
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அபூர்வனுக்கு அலுவலக விடுமுறை.
அதனால் காலையில் துரிதமாக எழுந்து, அவசர, அவசரமாக கிளம்பி, அலுவலகத்திற்குச் செல்லும் அந்த நிலைக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் பத்து மணி வரைக் கட்டிலில் சுகமாக உறங்கிக் கொண்டு இருந்தான்.
அவனுக்காக என்னச் சமைக்கலாம்? என்று சமையல் அறையில் நின்று யோசித்துக் கொண்டு இருந்தாள் ஆரா.
இன்று மட்டுமே அபூர்வனுக்கு விடுமுறை என்பதால் அவனது விருப்பம் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் மற்றும் மட்டன் சுக்கா செய்யலாம் என்று முடிவெடுத்தவள் சிக்கன் பிரியாணியும் செய்யலாம் என்றும் நினைத்துக் கொண்டு இவற்றைச் சமைப்பதற்காகத் தயாராக வெங்காயத்தை உரித்து, அரைக்க வேண்டியவற்றை, மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டாள்.
மற்றைய புதினா மற்றும் இதரத் தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைத்தாள் ஆரா.
தனது கணவன் மதிய உணவிற்காக வெகு நேரம் காத்திருக்கக் கூடாது என்பதாலேயே இந்த முன்னேற்பாடு.
சில நிமிடங்கள் கழித்து துயில் கலைந்ததும் முதலில் மனலவியைத் தான் தேடினான் அபூர்வன்.
அவள் அருகில் இல்லாததைக் கண்டு கொண்டான்.
” ஆராம்மா! காஃபி”என்று ஒரு விதமான ராகத்தில் மனைவியை அழைத்தான் அபூர்வன்.
“எந்திரிச்சுட்டாரா? என்னைக் காணோம்னதும் ராகம் பாட்றதைப் பாரு”எனக் கணவனைச் செல்லமாய்த் திட்டிக்கொண்டே அங்குச் சென்றாள் ஆரா.
ஆனால் இன்னும் கட்டிலில் இருந்து எழுந்து கொள்ளாமல் அதிலேயே படுத்து இருந்தான் அவளது கணவன்.
“காஃபி வேணும் பொண்டாட்டி”
ஆராவின் அழகிய வதனத்தையும், அவளது சுழிக்கும் இதழையும் ரசித்துக் கொண்டே கேட்டான் அபூர்வன்.
“நீங்கப் போய்ப் பிரஷ் பண்ணிட்டு வாங்க. ஒன்னு இல்லை ரெண்டுக் கப் காஃபியைக் கூடத் தர்றேன். காட் ப்ராமிஸ்!”என்று சிரித்துக் கொண்டே அவனுக்குச் சத்தியம் செய்தாள் ஆரா.
அதைக் கேட்டதும் அவனுக்கு உற்சாகம் வடிந்து விட,”அட போடி! இன்னைக்குக் கூடப் பிரஷ் பண்ணாமல் காஃபிக் குடிக்க விட மாட்டியா?”என்று அவளிடம் ஆதங்கத்துடன் வினவ,
இந்தக் கேள்வியை தன் மனைவியிடம் வாரா, வாரம் கேட்டு ஏமாற்றம் அடைந்தாலும் கூட, மனம் தளராமல் இன்றும் அதையே கேட்டிருந்தான் அபூர்வன்.
இன்றாவது தன் மேல் அவள் கருணைக் காட்டுவாளா? என்றப் பேராசை தான் அவனுக்கு.
“நோ சான்ஸ்! போய்ப் பிரஷ் பண்ணுங்க”என நிர்தாட்சண்யமாக மறுப்புத் தெரிவித்து அவனைத் தள்ளாத குறையாக குளியலறைக்குள் புகுத்தினாள்.
தங்களது வீட்டில் இவர்கள் இருவர் மட்டும் தனிமையில் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே வீட்டு வேலைக்கு ஆட்களைக் கூடச் சேர்க்கவில்லை அபூர்வனும், ஆராவும்.
சமையல் வேலையைக் கூடத், தானே பார்த்துக் கொண்டாள் ஆரா.
சிறிது நேரம் கழித்துக் குளியலறையில் இருந்து வேண்டாவெறுப்பாகப் பல் தேய்த்து விட்டு வந்த அபூர்வனோ ஆராவிற்குத் தன் முகத்தைக் காட்டாமல் கோபித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அவனது கைகளில் காபிக் கோப்பையைத் திணித்து விட்டுக் காலை உணவைக் கொண்டு வந்து டேபிளில் வைத்தாள்.
“எனக்குக் காலையில் பிரேக்ஃபாஸ்ட் வேண்டாம்?”என்றக் கணவனின் குரலில் இருந்த செல்லச் சினுங்கல் அவளுக்குப் புன்னகையை வரவழைத்தது.
