Loading

சீமை 16

ஐவர் படை வீட்டை விட்டு சென்றதும் இரு வீடுகளும் அமைதியில் மாயமானது. மதுரவீரன் அடுத்த வாரம் வரவிருக்கும் பம்பை அடிக்கும் வேலைக்காக பம்பை உடுக்கைகளை தயார்படுத்திக் கொண்டிருக்க, மச்சக்காளையன் உறங்காமல் வேலை செய்த அலுப்பில் ஓய்வெடுக்க படுத்திருந்தான்.

வீட்டு வேலைகளை முடித்த சாமந்தி துணிகளை அள்ளிக்கொண்டு வெளியில் வர, “என்னாக்கா துணி தொவைக்க கெளம்பியாச்சா?” கல்லூரி பையை வலது தோள்புறம் மாட்டிக்கொண்டு வந்த தேன்மொழி கேட்டாள்.

“ஆமாம் தேனு, நீ என்னா காலேஜா?”

“ஆமா க்கா, நேத்து முழுக்க செமினாருனு உக்கார வெச்சிட்டாய்ங்க. இன்னிக்கு என்னா பண்ண போறாய்ங்களோ.”

“இப்பவே வெசனப்பட்டு சோராத தேனு. இன்னு வாழ்க்கைல எம்புட்டு பாக்க வேண்டியது கெடக்கு.”

“என்னை சுத்தி இருக்க எல்லாரும் இந்த வார்த்தய வுடமா சொல்லுறீங்க. என் நெலைம ஒருத்தருக்கும் புரியல.”

சின்னவளின் வார்த்தையில் புன்னகைத்த சாமந்தி இடுப்பில் அன்னக்கூடையை வைத்துக் கொண்டு, “புரியிற மாதிரிதா கொஞ்சம் சொல்லே கேப்போம்.” என்றாள்.

“நீங்க எல்லாரும் காலேஜ் வரைக்கும் படிச்சுட்டு வேலயா செய்றீங்க. கண்ணாலம் பண்ணிக்கிட்டு இதோ இந்த மாதிரி குடும்பத்து ஆளுங்க துணிய தான தெனம் தொவைக்குறீங்க. அதுக்கு எதுக்கு இம்புட்டு கஷ்டப்பட்டு படிக்கணும். சட்டுனு கண்ணால பேச்ச ஆரம்பிச்சா கட்டிக்கிட்டு நானும் ஒரு அன்னக்கூடைய தூக்கிப்பனே க்கா.” என்றவளின் எண்ணம் இப்போதுதான் விளங்கியது சாமந்திக்கு.

“அவசரப்படாத தேனு. நாங்க பண்ண அதே தப்ப நீயும் பண்ணிடாத. கண்ணாலம் பண்ணிக்கிட்டு படிக்கலானு மனசு சொல்லும். ஆனா, நம்ம வாழ்க்க அதுக்கு ஒத்துழைக்காது. ஏதோ எங்க புருசங்க நல்லவங்களா போனதால எதியோ படிச்சுக்கிட்டு கெடக்கோம். உனக்கும் அந்த மாதிரியே வருவான்னு எதிர்பாக்காத.” என்றவளை ஒரு மாதிரியாக பார்த்தாள் தேன்மொழி.

பேசிக் கொண்டிருந்த பெரியவள் சின்னவளின் பார்வையில் பேச்சை நிறுத்த, “நா என்னா வேத்து ஆளயா கட்டிக்க போற, உங்க கொழுந்தன தான. அவரு உங்க வூட்டுக்காரங்கள வுட நல்லவரு. அதுவும் இல்லாம அவரு படிச்சிட்டு நல்ல வேலயா செஞ்சுக்கிட்டு இருக்காரு. எப்ப பாரு மண்ணயும் கல்லயும் கைல வெச்சுல ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காரு.” என சலித்துக் கொண்டாள்.

“என் கொழுந்த அறிவு என்னானு உனக்கு இன்னு புரியல தேனு‌. அவன் மண்ண கூட மலையா பாப்பான். அவன் கண்டுபிடிப்பு எல்லாம் என்னான்னு தெரிஞ்சா இந்த மாதிரி நீ பேச மாட்ட.”

“அப்டி என்னா விஞ்ஞானத்த கண்டுபிடிச்சிட்டாரு உங்க கொழுந்தரு.”

“அடியே! அதுக்கு எதுக்குடி உன் வாய் இம்புட்டு தூரம் கோணுது.” வாயை வளைத்தபடி நிற்கும் தேன்மொழியின் கன்னத்தில் இடித்தாள்.

“அட! போங்க க்கா…உங்க கொழுந்தனுக்கு ரொம்ப வக்காலத்து வாங்காதீங்க. நானும் பல தடவ சொல்லிட்ட இந்த மாதிரி ஆராய்ச்சி பண்றத வுட்டுட்டு நல்ல வேலைக்கு போங்கன்னு. கண்ணால பேச்ச எடுத்தா எங்க அப்பா நல்ல குணம் உள்ள பையனு பாப்பாரா இல்ல சம்பாத்தியம் உள்ளவனானு பாப்பாரா?” என்றவள் முகம் சோர்ந்து இருந்தது.

“அடியே தேனு, நீ இம்புட்டு வெசன பட அவசியமில்ல. இங்க வா என் கூட” தேன்மொழியை பின்பக்கம் இழுத்துச் சென்றாள்.


