
“சரி சரி விடு… இப்படியே இன்னும் ரெண்டு மூனு விஷயம் சொன்னீன்னா எனக்கே அவனை பிடிக்க ஆரம்பிச்சிடும். உனக்கு ஒன்னு தெரியுமா மில்க். எனக்கு அவனைப் பிடிக்காது… திமிருப் பிடிச்சவன்! சரி இப்போ நீ என்ன தான் பண்ணப் போற” என்று ஜானவி பேச்சை மாற்றினாள்.
“இல்ல மா… கொஞ்சம் கோவிச்சிக்காமல் ஒன் ஃபோனைக் கொடுத்தீன்னா! அவராண்ட இங்க வந்திட்டேன்னு கால் பண்ணி சொல்லிடுறேன்” என்று தயங்கியபடி கேட்டான்.
“நம்பர் சொல்லு”
“ 98*********73”
“என்ன மில்க் லவ்வர் நம்பர் மாதிரி மனப்பாடமாக கடகடன்னு சொல்ற”
“எங்களை மாதிரி அன்னாட காசுக்கு புழைக்குறங்களுக்கு எங்க வேலை தான்ம்மா லவ்வரு…ஒரு தப்பா மழை வந்து ஒன் ஃபோன் போயிடுச்சுன்னா என்ன பண்ணுவ, அணைஞ்சு போச்சுன்னா என்ன பண்ணுவ… அதனால என் நம்பரை மனப்பாடம் பண்ணிக்கோனு சொல்லி அடுத்த ரெண்டு நாள் நான் சரியா சொல்றேன்னான்னு கேள்வியெல்லாம் கேட்டாருமா” என்று பால்பாண்டி புலம்ப, சிரித்தே விட்டாள் ஜானவி.
“உனக்கும் அந்த ஆளுக்கும் சரியான பொருத்தம் தான் போ!” என்று ஃபோனை கையில் வைத்திருந்தவள், கால் போட்டு ஸ்பீக்கரில் போட்டாள்.
ரிஷி வைத்திருந்த ட்ரூ காலரில் ஜானவி எனப் பெயர் ஒலிக்க, ஏற்கனவே பால்பாண்டி ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்பில் இருந்த கடுப்பும், அப்பாவிற்கு கால் கிடைக்காத கடுப்பும் ஒருங்கே சேர…
‘ஜானவின்னா அந்த குட்டச்சியா இருக்குமோ! அவள் எதுக்கு எனக்கு இப்போ கால் பண்றாள் என் நம்பர் அவளுக்கு எப்படி தெரியும். ஒருவேளை யாருக்காவது ஏதாவது பிரச்சனையா’ என்று யோசித்தவன், லேசான பதற்றத்துடன் ஃபோனை எடுக்க,
“ஹலோ அண்ணாத்தே! நான் தான் பால்பாண்டி .என் ஃபோன் ஸ்விட்சுட்டு ஆப் ஆயிடுச்சு. கொஞ்சம் அப்பா அம்மாவை வரச் சொல்லுபா” என்று வேகமாக ஒப்பித்துவிட்டான். இல்லையெனில் அவனிடம் திட்டு வாங்க வேண்டுமே…
பால்பாண்டி பேசியதைக் கேட்டு ரிஷி, “சரி… நானும் அடையார்ல தான் இருக்கேன்! அவங்களை கூட்டிட்டு என்னையும் கூப்பிட வந்திடு” என்று தான் இருக்கும் இருப்பிடத்தை குறிப்பிட்டு ரிஷி மறுபடியும் அப்பாவிற்கு கால் செய்ய இம்முறை கால் போனது.
ஃபோனை எடுத்தவரிடம் பால்பாண்டி வெளியே நிற்பதாய் கூறியபடி தான் இங்கே இருப்பதையும் தெரிவித்து அழைத்துக் கொள்ளுமாறு கட் செய்து விட்டான்.
இதில் ரிஷி பேசும் பொழுது, “ஐய்யோ!அப்படியா!” என்று வார்த்தைகள் தந்தையிடமிருந்து வெளியேறியதைக் கவனித்த வித்யா,
“என்னப்பா சொல்றான் தம்பி?” என்று ஒரு வேகத்தில் கேட்டே விட்டாள்.
