Loading

 

ஜிஷ்ணு தர்மனின் வெற்றுப்பார்வையை ஒரு நொடி உள்வாங்கிய வசுந்தரா, “அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் உங்கிட்ட எதுவுமே கேட்கல அப்படித்தான?” எனக் கேட்டு கண்ணை சுருக்கினாள்.

அவனோ கன்னத்தோரம் முளைத்த தாடியை தேய்த்து சிந்தித்தவாறு, “நீ என்ன நடந்துச்சுன்னு கேட்கலையே… ஏன் இப்படி செஞ்சன்னு தான கேட்ட” என்றே விழிகளால் சாட, அவளுக்குள் சிறு அதிர்வு.

அதனை மறைத்துக் கொண்டவள், அவனை நேராய் நோக்கி, “சரி இப்ப கேட்குறேன். சொல்லு!” என்றாள் அழுத்தமாக.

அவனின் கருவிழிகளும் அழுத்தம் பெற, அமைதியின் சிகரமாக நின்றவனிடம், பொறுமை இழந்து “என் அப்பாவை ஏன் கொல்லணும்ன்னு நினைச்ச?” என்ற அடுத்த கேள்விக்கணையை வீசினாள்.

“சொல்லு தர்மா… உன்ன தான் கேக்குறேன்.” என அவள் கத்தி தீர்க்க, குமரனோ “மாப்ள… காயத்துல இருந்து ரத்தம் வருதுடா!” என அப்போது தான் அவனைக் கண்டு பதறினான்.

உடனே அவனுக்கு சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்ய, அவனை அறைக்குள் அழைத்து சென்று விட்டனர். வசுந்தரா தான், அவன் சென்ற திசையையே சலனமின்றி வெறித்தாள்.

அவளைப் பார்த்து பெருமூச்சு விட்ட குமரன், “என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன்” என்றான் மெல்லிய குரலில்.

விழிகளை மட்டும் திருப்பி அவனை கூர்ப்பார்வை பார்க்க, எச்சிலை விழுங்கியபடி குமரன் கூறத் தொடங்கினான்.

அன்று, வசுந்தராவை வீட்டில் விட்டு விட்டு, இதழோரம் மிதந்த புன்னகையுடன் கன்னிமனூரை நோக்கி சென்று கொண்டிருந்த ஜிஷ்ணுவின் வண்டி பாதி வழியில் நின்று விட, “ப்ச்… இது வேற!” என்று திட்டியபடி இறங்கினான்.

வண்டியை சரி பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, ஏதோ சத்தம் கேட்பது போல இருக்க, இரண்டு பக்கமும் நிறைந்திருந்த தென்னந்தோப்பின் கருமையான இருட்டை நோக்கி துழாவினான்.

முதலில் அசட்டையாக கிளம்ப எத்தனித்தவனின், உள்ளுணர்வு எச்சரிக்க, கையில் போன் டார்ச்சை வைத்துக்கொண்டு அந்த தோப்பினுள் சென்று ஆராய்ந்தான்.

அருகில் செல்ல செல்ல தான், ஒரு பெண்ணின் அழுகுரல் காதில் கேட்க, நடையை துரிதப்படுத்தியவன், வேகமாக அருகில் சென்று பார்க்க, அங்கோ ஆள் வருவதைக் கண்டதும், அங்கிருந்த நான்கு ஆட்களும் தடதடவென ஓடுவது தெரிந்தது.

“டேய் யாருடா நீங்க?” என ஜிஷ்ணுவும் அவர்களை துரத்த எத்தனித்து விட்டு, டார்ச்சை அடிக்க, அதுவோ நேராக அப்பெண்ணின் மீது விழுந்ததில், “ஆ… வேணாம். வேணாம்…” என்று அவள் தன்னை மறைத்துக்கொண்டு கத்த, அதில் அதிர்ந்தவன், சட்டென டார்ச்சை திருப்பி விட்டு திரும்பி நின்றான்.

“ரா… ராதி? நீ இங்க எப்படி?” எனக் கேட்டவனுக்கு நெஞ்சம் பதறியது.

அவளோ ஆங்காங்கே கிழிந்திருந்த ஆடையை சரி செய்ய இயலாது, எழுந்து நடக்கவும் இயலாது, தலையை குனிந்து அழுது அரற்ற,

“ராதி ப்ளீஸ் அழுகாத. நீ எப்படி இங்க வந்த?” எனக் கேட்டதில், அவளின் அழுகை இன்னும் அதிகமே ஆனது.

