
அத்தியாயம் 6
அன்று ஞாயிற்றுகிழமை. வேலை ஒன்றும் இல்லாத காரணத்தால் கனிமொழி அசந்து தூங்கி கொண்டிருந்தாள். அது அவளின் பழக்கமும் கூட. வார நாட்களில் தனது பேராசிரியை தேர்விற்காக படிப்பவள் நன்றாக தூங்கும் நாள் ஞாயிறு மட்டுமே. இன்றும் மணி காலை பத்தை தாண்ட மெதுவாக கண் திறந்து பார்த்தாள் கனி. அவளின் கணவன் அலுவலகம் சென்றிருக்க அந்த அறையை வெறுமையாக இருந்தது. மெதுவாக எழுந்தவள் குளித்து விட்டு வெளியே வர அவளுக்கான சாப்பாடை அறைக்கு எடுத்து வந்தாள் அனு.
“தேங்க்ஸ் அனு..” என்றவள் வேகமாக சாப்பிட அதுவே அவளின் பசியின் அளவை காட்டியது.
“மெதுவா அண்ணி..” அனு தண்ணீரை எடுத்து கொடுக்க குடித்தவள் “அவங்க சாப்பாடு எடுத்துட்டு போனாங்களா?” என்று கேட்டாள்.
“அதி இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துட்டு போவாங்க.. நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று கூறி விட்டு தட்டை எடுத்து செல்ல கனியின் முகமோ யோசனையை தத்தெடுத்தது.
அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வாரங்கள் தான் ஆகியிருந்தது. முதல் நாள் மாதிரி அடுத்த முறை கனியை கீதன் நெருங்கவே இல்லை. மொத்தத்தில் அவள் முகம் பார்ப்பதையே தவிர்த்து கொண்டிருக்கிறான். அலுவலகத்தில் அதிக வேலை பளுவாக இருக்குமோ என்று யோசித்தவள் பின் இத்தனை மாதம் காதலித்தவன் அவளை விட்டு பிரிந்து இருப்பது சாத்தியமா என்று யோசித்தாள். அவளின் யோசனையில் ஒன்றும் புரியாமல் போகவே இன்று கணவனுக்கு சமைக்கலாம் என்று கீழே வந்தாள். அவளுக்கு வேலை வைக்காமலேயே அனு அனைத்து சமையலையும் முடித்து வைத்திருக்க கனியின் முகம் சுருங்கி போனது.
“எல்லாம் முடிச்சிட்டியா அனு? நான் சமைக்கலாம்னு வந்தேன்” என்றவளை பார்த்து சிரித்தாள் அனு.
“நல்ல டைமுக்கு வந்தீங்க அண்ணி.. இந்த நேரத்துக்கு சமைக்க ஆரம்பிச்சா ஈவினிங் ஸ்நாக்ஸ் தான் போய் சேரும்.. நானே பண்ணிட்டேன்” என்று கூறி விட்டு அதிரனுக்கு அழைக்க அவன் சிறிது நேரத்தில் வருவதாக சொன்னான்.
கனிக்கு ஏனோ அந்த இடத்தில் தான் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தாள். முதல் நாள் கணவனை விட்டு பிரிய வேண்டும் என்று விரும்பியவள் தான். ஆனால் இன்றோ மனம் அவனின் அருகாமையை வெகுவாக விரும்பியது. சிறிது நேரம் வெளியே சென்றாலாவது மனம் அமைதியடையும் என்று எண்ணியவள் பூங்காவிற்கு சென்றாள். அதே நேரம் மனைவியின் நினைவில் தான் இருந்தான் கனிகீதன்.
அதிரன் வந்து வீட்டிற்கு சாப்பாடு வாங்க செல்வதாய் சொல்லவும் “இன்னைக்கு வீட்டுல போய் சாப்பிடலாம்டா” என்றவன் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தான்.
வந்தவன் கண்களில் தங்கை அனு மட்டுமே தென்பட மனைவியை பார்வையால் அலசினான். எங்கேயும் காணாமல் போக “அனு கனி எங்கமா போயிட்டா?” என்று கேட்டான்.
“போர் அடிக்குதுன்னு இப்போ தான் வெளில போனாங்க அண்ணா.. நீங்க வரது தெரியாதுல” என்றவள் உணவை பரிமாற கொஞ்சம் உண்டவன் மனம் கனியையே தேடியது.
