Loading

இப்போது கணவனிடம் என்னக் கூறி சமாளிக்கப் போகிறோம்? என்பது கூட தெரியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்தாள் ஆரா.

 

அவன் தன்னிடம் இவ்வாறு கேட்பது அவனுக்கு வேண்டும் என்றால் நியாயமானதாக இருக்கலாம்! 

 

ஆனால் இவள் மேல் காரிகா கொண்ட நம்பிக்கையை உடைப்பது என்பது இவளால் முடியாத காரியம் அல்லவா !

 

தான் ஒருவருக்குக் கொடுத்த வாக்கை மீறுவது அவளது வாழ்வில் நினைத்துப் பார்க்க விரும்பாத விஷயம் என்றத் தன் நிலையில் உறுதியாக இருக்கும் போது தன் கணவன் இப்படித் தன்னிடம் மீண்டும், மீண்டும் கேட்டுத் தொந்தரவு செய்வது ஆராவிற்குப் பிடிக்கவில்லை என்பதை அவளது முகமே வெளிப்படையாகக் காட்டிக் கொண்டது.

 

அதே சமயத்தில் தன் மனைவியின் செயலைக் கண்டு உள்ளம் பதைபதைக்க அவளது அருகில் அமர்ந்தான் அபூர்வன்.

 

அவளது கைகளைத், தன் கரத்தினுள் பொத்தி வைத்துக் கொண்டு அவளது பார்வைத் தன் மேல் படும் வரை காத்திருக்கலானான்.

 

தன்னவன் ஸ்பரிசம் பட்ட கணத்திலேயே, விழிகளைத் திறந்து அவனைக் கண்டாள் ஆரா.

 

“ஆரா! ப்ளீஸ்! நான் சொல்றதைக் கேளு” என்று மனைவியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான் அபூர்வன்.

 

“ஏன் அபூ நான் அவ்வளவு சொல்லியும் நீங்க மறுபடியும், மறுபடியும் அதைக் கேட்டுக்கிட்டே இருக்கறதைப் பார்த்தால் நீங்க என் மேல் சந்தேகப்பட்றீங்களா?”எனக் கணவனுக்குத் தன் மேல் என்ன அபிப்பிராயம் உள்ளதென்பதைச் சரியாகத் தவறாக கணித்து விட்டிருந்தாள் ஆரா.

 

அதைக் கேட்டு ஸ்தம்பித்துப் போய்,”நீ என்னப் பேசுறன்னு உனக்குப் புரியுதா ஆரா? நான் உன்னைச் சந்தேகப்பட்றேனா? ஏன்டி உனக்கு இப்படி ஒரு எண்ணம் எல்லாம் வருது?”என அலைக்கழிந்த மனதுடனும், வலி நிறைந்த கண்களுடனும் அவளிடம் கேட்டிருந்தான் அபூர்வன்.

 

“இல்ல அபூ. நீங்கத் தப்பான நோக்கத்தில் காரிகாவோட நம்பர் அப்பறம் அட்ரஸைக் கேட்க மாட்டீங்கனு எனக்கு நல்லாவேத் தெரியும்! ஆனால், காரிகாவால் எனக்கு மனநோய் வந்துடுமோ – ன்னுப் பயப்பட்றீங்களா? அதனால் தான் எனக்கு ஏதோ மனநிலை பாதிக்கப்பட்ருச்சோ – ன்னுச் சந்தேகப்பட்டு இப்படி எங்கிட்ட கேட்டீங்களோன்றது தான் நீங்க என்னைச் சந்தேகப்பட்றீங்களான்னு நான் கேட்டதுக்கான காரணம் அபூ?”என்று அவனுக்கு விளக்கிக் கூறினாள் மனைவி. 

 

ஏனெனில், தன் கணவன் தன்னை இவ்வாறு தான் நினைத்திருக்கக் கூடும் என்று அவள் அனுமானித்து இருந்தாள்.

