
தாரகேஷைப் பார்த்த இருவரும் அதிர்ந்து நின்றனர். நல்லவேளையாக, ராகவி தான் எடுத்த ஜர்னலை முதலிலேயே தனது ஷோல்டர் பேகினுள் மறைத்துவிட்டாள். தன் வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்களைப் பார்த்த தாரகேஷ் முதலில் குழம்பினான். பின் அருகே வந்து அவர்களைப் பார்த்ததும் யார் எனத் கண்டுகொண்டவன், ஆச்சரியமானான்.
தாரகேஷ், “ராகவி… நீயா? வாட் ஏ பிளசன்ட் சர்ப்ரைஸ்…” என்றான் மகிழ்ச்சியுடன்.
ராகவி, “ஆமா சார்… இங்க கான்பரன்ஸ்க்காக வந்தேன். சரண்யா கூடத்தான் தங்க வேண்டியதா இருந்தது. அதான் அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்,” என்றாள் சமாளிப்பாக.
தாரகேஷ், “என்னைப் பார்க்கவா?” என்றான் சிறு குழப்பத்துடன்.
ராகவி, “ஆமா சார். நீங்க இங்கதான் இருக்கீங்கன்னு சரண்யா சொன்னா. அவ என்னோட காலேஜ் மேட். அதான் சும்மா ஒரு ஹலோ சொல்லலாம்னு வந்தோம். பட், இப்போ ட்ரைன்க்கு டைம் ஆச்சு. கிளம்பணும்,” என்றாள் தவிப்பாக.
தாரகேஷ், “ஓஹ்… சரி, நான் வேணும்னா உங்களை ஸ்டேஷன் வரை கொண்டு வந்து விடவா?” என்றான் அக்கறையுடன்.
அதில் ராகவி உள்ளுக்குள் அதிர, சுதாரித்த சரண்யா, “கேப் வந்துருச்சு சார். இப்போ இவளை அனுப்பிவிட்டா தான் ட்ரைன் பிடிக்கச் சரியா இருக்கும்,” என்று தாரகேஷிடம் கூறியவள், “வா ராகவி கிளம்பலாம்,” என்றாள்.
தாரகேஷ், “சரி வாங்க… நானும் கேப் கிட்ட வரை வரேன்,” என்றவன், அவர்களுடன் கீழே சென்றான்.
அங்கே கேப் அவர்களுக்காகக் காத்திருக்க, ராகவியுடன் சரண்யாவும் ஏறிக்கொண்டாள். முன்னால் டிரைவரிடம் சென்ற தாரகேஷ் ஏதோ கூற, அந்த டிரைவர் அதிர்ந்தார். பின் பெண்களிடம் வந்த தாரகேஷ், “உன்னை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் ராகவி. எப்போதும் சந்தோஷமா இருக்கணும்,” என்றான் கனிவுடன்.
பெண்கள் தாரகேஷிடம் தலையாட்ட, கார் புறப்பட்டது. கார் காம்பவுண்ட் கேட்டைத் தாண்டவும், டிரைவர், “நீங்க அந்த சாருக்கு ரொம்ப வேண்டியவங்களாம்மா?” எனக் கேட்டார்.
சரண்யா, “ஒரே ஆபீஸ்ல வேலை செய்யுறோம். என்னாச்சு அண்ணே?”
டிரைவர்: “உங்க ரெண்டு பேர் மேலயும் சாருக்கு ஏதோ அக்கறை இருக்கு. அதான் உங்களைப் பத்திரமா ஸ்டேஷன்ல இறக்கி விடலைன்னு தெரிஞ்சா, என்னைத் தேடி வந்து கொல்லுவேன்னு மிரட்டிட்டு என் போன் நம்பர் வாங்கிட்டுப் போறாரு. சாதாரணமா எல்லாருக்கும் அக்கறை இருக்கும் தான். ஆனா சார் கண்ணுல தெரிஞ்ச அந்த ஆக்ரோஷம்… ஒன்னு என் மேல ஏதாவது தப்பு இருக்கணும், இல்லை உங்க மேல அவ்வளவு அக்கறையா இருக்கணும். நான் இந்த சாரை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. அதனால உங்க மேல தான் அக்கறையா இருக்கணும்,” என்றார் சற்று யோசித்து.