“அது ரிஷியுடைய வண்டி தீடீர்னு நின்னுடுச்சு மா” என்று அவர் முழுக்கதையையும் சொல்ல,
“வாட் வித்யா! உன் தம்பி நம்ம வீட்டுக்குள்ள வந்து இருந்திருக்கலாமே… இப்படியா மூனாவது மனுஷன் மாதிரி ரோட்ல நின்னுட்டு உன் அப்பா அம்மாவை வரச் சொல்றது” என்று ஆரம்பித்தார் காஞ்சனா.
அப்போது பாலாஜி அவனுடைய அறையில் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்ததால், இவ்விஷயம் தெரியாமல் போனது.தெரிந்திருந்தால் அவன் என்ன செய்திருப்பான் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
வித்யாவிற்கு கல்யாண சடங்குகள் அவளின் வீட்டினில் நடந்துக் கொண்டிருக்க, கால் வலி, மூட்டு வலி என தாத்தா பாட்டி பேத்தி அவளின் வீட்டில் வராமல் நைசாக விலகிக் கொண்டனர். இவர்களே இப்படி எனில், பாலாஜியின் உறவினர்கள் எல்லாம் ரிஷியின் வீட்டு பக்கமே வரவே இல்லை.
நேரடியாக தாங்கள் யார் மனதையும் துன்புறுத்தவில்லை என்று பாலாஜியின் குடும்பம் தங்களை பெருமிதமாக நினைத்தாலும், அவர்கள் செயலே பெண் வீட்டாரை எத்தனை காயப்படுத்தும் என்று அவர்கள் அறியவில்லையா இல்லை புரியவில்லையா?
“விடு காஞ்சு” வித்யா மற்றும் அவளின் பெற்றோர்கள் முகம் வாடுவதைக் கவனித்த தாத்தா ஆரம்பிக்க, தன் துள்ளல் நடையுடன் உள்ளே வந்தாள் ஜானவி.
“நோ குசேலன்… சொந்த அக்கா வீட்டுக்கு வரதுக்கு என்ன? நம்ம எல்லாரும் என்ன வித்யாவுடைய தம்பி ரிஷியைக் கடிச்சா சாப்பிடப் போறோம்” என்று அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு கிளுக் கென்று சிரித்தே விட்டாள் ஜானவி.
அதனைக் கண்ட வித்யாவிற்கு மனதில் அக்னி தீ கொளுந்து விட்டு எரிந்தது. இப்போது இவ்வளவு நேரம் பேசிய பாட்டியை விட, கிளுக்கென்று சிரித்த ஜானவி தான் வித்யாவை ரொம்பவே கடுப்பேற்றினாள்.
மற்றவர்களின் மீது இருக்கும் கோபத்தையும் சேர்த்து தன்னை அறியாமல் வயதில் குறைவானவள் ஜானவி என்கிற காரணத்திற்காகவும், அவளின் படுசுட்டி எனும் பெயரில் தற்குறியாக நடந்துக்கொள்ளும் அணுகுமுறையில் திருப்தி இல்லாததாலும் ஜானவி மீது தான் மொத்த கோபமும் திரும்பியது அவளுக்கு. ஆனாலும் அடக்கிக் கொண்டாள்.
“அப்பா, அம்மாக்கு நேரம் ஆயிடுச்சு பாட்டி” என்று சிரித்துக் கொண்டே மழப்பிய வித்யா, அவர்களை வேகமாக வெளியே அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏற்றினாள். ஏனோ வித்யாவின் மனது அழுத்திக் கொண்டே இருந்தது. வெளியே இருந்து பார்த்தால் யாருக்கும் இது பெரிய பிரச்சனையாக தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அதை வாழ்ந்து அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும் வலியும், வேதனையும்.
இரவில் உறங்கும் நேரத்தில் தன் மனைவியை பாலாஜி ஆசையாய் நெருங்க, வித்யாவிற்கு சலிப்பாக இருந்தது.
