
இரவில் பிரகாசித்த நிலவின் மீது பார்வையைப் பதித்திருந்தாள் சிந்தாமணி.
முயன்ற மட்டும் கதிரவனைத் தவிர்க்கிறாள். தவிக்கிறாள். ‘என் வீட்டில் உன்னால் ஒரு மணி நேரம் கூட இருக்க இயலவில்லையே’ என்று ஏளனப்படுத்திவிடுவானோ, தனது காதலை வெறும் சலனமென்று விடுவானோ என்ற பரிதவிப்பு அவளது வளவள பேச்சுகளைக் கூட நிறுத்தி இருந்தது.
அனைவரும் வேலைப்பளுவில் இருந்ததாலோ என்னவோ, அவளைக் கவனிக்கவில்லை. ஆனால் கதிரவன் கவனித்தான்.
‘ஒருவேளை காதல் தோல்வி ஆகிடுச்சுனு கவலைல இருக்காளோ?’ உண்மை முகத்தில் அறைய கதிரவனும் மனத்தால் சுருண்டான்.
ஒரு கட்டத்தில் அவளிடமே கேட்டு விடும் எண்ணத்தில், தோட்டத்தில் நடைபயின்று கொண்டிருந்தவளை நோக்கி வந்தான்.
அவனைக் கண்டதும் இயல்பாய் இருப்பதாய் காட்டிக்கொள்ளும்பொருட்டு, “என்ன கதிர் இன்னும் தூங்கல?” எனப் போலி முறுவலை கொடுத்தவளிடம், “ம்ம் தூங்கணும்… நீ ஏன் இங்க ஆவி மாதிரி நடமாடிட்டு இருக்க” என்றான் நக்கலாக.
“அது… அது… சைனீஸ் டிராமால ஒரு எபிசோட் ரிலீஸ் பண்றாங்க. அதை பார்க்க வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்…”
“ஓஹோ ஆனா நான் வேற நினச்சேன்”
“என்ன?” சிந்தாமணி புருவம் சுருக்க,
“லவ் பெயிலியர் ஆகிடுச்சேன்னு பீல் பண்ணிட்டு இருக்கியோனு” என ஆழம் பார்த்தான்.
அதில் அவனை வெடுக்கென முறைத்தவள், “இன்னும் லவ்வே பண்ணலையாம். அதுக்குள்ள லவ் பெய்லியராம். முதல்ல நீங்க லவ்வ சொல்லுங்க…” என்று நொடிக்க,
“சொன்னா மட்டும் என் வீட்ல வந்து இருந்துடுவியா? வுடு வுடு… ஏதோ வயசுக்கோளாறுல பேசிட்ட. நம்ம எப்பவும் நல்ல ப்ரெண்ட்ஸா இருக்கலாம் ஓகே வா?” என்று சமாதான உடன்பிடிக்கைக்கு வர, அவன் கன்னத்தில் பளாரென அறைந்தாள் சிந்தாமணி.
அமைதியாய் அதனை வாங்கிக்கொண்டவன் கன்னத்தை தேய்த்தபடி நிற்க,
அவள் விழிகள் நீரால் நிறைந்தது.
“உங்களுக்கு எல்லாம் உங்களுக்கா வந்தா தான் லவ். இதே நாங்க வந்த சொன்னா அது வெறும் வயசுக்கோளாறு சலனம்னு முடிச்சுடுவீங்க அப்படி தான?” என்றவளுக்கு ஆற்றாமை தாளவில்லை.
“சிந்தா”
பேச வந்தவனை கை நீட்டித் தடுத்தவள், “உங்கவீட்ல என்னால இருக்க முடியுமானு கேட்குறீங்களே… உங்க வீட்டுக்கு வந்தப்ப நீங்க என்னை கம்ஃபர்டபிளா வச்சுக்கிட்டீங்களா? உங்க அம்மாவுக்கு நிதா அக்காவை பிடிக்காதுன்னு தெரிஞ்சு தான என்னை அவங்க பிரெண்டுனு சொன்னீங்க” எனக் கேவலுடன் கூறிட, கதிரவனுக்கு அவளது கண்ணீர் வேதனையை கொடுத்தது.
“சிந்தா ப்ளீஸ்…” அவள் கையைப் பிடிக்க வந்ததில் கையை உதறியவள்,
உங்களைப் பொறுத்தவரை இது முட்டாள்தனமாவே இருக்கட்டும். என் அத்தை மாதிரியும் அமுதா பெரியம்மா மாதிரியும் என் லவ் தகுதியில்லாததாவே இருக்கட்டும்… ஒரு விஷயத்தை புருஞ்சுக்கோங்க கதிர். அவங்க தகுதி இல்லாத ஆளுங்களை லவ் பண்ணாங்க… அதுனால தான் அவங்க காதல் வெறும் கானலாவே முடிஞ்சுது. நான் தகுதி இருக்குறவனை லவ் பண்ணியும் கூட, வெறும் கானல் தான்ல…” எனத் தேம்பிட, கதிரவன் செய்வதறியாது நின்றான்.