“காலையில் நான் பிரேக்ஃபாஸ்ட் செய்யலைங்க. இட்லித் தான் செஞ்சு இருக்கேன்”எனச் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டுச் சொன்னாலும் அதில் இருந்தக் கிண்டலைத் தெரிந்து கொண்டு விட்டதும் அவளைக் கன்னாபின்னாவென்று முறைத்து தள்ளினான் அபூர்வன்.
“ஏங்க முறைக்கிறீங்க? வேணும்னா நீங்களே பாருங்கள். இட்லித் தான் செஞ்சு இருக்கேன்”என்று ஒருபடிக்கு மேலே போய் இட்லிகளை அடுக்கி வைத்திருந்த பாத்திரத்தை அவனுக்குத் திறந்துக் காட்டினாள் ஆரா.
அதில் வெகுண்டு எழுந்து,”அடியேய்! என்னால முடியல! காலையிலயே கடிக்காதே! நான் சாப்பிட்றேன்”என்று இதற்கு மேல் இவளது நகைச்சுவையைத் தம்மால் தாங்க இயலாது என்று காபியைப் பருகி முடித்து விட்டுச் சில நிமிடங்கள் கழித்து உணவையும் சீக்கிரமாக உண்டு முடித்தான்.
“நீங்கப் போய் வொர்க் பாருங்க. நான் மதியங் சாப்பாட்டைச் செஞ்சுட்டு சொல்றேன். இன்னைக்கு உங்களுக்குப் பிடிச்ச மெனு தான் செய்றேன்”என்று கணவனிடம் உற்சாகக் குரலில் கூறினாள் ஆரா.
“அப்படியா? சூப்பர் ஆரா! நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்”என ஆர்வமாக கூறியவனின் தலையில் தட்டி,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஹெல்ப் பண்றேன்னுச் சொல்ல வேண்டியது, அப்பறம் கிச்சனையே நாஸ்தி பண்ண வேண்டியது! நானே பார்த்துக்கிறேன்! சமையலுக்கு எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சுட்டேன். அடுப்பில் வச்சு சமைச்சாப் போதும். நீங்கப் போங்க அபூ”என அவனைக் கிட்டத்தட்ட அங்கிருந்து துரத்தி விட்டாள் ஆரா.
பிறகு மூன்று பர்னர் இருக்கும் கேஸ் அடுப்பில் முதலில் மட்டன் சுக்கா செய்வதற்குத் தயார்படுத்தியவள், மற்றைய இரண்டு அடுப்புகளில் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் செய்யலாம் என்று முடிவெடுத்தாள்.
சிக்கன் ஃப்ரைட் ரைஸ் செய்ய அதிக நேரம் ஆகாது என்பதால் பிரியாணியைச் செய்வதில் கவனம் செலுத்தி விட்டு அருகிலேயே ஃப்ரைட் ரைஸ் செய்யத் தொடங்கினாள் ஆரா.
சில மணி நேரங்களில் பிரியாணியும், ஃப்ரைட் ரைஸூம் தயாராகி விட, மற்றைய அடுப்பில் இருந்த மட்டன் சுக்காவும் தயாரானது.
அதற்கடுத்து சமைத்து முடித்துப் அவற்றைப் பாத்திரங்களில் நிரப்பி அனைத்தையும் பரிமாற ஏதுவாக எடுத்துச் சாப்பாட்டு மேசையில் கொண்டு வந்து வைத்தாள்.
உடனே சமர்த்தாக அறையில் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டு இருந்த தன் அபூவிடம் சென்று,
“சமத்து அபூ! சாப்பாடு ரெடி. இன்னைக்கு உங்களுக்கு ஒரு குட்டி விருந்து தான்! வாங்க, வாங்க வந்து சாப்பிடுங்கள்”என்று அவனது கன்னத்தைக் கொஞ்சிக் கொண்டே அழைத்தாள் ஆரா.
“ம்ஹூம்”எனத் தன்னுடைய முகத்தைக் கோபமாக வைக்கிறேன் என்ற பெயரில் அவன் செய்யும் கோமாளித்தனத்தைப் பார்த்துக் கடகடவென சிரித்து விட்டாள்.
அதில் கடுப்படைந்து,”போ. ஆரா”என்று இப்போதும் தன் மனைவித் தனது கோபத்தைப் பொருட்படுத்தாமல் இருக்கிறாளே என்ற ஆதங்கத்தில் மடிக்கணினியை விட்டு முகத்தை நிமிர்த்தவில்லை அபூர்வன்.