கீதன் சிறிது நேரம் கழித்து வருவதாய் சொல்லவும் அதிரன் எழுந்தான். அனுவிடம் பார்வையால் விடைபெற “அடுத்த வாரம் அத்தை மாமாவை வர சொல்லு அதி” என்று கூற அதிரனும் அனுவும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
“இப்போ கல்யாணம் வேண்டாம்னு நீ தானே சொன்ன?” அதிரன் கேள்வி எழுப்ப “அவளை கல்யாணம் பண்ணிட்டு படிக்க வைக்க மாட்டியா?” என்று தோளில் தட்டினான் கீதன்.
“கனி ஆர் யூ ஆல்ரைட்?” அதிரனுக்கு எதுவோ வித்தியாசமாக பட்டது.
“ஐ அம் ஆல்வேய்ஸ் ஆல்ரைட்”
அதிரன் கிளம்ப அடுத்து தான் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டான் கீதன். பார்க்கிறவர்களுக்கு அது சாதாரணமாகவே தோன்ற ஒரு நாள் வாழ்ந்தாலும் அவன் மனதை படித்த மனைவிக்கு புரியாமல் போகுமா என்ன?
வெளியில் பார்க்கில் சிறிது நேரம் இருந்து விட்டு வீட்டுக்கு வந்த கனிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. எப்போதும் வேலை வேலை என்று அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கீதனா இன்று வீட்டில் புத்தகம் படித்து கொண்டிருப்பது?
சோபாவில் அவன் அருகில் அமர அவனோ புத்தகத்தில் மூழ்கியிருந்தான். கனிக்கு ஏமாற்றமாக இருந்தது.
“இப்போ இந்த புக் ரொம்ப முக்கியம்” என்று முணுமுணுத்தவள் சட்டென அவன் கையில் இருந்து புத்தகத்தை பிடுங்க அவன் பார்த்த பார்வையில் புத்தகத்தை அவன் கையில் திணித்தாள் கனி.
“இந்த மாதிரி இன்னொரு முறை பண்ணாதே” என்று சீற சட்டென கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு.
கனிமொழி தைரியமாக எதையும் பேசுவாள். கல்லூரி வாழ்க்கையிலும் அவளின் தைரியம் அனைவரையும் கட்டி போடும் ஒன்று. என்னதான் கெத்தாக தெரிந்தாலும் மனதிற்கு பிடித்தவர்களின் ஒரு சொல் கண்ணீரை வரவழைத்து விடும்.
அவனின் பேச்சில் அவள் எழுந்து சென்று விட நிமிர்ந்து பார்த்த கீதனின் கண்களில் அவளை விட அதிக வலி தெரிந்தது. அவன் நெஞ்சம் நிறைந்து காதலித்து மனைவியான பெண்ணுக்கு அவன் வலியை தர விரும்பவே இல்லை. ஆனால் அவன் மனமோ அன்று கனி தன் தங்கையிடம் பேசியதிலேயே நின்றது.
அவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டாம் நாள் தலை வலி என்று அவனை தூங்க வைத்து விட்டு வெளியே வந்த கனி அனுவிடம் அவளின் வாழ்க்கையை இந்த திருமணம் கெடுத்து விட்டதை போல் பேசியதை சிறிது நேரத்தில் வெளியே வந்த கீதனும் கேட்க நேரிட்டது.
அதை கேட்கும் போதே அவனின் மனம் சொல்லொணா வலியை வெளிப்படுத்தியது. காதல் செய்து அவளை கட்டி போட்டிருக்கிறான் என்று நினைத்தால் அவள் விருப்பமே இல்லாமல் கட்டுண்டு இருக்கிறாளா? அன்று அவளுடன் அவன் கூடிய போது மனமே இல்லாமல் பொறுத்து கொண்டிருந்தாளா? அவன் நெஞ்சம் கதற அவனால் தாங்கவே முடியவில்லை.
தான் ஒருவன் காதலித்த காரணத்தால் அவளை கட்டி போடவும் அவன் விரும்பவில்லை. அவள் விருப்ப பட்டால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து கொடுக்க தயாராக இருக்கிறான். ஆனால் அதற்கு அவன் தேர்ந்தெடுத்த பிரிவு தான் வலித்தது. கடைசி வரை அவளின் நினைவுகளோடு அவன் வாழ்ந்து விடுவான். ஆனால் அவளோ?
இப்போது அவள் அழுதது அவன் மனதை உறுத்த எழுந்து தங்கள் அறைக்கு சென்றான். கனியோ கட்டிலில் அமர்ந்து கண்ணீர் வழிய அழுது கொண்டிருந்தாள். அவள் சிறு துளி கண்ணீர் சிந்தினாலே தாங்காதவன் இந்த கண்ணீரை அனுமதிப்பானா என்ன? தன் முடிவு எல்லாம் காற்றில் பறந்திருக்க வேகமாக அவளை நெருங்கினான் அவன்.
