
அபூர்வனிடம் அவ்வாறு கூறி விட்டுச் சிறிது நேரத்திலேயே நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்தாள் ஆரா.
ஆனால்,’காரிகா’என்ற முன் பின் அறிமுகமில்லாத ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தேறியவற்றைக் கேட்க நினைத்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே அதனால் தன் மனைவியின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுமோ என்றக் கவலையில் தான் அந்தப் பெண்ணின் செல்பேசி எண்ணும், விலாசமும் தனக்கு உடனே வேண்டும் என்று ஆராவிடம் மன்றாடினான் அபூர்வன்.
ஆனால், இப்பொழுது அதைக் கேட்டு இருக்கவே கூடாது என்று வருந்தி, அழுது கொண்டு இருக்கிறான்.
அவனது இந்த நிலைக்குக் காரணம் அந்தக் காரிகா தானே?
அவளது வாழ்வில் என்ன நடந்தால் அவனுக்கு என்ன? தன் மனைவியிடம் முன்னரே கதை வேண்டாம் என்று மறுத்து இருந்தால் தன்னிடம் இப்படி அவள் பேசியிருக்க மாட்டாளே!
சிறிது நேரத்திற்கு முன்பு தான் அந்தப் பெண்ணிற்காக இரக்கம் கொண்டு, அழுது கொண்டு இருந்தவன் இப்போது சுயநலமாக யோசிக்கும் நிலை உருவாகி விட்டது.
அவனது மனைவி ஆரா மட்டும் தானே அவனுக்கு முக்கியம்!
அவளைத் தவிர வேறெந்த விஷயத்தாலும் அவனைப் பலவீனப்படுத்த முடியாது.
எனவே, தங்களுக்குத் திருமணம் ஆகியது முதல் இப்போது வரைக்கும் தன் மனைவி ஆராவைக் கண்ணுக்குள் வைத்துக் காத்துக் கொண்டு இருந்தவனோ,
துரதிர்ஷ்டவசமாக இன்று ஆராவே அவளது வாயால்,”நான் உன்னை விட்டுச் சென்று விடுவேன்!”எனக் கூறும் அளவிற்கு அத்தனைக் கட்டுப்பாடு இல்லாமல் இன்று அவளிடம் நடந்து கொண்டு இருக்கிறான் என நினைக்கும் போதே அவனால் தன்னையே மன்னிக்க இயலவில்லை.
அதே நேரத்தில் எந்த விதச் சலனமும் இல்லாமல் அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கும் மனைவியைப் பார்த்து யாசிக்கும் வகையில் பேசத் தொடங்கினான்.
“சாரி ம்மா! ரொம்ப ரொம்ப சாரி! நீ கதை தானே சொல்லிட்டு இருந்த? உன்னோட பதட்டம், அழுகை, அப்பறம் திடீர்னு நான் கூப்பிட்டது கூடக் கேட்காமல் இருந்தியா? அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு நிமிஷம் உலகமே நின்னுடுச்சு! நீ என்னை எவ்வளவு வேணும்னாலும் திட்டுடி! அதைப் பண்ணாமல், என்னை விட்டுட்டுப் போய்டுவேன்னு சொல்ற? எனக்கு எவ்வளவு மனசுக்குக் கஷ்டமாக இருக்குத் தெரியுமா? இதை நான் யோசிச்சுக் கூடப் பார்த்தது இல்லைம்மா! ப்ளீஸ் ஆரா! என்னை விட்டுப் போயிடாதே”என்றவன் கூறியவற்றை எல்லாம், கேட்கும் அளவிற்கானச் சுயநினைவில் அவள் தான் தற்போது இல்லையே!
ஆனாலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனைவியிடம் மனம் தாளாது உள்ளிருக்கும் ஆற்றாமையை உரைத்துக் கொண்டு இருந்தான் அபூர்வன்.
அந்த இரவு அவனது கண்கள் உறக்கத்தைத் தழுவவில்லை.
அவனும் உறங்கும் நிலையில் இல்லை.
மறுநாள் விடியலுக்காகவும் அவன் காத்திருக்கவில்லை.