இதுவரை மச்சக்காளையன் வீட்டிற்குள் வராதவள் தயக்கத்தோடு பின் வாசல் பக்கம் நிற்க, “இங்க பாரு இதெல்லாம் உன் வருங்கால புருசனோட கண்டுபிடிப்பு.” என கை காட்டும் பொருளை குழப்பத்தோடு பார்த்தாள் தேன்மொழி.

அவள் முகத்தை வைத்து புரியவில்லை என்பதை கண்டு கொண்ட சாமந்தி, “ஆட்டு வளர்ப்புக்கு எப்டி ரெடி பண்ணி இருக்கானு பாரு. மரத்துல உயரம் கட்டி கம்பில தர போட்டு இருக்கான். தெனமும் ஆடுங்கள இதுல ஏத்தி வுட்டுடுவோம். அது தர புழுக்க எல்லாம் கம்பி தரையில சரியா வந்து விழும். லேசா சலிச்சு வியாபாரம் பண்ணிட்டு இருக்க.” என்றவள் மேலும் தொடர்ந்தாள்,

“இவ்ளோ மேல ஆட்டு கூண்டு கெடக்கே சாப்பாடு எப்டி வைப்பன்னு யோசிச்சியா?” என்று.

அவள் யோசனை மாறாத முகத்தோடு தலையசைக்க, “இங்க இருக்கு பாரு மரக்குழாய், இதுல தீவனத்த போட்டு இந்த குழா பக்கம் பொருத்திவிட்டா சல்லுன்னு மேல போயிடும்.” என்றதும்,

“அது எப்டிக்கா?” என குழப்பமாக கேட்டாள் தேன்மொழி.

“அதா என் கொழுந்தன் கண்டுபிடிப்பு. இது மட்டும் இல்ல இன்னு உங்க அக்கா வூட்டுக்கு போய் பாரு அவன் கை திறமை நெறைய இருக்கு. என் புருசனுக்கு தெரிஞ்சா பிரச்சன ஆகிடுமேன்னு பயந்து இது ஒன்ன மட்டும் ரகசியமா பண்ணி தர சொன்ன.”

“அது சரிக்கா ஆட்டு புழுக்கைல என்னா வியாபாரம் பாக்குறீங்க? இதுலா ஒரு விசயம்னு உங்க கொழுந்தன பாராட்டுறீங்க.”

சின்னவளின் தலையில் அடித்தவள் “நீயி உண்மையாவே படிக்கதா போறீயா?” என்று விட்டு, “ஆட்டு புழுக்கைல பெரிய சம்பாத்தியமே இருக்கு. இத தமிழு பாத்தா போதும் தனியா வேல பாக்க வேணா.”

லேசான மகிழ்வு தேன்மொழி மனதில். கூடவே சின்ன கோபமும் இதையெல்லாம் தன்னிடம் கூறவில்லையே என்று. உடனே காதலனைப் பார்த்து கேட்க வேண்டும் என மனம் அவசரப்படுத்த, “சரிக்கா எனக்கு காலேஜுக்கு மணி ஆவுது நா கிளம்புற.” என்றிட,

“சரி தேனு பார்த்து போ.” என வழி அனுப்பி வைத்தாள்.

“இன்னும் என்னென்ன பொய்ய என்கிட்ட சொல்லி வெச்சிருக்க?” என்ற திடீர் குரலில் திடுகட்டவள் திரும்பிப் பார்க்க, வாசல் கதவில் கை வைத்துக் கொண்டு நின்றிருந்தான் மச்சக்காளையன்.

என்ன சொல்லி சமாளிப்பது என்று அவள் உள்ளுக்குள் யோசித்துக் கொண்டிருக்க, “அந்த குடும்பத்துக்கும் எங்களுக்கும் சுத்தமா ஆவாதுனு தெரிஞ்சும் இந்த மாதிரி வேல பண்ணிக்கிட்டு இருக்கன்னா என்னா அர்த்தம்?” என்றவனை அவள் கேள்வியோடு நோக்க,

“இந்த குடும்பத்த அழிச்சி அவனுங்க அஞ்சு பேத்தியும் நல்லபடியா வாழ வெக்க நெனைக்குறன்னு அர்த்தம்.” என்றதும் புதுசு புதுவென்று கோபம் ஏறியது அவளுக்கு.

“இந்தாடி… முறைப்புலா என்கிட்ட செல்லாது. மச்சக்காளையன் எவ்ளோ திமிர் புடிச்ச ஆளுனு உனக்கு நல்லா தெரியும். எதுவும் வேணானு ஒதுங்கி இருக்கனே தவிர பயந்து போகல. திரும்ப அவன வர வெக்கணுனு முயற்சி பண்ணாத, அப்புறம் நீயி இந்த வூட்ல இருக்க மாட்ட.” என்றவன் மனைவியின் பதிலை தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாது சென்று விட்டான்.