கணவனிடம் சட்டென்று விலகியவள் திரும்பி ஒருக்கழைச்சு படுத்தே விட்டாள். இதுவரை இம்மாதிரி செயல்களை மனைவியிடமிருந்து பெறாதவனுக்கு சற்று பதற்றமாக இருந்தது. கீழே நடந்த விஷயத்தைப் பற்றி யாருமே அவனிடம் பகிரவில்லை வித்யா உட்பட.
“என்ன ஆச்சு வித்யா?” என்று புரியாமல் கேட்டான்.
“என்னைக் கல்யாணம் பண்ணும் போதே எங்கள் குடும்ப சூழ்நிலை தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணீங்க. ஹௌஸிங் போர்ட்ன்னா உங்களுக்கு அவ்வளவு கேவலமா போச்சா? அப்படி கேவலமா நினைச்சீங்கன்னா ஏன் ஒரு ஹௌஸிங் போர்ட் பொண்ணைக் கல்யாணம் பண்ணீங்க”என்று ஆதங்கமாக கேட்டாள்.
“இது தான் பிரச்சனையா!” என்று இலகுவாகச் சொன்னவனின் த்வனி, ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று கேட்க பெண்ணவளை மேலும் கடுப்பேற்றியது.
“உங்களுக்கு வேணும்னா இது சாதாரணமா இருக்கலாம். ஆனால் எனக்கு இது ரொம்ப பெரிய விஷயம்.நம்ம இந்தியா வரும் போதெல்லாம் வயசான அம்மா அப்பாவை தினமும் அலைய வைக்குறோம். அவங்களுக்கு போக வர ஆட்டோக்கே மாசம் கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆகுது. என் தம்பி சம்பாதிக்குறதுல பாதி பணம் இதுக்கே போயிடுது. இதெல்லாம் உங்களுக்கு ஏன் புரியவே மாட்டிங்குது” என்று கத்தினாள் வித்யா.
“என்ன வித்யா சத்தம் ஓவரா இருக்கு? உனக்கு இங்க என்ன பிரச்சனை? வீட்டுல ஒரு வேலையும் இல்லை. யாரும் எதுவும் சொல்றது இல்லை. உன் அம்மா அப்பா இங்கே வந்தாலும் அவங்களுக்கும் நல்ல உபசரிப்பு கொடுக்குறோம். ரிஷிக்கு பிடிக்காதுன்னு தான் பணம் விஷயத்துல தலையிடலை… அவங்களுக்கு ஆட்டோக்கு செலவு ஆகுதுன்னா, நான் பணம் கொடுக்குறேன்” என்று பாலாஜி சொல்ல, வித்யாவிற்கோ தலைகுனிவாக இருந்தது.
“நான் ரிஷியை ரொம்ப மதிக்கிறேன் வித்யா.உன் அம்மா அப்பாவையும் ரொம்ப மதிக்கிறேன். ஆனால் எனக்கு அந்த வீடு கம்ப்போர்ட்டா இல்லை. இன்ஃபாக்ட் அந்த தெருக்குள்ள வரும் போது சாக்கடை நாத்தமும், கூவ நாத்தமும் அடிக்குது.அது ரொம்ப கொமட்டுது. எங்க குடும்பத்துக்கு அந்த கொடுமையை அனுபவிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. உன்னைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு வந்தேன்… உன் மேல மலையளவு காதல் இருக்கு. அதுக்காக என்னால அந்த மாதிரி இடத்துல வந்து இருக்க முடியாது” என்று கூறியவனை, பார்த்த வித்யா.
“அப்போ என் மேலயும் சாக்கடை நாத்தமும் கூவ நாத்தமும் வீசினால் என்கிட்ட வராமல் இருந்திடுவீங்களா!” என்று கேட்டவள் வேகமாக எழுந்து ஃபோனை எடுத்து மாடிக்குச் சென்று அழுதாள்.
ஏனோ மனதிற்குள் பெரிய வெறுப்பு. அழுது முடித்தவள் மறபடியும் அறைக்கு வர, அசைவின்றி அமர்ந்திருந்தான் பாலாஜி. ஆம், அவள் கேட்ட கேள்வி அவன் மனதைக் குத்தியது.