“கனி எதுக்குமா இந்த அழுகை?” என்று அவள் கண்ணீரை துடைக்க அவனை கட்டி பிடித்து கதறி விட்டாள்.
“ஐ பீல் அலோன்” அவளின் வார்த்தைகள் அவனுக்கு வலியை கொடுத்தது.
அவளின் அழுகை தீரும் வரை முதுகை நீவி கொடுத்தவனுக்கு அவள் செய்த செய்கை அதிர்ச்சியை கொடுத்தது.
“டூ யூ லவ் மி?” அவன் கேட்ட அதே கேள்வி.
“எஸ்.. அதை வார்த்தையால் வரையறுக்க முடியாது.. என் உயிரை கூட உனக்காக என்றால் சந்தோசமாக துறப்பேன்” என்றவனுக்கு அடுத்து பேசும் வாய்ப்பை அவனின் கனி அளித்திருக்கவில்லை. அவனின் இதழ்களை அவள் சிறைபிடித்திருந்தாள்.
முதல் முத்தம்.. அதுவும் அவளே கொடுக்கும் முத்தம்.. அதை ஆழ்ந்து அனுபவித்து கொண்டிருந்தான் அவன். அவனின் காதலுக்கு அவள் கொடுக்கும் சன்மானம். விடும் அளவிற்கு அவனுக்கு மனதில் தெம்பில்லை. தேன் கூட இந்தளவிற்கு தித்திக்குமா என்பது தெரியாது. அவனவளின் இதழ் தேன் திகட்டாத இனிப்பை கொடுத்தது.
அவனோ அவளின் அதிரடியில் திளைத்திருக்க கனிக்கு சிறிது வெட்கம் எட்டி பார்த்தது. கண் திறந்து பார்த்தவள் அவனின் முகத்தை பார்த்ததும் தலையை குனிந்து கொண்டாள். செவ்வானமாய் சிவந்திருந்த முகத்தை தன் கைகளால் நிமிர்த்தியவன் அவள் விழியோடு தன் விழிகளை கலக்க விட்டான்.
“கனி..”
“…….”
“உனக்கு என்னை அவ்ளோ பிடிக்குமா?”
“உண்மைய சொல்லவா? பொய் சொல்லவா?” குறும்பாக அவள் கேட்க “உண்மைய சொன்னா அதை விட பெரிய கிப்ட் தருவேன்” என்றவனை இமைக்காமல் பார்த்தாள் கனி.
ஒவ்வொரு நொடியும் காதல் காட்டும் அவன் முகம் இன்னும் இன்னும் அவனுக்குள் புதைய சொல்லியது.
“உண்மைய சொல்லனும்னா என விருப்பம் இல்லாமல் நடந்த கல்யாணம் இது.. பட் முதல் நாளே நீங்க என் மனசுக்குள் வந்துட்டீங்க” என்று கூற அவனோ புரியாமல் பார்த்தான்.
“அப்போ ஏன் உன் வாழ்க்கையை கெடுத்துட்டதா அனுகிட்ட சொன்ன?” அவனின் கேள்வியில் சற்று திணறி தான் போனாள்.
“நாத்தனாருக்கும் எனக்கும் இடையில் ஆயிரம் இருக்கும்.. அதுல நீங்க வர கூடாது… வார்த்தையால் சொன்னா தான் காதலா? எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. எப்போ உணர்ந்தேன்னா இந்த ஒரு வாரம் நீங்க என்னை விட்டு விலகி போனப்போ தான்.. எனக்கு பிராமிஸ் பண்ணுங்க.. இனி ஒருபோதும் நீங்க என்னை விட்டு போக கூடாது” என்று தன் கையை நீட்ட
“உன்னை பிரிஞ்சிட்டு நான் சாக தான் வேணும்.. நமக்குள் எப்போவும் பிரிவு இருக்காது” என்று அவளின் கை மேல் தன் கையை வைத்து சத்தியம் பண்ணினான்.
********************
“என்னடி சமையல் பண்ணி வச்சிருக்க? ஒழுங்கா சமைக்க தெரியலன்னா உனக்கு எதுக்கு கல்யாணம்?” என்று வேலு சாப்பாடு தட்டை தூக்கி எறிய அதில் இருந்த சோற்று பருக்கைகள் முகத்தில் தெறிக்க பாவமாக நின்றிருந்தாள் கனிஷ்கா.