“த தர்மா… அவனுங்க என்ன…” எனப் பேச வந்தவளுக்கு, நாக்கு பின்னிக்கொள்ள, அப்படியே உயிரும் போய் விடாதா என்று உள்ளம் உடைந்தது.

நடந்திருப்பதை ஊகித்தவன், தலையை அழுந்தக்கோதி, செய்வதறியாது திகைத்து நின்றான்.

முதலில் இதனை எப்படி கையாள்வது என்று அவனுக்கும் புரியவில்லை. இரு வருடமாக தங்களுடன் பேசி சிரித்து விளையாடிய பெண். இப்போது கற்பிழந்து, மனமுடைந்து தன் முன் அழுது கரைகையில் அதனை கையாளத் தெரியாமல் தடுமாறிப் போனான்.

கிழிந்த ஆடை வேறு அவளது வெளிர் நிறத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட, அவனுக்கு திரும்பி ஆறுதல் கூறவும், விசாரிக்கவும் சங்கடமாக இருந்தது.

அதில், “ராதி… முதல்ல தைரியமா இரு. அந்த நாய்ங்க யாருன்னு சொல்லு. கொன்னு போடுறேன். ப்ளீஸ். அந்த நாய்ங்க பண்ண தப்புக்கு நீ தண்டனை ஏத்துக்கிட்டு அழுகாத…” என தன்னால் முடிந்த அளவு அவளை திடப்படுத்த எத்தனிக்க அவளோ, சத்தமாக அழுதாள்.

பின் அவனே “நான் வசுவை வர சொல்றேன். அவள் வந்தா தெளிவா முடிவெடுப்பா. உன்னை எப்படி ஹாண்டில் பண்றதுன்னு எனக்கு தெரியலை ராதி…” என்றவன் அவசரமாக வசுந்தராவிற்கு போன் செய்ய போக, அதுவோ பிசி என்றே வந்தது.

ஆனால், மேலும் தொடர இயலாமல் ராதிகா அவன் காலை பிடித்திருந்தாள்.

“வேணாம் தர்மா ப்ளீஸ் வேணாம். அவகிட்ட சொல்லாத தர்மா. நியாயம் தர்மம்ன்னு சொல்லி, எல்லாரு முன்னாடியும் நிக்க வைச்சுடுவா தர்மா. அவ அண்ணன் பிரச்சனைலேயே அந்த பொண்ணையும் எல்லார் முன்னாடியும் நிக்க வைச்சால்ல. அந்த மாதிரி அவ இதை எல்லார்ட்டயும் சொல்லிடுவா தர்மா. ப்ளீஸ் நான் இங்கயே செத்துடுறேன். ப்ளீஸ்…” என்று கதறிட, அவனுக்கோ ஒன்றும் புரியாத நிலை.

வெடுக்கென அவளிடம் இருந்து நகன்றவன், “என்ன ராதி நீ…? கால போய் புடிச்சுக்கிட்டு. நீ தப்பு பண்ணா தான மூடி மறைக்கணும். இதுல உன் தப்பு எதுவுமே இல்லடா.” என சங்கடங்களை தூக்கி எறிந்து விட்டு, அவள் புறம் திரும்பி, அவள் முன்னே மண்டி இட்டு அமர்ந்திருந்தான்.

முடிந்த மட்டும் தன்னை மறைத்தவளால், அது முடியாது போக தலையை தரையில் புதைத்திருக்க, ஜிஷ்ணு தன் சட்டையை கழற்றி அவளுக்கு போர்த்தி விட்டு, “நீ தலை குனியிற அளவு இங்க எதுவுமே நடக்கல. தலை குனிய வேண்டியது தப்பு செஞ்சவனுங்க தான். நீ இல்ல ராதி.” என்றான் அழுத்தமாக.

அவள் எதையும் காதில் போட்டுக்கொண்டது போல தெரியவில்லை அவனுக்கு. “இங்க ஏன் நீ வந்த?” எனக் கேட்க,

மூக்கை உறிஞ்சியவள், “நான்… நான்… என் அப்பாகிட்ட வேலை பாக்குற அறிவழகன விரும்புறேன். அவன் தான் என்னை பார்க்கணும்ன்னு இங்க வர சொன்னான்.” எனத் தேம்பினாள்.

