Loading

சீமை 22

சிறியவன் என்று தவறாக நினைத்த சிவகுமார் மீண்டும் சிலம்பனின் மீது அழுத்தமாக கை வைத்து தள்ள, “சார் மருவாதியா என் மேல இருக்க கைய எடுத்துடுங்க. இல்லினா நீங்க ஆரு என்னானு கூட பாக்க மாட்ட.” என்றவன் வார்த்தையில் கோபம் முட்டிக் கொண்டு நின்றது அவருக்கு.

“தம்மாதுண்டு பொடிசு நீ என்னை மிரட்டி பாக்குற. அப்டி என்னாடா பண்ணிடுவ என்னை? பண்ணுடா, என்னா தான் பண்ணுறன்னு பாக்குற.” என்றவர் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினார்.

தள்ளிய வேகத்தில் சிலம்பன் இடது புறமாக அசைந்து நிற்க, “என்னாமோ பண்ணுவன்னு சொன்னியே பண்ணுடா.” என்று மீண்டும் தள்ளி விட, வலது புறமாக நகர்ந்து நின்றான்.

அண்ணன் மீது கை வைக்கும் சிவகுமாரின் கையை தடுத்தான் மொழியன். தம்பியின் செயலை கண்டுகொள்ளாமல் சிலம்பன் முறைக்கும் வேளையில் இருக்க, தன் கையைப் பிடித்த சின்னவன் மீது  சீற்றம் பொங்கியது.

“எடேய்! நீ ஒரு ஆளுனு என் மேல கைய வெக்குறியா. என்னை தொட்ட இந்த கைய வெட்டி இதே எடத்துல வீசாம அடுத்த சோலி இல்லிடா.” என்றவர் பேச்சை முடிக்கும் முன்னர் மொழியின் மீது கை வைத்து விட்டார்.

அதுவரை முறைத்துக் கொண்டிருந்த சிலம்பன் சிவகுமாரின் சட்டை காலரை பிடித்து பின்னுக்கு தள்ளி விட்டான். சிலம்பனின் வேகத்திற்கு பின்னால் நகர்ந்தவர் அவருக்காக போடப்பட்டிருந்த டேபிளில் விழ, அங்கிருந்த மூடி இல்லாத பேனா கையில் குத்தியது.

சுருக்கென்ற வலியில் எழுந்து நின்று கையை தேய்த்தவர் மிகுந்த ஆத்திரத்தோடு இருவரையும் தாக்க வந்தார். சிலம்பன் ஏற்கனவே அடிக்கும் தோரணையோடு நின்றிருப்பதால் எளிதாக அவரை தடுத்தான்.

சிறியவர்கள் இருவரும் தன்னை அதுவும் சொசைட்டியில் வைத்து அடிப்பதை உணர்ந்து வெறுப்பிற்கு தன்னை ஆட்படுத்திக் கொண்ட சிவகுமார் உள்ளுக்குள் எழுந்த கோபத்தை சிறிதும் குறையாமல் காட்டினார் சகோதரர்களிடம்.

அவர் ஆத்திரத்தை கண்டு கொண்ட சிலம்பன் தம்பியை தன் பின் வைத்துக் கொண்டு அவனும் நகர்ந்து விட, ஓடி வந்த வேகத்திற்கு கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் மூக்கு தரையோடு ஒட்டி பலத்த சேதத்தை ஏற்படுத்திக் கொள்ள, இன்னும் அவரது ஆத்திரத்தின் அளவு அதிகரித்தது.

“இன்னியோட நீங்க ரெண்டு பேரும் மண்ணுக்குள்ள போதஞ்சிங்கடா.” நாக்கை கடித்துக் கொண்டு மிரட்டல் விடுத்தவர் வேகமாக இருவரையும் தாக்குவதற்காக கீழே இருந்த இரும்பு ஸ்கேலை கையில் எடுத்தார்.

ஆயுதம் இன்றி தாக்க வந்த போது சாதாரணமாக இருந்த சகோதரர்கள் கையில் ஆயுதம் வந்ததும் சுதாரிக்க முயன்றார்கள். அதற்கு நேரம் கொடுக்காத சிவகுமார் பாய்ந்து சிலம்பனின் சட்டையை பிடித்தார்.

பெரியவன் அவர் கையை தடுத்துக் கொண்டிருக்க, குத்த வந்த இரும்பு ஸ்கேலை பிடித்துக் கொண்டிருந்தான் சின்னவன். மூவருக்கும் நடக்கும் போரில் புதிதாக வந்தவர் ஒதுங்கி நின்று கொண்டார்.

மொழியனை தள்ளிவிட்ட சிவகுமார், “மொறைக்கவாடா செய்யுற தாட தவுட எல்லாம் பிளக்க போவுது பாரு இப்போ.” என ஓங்கி முகத்தில் குத்த வந்தார்.

குத்த வந்தவர் கை அப்படியே நின்று கொண்டிருக்க, ஸ்கேல் சிலம்பனின் முகத்தருகே நின்று கொண்டிருந்தது. மொழியனும் சிலம்பனும் உறைந்து பின்னால் திரும்பி பார்த்தார்கள்.

சிவகுமாரின் கையை உயர்த்தி தடுத்தவாறு முறைத்துக் கொண்டிருந்தான் செந்தமிழன். இருவரும் திகைத்து நிற்க, தடுத்த இவன் யார் என்ற எண்ணத்தில் அவர் பார்க்க, “ஆரு தம்பிங்க மேல கைய வெக்குறீங்க?” என கீழே தள்ளினான்.

“எடேய்! என்னாடா ஒவ்வொருத்தனா வந்து வம்பு வழக்கப் பாக்குறீங்களா. நீயி ஆருடா இவுனுங்களுக்கு வக்காலத்து வாங்க.”

“இவங்க ரெண்டு பேரும் என் தம்பிங்க. என்னா தப்பு பண்ணாய்ங்க இவ்ளோ ஆத்திரமா அடிக்க வரீங்க.”

“உன் தம்பிகளா…இவுனுங்க ரெண்டு பேரயும் ஒழுங்க மருவாதையா  கூட்டிட்டு இங்க இருந்து ஓடிடு. இல்லினா வீணா சொசைட்டிகுள்ள வந்து பிரச்சனை பண்ணறா சொல்லி உன் குடும்பத்தையே செதச்சிடுவேன்.”