இத்தனை நாட்களில் ஒருநாள் கூட அவள் சமையல் நன்றாக இருக்கிறது என்று யாரும் பாராட்டினது இல்லை. ஆனால் சாப்பாடு மட்டும் காலியாகி விடும். இன்றோ முழுபோதையில் இருந்த வேலுவுக்கு சாப்பாட்டு ருசி கூட தெரியாமல் போக அவளின் முகத்தை எரிச்சலாக பார்த்தான். நைந்து போன காட்டன் புடவையும் கையில் இரண்டு கண்ணாடி வளையலும் கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிறும் நெற்றியில் குங்குமமுமாக நின்றவளை பார்த்தவனுக்கு வந்த எரிச்சல் போதையை ஏற்ற நடுகூடம் என்றும் பார்க்காமல் அவளின் இடுப்பை பிடித்தான்.
வேலுவின் தாயும் தந்தையும் இது தினமும் நடக்கும் கூத்து என்பதால் வழக்கம் போல் அறைக்குள் சென்று முடங்கி விட அவளின் இடுப்பை பற்றிய படியே எழுந்தவன் நிலை தடுமாறி தூணை பற்றி கொண்டான். அவனை அந்த நிலையில் பார்க்கவே கனிஷ்காவுக்கு அருவருப்பாக இருந்தது. அவனின் மேலிருந்து வந்த மது வாசம் வேறு குமட்டலை வரவழைக்க பொறுத்து கொண்டு நின்றாள். வரும் வாந்தியை வெளியே கொட்டி விட்டால் அதற்கும் அடி விழும். வாழ்க்கையே வெறுத்து விட்டது அவளுக்கு. வெறும் பத்தொன்பது வயது பெண்ணவள். அவளுக்கு பிறகு இருக்கும் பெண்களுக்காக அவளை பாழும் கிணற்றில் தள்ளியிருந்தனர் அவளின் பெற்றோர்.
“யாருடி அவன் உன்கூட பேசிட்டு நின்னது?” அவளின் நினைவை கேள்வி கலைக்க புரியாமல் பார்த்தாள் கனிஷ்கா.
“யாரு மாமா அது?”
“ஏன்டி நான் உன்கிட்ட கேட்டா நீ என்னையே திருப்பி கேக்குறியா?” பளாரென அவள் கன்னத்தில் அறைய தடுமாறி கீழே விழுந்தாள் அவள்.
கன்னங்களில் ஐவிரல் தடம் பதிய பயத்துடன் எழுந்தவள் முடியை கொத்தாக பிடித்தவன் “புருஷன் நான் இங்கே இருக்கும் போது அந்த முருகு பய கூட என்னடி பேச்சு வேண்டி கிடக்கு?” என்று மீண்டும் அறைய “ஐயோ மாமா விடுங்க வலிக்குது” என்று கதறினாள் அவள்.
“கேள்விக்கு பதில் சொல்லுடி..”
“அவ.. அவங்க.. தண்ணீ பிடிக்க தான் கிண.. கிணத்து பக்கம் வந்தாங்க” என்று திக்கி திக்கி சொல்ல முடியில் பிடியை விட்டவன் கழுத்தை பிடித்து கொண்டான்.
“என்ன சொன்னான்?”
“மா.. மாமா.. விடு.. விடுங்க” அவன் பிடி இறுக இவள் மூச்சுக்கு திணறினாள்.
“என்ன சொன்னான்?” மீண்டும் சீற அவனின் கையை தடுத்தவாறே “ஒன்னும் பேசல.. நல்லா இருக்கியான்னு கேட்டுட்டு போனாங்க” என்று சொல்ல அவன் பிடி தளர்ந்தது.
வேலு ஒரு முழுநேர போதையில் இருப்பவன். வேலைக்கு செல்லாமல் ஊரில் சுற்றுவதாலேயே அவனுக்கு இங்கு மதிப்பு இருப்பதில்லை. முருகு சொந்தமாக விவசாயம் செய்பவன். நல்ல வருமானமும் வர முதலில் கனிஷ்காவை தான் அவனுக்கு பெண் கேட்டனர். ஆனால் கனிஷ்காவின் பெற்றோரிடம் நயமாக பேசி திருமணத்தை முடித்து கொண்டான் வேலு. இன்றும் முருகு அவளுடன் பேசியதை வேலுவின் நண்பன் வந்து சொல்லி விட்டு செல்ல அவனின் குரூர வதையில் மாட்டி கொண்டது கனிஷ்கா தான்.