“போய்டுங்க கதிர்…”
“என் இடத்துல இருந்து பாரு சிந்தா. உன் வீட்ல பொண்ணு கேக்குறதுக்குனு எனக்கும் ஒரு வரைமுறை இருக்குல. என்ன தான், உன் வீட்ல ஒருத்தனா என்னை பார்த்தாலும் உன் குடும்பத்துல ஒருத்தனா என்னால ஆக முடியாது சிந்தா! நீ என்ன சொன்னாலும் எனக்குத் தகுதி இல்லைனு தான் சொல்லுவேன். நிஜமாவே, உன் வீட்டாளுங்க முன்னாடி என்னால கூனி குறுகி நிக்க முடியாது. உன்னையும் நிக்க வைக்க முடியாது… சாரி… நான்… நான் இங்க இருந்துருக்கவே கூடாது சிந்தா… தேவையில்லாம உன்னை ஹர்ட் பண்ணிட்டே இருக்கேன். நான்… நான் போக தான் போறேன்” ஒரு முடிவுடன் அவன் அங்கிருந்து செல்ல, அவளோ அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை.
நெஞ்சம் அனலிலிட்ட புழுவாய் துடித்தது.
பாதியில் வேலையை விட்டுச் செல்ல யாஷ் அனுமதிக்க மாட்டான் என்ற சிறு நம்பிக்கையும் இருந்திட, ‘போங்க… எங்க வேணாலும் போங்க. என்னை விட்டு உங்களால எப்படி போக முடியுதுனு பார்த்துடுறேன்…’ என்று தனக்குள் வேதனையில் அமிழ்ந்தவள், கண்ணைத் துடைத்து விட்டு நிமிர, அங்கு பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து நின்றிருந்தான் யாஷ் பிரஜிதன்.
அவனைக் கண்டதும் பயத்தில் வெளிறியவள் திகைத்திருக்க,
“சோ நீ அக்கறையா ஆபிஸ்கு வரேன்னு சொன்னது வேலை பார்க்க இல்ல. ரைட்?” என்றான் அமர்த்தலாக.
“நீங்க மட்டும் என்ன உங்க ஆளை வேலை பார்க்கவா ஆபிஸ்க்கு வர சொல்லிருக்கீங்க. சைட் அடிக்க தான?” அழுகையுடன் முணுமுணுத்தவளை காட்டத்துடன் பார்த்தவன்,
“உன் பேரண்ட்ஸ் ஓகே சொல்லுவாங்களா? லைக் கதிர் சொல்ற மாதிரி… யூ ஆர் ஃப்ரம் ஆர்தோடக்ஸ் பேமிலி. அவனோட ஃபியர் நியாயம் தான?” என்றான் நெற்றியை நீவி.
“இதையே நிதா அக்கா சொல்லிருந்தா நீங்க கேட்டுருப்பீங்களா மாமா? நான் கதிரை உண்மையா விரும்புறேன். அவர் ஓகே சொன்னா கண்டிப்பா என் வீட்ல நான் பேசுவேன்…”
“என்ன பேசுவ?” கையைக் கட்டிக்கொண்டு கேட்டான்.
“மாமா!”
“என்ன பேசுவன்னு கேட்டேன். உங்க வீட்டு பொண்ணை கடத்திட்டுப் போன நீலகண்டனோட க்ளோஸ் ப்ரெண்ட்டோட பையனை விரும்புறேன். அவள் குடும்பத்தை பத்தி தெரிஞ்சும், நீலகண்டன் இறந்தபிறகும் அவளை அவள் குடும்பத்தோட சேர்க்காம, தன்னோட மனைவியை விட்டு அவளை தினம் தினம் கஷ்டப்படுத்தி வார்த்தையால குத்தினவனோட பையன விரும்புறேன்னா?” என்று நிறுத்தி நிதானமாக கேட்க, சிந்தாமணி அதிர்ந்தே விட்டாள்.
அவள் உதடுகள் தானாய், “மாமா” என மீண்டும் முணுமுணுத்தது.
“ஸ்ஸீ சிந்தா… உன்னையும் கண்மணியையும் க்ராண்ட்பா என்னை நம்பி விட்டுட்டுப் போயிருக்காரு. அவ்ளோ சீக்கிரம் உங்களை இந்த வீட்டுல இருந்து வெளில அனுப்ப மாட்டேன். யூ நோ தட். அதை மீறி, உன்னையும் கண்மணியையும் கதிர் வீட்டுக்குப் போக ஏன் அனுமதிச்சேன் தெரியுமா?
கதிர் அப்பாவோட நிஜ முகத்தை தெரிஞ்சுக்க, உங்களை தூண்டிலா போட்டேன்” என்றவனை பேயறைந்தது போல பார்த்தாள்.
“என்ன சொல்றீங்க மாமா?”
“எனக்கு ஆரம்பத்துல இருந்தே கதிர் அப்பா மேல ஒரு நல்ல அபிப்ராயம் இல்ல.”