என்ன தவறு என்று புரியாவிட்டாலும் சிவகுமாரின் வார்த்தை தவறாக பட்டதால், “சார், அப்டி என்னா என் தம்பிங்க தப்பு பண்ணிட்டாய்ங்க இந்த மாதிரி பேசுற அளவுக்கு. அப்டியே பண்ணாலும் அடிக்க வருவீங்களா? நீங்க அடிக்கவா என் தம்பிங்களை வளர்த்து விட்டு இருக்கோம். என்னானு காரணம் கேட்டா குடும்பத்தையே செதச்சிடுவன்னு சொல்றீங்க. அம்புட்டு பெரிய ஆளா நீங்க. எங்க என் குடும்பத்து மேல கைய வெச்சு பாருங்க” என்றான் மிக மெல்லிய அழுத்தமான பேச்சில்.

“உங்களுக்கு நேரம் சரியில்லடா…” என எழுந்து நின்றவர்,

“உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. நீங்க மூணு பேரும் இனிமே இந்த சொசைட்டி பக்கம் வரக்கூடாது, வெளியே போங்கடா.” என தமிழ் மீது கை வைக்க வந்தார்.

ஆகாத குடும்பத்தின் நபர் என்றாலும் ஏனோ இருவரும் ஒரு சேர இரு பக்கமும் தமிழை பாதுகாக்க நின்றார்கள். அவனோ, தம்பிமார்கள் இருவரையும் காப்பாற்ற முன் நின்றான். மூவர் சுதாரித்துக் கொண்டதில் கடைசியாக சிவகுமார் தான் மீண்டும் தோல்வியை தழுவ வேண்டியதாக ஆனது.

“இங்க என்னா பிரச்சனை நடந்துச்சுனு எனக்கு தெரியாது. ஆனா, நீங்க என் தம்பிங்க மேல கை வெச்சது பெரிய தப்பு. அப்டி செஞ்சதுக்காக மன்னிப்பு கேளுங்க. இல்லினா இந்த வேலைய வுட்டு உங்களை தூக்க வேண்டியதா இருக்கும்.”

“நீ ஆருடா என்னை இந்த வேலைய வுட்டு தூக்க? இன்னியோட உங்க குடும்பத்து பொருள எங்க கொண்டு போனாலும் விக்க முடியாத மாதிரி நா பண்ற பாருங்கடா.”

“என்னா சார்… நானும் பாத்துட்டு இருக்க அப்போல இருந்து குடும்பம் குடும்பம்னு மிரட்டிட்டு இருக்கீங்க. உங்களுக்கெல்லாம் குடும்பம் இருக்காதா? தப்பு செஞ்ச குற்ற உணர்ச்சி இல்லாம இப்டி பேசுறீங்க.” என்ற சிலம்பனின் வார்த்தையில்,

“என்னா சிலம்பா இங்க நடந்துச்சு?” விசாரித்தான் செந்தமிழன்.

“மதினி பாலை காலையில அளந்து தான் குடுத்து விட்டாய்ங்க. இங்க இவரு என்னாடானா மிஷினுல வெச்ச செத்த நேரத்துல எடுத்துட்டு கம்மியான பாலுக்கு பில்லு குடுக்குறாரு. என்னானு கேட்டதுக்கு இந்த மிஷினு என்னா சொல்லுதோ அதுதா கணக்குனு சட்டம் பேசுறாரு.”

செந்தமிழனுக்கு இருக்கும் அடர்த்தியான புருவங்கள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவிற்கு நெருக்கமாக நின்றது யோசனையில். நெற்றியில் மூன்று கோடுகள் உருவாகி அதற்கான தீர்வை எட்டுவதற்குள்,

“எங்க வூட்டுல கொண்டாந்ததை தான் தப்பா காட்டுதுன்னு பாத்தா இந்த அண்ணனோடதும் அதே மாதிரி நடக்குது. எனக்கு என்னாமோ மிஷினு தப்பா சொல்ற மாதிரி தெரியல. இந்த ஆளுதா ஏதோ பண்றாருனு சந்தேகமா இருக்கு.” இன்னும் யோசனைக்கு ஆளாக்கினான் மொழியன்.

தன்னை மரியாதையாக அழைத்துக் கொண்டிருந்தவன் அழைப்பு மாறியதில் சூடான பார்வை சிவகுமாரிடம். அதைக் கண்டு கொண்ட மொழியன், “நீங்க பாக்குற வேலைக்கான மருவாதி அது.” என்றான் தீர்க்கமாக.

உடனே சிவகுமாரின் கைகள் அவனை அடிக்க உயர, அந்த கையை இறுக்கமாக பிடித்தான் செந்தமிழன். விடுவிக்க அவர் முயற்சிக்க, இடம் கொடுக்காமல் அழுத்தத்தை கூட்டினான். மணிக்கட்டு நரம்புகள் புடைத்து அவன் அழுத்தத்தை வெளிக்காட்டியது எதிரில் இருந்தவருக்கு.

“வீணா பாம்பு வலைக்குள்ள சிக்கிக்காதீங்கடா. இப்ப கூட ஒன்னு கெட்டுப் போவல வந்த வழியே மூணு பேரு ஓடிடுங்க. இல்லினா விபரீதம் ஆகிப் போவும் உங்க வாழ்க்கைல.”

“என்னா சார் பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு. உங்களுக்கு மட்டும் தான் பேச தெரியுனு பேசுறீங்களா.” என்ற சிலம்பனை அடக்கிய பெரியவன்,

“இங்க நடந்த பிரச்சனைக்கு இவ்ளோ வார்த்தைகள் அவசியம் இல்லாதது சார். பாலைக் கறந்து கொண்டாந்த எங்களுக்கு அதோட அளவு தெரியாதா. அது எப்டி மிஷினு தப்பா காட்டும். அப்டியே காட்டுனாலும் ரெண்டு பேருக்குமா காட்டும்? பொருளுக்கு உரிமையானவங்க சந்தேகத்துல கேக்குறாய்ங்க. உரிய பதில சொல்லி விளக்க வேண்டியது இங்க வேல பாக்குறவங்களோட கடமை. அத வுட்டுட்டு அடிக்க வரீங்க, வாழ்க்கை கெட்டு போவுனு மிரட்டுறீங்க. இது எல்லாத்தியும் கணக்கு போட்டு பாத்தா தப்பு உங்க மேல நெறைய இருக்குனு நல்லா தெரியுது.” பிடித்த கையை விட்டவன் கோபம் இல்லாது தெளிவாக பேசி முடித்தான்.

