Loading

அடுத்த ஒரு மாதமும், வேலையை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு முழுக்க முழுக்க யாஷ் பிரஜிதனுடன் மட்டுமே இருந்தாள் நிதர்ஷனா.

காலும் நன்றாக வீங்கி இருந்ததில், அவளுக்கு பரிதவிப்பு தாளவில்லை.

அவனுக்கு வலியும் அதிகம் இருந்ததில், மருகி விட்டாள்.

“ரொம்ப வலிக்குதா அரக்கா?” வேதனை தோய்ந்த குரலில் கேட்டவளிடம், “நத்திங்டி. அவ்ளோ வலி எல்லாம் இல்ல. நீ ஆபிஸ்க்கு போயிட்டு வா…” என்றான்.

“உன்னை தனியா விட்டுட்டா?” கண்ணை உருட்டி முறைத்தவளிடம், “ஐ கேன் மேனேஜ் மின்னல். மம்மாவும் ஊருக்குப் போகாம இங்க தான இருக்காங்க. அப்பறம் என்ன?” என்றதில், “அப்போ அவங்க மட்டும் இருந்தா போதுமா?” என்று அவன் சட்டைக் காலரைப் பற்றினாள் கோபமாக.

“நோப்! ஐ நீட் யூ பேட்லி மின்னல்” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

“நீ வீட்ல இருந்தா என்னை பார்த்து பார்த்து ஃபீல் பண்றடி. உடனேவா சரி ஆகும். டாக்டர் ஒன் மந்த் டைம் குடுத்து இருக்காங்கள்ல… தென் வாட்?” என்று பேசிப் பேசி அவளை சமாதானம் செய்திருந்தான்.

தினமும் ஆதிசக்தி அவளுக்குப் பால் கலந்து கொடுப்பதை தனது தலையாய கடமையாக செய்தார்.

நாள்கள் வேக வேகமாய் பறந்தோட, யாஷிற்கும் காயம் ஆறி இருந்தது.

இந்த சம்பவத்திற்கு காரணமாவனைப் பிடித்து உயிர் போகும் அளவிற்கு அடித்து விட்டான் யாஷ்.

சற்று பிசகி இருந்தாலும் கண்மணியின் உயிருக்கே ஆபத்தாகி இருக்குமே. கூடவே நிவேதனுக்கும் பெரும் ஆபத்தாய் உருவாகி இருக்கும்.

ஆனால் எத்தனை அடித்தும், யாஷ் பிரஜிதனின் தொழில் முறை எதிரி பணம் கொடுத்து செய்யச் சொன்னதாக சொன்னானே தவிர, அது யார் என்னவென்ற விவரத்தைக் கூறவே இல்லை.

அவனது பின்னணியை தீவிரமாய் விசாரித்து கொண்டிருந்தான்.

இந்நிலையில் ரித்திகாவும் ஆஹில்யனும் இத்தாலியில் வேலையை முடித்துக் கொண்டு சென்னைக்குத் திரும்ப ஆயத்தமாகினர்.

வாரம் ஒரு முறையேனும் ரித்திகாவும் ஆஹில்யனும் வீடியோ காலில் இணைந்து விடுவர்.

அனைவருமாக அவர்களுடன் அரட்டை அடிப்பதும் வழக்கமாகி இருக்க, இன்றும் ரித்திகா யாஷிற்கு அழைத்திருந்தாள்.

“இப்ப கால் எப்படி இருக்கு யாஷ்?”

“யா பெட்டர் பேப். அங்க எல்லாம் செட் பண்ணியாச்சா?” என அர்த்தமாய் கேட்க,

“எஸ். பட் ஒர்க் அவுட் ஆகுமா யாஷ்?” என்றாள் சந்தேகமாக.

“எனக்கு யார் யார் மேல டவுட் இருக்கோ. அவங்களை எல்லாம் நான் விடுறதா இல்ல பேப்” தீர்மானமாக உரைத்தவனிடம், அருகில் நிதர்ஷனா இருந்ததால் மேலும் பேச இயலாமல் மற்றவர்களிடம் பேசத் தொடங்கினாள்.

“மாம்ஸ் எங்க?” நிதர்ஷனா ஆஹில்யனை விசாரிக்க, “அவன் இன்னும் ஆபிஸ்ல இருந்து வரல… சென்னைக்கே ரிட்டர்ன் ஆக போறோம்னு அவனுக்கு தலை கால் புரியல… அதுனால ஓவர்டைம்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கான்” என்றாள்.

சிறிது நேரத்தில், மற்றொரு அழைப்பு வந்ததில், ரித்திகாவின் அழைப்பைத் துண்டித்தான்.

ஏஞ்சலினா தான் அழைத்திருந்தார்.

“ஹாய் ஆண்ட்டி…” யாஷ் உற்சாகமாக பேச,

“ஹாய் யாஷ். ஹொவ் ஆர் யூ…?” என்ற ஏஞ்சலினாவின் குரலில் சுருதியே இல்ல.

“யா ஃபைன். வாட் ஹேப்பண்ட் ஆண்ட்டி?”