கணவன் மீது கடும் கோபம் சாமந்திக்கு. இப்போதே அதை காட்ட முடிவெடுத்தவள் வீட்டுக்குள் சென்றாள். அவளைக் கண்டு கொள்ளாதவன் வெளியில் கிளம்ப முயற்சிக்க,

“உங்க அர்த்தத்துக்கான ஆளு நா இல்ல. தாலி கட்டுனவன் நல்லா இருக்க கூடாதுனு எந்த பொண்டாட்டியாது நெனைப்பாளா? வாய் இருக்குதுனு என்னா வேணா பேசுவீங்களா மாமா. பிற வூட்ல தமிழு செஞ்சு குடுத்தத பாத்த. இங்கயும் இருந்தா நல்லா இருக்குனு நெனைச்சு உதவியாதா கேட்ட.  அதுக்காக என்னா வார்த்த எல்லா பேசிட்டீங்க.” அவனுக்கு பின்னால் நடந்து கொண்டே கேள்வி கேட்டவள் திடுக்கிட்டு நின்றாள்.

வெடுக்கின்ற திரும்பியவன், “அப்போ அந்த வூட்டுக்குள்ள கால வெச்சிருக்க. ஆவாதவன் வூடுன்னு தெரிஞ்சும் போயிருக்கனா நா சொன்னது தான அர்த்தம்.” சொல்லியவன் நடையை மீண்டும் தொடர்ந்தான்.

வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டதாள் தலையில் அடித்துக் கொண்டவள், “எதர்ச்சியா போக வேண்டிய சூழ்நிலை, போன. உங்களுக்கு தெரிஞ்சா சத்தம் போடுவீங்கன்னு சொல்லல.” தன் தரப்பு விளக்கத்தை கொடுத்தாள்.

“காரணம் இல்லாம எதியும் மறைக்க முடியாது. அப்டியே மறைக்குறனா அது தப்பான விசயமா இருக்கும். உன் மனசுக்கே தெரிஞ்சிருக்கு நம்ம பண்றது தப்புனு. அதா கமுக்கமா இருந்திருக்க.”

“அப்டி எல்லா எதுவும் இல்ல மாமா. நீங்களே தமிழு செஞ்சு குடுத்தான்னு தெரியாம பாராட்டுனீங்களா இல்லியா.”

“அவன்னு தெரிஞ்சிருந்தா அந்தப் பாராட்டு வந்திருக்காது. முக்கியமா இந்த வூட்டுக்குள்ள கால வெச்ச அவனயும் உன்னயும் வெட்டி போட்டுட்டு எங்க அப்பன மாதிரி நானும் ஜெயிலுக்கு போய் இருப்ப.” கோபம் வீட்டின் அனைத்து திசைக்கும் எகிறியது.

“மாமா…” என தோள் மீது கை வைத்தாள்.

அவள் கை மீது கை வைத்து  அழுத்தும் அழுத்தத்தில் தெரிந்தது அவனின் கோப உச்சம் சாமந்திக்கு.

“அவன் பொண்டாட்டி கூட சுத்தி திரிஞ்சவன்னு தான எனக்கு புடிச்சிருந்தாலும் உன்ன கட்டிக்க வேணானு நெனைச்ச. நா நெனச்சது சரின்னு இன்னிக்கு நிரூபிச்சிட்ட. எந்த தப்பும் செய்யாத எங்க அப்பன ஜெயிலுக்கு அனுப்புன அவன் குடும்பத்து வாரிச என் வூட்டுல கால் வெக்க வுட்டுட்டியே.”

“என்னா நடந்துச்சுனு தெரியாம பேசாதீங்க மாமா.”

“பொட்ட புள்ளைய அடிக்க கூடாதுனு சொல்லி வளத்ததால உன்ன உசுரோட வுட்டு வெச்சிருக்க. என் கண்ணுல படாம ஒதுங்கி இருந்துடு. உன் மேல இருக்க நம்பிக்கைல தான வேலைக்கு போற. இத செஞ்ச நீயி அவங்க கூட சேர்ந்துக்கிட்டு சோத்துல எங்க எல்லாருக்கும் விசம் வெக்க மாட்டன்னு என்னா நிச்சயம்?” என்றவன் வார்த்தை அழுத்தியது அவள் உணர்வுகளை.

பேசும் திராணி இன்றி மௌனம் காத்தவளை முறைத்துக் கொண்டே முற்றத்திற்கு வந்தான். ஒரு சொட்டு கண்ணீர் கன்னம் தாண்டியதும் உணர்வு பெற்றவள்,

“தமிழு இந்த வூட்டுக்குள்ள காலு வெக்கல. வேற அப்பனுக்கு பொறந்து இருந்தாலும் உங்க எட்டு பேரு ரத்தமும் ஒன்னுக்கொன்னு கலந்துல இருக்கு. உங்கள மாதிரி தான் உங்க தம்பிக்கும் ரோசம் ரொம்ப அதிகம். நா எவ்ளவோ கூப்பிட்டு பாத்த. வரவே மாட்ட மதினினு மறுத்துட்டா.” என்றவள் நின்றிருந்த இடத்திலிருந்து இரு அடி முன்னேறி நின்றாள்.

“எங்க அண்ணனுக்கு புடிக்காம இந்த வூட்டுக்குள்ள வரது நல்லா இருக்காது. அவரா ஒரு நாளு வாடா தம்பினு கூப்டுவாரு மதினி. அன்னிக்கு உரிமையா வந்துட்டு போற. அப்டினு பின் வாசல் பக்கமா வந்து வேலய முடிச்சு குடுத்துட்டு போனா மாமா.” நடந்ததை விவரித்தாள் அவன் கேட்காவிட்டாலும்.