சிவகுமார் அவர்களை விரட்டுவதை மட்டுமே ஒரே குறிக்கோளாக செய்து கொண்டிருக்க, “அண்ணே உங்க பாலை குடுங்க.” என்றவன் எடை இயந்திரத்தில் வைத்து அளந்து பார்த்தான்.

எடுத்து வைத்த ஏழு லிட்டர் பாலுக்கு பதில் நான்கு லிட்டர் அளவு பால் மட்டுமே காட்டியது. “அண்ணே எத்தினி லிட்டர் எடுத்துட்டு வந்தீங்க?” கேட்டிட, சற்று முன்னர் சிலம்பனிடம் சொல்லிய அதே பதிலையே சொன்னார்.

“இதுக்கு என்னா சார் பதில் சொல்ல போறீங்க? அவரு பாத்தர அளவுல எடுத்துட்டு வந்தாலும் அதிகபட்சமா ஒரு லிட்டர் கூட கொறைய இருக்குமே தவிர மூணு லிட்டர் ரொம்ப அதிகம். அப்போனா இங்க வரவங்க கிட்ட இதே மாதிரி தான் அளவ கொறைச்சு குடுத்து பாலை திருடிட்டு இருக்கீங்க.” என்றதும் செந்தமிழின் சட்டையை பிடித்தார் சிவகுமார்.

சட்டை மீது கை வைத்தவரின் கையை அழுத்தமாக பற்றியவன், “உங்க முகம் சொல்லுது நீங்க பண்ண திருட்டுத்தனத்தை. இத நா சும்மா வுட மாட்ட. சொசைட்டி முன்னாடி நீங்க செஞ்ச தப்ப தெரியப்படுத்தி இத்தினி நாள் கொள்ள அடிச்ச எங்க உழைப்புக்கான மதிப்ப வாங்காம ஓயமாட்ட.” என்றான்.

“ஆமாண்டா இந்த வேலைய பாக்குறது நானே தா.
உன்னால ஆனதை பாத்துக்கோடா.”

“கேவலம் பாலை திருடுறியே வெக்கமா இல்லியா உனக்கு.” கோபமாக ஒலித்தது சிலம்பனின் குரல்.

“மருவாதையா பேசலனா இங்க இருந்து எவனும் உயிரோட வூடு போய் சேர மாட்டீங்க.”

“தன்னால முடிஞ்ச அளவுக்கு மாட்ட வாங்கி அதுக்கு செலவு பண்ணி தீவனம் போட்டு, ராப்பகலா பெத்த புள்ளைய பாத்துக்குற மாதிரி பாத்து, அது பதிலுக்கு ரத்தத்தை சிந்தி குடுக்குற பாலை கொண்டாந்து குடுக்குறோம். அத திருடி தின்னுற உனக்கு என்னாடா மருவாதி.”

செந்தமிழன் சிலம்பன் இருவரை விட மொழியின் பேச்சு தான் அவருக்குப் பெரும் சீற்றத்தை கொடுத்தது. வயதில் தன்னைவிட ஏறக்குறைய இருபது வயது வித்தியாசம் இருக்கும் பொடியன் சரி சமமாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்ணில் குரோதம் மின்ன,

“இன்னில இருந்து உங்களுக்கு எழவு காலம் ஆரம்பிச்சுடுச்சு.” வார்த்தை அம்பை மூவரை நோக்கி எய்தார்.

சீமை 23

கண்ணில் கக்கும் குரோதத்தை உன்னிப்பாக கவனித்தான் செந்தமிழன். இவருக்கு பின்னால் இன்னும் பல தவறுகள் இருப்பதை உடனே கண்டு கொண்டவன்,

“தப்பு செஞ்சிட்டு நீங்களே இவ்ளோ தைரியமா பேசும்போது எங்களுக்கு அப்டி என்னா எழவு காலம் வந்து தூக்கிட்டு போவுதுன்னு பாத்துடுவோம் சார்.” நேருக்கு நேராக எதையும் எதிர்கொள்ள தயார் என்பதை முடிவாக சொல்லியவன் தம்பிமார்களை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

“நீங்க ரெண்டு பேரும் இங்க இருங்க.” என்றவன் ஒதுங்கி நின்று யாருடனோ பேசினான் கைபேசியில்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தும் அந்த சிவகுமாரின் நடவடிக்கையை கண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காத்திருக்க,

“நீங்க ரெண்டு பேரும் வூட்டுக்கு போங்க. பஞ்சாயத்து தலைவர் கிட்ட பேசி இருக்க. அவரு உடனே கிளம்பி வரதா சொல்லி இருக்காரு.” என்றான்.

“வரட்டும், அதுக்கு எதுக்கு எங்களை போவ சொல்றீங்க.”

“எனக்கு என்னாமோ உள்ள நடக்குறது சின்ன தப்பா தெரியல. நீங்க ரெண்டு பேரும் படிக்குற பசங்க எந்த வம்புளையும் மாட்டிக்க கூடாதுனு.”

“அதுலா எந்த வம்பும் வராது. அப்டியே வந்தாலும் பாத்துடலாம். இத கண்டுபிடிச்சதே நாங்கதா. தெரிஞ்சே நடக்குற தப்ப கண்டுக்காம வுட்டுட்டு போனா தூக்கம் வராது.” எண்ணத்தை சொல்லிவிட்டான் சிலம்பன்.

“சொன்னா கேளு படிக்குற பிள்ளைங்க சண்ட சச்சரவுனு தலையிட்டு கெடந்தா வாழ்க்கை வீணா போயிடும்.”