அவரோ இத்தாலி மொழியில், “சைனாக்காரன் குடுத்த ப்ராஜக்ட் என்ன ஆச்சுன்னு கேட்டு அந்த கவர்மெண்ட் ஆளுங்க ரொம்பத் தொல்லை பண்றாங்க யாஷ். எலைட்டோட எம். டி’ன்ற முறையில நான் எவ்ளோவோ சொல்லிப் பார்த்துட்டேன். அவங்க டைரக்டா சேர்மன் ஆதியை காண்டாக்ட் பண்ணனும்னு சொல்றாங்க. உன்னை சைனா வர சொல்லி ஃபோர்ஸ் பண்றாங்க. ப்ராஜெக்ட்டை டிஸ்கார்ட் பண்ணிட்டனு நீ தெரியப்படுத்துறது பெஸ்ட் யாஷ்…” என்றார்.

“ஸ்பேஸ்கு அனுப்புற ப்ராஜெக்டை டிஸ்கார்ட் பண்ணிட்டேன்னு நான் எப்போ சொன்னேன் ஆண்ட்டி?” ஏளன நகை புரிந்த யாஷ் பிரஜிதனின் கூற்று புரியாது ஏஞ்சலினா விழித்தார்.

“அது என்னோட உழைப்பு ஆண்ட்டி. அதை எந்த நோக்கத்துக்காக நான் உருவாக்குனேனோ, அந்த நோக்கத்துக்காக கண்டிப்பா பயன்படுத்துவேன். ஆனா சைனாவுக்கு ஃபேவரா இல்ல. எந்த கண்ட்ரி என்னோட டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்கு உட்படுதோ, அந்த கண்ட்ரிக்கு ஆதரவா என்னோட ஏ. ஐ ஸ்பேஸ்க்கு போகும். இந்தியாவோட சேர்த்து மொத்தம் 10 கண்ட்ரிகிட்ட பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கேன். வில் ஸ்ஸீ…”

“பட் யாஷ், இதுக்கான இன்வெஸ்ட்மென்ட் சைனா தான் செஞ்சான். இது தெரிஞ்சா உனக்கு நிறைய ஆபத்து வரும் யாஷ்… லீகலா போகவும் சான்ஸ் இருக்கு” ஏஞ்சலினா தவித்துப் போனார்.

“ஐ நோ ஆண்ட்டி. பட் அவங்க டீலிங் வச்சுக்கிட்டது எக்ஸ் சேர்மன் வரதராஜன்கிட்ட… நியூ சேர்மன் இதுக்கான அப்ரூவல் குடுக்கலைனு ப்ரூவ் பண்ணலாம். லீகலா போக மாட்டாங்க ஆண்ட்டி. அப்படி லீகலா போனா, அந்த நாட்டோட வண்டவாளம் எல்லாம் வெளில வந்துடும். நாட் ஒன்லி தட், இத்தாலில அலெஸ்கு ஆதரவா இருந்த கவர்மெண்ட் பத்தியும் வெளில வந்தா, நாட்டோட பேரே அடியாகிடும். இல்லீகளா தான் மூவ் பண்ணுவாங்க.” எனும்போதே அவன் இதழ்கள் இளக்காரமாக வளைந்தது.

“இல்லீகளா போறது தான் எனக்கும் கம்ஃபர்ட்!”

ஆடவனின் மிடுக்கு அவர் அறிந்தது தான். ஆனாலும் மனம் பதறியதே!

அழைப்பைத் துண்டித்த யாஷ் பிரஜிதனை ‘ஆ’ வென பார்த்திருந்த நிதர்ஷனா, “இன்னாயா வளவள கொழ கொழனு வாயில நொழையாத பாஷையா பேசுற…” என்றாள் உதட்டைப் பிதுக்கி.

அதில் அத்தனை நேரமும் முகம் தாங்கிய கோபம் கரைந்திருக்க சிரித்திருந்தான்.

“என்ன பேசுன உன் அத்தைட்ட?” நிதர்ஷனா கேட்டதும், அவளைக் கை வளைவில் வைத்தபடி விவரத்தைக் கூறினான்.

அவளோ ஏஞ்சலினா போல பயப்படவெல்லாம் இல்லை. துள்ளிக் குதித்து எழுந்தாள்.

“அப்போ நீ கண்டுபிடிச்சதை லேப்ல போட்டு பூட்டி வைக்க மாட்ட தான?” என்னவோ அவளே விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பப் போவது போல பூரித்துப் போனாள்.

அவளது மகிழ்வை ஆழ ரசித்தவன், “நோ டி… என் ரிசர்ச் என்னைக்கும் வேஸ்ட் ஆகாது. என் ஆலம்பனா அதை விரும்ப மாட்டா…” என்றதில், “ஆமா ஆமா… உனக்காக நடிச்சதெல்லாம் வீணாகிட கூடாது” என்றாள் குறும்பாய்.

“ஹான்… நடிச்சது வீணாகலையே! ஹ்ம்ம்…?” கிசுகிசுப்பாய் அவள் காதோரம் ஏதோ முணுமுணுக்க, வெட்கம் தளும்பிட அவனைத் தள்ளி விட்டவள், “போ அரக்கா!” என வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.

இதற்கிடையில், யாஷ் பிரஜிதனின் காயம் ஆறியதும் ஆதிசக்தி அவர்களை தஞ்சாவூருக்கு வரச் சொல்லி வற்புறுத்தினார்.

