Loading

சீமை 25

மாடுகளுக்கு நீச்சு தண்ணீர் ஊற்றி தவிடு பொடியை கலந்து கொண்டிருந்தாள் சாமந்தி. அவள் செய்வதை அறிந்த வீட்டின் கால்நடைகள் வேகமாக, “ம்மாமாமாமாமாமா” என குரல் கொடுத்தது.

“எல்லாத்துக்கும் பசி வந்துடுச்சா” குரல் கொடுத்த கால்நடைகளிடம் வார்த்தை வீசி புன்னகைத்தவள், “செத்த நேரம் இருங்க எல்லாத்துக்கும் சோத்த போடுற.” என்று தேவையானதை தயார் படுத்தினாள்.

அதுவரை கூட பொறுக்க முடியாத அவ்வீட்டின் மாடுகள் தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்க, சத்தம் கேட்டு வெளியில் வந்தான் மச்சக்காளையன்.

“இப்டியே சத்தம் போட்டுட்டு இருந்தா சோறு ஆய்டுமா. செத்த நேரம் வாய மூடிக்கிட்டு நில்லுங்க. இந்த சாமந்திக்கு கோவம் வந்தா மூணு நாளுக்கு சோறு போடாம பட்டினி போட்டுடுவா.” மிரட்டும் மனைவியின் பேச்சை ரசிக்க நினைத்தவன் அவள் அறியா வண்ணம் ஒதுங்கி நின்றான்.

கணவனின் எண்ணங்களுக்கு இன்னும் உயிர் கூட்ட நினைத்தவள், “அவ்ளோதா சாப்டுங்க கத்தாம. இதுக்கு போய் அம்புட்டு சத்தம் காது கிழியுற மாதிரி. நெனைச்ச நேரத்துக்கு எல்லாத்துக்கும் சோறு வந்துடனும். இல்லினா ஒன்னு கூடி ஆர்ப்பாட்டம் பண்ணுவீங்க அப்டித்தான ‌” செல்லமாக கோபித்துக் கொண்டு அங்கிருந்த மாடுகளுக்கு உணவு வைத்தாள்.

வக்கணையாக பேசியவள் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அனைத்தும் நீர் அருந்தும் வேளையில் கவனமாக இருக்க, தவிடு கலந்த கையை கழுவாமல் கூட இடுப்பில் வைத்தவள், “என்னா நெஞ்சு அழுத்தம் பாரு இதுங்களுக்கு. ஒருத்தி இம்புட்டு பேசுற கொஞ்சம் கூட மருவாதி குடுக்காம அது அது வேலைய பாக்குதுங்க.” என முறைத்தாள்.

அங்கிருந்த மாடுகளில் ஒன்றுக்கு மட்டும் சாமந்தியின் செல்லக் கோபம் புரிந்தது போல, அவளைத் திரும்பிப் பார்த்து ஓசை கொடுத்தது.

“உன்ன சொல்லல கோமதி. இதோ இதுங்க எல்லாத்தியும் சொன்ன. பாரு என்னாமோ பத்து நாளு தின்னாதவய்ங்க மாதிரி நக்கிட்டு கெடக்குதுங்க.” என அம்மாட்டை தடவி கொடுத்தாள்.

வளர்ப்பவளின் பேச்சில் கோபம் இல்லாததை அறிந்த கோமதி மாடு நீர் குடிக்கும் வேளையில் இறங்க, “நீதா என்னோட செல்லம் தெரியுமா.” தடவி கொடுத்து அதனோடு பேச்சு வார்த்தை நடத்தினாள்.

வளர்த்தவளின் பேச்சு புரிகிறது என்பதற்கு சாட்சியாக கண்ணை விரித்து காட்டியது கோமதி. அதை உணர்ந்து சிரித்தவள், “நீ என் புருச வாங்கிட்டு வந்த மாடு. முதல் முதல்ல உன்ன தூக்கும் போதுதா நா அவர பாத்த. பொறந்த கொஞ்ச நாளு கூட ஆவாத உன்ன களவாடிட்டு வந்துட்டாரு.” என சிரித்தாள்.

தன்னை திருடன் போன்று பாவிக்கும் மனைவியின் பேச்சில் கோபம் இல்லை கேட்பவனுக்கு. மாறாக அன்றைய நாள் ஞாபகத்திற்கு வந்தது. நண்பனின் மாடு நிறை மாதத்தில் இருப்பதாக செய்தி வந்தது. பிரசவ வலியில் துடிக்கும் மாட்டிற்கு பிரசவம் பார்க்க சென்றிருந்தான்.

அந்த நண்பனின் பக்கத்து வீடு தான் சாமந்தியின் வீடு. குடல் உள்ளிருக்கும் மாட்டின் சிசுவோடு சிக்கிக்கொள்ள, பெரிய மாடு துடித்துக் கொண்டிருந்தது அங்கு. எண்ணெய் எடுத்து வந்து பதமாக தேய்த்தவனை பின் புறம் நின்று கவனித்தாள் சாமந்தி.

பள்ளி முடித்து வந்தவள் செவியில் பக்கத்து வீட்டின் மாடு வலியில் துடிக்கும் செய்தி விழ, அங்கு வந்து சேர்வதற்குள் இவன் வந்திருந்தான் வேலையை கவனிக்க. பின்புறம் நின்று கவனித்தவள் எண்ணமெல்லாம் மாட்டின் மீது இருக்க, சில நொடிகளில் கன்று வெளியில் வந்தது.

குடலை சுற்றிக்கொண்டு ரத்தத்தோடு இருக்கும் கோமதி மாட்டை தூக்கியவன் திரும்ப, அவன் விழியில் விழுந்தாள் சாமந்தி. கட்டு மஸ்தான உடலெல்லாம் இல்லை. பத்தொன்பது வயது இள வயசு முகம். மீசையும் சொல்லிக் கொள்ளும் அளவை விட குறைவான அளவில் முளைத்திருந்தது. அப்பொழுதும் எப்பொழுதும் மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் அவனின் கேசம் தான்.

அடர்த்தியான முடிக்கு சொந்தக்காரன் மச்சக்காளையன். தோளில் பம்பையை கட்டிக்கொண்டு அடிப்பவனின் உடல் ஒல்லியாக இல்லாமல் போதுமென்ற அளவு இருந்தது. இத்தனையையும் கவனிக்கவில்லை சாமந்தி.

கோமதியின் தாய்மாடு பிரசவ வலியில் கத்துவதை கேட்டவள் முகம் கவலையில் இருந்தது. அதை மாற்றும் விதமாக கோமதி நல்லபடியாக வெளியில் வர, சோகமான முகத்தில் சிறு புன்னகை.

கோமதி மாட்டின் அழகை ரசித்தவள் தொடர்ச்சியாக மச்சக்காளையன் முகம் நோக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் விழியில் எதைக் கண்டோ மிரண்டாள். அந்த விழி வந்த வேலையை மறக்க வைத்தது.

கொக்கி போட்டு இழுக்கும் வருங்கால கணவன் விழியில் பயம் அதிகரித்தது சிறு பெண்ணிற்கு. உடனே ஓடிவிட்டாள் வீட்டிற்குள். கொலுசு சத்தம் அவள் சென்ற பின்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க, நண்பனின் பேச்சு சத்தத்தில் நினைவு திரும்பினான்.

பிரசவத்திற்கு பின் தாய் மாடு நோய்வாய்ப்பட்டு அவதிப்பட, பிரசவம் பார்த்த உரிமையில் கோமதி மாட்டை வாங்கி வந்தான். வாங்க சென்ற அன்று சாமந்தியின் பயந்த விழியை காண ஆவல் கொண்டான். கடைசி வரை அந்த விழி அவனுக்கு தரிசனம் கொடுக்காமல் போனது. ஏமாற்றத்தோடு வீடு திரும்பியவன் அறியவில்லை ஜன்னல் ஓரத்தில் ஓர விழியில் தன்னை பல மணி நேரமாக மனைவி பார்த்தாள் என்பதை.

ரசிக்க வந்தவன் அவள் கொடுத்த கடந்த கால நிகழ்வில் சுகமாக மயங்கி நின்றான். மாடுகளுக்கு தீவனம் இட்டவள் வேலையை கவனிக்க திரும்ப, எங்கோ பார்த்தபடி சிரித்துக் கொண்டிருக்கும் கணவன் நிலை கேள்விக்கு ஆளாக்கியது.

“என்னா மாமா தனியா சிரிச்சிக்கிட்டு கெடக்கீங்க?” என்றவள் பேச்சு சத்தம் விழவில்லை செவியில்.

‘என்னா இவரு இப்டி நிக்குறாரு’ மனதினுள் சந்தேகமாக கேட்டுக் கொண்டவள், “மாமா” நெஞ்சில் கை வைத்து உசுப்பினாள்.

ரெட்டை ஜடை அணிந்துக் கொண்டு சிறு பூவை போல் மிருதுவாக காட்சியளித்த மனைவி, முதிர்ந்த முகபாவனையோடு கேசத்தை மொத்தமாக தூக்கி கொண்டை இட்டுக் கொண்டு பக்கத்தில் இருக்க, குழம்பிப் போனான் எது நிஜம் என்று.

“என்னா தனியா சிரிச்சிக்கிட்டு கெடக்கீங்கன்னு தான கேட்ட, அதுக்கு எதுக்கு இப்டி முழிக்கிறீங்க.” என்ற பேச்சில் எதிரில் பார்க்கும் உருவம் தான் நிஜம் என்பதை கண்டுகொண்டு சிரிப்பை உள்ளுக்குள் இழுத்தாள்.

பல முக பாவனைகளை ஒரே நேரத்தில் காட்டும் கணவனின் செய்கையில் குழம்பிப் போனவள் மேலும் கேள்வி கேட்க, “சொன்னா மட்டும் புரிஞ்சிடுமா உனக்கு. கிறுக்கு மாதிரி மாடுங்க கிட்ட பேசிக்கிட்டு கெடக்க. போய் வேலைய கவனி.” என்றவன் ஓடி விட்டான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக.

‘என்னா ஆச்சு இவருக்கு… கிறுக்குத்தனமா பேசிட்டு போறது இவரு. என்னாமோ என்னைய கிறுக்குனு சொல்றாரு.’ உள்ளுக்குள் தன்னை கேலி செய்தவனை கேலி செய்தவள் அப்பொழுதுதான் நேரத்தை கவனித்தாள்.

சொசைட்டிக்கு பால் எடுத்துச் சென்று இரண்டு மணி நேரங்கள் ஆகிவிட்டது. இன்னும் எடுத்துச் சென்றவர்கள் வரவில்லை என்பதை அறிந்து கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள். அவன் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தவள் திரும்பினாள் வீட்டினுள் சத்தம் கேட்டதால்.

“போன இங்க வெச்சுட்டு இம்புட்டு நேரம் வராம இருக்கானுங்க.” இல்லாத கொழுந்தன்களின் மீது யோசனையை வைத்தவள் சிறிது நேரம் காத்திருந்தாள்.

காலை நேர சமையலை முடித்தவள், “மாமா சோறு எடுத்துட்டு வரட்டா?.” என்றிட,

“நா அப்புறம் சாப்பிடுற அவுனுங்களுக்கு சோறு போட்டு அனுப்பி வுடு” உள்ளிருந்து கணவனின் குரல் வந்தது.

இன்னும் இருவரும் வராத செய்தியை கேட்டால் கோபம் கொள்வான் என்பதற்காக பதில் கொடுக்காமல் அமைதி காத்தாள் சாமந்தி. அடுத்த வாரம் அம்மன் கோவில் ஒன்றுக்கு பம்பை அடிக்க முன்பணம் வாங்கி இருப்பதால் அதற்கான பம்பை உடுக்கைகளை கோர்த்து முடித்தான்.

ஒரு முறை தயார்படுத்தியதை அடித்து உறுதிப்படுத்திக் கொண்டவன் வெளியில் வர, யாரும் இல்லை. எப்பொழுதும் கேட்கும் தம்பிகளின் ஓசை கூட இன்று கேட்காமல் இருக்க, “அவுனுங்க கெளம்பிட்டாய்ங்களா” பின்புற திண்ணையில் அமர்ந்திருக்கும் மனைவியை தேடி வந்து கேட்டான்.

பதில் சொல்லாமல் அவள் பேந்த முழிக்க, “என்னா கேட்டுட்டே இருக்க பதில் சொல்லாம முழிக்கிற. அவுனுங்க போய்ட்டானுங்களா இல்லியா?‌” கேட்டான்.

“இன்னு வூட்டுக்கு…” தலையை குனிந்துக் கொண்டு மிக மெல்லிய ஓசையில் பேசும் மனைவியிடம்,

“சத்தமா பேசு காதுல ஒன்னு வுழல.” என அதட்டினான்.

அந்த ஓசையில் அவன் முகத்தை பார்த்தவள், “சொசைட்டிக்கு பால் ஊத்த போனவய்ங்க இன்னு வரல மாமா.” என்றாள்.

“இன்னு வரலனா என்னா அர்த்தம்? எப்டி இருந்தாலும் இந்நேரம் வூடு வந்து சேர்ந்திருக்கணுமே.”

“அதா எனக்கும் யோசனையா இருக்கு மாமா. எப்பவும் போனா கொஞ்சம் நேரம் போயிதா வூட்டுக்கு வருவாய்ங்க. நானும் அந்த மாதிரி இருக்குனு வுட்டுட்ட. ஆனா, இவ்ளோ நேரம் ஆகியும் ஒருத்தனும் இன்னு வூட்டுக்கு வரல.”

“எல்லாம் நீ குடுக்குற செல்லம். முதல் நாளு நேரம் போயி வரும்போதே சட்டைய புடிச்சு எங்கடா போனீங்கன்னு கேட்டு இருக்கணும். அத வுட்டுட்டு அமைதியா அவங்கள காப்பாத்திட்டு இருந்தா இதா நடக்கும். வரட்டும் இன்னிக்கு கால உடைச்சு மூலையில உக்கார வெக்குற.”

“ஏதாச்சும் வேலையா கூட வெளிய போயி இருக்கலாம் மாமா கோபப்படாம இருங்க.” என்றவளை கடுமையாக முறைத்தவன்,

“இவ்ளோ நேரம் வூட்டுக்கு வராத அளவுக்கு அவுனுங்களுக்கு என்னா வேல இருக்க போவுது? படிக்குற வயசுல படிக்காம ஊர் சுத்திட்டு இருக்குறதுக்கு பேரு வேலையா.” என்றான்.

அவன் பேச்சுக்கு தலை குனிந்துக் கொண்டு ஏதோ முணுமுணுத்தாள் சாமந்தி. அதைக் கண்டு கொண்டவன் முறைப்போடு, “என்னாடி பொலம்பிக்கிட்டு இருக்க உனக்குள்ள.” என கேட்டிட, அவசரமாக தலையாட்டி மறுத்தாள்.

அந்த தலையாட்டல் தான் ஏதோ இருக்கிறது என்று அவனுக்குள் உறுதிப்படுத்த, “இப்ப மட்டும் என்னா பொலம்புனன்னு சொல்லல அவுனுங்களோட சேர்த்து உன் காலயும் ஒடச்சி உக்கார வெப்ப.” என அவளை நெருங்கினான்.

கணவன் நெருங்குவதற்குள் விலகி நின்றவள், “அவுனுங்களை சொல்லுறீங்களே படிக்குற வயசுல நீங்க மட்டும் படிக்கவா செஞ்சீங்க. எதுத்த வூட்ல இருக்க உங்க பெரியப்பா பையன் கூட ஒரு இடம் பாக்கி இல்லாம சண்ட போட்டுட்டு தான இருந்தீங்க.” என்ற மனைவியின் மீது அவனது முறைப்பு அதிகமானதை நன்கு உணர்ந்தாள்.

உள்ளுக்குள் பயம் இருந்தாலும், “உங்களுக்கு பின்னாடி பொறந்தவய்ங்க உங்கள மாதிரி தான இருப்பாங்க.” என ஓட்டம் பிடித்தாள் அவன் அடிக்க வருவதை அறிந்து.

“வர வர உனக்கு வாயி ரொம்ப நீண்டு போச்சு. இருக்குற மொத்த பல்லையும் கழட்டி தனியா வெச்சாத்தா வாய் குறையும்.” என்ற கணவனின் பேச்சுக்கு,

“கொஞ்சம் பொறுங்க மாமா. மூணு புள்ளை பெத்ததும் நானே கழட்டி கையில குடுத்துடுற. பல் இல்லாத பொண்டாட்டி கூட புள்ள பெத்துக்க சிரமமா இருக்கும் உங்களுக்கு.” இருக்கும் கோபத்தைக் கூட சிரிப்பாக மாற்றினாள் ரசிப்பான பேச்சில்.

சீமை 26.

மகன் திட்டியதால் மூக்கை உறிஞ்சிக் கொண்டு திண்ணையில் படுத்து கிடந்தார் ஆண்டாள். அவர் அழுவதை கவனித்த ஒளிர்பிறைக்கு மனம் லேசாக வலித்தது. காலையில் இருந்து சாப்பிடாமல் இருக்கும் முதியவருக்கு மூன்று இட்லியை நீட்டினாள் சாப்பிட.

“உன் அக்கறை நடிப்பு எல்லாத்தியும் அவன் கிட்டயோட வெச்சுக்க.” என்றவரிடம் பேச்சை வளர்க்காமல், “கொஞ்சம் வயித்த நெறப்பிட்டு திட்டுங்க அய்த்த” என நகர்ந்துவிட்டாள்.

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற மூவரும் வீட்டிற்கு வர, மதினியின் சோர்ந்த முகம் வரவேற்றது. காலையில் வம்பு வளர்த்து முட்டிக் கொண்டதால் அதை பெரிதும் கண்டுகொள்ளாமல் மூவரும் குளித்து முடித்து வந்தார்கள். உணவை எடுத்து வைக்க மறந்தவள் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு.

கட்டியவன் குழப்பத்தோடு  முற்றத்தில் அமர்ந்திருக்க, காலை பார்த்த ரத்தம் இவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது. வந்த மூன்று வானரங்கள் இருவரையும் நோட்டமிட்டது. அண்ணன் தான் திட்டி விட்டதாய் அவர்களாக முடிவு செய்து கொண்டு,

“இந்தக் கட்டபொம்மனுக்கு வேற வேலயே இல்லிடா. எப்ப பாரு மதினிய அழ வெச்சிக்கிட்டு.” என்ற கவிநேயனுக்கு,

“பேசாம இவர மாசத்துக்கு முப்பது நாளும் எங்கியாது வேலைக்கு அனுப்பி வுடனும். அப்பதா நம்ம மதினி நிம்மதியா இருப்பாய்ங்க.” என்றான் இமையவன்.

“பேசாம இந்த கட்டபொம்மன நாடு கடத்தி வுட்டுடுவோம்டா. என்னாத்துக்கு மாசம் எங்கியாது அனுப்பி கஷ்டப்படணும்.” எழில்குமரனின் பேச்சுக்கு பலமாக தலையசைத்துக் கொண்டு கண்ணால் சைகை செய்தனர் மற்ற இருவரும்.

“மதினிய இப்டி பாக்க மனசுக்கு ஒரு மாதிரி இருக்குடா” இமையவன்.

“நம்ம எத்தினி தடவதா சொல்றது திண்ணையில இருக்க அந்த கிறுக்கும் உள்ள இருக்க இந்த கிறுக்கும் பேசுறத காதுல போட்டுக்காதீங்கன்னு” கவிநேயன்.

“அம்மாதா ஏதோ வேல பாத்து இருக்காய்ங்க போலடா. மூக்கை உறிஞ்சிக்கிட்டு கெடக்கும் போதே சந்தேகம் வந்துச்சு.” எழில்குமரன்.

மூவரும் மதினிக்காக பரிதாபப்பட்டு காலை போட்ட சபதத்தை மறந்து நெருங்கினார்கள். அவர்கள் வருவதைக் கூட உணர்ந்து கொள்ளாமல் ‘கணவனுக்கு ஆபத்து நேருமோ’ என்ற துக்கத்தில் அவள் இருக்க,

“மதினி” என்றழைத்தான் கவிநேயன்.

உடனே நினைவு திரும்பியவள் ஒன்றும் புரியாமல் நோக்க, “நாங்க மூணு பேரு கெளம்புறோம்.” என்றான் எழில்குமரன்.

“எப்படா வூட்டுக்கு வந்தீங்க” என்ற ஒளிர்பிறைக்கு,

“எங்க மேல அக்கறை இருந்தாதான எப்ப வரோம் போறோனு கவனிப்பீங்க” என்றான் இமையவன்.

“ஆமாடா, இருக்க பிரச்சனை போதாதுனு நீயி புதுசா ஒரு பஞ்சாயத்தை கூட்டு.”

“நாங்க பண்றதை பாத்தா உங்களுக்கு பஞ்சாயத்தா தான் தெரியும். காலையில முன்ன வுட்டு பின்ன பேசும்போதே அத தெரிஞ்சுகிட்டோம்.” என்றவனை அலட்சியமாக பார்த்தாள்.

மதினியின் பார்வையில் இமையவனின் பார்வை மாறி, மற்ற இருவரையும் நோக்கியது. அவர்களோ இவனை பதிலுக்கு பார்த்தார்கள் ‘என்ன செய்வதென்று.’ மூவரின் விழி அசைவுகளை கவனித்தவள்,

“சரி கெளம்புங்க” என்றாள்.

“ஏதே…!” ஒன்றுபோல் மூவரும் ஒரே முகபாவனையை காட்ட, வாய்க்குள் சிரித்தாள்.

“எதுக்குடா இப்டி வாய பொளந்துகிட்டு நிக்கிறீங்க? நீங்க தான போறன்னு சொன்னீங்க.”

“நாங்க சொன்னா எங்களை அனுப்பி வுடுவீங்களா… அவ்ளோ தானா எங்க மேல உங்களுக்கு இருக்குற அக்கறை.” எழில்குமரன்.

“போறனு சொல்றவங்களை புடிச்சு வெக்குறது மருவாதியா இருக்காது கொழுந்தனே.”

“எடேய்! இதுக்கு மேல நின்னுட்டு இருந்தா உங்களுக்கு மருவாதி இல்லினு சொல்லாம சொல்றாய்ங்கடா. இப்பவே பைய தூக்கிட்டு கெளம்பலாம்…வாங்கடா ‌” பொடியன் கவிநேயன் பேச்சில் அழகாக புன்னகைத்தவள்,

“அத தான நானு சொல்ற. கெளம்பி போங்கடா முதல்ல. வெள்ளென எழுந்து அவிச்ச ஆட்டுக்கறிய நானும் என் புருசனும் தின்னுக்குறோம்.” என்றதும், திரும்பிய மூவரின் கால்களும் உடனே பழையபடி அவளை பார்த்து நின்றது.

இதைத்தான் எதிர்பார்த்தேன் என்பது போல் எழுந்து தலைமுடியை சேர்த்து கொண்டை இட்டவள், “நல்லவேளை என் புருசனுக்கு கெடைக்காம போயிடுமோன்னு ரொம்ப பயந்துட்ட. இந்த மூணு வானரங்களும் கெளம்பிட்டாய்ங்க… நிம்மதியா சேர்ந்து சாப்பிடுவோம்.” தன் போக்கில் பேசிக்கொண்டு வேலை செய்வது போல் பாவனை செய்தாள்.

“எடேய்….ஆட்டுக்கறிய மதினி எப்படா அவிச்சு வெச்சாங்க.”

“அது தெரிஞ்சா நா எதுக்கு உங்க கூட சேர்ந்துகிட்டு மதினிய எதுக்க போற.” எழில்குமரன்.

“எல்லாம் இவனால வந்துச்சுடா” என்ற கவிநேயன் அண்ணன் இமையவனின் தலையில் அடித்து, “மதினி சோகமா இருக்காய்ங்க, காலைல நடந்தத வெச்சு வம்பு இழுத்து சிரிக்க வெக்கலாம்… ஈர துணிய காய வெக்கலான்னு கூறுகெட்ட தனமா சொல்லி ஆட்டுக்கறி தின்ன வுடாம பண்ணிட்டா.” என்றான்.

அவளுக்கு பின்னால் இருந்த மூவரும் தலையை ஒன்றாக சேர்த்து வைத்துக் கொண்டு ரகசியம் பேசினார்கள். அதை கவனித்த அவ்வீட்டின் மருமகள்,

“இன்னு என்னாய்ங்கடா வெட்டியா பேசிக்கிட்டு கெடக்கீங்க. சட்டுபுட்டுனு வூட்ட வுட்டு கெளம்புற வழிய பாருங்க. மணி வேற ஒம்போது ஆவ போது. என் புருசனுக்கு பசிக்கும்.” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“ஆமாண்டா, நீங்க ரெண்டு பேரும் காலேஜுக்கு போங்க நா மதினி கூட உக்காந்து சாப்டுட்டு பொறுமையா பள்ளிக்கூடத்துக்கு போற.” வெட்கம் பாக்காமல் உடனே கட்சி தாவினான் கடைசி சிங்கம் கவிநேயன்.

தம்பியின் பேச்சில் திகைத்த விழியோடு எழில்குமரன் நிற்க, “எனக்கு காலேஜ் போவ இன்னு நெறைய டைம் இருக்கு. உனக்குதா பள்ளிக்கூடத்துக்கு மணி ஆவுது முதல்ல நீ வூட்ட வுட்டு போடா தம்பி. ஆட்டுக்கறிய சாயங்காலம் வந்து பாத்துக்கலாம்.” என்றான் இமையவன்.

விட்டால் தனக்கு ஒன்றும் கிடைக்காது என்ற பயத்தில், “மதினி இவுனுங்க இப்டிதா பேசிக்கிட்டு கெடப்பானுங்க வெட்டியா. நீங்க அவிச்சு வெச்ச ஆட்டுக்கறிய எடுத்துட்டு வாங்க உங்களுக்காக வயிறு முட்ட சாப்டுட்டு போற.” என்றான் திகைத்து நின்ற எழில்குமரன்.

“உங்களுக்கு எதுக்குடா இம்புட்டு வெட்டி ரோசம். மண்ண கவ்வுனது போதும் வரிசையா உக்காருங்க சோத்த போட்டு தொலையுற.” என்றவள் பேச்சைக் கேட்டு ரோஷம் கொள்ளாதவர்கள் வேகமாக அமர்ந்தார்கள்.

ஆட்டுக்கறியை ருசி பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தவர்களை சோதித்தாள் உடனே கொண்டு வராமல். மூவரும் குதிக்காத குறையாக அவளை அழைத்துக் கொண்டிருக்க, தம்பிமார்களின் சேட்டையை கண்டும் காணாமலும் பார்த்துக் கொண்டிருந்தான் மதுரவீரன்.

அவன் எண்ணமெல்லாம் காலை அன்னை சொன்ன விஷயத்தில் ஓடியது. அன்று சம்பவம் நடக்கும் பொழுது தந்தைக்கும் இதுதான் நடந்திருக்கிறது என்பதை அறிந்தவன் இன்று ஏதாவது நடக்குமா என்ற குழப்பத்திலும், இல்லை தந்தைக்கு இதன் மூலம் ஏதாவது நடக்குமா என்ற சந்தேகத்திலும் வெறும் பார்வையாளன் ஆனான்.

மூவரையும் வெகு நேரம் காக்க வைத்த பிறகு சோத்துக் குண்டானை கொண்டு வந்து வைத்தாள். பரபரப்பானது மூவரின் கையும் வாயும். அதை கவனித்து தனக்குள் சிரித்துக் கொண்டவள் மூவருக்கும் ஆளுக்கு ஒரு தட்டை வைக்க, ஆட்டுக்கறி எந்த குண்டானில் இருக்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் மூவரும்.

“மதினி சீக்கிரம்” மூவரும் ஒன்றன் பின் ஒன்றாக அவளுக்கு கட்டளையிட, தட்டில் கொட்டினாள் நேற்றிரவு வைத்த பழைய சோற்றை. முகத்தில் சாணி அடித்தது போல் ஆனது மூவருக்கும். முழி பிதுங்கி நிற்கும் கொழுந்தன்களின் பாவனையில் சத்தமிட்டு நகைத்தவள்,

“ஆட்டுக்கறி சூடு ஆறுறதுக்குள்ள சாப்டுங்க கொழுந்தைய்ங்களா.” என்றாள் அன்போடு.

ஒளிர்பிறையின் பேச்சும் சிரிப்பும் தான் சொன்னதெல்லாம் பொய் என்று உரைக்க வைத்தது மூவருக்கும். மனதினுள் கண்டபடி திட்டினார்கள் அவளை. என்ன நினைப்பார்கள் என்பதை அறிந்து,

“இந்த காலத்துல நல்லவய்ங்க திட்டுனாலே ஒன்னு நடக்காது. நீங்க மூணு பேரு திட்டியா நடக்கப் போவுது. ஒழுங்கா போட்டத தின்னுட்டு ஓட பாருங்கடா. இல்லினா நாளைக்கு இதுவும் கெடைக்காது.” என்றிட, முடியாது என்று மறுத்தார்கள் மூவரும்.

“சரி சாப்டாதீங்க சாயங்காலம் இதியே எடுத்து வெக்குற ஆற அமர உக்காந்து கொட்டிக்கோங்க.” எப்பொழுது இருந்தாலும் இதைத்தான் உண்ண வேண்டும் என்று முடிவாக கூறிய மதினியின் பேச்சில் சொல்ல முடியாத கடுப்பிற்கு ஆளாகினார்கள்.

பழையது விரும்பிய உணவு என்றாலும் ஆசை காட்டி மோசம் செய்த மதினின் செயலில் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தார்கள். அந்த நேரம் மதுரவீரன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் எடுப்பதற்குள் துண்டிக்கப்பட்டது. யார் என்று பார்த்தவன் புதிய எண்ணாக இருப்பதால் திரும்பி அழைக்காமல் இருந்தான்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைப்பு வந்தது. எடுத்தவன் அதிர்ந்து போனான் விஷயம் அறிந்து.

****

கணவனோடு சிறு ஊடல் நடத்திய சாமந்தி யோசனையோடு வேலைகளை கவனித்தாள். தம்பிமார்களை தேடி வெளியே பறந்தான் மச்சக்காளையன். ஊர் முழுவதும் அலசி ஆராய்ந்தவன் தம்பிகளை காணாமல் வெறும் கையோடு வீடு திரும்பினான்.

“என்னா மாமா நீங்க மட்டும் வரீங்க, அவுனுங்க ரெண்டு பேரும் எங்க?”

“தெரியல எங்க போய் தொலைஞ்சாய்ங்கன்னு. இன்னிக்கு வூட்டுக்கு வரட்டும் மொத்தமா வூட்டோட உக்கார வெக்குற.”

“எப்ப பாரு அவுனுங்களுக்கு எதிராவே பேசிக்கிட்டு இருக்காதீங்க மாமா. நானே என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்துக்கிட்டு கெடக்க.”

“உனக்கு எதுக்கு பயம்? இது எல்லாத்திக்கும் வழிகாட்டி விட்டதே நீதான.”

“சும்மா என்னையவே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. நா வரதுக்கு முன்னாடியும் அவுனுங்க ரெண்டு பேரும் இப்டித்தா இருந்தாய்ங்க.” என்றவள் பேச்சை குறைத்துக் கூறினாள், “நீங்களும்” என்று.

“இதே மாதிரி பேசிக்கிட்டு கெட தெக்க கொண்டு போய் கழுத்து அறுத்து போடுற.”

“நீங்க தெக்க கூட்டிட்டு போற வரைக்கும் என் கை சும்மா இருக்குனு நெனைக்கிறீங்களா.” என்ற கட்டியவளின் பேச்சில் கால் விரல்களை தொட்டுக் கொண்டிருந்த காவி நிற வேட்டியை முட்டி அளவிற்கு தூக்கி கட்டினான்.

“வேற என்னா பண்ணு உன் கை?” என நெருங்கும் கணவனுக்கு புன்னகையை பதிலாக கொடுத்தவள், “கட்டிப்புடிச்சு நெஞ்சோடு சேத்துக்கோம்” என்றாள் கண்ணடித்து.

“உன் வலையில என்னிக்கும் நா வுழ மாட்ட.”

“வுழ வெக்காம இந்த மச்சக்காளையன் பொண்டாட்டி ஓய மாட்டா.”

இதற்கு மேலும் பேச்சை வளர்த்தால் தன்னை அவள் முந்தானையில் முடிந்து கொள்வாள் என சுதாரித்த மச்சக்காளையன் தம்பிகளை தேட வெளியில் வர,

“தம்பி, நம்ம வூட்டு பசங்களை போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சிருக்காங்களாம்.” அவன் வீட்டு வாசலில் நின்ற ஒளிர்பிறை அழுகையோடு கூறினாள்.

இதுவரை ஒளிர்பிறையிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை மச்சக்காளையன். திடீரென்று தன் வீட்டு வாசலில் நிற்கும் அவளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்பதற்குள், “இப்பதா உங்க அண்ணனுக்கு ஸ்டேஷன்ல இருந்து போன் பண்ணாய்ங்க.” என்றாள்.

அவர்கள் வீட்டு ஆண்களுக்கு தான் எதுவோ என்று அவன் சாதாரணமாக நகர, தோழியின் சத்தம் கேட்டு வெளியில் வந்தாள் சாமந்தி. அவளைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு கதறியவள், “தமிழு, சிலம்பன், மொழி மூணு பேத்தியும் ஸ்டேஷன்ல உக்கார வெச்சிருக்காங்களாம்.” என்ற வாசகம் நகர்ந்த மச்சக்காளையின் கால்களை நிறுத்தியது.

சீமை 27

“என்னா பிற சொல்ற?” வெளியேறும் கணவனுக்கு திருநூறு வைக்க எடுத்து வந்த தாம்பூல தட்டை கீழே போட்ட சாமந்தி அதிர்ந்து கேட்டாள்.

“ஆமாடி, இப்போதா என் புருச ஸ்டேஷனுக்கு ஓடுறாரு. என்னாமோ வம்பு பண்ணிட்டாய்ங்க போல.”

“இவுனுங்க ரெண்டு பேரும் பண்ணதா சொன்னா கூட நியாயம் இருக்கும். தமிழ் அப்டி பண்ற ஆளு இல்லியே பிற.”

“அதா எனக்கு எதுவுமே புரியல. எந்த வம்புக்கும் போற ஆளு கெடையாதே அவன். என்னா நடந்துச்சுன்னு ஒன்னு புரியல.” என தலையில் கை வைத்த படி அவ்வீட்டின் திண்ணையில் அமர்ந்தாள்.

“என் தம்பிகளுமா ஸ்டேஷன்ல இருக்கானுவோ” அண்ணன் மனைவியின் வார்த்தையில் நம்பிக்கை கொள்ளாதவன் திகைப்போடு கேட்டான்.

“ஆமா தம்பி.” என்றதும் விவரம் கேட்டவன் விரைவாக ஓடினான் தம்பிகளுக்காக.

***

சிறுமயிலூர் காவல் நிலையம்.

மர இருக்கையில் மூவரையும் அமர வைத்திருந்த அங்கிருக்கும் காவலர், “இவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணியாச்சு சார். வந்துட்டு இருக்காங்க எல்லாரும். இவனுங்க மூணு பேத்தையும் அவங்க முன்னாடி சாத்துனாதான் அடுத்த தடவ இந்த மாதிரி பிரச்சனை பண்ண வர மாட்டானுங்க.” பேசிக் கொண்டிருந்தார் சொசைட்டி அதிகாரி ஐய்யனாரிடம்.

பக்கத்தில் இருந்த சிவகுமார் காவலர் அறியாது அமர்ந்திருந்த மூவரையும் சீண்டினார் பார்வையால். அதை கண்டு கொண்ட சிலம்பன் கோபமாக முகத்தை மாற்ற, தம்பியின் கையை பற்றி,

“கொஞ்ச நேரம் பொறுமையா இரு சிலம்பா. நேரம் நமக்கு ஏத்த மாதிரி இல்ல. வூட்டு ஆளுங்க வரட்டும் பேசிப்போம்.” என்றான் செந்தமிழன்.

“இவன சும்மா வுட்டது ரொம்ப பெரிய தப்பு.‌ அங்கயே மூஞ்சி முகரைய அடிச்சு துவைச்சு இருக்கணும்.” இளையவன் சூடான ரத்தத்தோடு கொதித்துக் கொண்டிருந்தான்.

“மொழி சொல்றல அமைதியா இருனு.” என்ற செந்தமிழனின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காது,

“நீங்க யாரு? நீங்க சொல்றத நா எதுக்கு கேக்கணும். அவன் அடிச்சது என்னை. என்னிக்கா இருந்தாலும் அதே மாதிரி அவன அடிக்காம வுட மாட்ட.” என்றான் மொழியன்.

“வெட்டு, குத்து, அடி இத தவிர வேற எதியும் பேச மாட்டீங்களா. நேரம் நமக்கு எதிரா இருக்கு. வீரம் மட்டும் ஆம்பளைக்கு அழகு இல்ல. விவேகமும் சாமர்த்தியமும் கூட இருக்கணும்.”

“உங்கள மாதிரி எங்களுக்கு பொறுமையா இருக்க தெரியாது. எங்க அண்ணனுக்கு போன போட்டு வரச் சொல்லி இருக்கனும். அவரு வந்து நல்லா நாலு மிதி மிதிச்சிருப்பாரு. நீங்கதா போலீஸ்காரங்க கேக்கும் போது உங்க அண்ண நம்பர மட்டும் குடுத்துட்டீங்க.”

“கோபத்துல தப்பு மேல தப்பு பண்ணாதீங்கடா. எங்க அண்ண என்னை இந்த நிலைமையில பாத்தா திட்ட மாட்டாரு. ஆனா, உங்க அண்ண அப்படியா? ஏற்கனவே நாளும் பொழுதும் தவறாம அடி வாங்கிட்டு இருக்கீங்க. இது தெரிஞ்சா என்னா பண்ணுவாருனு நெனைக்கவே எனக்கு பயமா இருக்கு. நீங்க என்னாடானா….” என அவன் பேச்சை முடிக்காமல் வருத்தத்தில் தலைகுனிந்தான்.

“என்னாய்ங்கடா உங்களுக்குள்ள பேசிக்கிறீங்க. இவ்ளோ தூரம் வந்தும் திருந்தலையா இன்னு.” என்ற சிவகுமார் காவலரை பார்த்து,

“இவுனுங்க மூணு பேத்தியும் உள்ள வெச்சி லாடம் கட்டுங்க சார்.” என்றார் மிடுக்காக.

“எங்களை என்னாத்துக்கு உள்ள வெக்கணும்? பாலை திருடி தனியா தொழில் பண்ற உங்களைத்தா உள்ள வெக்கணும்.”

“ஏய்! வாய அடக்கல உண்மையாவே உள்ள வெச்சி லாடம் கட்டிடுவேன்.” குரல் உயர்த்திய சிலம்பனை விட அதிகமாக குரல் உயர்த்தி கண்டித்தார் சிறுமயிலூர் காவல் அதிகாரி.

“சார், நாங்க எந்த தப்பும் பண்ணல. பண்ணது எல்லாம் அங்க உக்காந்துக்கிட்டு இருக்க அவருதா.” மொழியின் பேச்சில்,

“எடேய்… என்னாடா? இவ்ளோ ஆனதுக்கு அப்புறமும் சொன்னதியே சொல்லி தப்பிக்க பாக்குற.” எதற்காக இவ்வளவு தூரம் அழைத்து வந்தோம் என்பதை முழுதாக அறியாத ஐயப்பன் எழுந்து நின்று கத்தினார்.

“மன்னிச்சிடுங்க சார்… தம்பிங்க கோவத்துல ஏதோ பேசுறாய்ங்க.” கையெடுத்து கும்பிட்டு அமைதியை நிலைப்படுத்தினான் செந்தமிழன்.

“ஒழுங்கா வாய மூடிக்கிட்டு இருக்க சொல்லு இவனுங்களை. இல்லனா கேஸ் போட்டு வாழ்க்கைய கெடுத்து விட்டுடுவேன்.” காவல் அதிகாரியின் பேச்சுக்கு இளையவர்கள் முறைக்க, ‘சரி’ என்று தலையசைத்து அந்த சூழ்நிலையை சாந்தி படுத்தினான் செந்தமிழன்.

“தமிழுழுழு…” பதற்றத்தோடு தம்பியை நோக்கி ஓடி வந்தான் மதுரவீரன்.

அண்ணனை பார்த்ததும் சின்னவன் எழுந்து கொள்ள, “என்னாப்பா ஆச்சு, எதுக்கு இங்க உன்ன உக்கார வெச்சிருக்காங்க?” அண்ணன் கண்கள் லேசாக கலங்குவதை உணர்ந்த தம்பி,

“ஒன்னு இல்ல’ண்ணே… பதட்டப்படாத சின்ன பிரச்சனை தான்.” தைரியப்படுத்தினான்.

“உங்களை வர சொன்னது நான், அவன் இல்ல. கூப்பிட்ட என்கிட்ட கேட்காம அவன் கிட்ட கேக்குறிங்க” அதிகாரியின் குரலுக்கு திரும்பியவன் கைகளை குவித்து,

“மன்னிச்சிடுங்க சார், தம்பி இங்க உக்காந்துட்டு இருக்கவோ பதட்டத்துல கேட்டுட்ட.” என்றிட, அருகில் வருமாறு சைகை செய்தார் அங்கிருந்து அதிகாரி.

குவிந்த கைகளை மார்போடு கட்டிக் கொண்டவன் பணிவாக அவர் முன்பு நிற்க, “உன் தம்பிங்க மூணு பேரும் சொசைட்டில போய் பிரச்சனை பண்ணி இருக்காங்க. சொசைட்டி அதிகாரி விசாரிக்கச் சொல்லி கம்ப்ளைன்ட் குடுத்து இருக்காரு.” என விபரம் கூறும் பொழுது அங்கு வந்தான் மச்சக்காளையன்.

தன் பின் பிறந்த இருவரையும் எங்கு பார்க்கக்கூடாது என்று விரும்பினானோ அங்கேயே பார்க்க வைத்த சூழ்நிலையை வெறுத்தபடி, “என்னாங்கடா பண்ணிங்க” கேட்டான் கனத்த மனதோடு.

“நீ யாருயா?” என்ற அதிகாரிக்கு உரிய விளக்கத்தை கொடுத்தவன் அவர் முன்பு நிற்க, “ஓஹோ! அவனுங்க ரெண்டு பேரும் உன் தம்பிகளா.” கேட்டதும் வேகமாக தலையசைத்தான்.

“அப்புறம் எதுக்குடா நா கேட்ட அப்போ உன் கூட பொறந்த தம்பிங்கன்னு பொய் சொன்ன.” செந்தமிழனிடம் அதட்டலாக கேட்டார் காவலர்.

“சித்தப்பா பசங்களா இருந்தாலும் இவங்க ரெண்டு பேரும் என் தம்பிங்கதா சார். அதா நீங்க கேக்கும் போது அப்டி சொன்ன. மத்தபடி உங்களை ஏமாத்துற எந்த எண்ணமும் இல்ல சார்.” என்றவனை கலவரம் இல்லாத ஆழ்ந்த சிந்தனை முகத்தோடு நோக்கினான் மச்சக்காளையன்.

“அவுனுங்க என்னா உன் அப்பனுக்கா பொறந்தாய்ங்க.” காவல் அதிகாரி தன் புறம் இருப்பதால் ஆணவமாக கேட்டார் சிவகுமார்.

அவரை கடுமையாக முறைத்தார்கள் அங்கிருந்த அண்ணன் தம்பி ஐவரும். பேசக்கூடிய சூழ்நிலை இல்லாததால் அமைதியாக நிற்க, அதையே தன்னுடைய வெற்றியாக எண்ணி, “இவனுங்க மொறைக்குறத பாத்தா குடும்பத்துக்குள்ளேயே கசமுசா இருக்கும் போலயே சார்.” என்றார் வக்கிரமாக.

“சார்” மதுரவீரன் குரல் ஒலித்தது அங்காரமாக.

“என்னாடா குரல் ஒசத்துற? உன்னையும் அவுனுங்க கூட சேத்து உக்கார வெச்சிருவ ஜாக்கிரதை.”

“அவரு ரொம்ப தப்பா பேசுறாரு சார்.  இந்த மாதிரி போலீஸ்காரர் முன்னாடி பேசுற அளவுக்கு அவருக்கு ஆரு சார் தைரியம் குடுத்தது. சட்டம் தெய்வத்துக்கு சமம் இல்லியா. அதுல வேல பாக்குற நீங்க எல்லாரும் அதே தெய்வத்துக்கு சமம் தான சார். உங்க முன்னாடி ஒருத்தர் இப்டி பேசறத கேட்டுக்கிட்டு அமைதியா இருக்குறது உங்க வேலைக்கு பொருத்தமா இருக்காது.” என்றதும் அங்கிருந்த இன்ஸ்பெக்டருக்கு குத்தியது.

அதை மேலும் தொடர விடாமல் சதி செய்தார், “என்னாடா இன்ஸ்பெக்டரேயே தரக்குறைவா பேசுற. அவரு நெனைச்சாருன்னா உன் வாழ்க்கைய மொத்தமா ஒரே நொடியில அழிச்சிடுவாரு.”  சிவகுமார்.

அவரின் வார்த்தை நியாயத்தை மறக்க வைத்தது காவலருக்கு. சிவகுமாரோடு சேர்ந்து தன் பதவியை தவறாக பயன்படுத்தினார் மிரட்டி. நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த மச்சக்காளையன்,

“சார், வாக்குவாதம் செய்ய நாங்க வரல. என் தம்பிங்க செஞ்சது தப்பாவே இருக்கட்டும். கேஸ் எதுவும் போடாம இந்த ஒரு தடவ மன்னிச்சு வுட்டுடுங்க. இனி ஒரு தடவ இந்த மாதிரி நடக்காம நாங்க பாத்துக்குறோம்.” என்றான் சமாதானம் செய்து தம்பிகளை வீட்டிற்கு அழைத்து செல்லும் நோக்கோடு.

“அந்த மாதிரி எல்லாம் வுடாதீங்க சார். இவுனுங்க மூணு பேரும் பண்ண ரகளைக்கு கொறைஞ்சது ஆறு மாசமாது ஜெயில்ல இருக்கணும். அந்த மாதிரி ஏதாச்சும் கேஸ் இருந்தா போட்டு வுடுங்க.”

“சார்” என்ற மொழியனை காவல் அதிகாரி பார்க்க,

“நாங்க உங்களை தரகுறைவா பேசுறதா சொல்லிட்டு அவர் உங்களுக்கு ஆர்டர் போட்டுட்டு இருக்காரு சார் என்ன செய்யணும்னு.” நேரம் பார்த்து சிவகுமாரின் நரி தந்திரத்தை  போட்டு உடைத்தான்.

“புதுசா உள்ள வரவங்களுக்கு ஆரு இன்ஸ்பெக்டருனு தெரியாது போல சார் அந்த மாதிரி இருக்கு அவரு பேச்சு. உங்கள வெச்சுக்கிட்டே இப்டி சட்டம் பேசுறாரு. அப்போ தனியா நாங்க கேள்வி கேக்கும் போது எப்டி பேசி இருப்பாருனு மட்டும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார்.” அறிவாக பேசினான் சிலம்பன்.

“சார்… இவுனுங்க உங்களை எனக்கு எதிரா திருப்பி வுட பாக்குறாய்ங்க. பேச வுடாம தூக்கி உள்ள வெச்சிடுங்க”

“இப்ப கூட பாருங்க சார் உங்களுக்கு ஆர்டர் போடுறாரு.” கடைசியில் பிறந்தாலே இப்படித்தான் இருப்பார்கள் போல. இருக்கும் இடத்தை கண்டு பயம் கொள்ளாமல் தைரியமாக பேசினான் மொழியன்.

சிறியவனின் வார்த்தைக்கு சிவகுமார் ஏதோ பேச வர, பக்கத்தில் இருந்த ஐயப்பன் அவரை தடுத்துக் கொண்டிருந்தார். தடுப்பவரின் பேச்சைக் கேட்காமல் அவர் தகராறு செய்ய, “சார், அவங்களை விசாரிக்க கூட்டிட்டு வர சொல்லிட்டு இப்போ நீங்க சண்டை போட்டுக்குறீங்க. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க விசாரிக்குற வேலைய பாக்கணும்” என்றார் அதிகாரி.

அதன்பின் சிவகுமார் தன் திருவாயை மூடிக்கொள்ள, “இங்க பாருங்கடா இனிமே சொசைட்டி பக்கம் நீங்க மூணு பேரும் போவ கூடாது. படிக்குற பசங்களா இருக்குறதால வழக்கு எதுவும் போடாம கண்டிச்சு மட்டும் விடுறேன். இன்னொரு தடவை உங்க பேர்ல ஏதாச்சும் கம்ப்ளைன்ட் வந்துச்சு அப்புறம் ஜெயில் தான்.” என்றவருக்கு சம்மதமாக தலையசைத்தான் செந்தமிழன்.

“உங்க ரெண்டு பேருக்கும் வாய் இல்லையாடா? உம்முனு இருக்கீங்க. வாய தொறந்து இனிமே எந்த வம்பும் பண்ண மாட்டேன்னு சொல்லுங்க.”

காவலரின் மிரட்டலுக்குப் பின் இருவரும் ஒப்புக்காக தலையசைக்க, “உங்க தம்பிகளை கூட்டிட்டு போங்க. இனிமே எந்த பிரச்சனையும் பண்ண வேணாம்னு அட்வைஸ் பண்ணுங்க.” அண்ணன்கள் இருவரிடமும் இன்ஸ்பெக்டர் கூற,

“இனி எந்த வம்புக்கும் என் தம்பிங்க போக மாட்டாய்ங்க சார்.” என்று மச்சக்காளையனும்,

“ரொம்ப நன்றி சார்.” என மதுரவீரனும் பதில் அளித்தார்கள் கைவணங்கி.

இதற்கு மேலும் இங்கு இருக்க வேண்டாம் என்று இருவரும் அவரவர் தம்பிகளை அழைத்துச் செல்ல, “என்னா சார் இவ்ளோ சாதாரணமா வுட்டுட்டீங்க” என நொந்து கொண்டார் சிவகுமார்.

“படிக்குற பசங்க சார். ஒரு தடவ மன்னிச்சு விடுறதுல தப்பு இல்ல. அதுவுமில்லாம நீங்களும் அவங்களை அடிச்சு இருக்கீங்க. சமாதானமா போறது நல்லதுன்னு தோணுச்சு. இனிமே உங்ககிட்ட பிரச்சனை பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அப்படியே பண்ணாலும் என்கிட்ட சொல்லுங்க பார்த்துக்கிறேன்.” என்ற உறுதியோடு அனுப்பி வைத்தார்.

வெளியில் வந்த சிவகுமாரின் முகம் கடுகடுத்தது தன்னை திரும்பிப் பார்த்து புன்னகைத்த செந்தமிழனின் முகத்தால். பூவான புன்னகைக்குள் பூகங்கம் இருப்பதை உணர்வாரா சிவகுமார்?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்