
சென்னை வந்தடைந்த ராகவி வீட்டிற்குள் நுழையும் போதே, உள்ளே யாரோ பேசும் அரவம் கேட்டது. இம்முறை சரண்யாவும் ராகவியுடனேயே தங்குவதென முடிவெடுத்திருந்தாள். தாரகேஷின் அந்தப் பயங்கரமான ரகசியம் தெரிந்த பிறகு, அவனால் ராகவிக்கும் சஞ்சனாவிற்கும் என்ன ஆபத்து வரும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. தாரகேஷ் பொதுவாகப் பெண்களை மதிப்பவன் என்பதால், இந்தத் துரோகம் தெரிந்த பின் அவனது எதிர்வினை எப்படியிருக்கும் என்பது பெரும் புதிராகவே இருந்தது.
வீட்டிற்குள் வந்த ராகவி, தன் மாமா கஜேந்திரனைக் கண்டதும் ஓடிச் சென்று ”மாமா” என குழந்தையாய் அணைத்துக்கொண்டாள். அவளது தலையை ஆதுரத்துடன் தடவிக்கொடுத்தவர், “நீ ஐ.டி-ல தான் வேலை பார்க்கிறன்னு நினைச்சேன். இப்போ என்னடான்னா சைக்கோ பின்னாடி எல்லாம் ஓடிக்கிட்டு இருக்க போல…” எனக் கிண்டலாகக் கேட்டார்.
”எனக்கும் கம்ப்யூட்டர் பின்னாடி மட்டும்தான் ஓட ஆசைதான் மாமா… ஆனா என்ன பண்ண, விதி!” என உதட்டைப் பிதுக்கியவள், சரண்யாவுடன் ஃப்ரெஷப் ஆகத் தன் அறைக்குச் சென்றாள்.
குளித்துவிட்டு வந்த ராகவி, மாமாவிடம் கூறிவிட்டு நேரே எதிர் வீட்டுக்குச் சென்றாள். அங்கே நடந்த பிரச்சனைகள் எதுவும் அறியாமல், சஞ்சனா தன் மகளுடன் ஹாலில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
ராகவி, “சஞ்சனா…” என தயக்கத்துடன் அழைத்தாள்.
சஞ்சனா, “வா ராகவி. என்ன ரெண்டு மூணு நாளா ஆளையே காணோம்?”
ராகவி, “அது… ஒரு வேலை விஷயமா பெங்களூரு போயிருந்தேன். அங்கே தாரகேஷைப் பார்த்தேன்,” என்றவள், “நீ சில விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும் சஞ்சனா. கொஞ்சம் என் வீட்டுக்கு வர்றியா?” என உணர்ச்சியற்ற குரலில் அழைத்தாள்.
ராகவியின் முகத்தைப் பார்த்த சஞ்சனா குழப்பமடைந்தாள். பின் மகளை தன் அத்தையிடம் கொடுத்துவிட்டு ராகவியுடன் சென்றாள். அங்கே கஜேந்திரனைப் பார்த்ததும் சஞ்சனா மேலும் தயங்க, ”இவர் என் மாமா தான்” என்று ராகவி அறிமுகப்படுத்திவிட்டு, தாரகேஷின் ஜர்னலைச் சஞ்சனாவின் கையில் கொடுத்தாள்.
அதைப் படிக்கப் படிக்க சஞ்சனாவின் கண்கள் நீரால் நிறைந்தன. ராகேஷ் அவ்வப்போது கேம் விளையாடுவான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அவனை கடன் வாங்கி விளையாடும் அளவிற்கு தூண்டிவிட்டதும், தங்களது திருமண வாழ்க்கை ஒரே மாதத்தில் முடிந்ததற்கும் காரணம் தாரகேஷ் என்று புரிந்த போது சஞ்சனாவிற்கு தலை சுற்றியது.
சஞ்சனா, “இதை எனக்காகத் தான் கொண்டு வந்தீங்கன்னா ரொம்ப நன்றி ராகவி. தாரகேஷ் அண்ணன் பத்தி எனக்குப் புரிய வச்சதுக்கும் நன்றி. ஆனா இதுக்குக் காரணம் அவர் மட்டும்தான்னு சொல்ல முடியாதுதானே? வீட்டுல பொண்டாட்டி, வயித்துல புள்ள, பெத்த அம்மான்னு இவ்வளவு பொறுப்புகள் இருக்கும்போது, தாரகேஷ் அண்ணனாலதான் இவரு மோசமா அடிக்ட் ஆகிருக்காருன்னு என்னால முழுசா ஏத்துக்க முடியல. நான் எவ்வளவு சொல்லியும், சண்டை போட்டும் அவரால அந்த அடிக்ஷன்ல இருந்து வெளிய வர முடியல. இந்த ஜர்னல்னால இப்போ எனக்கு எந்தப் பயனும் இல்லை.” என வறண்ட குரலில் சொன்னாள்.