“அதுலாம் ஒன்னு போவாது. நாங்க கண்டுபிடிச்சத நீங்க கண்டுபிடிச்சதா சொல்லி பெரிய ஆளு ஆவலாம்னு பாக்குறீங்களா. அதுலா இந்த மச்சக்காளையன் தம்பிங்க கிட்ட நடக்காது.” என்ற மொழியனை முறைத்தான் பெரியவன்.

“இதுல பெரிய ஆளு ஆவ என்னாடா இருக்கு. இன்னமும் கொஞ்சம் கூட அறிவு இல்லாம இருக்க உங்களை வெச்சு எப்டித்தா சாமந்தி மதினி மேய்க்கிறாய்ங்களோ தெரியல.” என்ற செந்தமிழனை இருவரும் ஒரு சேர முறைத்தார்கள்.

தன் உடன்பிறவா சகோதரர்கள் முறைக்கும் தோரணையை கண்டு இதழ்கள் நோகாமல் புன்னகைத்தவன் பேச்சு கொடுக்கும் நேரம் கைப்பேசி ஒழித்தது. ஊர் தலைவரின் பெயரை பார்த்ததும் ஒதுங்கி நின்றவன் பேசிக் கொண்டிருக்க, உள்ளே இருந்து பேச்சு சத்தம் கேட்டது.

அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் இளையவர்கள் இருவரும் உள்ளே செல்ல, “இனிமே நீங்க கறந்த பாலை இங்க கொண்டாராதீங்க. எங்களை நம்பாம அவுனுங்க கூட இவ்ளோ நேரம் கூட்டு சேர்ந்து அசிங்கப்படுத்திட்டு இப்ப எடுத்துக்க சொல்லி நிக்கிறீங்க. நீங்களும் அவுனுங்களை மாதிரி இனி இந்த தெக்கத்தி பக்கம் வரக்கூடாது… போங்க வெளியே.”
சண்டை நடக்கும் பொழுது பால் கொண்டு வந்த அந்த நபரிடம் கத்திக் கொண்டிருந்தார் சிவகுமார்.

“சார், ரொம்ப வருசமா இங்க கொண்டாந்துட்டு வெளிய எங்கயும் உடனே விக்க முடியாது. கறந்த பாலு வீணா போயிடும். அதுக்குத்தா உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு கெடக்க.” கைகூப்பி மன்றாடினார் அந்த நபர்.

“அதுலாம் அவுனுங்க கூட சேர்ந்து பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும். இனி என்னா ஆனாலும் உன்னோட பாலை எடுத்துக்க முடியாது. என்னா பண்ண முடியுமோ பண்ணிக்க போயா.” அந்த நபரை தள்ளிவிட்டார் சிவகுமார்.

விழுவதற்கு முன்னர் சிலம்பன் அவரைத் தாங்கிக் கொள்ள, மொழியன் சண்டை பிடித்தான் தள்ளி விட்டவர் சட்டையை பிடித்து. இருக்கும் கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டி சின்னவனிடம் காட்டியவர்,

“இன்னு போவலையாடா நீங்க?” என பலமாக கன்னத்திற்கு கண்ணுக்கும் இடையே உள்ள இடத்தில் குத்தினார்.

நிலைகுலைந்து போன சின்னவன், “எம்மா” என்ற கூக்குரலோடு முகத்தை மூடிக்கொண்டு தரையில் விழுந்தான்.

திடீரென்று கேட்ட தம்பியின் குரலில் திகைத்த சிலம்பன் என்னவென்று பார்ப்பதற்குள் மீண்டும் ஒரு அடி கொடுத்தார் சிவகுமார். தம்பியை காக்க அண்ணங்காரன் அவரின் சட்டையை பிடித்தான். அவனையும் அடிக்க முயன்றவருக்கு இடம் கொடுக்காமல் பின்னி எடுத்தான் சிலம்பன்.

தம்பிமார்களின் சத்தத்தை உணர்ந்த செந்தமிழன் கைபேசியை அணைத்துவிட்டு வேகமாக உள்ளே சென்றான்.

எதிரில் இருந்த சிவகுமாரின் கழுத்தை பிடித்தபடி பின்னால் நகர்த்திக் கொண்டிருந்தான் சிலம்பன். தம்பியின் செயலில் திகைத்த செந்தமிழன் தடுக்க ஓடினான்.

“என் தம்பி மேல கைய வெச்ச இவன சும்மா வுட மாட்ட.” என முகத்தில் குத்த கையை உயர்த்தினான்.

அதற்குள் செந்தமிழன் தடுத்து விட, இடைப்பட்ட நேரத்தில் சுதாரித்து விலகி நின்ற சிவகுமார் சிலம்பனின் கன்னத்தில் பலமாக அறைந்தார். தன் முன்னால் தம்பி அடி வாங்கியதை ஏற்றுக் கொள்ள முடியாத செந்தமிழன் எதில் இருந்தவரை விளாசி விட்டான் அதேபோல் அடியால்.

கன்னத்தில் கை வைத்த சிவகுமார் அதிர்வோடு செந்தமிழனை நோக்க, அப்பொழுதுதான் கோபத்தில் கை நீட்டியதை உணர்ந்தான் அவன். அதற்கு மன்னிப்பு கேட்க வருவதற்குள் அவனையும் அடிக்க பாய்ந்தார். தன்னை தற்காத்துக் கொள்ள அடிக்க வரும் அவரின் கையை தடுத்து விட, அவரோ பலமில்லாமல் கீழே சரிந்தார்.

அந்த நேரம் அங்கு வேலை பார்க்கும் வேறொரு நபர் வர, “எடேய்! யாருடா நீங்க? சொசைட்டிகுள்ள வந்து அடிதடி பண்ணிக்கிட்டு கெடக்குறது.” என செந்தமிழனின் சட்டையை பிடித்தார்.

“இவரு ஒன்னு தப்பு செய்யல தப்பு செஞ்சது அவன் தான்.” சிலம்பனின் குரல் உரக்க ஒலித்தது.

“ஆரா வேணா இருக்கட்டும்டா ஒரு சொசைட்டியில வேல பாக்குற ஆளு மேல எப்டி நீங்க கை வைப்பீங்க?”

“நல்லா கேளுங்க சார். பாலை தரம் இல்லாம எடுத்துட்டு வந்துட்டு நா தப்பு பண்ணிட்டதா மூணு பேரும் சேர்ந்து அடிக்கிறாய்ங்க.” தன் பக்கம் ஆள் வந்ததும் சிவகுமார் அப்படியே நடந்ததை மாற்றி பேசினார்.