“ஏன் மாமா… கதிர் அம்மாவுக்கு தான் அவர் பயப்படுவாரு. அவர் நல்லவருனு தான நிதா அக்காவும் சொல்லிருக்காங்க…”
“அதான் என் டவுட்டே. ஸ்ஸீ கதிர் அம்மாவோட பிஹேவியர் நேச்சுரல். தன்னோட வீட்ல வாடகை குடுக்காம இருக்குற நார்மல் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி தான் அவங்களுக்கு. பட் கதிர் அப்பா, ரொம்ப சாஃப்ட் நேச்சர் அதே நேரம் நிவேதன் காணாம போய்ட்டானு தெரிஞ்சும் நிதாவை நான் கடத்திட்டுப் போனதை பார்த்தும் அதை பத்தி வெளில யார்கிட்டயும் மூச்சு விடல. அவங்க பையனை தேடவும் செய்யல. கொஞ்ச நாள் கழிச்சு கதிர் கால் பண்ணி வேலை விஷயமா வெளியூர் வந்துருக்குறதா அவன் அம்மாட்ட சொல்லிருந்தான். அப்பவும் அதை பத்தின டீடெய்ல்ஸ் அவர் கேட்டுக்கல. இட்ஸ் சம்திங் ஃபிஷில?” என்றிட,
“புரியல மாமா. நிதாவை நீங்க கடத்துனது அவருக்கு தெரியுமா அப்போ…”
“ம்ம் ஃபர்ஸ்ட் டைம் இல்ல. நிதா எல்லாத்தையும் மறந்து அதுக்கு அப்பறம் அவளையும் கதிரையும் நான் கடத்தினேன்ல… அப்போ அந்த சம்பவத்தை யாரும் பார்த்து எங்களை ஃபாலோ பண்றாங்களானு தெரிஞ்சுக்க சிசிடிவி எல்லாத்தையும் செக் பண்ணேன்.
அப்போ இவங்களை கடத்தும்போது கதிர் அப்பா மறைஞ்சு நின்னு வேடிக்கை பார்த்ததும் இல்லாம, ஃபோன்ல யாருக்கோ தகவல் சொல்லிருக்காரு. அப்ப இருந்தே அவரை வாட்ச் பண்றேன். ஆனா, அந்த ஆளு பேசுறது ஒரு பிரைவேட் நம்பர். நார்மலா ட்ரேஸ் பண்ண முடியல. ரொம்ப ரேரா தான் அந்த நம்பர்ல இருந்து கால் வந்துருக்கு. சோ இனி மறுபடியும் கால் வந்தா ட்ரேஸ் பண்ணனும்னு தான், உன்னையும் கண்மணியையும் அங்க அனுப்புனேன்.
அந்த தகவலை சொல்ல யாருக்கும் கால் பண்ணுவாருன்னு நினைச்சேன். பட் இப்ப வரை எதுவும் நடக்கல” என்றான் யோசனையுடன்.
“அப்போ வேணும்னே நிவே அண்ணாவையும் நிதா அக்காவையும் அவர் வீட்ல மறைவா வச்சுருக்காருனு சொல்றீங்களா மாமா…”
“கிட்டத்தட்ட யூ காட் மை பாய்ண்ட்.”
“அடக்கடவுளே! ஏன் இப்படி பண்ணனும்?”
“ஐ டோன்ட் நோ!” பெருமூச்சு விட்டவனிடம், “நீங்களே அந்த ஆளை பிடிச்சு கேட்டுரலாமே?” எனக் கேட்டாள்.
“எஸ். பட், இப்ப இருக்குற ஒரே துருப்பு சீட்டு அவர் மட்டும் தான். அதையும் கலைச்சு விட்டுட்டா, அந்த ஃபோர்த் பெர்சனை கண்டுபிடிக்க முடியாது. ஏன்னா, அந்த பிரைவேட் நம்பர் அலெஸ்ஸும் கிடையாது, வரதராஜனும் கிடையாது. அவங்களைத் தாண்டி சம் ஒன்…” என்றவனின் தீவிரத்தில் அவளுக்கு பயமே வந்து விட்டது.
“ஆனா மாமா… இதெல்லாம் கதிருக்கு தெரியாது தான?”
“ம்ம் அவனுக்குத் தெரியாது. தெரியாம இருக்குறவரை அவன் சேஃப்” என்றதில் சிந்தாமணியின் முகத்தில் கலவரம் மின்னியது.
“அவர் அப்பா செஞ்ச, செய்ற தப்புக்கு கதிர் என்ன செய்வாரு மாமா.”
“இப்போதைக்கு வீட்ல கதிரை லவ் பண்ற மேட்டரை சொல்லாத. நிறைய ஸ்லீப்பர் செல்ஸ பிடிக்க வேண்டியது இருக்கு. இப்போ சொல்லி குழப்ப வேண்டாம். எல்லாம் சரி ஆகட்டும். கண்டிப்பா கதிரை உனக்கு மேரேஜ் பண்ண ரெகமண்ட் பண்றேன். ஓகே?” என்றான் சின்ன சிரிப்புடன்.