 

சற்று முன்னர் தன் மனையாள் மொழிந்திருந்தக் கூற்றைக் கேட்டு ஆட்டம் கண்டிருந்தவனோ, இப்போது அவள் கொடுத்த விளக்கத்தைக் கேட்டதும் நிதானித்துப் பின்னர் அவளைத் தயக்கமாகப் பார்த்தான்.

 

அதிலேயே புரிந்து கொண்ட பெண்ணவளோ தன்னவனின் கரங்களில் இருந்து தன் கைகளை எடுத்துக் கொண்டாள்.

 

“நீங்க இப்படித்தான் யோசிச்சு இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும் அபூ. கடைசியில் என்னை ஒரு மென்டல்ன்னு நினைச்சிட்டீங்கள்ல!”என்று அவனிடம் ஆதங்கமாக உரைத்தாள் ஆரா. 

 

தன் மனைவியின் இந்தக் குற்றம் சாட்டும் வார்த்தைகளும், விரக்தி நிறைந்த குரலும் அவனுக்குப் புதிதாக இருந்தது! 

 

“ஹேய் ஆராம்மா! நான் உன்னை அப்படி நினைக்கவும் இல்லை! அந்த நோக்கத்திலும் அப்படிச் சொல்லலை! அந்தப் பொண்ணை நினைச்சுஉனக்கு மனசளவுல எந்தப் பாதிப்பும் வந்துடக் கூடாதுன்னு தான் நான் இப்படி கேட்டேன்! நான் உன்னைப் போய் எப்படி மென்டல்ன்னு சொல்லுவேன்? நீ என்னோட தேவதை ஆராம்மா! நான் உன்னைக் காதலிச்சதுல இருந்து உன் மேல் எனக்குக் காதலோட சேர்த்து ஒரு மரியாதையும் எப்பவும் இருக்கும்! நீ எனக்கு அவ்வளவு ஸ்பெஷல்ம்மா” 

 

அவன் பேசுவதை அமைதியாக கேட்பதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை என்பதைப் போல் கைகளை குறுக்காகக் கட்டிக் கொண்டு இவன் இன்னும் என்ன எல்லாம் சொல்லப் போகிறான்? என்றப் பாவனையில் கணவனை வெறித்துப் பார்க்கலானாள் ஆரா.

 

“அதே மாதிரி அப்படியே உனக்கு ஏதாவது பிராப்ளம் வந்தாலும் கூட அதை நாம சேர்ந்து எதிர் கொள்வோம்!”என்றவனோ,

 

அவள் எதற்கும் பதில் பேசாமல் இருக்கவும்,”இப்படி அமைதியாக இருக்காதேம்மா! உன் மனசில் என்ன இருந்தாலும் சொல்லு”என்று அபூர்வனிடத்தில் இருந்து வந்த தவிப்பு நிறைந்த வார்த்தைகளால் கண்களை மூடித் திறந்து, 

 

“உட்காருங்கள்” என்று ஒற்றைச் சொல்லவும், உடனே அவன் அதைச் செயல்படுத்தி விடவும் தானும் அவனது அருகில் அமர்ந்து கொண்டு, 

 

“நான் காரிகாவைப் பத்லி இன்னும் உங்ககிட்ட நிறைய விஷயங்களை சொல்லலை! அதுக்குள்ளேயே ஏன் இவ்வளவு அவசரப்பட்றீங்க? அவளோட கதை மொத்தத்தையும் கேட்டுட்டு எனக்குப் பைத்தியக்காரப் பட்டம் கட்டுங்க”என்றவளின் உயிர்ப்பில்லாத வார்த்தைகளை அவனும் தான் எவ்வளவு நேரம் தாங்குவான்? 

 

“என்னடி இப்படி பேசுற? ப்ச் ஆரா!”என்று அவளைக் கண்டிக்கும் தொனியில் பேசினான் அபூர்வன்.

 

அந்த மன்னிப்பைத் துச்சமாக நினைத்து அதை ஏற்றுக் கொள்ளாமல் இவள் கதையைத் தொடர்ந்தாள்.