“என்னா சார் நீங்க இவுனுங்க வந்து பிரச்சனை பண்ணும் போதே ஒரு போன் அடிச்சிருந்தா நா வந்து விளாசி இருப்பனே.”

“அதுக்கு எங்க சார் நேரம் குடுத்தாய்ங்க. வந்ததுல இருந்து என்னை எங்கயும் நகர வுடாம அடிச்சுக்கிட்டே இருக்கானுவ. மூணு பேரும் என்னை அடிச்சே கொன்னு இருப்பானுங்க ஐயப்பன் சார் நீங்க மட்டும் வராம இருந்தா.”

“எடேய்…. ஏண்டா இப்டி பொய் பேசுற.” என்ற சிலம்பனை,

“என் எதிர்லயே இப்டி மருவாதி இல்லாம பேசுறியே அவரு தனியா இருக்கும் போது எப்டி பேசி இருப்ப. அவரு‌ இங்க சொசைட்டில வேல பாக்குற ஆளு தெரியுமா.” என அதட்டினார்.

“அவரு இங்க வேல பாக்குற ஆளுனு எங்களுக்கும் தெரியும் சார். ஆனா, அவரு சொல்ற எதுவும் உண்மை கெடையாது. நாங்க கொண்டாந்த  பாலை சரியா எடை போடாம ஏதோ திருட்டு வேல பண்ணுறாரு. எங்களுக்கு நடந்தது கூட பரவால அதோ நிக்குறாரே அவருக்கும் அதே தான் நடந்துச்சு.” என பயத்தில் ஓரமாக நிற்கும் நபரை கை காட்டிய செந்தமிழன் மேலும் தொடர்ந்தான்,

“என்னானு நியாயம் கேட்டதுக்கு அவருதான் அது பண்ணிடுவ இது பண்ணிடுவன்னு எங்க மூணு பேத்தயும் மிரட்டினாரு சார். அது சம்பந்தமா ஊர் தலைவர் கிட்ட பேசிட்டு இருக்கும்போது என் தம்பிய அடிச்சிட்டாரு. அதுல நடந்த சண்டைல தான் அவரு மேல கை வெக்க வேண்டியதா போச்சு.” என்று.

“அவுனுங்க சொல்றத நம்பாதீங்க சார். நீங்களே கண்ணால பாத்தீங்க தான என்னை மூணு பேரும் கொலை பண்ண பாத்ததை. இங்க இந்த தொழிலை நம்ம எவ்ளோ புனிதமா பண்ணிட்டு இருக்கோம். அத கொச்சைப்படுத்திட்டானுங்க சார்.” இல்லாததையும் பொல்லாததையும் ஐப்பனிடம் திரித்தார்.

“எடேய்! திரும்பத் திரும்ப பொய் சொல்லிட்டு இருந்தினா உண்மையாவே கொல பண்ணிடுவ” என்ற சிலம்பனின் மீது கை வைத்தார் புதிதாக உள்ளே வந்த சொசைட்டி அலுவலர் ஐயப்பன்.

“எம்முன்னாடியே அவர கொல பண்ணிடுவன்னு தைரியமா சவால் வுடுற.‌ அவ்ளோ பெரிய ஆளாடா நீயி.” என்றிட,

“சார், அவன் ஏதோ கோவத்துல பேசிட்டா மன்னிச்சு வுட்டுடுங்க.” என அவர் கை மீது கை வைத்தான் செந்தமிழன்.

கை வைத்தவனை கடுமையாக முறைத்தார் ஐயப்பன். அதை உணர்ந்தவன் வைத்த கையை எடுப்பதற்கு முன்னர்,

“சொசைட்டி அதிகாரி மேல கை வெக்குற அளவுக்கு அம்புட்டு பெரிய வீரனடா நீயி. இன்னியோட என் மேல கை வெச்ச இந்த கை இருக்காதுடா.” என செந்தமிழனை அவர் அடிக்க, பதிலுக்கு சிலம்பன் அவரை அடிக்க என்று பரபரப்பானது அந்த இடம்.

அடிப்பட்டு கிடந்த மொழியனும் அண்ணனுக்கு ஈடாக சண்டைக்கு பாய, இதுதான் சமயம் என்று சிவகுமார் இருக்கும் ஆட்டத்தை இன்னும் சூடு பிடிக்க வைத்தார் ஐயப்பனை உசுப்பி விட்டு. அங்கு நின்றிருந்த நபர் பிரச்சனை எதற்கு என்று ஓடிவிட, தம்பிமார்கள் இருவரையும் தடுத்துக் கொண்டிருந்தான் செந்தமிழன்.

இருவரும் கேட்பதாக இல்லை. அங்கு வேலை பார்க்கும் நபர்கள் இம்மூவரையும் விடுவதாக இல்லை. செந்தமிழன் திருப்பி அடிக்காததால் சில அடிகள் அதிகமாகவே விழுந்தது அவனுக்கு. பார்த்த இளையவர்கள் இருவருக்கும் எப்படி தோன்றியதோ அதில் தான் இன்னும் வேகம் கூடி தாக்குதல் நடத்தினார்கள்.

இப்படியே சென்றால் இன்னும் நிலைமை விபரீதமாகும் என்று உணர்ந்த செந்தமிழன், “எடேய் சொன்னா கேளுங்கடா.” என இழுத்து இருவரையும் சுவற்றில் தள்ளினான்.

“என்னாடா நடிக்கிறியா.” அமைதி வரக்கூடாது என்பதற்காக சிவகுமார் பேச்சை ஆரம்பிக்க, மீண்டும் ஆட்டம் அரங்கேறியது.

நடந்தது தெரியாமல் சிவகுமாரோடு கூட்டணி வைத்த சொசைட்டி அதிகாரி ஐயப்பன் அங்கிருக்கும் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஐயப்பன் கொஞ்சம் செல்வாக்கு பெற்ற நபர் என்பதால் காவல்துறையும் விரைந்து வந்தது.