செவியில் விழுந்ததை விழாதது போல் அவன் நடையை கட்ட முயற்சிக்க, “உங்கள விசம் வெச்சு சாகடிச்சிட்டா  எனக்கு வாழ்க்கை ஏது மாமா. அப்டியே வெச்சே ஆவணுனா  கண்ணாலம் ஆகி இத்தினி வருசம் ஆகியும் ஒதுங்கிய இருக்கீங்களே அதுக்குதா வெச்சி இருக்கணும்.” என்றவள் பேச்சு விழவில்லை அவன் காதில்.

தெருவில் நடந்து கொண்டிருக்கும் முதுகை வெறித்துக்கொண்டு நின்றிருந்தாள் வாசலில் சாமந்தி. பள்ளியில் தம்பியை விட்டுவிட்டு வந்த செந்தமிழன் அவளின் கலங்கிய முகத்தை பார்த்து,

“என்னா மதினி அண்ண சத்தம் போட்டுட்டு போறாரா.” கேட்டான்.

“இந்த வூட்டுக்குள்ள உன்ன கால வெக்க வுட்டுட்டனா தமிழு. அதுக்காக என் காலயும் உன் காலயும் வெட்ட போறாராம்.” என்ற இரு வரியில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவன்,

“வெட்டுற வார்த்த என்னிக்கு இந்த குடும்பத்த வுட்டு போதோ அன்னிக்கு தான் நம்ம எல்லாரோட வாழ்க்கையும் நல்லா இருக்கும் மதினி.” என்றவன் ஆறுதல் படுத்த முடியாத நிலையில் அவளை விட்டு மறைந்தான்.

சீமை 17

மச்சக்காளையன் வீட்டில் பிரிவு என்றால் மதுரவீரனின் வீட்டில் காதல். தம்பிகள் அனைவரும் கிளம்பும் வரை பதமாக இருந்தவன் நடு கூடத்தில் அமர்ந்தான். கணவனின் எண்ணம் அறிந்தவள் சமையல் கட்டில் இருந்துகொண்டு கைநீட்டி மிரட்ட, கண் அடித்தான் காதல் பொங்க.

வரும் வெட்கத்தை தலை குனிந்து அடக்கிக் கொண்டவள் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள். என்றும் செய்யும் வேலையை இன்று சாதாரணமாக கூட செய்ய முடியாமல் திண்டாடி போனாள் கணவன் பார்வை பின் தொடர்வதால்.

கழுவ வேண்டிய பாத்திரங்களை குனிந்து எடுக்க, சேலை கட்டி சிறு சதையோடு இருக்கும் அவள் வயிற்றுப் பகுதியை ரசித்தான். கணவனின் கள்ள பார்வையை அறிந்து முந்தானையை இழுத்து விட, கையில் கலகலவென்று ஓசை கொடுக்கும் கண்ணாடி வளையல்களை ரசித்தான்.

கொசுவத்தை சொருகியவாறு நடக்கும் மனைவியின் கணுக்காலில் வீற்றிருக்கும் அவன் பரிசளித்த கொலுசின் மீது பொறாமை கொண்டவன் நடக்கும்பொழுது சின்னதாக வெளிப்படும் பாதத்தையும் கண்டு களித்தான்.

கொண்டையிட்டு இருக்கும் கலைந்த முடி அவனை சரிப்படுத்த அழைக்க, அன்னை எங்கிருக்கிறார் என நோட்டமிட்டான். மகனின் எண்ணம் அறிந்தும் நகராமல் நடுக்கூடத்தில் அவர் அமர்ந்திருக்க, நல்ல பிள்ளையாக இருக்க வேண்டிய கட்டாயம் மதுரவீரனுக்கு.

அடுப்பங்கரை திண்ணையை சுத்தம் செய்தவள் அழகில் மொத்தமும் மதி மயங்கி போனான். வியர்வைத் துளிகள் நெற்றியின் ஓரத்தில் இருந்து காதி நுணுக்கி வந்து கழுத்து வழியாக காணாமல் போக, அடிக்கடி துடைக்கும் கண்ணாடி வளையல் ஓசையில் மீண்டான்.

காந்த பார்வை அவள் உடலை கூச செய்ய, வெட்கம் தின்று தீர்த்தது ஒளிர்பிறையை. உதடு கூச கொடுக்கும் முத்தத்தை விட இந்தப் பார்வை அதிகம் நோகடித்தது மனதை. மாமியார் இருப்பதை மனதில் வைத்தவள் முடிந்த அளவு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே ஓடிவிட்டாள்.

உடனே செல்லாமல் பொறுமை காத்தவன் ஆற அமர அங்கிருந்து நகர, “பொண்டாட்டி முந்தானைய புடிச்சுக்கிட்டு திரியிறான் பாரு வெக்கங்கெட்டவன்.” மகனை திட்டினார் ஆண்டாள்.

வாங்கும் அவ பேச்சுக்களை தெரிந்து கொள்ளாதவன் பழைய ஆட்டுக்கல் மீது அமர, சிறு அளவு வெப்பம் கொண்ட சூரியனின் வெளிச்சத்தில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். தொலைவில் நின்று ரசித்தது போதும் என்று மனம் மன்றாட, அவனது கால்கள் மனைவி புறம்.

வரும் கணவனின் கால் தடம் அறிந்து, “மாமா அய்த்த இருக்காங்க” என்றாள் முழு கண்டிப்பை காட்டாமல்.