“அங்க இருந்து பக்கத்துல தான் குலதெய்வம் கோவில் இருக்கு யாஷ். ஒரே நாள்ல அங்க பொங்கல் வச்சு கும்பிட்டுட்டு வந்துடலாம்…” என்றதில், “இப்போ வேணாமே மம்மா” என்றான்.

பின் நிதர்ஷனாவின் நச்சரிப்பில் ஒப்புக்கொள்ள, அனைவருமே தஞ்சாவூருக்கு கிளம்பினர்.

கதிரவன் மட்டும், “நீங்க குடும்பமா போறீங்க… போயிட்டு வாங்களேன். நான் என் வீட்ல இருக்கேன் அதுவர…” என்று பின்வாங்க முற்பட, “நீயும் வாடா” என்றான் நிவேதன்.

“இல்ல மச்சி… உனக்கே தெரியும்ல என் அம்மா இன்னும் மலை இறங்கவே இல்ல. நான் தனியா போய் அதுக்கு புரிய வச்சா கரெக்ட்டா இருக்கும்ல…” என்று சிந்தாமணியின் அழுத்தப் பார்வையில் இருந்து தப்ப முயல, அவளோ அவனை முறைத்திருந்தாள்.

“வாட் இஸ் கோயிங் ஆன்?” தனது கைக்கடிகாரத்தை அணிந்தபடி அங்கு வந்த யாஷ் வினவ, நிவேதன் விவரம் கூறியதும், அவன் சிந்தாமணியை ஒரு பார்வை பார்த்தான். அவளது தீப்பார்வை கதிரவனை தீண்டியதைக் கண்டு, லேசாய் இதழ் விரித்தவன், “ப்ராஜக்ட் முடிஞ்சதும் நீ தாராளமா போ. நொவ் கெட் இன் டு தி கார்” என்று பணிக்க, கதிரவனுக்கு மறுக்க இயலா நிலை.

‘தஞ்சாவூர்ல போய் யாராண்டையும் செருப்படி வாங்காம இருக்கணும்’ என்று மனதினுள் வேண்டுதல் வைத்தபடி அவர்களுடன் சென்றான்.

அங்கு கிருஷ்ணவேணி தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

அழகேசன் ஏதோ ஒரு யோசனையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு, “என்னங்க… பிள்ளைங்க எல்லாம் வர்றாங்க. உங்க முகத்துல சந்தோசமே இல்ல” அடுக்களை வேலையை முடித்துக்கொண்டு முந்தானையில் கையைத் துடைத்தபடி அவர் அருகில் அமர்ந்தார் கிருஷ்ணவேணி.

“நம்ம கண்மணிட்ட பிரச்சினை பண்ணுனான்னு யாஷ் ஊர்த்தலைவர் மகனை அடிச்சான்ல. அவனுக்கு கூட ஆக்சிடெண்ட் ஆச்சே. இப்ப தேறி வந்துட்டான். ஆனா விஷயத்தை அவன் அப்பாட்ட சொல்லிட்டான் போல. என் பையன் மேல கையை வச்ச யாரையும் சும்மா விட மாட்டேன்னு காலைல வயல்ல வந்து மிரட்டுப் போனான் கிருஷ்ணா… அதான் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு”

“என்னங்க சொல்றீங்க. அப்போ பசங்களை வர வேணாம்னு சொல்லிடலாமே” கிருஷ்ணவேணி படபடக்க,

:நானும் யாஷ்கிட்ட விஷயத்தை சொல்லிடலாம்னு போன் பண்ணுனேன். பிளைட் எல்லாம் ஏறிட்டாங்க போல… யாஷ் நான் பாத்துக்குறேன்னு சொல்லிடுச்சு.” என்றார்.

“அப்பறம் என்னங்க யாஷ் தம்பி பாத்துக்கும். நீங்க கவலைப்படாதீங்க” எனும்போதே வாசலில் அரவம் கேட்க,

“எல்லாரும் வந்துட்டாங்க போல. போய் வாசல்ல நிக்க சொல்லுங்க. நான் ஆரத்தி எடுத்துட்டு வந்துடுறேன்…” என்று வேகமாய் உள்ளே சென்றவர், “மாமா எல்லாரும் வந்துட்டாங்க” என்று மகேந்திரனுக்கும் குரல் கொடுக்க, அவரும் சிறுவனாக வேக வேகமாய் வெளியில் வந்தார்.

அழகேசன் அனைவரையும் வரவேற்று யாஷ் மற்றும் நிதர்ஷனாவை மட்டும் வெளியில் நிற்க சொன்னார்.

“என்ன பெரியப்பா, லேட்டா வந்துட்டோம்னு பனிஷ்மெண்ட்டா” என்று நிதர்ஷனா குறும்பாய் வினவ, “அட அதெல்லாம் இல்லமா… கல்யாணம் ஆகி மொத மொதல்ல வர்றீங்க. ஆரத்தி எடுக்கணும்ல…” என்றார்.

அவரைப் பொறுத்தவரை இத்தாலியில் நடந்தது தான் உண்மைக் கல்யாணம்.

அதற்குள் கிருஷ்ணவேணியும் வந்து விட்டார். “சிந்தா நீ தான் ஆரத்தி எடுக்கணும் எடு…” என்றிட, “மாமா… கத்தையா காசு போடணும் ஓகே வா” எனக் கேட்டபடி இருவருக்கும் ஆரத்தி எடுத்தாள்.