 

“காரிகாவோட காலேஜ் லைஃப்ல நான் அவ கூட இருந்ததால் கொஞ்சம் அவ மன அழுத்தம் இல்லாமல் இருந்தாள். அவளோட ப்ராஜெக்ட் வொர்க் எல்லாம் ரொம்ப மும்முரமாகச் செஞ்சிட்டு இருந்தாள். அந்த நேரத்தில் தான் ஒரு பையன் அவகிட்டேப் புரபோஸ் பண்ணான். அவ இருக்கிற சூழ்நிலையில் இந்தக் காதல் அவளுக்கு என்னச் சந்தோஷத்தையாக கொடுக்கப் போகுது? அதுவும் இல்லாமல் அந்த விஷயம் அவளோட வீட்டுக்குத் தெரிஞ்சா அவ்வளவு தான்! அவளை வார்த்தையாலேயே கொன்னுடுவாங்க! அதனால் அந்தப் பையன் கிட்ட,’எனக்குக் காதலில் எல்லாம் ஆர்வம் இல்லை! படிக்கிறதை தவிர எனக்கு எதுவும் இப்போ வேண்டாம். ப்ளீஸ்! இதை மறந்துட்டு நீங்களும் நல்லாப் படிங்க’அப்படின்னு அட்வைஸ் செய்தாள். அந்தப் பையன் அவ சொன்னது எதையுமே காதில் வாங்கிக்காமல் அவளை உருகி, உருகி லவ் பண்றேன்னுத் தொல்லை செய்துட்டே இருந்தான்! காதல் என்னத் தொல்லை செய்துக், கட்டாயப்படுத்தி வர்ற விஷயமா? ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவங்களுக்குன்னு மனசு இருக்கு! அவங்களுக்குச் சுயமாக யோசிக்கத் தெரியும்! அதுக்கான உரிமை அவங்களுக்கு இருக்கு! இப்படி கம்பெல் பண்றதால் வெறுப்புத் தான் அதிகம் ஆகுமே தவிர, லவ் கண்டிப்பாக வராது! அது ஏன் இந்த மாதிரி ஆளுங்களுக்குப் புரியவே மாட்டேங்குது? அப்படி இல்லைனா நான் தற்கொலை செய்துப்பேன்னு மிரட்டல் கொடுக்க வேண்டியது! ஆமாம், ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ பாத்த அந்த நபருக்காக, அவங்க மேலே தனக்கு இருக்கிறது உண்மையான லவ்வா? இல்லை ஈர்ப்பான்னுத் தெரியாமல் எப்படி அவங்களுக்காகச் சூசைட் பண்ற லெவலுக்குப் போகத் தோனுது? இப்படி யாரோ தெரியாதவங்களுக்காகச் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணத் தான் பெத்தவங்க அரும்பாடு பட்டுப் பெத்து, கண்ணுங், கருத்துமாக வளத்து வச்சுருக்காங்களா?”என்று மூச்சு வாங்கப் பேசினாலும் கூடத், தான் கூறியது உண்மையான, நியாயமான வார்த்தைகளே என்பது ஆராவிற்கு நன்றாகவேத் தெரியும்.

 

அவளைப் போலவே தான், தன் மனைவியின் கருத்தை ஆமோதித்ததை வெளிப்படுத்தும் வகையில் ஆமாம் என்று தலை அசைத்தான் அபூர்வன்.

 

“அதுக்காக எல்லா லவ்வும் அப்படி ஈர்ப்பால் மட்டும் தான் வருதுன்னு நான் சொல்லலை! ஒருத்தர் இன்னொருத்தரோட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, முறையாகப் பெத்தவங்ககிட்ட பேசிக் கல்யாணம் செய்றக் காதலர்களும் இருக்காங்க! நான் ஏன் இதை இவ்வளவு அழுத்திச் சொல்றேன்னா? காரிகாவோட வாழ்க்கையோட திசை மாறுனதே அந்தப் பையன் பண்ணக் கேவலமான காரியத்தால் தான்!”என்றிருந்தவளோ, வெகு வருடங்களாகத் தன் மனதில் பூட்டி வைத்திருந்தவற்றை எல்லாம் இன்று கணவனிடம் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்தாள்.

 

“அப்படி அவன் என்ன செஞ்சான் ஆரா?”எனக் காரிகாவின் வாழ்க்கையில் இன்னும் அப்படி என்ன மாதிரியான சோகம் தான் ஏற்பட்டிருந்தது என்பதை மனைவியிடம் கேட்டிருந்தான் அபூர்வன்.

 

“அந்தப் பையன் அவகிட்ட லவ் பண்ணுன்னுக் கேட்டுக், கேட்டு களைப்பாகி ஒரு தடவை அவளை பாலியல் தொல்லைக் கொடுக்க முயற்சிப் பண்ணான்! அந்த விபரீதத்தை நடக்க விடாமல் அவளை நான் தான் அந்த கொடூரன் கிட்ட இருந்து காப்பாத்தினேன்! அந்த நேரத்தில் எனக்கு வந்தக் கோபத்தை அவ்வளவு சீக்கிரம் கட்டுப்படுத்த முடியல! அவனைப் போலீஸில் பிடிச்சுக் கொடுத்துட்டு லீகலா என்ன எல்லாம் செய்யனுமோ அதை எல்லாம் செய்துட்டு வந்துப் பார்த்தால் காரிகா மூலையில் உக்காந்து எதையோ முணுமுணுத்துக்கிட்டே, அழுதுட்டு இருந்தாள்”என்று அதை விவரிக்கும் பொழுதே ஆராவின் கண்கள் கலங்கிக் கொண்டு இருப்பதைக் கவனித்தான் அபூர்வன்.

 

உடனே அவளின் கரங்களை ஆதரவாகப் பற்றப் போகும் சமயத்தில்,’இருக்கட்டும். பரவாயில்லை’என்பதைப் போல் அவனிடம் இருந்து நன்றாக விலகி அமர்ந்தாள் ஆரா.

 

‘என் மனைவியைச் சமாதானம் செய்யும் வழி அறியாதவனா நான்?’ என்ற இறுமாப்பில் இருந்தான் அபூர்வன்.

 

ஆனால் அவளோ நொடி நேரத்தில் தனது இந்த இறுமாப்பை ஒன்றும் இல்லாமல் போகச் செய்து இவள் தனக்குக் கொடுக்கும் அதிர்ச்சியை முன்னரே அறிந்து கொள்ளும் சக்தி இவனிடத்தில் இருந்து இருந்தால் நிச்சயமாகத் தனது மனைவியிடம் அவளது தோழியைப் பற்றிய கதையைக் கேட்கவே முடிவெடுத்து இருக்க மாட்டான்!

 

ஆனால் அவனது எண்ணவோட்டத்தையும், அதிர்ச்சியையும் கவனியாதவளைப் போல்,”நான் காரிகா கிட்ட போய் அவளைச் சமாதானம் செஞ்சேன்! ஆனால் அவ திரும்பத், திரும்ப சொன்ன விஷயங்கள்,’நான் துரதிர்ஷ்டம் செய்தவள் தான் ஆரா! என்னை எல்லாம் ஏன் கடவுள் படைச்சார்? செத்துப் போயிடலாம் போல இருக்கு! இன்னும் அந்த மிருகம் என் உடலைத் தீண்டிட்டு இருக்கிற மாதிரி இருக்கு! ரொம்ப அருவருப்பாய் ஃபீல் பண்றேன்! அவன் என்னை மனசார லவ் பண்ணி இருந்தால் என்னை உடலளவில் காயப்படுத்த நினைச்சு இருப்பானா? இதுக்குப் பேர் தான் காதலா? அப்படின்னா எனக்கு இந்தக் காதல்ன்ற விஷயமே வேண்டாம் ஆரா!”எனக் கூறி விட்டுக் குலுங்கிக், குலுங்கி அழுது கொண்டு இருக்கும் அவளைப் பார்த்த ஆராவிற்கு இதயம் வலித்தது.

 

அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அபூர்வனுக்கே கண்களில் இருந்து கண்ணீர் வரத் தொடங்கி விடத் தானும் அழுதவாறே தனது தோழி அடுத்துப் பேசிய விஷயங்களைக் கூற எத்தனித்தாள் ஆரா.