அதைக் கேட்ட சரண்யா, ராகவி காதினுள், “நீ மட்டும் ஜர்னல் எடுத்தது அந்த ‘பழைய மூஞ்சிக்கு’ தெரியணும்… அப்புறம் தெரியும் யார் மேல ஆக்ரோஷம்னு!” என்று கிசுகிசுத்தவள், “இதுக்கு ஒரு முடிவு கட்டாம நான் திரும்ப என் அப்பார்ட்மென்ட்க்குப் போறதா இல்லை ராகவி. பேசாம ஒர்க் ஃபிரம் ஹோம் போட்டு உன் கூடவே சென்னைல இருந்துறேன்,” என்றாள் கவலையுடன்
ராகவி, “அதுவும் சரிதான். எனக்கும் ஒரு மாரல் சப்போர்ட்டா இருக்கும். இதைத் காணோம்னு அவன் கண்டுபிடிச்சு நம்மளைத் தேடி வர்றதுக்குள்ள நாம ஏதாவது பண்ணி ஆகணும். அதுக்கு முன்னாடி இதுல என்ன இருக்குன்னு பார்க்கணும்,” என்றாள் தன் தோள் பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு.
இருவரும் ஸ்டேஷன் வர, அவர்களுக்கான சென்னை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் காத்துக்கொண்டிருக்க, வேகமாக ரயிலைப் பிடிக்க ஓடினர். ரயிலில் ஏறி இருவரும் தங்களது இருக்கையில் அமரவும், ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. ஆனாலும் இருவரும் சற்று பதற்றத்துடன் சுற்றி முற்றிப் பார்க்க, அங்கே தாரகேஷ் இல்லை என்பது உறுதியானதும் தான் இருவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
ரயில் பெங்களூருவில் இருந்து புறப்பட, ராகவி தனது தோள் பையில் இருந்து ஜர்னலை வெளியே எடுத்தாள். அப்போது அவளது பையில் இருந்த மொபைல் போன் நோட்டிஃபிகேஷன் அலற, எடுத்துப் பார்த்தவள் மூச்சு விடவும் மறந்தாள்.
ராகவி முகம் அதிர்ந்ததைப் பார்த்த சரண்யா, அவளது கையில் இருந்த போனைப் பார்த்தவள் தானும் அதிர, அதில் தாரகேஷ், “ஏன் பூ… என்னோட ஜர்னலை எடுத்த? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ இப்படி பண்ணிருக்கக் கூடாது,” என்று புலனத்தில் செய்தி அனுப்பியிருந்தான்.
இங்கு ராகவியை காரில் ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்த தாரகேஷைப் பார்த்த வேலைக்கார பெண்மணி, “எல்லா வேலையும் முடிஞ்சது தம்பி. அப்புறம் உங்களைப் பார்க்க அந்தச் சரண்யா பொண்ணும், கூட ஒரு பொண்ணும் வந்துருந்தது. அந்த கூட வந்த பொண்ணு உங்க கூட வேலை பார்த்த பொண்ணாமே. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணாங்க. நான் டீ போட்டுட்டு வர்றதுக்குள்ள நேரமாகிருச்சுன்னு கிளம்பிட்டாங்க. அப்புறம் அந்தச் சரண்யா பொண்ணு உண்மையிலேயே உங்களை ரொம்ப விரும்புது போல. உங்களைப் பத்தியே கேட்டுட்டு இருந்தது. நீங்களும் கொஞ்சம் என்னன்னு பார்க்கலாம்ல… நல்ல பொண்ணு. நீங்களும் கல்யாணம், புள்ளை குட்டின்னு இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்!” என்றார் அக்கறையுடன்.