“இருந்துட்டு போவட்டும் அம்மணி எனக்கு என்னா வந்துச்சு.” என்றவன் ஆடை அவள் ஆடையோடு உரசும் அளவிற்கு அமர்ந்தான்.

இனி என்ன செய்வான் என்பதை அறிந்தவள் பேச்சு கொடுக்காமல் வேலையில் கவனமாக, “ஏண்டி… பக்கத்துல புருசன வெச்சிக்கிட்டு அது கூட எதுக்கு மல்லு கட்டிக்கிட்டு கெடக்க.” என்றவன் கை இடைக்குள் ஊர்ந்தது.

சோப்பு கையோடு அதை தட்டி விட்டவள், “கண்டுக்கிட்டா எந்த வேலையும் ஓடாதுனு தெரிஞ்சிதா மாமா இது கூட மல்லு கட்டிக்கிட்டு கெடக்க.” என்றாள்.

“ரொம்பதா வீஞ்சிக்கிட்டு போவாத அம்மணி. அடுத்த வாரம் அஞ்சு நாள் வெளியூர் வேலைக்கு போற.”

மாதத்தில் பதினைந்து நாட்களுக்கு மேலாக வெளியூருக்கு சென்று விடும் கணவனின் பிரிவு அவளுக்குள் அதிகம். இரவெல்லாம் அவன் இல்லாது நினைவுகள் கொடுக்கும் தனிமையை கடக்க திண்டாடுபவள் இந்த வார்த்தையை சகிக்க முடியாமல் தேய்க்கும் பாத்திரத்தின் மீதிருந்த கையை அசையாமல் வைத்தாள்.

பேசாமல் மௌனம் சாதிக்கும் மனைவியின் கைகளைப் பார்த்தவன், “குடு நா தேச்சு தர.” அவளிடமிருந்து பாத்திரத்தை வாங்கி தேய்க்க ஆரம்பித்தான்.

எதுவும் பேசாமல் ஒளிர்பிறை சோகத்தில் மூழ்க, “எனக்கு மட்டும் ஆசையா அம்மணி உன்ன வுட்டுட்டு அடிக்கடி வேலைக்கு போவணுனு. இப்போலாம் தொழிலு முன்ன மாதிரி இருக்குறது இல்ல. நம்ம ஊரு மக்களை வுட வெளியூர் மக்கள் இத அதிகம் விரும்புறாய்ங்க. மறஞ்சு போற தொழில கையில வெச்சிக்கிட்டு வுடவும் முடியாம தொடரவும் முடியாம தெனம் தெனம் வேதனைப்பட்டு போறம்மா.”  என்றவன் தேய்த்த பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தான்.

உணர்வுகளை வெளிக்காட்டாமல், “குடுங்க மாமா நா தேச்சுக்குற” என அவன் கையில் இருக்கும் பாத்திரத்தை வாங்க முயற்சிக்க, இடம் கொடுக்காமல் கழுவினான்.

“என்னை வுட உன் நெனப்பு அதிகமா என்னை தொரத்தது அம்மணி. குடும்பத் தொழில அம்போன்னு வுட்டுட்டு போவவும் மனசு வரல. எப்டியாது இதுல சாதிச்சிட மாட்டோமான்னு ஒரு ஏக்கம்.”

“நீங்க பேசுறது எல்லாம் சரிதா மாமா. ஆனா, என்னை கொஞ்சம் யோசிச்சு பாருங்க. மாசத்துல பாதி நாளு புருச கூட இல்லாம தனியா இருக்குறது எம்புட்டு கொடும தெரியுமா.”

கழுவிய பாத்திரங்களை அருகில் இருக்கும் கல்லின் மீது தண்ணீர் வடிய கவிழ்த்தவன் கையைத் துடைத்துக்கொண்டு மனைவியை தோளோடு சுற்றிக் கொண்டான். அணைப்பு தேவைப்படுவதால் அவளும் இணைந்து செல்ல,

“வேற என்னா பண்ண முடியும் அம்மணி. என்னாதா விவசாயம் பாத்தாலும் சரி இந்த வேலைதா மனசுக்கு சந்தோசத்த தருது. அம்மன ஜோடிச்சி அழகுபடுத்தி வர்ணிக்கும் போது அந்த அம்மனே காட்சி தந்து ஆசீர்வதிக்குற மாதிரி தோணும். தொண்டை கிழிய மூணு நாளா தொடர்ந்து பாடிக்கிட்டு இருந்தாலும் முடியும்போது வெத்தல பாக்கு வெச்சு கையெடுத்து கும்பிடுற அந்த மரியாத ஒன்னுல அத்தினி வலியும் போயிடும்.” என்றிட, அதற்கான பதில் இல்லை ஒளிர்பிறையிடம்.

இருவரும் எதையும் பேசிக்கொள்ளாமல் இரு நொடி அமைதியில் ஆழ்த்திக் கொள்ள, “நா எதோ கிறுக்குத்தனமா பேசி உங்கள காயப்படுத்திட்ட.” கணவன் சோர்ந்த முகத்தை சகிக்க முடியாமல் அவளே பேசினாள்.