“ரெகமெண்ட்டா… ஒருவேளை வீட்ல ஓகே சொல்லலைன்னா, நீங்க தான் அதிரடியா அவங்களை ஒத்துக்க வைக்கணுமாக்கும்” என்றதில்,
“என்னை பார்த்தா உனக்கு மேரேஜ் ஃபிக்சிங் பண்றவன் மாதிரி இருக்கா?” எனக் கேலியாய் கேட்க,
“உங்க முறைப்பொண்ணுக்காக இது கூட பண்ண மாட்டீங்களா” முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டதில், “தலையெழுத்து” என்று விளையாட்டாய் பேசி விட்டு தனது அறைக்குச் செல்ல முற்பட, அங்கு நிதர்ஷனா அவனை முறைப்படி நின்றிருந்தாள்.
அவனோ அவளைக் கண்டு அதிர்வெல்லாம் இல்லை.
“எவ்ளோ நேரம்டி நின்னு ஒட்டுக்கேட்ப. வந்து நீ நாலு டவுட் கேட்டுருந்தா க்ளியர் பண்ணிருப்பேன்ல…” என அவளது தோள் மீது கைபோட்டபடி அறை நோக்கி செல்ல,
“அடப்பாவி. நான் வந்தது தெரியுமா உனக்கு?” என்றாள் வாயில் கை வைத்து.
“உன் வாசம் நான் அறிவேன்!” அவள் கூந்தலின் மணம் நுகர்ந்தான் ரசனையாய்.
அதில் கோபம் வடிந்து விட, “என்ன யாஷ்… என்னன்னவோ சொல்ற. கதிர் இதுவரை எங்களுக்கு சின்னதா கூட தப்பு நினைச்சது இல்ல. அவனுக்கு தெரிஞ்சா மனசு கஷ்டப்படுவான்…” என்றாள் வருத்தமாக.
“முடிஞ்ச வரை ஸ்மூத்தா ஹேண்டில் பண்றேன் ஆலம்பனா. ஒன்ஸ் அந்த ஃபோர்த் பெர்சன் கிடைச்சுட்டா, கதிர் அப்பாவோட உயிருக்கு நான் உத்திரவாதம் இல்ல” என்றான் கடுமையாய்.
“உண்மை என்னனு முழுசா தெரியட்டும். அதுவரை உன் கோபத்துல அவரை பொசுக்கிடாத… ப்ளீஸ்” நண்பனுக்காக கணவனிடம் மன்றாடினாள்.
“ஹ்ம்ம்… ட்ரை பண்றேன்!” என்ற யாஷ் பிரஜிதனைக் கவலையாகப் பார்த்திருந்தாள் நிதர்ஷனா.
—–
“நிவே… இன்னைக்கு ஃபேக்டரிக்கு ஒரு விசிட் அடிச்சுட்டு வந்துடுறேன். ப்ராடக்ட்டோட அளவு போன வாரத்தை விட இந்த வாரம் கம்மியா உற்பத்தி ஆகியிருக்கு. என்னன்னு விசாரிக்கணும்…” எனக் கண்மணி தீவிரமாய் உரைத்தாள்.
“இதுக்கு தேவையான ஒர்க்கர்ஸ் இல்லன்னு தான் தோணுது கண்மணி. புதுசா ஆள் எடுக்கலாமா?” நிவேதனும் அவளிடம் கேட்டுக்கொண்டான்.
“ம்ம் நமக்கு இன்னுமே நிறைய ஆள் வேணும் நிவே. அண்ணா குடுத்துருக்குற டெட் லைன்க்கு இன்னும் மூணு மாசம் தான் இருக்கு”
“நான் மச்சானை பார்த்துட்டு வரேன். நீ பேக்டரிக்குப் போ” எனப் பணித்து விட்டு அவன் யாஷ் பிரஜிதனின் அறைக்குச் சென்றான்.
கதிரவனும் சிந்தாமணியும் மார்க்கெட்டிங் சம்பந்தமான வேலைகளில் மூழ்கி இருக்க, நிதர்ஷனா அதற்கு தேவையான கணினி சப்போர்ட்டைக் கொடுத்தாள்.
கண்மணி தொழிற்சாலைக்குச் சென்று சோதனை செய்திட, அவளைக் கண்டதும் மரியாதை நிமிர்த்தம் பணியாளர்கள் காலை வணக்கம் கூறினர்.
அங்கு மேற்பார்வையிடும்போதே ஒரு இயந்திரம் தன்னால் வேலை நிறுத்தம் செய்திட, “என்னாச்சு சார்?” என அந்த துறையின் சூப்பர்வைசரிடம் விசாரித்தாள்.
“தெரியலை மேடம். நல்லா தான் ஓடிட்டு இருந்துச்சு… என்னன்னு பாக்குறேன்” என்று அதனை சோதனை செய்தவர், கருவியை அணைத்து அணைத்து ஆன் செய்தார்.