அதிகாரம் நியாயத்தை கேட்க விடாமல் தடுத்து விட்டது. சொசைட்டி அதிகாரிகள் சொல்லியதை மட்டுமே வேதவாக்காக எடுத்துக் கொண்ட அதிகாரிகள் என்ன ஏதென்று முழுதாக விசாரிக்காமல்  குற்றவாளியாக கருதி காவல் நிலையம் அழைத்தனர் செந்தமிழனை.

காவல் நிலையத்திற்கு அழைத்ததும் தம்பிமார்கள் இருவரும் பதறி காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்ய, “இதே மாதிரி தாங்க சார் எங்க கிட்டயும் வம்பு பண்ணானுங்க. அவனை மட்டும் இல்ல இவுனுங்க ரெண்டு பேத்தயும் சேர்த்து கூட்டிட்டு போங்க சார்.” என்றார் குரோதத்தை தீர்த்துக் கொள்ளும் நோக்கோடு சிவகுமார்.

“யோவ்! இது எல்லாத்துக்கும் காரணமே நீதான். அத இதனு திருடி கடைசில பாலை கூட திருடுற அளவுக்கு வந்துட்டீங்களே த்தூ…” கோபத்தில் சிலம்பன் ஒரு வார்த்தையை விட, அது தான் அவனுக்கு பெரிய பிரச்சனையானது.

கன்னத்தில் ஓங்கி அறைந்த காவல்துறையினர் அவனை விசாரிக்க அழைத்துச் செல்ல, மொழியன் மட்டும் எதற்கு என்று அவனையும் கூடவே காவல் வாகனத்தில் ஏற்றி சென்றார்கள்.

சீமை 24

“ஒளிரு எம்புட்டு நேரம் கத்திக்கிட்டு கெடக்க அங்க என்னா பண்ணிக்கிட்டு இருக்க?” அரை மணி நேரமாக மனைவியை தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கும் மதுரவீரன் சலிப்போடு நடுக்கூடத்திற்கு வந்து குரல் கொடுத்தான்.

அவனுக்கு எந்த பதிலும் வரவில்லை. அடுப்பங்கரையை எட்டி பார்த்தவன் அங்கு இல்லாத மனைவியை தேடினான். பின்பக்கம் சென்றவன் யோசனையோடு நான்கு புறமும் பார்வையை சுழல விட, தூரத்தில் தெரிந்தாள் ஒளிர்பிறை.

வைகோல்களை குவித்து வைத்திருக்கும் இடம் அது. தேவையைத் தவிர இது நாள் வரை அங்கு சென்றதில்லை ஒளிர்பிறை. வளர்க்கும் கால்நடைகளுக்கு தேவைப்பட்டால் கூட வீட்டின் ஆண்கள் தான் எடுத்து வருவார்கள். அங்கு பாம்புகள் நடமாற்றம் அதிகம் இருப்பதால் செல்ல பயப்படுவாள்.

அப்படி இருக்க அங்கு என்ன வேலை மனைவிக்கு என்ற யோசனையோடு அவளிடம் நெருங்கியவன், “என்னாம்மா இங்க இருக்க?” என சாதாரணமாக கேட்டிட, தூக்கி வாரி போட்டு நெஞ்சில் கை வைத்து திரும்பினாள் ஒளிர்பிறை.

“ஆரும் இல்ல அம்மணி நா தான்.” மனைவியின் தோள் மீது கை வைத்தவன் ஆசுவாசப்படுத்தினான் வார்த்தைகளால்.

சீரான மூச்சை மேலும் கீழுமாக வெளியிட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் அமைதியாக இருக்க, “என்னாம்மா?” கேட்டான் பதமாக.

“ஒன்னு இல்ல மாமா காலையில விளக்கேத்த சாமி ரூமுக்கு போன. என்னா ஆச்சுன்னே தெரியல நம்ம குலதெய்வ போட்டோ கீழ விழுந்து ஒடஞ்சிடுச்சு. அத எடுக்க போவும் போது போட்டோ பட்டு விளக்கும் கீழ விழுந்துடுச்சு. அதா ஆரு காலையாது ஒடஞ்ச கண்ணாடி குத்திட போவுதுனு இங்க எடுத்துட்டு வந்த.”

மனைவி சொல்லிய பின்பு தான் வைக்கோல் பக்கத்தில் இருக்கும் உடைந்த குலதெய்வத்தின் புகைப்படத்தை பார்த்தான். அவர்களின் குடும்பத் தொழில் பம்பை உடுக்கை அடிப்பது. தொழிலுக்கு எப்பொழுதும் செல்வதால் குல விளக்கு பூஜை அறையில் எந்நேரமும் ஒளிர்ந்துக் கொண்டே இருக்கும். அவர்கள் வழக்கத்தில் அவை பாதியில் அணைந்தால் அபசகுணம் என்பார்கள்.

“அத வூட்டுக்குள்ள ஓரமா போடாம இங்க எதுக்கு கொண்டாந்த? சும்மாவே உனக்கு இந்த எடம் ஆவாது.”

“இல்ல மாமா ஒடஞ்ச போட்டோவ வூட்டுக்குள்ள வெக்க கூடாதுனு சொல்லுவாய்ங்க. அதுவும் இல்லாம குலதெய்வ போட்டோ வேற. அதா கண்ணாடி துண்டு அத்தினியும் தள்ளி விட்டுட்டு வேற போட்டோ வாங்குற வரைக்கும் இத வெக்கலாம்னு நெனைச்ச.”

“என்னை கூப்பிட்டு இருக்கலாம்ல ஒளிரு.”

“சொல்ல தான் மாமா நம்ம ரூமுக்கு வந்த. நீங்க பம்பை தட்ட மாத்திக்கிட்டு இருந்தீங்க. அந்த நேரத்துல ஆரு வந்து பேசுனாலும் உங்க கவனம் திரும்பாது. அதா நானே எடுத்துட்டு வந்துட்ட.”

அவள் கொடுக்கும் பதிலை கேட்டுக்கொண்டே குலதெய்வத்தின் புகைப்படத்தை கையில் எடுத்தான். ஏற்கனவே மனைவி உடைந்த கண்ணாடி துண்டுகள் அனைத்தையும் எடுத்து இருந்ததால் சுத்தமாக இருந்தது. எதுவும் இல்லை என்ற நம்பிக்கையில் குலதெய்வத்தின் புகைப்படத்தை துடைக்க சென்றான்.