அதில் சிறிய புன்னகையுடன் அவரை ஏறிட்டவன், “அவங்களைக் கீழே வரும்போதே எதிர்ல பார்த்துப் பேசிட்டுத் தான் வரேன். அப்புறம்… நீங்க நாளைல இருந்து வேலைக்கு வர வேண்டாம். உங்களுக்கு இரண்டு மாசம் சம்பளம் கொடுத்துறேன், அதை வச்சு வேலை தேடிக்கோங்க,” என்றான்.
அதில் அவர் அதிர, “நான் பூவையும் பாதுகாப்பேனே தவிர, நானே பூவைப் பறிக்க மாட்டேன்,” என்றவன், தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டான்.
அறைக்குள் வந்தவன், அன்றைய நாள் குறித்து தனது ஜர்னலில் எழுத டிராயரைத் திறக்க, அதில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தான். பின் தனது ஜர்னல்களை எண்ணிப் பார்க்க, அதில் ஒன்று குறைவதைக் கண்டவன், அனைத்தையும் எடுத்துப் பார்த்தான். 2024-ம் ஆண்டு ஜர்னல் இல்லாமல் போனதைக் கண்டவனுக்குச் சட்டென ராகவியின் அதிர்ந்த முகம் நினைவுக்கு வந்தது. அவள் தான் தனது ஜர்னலை எடுத்திருக்க வேண்டும் எனக் கண்டுபிடித்தவன், அவளுக்குப் புலனத்தில் செய்தி அனுப்பினான்.
ரயிலில்…
போனில் வந்த செய்தியைப் பார்த்த தோழிகள் இருவரும் அதிர்ந்தனர். சட்டென இருவரும் சுற்றி முற்றிப் பார்த்து தாரகேஷ் ரயிலில் இல்லாததை மீண்டும் உறுதி செய்தனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினர். பின், இந்த ஜர்னலில் தான் தங்களுக்கான விடை கிடைக்கும் என நினைத்தவர்கள், அந்த ஜர்னலைத் திறந்தனர். அதில்…
“நான் சஞ்சனாகிட்ட எவ்வளவோ பேச முயற்சி பண்ணேன். ஆனா அவ கேட்கவே இல்லை. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என் பூவை நான் காப்பாத்தியே ஆகணும். ஆனா அவளுக்கு அந்த வேட்டைக்காரன் ராகேஷைப் பிடிச்சிருக்கு. அவனோட பொய் பிம்பத்தை உண்மைன்னு நம்பிக்கிட்டு இருக்கா. அவனை அவ பக்கத்துலயே விடக்கூடாது…“
என்று எழுதி அருகில் ரத்தக்கறையுடன் கூடிய கோடாரி படம் வரையப்பட்டிருந்தது.
அடுத்த பக்கத்தில்…
“அந்த ராகேஷ் நான் நினைச்சுப் பார்த்ததை விட மனசுல ஸ்ட்ராங்கா இருக்கான். ஆனா எல்லா வேட்டைக்காரனுக்கும் ஒரு வீக்னெஸ் இல்லாமலா இருக்கும்? கண்டுபிடிக்கிறேன்…”
என்று எழுதி அருகில் கொம்பு வைத்து கோபமாக இருக்கும் ஸ்மைலி வரையப்பட்டிருந்தது.
அடுத்த பக்கத்தில்…
“கண்டுபிடிச்சுட்டேன். அந்த ராகேஷ் ஒரு கேம் விளையாடுறான். ஆனா காசு வைக்காம சேஃபா விளையாடுறான். சிம்பிளா கேம்ல ஜெயிச்சதும் காசு வந்துட்டா, ஆடு தன்னால வந்து என்கிட்ட வெட்டத் தலையைக் கொடுக்கும்…”
என்று எழுதி அருகில் தலையில்லா ஆடு படம் போன்று ஏதோ வரைந்திருந்தான்.
எல்லாப் பக்கங்களின் அனைத்து மூலைகளிலும் ரத்தம் சொட்டுவது போன்று சிவப்பு நிறம் கொண்டு அவுட்லைன் வரையப்பட்டிருந்தது.