நெற்றியை தேய்த்தவன், “அவன் வந்தானா?” என்று கேட்டதில், “இல்ல தர்மா. வரவே இல்ல. நானும் வீட்டுக்கு போலாம்ன்னு கிளம்புனேன். அப்ப தான் இந்த நாலு பேரும்…” என்று கூற இயலாமல் கண்ணீரில் கரைந்தாள்.

“முட்டாளா நீ? ஏற்கனவே ஊர் கிடக்குற நிலமைக்கு, அவனை நம்பி எதுக்கு வந்து தொலைச்ச” என அதட்டியவனுக்கு அறிவழகன் மீது நல்லெண்ணம் எல்லாம் இருக்கவில்லை.

“அட்லீஸ்ட் வசுவையாவது கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல? சரி விடு. யாரு அவனுங்கன்னு சொல்லு. இப்பவே கண்ட துண்டமா வெட்டி போடுறேன்.” என்றான் அடக்க இயலாத கோபத்துடன்.

“எனக்கு தெரியல தர்மா. இருட்டா இருந்துச்சு. யாருன்னே எனக்கு தெரியல…” என கேவிட,

“நல்லா யோசிச்சு பாரு ராதி. ஒருத்தன கூட உனக்கு தெரியலையா? ஏதாவது ஒரு அடையாளம் ஆச்சு?” என்று அவன் கேட்டதில், மெல்ல அழுகையை நிறுத்தி சிந்தித்தவள், “ஒருத்தன் பேசுனது மட்டும் கேட்டுச்சு. அவன், கூட இருந்த ஒருத்தன்கிட்ட, ‘மினிஸ்டர் வர சொன்னாரு. இவளை நம்ம எப்பவும் புதைக்கிற இடத்துல புதைச்சுட்டு கிளம்பிடலாம்’ன்னு சொன்னான். என்ன கொன்னுடுவானுங்கன்னு தான் நினைச்சேன். நீ வரவும் ஓடிட்டானுங்க. என்ன கொலையே பண்ணிட்டு போயிருக்கலாம் தர்மா…” எனக் கூறி விட்டு முகத்தை மூடி அழுதவளைக் கண்டு, அவனுக்கும் கண்ணைக் கரித்தது.

“மறுபடியும் சொல்றேன். சாவ வேண்டியது நீ இல்ல. அவனுங்க தான். ரோட்டுல போறப்ப கால்ல முள்ளு குத்துனா, தூக்கி போட்டுட்டு போற மாதிரி தான் இதுவும். உடனே கற்பு டேஷுன்னு உளறாத ராதி. கற்பெல்லாம் மனசுல தான் இருக்கணும். உடம்புல இல்ல. முதல்ல அழுகையை நிறுத்திட்டு, தைரியமா இரு.” என்றான் அவள் தலையை மெல்ல தடவிக் கொடுத்து.

அவளோ விழிகளில் கண்ணீர் நிறைக்க, “இதையே என் அப்பாகிட்ட சொல்ல முடியுமா? என் அம்மா புருஞ்சுப்பாங்களா தர்மா? இல்ல நான் விரும்புறவன் புருஞ்சுப்பானா? அவங்களை பொறுத்தவரை அவனுங்க கற்பழிச்சாங்கன்னு சொல்ல மாட்டாங்க. நான் கற்பழிக்கப்பட்டேன்னு தான் சொல்லுவாங்க. எப்படி பார்த்தாலும் அவமானம் தாங்காம சாவணும்… அதுக்கு நான் இங்கயே செத்துடுறேன்.” என்றாள் பாவமாக.

“லூசு மாதிரி பேசாத. இத நீ சொன்னா தான பிரச்சன. இப்போதைக்கு இதை யார்ட்டயும் சொல்லாத. எல்லாருக்கும் நான் புரியவைக்கிறேன். ப்ளீஸ்… வசுகிட்ட சொல்றேன் ராதி. அவள் இதுல கரெக்ட்டா முடிவு எடுப்பா.”

அவளோ மேலும் பதறி, “வேணாம். வேணாம் தர்மா. அவள் உடனே இதுல அவமானப்பட எதுவும் இல்லன்னு சொல்லி, ஊருக்கே தெரிய வச்சுடுவா!” என்றதில், “அவ சொல்றதும் உண்மை தான ராதி. நீ நினைக்கிற மாதிரி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு பண்ண மாட்டா ராதி. நான் சொல்றத…” என அவன் பேசி முடிக்கும் போதே, “அவகிட்ட சொல்றன்னா, என்னை இங்கயே கொன்னுட்டு போய்டு.” என்றாள் வீம்பாக.