அவனைக் கண்டபடியே மனதில் கொதிப்புடன் ரிஷிக்கு கால் செய்து ஸ்பீக்கரில் போட்டாள் வித்யா.
‘என்ன அக்கா இந்நேரம் கால் பண்றாள்’ என்று சற்று பதற்றத்துடன் ஃபோனை எடுத்தான் ரிஷி. அவ்வப்போது சகோதரர்கள் இருவரும் ஃபோனில் பேசிக்கொள்வது வழக்கம் தான் ஆனாலும் இரவு பத்து மணி மேல் கால் வந்ததும் சற்று பதற்றமடைந்தான் ரிஷி.
“ரிஷி, உனக்கு அக்காவை எவ்வளவு பிடிக்கும்?” என்று கரகரத்த குரலில் ஒலித்தது வித்யாவின் குரல். அவள் பேசுவதை புருவத்தை சுருக்கியபடி பார்த்தான் பாலாஜி.
“அக்கா என்னாச்சு! ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு? மாமா ஏதாவது சொன்னாரா?” என்று அக்கறை கலந்த பதற்றம் அவனிடம்.
“எனக்கென்ன ரிஷி… நான் ராணி மாதிரி இருக்கேன். உன் மாமாவா? ச்ச ச்ச எனக்காக என்ன வேணாலும் பண்ற மனுஷன் அவரு” என்று கணவனை பார்த்தபடி உச்சரித்தவள், தம்பியிடம் “உனக்கு உண்மையா என் மேல பாசம், மரியாதை இருந்தால் நான் அடுத்த மாசம் கிளம்புறதுக்குள்ள ஒரு தடவையாவது என் புருஷன் வீட்டுக்கு வா” என்று கூறி முடிக்கும் போதே குரல் கரகரத்தது.
வித்யா பேசும் த்வனி ரிஷிக்கு ஏதோ அச்சுறுத்தலாக இருந்தது. வித்யாவின் கரகரத்த குரல் அவனை கவலையுறச் செய்தது.
“சொல்லு ரிஷி… இந்த அக்காக்காக வர மாட்டியா?” என்று கெஞ்சல் கலந்த ஏக்கத்துடன் கேட்ட அக்காவின் குரலில் என்ன உணர்ந்தானோ,
“நீ போய் நிம்மதியா தூங்குக்கா! நான் கண்டிப்பா வரேன்… இங்கப் பாரு உன் ஏக்கத்தை பாசத்தை தூர வீசிட்டு என் தன்மானம் தான் எனக்கு முக்கியம்னு நினைக்குற ஆள் நான் இல்லை கா… உனக்காக… உனக்காக மட்டும் தான் வரேன்… என் தன்மானம் அது அப்படியே பலமா, உறுதியா தான் இருக்கு… நீ எதைப் பத்தியும் யோசிக்காமல் தூங்கு” என்று தொடர்பை துண்டித்தான்.
***
பாலாஜியிடம் அதற்குப் பின் பேசுவதையே குறைத்து விட்டாள் வித்யா. காரணத்தை யூகித்திருந்த பாலாஜிக்கு மனைவியின் மீது மலைப்போல பாசம் இருந்தாலும் தன் இடத்திலிருந்து இறங்கி வருவதாக இல்லை.
நாட்கள் நகர ஆரம்பிக்க, வித்யாவிற்கு நாள் தள்ளிப் போயிருந்தது. அவளுக்கு எப்போதுமே இர்ரெகுலர் பீரியட்ஸ் என்பதால் அவள் அதை சட்டை செய்யவில்லை. ஜானவிக்கும் கடைசி வருடம் படிப்பு முடிந்தது. ஜானவியிடம் முகத்தைக் காட்டினால் பாலாஜி ருத்ரதாண்டவம் ஆடி விடுவான் என உணர்ந்த வித்யா, ஜானவி மற்றும் வீட்டினரிடம் நன்றாகத் தான் பேசினாள்.