அவனது மனையாள் தான் அவனது மனதைச் சுக்குநூறாக வார்த்தைகளைக் கொண்டு உடைத்து விட்டாளே?
அதற்குப் பிறகு எங்கே அவனுக்கு உறக்கம், உணவைப் பற்றிய நினைவுகள் எல்லாம் எழும்?
அடுத்த நாள் விடியலுக்குச் சற்று முன்பாகவே எழுந்த ஆராவிற்கு முதலில் கிடைத்த தரிசனம் அவளது அபூவிடம் இருந்து தான்!
அவளையே கண்களில் வழியும் கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருந்தவனோ அவள் விழித் திறந்ததும் சற்றும் தாமதிக்காமல் அவளிடம் மன்றாடத் தொடங்கும் வகையில்,
“ஆரா”என்று அழைத்தான் அபூர்வன்.
ஆனால் அவளோ அவனை வெற்றுப் பார்வைப் பார்த்தாள்.
“ஒரு பதினைந்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க”என்று அவனிடம் நிதானமாக கூறி விட்டுச் சென்றாள்.
ஆனால் மனைவியின் இந்த அந்நியத்தன்மை அபூர்வனுக்குத் தான் அவனது உயிரின் உள்ளே சென்று வலித்தது.
அவள் கூறியபடியே பதினைந்து நிமிடங்கள் அமர்ந்து இருந்த இடத்தை விட்டு நகராது இருந்தான்.
அதே சமயம் தன்னைச் சுத்தம் செய்து கொண்டுக் கையில் காப்பிக் கோப்பையுடன் வந்து,
“இந்தாங்க. உங்களுக்குப் பிரஷ் பண்ணாமல் காப்பிக் குடிக்கிறது ரொம்பப் பிடிக்குமே? குடிங்க”என அவனிடம் நீட்ட,
அவனோ அதை வாங்காமல் அப்படியே இருக்கவும் உடனே கணவனின் கைகளில் வலுக்கட்டாயமாக கோப்பையைத் திணித்து விட்டுச் சென்றாள் ஆரா.
தனது கையிலிருந்த கோப்பையை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான் அபூர்வன்.
தலைக்குக் குளித்து விட்டுக் கூந்தலைத் துவட்டிக் கொண்டே அவன் கையில் இருந்த கோப்பையைப் பார்த்தாள்.
அதில் இருந்த பானம் இன்னும் அவன் பருகப்படாமல் இருந்ததைக் கண்டுச் சலித்துக் கொண்டு,”ஏன் இப்படி இருக்கீங்க? காபியைக் குடிச்சுட்டு வேலைக்குக் கிளம்புங்க. எனக்கும் சமையல் வேலை, வீட்டைச் சுத்தம் பண்ற வேலைன்னு நிறைய இருக்கு. இப்படியே எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்து இருக்கப் போறீங்க?”என்று இப்போது வரையில் எதுவுமே நிகழாதவாறு பேசிக் கொண்டே போனவளைப் பார்த்துத் திகைத்துப் போனான் அபூர்வன்.
“சொல்லிட்டே இருக்கேன்ல! போங்க அபூர்வன்”என்று அவனது முழுப் பெயரைக் கூறி எழுப்பி விட்டாள்.
அதில் அவனோ அவளது கைகளை உதறி விட்டு,
“ஆரா! என்கிட்ட யாரோ மாதிரி பேசாதே! என்னால் முடியலை! இந்த ஒரு மணி நேரத்துக்கே நரகமா இருக்கு! நான் பேசினது தப்பு தான்! உன் அபூவை மன்னிக்கக் கூட உனக்கு மனசு வரலையா?”என்று அவளிடம் வலி நிறைந்த குரலில் வினவவும்,
அதில் தலை குனிந்து கைகளை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தாள் ஆரா.
“என்னம்மா?”
அதற்கும் அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
அதிலேயே அவனது மனம் முழுவதிலும் சிறிது, சிறிதாக விரக்தி விரவத் தொடங்கி விட்டிருந்தது.