யாஷ் அவளை விசித்திரமாய் பார்த்து, “வாட் தி ஹெல் இஸ் திஸ்? இதென்ன ரெட் கலர்ல இருக்கு” என்று ஆரத்தி தட்டை பார்த்துக் கேட்க, “ஆட்டு ரத்தத்துல ஆரத்தி எடுத்தா கண்ணு படாதாம் அரக்கா” என்று கேலி செய்தாள் நிதர்ஷனா.

“வாட்?” யாஷ் பிரஜிதன் முகம் சுருக்க, கண்மணி “ஐயோ சும்மா இருங்க அண்ணி… அண்ணா இது ஒரு சம்பிரதாயம்…” என்று புளி போட்டு விளக்கிட,

சிந்தாமணியும் “ஆமா ஆமா… யார் உங்களை கண்ணு படாம காப்பாத்தி ஆரத்தி எடுக்குறாங்களோ அவங்களுக்கு காசு குடுக்கணும்…” என்று தட்டை நீட்ட,

நிதர்ஷனாவும் “பணம் குடுத்துடுங்க யாஷ். இல்லனா நம்மளை வாசல்லேயே நிக்க வச்சுடுவா போல…” என்றதில், சில ஐநூறு ரூபாய் தாள்களை கொடுக்க, “ஹை தேங்க்ஸ் மாமா…” என்று துள்ளிக் குதித்து ஆரத்தியை வாசலில் கரைக்கச் சென்றாள்.

“பைத்தியமா இவ… ஏதோ பணத்தை பார்க்காத மாதிரி போறா” யாஷ் கேட்டதில்,

“அதெல்லாம் ஒரு ஃபீல் யாஷ். என்ன தான் எல்லாமே இருந்தாலும், நமக்கே நமக்குன்னு ஒருத்தங்க குடுக்குற கிஃப்ட் ஸ்பெஷல் தான?” என இருவரும் பேசியபடி உள்ளே வர, நிதர்ஷனாவை பூஜை அறையில் விளக்கேற்ற சொன்னார் ஆதிசக்தி.

அதன்பிறகு, நிதர்ஷனாவின் காலைத் தரையில் படர விடாதவாறு மொத்தக் குடும்பமும் அவளைத் தாங்கியது.

எப்போதும், யாஷின் குடும்பத்தினர் அவளை உள்ளங்கையில் தாங்குவதை இத்தாலியில் பார்த்திருக்கிறான் நிவேதன்.

ஆனால், இப்போது இது அவளுக்கு புகுந்த வீடு. பிறந்த வீடும் கூட!

“அண்ணிக்கு பிறந்த வீடு தான் தஞ்சாவூர்ல இருக்கே…” கண்மணி விளையாட்டாய் சொன்னாலும் கூட உண்மை அது தானே!

இங்கிருக்கும் வசதி வாய்ப்புகளும் ஆள்களும், தான் தனியே வீடெடுத்து தங்கினால் கிடைத்திடுமா? அல்லது இவர்களை போல கவனித்திட தான் முடியுமா? நிவேதனின் உள்ளம் வெதும்பி விட்டது.

அதனைக் கவனமாய் வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டான்.

விருந்தும் உண்டு முடித்தபின், இளவேந்தன் “நாளைக்கு காலைல கிளம்பிடலாம். எல்லாரும் நாலு மணிக்கு கிளம்பிடுங்க…” என்றதும், நிதர்ஷனா “கோவில் ரொம்ப தூரமா மாமா?” எனக் கேட்டாள்.

“இல்லமா பக்கம் தான். நாங்க அந்தக் கோவிலுக்குப் போயே பல வருஷம் ஆகிடுச்சு.”

“அங்க போய் என்ன பண்ணனும் மாமா” நிவேதன் கேட்டதும்,

“பொங்கல் வச்சுட்டு கும்பிட்டுட்டு, அன்ன தானத்துக்கும் ஏற்பாடு பண்ணிருக்குப்பா… எப்பவும் ஆதியும் அமுதாவும் தான் பொங்கல் வைப்பாங்க… அமுதாவோட கல்யாணத்துக்கு முன்னாடி போனது” எனப் பெருமூச்சு விட்டார்.

“நாளைக்கு அவள் இடத்துல நீ தான்மா பொங்கல் வைக்கணும்” என்று நிதர்ஷனாவிடம் இளவேந்தன் கூறிட, “அதான் அத்தை இருக்காங்களே… கண்மணி சிந்தாவும் வைக்கட்டும்!” பட்டென மறுத்து விட்டதில் இளவேந்தன் விழித்தார்.

நிவேதனுக்கும் சங்கடமாகி விட, “நிதா பெரியவங்க சொல்றாங்கள்ல நீ தான் வைக்கணும்னு…” என்று கண்டிக்க,

“அப்படி நான் பொங்கல் வைக்கணும்னா, காசிமேட்டாண்ட நம்ம எப்பவும் போற காளிகாம்பாள் கோவில்ல வச்சுக்கலாம். நம்ம சின்ன வயசுல இருந்து அங்க தான போறோம். அப்ப அது தான் நமக்கு குலதெய்வம்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறி விட்டதில் நிவேதன் சிலையாகி விட்டான்.