யாஷிடம் பேசி விட்டு தொழிற்சாலை நோக்கி வந்த நிவேதன் கவனியாமல் ஒருவன் மீது இடித்து விட்டு, “சாரிங்க” என்றிட, அவனோ பணியாளர்களின் உடையில் இருந்ததோடு நிவேதனைக் கண்டு பதறி வேக வேகமாக அங்கிருந்து சென்றான்.
அவனை யோசனையுடன் ஏறிட்ட நிவேதனுக்கு என்னவோ மனதில் ஒரு உறுத்தல்.
தொழிற்சாலை நோக்கிச் செல்லும்போதே, அங்கிருந்த வயர் பாக்சில் இருந்த வயர்கள் அறுந்து இருந்ததோடு ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறியை ஏற்படுத்த அதனைக் கண்டு திகைத்தவன், தனது வேகத்தை அதிகப்படுத்தினான்.
கண்மணி கோளாறான இயந்திரத்திற்கு அருகில் நின்றபடி, அந்த இயந்திரத்தின் மேனுவலை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தாள்.
“சார், இந்த மெஷின் வாங்கியே ஒரு வருஷம் தான ஆகுது. அதுக்குள்ளே என்ன பிரச்சினை…” என சூப்பர்வைசரிடம் வினவியபடி, “இடைல ஸ்டாப் ஆச்சுன்னா, இதுல இருக்குற ட்ரிப்பரை ‘ஆஃப், ஆன்’ பண்ண சொல்லிருக்காங்க…” என்று இயந்திரத்தின் மீது கையை வைக்க, அவளை விட பல மடங்கு உயரத்தில் இருந்த ராட்சச இயந்திரம் மெல்லச் சரியத் தொடங்கியதோடு, மின்கசிவும் தொடங்கியது.
இயந்திரம் ஆடுவதைக் கண்டதுமே அங்கிருந்த அனைவரும் பதறி அடித்துக்கொண்டு வெளியில் ஓட, கண்மணிக்கு மூளை வேலைநிறுத்தம் செய்திருந்தது.
மின்னல் வேகத்தில் அவளிடம் ஓடி வந்த நிவேதன், அவளை நொடி நேரத்தில் அங்கிருந்து அப்புறப்படுத்த முயல, இயந்திரத்தின் கனமான பகுதி ஒன்று கண்மணியை நோக்கி வந்ததில் அவளைத் தனக்குள் மறைத்துக் கொண்டான் நிவேதன்.
ஓடினாலும் தலையில் விழுந்து விடும் அபாயம் இருக்க, தனது முதுகைக்காட்டிக்கொண்டு கண்மணியை முழுதாய் தன்னுள் புதைத்துக்கொண்டு நின்றவனை நொடி நேரத்தில் யாரோ இழுப்பது போல இருக்க, இருவரும் பக்கவாட்டில் தடுமாறி விழுந்தனர்.
அந்த இயந்திரத்தின் பகுதி நேராய் அவர்களைத் தள்ளி விட்ட யாஷ் பிரஜிதனின் பாதத்தில் விழுந்தது.
நிவேதன் அதன்பிறகே யாஷை கண்டு அதிர்ந்து விட, யாஷ் அதிக பட்ச வலியின் காரணமாய் அப்படியே அமர்ந்து விட்டான்.
“மச்சான்…” நிவேதன் பதறி அடித்து யாஷிடம் ஓட முற்பட, “ரன்… கண்மணியை கூட்டிட்டுப் போ” எனக் கட்டளையிட்டான்.
“ஐ செட் கோ” யாஷ் மீண்டும் கத்தியதில், கண்மணியை இழுத்துக்கொண்டு வேகமாக வெளியில் ஓடிய நிவேதன் அவளை பாதுகாப்பாய் நிற்க வைத்து விட்டு, மீண்டும் திடுதிடுவென உள்ளே ஓடினான்.
தொழிற்சாலையில் விபத்து என்றதுமே தீயணைப்பு துறையினரை வரவழைத்திருந்தான் யாஷ். அதன்பிறகே அங்கு வந்தவன், நிவேதனுக்கு காயம் நேராமல் தடுத்திருக்க, தீயணைப்பு துறையினரும் வந்திருந்தனர்.
யாஷ் பிரஜிதனால் காலில் ஏற்பட்ட அடியில் சற்றும் நகர இயலவில்லை.
பாதத்தில் இருந்த எலும்பு உடைந்திருக்கும் என்பது மட்டும் புரிந்தது.
விவரம் அறிந்து கதிரவனும் அங்கு ஓடி வந்திருந்தான். கண்மணி அழுது கொண்டு நிற்பதைக் கண்டு விசாரித்தவன், “அண்ணா உள்ள மாட்டிருக்காங்கண்ணா. கால்ல வேற அடிச்சுடுச்சு” எனக் கேவியபடி கூற, அவனும் உள்ளே சென்று பார்த்து அதிர்ந்து விட்டான்.
மின்சாரத்தின் தீப்பொறி வேறு அந்த அறை முழுக்க பரவத் தொடங்கியது.