பயத்தில் பேசுகிறாள் என்று புரிந்தவன், மேலும் அவளை வற்புறுத்தாமல், “சரி. வா உன்ன வீட்டில விடுறேன். எதை பத்தியும் யோசிக்காத. தலைல தண்ணி அள்ளி ஊத்திட்டு எல்லாத்தையும் மறந்துட்டு அடுத்த வேலையைப் பாரு.” என்றவனுக்கு அமைதியையே பரிசளித்தாள்.

“ராதி…? தயவு செஞ்சு எந்த தப்பான முடிவுக்கும் போயிடாத. எனக்கு இந்த ஒரு நைட்டு டைம் குடு. எல்லாத்தையும் நான் சரி பண்றேன். என்னை உன் ப்ரெண்டா அண்ணனா நினைச்சா, ப்ளீஸ்… ஒரே ஒரு நைட் டைம் குடு.” எனக் கிட்டத்தட்ட கெஞ்சவே செய்தான்.

வீட்டிற்கு சென்றதும் தற்கொலை செய்து கொள்வாளோ என்ற பயம் அவனுக்கு. அவன் பேச்சில் என்ன நினைத்தாளோ, “சரி” எனத் தலையாட்டினாள்.

அதுவே அவனுக்கு சற்று நிம்மதி கொடுக்க, “நீ வேற எதுவும் திங்க்ஸ் எடுத்துட்டு வந்தியா?” எனக் கேட்டான்.

“ம்ம். என் போன்…” என்று அங்கும் இங்கும் தேட, அவனும் டார்ச் அடித்து தேடிய போனை கண்டறிந்து பழக்க தோஷத்தில் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

வீடு வரை வந்து யாரும் அறியாமல் பின் வாசல் வரை விட்டவன், “யாரும் பாக்குறதுக்கு முன்னாடி சீக்கிரம் ட்ரெஸை மாத்திடு. போ!” என்று எச்சரித்து அனுப்ப, கண்ணில் உயிரற்று தான் உள்ளே சென்றாள். அவள் உள்ளே செல்லும் வரை பார்த்திருந்தவன், மீண்டும் வசுந்தராவிற்கு அழைக்க அதுவோ அப்போதும் பிசி என்றே வந்தது.

‘என்ன பண்றா இவ…?’ எனப் பல்லைக்கடித்தவன், மீண்டும் ஊரை நோக்கி செல்ல எத்தனித்தான்.
ஆனால், சிறிது தூரம் சென்றதும் தான் அவளின் போன் தன்னிடம் இருப்பதை உணர்ந்தவன், தலையில் அடித்துக்கொண்டான்.

வீட்டில் போனை கேட்டால், அவள் தேவை இல்லாமல் திணறுவாளே என நொந்தவன், மீண்டும் அவளிடமே கொடுத்து விட முடிவு செய்து அவள் வீட்டை நோக்கி செல்ல, அங்கோ, யாரும் அறியாமல் குளித்து உடையும் மாற்றி அவ்வுடையை பின்பக்கமாக எரித்தும் விட்டாள் ராதிகா.

ஆனால், உள்ளுக்குள் வேதனை கனன்றது. உடலெல்லாம் வலித்தது. நிற்க இயலாமல் கால்கள் தொய்ந்தது. நால்வரும் அவளை ‘கேங் ரேப்’ செய்தது நினைவிலாடி அருவருப்பைக் கொடுக்க, பாவைக்கோ அழுகை பொங்கியது.

பின், வீட்டிற்குள் சென்று விட்டவள் கண்டது என்னவோ அவளின் தந்தை ஊஞ்சலில் அமர்ந்திருப்பதையும், அவள் காதலித்த அறிவழகன் அவர் முன் எப்போதும் போல நிற்பதையும் தான்.

இருவரையும் பாராமல் அவள் உள்ளே செல்லப் போக, செங்கமலத்தின் குரல் அவளை நிறுத்தியது.

“எங்க ஊர் மேஞ்சுட்டு வந்த?” கேள்வியே நாரசமாக வர, அவள் அதிர்ந்தாள்.

“அ… அப்பா?” அவள் தடுமாறியபடி பார்க்க, “சொல்லுடி. எவன் கூட ஊர் மேஞ்சுட்டு வர்ற? காலைல குமரன் பய கூட உன்ன பார்த்தப்பவே உன்ன கொன்னு போட்டு இருக்கணும்.” என கர்ஜித்தார்.