இந்த வீட்டை புகுந்த வீடாய் கருதிக் கொள்ளுபவள், ஒரு சதவீதம் கூட பிறந்த வீடாய் கருதவில்லை என்பது அனைவர்க்கும் நன்கு புரிந்தது.

நிவேதனுக்கும் கண்கள் பனித்து விட, அங்கு அமர இயலாமல் விறுவிறுவென பின் பக்கத்திற்குச் சென்று விட்டான். துணி துவைக்கும் கல்லில் கையை ஊன்றி நின்றவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

“டேய் என்னடா” கதிரவனும் அவன் பின்னால் சென்று தோளைத் தொட, வேகமாய் கண்ணைத் துடைத்துக் கொண்டவன், “ஒன்னும் இல்ல” என்றான்.

அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்த நிதர்ஷனாவும், “ஹய்ய இன்னாத்துக்கு நீ இப்ப வாட்டர் ஃபால்ஸை தொறந்து விட்ட?” எனத் தலையைச் சொறிந்து விட்டு, “ஓஹோ… நீ மொத்தமா என்னை இங்கயே தார வார்த்துக் குடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா?” என்று புடவை முந்தானையை இடுப்பில் சொருகினாள்.

“இல்ல இல்ல”

“அப்பறம் வேற என்ன நினைச்ச? நான் அப்படியே போய்டுவேன்னா?” கேட்டபடி துணி துவைக்கும் கல்லிற்கு பின் புறம் இருந்த விளக்கமாறை கையில் எடுக்க, நிவேதன் திருதிருவென விழித்தான்.

“ஏய் நிதா நான் அப்படி எல்லாம் நினைக்கல”

“இப்ப இன்னாத்துக்கு நீ அழுதனு எனக்கு தெரியணும்!”

“ஒரு எமோஷனல்ல!” நிவேதன் சொல்லும்போதே அவனது காலை விளக்கமாறால் தாக்க வந்தவளிடம் இருந்து குதித்து தப்பித்தவன், “நிதா சொன்னாக்கேளு… வேணா!” எனத் திடுதிடுவென ஓடியதில், “டேய் நில்லுடா…” என அடிக்கத் துரத்தினாள்.

கண்மணி சிரிப்பை அடக்கியபடி, “அண்ணி அந்த விளக்குமாறு சரியா அடிக்காது. குச்சி விளக்குமாறு தரட்டா?” எனக் கேட்டதில், “எஸ் ப்ளீஸ்…” என்றாள் நிதர்ஷனா.

“துரோகி கண்மணி” என நிவேதன் அவளை அடிக்க வர, “நான் இல்லப்பா” என அவள் உள்ளே ஓடியே விட்டாள்.

யாஷ் தான் நிதர்ஷனாவின் கையில் இருந்த விளக்கமாறை வாங்கினான்.

“என்னடி பண்ணிட்டு இருக்க? இது ஸ்வீப் பண்றது தான?”

“ஆமா ஆனா பல நேரம் இவனை அடிக்க தான் யூஸ் ஆகும்…”

“மச்சான்! அதை அவ கையாண்ட குடுத்துடாத. தெரியாம அழுதுட்டேன்…”

“டேய் போங்கடா” யாஷ் இருவரையும் உள்ளே அனுப்ப, “ஹப்பா தப்பிச்சுட்டேன்” என்று கதிரவனை அழைத்துக்கொண்டு உள்ளே ஓடி விட்டான்.

யாஷ், நிதர்ஷனா, கதிரவன், நிவேதன் நால்வரையும் அருகில் இருந்த வீட்டிலேயே தங்க வைத்தனர்.

அங்கு ஏற்கனவே யாஷும் நிதர்ஷனாவும் தங்கி இருந்ததில், அங்கு சென்றதும் இருவருக்குள்ளும் பழைய நினைவுகள் தாண்டவமாடியது.

தனக்காவது ஒரு முறை தான், ஆனால் யாஷிற்கு அனைத்தும் இரு முறை அல்லவா நினைவு வரும்? அவனது ஆழ்ந்த நேசத்தில் நனைந்தவளுக்குள் அத்தனை நிறைவு.

என்னவோ இந்த வீட்டிற்கு வந்ததும், தனது கூட்டினை அடைந்து விட்டதொரு மனநிலை.

அவன் மீது காதல் பிறந்த இடமல்லவா?

கதிரவன் தனது அறைக்குச் சென்றதும், எதிர் ஜன்னலை ஏக்கத்துடன் ஏறிட்டான்.

சிந்தாமணியுடன் சைனீஸ் ட்ராமாவை இணைந்து பார்த்ததெல்லாம் நினைவடுக்கில் வந்து வதம் செய்தது.

அவளுடன் மீண்டும் இயல்பாக பேசிச் சிரிக்க, அத்தனை அணுக்களும் ஆசைப்பட்டாலும் ஆசைகள் வெறும் கானல் என்று எப்படி புரிய வைப்பது?

ஜன்னலைத் திறந்து எதிர் ஜன்னலை ஆராய்ந்தவனுக்கோ, மூடிய ஜன்னலைத் திறக்க மாட்டாளோ என்ற பரிதவிப்பும் இணைந்தது.

இழுத்து மூடி அறைந்ததே அவன் தானே! அவளும் அவனைப் போக சொல்லி விட்டாள். பின் எதற்காக இந்த மனம் இப்படி ரணப்படுகிறது!