தீயணைப்பு துறையினர் அதனை கட்டுப்படுத்த முயல, மீண்டும் நிவேதனைக் கண்டதும் “நீ ஏண்டா வந்த?” எனக் கடிந்தான் யாஷ்.
“மச்சான் நீ எத்தன கிலோ இருப்ப?” நிவேதன் கேட்டதில், “ஹான் வாட்?” எனப் புருவம் சுருக்கும்போதே, நிவேதன் அவனை அலேக்காக காலோடு பிடித்து தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடினான்.
“டேய் டேய் என்னடா பண்ற?” யாஷ் தோள்பட்டையை பிடித்தபடி கத்த, மொத்த இயந்திரமும் தரையில் விழுந்து தரை பிளந்தது.
“மச்சி காரை ஆன் பண்ணு” நிவேதனின் கட்டளையில் கதிரவனும் துரிதமாய் செயல்பட்டான்.
“நிவே இறக்கி விடுடா” யாஷ் கத்தியும் நிவேதன் கேட்கவில்லை.
“கால்ல எலும்பு எசகு பிசகா உடைஞ்சுருக்கு மச்சான். நீ ஸ்ட்ரெய்ன் பண்ணுனா, கஷ்டம்” என்றவன் அவனைத் தரையில் விடாமல் மூச்சு வாங்க பார்க்கிங்கிற்கு ஓட, கண்மணியும் உடன் இணைந்து ஓடினாள்.
மனதின் ஒரு ஓரத்தில், ‘ச்சே… இப்படி இவர் தூக்கிட்டு ஓடுவாருனு தெரிஞ்சுருந்தா நமக்கே அடிபட்டுருக்கலாம்…’ என சிறு நட்பாசை எழ, தன்னையே மானசீகமாக அடித்துக்கொண்டாள் கண்மணி.
மருத்துவமனைக்கு விரைந்து, யாஷ் பிரஜிதனுக்கு தேவையான சிகிச்சை செய்ததும் தான் மற்ற மூவருக்கும் நிம்மதியானது.
ஒரு மாதத்திற்கு பாதத்தை ஊன்றி நடக்க கூடாது என்பது மருத்துவரின் கட்டளை.
அதுவே நிவேதனுக்கு வருத்தத்தைத் தந்தது. சிந்தாமணியும் நிதர்ஷனாவும் அடித்து பிடித்து மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.
மருத்துவமனை அறையில் காலில் கட்டோடு சாய்ந்து அமர்ந்திருந்த யாஷ் பிரஜிதனைக் கண்டதும் நிதர்ஷனாவின் மனது துடித்து விட்டது.
“என்னாச்சு அரக்கா உனக்கு… கால்ல என்ன கட்டு?” எனப் பதறி கலங்கிய விழிகளுடன் அவனை பார்க்க,
“நத்திங் சீரியஸ்டி.”
“என்ன சீரியஸ் இல்ல… எலும்பே உடைஞ்சுருக்காமே…” அவனது கட்டிட்ட காலை வருடினாள்.
கண்ணீர் துளியொன்று கன்னத்தில் வேறு வழிய, “ப்ச் பெருசா எதுவும் ஆகலைல. டோன்ட் க்ரை ஆலம்பனா” என்றான் அதட்டலாக.
அவளுக்கோ ஆதங்கம் தாளவில்லை.
கண்ணீர் நிற்காமல் வழிந்திட, “ஐ செட் டோன்ட் ட்ரை…” என்று பல்லைக்கடித்து சீறியதில், அவள் வேகமாய் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
நிவேதன் தான் யாஷை லேசாய் முறைத்தான்.
‘இவனுக்காக தான அழுவுறா. அடிபட்டுருக்குறப்ப அழ கூட கூடாதாமா…’ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாலும் வெளியில் கேட்கவில்லை.
கண்மணி இன்னுமே அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
பேயறைந்தது போலவே இருந்தாள். சிந்தாமணி அவளை உலுக்கி, “உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைல கண்மணி” எனக் கேட்க, அவள் மறுப்பாய் தலையாட்டினாள்.
அதன்பிறகே நினைவு வந்தவனாய் யாஷ் பிரஜிதன் நிவேதனை அருகில் அழைக்க, கதிரவனோ ‘அடடா இப்ப ஒரு செண்டிமெண்ட் சீன் நடக்கப் போகுது’ என சிலாகித்துக் கொண்டான்.
நிவேதனும் யாஷ் பிரஜிதனின் அருகில் வந்ததும், அவன் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டான்.
“யாஷ்…” நிதர்ஷனா தமையனின் முன்னால் வந்து நின்று தடுக்க, கதிரவனும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டான்.