வேலுவின் பிடி தளர்ந்ததும் சட்டென தூணில் சாய்ந்து தண்ணீர் அருந்தினாள் கனிஷ்கா. அவனின் ஒவ்வொரு அசைவும் அவளுக்கு பயத்தையே கொடுத்தது. ஒரு மாதம் கூட ஆகாத திருமண வாழ்வை நினைத்து நடுங்கி கொண்டிருந்தாள் அவள்.
“இன்னும் வரலையாடி..” அவனின் கர்ஜனையில் முகத்தை துடைத்து கொண்டு உள்ளே சென்றாள்.
கட்டிலில் அமர்ந்திருந்தவன் கையில் சிகரெட்டும் மது கோப்பையும் இருக்க அவளை மேலிருந்து கீழே பார்த்தான். சிறிது நேரம் முன்பு போதை ஏற்றிய அவள் நிலை இப்போது கசப்பாக இருக்க முகத்தை சுழித்தவன் “போய் ரெண்டு ஆம்லெட் போட்டு எடுத்துட்டு வா” என்றான்.
இன்னும் அவள் ஒரு வாய் கூட சாப்பிடவில்லை. முட்டையை உடைத்து தோசை கல்லில் ஊற்றியவள் வயிறு தான் பசியாக இருப்பதை உணர்த்த தண்ணீரை மொண்டு குடித்தவள் பின் அவனுக்கான தேவையை பூர்த்தி செய்ய சென்றாள். அவளிடம் இருந்த தட்டை வாங்கியவன் சாப்பிட்டு விட்டு போதையில் படுத்து விட தட்டை கழுவி வைத்தவள் கீழே பாய் விரித்து படுத்தாள். அரைமணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டாள். அவள் மேல் ஏதோ ஊர்வது போல் இருக்க சட்டென எழுந்தவளை உதட்டில் இழுத்து அவள் மேல் சரிந்தான் வேலு.
போதையும் மோகமும் சேர அவளை வன்மையாக அணைக்க அதை எதிர்க்க திராணி இல்லாமல் படுத்திருந்தாள் கனிஷ்கா. ஒருபக்கம் குடித்த தண்ணீர் எப்போதோ ஜீரணமாகியிருக்க அவனின் வேகம் வேறு அவளை மொத்தமாக மயக்க நிலைக்கு கொண்டு சென்றிருந்தது. அதை கூட உணராமல் அவன் அவளை ஆக்கிரமிக்க அடுத்த நாள் காலையில் அவன் கண்டது சுயநினைவற்று கை கால்கள் இழுக்க படுத்திருந்த கனிஷ்காவை தான். அருகில் அவனின் மது பாட்டில் காலியாக கிடக்க நினைவை கொண்டு வர நினைத்தவனுக்கோ ஒன்றும் நியாபகம் வரவில்லை.
“எம்மா..” என்று அலறியவன் பெற்றோர் வந்ததும் அவசரமாக அவளை அரசு மருத்துவமனையில் சேர்த்தான்.
அவளின் நிலையை கண்ட மருத்துவர் அவனை முறைத்தார்.
“ஏதாச்சும் அறிவிருக்கா உனக்கு? பொம்பள பிள்ளைக்கு மது குடுத்துருக்க.. அதுவும் அளவுக்கு அதிகமா போனதால் அவ பிக்ஸ் வந்து துடிச்சும் நீ கண்டுக்காம இருந்திருக்க” என்று சீற வேலுவோ திமிராக நின்றான்.
“ஆமா நான் தான் குடுத்தேன்.. புருசனுக்கு சேவை செய்ய தான் பொண்டாட்டி.. அதை விட்டுட்டு தூங்குனா எனக்கு கோவம் வராதா? அது தான் போதையேத்த கொடுத்து அனுபவிச்சேன்” என்று சொல்ல அந்த மருத்துவருக்கே கோபம் அடங்க மறுத்தது.
அந்த கிராமத்திற்கு காவல் துறை வராது என்பதால் பொறுத்து கொண்டவர் “மருந்து கொடுத்துருக்கேன்.. இனியொரு முறை இப்படி நடந்தா உன் பொண்டாட்டி தான் பாவம்.. செத்து போயிடுவா” என்று எச்சரித்து அனுப்ப அதை செய்பவனா அவன்? அவனுக்கு தேவை அவனின் சுகம் மட்டும் தான். அவளின் பலவீனம் தெரிந்து கொண்டவனுக்கு அதில் அடித்து அவளை அடக்க ஆசை வந்தது. இதை எதுவும் அறியாமல் கனிஷ்கா துயில் கொள்ள இன்னும் மூன்று மதுபாட்டில்கள் அவன் வீட்டில் குடியேறியது.