“மன்னிக்கத் தோனலை அபூ! எப்படி என்னை அதைச் செய்யச் சொல்றீங்க? உங்க ஆராவைத் தானே நீங்க ஒரு பைத்தியம்னு நினைச்சுட்டீங்களே! நான் உங்ககிட்ட இந்தக் கதையைச் சொல்றதுக்கு ஒரே காரணம்! என் மனசில் இவ்வளவு நாளாக பாரமாக இருந்ததை இறக்கி வைக்கத் தான்! ஆனால் அதைக் கேட்டுட்டு நீங்க எனக்குப் பைத்தியக்காரிப் பட்டம் கொடுப்பீங்கன்னு நினைச்சுப் பாக்கவே இல்லை! கனவுல கூட என்னைச் சந்தேகப்பட மாட்டேன்னு சொன்னீங்களே! நேத்து நைட் – டே அந்த நம்பிக்கைப் பொய்ன்னு எனக்குப் புரிய வச்சுட்டிங்க! காரிகான்றப் பேர்ல உண்மையாகவே ஒரு பொண்ணு இருக்காளான்னு டவுட்? எனக்கு ஏதோ மனசளவுல பாதிப்பு ஆகிடுச்சுனு டவுட்? இன்னும் இதை இப்படியே விட்டால் என்னை மென்டல் ஹாஸ்பிட்டல்ல சேர்த்துடுவிங்க போலவே!”
அதைக் கேட்டவுடன் தள்ளாடித், திண்டாடி இனிமலும் அவளது குற்றச்சாட்டுக்களைக் கேட்கத் திராணி இல்லாமல் சொத்தென்று கட்டிலில் விழுந்தான் அபூர்வன்.
அவனது முன்னால் நேரான பார்வையுடன் திமிராக நின்றிருந்தாள் ஆரா.
அவனைக் கேள்விகளால் துளைத்தெடுத்து, அவனது நிம்மதியைக் குலைக்க வேண்டும் என்பது அவளது நோக்கம் அல்ல!
நேற்று இரவு அவன் தன்னைப் பைத்தியக்காரியைப் போல் நினைத்து, நடத்தியதை இன்று இந்த நிமிஷத்தில் கூட அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“காரிகா என் கூடப் படிச்சது உண்மை தான்! அவளுக்கு நடந்தக் காயங்கள், கஷ்டங்கள் எல்லாம் உண்மை தான்! நீங்க வேலைக்குப் போற நேரத்தில் அவ என் கூட ஃபோனில் பேசுறதும் உண்மை தான்! இதை நீங்க நம்பினால் நம்புங்கள்! இல்லைன்னா போங்க! இனிமே இந்த விஷயத்தை நான் நிரூபிக்கவோ, உங்களுக்குச் சாட்சிகளைக் காமிச்சு நம்ப வைக்கவோ முயற்சிப் பண்ணப் போறது இல்லை!”என்று அவனிடம் உறுதியாக உரைத்து விட்டாள் ஆரா.
“சரி.நீ சொல்றதை நான் கண்டிப்பாக நம்பறேன்! காரிகாவோட மொபைல் நம்பரை மட்டும் கொடு! நான் அவங்க கிட்ட பேசியே ஆகனும்”எனத் தானும் தான் பிடித்தப் பிடியிலேயே நின்றான்.
“என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு அபூர்வன்! அதை ரொம்ப நேரம் சோதிச்சுப் பாக்காதீங்க! அப்பறம் அதனால் ஏற்பட்ற விளைவுகள் ரொம்ப மோசமானதாக இருக்கலாம்”
அதுவரை அபூர்வனிடத்தில் கடுமையாக பேசாமல் இருந்தவளோ தன்னால் இவ்வாறும் பேச முடியும் என்பதையும் இப்போது இரண்டாம் முறையாக நிரூபித்துக் காட்டி இருந்தாள் ஆரா.
“இந்த விஷயத்தில் நீ சொல்றதைக் கேட்க முடியாது! ஆமாம் நான் சந்தேகப்பட்றேன் தான்! எனக்கு இப்போ நம்பர் வேணும்! உன் மனசைப் பாதிக்குற எந்த விஷயத்தையும் நான் அனுமதிக்கப் போறது இல்லை! ஒன்னு அந்தப் பொண்ணோட நம்பரைக் குடு. இல்லைன்னா, நீ இதுக்கப்புறம் அந்தப் பொண்ணுக் கூட ஃபோனில் பேசக் கூடாது! நான் என் ஆரா விஷயத்தில் சுயநலவாதி தான்!”என்று அவளுக்குச் சரிக்குச், சமமாய் மல்லுக்கு நின்றான் கணவன்.
“நீங்க உங்க எல்லையை ரொம்ப மீறுறீங்க அபூர்வன்! நான் காரிகாவோட பேசறது தான் உங்க பிராப்ளம் அப்படின்னா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது! நான் அவ கூடப் பேசக் கூடாதுன்னா நீங்க உங்க வேலையை ரிசைன் பண்ணிட்டு என் கூடவே இருபத்தி நாலு மணி நேரமும் இருங்களேன்! அதுக்கு அப்பறம் நான் அவ கூட ஃபோன் பேசுறேனா? இல்லையான்னுக் கண்டுபிடிங்களேன்! இது செம்ம ஐடியால்ல?”என அவன் கூறிய நம்பிக்கையின்மை, சுயநலவாதி என்றச் சொற்கள் யாவும் அவளைக் கோபத்தின் உச்சத்திற்குக் கொண்டுச் செல்லப் போதுமானதாக இருந்ததாலேயே அவனிடம் இப்படி கூறியிருந்தாள் ஆரா.
“அப்போ காரிகாவோட முழுக் கதையையும் எனக்கு இப்போவே முழுசாகச் சொல்லி முடிச்சுடு! எனக்கு அவங்களைப் பத்தின எல்லா விஷயமும் தெரியனும்”என்றவனோ, அந்தக் கதையால் தான் தங்கள் இருவருக்கும் இடையில் இவ்வளவு பெரியப் பிரச்சனை, வாக்குவாதம், சண்டை வருகிறது என்பதாலேயே அதை இன்னும் இழுத்துக் கொண்டே போனால் தாங்கள் பிரிவது சாத்தியம் என்றெண்ணியவனோ, இந்தப் பிரச்சினையை இத்தோடு முடித்து வைத்து விடுவோம் என்று முடிவெடுத்து அவளிடம் கேட்டிருந்தான் அபூர்வன்.
“நேத்துக் கதையைச் சொல்லிட்டு இருந்த நேரத்திலேயே எனக்கு அவ பட்டக் கஷ்டங்கள் ஞாபகத்துக்கு வந்துடுச்சு! இதுக்கு மேலே சொல்லனும்ன்னா எனக்கு ரெண்டு நாள் டைம் வேணும்! நீங்களும் ரொம்ப சோர்வாகத் தெரியுறீங்க. முதல்ல போய் ஃப்ரஷ் ஆகிட்டு பொறுமையாக கிளம்பி ஆஃபீஸூக்குப் போங்க! மத்ததை இரண்டு நாள் கழிச்சுப் பேசிக்கலாம் அபூர்வன்”
“ஐயோ! அபூர்வன், அபூர்வன், அபூர்வன் -னு அப்படியே சொல்லாதேடி! நான் உன் அபூ டி! அதை நீ ஏன் புரிஞ்சுக்கவே மாட்ற ஆரா?”என்றவனுக்கு அவள் தன்னை,’அபூ’ என்று அழைக்கும் வரை பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது.
“ப்ச்! அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு! அபூர்வன்னுக் கூப்பிடத் தான் எனக்குக் கம்ஃப்ர்டபிளா இருக்கு. நான் இங்க இருந்து போன அப்பறம் வேற யாரையாவது உங்களை அபூ – ன்னுக் கூப்பிடச் சொல்லிடுங்க! சிம்பிள்”எனக் கூறி விட்டு அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிக் கொண்டவளோ அங்கிருந்து நகரப் போனாள்.
“பேசிக்கிட்டு இருக்கும் போதே எங்கப் போற? நில்லு!”
இரும்புப் பிடியாய் ஆராவின் கரத்தைப் பற்றியவன் கர்ஜனை குரலில் அவளைத் துளைத்தெடுத்தான்.
“என்ன?”என்று அப்போதும் தயங்காமல் அவனுக்கு நேருக்கு நேர் நின்றுக் கேட்டாள் ஆரா.
“ம்ஹ்ம்! உன் இந்தத் தைரியத்தைப் பாராட்டித் தான் ஆகனும்! உனக்கு என்னோட பாராட்டுக்கள்”எனத் தன் மனைவியை நக்கல் செய்தான்.
“ம்ப்ச். என்னன்னுச் சொல்றீங்களா? இல்லைன்னா நான் போகவா?”என்று சலித்துக் கொள்ள,
“ம்ம். உங்கிட்ட ஒரு சந்தேகம் கேட்கனுமே? அதைக் கிளியர் செய்வீங்களா மேடம்?”என்றவனின் குரலில் இப்போதும் அதே நக்கல் தொனி தான் தென்பட்டது!
“அது நீங்க கேட்கிறதைப் பொறுத்தது”என்றிருந்தாள் மனைவி.
“எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் தான்! ஆனால் எனக்குத் தான் சந்தேகம் அதிகமாக இருக்கு! அதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டீங்கன்னா எனக்கு எல்லாம் கிளியர் ஆகிடும்! அப்பறம் நீங்கக் காரிகா கிட்டப் பேசினால் எனக்கு என்ன? சாரிகா கிட்டப் பேசினால் எனக்கு என்ன?”
“கேளுங்க. சொல்றேன்”என்றாள்.
அவனுக்குத் திடீரென்று உதித்தச் சந்தேகம் தான் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தாள் ஆரா.
“காரிகான்றப் பொண்ணு இருக்கிறது உண்மை தான் அப்படின்னா அவங்க கதையை நீங்கச் சொல்லும் போது அவங்க முதுகுல சூட்டுத் தழும்பு இருக்கும்ன்னுச் சொன்னீங்களே? அதே போல் உங்க முதுகுலேயும் எப்படித் தழும்பு வந்துச்சு? ஒருவேளை பெஸ்ட் ஃப்ரண்ட்ன்றதால் அந்த மாதிரியான தழும்பை நீங்களும் உங்க முதுகில் உருவாக்கிக்கிட்டீங்களா? ஏன்னா, உங்கப் புருஷனான நான் தினமும் அந்தத் தழும்பைப் பார்த்துட்டுத் தான் இருக்கேனே! நான் இவ்வளவு நாளாக அது ஏதோ உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நடந்த தீ விபத்தில் ஏற்பட்டருக்கும்ன்னு நினைச்சு அதைப் பெரிசாக எடுத்துக்காமல் விட்டுட்டேன்! ஆனால் நீங்க சொன்னக் கதையும், அந்தச் சூட்டுத் தழும்பு இருந்த இடத்தையும் பத்தி நீங்க எங்கிட்டே சொன்னதுக்கு அப்பறமாக இந்தச் சந்தேகம் தான் என்னைப் போட்டுப் படுத்தி எடுக்குது! அதுக்கானப் பதிலைச் சீக்கிரம் சொல்லிட்டுப் போங்க. நான் குளிச்சுட்டு ஆஃபீஸூக்குப் போகனும். வெயில் காலத்தில் இவ்வளவு நேரம் குளிக்காமல் இருக்கறது கசகசன்னு இருக்கு. கடுப்பா வேற இருக்கு! அதனால் கொஞ்சம் சீக்கிரமாக உங்கப் பதிலைச் சொல்லுங்க ஆரா மேடம்”என்று அவளிடம் தீர்க்கமாக வினவி விட்டு தன் மார்பின் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அவளது வழியை மறைத்துக் கொண்டு நின்று அவளது பதிலிற்காக அவளையே கூர்மையுடன் நோக்கலானான் அபூர்வன்.
– தொடரும்