நிவேதனும் கதிரவனுடனே அறையில் தங்கிக்கொண்டான்.

“இளா… நிதா பேசுனது வருத்தமா இருக்கா?” கட்டிலில் யோசனையுடன் அமர்ந்திருந்தவரிடம் பேச்சு கொடுத்தார் ஆதிசக்தி.

அதில் சின்னதாய் முறுவலித்தவர், “இல்ல ஆதி… இந்தப் பசங்க, அவங்களோட அன்புலயும் காதல்லையும் எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்காங்க பாரேன். எனக்கு ஆச்சர்யமா இருக்கு!” என்றவரிடம் மகிழ்வே தென்பட்டது.

“கண்மணி முகத்துல கூட, அவள் அண்ணன் கூட இருக்குற பூரிப்பு அப்படியே தெரியுது” என சிலாகித்துக் கொள்ள, ஆதிசக்திக்குப் புரிந்ததே அந்த பூரிப்பு எதனால் என்று!

“ஆமா ஆமா…” மெலிதாய் சலித்துக் கொண்டார்.

“என்ன இவ்ளோ இழுக்கிற?”

“நிவேவை நீ நிதாவோட அண்ணனா பாக்குறியா இல்ல வரதராஜனோட மகனா பாக்குறியா இளா?” நேரடியாக கேட்டிருந்தார் ஆதிசக்தி.

“ஏன் இந்தக் கேள்வி?”

“சொல்லேன்!”

“இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியல… அவனோட குணத்துக்கும் வரதராஜனுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. ஆனாலும் நிவேவைப் பார்க்கும்போது அவன் ஞாபகம் வராம இல்ல. ஜாடை அவனை மாதிரியே இருக்கான்ல…” எனக் கேட்டுக்கொண்டார்.

“ம்ம்!” என்ற ஆதிசக்தியும் பெருமூச்சுடன் அமைதியாகி விட்டார்.

மறுநாள், அதிகாலையிலேயே அனைவரும் கிளம்பி விட்டனர். கோவிலிலேயே சமைக்க ஏற்பாடு செய்திருப்பதால், அடுப்பு, மசாலா பொருள்கள், தண்ணீர் கேன் என அனைத்தையும் வேனில் ஏற்றினர்.

அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டுமென்று வால்வோ வேன் ஒன்றை புக் செய்திருந்ததால், கண்மணியும் சிந்தாமணியும் பொருள்களை ஏற்றி வைத்துக் கொண்டிருக்க, நிவேதன் அப்போது தான் கிளம்பி வந்திருந்தான்.

கண்மணி அடுப்பைத் தூக்கி வருவதைக் கண்டு வேகமாய் அவள் அருகில் ஓடியவன், “குடு கண்மணி நான் வைக்கிறேன்” என்று அடுப்பை வாங்கி கொண்டான்.

“இல்ல பரவாயில்ல நிவே” என்ற மறுப்பைக் காதில் வாங்கவில்லை அவன்.

அடுத்ததாக தண்ணீர் கேன், சிலிண்டர் என கனமான பொருள்கள் எதையுமே பெண்களைத் தூக்க விடவில்லை.

கதிரவனும் வந்து உதவி செய்யத் தொடங்க, ஆதிசக்தி “விடு நிவே. இது அவ்ளோ வெய்ட் இல்ல” என்றாலும், அவன் கேட்கவில்லை.

நிதர்ஷனா வீட்டு வாசலில் அமர்ந்து, எடுத்து வைப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், “அத்தை அவன் சொன்னாலும் கேட்க மாட்டான். கேட்டா பொண்ணுங்க வெய்ட் தூக்க கூடாதுனு பத்து பக்கத்துக்கு டயலாக் பேசுவான்…” என்று கிண்டல் செய்ய, “அடிப்பாவி டயலாக் பேசுறேனா?” என்று நிவேதன் முறைத்தான்.

அவனைக் கண்டு சிரித்து விட்டு, “நீங்க என்ன எடுக்கணும்னு மட்டும் சொல்லுங்க. கதிரும் நிவேவும் எடுத்து வச்சுடுவாங்க…” என்றதில்,

“என்ன இருந்தாலும், டாப் கம்பெனியோட சி. இ. ஓ ஆகப் போற பையனை வேலை வாங்கினா, அப்பறம் மீடியா வரை போய்டுமே…” என்று ஆதிசக்தி முறுவலுடன் கூறிட,

“அட நீங்க வேற அத்த! சேர்மேன் கார்மேன்னு கடுப்பேத்திட்டு…” என்று ஆதிசக்தியையும் சேர்த்தே முறைத்து விட்டுச் சென்றான்.

“அத்தை… நிவே அண்ணாவுக்கு தமிழ் இங்கிலிஷ்ல பிடிக்காத வார்த்தை இப்போ சேர்மன் தான்” சிந்தாமணியும் நிவேதனை வாரியதில், “நீயுமா சிந்தா” என்றான் உதட்டைப் பிதுக்கி.

கேலி சிரிப்புடன் பொருள்களை வேனில் ஏற்றியபிறகே யாஷ் பிரஜிதன் அங்கு வந்தான். டிக்கியை மூடும்போதே, “என்ன மம்மா… ஊரைக் காலி பண்றீங்களா?” எனக் கேட்டதில், நிதர்ஷனா பக்கென சிரித்தாள்.