“உன் மனசு புரியுது அம்மணி. ஆனா, ஒன்னு செய்ய முடியாத நெலைமைல நா இருக்க. கூடவே கூட்டிட்டு போவவும் வசதி இல்ல. நானே கோவில் ஒதுக்கத்துல படுத்து கெடப்ப. அங்க கொண்டு போய் உன்ன எங்க தங்க வைப்ப சொல்லு? எங்க இருந்தாலும் என் மனசுல உன் நெனைப்பு மட்டும்தா இருக்கும். எப்படா வூட்டுக்கு வருவோம்… உன் முகத்த பாப்போனு இருக்கும்.”  கணவனின் பேச்சில் திரும்பியவள் விழி நோக்க, அவனது விழிகள் சொல்லியது கொண்ட நேசத்தை.

பார்வையில் சொக்கி போனவன், “முக்கியமா இந்த முகத்த இவ்ளோ நெருக்கமா எப்படா பாக்க போறோமோன்னு மனசு அடியா அடிச்சுக்கிட்டு கெடக்கும். வூட்டுக்கு வந்து இவுனுங்க அத்தினி பேரயும் சரி பண்ணிட்டு ராத்திரி உன் மடி சாஞ்சி படுக்குறதுக்குள்ள உடம்பும் மனசும் நொந்து போய்டும் அம்மணி.” என்றவனுக்கு வாய்க்கொள்ள புன்னகையை பதிலாக கொடுத்தாள்.

இருவரின் மீதும் கதிரவனின் கதிர்வீச்சுகள் அதிகம் படற, கண்கூசி திரும்பிக் கொண்டார்கள். சிரித்துக் கொண்டே அவள் வேலையை கவனிக்க, “சாயங்காலமா கடைவீதி வரைக்கும் போயிட்டு வருவோம்” என்றான்.

பாத்திரம் தேய்ப்பதை நிறுத்தியவள் கேள்வியோடு முகத்தை திருப்ப, “கொலுசு பழசா போச்சு பாரு மாத்திட்டு வந்துடலாம்.” என காலை தொட்டான்.

பதறியவள் அவன் கையை தள்ளிவிட்டு காலை உள் எடுத்துக் கொள்ள, “ராத்திரில தொட்டா மட்டும் தடுக்க மாட்டிக்குற.” என்றான் குறும்போடு.

செல்ல முறைப்பை காட்டிவிட்டு வேலையை கவனிக்கும் மனைவியை சில்மிஷம் செய்து தொந்தரவு செய்தான். பொறுக்க முடியாதவள் இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்து கொள்ள, “இனிமே ஒன்னு பண்ண மாட்ட.” என்ற வாக்குறுதியை கொடுத்து அமர வைத்தான்.

நம்பி அமர்ந்தவள் வேலையை கவனிக்க, சில நொடிகளில் மீண்டும் காலை தொட்டான். தள்ளிவிட்டவள் முறைக்க, “ராத்திரி என் நெஞ்சில கால வெக்கும் போது எங்கடி போச்சு இந்த அறிவு.” என உடல் கூச வைத்தான் பேச்சால்.

“மாமா இன்னிக்கு ஒரு முடிவோடதா இருக்கீங்க போல. மதியத்துக்கு இன்னு சோறு கூட பொங்கல. செத்த நேரம் உங்க வால சுருட்டிக்கிட்டு வேலய பாருங்க.”

“மாமன் மனசு பொங்கி வழியுதுனு தெரிஞ்சும் கண்டுக்காம கெடக்க”

“அதுக்கு வேற வேலயே இல்ல மாமா. எப்ப பாரு ஒரே நெனப்புதா.”

“என்னாமா பண்ண எனக்கு இருக்குறது ஒரே ஒரு பொண்டாட்டி நீ மட்டும் தான. உன் பின்னாடிதா வர முடியும்.”

கணவனின் கூற்றில் சந்தேக கண்ணை திறந்தவள், “ராசாக்கு ரொம்ப வருத்தமா இருக்கோ? அம்புட்டு வருத்தப்பட்டு ஆரும் என் பின்னாடி சுத்திக்கிட்டு கெடக்க வேணா. வேணுனா ஊருக்கு ஒன்னா வெச்சுக்கிட்டு திரியிங்க.” சிலிப்புக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

சிரிப்புடன் பின் தொடர்ந்தவன் தன்னையே பார்க்கும் அன்னையின் பார்வையில் அதை நிறுத்தினான். அவரோ மகனின் சந்தோஷம் என்று நகர்ந்து செல்லாமல் வாய்க்குள் முணுமுணுத்தார். அதை பார்த்த பின் மதிப்பு கொடுக்காதவன் அடுப்பங்கரைக்குள் நுழைய, ஊற வைத்த அரிசியை எடுத்துக் கொண்டு பின்பக்கம் சென்று விட்டாள் கட்டியவள் அவனை பார்க்காது.

மனைவியின் கோபம் பொய் என்றாலும் உடனே அதை சரி கட்ட நினைத்தவன் சற்றுமுன் ஆண்டாள் கூறியது போல் அவள் முந்தானையை தாவி பிடித்து கையில் சுற்றிக்கொண்டே பின்னால் சென்றான்.

“வுடுங்க மாமா”

“அத எதுக்குடி இப்டி சிடுசிடுனு சொல்ற. நல்லா சிரிச்ச மொகமா சொல்லு வுடுற.” என்றதும் வேகமாக திரும்பியவள் அர்த்தமில்லாத கோர சிரிப்பை காட்டி, “இந்த சிரிப்பு போதுமா?” என்றாள் முசுடோடு.