தவறான நேரம் போல அவன் கை வைத்த நேரம். புகைப்படத்தின் ஓரத்தில் இருந்த சிறு கண்ணாடி துகள் கையில் உரசி ரத்தத்தை வரவழைத்தது. லேசான முக சுழிப்போடு கையை நோக்குவதற்குள்,

“ஐயோ மாமா! ரத்தம் வருது பாருங்க. உங்கள ஆரு இதுல கைய வெக்க சொன்னது. நா தான் சொன்னல போட்டோ ஒடஞ்சு இருக்குனு.” என அவனது கையை தாங்கினாள்.

அதற்குள் ரத்தம் அதிகமாக வர ஆரம்பித்துவிட்டது. சேலை முந்தானையால் இறுக்கிப் பிடித்தவள், “கவனமா கைய வெக்குறது இல்லியா மாமா. நானே குலதெய்வ போட்டோ ஒடஞ்சிடுச்சின்னு வருத்தத்துல இருக்க. இப்ப நீங்க வேற அத தொட்டு இப்டி ரத்தத்தோடு நிக்கிறீங்க.” புலம்பியபடி வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

“ஒன்னு இல்ல அம்மணி லேசான காயந்தா.” என்பவனை முறைத்தவள், “இது லேசான காயமா மாமா.” ரத்தத்தை வெளியேறவிடாமல் அணை கட்டிய சோலை முந்தானையை காண்பித்து.

அப்பொழுதுதான் அவனும் கவனிக்கிறான் ரத்தத்தை. புருவங்கள் வில்லாக வளைந்து கேள்வியில் நின்றது… சிறு கீறலுக்கு எதற்கு இவ்வளவு ரத்தம் என்று. அந்த அளவிற்கு கூட காயம் வரவில்லையே என்ற யோசனையில் அவன் அமைதியாக பார்த்திருந்தான்.

அதற்குள் கட்டியவள் ரத்தத்தை துடைத்து எடுத்து விட, “யம்மா! அய்யய்யோ….என்னா ராசா ஆச்சு…” பதட்டமாக ஓடி வந்தார் ஆண்டாள்.

“ஒன்னு இல்லம்மா குலதெய்வ போட்டோ ஒடஞ்சிடுச்சு. அத எடுக்கும்போது லேசா கைய கீறிடுச்சு.”

“ஐய்யோ…” என்றவர் ஒளிர்பிறையின் கையில் இருக்கும் துணியை வாங்கி துடைக்க ஆரம்பித்தார்.

ஊரே ஒன்று கூடும் அளவிற்கு ஒப்பாரி வைத்தார் மகனின் ரத்தத்தை பார்த்து. மகனானவன் அவரை சமாதானம் செய்து கொண்டிருக்க, “உனக்கு ஒன்னு தெரியாது ராசா. இந்த மாதிரிதா ஒரு நாளு உங்க அப்பா கைய கிழிச்சு ரத்தம் வந்துச்சு. அன்னிக்கு இந்த வூட்ட வுட்டு போன மனுசதா இன்னிக்கு வரைக்கும் வூடு திரும்பல.” மூக்கை சிந்திக் கொண்டு அசம்பாவித சம்பவத்தை கூற,

“ஒன்னு இல்ல அய்த்த  நீங்க பயந்து அவரையும் பயப்பட வெக்காதீங்க.” ஆறுதல் படுத்துவதற்காக நல்ல வார்த்தைகளை பேசினாள் ஒளிர்பிறை.

“உனக்கு என்னாடி தெரியும் இத பத்திலா. இந்த குடும்பத்த மூணு தலைமுறையா பாத்துட்டு இருக்க எனக்கு தான தெரியும்.” என்றவர் மகனைப் பார்த்து,

“குலதெய்வத்துக்கு நம்ம மேல என்னா கோவம்னு தெரியல பெரியவனே. உங்க தாத்தானுக்கும் இப்டித்தா கையில அடிபட்டுச்சுன்னு உன் அப்பத்தா சொல்லி கேள்விப்பட்டிருக்க. உங்க அப்பாவுக்கும் அப்டிதா ஆச்சு. இப்போ உனக்கும் அதே மாதிரி நடக்குதே.” என்றவர் அழுகையை நிறுத்தவில்லை.

“எதுவும் ஆவாது ம்மா வுடுமா. ஒளிரு சொன்ன மாதிரி நீ தேவ இல்லாம பயப்படுற.”

“இல்ல பெரியவனே எனக்கு என்னாமோ இது அபசகுணம் மாதிரி தெரியுது. சாமி எதயோ மறைமுகமா சொல்ல வருது நம்ம கிட்ட. இன்னிக்கு நீயி வூட்ட வுட்டு எங்கியும் போவாத. என்னா நடந்தாலும் பரவால. இருக்குற அத்தினி சோலியையும் ஒதுக்கி வெச்சிடு.” என்றவரை  சமாதானம் செய்ய முடியாமல் திண்டாடினான்.

ஆண்டாள் ஏற்படுத்திய கலவரத்தில் ஏற்கனவே சோகத்தில் இருந்த ஒளிர்பிறையின் மனம் கூக்குரல் இட்டது. கணவனுக்கு ஏதாவது நேருமோ என்ற பயத்தில் கண் கலங்கினாள்‌. அதற்கு பலம் சேர்ப்பது போல்,

“சின்ன கீறல் தாம்மா அதுக்கு இவ்ளோ ரத்தம் வரதை நம்பவே முடியல.” அதிசயத்த விஷயத்தை மதுரவீரன் கூற, அவளுக்குள் இருந்த பயம் அதிகரித்தது.

கடவுளின் சித்து விளையாட்டு இதன் மூலம் பிள்ளையார் சுழி போடுவதாக எண்ணியவள், “மாமா, அய்த்த சொன்ன மாதிரி நீங்க எங்கியும் போவாம வூட்லயே இருங்க.” என்றாள் பதட்டத்தோடு.