“அங்க இதெல்லாம் தேவைப்படும் யாஷ்… இல்லன்னா ஒன்னொன்னுக்கும் கடை தேடி அலையனும்” ஆதிசக்தி கூறியதில், “நம்ம தங்கப்போற ஹோட்டல்ல இதெல்லாம் கிடைக்காதா?” என்றவனை ஆதிசக்தி பரிதாபமாக ஏறிட, நிதர்ஷனா வெடித்துச் சிரித்தாள்.

“நம்ம என்ன இத்தாலிக்கா போறோம். ஸ்டார் ரூம்ல ரூம் போட்டு ஊர் சுத்துறதுக்கு… போறோம்… இந்தப் பங்குனி வெயில்ல நின்னு பொங்கல் வைக்கிறோம். சமைக்கிறோம், சாப்புடுறோம். வர்றோம்… நீ விட்டா, ஹெலிகாப்டர், ஹெலி பாட் எல்லாம் கேட்ப போலயே…” நிதர்ஷனாவின் கூற்றில் “இஸ் தட் ட்ரூ மம்மா?” என்ற ரீதியில் ஆதிசக்தியைப் பார்த்தான்.

“நீ வேன்ல இருந்துக்கோ யாஷ். மதியம் வரை தான். அப்பறம் கிளம்பிடலாம்” எனக் கெஞ்சலாய் பார்த்த ஆதிசக்தியிடம், “வாட் எவர்” என்று புலம்பியபடி உள்ளே ஏறி அமர்ந்தான்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்.

“ஓ ஜீஸஸ்… இட்ஸ் டூ ஹாட்!” யாஷ் பிரஜிதனின் சிவந்த வதனம் வெயில் சூட்டில் அதிகம் சிவந்து விட்டது.

“மச்சான் நீ வேன்ல உக்காரேன்” நிவேதனும் கதிரவனும் ஏதோ ஒரு குளிர்ப்பிரதேசத்தில் இருப்பது போல இயல்பாக இருக்க,

“நீங்க எல்லாம் எப்படிடா இங்க நிக்கிறீங்க?” என சட்டைக்குள் ஊதிக் கொண்டான்.

அடுப்பு வைத்து பொங்கல் செய்வது வேறு கண்ணை எரிய வைத்தது.

“உனக்குப் பிஞ்சு உடம்பு மச்சான். அதான் இந்த லைட்டான வெயிலே தாங்கல…” எனும்போதே ஆதிசக்தியும் கிருஷ்ணவேணியும் பொங்கல் வைப்பதை வேர்க்கடலையை உண்டபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நிதர்ஷனா, “சென்னை வெயிலுக்கு இங்க பரவாயில்ல தான் யாஷ்…” என்றாள்.

“இப்டி ஒரு பிளேஸ்னு தெரிஞ்சுருந்தா பிளேனையே கேன்சல் பண்ணிருப்பேன்” பின்னந்தலையை கடுப்பாய் கோதிக் கொண்டான்.

கதிரவனோ, “வேற என்ன நினச்ச யாஷ்… நீ ஹனிமூன்னு நெனச்சு வந்தியோ” என்று கிண்டலாய் கேட்டதும், நிதர்ஷனா அவன் மீது வேர்க்கடலை தூக்கி எறிந்து, “சும்மா இருக்குறவனை ஏன்டா சொறிஞ்சு விடுற” என முறைத்தாள்.

யாஷோ, “வேன் சில்லுனு தான் இருக்கு. அங்க ஹனிமூன் செலெப்ரெட் பண்றதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல” என்றான் தன்னவளை குறுகுறுவென பார்த்தபடி.

கன்னமிரண்டும் சிவந்து போனவள், “யோவ் அரக்கா கோவில்ல நின்னு என்ன பேசுற?” என்று அவன் மீது சிறிது வேர்க்கடலையைத் தூக்கி எறிய, நிவேதனும் கதிரவனும் சத்தமாய் சிரித்து விட்டனர்.

ஆதிசக்தி பின்னால் திரும்பி நிதர்ஷனாவை முறைத்து, “பொங்கல் வச்சாச்சு பதமாவது பார்க்க உரிமை இருக்கா?” என சற்றே தாங்கலுடன் கேட்க, நிவேதனுக்கும் சங்கடமாகி விட்டது.

நிதர்ஷனாவோ அதனைக் கணக்கிலேயே எடுக்கவில்லை. “நீங்க முடிச்சுட்டு குடுத்தா, நல்லா சாப்பிடுவேன் அத்தை…” என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்ததில், “மூஞ்சிய பாரு…” என்று மருமகளைத் திட்டிக்கொண்டார்.

நிவேதன் தான், சுற்றி முற்றி பார்த்து விட்டு “ஆமா கண்மணி எங்க சிந்தா?” எனக் கேட்க,

“அவள் இலை வாங்கிட்டு வரேன்னு கோவிலுக்கு வெளில இருக்குற கடைக்குப் போனா அண்ணா” என்றதும்,

“எங்ககிட்ட சொல்ல வேண்டியது தான?” எனக் கடிந்து கொண்ட நிவே, “நான் போய் பார்த்துட்டு வரேன்” என்று வேகமாய் நகர, யாஷ் பிரஜிதன் அவனை அர்த்தமாய் பார்த்துக் கொண்டான்.