நிதர்ஷனாவின் கைப்பிடித்து நகன்று நிற்க வைத்த யாஷ் பிரஜிதன், நிவேதனை நோக்கி, “அறிவில்ல உனக்கு? என்னமோ ஒரு கன்னத்துல அறைஞ்சா மறுகன்னத்தையும் காட்டுற ஏசு நாதர் மாதிரி முதுகை காட்டிட்டு நிக்கிற. என் கால்ல விழுந்தது உன் முதுகுல விழுந்துருந்தா, முதுகு எலும்பு உடைஞ்சுருக்கும். காலத்துக்கும் நீ படுக்கைல தான் இருக்கணும். இடியட்!” என ஆற்றாமையின் வெளிப்பாட்டை கோபமாகக் காட்டி இருந்தான்.
தனது தங்கையைக் காக்க, எப்பேர்ப்பட்ட ஆபத்தைத் தொட்டிருப்பான் என எண்ணவே யாஷிற்கு மனம் பதறியது.
கண்மணிக்கு அவன் தன்னைக் கட்டி அணைத்து நின்றதான காரணம் தற்போது தான் புரிந்தது. பயத்தில் அவளே கண் இரண்டையும் மூடித்தானே இருந்தாள். யாஷிற்கு அடிபட்டு அவன் கத்தியதில் தான் கண்ணையே திறந்திருந்தாள்.
நிதர்ஷனாவும் அதிர்ந்து நிவேதனைப் பார்த்தாள்.
“இன்னாடா சொல்றான் இவன்… உனக்கு அடி கிடி படலைல” எனத் தவிப்பாய் கேட்க, “இல்ல நிதா… அவள் மேல வந்து அந்த வெய்ட்டு விழுந்துருந்தா அவ்ளோ தான். அவளுக்கு அடிபட கூடாதுன்றது மட்டும் தான் என் மண்டைக்குள்ள ஓடுச்சு” என்றவனின் இயல்பான அக்கறை அனைவருக்கும் புரிந்தது தான், ஆனால் கண்மணிக்கு அதுவே உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த நேசத்தைத் தட்டி எழுப்பியது.
யாஷ் நிவேதனை தீயாய் முறைத்து விட்டு, “சரி அவளைக் காப்பாத்த முயற்சி பண்ணுன, அப்போ வெளில போயிருக்க வேண்டியது தான. எதுக்குடா மறுபடியும் உள்ள வந்த? ஜஸ்ட் மிஸ் அந்த மெஷின் உன் தலைல விழுந்து நீ போய் சேர்ந்திருந்தா, உன் தங்கச்சிக்கு யார் பதில் சொல்றது?” என சிடுசிடுத்தவன்,
அவன் சட்டையைப் பிடித்து அருகில் இழுத்து, “என் ஆலம்பனா கண்ல இருந்து உன்னால ஒரு சொட்டு தண்ணி வந்துச்சு. நானே கொன்னுடுவேன். நீ அவளுக்கு முக்கியம். எனக்கு அவள் முக்கியம்… இனி யாரை காப்பாத்தவும் உன் லைஃபை ரிஸ்க் பண்ணாத…” என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்து அவனை மெல்ல தள்ளி விட, நிவேதன் வாயடைத்துப் போனான்.
மறுநொடியே “அதையே தான் நானும் சொல்றேன்” நிவேதன் மெல்ல முணுமுணுக்க, “வாட்?” என அதட்டலாக கேட்டான் யாஷ்.
“அதை தான் நானும் சொல்றேன் மச்சான். என் தங்கச்சிக்கு நீ ரொம்ப முக்கியம். உனக்கு உள்ள அடிபடட்டும்னு விட்டுட்டா, அவள் ஒவ்வொரு செகண்டும் துடிச்சுட்டு இருக்கறதை என்னால பார்க்க முடியாது. நீ தீவுக்கு போனப்பவே அவள் எவ்ளோ தவிச்சான்னு எனக்கு தான தெரியும். இனி எங்களை காப்பாத்தணும்னு நீயும் உன்னைக் காயப்படுத்திக்காத மச்சான்…” என முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு கூறியதில், யாஷ் பிரஜிதன் காட்டத்துடன் பார்த்திருந்தான்.
யாஷ் பிரஜிதனும் நிவேதனுக்காக அவனைக் காப்பாற்றயதை வெளிப்படுத்தாமல் போக, நிவேதனும் யாஷ் பிரஜிதனுக்காக அவனைத் தூக்கிக் கொண்டு வந்ததை ஒப்புக்கொள்ளவில்லை.
இருவருக்குள்ளும் சின்னதொரு ஈகோ தாண்டவமாடியது.
“ஐயோ… எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம் தான்!” நிதர்ஷனா தான் தலையில் அடித்துக் கொண்டாள்.
விவரம் அறிந்து மறுநாளே ஆதிசக்தியும் இளவேந்தனும் அங்கு வந்து விட்டனர்.
தாயைக் கண்டதும் யாஷ் பிரஜிதன், “உங்களை யாரு வர சொன்னது?” எனக் கேட்க,
“உனக்கு அடிபட்டுருக்குனு சொன்னதும் மனசே கேட்கல யாஷ்… இப்ப வலி பரவாயில்லையா?” என்றார் வருத்தமாக.