அப்பொழுதுதான் மனைவியின் முகம் நோக்கினான் மதுரவீரன். எப்போது அழட்டும் என்ற தோரணையோடு அவள் காயம் பட்ட இடத்தை பார்த்துக் கொண்டிருக்க, “இங்க வா” என்று அழைத்தான்.

அழுகையோடு வலப்புறம் அமர்ந்தவள் தோள் மீது கை போட்டவன், “அம்மாதா படிக்காதவங்க எதுவோ பேசுறாய்ங்கன்னா நீயும் அவங்களை மாதிரியே பேசுற. இதுலாம் அவ்ளோ பெரிய விசயம் இல்ல அம்மணி. காயும் சின்னதா இருந்தாலும் ஆழமா குத்தி இருக்கும் போல அதா இவ்ளோ ரத்தம் வருது. எங்க அப்பா மாதிரி எனக்கு நடக்க வாய்ப்பே இல்லை.” என்றதும் கட்டியவள் எதையோ கூற வர, வாயை மூடியவன்,

“ஆரு கிட்டயும் முன்ன மாதிரி நா இப்போ சண்ட கூட போடுறது இல்லியே அம்மணி.” என்றான் உறுதியாக.

அமைதியாக பார்க்கும் மனைவியின் விழியில் அப்பட்டமான பயம் தெரிந்தது. கூடவே மூடி இருக்கும் கைக்குள் துடிக்கும் மணிக்கட்டின் வேகத்தை வைத்தே அவளுக்குள் இருக்கும் பயத்தை உணர்ந்தவன் தோளோடு சேர்த்துக்கொண்டு ஆறுதல் படுத்த,

“இப்டி அழுது அழுது தாண்டி என் குடும்பத்த இந்த நெலைமைக்கு கொண்டு வந்துட்ட. ஒரு சாமி படத்தை கூட உன்னால ஒழுங்கா வெச்சிக்க முடியாதா. அதுவும் குலதெய்வ போட்டோவ சுத்தமா இருக்கும்போது மட்டும் தொடுனு எத்தினி தடவ சொல்றது. எப்ப பாரு பொம்பளையா அடக்கமா இருக்காம ஆடிக்கிட்டு இருந்தா குலதெய்வம் எப்டி நீ தொடுறத ஒத்துக்கும். நீ பண்ண பாவத்துக்கு என் புள்ள ரத்தத்தோட உக்காந்து இருக்கா.” நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்.

“அம்மா” என்ற அழைப்பு கடும் கோபத்தோடு வெளி வந்தது.

படபடவென்று இருக்கும் அத்தனை கோபத்தையும் மொத்தமாக கொட்ட எண்ணியவர் வாயை மூடிக்கொண்டார் மதுரவீரனின் கோப அழைப்பில். 

“என்னா பேச்சுமா இது? என்னை வெச்சிக்கிட்டு என் பொண்டாட்டிய இப்டி பேசுற. அப்டி என்னா அவ தப்பு செஞ்சுபுட்டா குலசாமி கோவப்படுற அளவுக்கு. ஒரு பொம்பளையா இருந்துக்கிட்டு அவளை இப்டி பேசுறியே உனக்கு கூசல.” கனீர் குரல் அவ்வீட்டை சுற்றி வந்தது.

“என்னா தப்பா சொல்லிட்ட பெரியவனே இப்போ. சுத்த பத்தமா சாமி கிட்ட போறது நல்லது தான.”

“அவ சுத்தமா இல்லினு நீயி பாத்தியா அம்மா. அவ என்னா கொழந்தையா எதியும் தெரியாம தொட்டு வணங்க. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். இன்னொரு தரம் இந்த மாதிரி பேசினீங்க அம்மான்னு கூட பாக்க மாட்ட.” என்றவன் மனைவி மீது போட்டிருந்த கையை அமைதியாகவும், ஆண்டாள் பிடித்திருந்த கையை வெடுக்கென்று உருவி கொண்டும் வீட்டை விட்டு வெளியேறினான்.

மனைவி அழைப்பதை கூட காதில் வாங்கிக் கொள்ளாதவன் வீட்டு வாசலில் இருக்கும் செருப்பை மாட்ட, “மாமா, அய்த்த பேசுனது தப்பாவே இருக்கட்டும் நீங்க எங்கியும் போவாதீங்க.” என்றவள் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் அவன் தெருவை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

“மாமா சொல்லிட்டு இருக்கல…எங்க போறீங்க?”

“வுடு ஒளிரு கொஞ்ச நேரம் கம்மாங்கர வரைக்கும் போயிட்டு வர.”

செல்பவனின் கையை இறுக்கமாக பிடித்தவள், “மாமா கோபத்துல எந்த முடிவும் எடுக்காதீங்க.  அய்த்த சொல்றதுக்கு முன்னாடியே குலசாமி போட்டோ ஒடஞ்சது எனக்கு தப்பா தான் தோணுச்சு. இன்னிக்கு ஒரு நாளு எங்கியும் போவாம எனக்காக வூட்ல இருங்க மாமா. உங்களுக்கு ஏதாச்சும் ஒன்னு ஆயி போச்சின்னா நா தனி மரமாத்தா வாழனும்.” என்று தோளில் சாய்ந்து அழுக, மனைவியின் அழுகை வெளியேற நினைத்த எண்ணத்திற்கு தடை போட்டது.

“என்னாம்மா இதுக்கு போய் இப்டி அழுவுற. அம்மா பேசுன பேச்சுக்கு அங்க இருந்தா இன்னு வாக்குவாதம் வருனுமே கொஞ்ச நேரம் வெளிய போவ வந்த. மத்தபடி என் மனசுல எந்த கோபமும் இல்ல அம்மணி.” என்றவன் அவளின் கண்ணீரைத் துடைத்து,

“போவாதனு நீ சொன்னாலே போக மாட்ட அம்மணி. இப்டி எல்லா அழுது என் மனச காயப்படுத்தாத. அப்டியே எனக்கு எதுனா ஆனாலும் சரி நீ சிரிச்ச முகமாகத்தா இருக்கணும். என் அம்மணி சிரிச்சா அவ்ளோ அழகா இருக்கும்” என்றவன் பேச்சில் அளவு கடந்த பயம் உருவானது மனைவியின் விழியில்.

பயம் நாளை பலித்து விட்டாள் பாவை நிலை என்னவோ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்