சிந்தாமணி கூந்தலை பின்னால் தள்ளி விட்டு கதிரவனை பார்த்து நொடிக்க, “அதில் நிவே இருடா என்னையும் கூட்டிட்டுப் போ” என்று அவன் பின்னாலேயே ஓடி விட்டான்.

‘தப்பிச்சா ஓடுற… இரு இன்னைக்கு கோவில்ல வச்சே என் லவ் மேட்டரை எல்லார்கிட்டயும் சொல்றேன்’ என்று நைசாக அவளும் அவர்கள் பின்னே சென்றாள்.

கண்மணி கோவில் வாசலில் நின்றிருப்பதைக் கண்டதும் நிவேதன் “என்ன கண்மணி இங்க நிக்கிற” எனக் கேட்டான்.

“இலை தீர்ந்துடுச்சுனு கடைக்கார அண்ணா வீட்ல எடுத்துட்டு வர போயிருக்காங்க நிவே.”

“ஓ சரி சரி” என்றவன், அங்கு சில வளையல் கடைகள் இருப்பதைக் கண்டு, “நான் அந்தக் கடைக்கு போயிட்டு வரேன்…” என்றான்.

“அங்க என்ன பண்ண போறீங்க?” கண்மணி கேட்டதில்,

“நிதாவுக்கு வளையல் வாங்க” நிவேதன் உரைத்ததும், “அப்போ உங்க தங்கச்சிக்கு மட்டும் தான் வாங்கித் தருவீங்க. இந்தத் தங்கச்சிக்கு எல்லாம் இல்ல…” என சிந்தாமணி சிலுப்பியதில், “உனக்கு இல்லாததா சிந்தா… நீயும் எனக்கு நிதா ரித்தி மாதிரி தான்” என்றான்.

“ஓ அப்போ தங்கச்சிங்களுக்கு மட்டும் தான் வாங்கித் தருவீங்களா… முறைப்பொண்ணுக்கு எல்லாம் கிடையாதா?” கண்மணி கண்சிமிட்டிக் கேட்க, நிவேதனின் உள்ளத்தில் தான் பல நிலநடுக்கங்கள்.

“உனக்கு இல்லாததா கண்மணி… நீங்க போய் பாருங்க” என்று அழைத்திட, கதிரவனும் “ம்ம்க்கும் அப்போ இந்த மச்சானுக்கு எதுவும் இல்லைல” என அவர்களை போலவே கேட்க, “மூடிட்டு வாடா வெண்ணை” என்று அழைத்துச் சென்றான்.

சிந்தாமணியும் கண்மணியும் வளையல் பார்ப்பதில் ஆர்வமாகி விட, சிந்தாமணி கேட்ட வண்ணங்கள் அருகிலிருக்கும் கடையில் இருப்பதாக கடைக்காரர் கூறியதில், “கதிரு சிந்தாவ பக்கத்து கடைக்கு கூட்டிட்டுப் போ” என்றான் நிவேதன்.

‘என்னை ஏன்டா இவளாண்ட கோர்த்து விடுற…’ எனப் புலம்பியபடி சிந்தாமணியுடன் சென்றான்.

சிந்தாமணி அவளாக சில வண்ணங்களில் வளையல் வாங்கிட, “இது கலர் நல்லா இல்ல…” என முணுமுணுத்தான் கதிரவன்.

அது அவளுக்கும் கேட்டதில், வேறு வண்ணங்கள் எடுக்க அதற்கும் குறை கூறினான்.

இறுதியில் அவள் அணிந்திருந்த தங்க நிற தாவணிக்கு ஏற்ப, தங்க நிறத்தில் பச்சைக் கல் பதித்த அகன்ற வளையல்கள் கண்ணைப் பறிக்க, கதிரவன் அதை எடுக்க கூறினான்.

“இது கரெக்ட்டா இருக்குமா அளவு?” எனக் கடைக்காரரிடம் கேட்டுக்கொள்ள, அவரும் “சரியா இருக்கும் தம்பி… கைல போட்டுப் பாருமா” என்றார்.

சிந்தாமணியும் ஆர்வமாய் இரு கை நிறைய வளையல்களை அணிந்து காட்ட, ஒரு கணம் சறுக்கி நின்றது ஆடவனின் மனம் தான்.

“நல்லாருக்கா?” அவள் கண்ணாலேயே கேட்க, ஒற்றைப் புருவத்தைத் தூக்கி மெச்சுதலாகப் பார்த்தான்.

கடைக்காரரும் சில நூறுகளை விலையாக கூறியதில், சிந்தாமணி மறுத்தாள்.

“அட சும்மா கண்ணாடி வளையல் வாங்க வந்தேன். இவ்ளோ காசுக்கு எல்லாம் வேணாம்” என்று வளையலைக் கழற்றப் போக, கதிரவன் சட்டென கைப்பிடித்து தடுத்தான்.

“போட்டதை எதுக்கு கழட்டுற…” என்று பணத்தை கொடுத்திட, சிந்தாமணிக்கு அடிவயிற்றில் பல பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தது!

அரக்கன் தொடரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
33
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. யாஷ் நிதா நிவே கதிரவன் – பக்கத்து வீட்டில்.. நீங்கள் கதிரவனுக்கு பதில் கண்மணி என்று பதிவிட்டுள்ளீர்கள்