எப்போதும் பேருந்து நிலையத்திலேயே அவர்களின் சந்திப்பு முடிந்து விடும். வசுந்தராவும் உடன் இருந்ததால், அவரால் அதட்ட இயலவில்லை. ஆனால், இன்றோ வசுந்தராவின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்க பேருந்தில் இருந்து பாதியிலேயே இறங்கி இருந்தவள், பரிசுப்பொருட்கள் கடையினுள் நுழைய அங்கு தான் குமரனும் இருந்தான்.

இருவரும், எதார்த்தமாக பேசியபடி இருக்க, அவர்களின் கெட்ட நேரமோ என்னவோ செங்கமலத்தின் கண்களில் அவர்களின் ஸ்நேக சிரிப்பு விகாரமாக தெரிந்தது. அப்போதே அவளை அடிக்காத குறையாக இழுத்து வந்திருந்தார்.

குமரனுடன் பேசியதால் அறிவழகனும் அவள் மீது கோபமாக இருக்க, அவனை சரி செய்வதற்காக தான் அவன் சொன்னதும் தோப்பிற்கு வர சம்மதித்தாள். ஆனால், அதுவே அவளுக்கு சோதனையாக அமைந்தது.

“அப்பா குமரன் என் ப்ரெண்டு தாங்கப்பா.” எனக் கூறும் போதே அவள் கன்னத்தில் அறை விழுந்திருந்தது.

“பிரெண்டை பார்க்க தான், இந்த நேரத்துல தோப்புக்கு போனியா?” அவர் குற்றமாய் பார்க்க, அவளோ அறிவழகனை பார்த்தாள்.

அவனோ, தன்னை பார்க்கத் தான் வந்தாள் என்று கூறாது அமைதியாக நின்றான். பின்னே, தன் பெண் தோப்பிற்கு யாரையோ பார்க்க சென்றிருக்கிறாள் என தெரிந்த அவளின் தந்தை, அது குமரன் தான் என்று தானே முடிவெடுத்து விட்டு, அறிவழகனிடம் கோபமாக கூற, அவனால் உண்மையை கூற இயலவில்லை. சொன்னால், அவன் தலை அல்லவா உருளும்!

அது அவளுக்கும் புரிந்தது. என்னவொரு சுயநலம்! என்ற எண்ணம் வராமல் இல்லை தான் அவளுக்கு. ஆனால், எதிர்த்து கூட பேச தெரியாத வாயில்லாப் பூச்சியாகிற்றே. என்ன பேசுவது என்று கூட புரியவில்லை அவளுக்கு.

‘தாரா இருந்தா எனக்காக பேசுவாளே…’ என்ற உண்மை அப்போது தான் அறைய, ‘தர்மா சொன்னப்பவே அவளை வர சொல்லி இருக்கலாம்’ எனப் பதறினாள்.

ஆனால், செங்கமலம் அவள் குமரனைப் பார்க்க தான் சென்றதாக உறுதியே செய்து அவளருகில் கோபமாக வர, அவளோ “அப்பா… சத்தியமா நான் குமரன பாக்க போகலப்பா.” எனத் தொய்ந்து அமர்ந்தவள், கண்ணீருடன் நடந்ததைக் கூறினாள்.

நாசுக்காக ஜிஷ்ணுவை பார்த்ததை மறைத்து விட்டாள். தேவையற்று அவன் மீது பழி வரும் என்று புரிந்திருந்தது அவளுக்கு.

செங்கமலமோ அதிர்ந்து பின், “இந்த நேரத்துக்கு கண்ட இடத்துல ஊர சுத்தி குடும்ப மானத்தை உலைல ஏத்திட்டியே பாவி…” என்று அவளை அறைய, இதனை எதிர்பார்த்தவள் நொந்து அறிவழகனைப் பார்க்க, அவனோ அவளை அருவருப்பாக பார்த்ததில் மொத்தமாக உடைந்தாள்.

செங்கமலத்திற்கு தன்னுடைய மானம் போய் விட்டது என்ற வருத்தமே மேலோங்கி இருக்க, அவளைப் பற்றிய எண்ணம் சிறு துளியும் இருப்பது போல தெரியவில்லை. அவருக்குள் இருந்த ஜாதி வெறி அவள் கற்பழிக்கப்பட்டதை அருவருப்பாக எண்ண வைத்தது.