“சாரி அபூ. என்னோட செல்லம்ல?”என அழகாய் மன்னிப்புக் கேட்டு அவனை அழைத்து வந்துச் சாப்பாட்டு மேசையில் அமர வைத்து விட்டு அவனுடன் சேர்ந்து தானும் உணவுண்டு முடித்திருந்தாள் ஆரா.
அபூர்வனின் அலுவலக வேலையையும் முடித்தாயிற்று.
மதிய உணவையும் இருவரும் சேர்ந்து, ரசித்து உண்டும் முடித்தாயிற்று.
சோம்பல் மிகுதியாக இருக்க சோபாவில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு விட்டிருந்தனர் இருவரும்.
அப்போது தான் ஞாபகம் வந்தது அபூர்வனுக்கு.
“ஏய் உன் ஃப்ரண்ட்டோட கதையைச் சொல்லுடி! நேத்து தான் கோவிச்சுக்கிட்ட! இன்னைக்குக் கொஞ்சம் கருணைக் காட்டு! கதையை முழுசாகச் சொல்லி முடி”என்று தன் மனைவியிடம் அவளது தோழியின் வாழ்க்கையில் நடந்த ஏற்றுக் கொள்ள இயலாத விஷயங்களைக் கேட்டு ஏற்கனவே அவள் மேல் பரிதாபம் கொண்டு இருந்தவனோ,
மீதியையும் கேட்டு விட்டால் தன்னாலான உதவியை அந்தப் பெண்ணிற்குச் செய்யலாமே என்ற எண்ணத்தில் அவளது கதையைக் கேட்கும் ஆர்வம் மிகுதியாகி விட்டிருந்ததால் இவ்வாறு மனைவியிடம் கேட்டிருந்தான் அபூர்வன்.
ஆராவும் தன் கணவன் தன்னிடம் இப்படி மன்றாடுவது பிடிக்காமல் கதையைத் தொடர்ந்தாள்.
“நான் அவகிட்டே எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அடுத்தவங்க, முக்கியமாக எங்க சீனியர்ஸ் என்னச் சொன்னாலும் அதை அவ செஞ்சிட்டே தான் இருந்தாள்! நானும் சொல்லி, சொல்லி அலுத்துப் போய்ட்டேன்! கடைசி வருஷம் வரைக்குமே அவ அப்படித்தான் இருந்தாள்! எங்க சீனியர்ஸ் காலேஜை விட்டுப் போய்ட்டாலும் யார் என்னக் கேட்டாலும் ஹெல்ப் பண்ணிடுவாள்! அது தான் அவகிட்ட இருந்த மைனஸே!”
அதற்குப் பிறகுக் காரிகா அவளிடம் கூறிய விஷயங்கள் யாவும் ஆராவால் ஜீரணிக்க இயலாதவை.
இன்றும் அவற்றை நினைத்து காரிகாவிற்காக வருந்திக் கொண்டு தான் இருக்கிறாள்.
அதை எவ்வாறு கணவனிடம் கூறுவது எனத் தெரியாமல் இருந்தவளை ஒரு கட்டத்திற்கு மேல் அவளை அத்தனை முறை அழைத்தது கூடக் கவனியாமல் அவள் திகைத்து நின்றதைப் பார்த்துப் பயந்து போனான் அபூர்வன்.
“ஆரா…!”எனச் சத்தமாகக் கத்தித் தான் அவளை அழைக்க வேண்டி இருந்தது.
அதில் தனது எண்ணவோட்டத்தில் இருந்து மீண்டெழுந்து,”என்னாச்சுங்க?”என திர்ச்சியில் கணவனை ஏறிட்டாள்.
“நான் உன்னை எவ்வளவு நேரமாக கூப்பிட்டுட்டே இருந்தேன் தெரியுமா? அதைக் கேட்கவே இல்லையா நீ?”என அவளின் நிலையைக் கண்டுச் சில கணங்கள் பரிதவித்துப் போனவனோ இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்று நினைத்தவனோ,
“உன் ஃப்ரண்ட் காரிகாவோட மொபைல் நம்பரைக் கொடு”எனக் கேட்டிருந்தான் அபூர்வன்.
அவன் தன்னிடம் திடீரென்று காரிகாவின் செல்பேசி எண்ணைக் கேட்டதும் புரியாமல் கணவனைப் பார்த்தாள் ஆரா.
“அவ மொபைல் நம்பர் உங்களுக்கு எதுக்குங்க?”
திடீரென்று தன் கணவன் எதற்காக இத்தனை அவசரமாகத் தனது தோழியின் செல்பேசி எண்ணைக் கேட்க வேண்டும் என்று தோன்றியதால் அவனிடம் தனது சந்தேகத்தைக் கேட்டிருந்தாள் ஆரா.
“நீ கொடு. அதுக்கப்புறம் நான் என்ன விஷயம்னு சொல்றேன்”
“இல்லங்க. அவ நம்பரை யாருக்கும் ஷேர் பண்ணக் கூடாதுன்னுச் சொல்லி இருக்காள்”என அவனிடம் உறுதியாக மறுத்து விட்டாள் ஆரா.
“உன் புருஷனுக்குக் கூட கொடுக்க மாட்டியா?”என்றவனின் முகத்தில் நிஜமான கோபம் வெளிப்பட்டது.
“கொடுக்க முடியாது அபூ! ப்ளீஸ்! அதை மட்டும் கேட்காதீங்க! அவ என்னை நம்பிக் கொடுத்து இருக்காள்! அதை உங்ககிட்ட ஷேர் பண்ணால் அவளோட நம்பிக்கையை நான் உடைச்சா மாதிரி ஆகிடும்!”என்று காரிகா தனக்கு மட்டுமே அவளது செல்பேசி எண்ணைக் கொடுத்து இருப்பது தன் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கையினால் எனும் போது அதை எவ்வாறு உடைக்க எண்ணுவாள் ஆரா.
ஆனால்,”அவங்களை நாம நேரில் பார்த்துப், பேசப் பர்மிஷன் கேட்கத் தான் நம்பர் கேட்கிறேன்! கொடு ஆரா! இல்லன்னா, நானே உன் மொபைலில் இருந்து ஷேர் பண்ணிக்கவா?”
அவள் காரிகாவின் செல்பேசி எண்ணைக் கொடுக்கப் போவதில்லை என்றதும் அவளது செல்பேசியில் இருந்து தனது செல்பேசிக்கு அனுப்பிக் கொள்கிறேன் என்று கேட்டிருக்கவும்,
“அதெல்லாம் வேண்டாம் அபூ”எனக் கணவனைத் தடுத்தாள் ஆரா.
“ஆரா”என்று தன்னுடைய குரலில் கடுமை பரவக் கத்தினான் அபூர்வன்.
“நீங்க எவ்வளவு கத்தினாலும் என்னால் அவளோட செல் நம்பரைக் கொடுக்க முடியவே முடியாது அபூ”என்று அவனின் கோபத்திற்கு நிகராகத் தானும் கோபத்தில் வெடித்துச் சிதறினாள்.
“அப்போ நீயே என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிட்டுப் போ. நாம ரெண்டு பேரும் அவங்களை மீட் பண்ணி அவங்களுக்கு நடந்த கொடுமைக்கு எல்லாம் தீர்வு காணலாம்”என்று அவளிடம் உறுதியாக உரைக்க,
“சம்பந்தமே இல்லாமல் ஏன் இப்படி உளர்றீங்க அபூ?”என இவருக்கு என்ன தான் ஆயிற்று? ஏன் இவ்வாறு தன்னிடம் காரிகாவின் விலாசத்தைக் கேட்கிறார்? என்றெண்ணிய ஆராவிற்கு இவன் செய்வது ஒன்றும் புரியவில்லை.
ஆனால் அவனோ எதுவும் கூறாமல் அவளையே பார்த்தான்.
அதில் கோபமடைந்தவளோ,”நீங்க உங்க மனசில் என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க அபூ?”என்று ஆராவிற்குத் தன் கணவன் கூறியதைக் கேட்ட மாத்திரத்தில் கட்டுக் கடங்காமல் கோபம் வந்திருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு அவனிடம் நிதானமாக வினவி விட்டு, அந்த நிதானத்தை இழக்காமல் கணவனின் பதிலிற்காகக் காத்திருந்தாள்.
“ஆரா! நான் உன் நல்லதுக்காகத் தான் சொல்றேன். ப்ளீஸ் . புரிஞ்சுக்கோ”என்றவனோ,
தங்களது திருமண வாழ்க்கையில் முதல் முறையாகத் தன் மனைவியிடம் இந்த விஷயத்தில் தோற்றுப் போய் நிற்பதை எண்ணி ஏமாற்றமாக உணர்ந்தான் அபூர்வன்.
ஆனாலும் தனது நம்பிக்கையைக் கை விடாமல்,”எல்லாமே சரி ஆகிடும்மா! நீ இதை மட்டும் எனக்காகச் செய்!”எனக் கெஞ்சிக் கேட்ட அபூர்வனுக்கு எதுவும் சொல்லாமல் அவனைக் கொலைவெறியுடன் பார்த்து,
“எனக்குப் புரியல அபூ! இதை நான் எதுக்குச் செய்யனும்? நான் தான் உங்களுக்குத் தெளிவான காரணத்தைச் சொல்லிட்டேன்ல? அப்பறமும் அதைக் கேட்காமல் அடம் பிடிக்கிறீங்களே?”என்றவளோ,
தனது தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள் ஆரா.
– தொடரும்