சில பக்கங்கள் தாண்டி ஒரு பக்கத்தில்…
“நான் என்ன சொல்லியும் என் பூ கேட்கவே இல்லை. அந்த வேட்டைக்காரன் கிட்ட போய்டுச்சு. நானும் அவனை மொத்தமா காலி பண்ணப் போராடுனேன், ஆனா அவன் தப்பிச்சு என் பூவைப் பறிச்சுட்டான்…”
என எழுதி அருகில் வாடிய பூ படம் ஒன்று வரைந்திருந்தான். கீழே சில கண்ணீர் துளிகள் பட்டு காய்ந்த தடம் இருந்தது. அதை எழுதும்போது தாரகேஷ் அழுதிருக்க வேண்டும் எனத் தோழிகள் இருவரும் எண்ணினர்.
அதற்கு அடுத்த பக்கத்தில்…
“என் பூவைப் பறிச்சாலும் அதைத் திரும்பச் செடிக்கிட்ட கொண்டு வருவேன். இந்த உலகத்துல எந்த வேட்டைக்காரனும் பூவைத் தொட அருகதையே இல்லாதவங்க…”
என எழுதி கோபத்தினால் அருகில் கிறுக்கி வைத்திருந்தான். அவன் கிறுக்கியதில் பேனா முனை இரண்டு பக்கத்தைப் பாதி கிழித்த தடம் இருந்தது.
மேலும் சில பக்கங்கள் கடந்து…
“இன்னைக்கு என் பூவைப் பார்த்தேன். அந்த ராகேஷ் வேட்டைக்காரன் என் பூவைக் கசக்கிட்டான். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இதுக்கு மேலயும் அந்த வேட்டைக்காரனைச் சும்மா விடக்கூடாது. என் பூ இப்போ கஷ்டப்படக் காரணமே அவன் தான். அவனைச் சும்மா விடமாட்டேன். ஆனா அதுக்கு என் பூவை அவன்கிட்ட இருந்து வாங்கணும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்கணும். அதுக்கு என்ன விலைன்னாலும் நான் கொடுக்கத் தயார்.”
என்று எழுதி அருகில் ஒரு போர் வீரன் கையில் கத்தியுடன் இருப்பது போன்று படம் வரையப்பட்டிருந்தது.
அந்த ஜர்னலில் மேலும் சில பெண்களின் காதலைப் பிரித்த விவரங்களை இதே போன்று படங்களுடன் எழுதி வைத்திருந்தான்.
மொத்த ஜர்னலையும் படித்த பெண்கள், தாரகேஷ் சஞ்சனா, ராகவி போன்ற பலபேரின் காதலை அழித்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் காதலித்த ஆண்களின் வாழ்க்கையை முழுமையாக அழித்துவிட்டான் எனப் புரிந்து கொண்டனர்.
என்னதான் பெண்களைத் தாரகேஷ் ‘பூ’ என்றாலும், அவர்களைக் காப்பாற்றும் காவலன் எனத் தன்னை நினைத்துக்கொண்டாலும், அடுத்தவர் வாழ்க்கையை அழிக்கும் உரிமையை அவனுக்கு யார் கொடுத்தது என ராகவி கோபம் கொண்டாள். இதை இப்படியே விடக்கூடாது என்று கருதி, தனது தாய் மாமாவான டி.ஜி.பி கஜேந்திரனுக்கு அழைத்தாள். தன் கையில் இருக்கும் ஜர்னலில் இருக்கும் விவரத்தைக் கூற, பொறுமையாகக் கேட்ட கஜேந்திரன், தாரகேஷின் மனநிலையை ஓரளவுக்குப் புரிந்து அவளை உடனே சந்திப்பதற்கு அவள் வீட்டிற்கு வருவதாகக் கூறினார்.
கஜேந்திரனிடம் விஷயத்தைக் கூறிய ராகவி, சற்று தைரியம் வந்தவளாக அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினாள்.
ரயில் மெல்ல சென்னை சென்ட்ரலுக்குள் நுழைய, தாரகேஷின் கார் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தது.