அதில், சிலருக்கு போன் செய்து வர வைத்தவர், ஏதோ பேசிட, அவளின் தாயும் வீட்டில் இல்லை. போனும் கையில் இல்ல. அவளுக்கு மனதெல்லாம் படபவென அடித்தது.

செங்கமலமோ வார்த்தைக்கு வார்த்தை, “மானம் போச்சு. வெளில தலை காட்ட முடியாது” என்று தலையில் அடித்து புலம்பிட, ராதிகா துடித்து தான் போனாள்.

உடன் இருந்தவர்கள் என்ன கூறினார்களோ, அனைவரும் ஒரு முடிவுக்கு வந்து, அவள் கதற கதற கிணற்றில் போட்டு விட்டார்கள். அவர்களிடம் இருந்து விடுவிக்க போராடும் போது தான் கிணற்றில் அடிபட்டு ரத்தம் கசிந்திருந்தது அவளுக்கு.

“அப்பா… வேணாம்ப்பா. ப்ளீஸ்ப்பா. வேணாம்ப்பா.” என்ற பெற்ற பெண்ணின் கதறல் அவர் காதில் விழவே இல்லை.

“நீ நாசமாகிட்டன்னு ஊருக்குள்ள சொல்றதுக்கு, அந்த குமரன் பயலை காதலிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டன்னு சொல்றது மேல். அந்த பொடிப்பயலுகளோட கொட்டத்தை இத வச்சே அடக்கிடுவேன். இதுல அந்த தாரா வேற. அவளும் அவள் வாய்ப்பேச்சும் திமிரும். மொத்தமா அடிக்கி, அவளையும் இதே கிணத்துல போட்டு சாவடிக்கிறேன்.” என எரிச்சல் கொண்டவர்,

“என் பொண்ணா பொறந்து, என் கையாலேயே கொல்ல வைச்சுட்ட…” எனக் கோபத்தில் எரிந்து விழுந்து விட்டு, மற்றவர்களுக்கு கண் காட்ட, சிறிதும் குற்ற உணர்வு இன்றி அறிவழகனும் தான் காதலித்தப் பெண்ணை கொலை செய்திருந்தான்.

‘போனை எப்படி ராதிகிட்ட கொடுக்குறது?’ என்ற சிந்தனையுடன் ராதிகா வீட்டுப் பின்பக்கம் வந்திருந்தவனுக்கு அங்கு சிறு விளக்கும் இல்லாது இருட்டாக இருந்தது.

ஆனால், ராதிகா கதறுவதும், செங்கமலத்தின் குரலும் நன்றாக கேட்க, சில வினாடிகள் அவன் உறைந்தே விட்டான்.

அவன் கண்ணிமைக்கும் நேரம், அவளை கிணற்றுக்குள் தள்ளி இருக்க, கத்த வந்தவன் தன் கையாலேயே வாயை இறுக்கி மூடி காம்பௌண்ட் சுவற்றில் சாய்ந்து கோபத்தையும் அழுகையையும் அடக்க இயலாமல் திணறினான்.

குமரன் மீது அவர்கள் ஏற்றப்போகும் பெரும் பழி பற்றி அறிந்தவனுக்கு, இப்போது, தான் அங்கு சென்றால் கூட, தனக்கு மட்டுமல்லாது, மொத்த தன் ஜாதி மக்களுக்கும் ஆபத்து என்பது நன்றாக புரிய, கையாலாகாத நிலையில் வாய்விட்டு வரத்துடித்தக் கேவலை அடக்கி கண்ணீரில் மூழ்கினான்.

ஆத்திரத்தை அடக்க இயலாமல், சுவற்றில் நங் நங்கென்று குத்திக் கொண்டவனுக்கு, ‘டேய்ய்ய்ய்… அவ பாவம் டா…விடுங்கடா!’ என உறும வேண்டும் போல இருக்க, அப்போது அவனால் எதுவுமே செய்ய இயலவில்லை.

இங்கு, வசுந்தராவும் மருத்துவமனை சுவற்றில் நங்கு நங்கென்று கை முஷ்டியை வைத்து குத்தி சீற்றத்தையும் ஆதங்கத்தையும் காட்டி சிவந்திருந்தாள்.

சிறிதும் எண்ணவில்லை. தன் தோழியின் இறப்பில் இப்படி ஒரு முடிச்சிருக்கும் என. “நோ… நோ… என்று கை முஷ்டியை குருதி வரும் வரை குத்திக் கிழித்தாள்.