“ம்ம் ஐ ஆம் ஓகே மம்மா…”
இளவேந்தனும் “பார்த்து இருக்க கூடாதா யாஷ்!” என்றதில், சின்னதாய் புன்னகைத்துக் கொண்டான்.
“ஊருக்கு வந்ததுமே நினைச்சேன் குலதெய்வம் கோவிலுக்குப் போகணும்னு… உனக்குச் சரியானதும் முதல்ல போயிட்டு வந்துடலாம்…” என்ற தாயை விசித்திரமாகப் பார்த்த யாஷ் பிரஜிதன், “வாட்ஸ் தட் குலதெய்வம்? அங்க போனா தட் ஃபோர்த் பெர்சனை ஃபைண்ட் அவுட் பண்ணிடலாம் மம்மா?” என்றான் புரியாமல்.
நிதர்ஷனா சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஆமா ஆமா, குலதெய்வம் கோவில்ல உண்மையை கண்டுபிடிக்கிற மெஷின் இருக்காம்…” எனக் கேலி செய்ததில், ஆதிசக்தி மருமகளை முறைத்தார்.
“என்ன அத்தை ஃபயர் பலமா இருக்கு?”
“என்கிட்ட பேசாத. இவனுக்கு அடிபட்டதை நீ ஏன் சொல்லல? நிவே தான் போன் பண்ணி சொன்னான்” என்றதும், கதவோரத்தில் நின்றிருந்த நிவேதனை யாஷ் பிரஜிதனும் நிதர்ஷனாவுமாக திரும்பி முறைத்தனர்.
“க்ரைம் லிஸ்ட் கூடிட்டே போகுது மச்சி உனக்கு” கதிரவன் நக்கலாய் கிசுகிசுக்க, நிவேதன் தெறித்து வெளியில் ஓடி விட்டான்.
கண்மணியின் எண்ணமெல்லாம் நிவேதனின் வண்ணம் மட்டுமே!
அவனது அணைப்பின் வெப்பம் இப்போது நினைத்தாலும் சிவப்பைக் கொடுத்தது.
அவன் தீண்டிய கரங்களில் குறுகுறுப்பு அடங்காது சதி செய்தது.
மருத்துவமனை வாசலில் நின்றிருந்த நிவேதனிடம் தயங்கியபடி சென்றாள் கண்மணி.
“நிவே…”
கண்மணியின் குரலில் திரும்பிய நிவேதன் சிறு புன்னகையுடன் “சொல்லு கண்மணி” எனக் கேட்க,
“அது… தேங்க்ஸ்!” என்றாள் துப்பட்டாவின் நுனியைத் திருகியபடி.
“எதுக்கு தேங்க்ஸ் எல்லாம். என் கடமையைத் தான் செஞ்சேன்…”
“யாரா இருந்தாலும் இப்படி தான் உங்களுக்கு அடிபட்டாலும் பரவாயில்லைனு காப்பாத்தி இருப்பீங்களா?” சிறு ஆர்வம் மின்ன கேட்டிருந்தாள் அவள்.
“காப்பாத்தி இருப்பேன்” அவன் அசட்டையாய் கூறியதில் அவள் முகம் கூம்பி விட்டது.
அவளைக் குழப்பமாக ஏறிட்ட நிவேதன் நான்கடி நடந்து விட்டுப் பின், அவளைத் தாண்டிச் செல்ல இயலாமல் மீண்டும் அவளிடம் வந்தான்.
“யாரா இருந்தாலும் காப்பாத்தி இருப்பேன். ஆனா, எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லைனு காப்பாத்தி இருப்பேனான்னு கேட்டா, எனக்குப் பதில் சொல்லத் தெரியலை கண்மணி. நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் எப்பவும்…” என்றிருந்தான் அவனை மீறி.
அதில் அவளது வதனம் பூவாய் மலர்ந்திருக்க, அம்மலர் முகத்தைக் கையில் தாங்கிட அவனது கரங்கள் பரபரத்தது.
எப்போதும் மனதில் கடிவாளமிடும் நிவேதனுக்கும் கண்மணிக்கும் இப்போது இந்நொடி அந்தக் கடிவாளத்தை அணிந்து கொள்ள மனமின்றி போக, இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் நேராய் தீண்டிக் கொண்டது. அதில் மின்கசிவுகளும் ஏராளமாய் நடைபெற, அப்பார்வை ஒன்றில் இருவரின் மனமும் பரிமாறப்பட்டது.
“இந்த ஆக்சிடெண்ட், திட்டமிட்டு நடந்துருக்கு இளா. எம்பிளாயிஸ் எல்லாரையும் க்ராஸ் இன்வெஸ்டிகேஷன் பண்ணனும்” என இளவேந்தனிடம் பேசிக்கொண்டே வந்த ஆதிசக்தியின் விழிகளில் கண்மணியும் நிவேதனும் பட்டு விட, அவரது புருவ மத்தியில் சிறு முடிச்சு.
அரக்கன் தொடரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
50
+1
1
+1
5