 

அவளைச் சமாதானம் செய்யும் விதமாக அவளைத் தனது தோளோடுச் சேர்த்தணைத்துக் கொண்டான்.

 

ஆனால் தன்னிடமிருந்து அனிச்சையாக விலகப் போராடிய ஆராவை வலி நிறைந்தப் பார்வைப் பார்த்தான் அபூர்வன்.

 

ஆனால் அவளைத் தன்னிடமிருந்து விடுவிக்காமல், 

 

“வேண்டாம் ஆரா! இனிமேல் இந்தக் கதையைக் கேட்க என்னால் முடியாது! அந்தப் பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள்? புனிதமான காதலைப் பற்றிய அபிப்பிராயமே அவளுக்கு வேற மாதிரி ஆகி இருக்கு! அதை அப்படி அவளுக்குப் புரிய வச்ச அந்த மிருகத்தைக் கொலை செய்ற ஆத்திரம் வருது! அவன் இப்போ என்னப் பண்றான்னுத் தெரியாது? ஆனால் நீ அவனுக்குச் சட்ட ரீதியாகத் தண்டனை வாங்கிக் கொடுத்து இருப்ப – ன்னுத் தெரியும்”

 

“இல்லை! நான் அதுக்கு முயற்சிப் பண்ணேன். ஆனால் முடியலை. அதுக்கு அப்பறம் நடந்ததைச் சொல்லவும் எனக்கு மனசில் தைரியம் இல்லை அபூ”என அவனுக்குத் தன்னால் தக்கத் தண்டனையை வாங்கிக் கொடுக்க இயலவில்லை என்பதைக் கணவனிடம் கூறினாள் ஆரா.

 

“என்ன?!”என்றவனோ,

 

அந்தக் கொடூரனுக்குத் தண்டனை கிடைக்கவில்லையா? என அதிர்ச்சி அடைந்தவனுக்குத் மனைவியின் முகத்தில் தெரிந்த ரௌத்திரம் அவள் தன்னை விட பல மடங்குச் சினத்தில் இருக்கிறாள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

 

“சரி ஆரா. போதும். இனிமேல் இந்தக் கதையை நாளைக்குச் சொல்லு! நீ இப்போ தூங்கு. மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். நாம வேணும்னா நாளைக்கே அம்மா சொன்ன மாதிரி அந்த வீட்டுக்குப் போயிடலாமா? அவங்க கூட இருந்தால் உனக்கு மன அழுத்தம் ஆகாமல் இருக்கும்ல? நீ என்னச் சொல்ற ஆரா?”என்று அவளை எப்படியாவது இதற்குச் சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று வினவினான் அபூர்வன்.

 

அதில் அவனைப் பார்த்து மென் புன்னகை புரிந்த அவனது மனையாளோ, 

 

“என்ன மிஸ்டர். அபூர்வன்! இப்படியே விட்டால் எனக்குப் பைத்தியம் முத்திப் போயிடும்னு நீங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நினைக்கிறீங்களா?”என அவனிடம் கேட்டுச் சத்தமாகச் சிரித்தாள் ஆரா.

 

ஆனால் அவளது கண்களில் மட்டும் கண்ணீர்த் தேங்கி நின்றது.

 

“கவலைப்படாதீங்க! காரிகாவோட கதையைச் சொல்லி முடிச்ச அடுத்த நிமிஷம் நான் உங்களை விட்டுப் போயிடுவேன்”எனத் தீர்க்கமாக உரைத்து விட்டுக் கட்டிலில் இருந்த தலையணையில் தலையைப் பொருத்திக் கொண்டுச் சுகமாய் உறங்க ஆரம்பித்தாள் ஆரா.

 

ஆனால், அவளது முடிவில் சர்வமும் அடங்கி, ஒடுங்கிப் போய்ப் பித்துப் பிடித்தவன் போல் அமர்ந்து இருந்தான் அந்தக் கணவன்.

 

– தொடரும்

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்