“வசு என்ன பண்ற?” குமரன் அவள் கையைப் பிடித்து தடுக்க, அவளால் ஆற்றாமையை அடக்க இயலவில்லை. கண்ணில் இருந்து திரவம் மௌனமான வெள்ளமாகப்  பாய, தன்னிடம் கூட, தன் நிலையை வெளிப்படுத்த விரும்பாத தோழியின் பிடிவாதம் அறிந்து உள்ளுக்குள் வலித்தது.

‘நான் அவளை எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துவேன்னு எப்படி நினைச்சா? நான் அந்த அளவு அவளுக்கு நல்ல ப்ரெண்டா இல்லையா? இல்ல… அவ சொன்ன மாதிரி நான் தான் ரொம்ப தப்பா இருக்கேனா…?’ என்ற கேள்விகள் எல்லாம் அவளுள் பெரும் அழுத்தத்தை உருப்பெற செய்ய, தளர்ந்து கீழே அமர்ந்தவள், மீண்டும் அவளுக்கு நேர்ந்த அநீதி எண்ணி, சுவற்றில் வலுக்கொண்ட மட்டும் குத்தினாள். மற்ற மூவராலும் கூட அவளை தடுக்க இயலாது போனது.

காயத்தில் கட்டிட்டு முடித்ததும், நெற்றியில் கை வைத்து படுத்திருந்த ஜிஷ்ணுவிற்கு கோபம் தீரவில்லை. நெஞ்சம் நெருப்பாய் தகித்தது. வசுந்தரா தன்னை நோக்கி வீசிய வார்த்தைகள் அனைத்தும் வெளிவர வழியில்லாது உள்ளுக்குள்ளேயே புகைச்சலைக் கொடுத்தது.

இருவரும் வார்த்தைகளால் சில நேரம் முட்டிக்கொள்வார்கள் தான். அது எதுவும் மனதில் பதிந்தது இல்லை. ஆனால், அரசியலுக்காக அவளையும் கூட்டிக் கொடுக்க தயங்க மாட்டேன் என்ற அவளது வாசகம் அவனை வெறி கொள்ள வைத்தது. அவ்வெறியே, அவள் மீது கட்டுக்கடுங்காத கோபத்தை உருவாக்கியது. அதுவே அவளைப் பிரிய வைத்தது. ராதிகாவின் இறப்பிற்கு, தானே காரணம் என்ற அவளின் கண்மூடித்தனமான நம்பிக்கை அவனுக்குள் இருக்கும் நேசத்தை தவிடு பொடி ஆக்கியது.

சில நிமிடங்கள் அப்படியே படுத்திருந்தவனுக்கு, அடுத்து இருக்கும் வேலைகள் நினைவில் ஆட, உடனே எழுந்து விட்டான், மருத்துவர் ஓய்வெடுக்கக் கூறியதை பொருட்படுத்தாமல்.

எழுந்து வெளியில் வந்தவன், வசுந்தரா தன்னைக் காயப்படுத்திக் கொள்வதைக் கண்டு புருவம் சுருக்க, குமரன் தான், “இவ கிட்ட ராதிகா பத்தி சொல்லிட்டேன் மாப்ள. பாரு பைத்தியம் புடிச்ச மாதிரி நடந்துக்குறா.” என்று கூறி முடிக்கும் முன்பே, சப்பென அறைந்திருந்தான் ஜிஷ்ணு.

“அறிவு கெட்டு போச்சா உனக்கு?” என சீறியவன், வசுந்தராவை சமன்படுத்த எத்தனித்த பரத்தையும் அர்ச்சனாவையும் கண்களாலேயே விலக்கி நிறுத்தி, அவள் கையை பிடித்தான்.

“விடுடா!” என ஆத்திரமும் அழுகையும் பொங்க அவனைத் தள்ளி விட்டவளை, “ஏய்… வக்கீலு! உன் அப்பனோட சேர்ந்து நீயும் சாவ போறியா?” எனக் கடுப்புடன் ஏறிட,

“பேசாம போய்டு!” அவனைப்பாராமல் பதிலளித்தவளுக்கு, மீண்டும் மீண்டும் ராதிகா தன்னை பற்றி கூறியதும், அவள் இறந்ததும் சுழற்சி முறையில் நினைவில் தோன்றி அலைக்கழித்தது.