இவர்கள் நாட்கள் இப்படி சென்றுக்கொண்டிருக்கையில், அன்று ஞாயிற்றுக்கிழமை காலை வித்யாவிற்கு கால் செய்த ரிஷி, “அக்கா, வீட்ல இருக்கியா! நான் வரவா?” என்று கேட்டான்
ஃபோனை மியூட்டில் போட்ட வித்யா, “என் தம்பி ரிஷி வீட்டுக்கு வரானாம். என்னைப் பார்க்க! நீங்கள் ஏதாவது பிரோகிராம் வச்சிருக்கீங்களா… ஏன்னா அவன் வரும் போது நீங்க கண்டிப்பா இருக்கணும்” என்றாள் அழுத்தம் நிறைந்த கர்வத்துடன்.
எனக்காக, என் மேலுள்ள பாசத்தினால் என் தம்பி வரான்… அவனின் பாசத்திற்கு முன் உன் காதல் வலுவிழக்கிறது என்று’ என்கிற கசப்பான எண்ணத்துடன்.
அன்று காலை வசந்தி குடும்பத்தினர் ஜானவிக்கு பூ வைக்க வருவதாய் இருந்தனர். அது வித்யாவிற்கும் ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால் எப்போதும் ஜானவியை அலட்சியமாய்க் கருதுவதால் அவள் அதை மறந்தே விட்டிருந்தாள்.
‘இன்னிக்கு வேற அத்தை வீட்டுல இருந்து பாப்பாவுக்கு பூ வைக்க வாரங்களே! சரி இதுவரைக்கும் வராதவன் வரான் அதே ரொம்ப நல்ல விஷயம். அவனும் வரட்டும்’ என்று நினைத்த பாலாஜி,
“ரிஷியை வரச் சொல்லு… அவன் வரதைத் தாண்டி எனக்கு இப்போ சந்தோஷமான விஷயம் வேற எதுவுமே இல்லை! மத்தியானம் சாப்பாடு ரொம்பவே ஸ்பெஷலா பண்ண சொல்லிடு” என்று மலர்ச்சியுடன் கூறினான் பாலாஜி.
உண்மையாகவே மைத்துனன் வருவது அத்தனை சந்தோஷம் கொடுத்தது அவனுக்கு. அதை மனதில் வைத்து தான் சாப்பாடும் ரொம்பவே ஸ்பெஷலாக செய்யும் படி கூறினான்.
‘என் தம்பி முதல்ல இவர் வீட்டுக்கு வந்துட்டான்னு இவருக்கு அவ்வளவு திமிரு, கர்வம் ச்ச’ என்று தான் வித்யாவிற்கு நினைக்கத் தோன்றியது.
மியூட்டை எடுத்து விட்டவள், “ரிஷி வா டா! கண்டிப்பா சாப்பிட்டு தான் கிளம்பணும். இன்னிக்கு நைட் வரைக்கும் என் கூட இருக்கணும். அப்படியே அம்மா, அப்பாவையும் கூட்டிட்டு வந்திடு” என்று சந்தோஷத்துடன் தொடர்பைத் துண்டித்து, வேகமாக ஹாலிற்குச் சென்ற மனைவியை நிம்மதியாக பார்த்தவனின் மனம் குத்தியது.
‘நான் வேணும்னே பண்ணலை வித்யா! உண்மையாவே என்னால அந்த இடத்துக்கு வர முடியலை… உனக்காக நான் மாறணும்னு நீ நினைக்குற ஆனால் என்னால உனக்காக அங்க வந்து உன்கிட்ட பொய்யா இருக்க முடியாது…சாரி டி’ என்று மனதில் மண்டியிட்டான் மனைவியிடம்.
கணவன் இன்றி பிறந்த வீட்டிற்கு வித்யா எதிர்த்து பேசி சென்றிருக்கலாம். ஆனாலும் மனதில் ஒரு வைராக்கியம்! பிறந்த வீட்டிற்கு சென்றால் அது கணவனோடு சேர்ந்து மட்டும் தான். இல்லையேல் அது வேறு விதமான தலைகுனிவை தன் வீட்டினருக்கு கொடுக்கும் என்று அப் பேச்சை எடுக்காமல் இருந்தாள்.