அவளின் நிலையைப் புரிந்துகொண்ட கஜேந்திரன், “பரவாயில்லைம்மா, கஷ்டப்படாதே. இதை நீ உன் புருஷன் கூடச் சேரணும்னு நாங்க காட்டல. உண்மை உனக்குத் தெரியணும்னு தான் காட்டினோம். ராகேஷ் பொறுப்பில்லாமல் இருந்தது தப்புன்னா, அதைத் தாரகேஷ் தூண்டிவிட்டதும் தப்புதான். அவன் ராகேஷ் மட்டும் இல்லாமல் பல ஆண்களோட வாழ்க்கையில விளையாடியிருக்கான். ஆணும் பெண்ணும் இணைந்து உருவானதுதான் இந்தச் சமூகம். இங்கே யாருக்கும் அடுத்தவங்க வாழ்க்கையில முடிவு எடுக்குற உரிமை கிடையாது. அதனால நாங்க தாரகேஷைக் கைது செய்ய வேண்டிய வேலைகளைப் செய்து தான் ஆகவேண்டும்,” என்றார் உறுதியாக.
சஞ்சனாவும் அந்த ஜர்னலில் தாரகேஷ் சிதைத்த மற்ற பெண்களின் வாழ்க்கையைப் பார்த்திருந்ததால், மௌனமாக ஒப்புக்கொண்டாள். அதன் பின் ராகவியும் சரண்யாவும் அந்த ஜர்னலில் இருந்த மற்ற பெண்களைத் தொடர்புகொள்ள முயன்றனர். அவர்களில் சிலர் இழந்த காதலை நினைத்து வருந்தினர். சிலர், “என் காதலைப் பிரிக்க இவனுக்கு என்ன உரிமை?” என்று சீறினர்.
கஜேந்திரன் அவர்கள் அனைவரையும் தாரகேஷ் மீது புகார் கொடுக்க வைத்தார். தாரகேஷ் நேரடியாகப் பெண்களைத் தாக்கவில்லை என்றாலும், அவன் பல ஆண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கியது உண்மை.
குறிப்பாகச் சுபாஷ் மீது அபாண்டமாகப் பழிபோட்டு அவனை மனரீதியாகத் துன்புறுத்தியிருந்தான். ஜர்னலில் இருந்த ஆதாரங்களின்படி அவன் ஒரு ‘தொடர் குற்றவாளி’ என்றும், திட்டமிட்ட சதி செய்தவன் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் மூலம் புகார் அளிக்கப்பட்டது. எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டு, அவன் ஜாமீனில் வர முடியாதபடி சட்ட நடவடிக்கைகள் முடுக்கப்பட்டன.
விரைவாகக் கைது வாரண்ட் வாங்கப்பட்டு, அவனைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. பெங்களூரு போலீஸ் உதவியுடன் அவனது வீட்டைச் சோதனையிட்டபோது, ராகவி பார்த்த மற்ற ஜர்னல்கள் அனைத்தும் சிக்கின. வழக்கு இன்னும் வலுவானது. தாரகேஷ் சென்னைக்குள் நுழையும் முன்னே கஜேந்திரன் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்திருந்தார்.
சென்னை வந்த தாரகேஷ் நேராக ஒரு ஹோட்டலுக்குச் சென்று செக்-இன் செய்தான். பின் அங்கிருந்து சஞ்சனாவிற்குத் தொடர்பு கொண்டான். அப்போது சஞ்சனா ராகவியின் வீட்டில் இருந்தாள்.
தாரகேஷின் போன் அழைப்பைக் கண்டு சஞ்சனா அதிர, கஜேந்திரன் அவளைப் பேசச் சொல்லித் தைரியம் கொடுத்தார். சஞ்சனா தன் அழுகையை விழுங்கிக்கொண்டு குரலைச் சரிசெய்து பேசினாள்.
தாரகேஷ், “ஹலோ சஞ்சனா… எப்படிம்மா இருக்க?”
சஞ்சனா, “நல்லா இருக்கேண்ணா… நீ எப்படி இருக்க? என்னண்ணா இப்போ கால் பண்ணிருக்க? ஏதாவது பிரச்சனையா?”
தாரகேஷ், “அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. சும்மா உன்கிட்ட பேசணும் போல இருந்தது. பாப்பா என்ன பண்றா?”
சஞ்சனா, “அவ தூங்குறாண்ணா. நான் கிச்சன்ல இருக்கேன்.”
தாரகேஷ், “சரிம்மா, நான் வைக்கிறேன்…” என அவன் போனை கட் செய்யப் போக, “அண்ணா ஒரு நிமிஷம்!” என அழைத்தாள் சஞ்சனா. தாரகேஷ் மீண்டும் போனை காதுக்குக் கொடுக்க, “ஏண்ணா இப்படி பண்ணீங்க?” என்றாள் கலங்கிய குரலில்.
தாரகேஷிற்கும் கண்கள் கலங்கின. “பூக்களைப் பாதுகாக்கணும்னு மட்டும் தான் நான் நினைச்சேன். இந்த உலகம் ரொம்ப மோசமானது சஞ்சனா. எந்தப் பூவுக்கும் இங்கே பாதுகாப்பு இல்லை. சொல்லப்போனா பூக்களோட தோட்டமே வேட்டைக்காரன் கிட்டதான் இருக்கு. அவன் கிட்ட சிக்கியிருக்க பூக்களை என்னால முடிஞ்ச அளவுக்குக் காப்பாற்றுவேன். ஒருவேளை ராகவி பக்கத்துல இருந்தா அவகிட்டயும் சொல்லிடு,” என வலியுடன் ஆரம்பித்து ஆவேசமாக முடித்தான்.
அவன் பேசிய சிக்னலை வைத்து அவன் தங்கியிருந்த ஹோட்டலைப் போலீஸார் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்குள் தாரகேஷ் அங்கிருந்து மறைந்திருந்தான். போலீஸ் தன்னைத் தேடுவதை உணர்ந்தவன், ஏ.டி.எம்-மில் பணம் எடுத்துவிட்டு போனை அணைத்துவிட்டான்.
இரவு முழுவதும் பயணித்த தாரகேஷ், விடியற்காலையில் ஒரு கிராமத்தை அடைந்தான். அந்த கிராமம் இயற்கையின் மணத்தோடு பசுமையாக இருந்தது. கிராம மக்களின் நேர்மையும் அன்பும் கடின உழைப்பும் அந்த கிராமத்தின் உயிர்ப்பை மேலும் அழகாக்கியது.
தான் பிறந்து வளர்ந்த கிராமத்தைப் பார்த்துக்கொண்டே வந்தவன், ஒரு மண் குடிசையின் முன் காரை நிறுத்தினான். பின் காரில் இருந்து நிதானமாக இறங்கியவன், வாசலில் நின்று “அத்தா!” என அழைக்க, உள்ளிருந்து ஒரு பெண் வந்தாள். அவளது கைகள் முழுவதும் தீக்காயத்தினால் சுருங்கிப்போயிருந்தன. முகத்தின் தசைகள் வெந்து கோரமாகக் காட்சியளித்தன. ஆனால், அந்த முகத்தின் கண்களில் மட்டும் ஒரு சாந்தம் மின்னியது. அவள் மெல்ல நடந்து வந்து கதவைத் திறந்தாள்.
எதிரே நின்ற தன் தம்பியைப் பார்த்த செங்காந்தள் அதிர்ந்தாள். நிச்சயமாக அந்நேரத்தில் அவள் தாரகேஷை எதிர்பார்க்கவில்லை. முதற்கட்ட அதிர்ச்சி விலகியதும், தன் தம்பியின் முகத்தை மெதுவாகத் தொட்டுப் பார்த்தாள். அவன் உண்மையிலேயே தன் கண் முன் இருப்பதை உணர முயற்சி செய்தாள். தான் காண்பது கனவு அல்ல என்பதை உணர்ந்தவள் கண்களில் கண்ணீர்.
சிறிய விசும்பலாக அழ ஆரம்பித்தவள், நேரம் செல்லச் செல்ல சத்தமிட்டுப் பெரிதாகக் கதறத் தொடங்கினாள். தமக்கையின் கதறலைக் காண சகியாத தாரகேஷ் அவளை அணைத்துக்கொண்டான்.