கை முஷ்டியில் சதை பிய்ந்து உதிரம் கசியத் தொடங்க, அவள் அடித்திருந்த வேகத்தில் மணிக்கட்டு எலும்பு முறிந்திருந்தது. அவ்வலியை சிறிதும் கண்ணில் காட்டாமல் அடக்கி இருந்தவள், அவனிடம் இருந்து கையை உதறி மீண்டும் அடிக்க போக, அதற்கு முன் ஜிஷ்ணு அவளை அடித்திருந்தான்.

“சாவடிச்சுடுவேன்…” என கண்கள் கோபத்திலும் பதற்றத்திலும் சிவக்க கர்ஜித்தவன், பரத் அவன் முகத்தையே திருதிருவென விழிப்பதை கண்டு, “போய் டாக்டரை கூப்டு. என் மூஞ்சில ஐட்டம் டான்சா ஓடுது.” என்று கடித்து குதறி விடுவன் போல வல்லென விழுந்தான்.

அடுத்த நொடி தலை தெறிக்க ஓடிய பரத், மருத்துவரை அழைத்து வர, அவரோ தன்னை நொந்து அவள் கையை பிடித்து பார்த்தார்.

“பிராக்சர் ஆகியிருக்கு சார். உடனே கட்டு போடணும்.” எனக் கூறியதில், “உங்கிட்ட சப்டைட்டில் கேட்டாங்களா? அதான் பார்த்தாலே தெரியுதே உடைஞ்சுருக்குன்னு. ட்ரீட்மெண்ட் பண்ணுயா.” கடுப்புடன் அவரை கத்தி விட, “ரூம்க்கு கூட்டிட்டு வாங்க சார்…” என்றார் பாவமாக.

அவசரமாக அவளை அறைக்குள்ளே அழைத்துச் சென்றதும், உடைந்த மணிக்கட்டில் கட்டிட, வலி உயிர் போனது அவளுக்கு. ஆனால் பல்லைக்கடித்து அடக்கியவள், அதனை ஏற்றுக்கொண்டு அப்படியே அமர்ந்திருக்க, அவளை கோபத்துடன் பார்த்த ஜிஷ்ணு, அவளின் கன்னத்தில் பட்டென அடித்து, “ஏய் கத்துடி!” என்றான் காட்டமாக.

அவளோ, கண்ணீரையும் இழுத்துப் பிடித்து, வெகு இறுக்கத்துடன் அமர்ந்திருக்க, மீண்டும் மறுகன்னத்தில் அடிப்பது போல தட்டியவன், “கத்துடி” எனக் கர்ஜனையுடன் முறைக்க, அவளுக்கோ எழுந்த வலியை பொறுக்க இயலாமல் கண்ணை இருட்டியது.

இருந்தும், மனமெங்கும் ராதிகா மட்டுமே இருந்தாள். அவள் பேசி சென்ற வார்த்தைகளும், அவளின் வலிகளும் மட்டுமே மீதமிருக்க, குற்ற உணர்வும், கோபமும் அவளை ஆட்டிப்படைக்க, வீம்பாக அமர்ந்திருந்தாள்.

அவனுக்கோ ஆத்திரத்தை மீறி தவிப்பு வெளிப்பட, “கத்திருடி!” என சுதி இறங்கக் கூறியவன், அவள் முகத்தை தன் கழுத்துக்குள் புதைத்து, அறைந்த கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டு, “கத்து பேப்!” என்றான் அவனுக்கே உரித்தான உருகும் குரலில்.

அவனது அணைப்பாலா, முத்தத்தாலா, அல்லது பல வருடங்கள் கழித்து கேட்ட அவ்வழைப்பாலா எதுவென்று பிரித்தறிய இயலாது, மொத்தமாக பலம் இழந்து போனவள், அப்போது தான் வலியை ஏற்றுக்கொள்ள இயலாமல் கத்தி அழத் தொடங்கினாள்.

அவள் வலியில் கத்தும் போதெல்லாம், அவளின் முதுகை தடவிக்கொடுத்து, நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டுக்கொண்டே இருந்த ஜிஷ்ணு, “ஜாக்கி சான் மாதிரி சுவத்தை உடைக்கும் போது தெரியலையாடி. புத்தி கெட்டவளே.” என அதட்டினாலும், “கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ பேப்” என்று பரிதவிக்க, இறுதியில் அவள் மயங்கியே இருந்தாள்.

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
111
+1
2
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment