சில்லென காணப்பட்டது. லேசாக அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. அவளின் நிலையை புரிந்துகொண்டு, அந்த சிறு பெண்ணின் தளிர் கைகளை தனது பிரம்மாண்ட கைகளுக்குள் பொத்தி தைரியம் ஊட்ட முயற்சித்தான் சங்கரன். ஆனால் அவன் உணர்ந்தது அவனுக்கு அவ்வளவு சந்தோசமாக இல்லை. நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது இன்னும் இந்த பெண்ணுக்கு என் மேல் என்ன பயம்? என்ற சிணுங்கியது அவன் மனம்.
ஒரு பக்கம் ரத்னா பற்றிய குழப்பங்கள் இருந்தாலும் இன்னொரு புறம் திருமணம் பற்றிய எதிர்பார்ப்புகளும் நிறையவே உண்டு. ரத்னாவின் பற்றிய கற்பனைகளும், அந்தரங்க எதிர்பார்ப்புக்களும் கூட இருக்கிறது.
திருமணம் நிச்சயம் ஆன பிறகு எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் சராசரி எண்ணங்களும் கற்பனைகளும், திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் மீது நேசமும், பத்தே நாட்களில் அவனை ஏதோ காரணங்கள் சொல்லி கொண்டு, தானே சரக்கை திருச்சிவரை எடுத்துவந்து இறக்கிவிட்டு ரத்னாவின் வீட்டுக்கும் வந்து விட்டான்.
ஆனால் அவன் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளும் அளவில் பெண் இன்னும் வளரவில்லை. பெரும்பாலும் இது போன்ற விஷயங்கள் நகரத்தில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் பெண்கள், ரகசியமாய் சில சமயங்களில் பேசிக் கொள்வது உண்டு.
ஆனால் கிராமத்தில் வளரும் இந்த பெண்ணுக்கு இவை பற்றியெல்லாம் இன்னும் விபரம் வளரவில்லை.
கொஞ்ச நேரம் பொறுத்திருந்து அவளையே பார்த்தவன் அவள் தலை நிமிர்ந்து தன்னை பார்க்க போவதில்லை என்பது தெளிவாக புரிய ஆழமாக ஒரு மூச்சு எடுத்துவிட்ட கொண்டு, தன்னை சமன்செய்தவனாக அவளுக்காக இவன் பிரத்தியேகமாக வாங்கி வைத்திருந்த ஆண்ட்ராய்டு போனை ரத்னாவின் கையில் வைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
வீட்டினுள் பாறுக்குட்டி மாப்பிள்ளைக்காக வகையாக சமைத்து வைத்திருக்க சங்கரன் அவசரமாக கிளம்ப வேண்டுமென்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அவன் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிய அவன் எதிர்பார்ப்புகள் புரிந்தவளாக தனது அறை வாயிலிலிருந்து கூடத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருந்த உமா நேரே கிணற்றடிக்குப் சென்று, கையில் இருந்த போனையே வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தனது தங்கையிடம் ‘அத்தான் கிளம்புறாரு பாரு, போயி அவரை சாப்பிட்டு போக சொல்லி கூப்பிடு’ என்று மறைமுகமாக அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க தன்னிலை அடைந்தவளாக ரத்னா அவசரமாக எழுந்து வாயிலை நோக்கி ஓடினாள்.
அவள் ஓடிய வேகத்தைப் பார்த்த உமாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதேசமயம் அவசரம் அவசரமாக தன்னை நோக்கி ஓடிவரும் பெண்ணை பார்த்து திகைத்து நின்றான் சங்கரன். மெதுவாக தன் குரலை மீட்டெடுத்தவளாக ரத்னா,’ இப்ப கிளம்ப அவசரமா அத்தான், சாப்பாடு சாப்பிட்டு போகலாமே ‘ என்றவளை பார்த்து அவனுக்கு மயக்கம் வராத குறைதான்.
ஆனாலும் தன் கெத்தை குறைக்கமாட்டாதாவனாக ‘’இல்ல ரத்னா, இன்னொரு நாள் வரேன்’ ‘என்றான். அவன் வயிறோ, இந்த முறுக்கு தேவையா என்று காறித் துப்ப, மனமோ, “என்னை எப்படியாவது கெஞ்சி கொஞ்சி கூட்டிட்டு போ பார்க்கலாம்” என்று அவளிடம் செல்லம் கொஞ்சியது.
அதற்குள் வெளியில் விளையாடிவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்த சாந்தாவோ வெகு அசால்டாக, “அத்தான் போதும் பிகு பண்ணது… எனக்கும் பசி வயித்த கில்லுது. வாங்க சாப்பிட போகலாம்” என்றுவிட்டு உள்ளே சென்று விட்டாள். ரத்னாவுக்கு இப்போதுதான் மூச்சே வெளி வந்தது.
உமா அவளை தனியே அழைத்து ‘அத்தானுக்கும் சாந்தாவுக்கும் நீயே போய் பரிமாறு ‘ என்று சொல்லிக்கொடுக்க, நேரே அடுக்களைக்குள் நுழைந்த ரத்னா அவர்கள் இருவருக்கும் தட்டை எடுத்து வைத்தாள். அதற்குள் பாறுவை அமர சொன்ன உமா தானே நேரே அடுக்களைக்குள் புகுந்து ரத்னாவுக்கு உதவுபவளாக, சாதம் இருக்கும் தட்டை எடுத்துக்கொண்டு சங்கரன் அருகில் செல்லும் போது ரத்னாவுக்கு கைகால்கள் உதறின.
சட்டென்று சாந்தா, நிலைமையை புரிந்து கொண்டு, ரத்னா கீழே போடுவதற்குள் தானே வாங்கி சங்கரனுக்கு போட்டுவிட்டு தனக்கும் போட்டுகொண்டாள். ரத்னாவுக்கு கண்கள் கலங்கி விட்டது. ஒரு வழியாக இருவரும் சாப்பிட்டு முடித்து, சங்கரன் கிளம்பும் பொழுது அவளது கலங்கிய பயந்த முகம் அவள் மனதை கூற, அவளிடம் சொல்லிக்கொள்ள பின் கட்டில் இருந்தவளை தேடிச் சென்று, இனிமேல் தினமும் ராத்திரி போன் பண்ணுவேன். தூங்கிடாதே என்றான்.
அவளுக்கும் தன்மீது இருக்கும் பய உணர்வை திருமணத்திற்கு முன் நீக்கியாக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது. அவன் மீது திருமணத்திற்கு முன் காதல் வளரவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் இந்த ஒதுக்கமும் பயமும் ம்ஹும்… நிச்சயம் சரிப்படாது. திருமணம் செய்துகொண்டால் தனது சரிபாதியாக இருப்பவள் தன்னைக் கண்டு அஞ்சுவது அவனுக்கு பிடிக்கவில்லை.
மெல்லமெல்ல எப்படியாவது அந்த சிறு பெண்ணின் மனதிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். நிச்சயதார்த்த நாள் அன்று நிர்மலமான முகத்துடன் அழகு பதுமையாக தன் அருகில் அமர்ந்திருந்த ரத்னாவை அவன் மனம் தேடியது.
ஒருவழியாக ரத்னாவின் வீட்டிலுள்ளோர் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் சங்கரன். சங்கரன் வந்திருந்த நேரம் சிவம் அருணாச்சலத்துடன் முக்கிய வேலைக்காக சென்னை சென்றிருந்தார்.
பாறு அவருடன் இரவில் தொலைபேசியில் பேசும்போது சங்கரன் வரவை தெரிவித்தார். கேட்டுக்கொண்டிருந்த சிவனுக்கும் மனதிற்கு சந்தோஷம் தான். சங்கரனுக்கு இந்த திருமணத்தின் மீதான பிடித்தம் நன்கு புரிகிறது. தன் மகள் அதிர்ஷ்டசாலிதான் என்று நினைத்துக் கொண்டார் சிவன்.
ஆனால், மற்ற இரு மக்களுக்காக யோசித்தவர் தங்கள் முதல் மகளை பலியிடத் துணிந்தது பற்றி அவருக்கு அந்த சமயத்தில் எந்த ஞாபகமும் வரவில்லையே! எழுதிய எழுத்தை என்றுமே எவராலும் மாற்ற முடியாது என்பது இதுதானோ?
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