“இதுக்கு தான் அம்மணி ராத்திரியானா விளக்க நிறுத்திடுற.” என்றவன் சொன்ன பொருளை உணர்ந்து கொள்ள நேரம் பிடித்தது ஒளிர்பிறைக்கு.

தன்னைப் பார்க்க பிடிக்காமல் தான் இருட்டை தேடுகிறான் என்பதை அறிந்தவள் உண்மையாகவே கோபம் கொண்டாள். அதை அவனிடம் காட்டாமல் அங்கு இருக்கும் கல், பாத்திரம், செடி, கொடிகளிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.

சிரிப்போடு அதை எல்லாம் ரசித்தவன் அவள் நகர்வதை உணர்ந்து தன்னருகில் இழுத்துக் கொண்டான். முகத்தை எங்கோ வைத்துக் கொண்டு, “வுடுங்க எனக்கு வேல கெடக்கு.” என விடுபட முயன்றாள்.

“இன்னிக்கு உனக்கு வேற வேல குடுக்கிற…வா அம்மணி” என்றவன் அவள் மறுப்பதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தூக்கிக் கொண்டான்.

உள்ளே ஆண்டாள் எங்கிருக்கிறார் என்று ஆராய்ந்தவன் அவர் இல்லாத தைரியத்தில் மடியேறினான். மறுத்துக் கொண்டே வந்தவள் அறைக்குள் வந்ததும் அதை நிறுத்தி விட, மெத்தையில் படுக்க வைத்தவன் அவளை மெத்தையாக்க முயற்சித்தான்.

முத்தத்திற்கு ஒத்துழைக்காத மனைவியை சிறு கோபத்தோடு அவன் நோக்க, “அதா என் மூஞ்சிய பாக்க முடியாம கஷ்டப்படுறன்னு சொன்னீங்களே… அப்புறம் எதுக்கு முத்தம் குடுக்குறீங்க?” என தள்ளி விட்டாள்.

இலகுவான அசைவில் அவள் தள்ளிவிட, சண்டையில் தாக்கியது போல் கட்டிலில் இருந்து கீழே விழுந்தான். திடுக்கிட்டவள் மதுரவீரனின் சட்டையை பிடித்து தன் புறம் இழுக்க, மனைவியை இழுத்தான் அவன் புறம்.

களவாணித்தனம் செய்த கணவனை விடாமல் பெண்ணின் உதடுகள் அர்ச்சித்துக் கொண்டே இருக்க, அதை நிறுத்தினான் தன் உதடுகளால்.

முத்தம் இருந்த சலசலப்பை அடக்கி விட, காதல் மேடை ஏற்றியது தாம்பத்தியத்தில். இருக்கும் வேலையை அவள் மறக்க, செய்ய வேண்டிய வேலையை இவன் தொடர்ந்தான்.

பட்டப் பகலில் கதிரவன் பார்ப்பதைக் கூட அறியாமல் இருவரும் காதலில் மூழ்கி வெளிவர முடியாமல் தத்தளிக்க, இனிமையான முத்தம் அதை தொட வைத்தது.

சீமை 18

உள்ளே வந்த செந்தமிழன் சில நொடிகளில் கண்டு கொண்டான் மூத்தவனும் அவனது மனைவியும் இல்லை என்பதை. அவர்களை தொந்தரவு செய்ய எண்ணாதவன் காலை உணவை அவனே எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான். மகனின் நடவடிக்கையை கண்ட ஆண்டாள்,

“வூட்ல வயசு பசங்க இருக்குனு கூட தெரியாம என்னாமா கூத்தடிச்சிட்டு கெடக்கா. கேட்டா அவளுக்கு மட்டும் தான் அக்கறை இருக்குற மாதிரி பித்துவா பீத்த சிறுக்கி. எப்படா என் புள்ளைங்க வெளிய போவானுங்க ரூமுக்குள்ள போவலாம்னு காத்துக்கிட்டு கெடப்பா போல.” என முணுமுணுத்தார்.

அன்னையின் பேச்சு தெளிவாக கேட்டது செந்தமிழனுக்கு. ஏனெனில், அவர் வேண்டுமென்று தான் உறக்க பேசினார். அம்மாவின் வார்த்தையில் சொல்ல முடியா கோபம் உள்ளுக்குள் எழுந்தாலும் காட்டிக் கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தான். இருந்தும் அவர் அடங்காமல் திண்ணையில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருக்க,

“நீயி பேசுறது எல்லா நல்லா இல்லின்னு உனக்கே தெரியும்மா. இருந்தும் எதுக்காக இப்டி பேசிக்கிட்டு கெடக்கனுதா புரியல. உன் அண்ண மகளா போனதால நீயி பண்ற எல்லாத்தியும் பொறுத்துக்கிட்டு  போறாய்ங்க மதினி. இதுவே அவங்க இடத்துல வேற எந்த பொண்ணா இருந்தாலும் புருசன கூட்டிக்கிட்டு தனியா போயிருப்பாய்ங்க. அந்த மாதிரி ஒரு நெலைமைக்கு மதினிய தள்ளிடாத.” என்றவன் தோட்டத்திற்கு புறப்பட்டான்.

போகும் வழியிலேயே அவனது காதலி தொடர்பு கொடுக்க, புன்னகையோடு பதில் கொடுத்தான். அதே புன்னகை எதிரில் இருந்து பேசியவளுக்கு இல்லாமல் போக, “உங்கள பத்தி எதுவுமே எனக்கு தெரியல மாமா. உண்மையா என்னை காதலிச்சா இதையெல்லாம் மறைப்பீங்களா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க இன்னு என்கிட்ட இருந்து ஒதுங்கி இருக்குறத பாக்கும்போது. எப்பதா என் மனச புரிஞ்சு நடந்துப்பீங்க.” அடுக்கடுக்கான கேள்வியை முன் வைத்தாள் அவனிடம்.

எதற்கு திடீரென்று இந்த பேச்சு என புரியாதவன் விவரம் கேட்க, “உங்க சின்ன மதினி நீங்க பண்ண எல்லாத்தியும் காட்டுனாங்க. எத்தின தடவ வேலைக்கு போங்கன்னு சண்ட போட்டு இருப்ப. ஒரு தடவயாது எனக்கு இந்த மாதிரி திறமை இருக்குனு சொல்லி இருப்பீங்களா? மூணாவது ஆள் சொல்லித்தா உங்களை பத்தி தெரிஞ்சுக்க வேண்டியதா கெடக்கு.” என்றவள் பேருந்தை விட்டு இறங்கி கல்லூரி நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

“கொஞ்சோ மூச்சு வாங்கு தேனு. நீ பேசுறத பாத்தா எனக்கே மூச்சு வாங்குது.”

“என் கோபம் உங்களுக்கு கேலியா தெரியுதா மாமா”

“அப்டி சொல்லலமா தேனு. மூச்சு வாங்க பேசுற அளவுக்கு இதுல என்னா இருக்குனு கேக்குற.”

“என்னா இருக்கா?” என்றவள் அதிர்வில் நடப்பதை நிறுத்தினாள்.

அவன் சிரிப்பை பதிலாக கொடுத்து இன்னும் வெறுப்பேற்றினான் காதலியை. தேன்மொழியோடு ஒன்றாக வந்த தோழி நடுரோட்டில் நிற்கும் அவளை இழுத்துக் கொண்டு செல்ல, “நா எவ்ளோ தீவிரமா பேசிக்கிட்டு இருக்க நீங்க என்னாடான்னா சிரிக்கிறீங்க. எதுக்காக என்கிட்ட இத சொல்லாம மறைச்சீங்க?” விடாப்பிடியாக தன் வாதத்தில் நின்றாள்.

“நீ எங்க தேனு என்னை சொல்ல விட்டு இருக்க. ஆராய்ச்சி பண்றன்னு பேச்ச எடுத்தாலே இதுலா வெட்டி வேல சம்பாதிக்குற வழிய பாருங்கனு என் வாய அடச்சிடுற. பெறவு உனக்கு எப்படி சொல்லி புரிய வெக்க.”

ஒவ்வொரு முறையும் அவன் மனதில் இருக்கும் சிந்தனைகளை தேன்மொழியிடம் சொல்ல வருவான். அதையெல்லாம் புரிந்து கொள்ளாதவள் தேவையில்லாத வேலை என்று முட்டுக்கட்டை போடுவாள். காதலியின் எண்ணம் இது என்று அறிந்தவன் அதன் பின் அம்மாதிரியான பேச்சுகளை தவிர்த்தான். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அவனது திறமை தெரியும் என்றாலும் புதுப்புது ஆராய்ச்சிகளை செய்து கண்டுபிடித்திருக்கும் பல விஷயங்கள் தெரியாது.

மனம் விட்டு பேச இருக்கும் காதலியிடம் அதையெல்லாம் சொல்லி மகிழ நினைத்தவன் எண்ணம் நிலையாமல் போனது. அதை கெடுத்தவளே இன்று ஏனென்று காரணம் கேட்க, சிரிக்கத் தான் முடிந்தது அவனால்.

“நீங்க என்னா மாமா சொல்லுவீங்க அந்த மண்ண கைல எடுத்து பாத்த அதுல அந்த கார்பன் இருக்கு, இந்த நைட்ரஜன் இருக்கு. இதுல நெல்லை போட்டா அப்டி விளையும், அதுல கிழங்கு வெச்சா அவ்ளோ சத்து கெடைக்கும்… அது இதுனு தான.” என்றவள் அவன் திறமை அறியாது பல நாட்களாக முயன்று கொண்டிருக்கும் கனவையும் குறை சொன்னாள்,

“இந்த மாதிரி சொன்னத கூட கொஞ்சம் ஏத்துப்ப மாமா. ஆனா, சொன்னீங்க பாருங்க… வயலுக்கு நடுவுல மீனு வளர்க்க போறன்னு. ஆத்தாடி! அந்த மாதிரி கூத்த பண்ணீங்கனா ஊரே நம்மள பாத்து சிரிக்கும்.

“தேனு இன்னு உனக்கு என் நிலைப்பாடு புரியல சரியா. கூண்ட கட்டி ஆட்ட சுகமா வெச்சிருக்குறது மட்டும் என் எண்ணம் கெடயாது. இந்த ஊர்ல இருக்க சின்ன செடிய கூட ஆராய்ச்சி பண்ணி அதுல இருக்க மருத்துவ குணத்த கண்டுபிடிக்கணும். ஆங்கில உலகத்தை தேடி போற இந்த மக்களுக்கு நம்ம இயற்கை மருத்துவத்தோட குணத்த சொல்லித் தரணும். கூடவே விவசாயத்தையும் அதுல இருக்க சம்பாத்தியத்தையும் இப்ப இருக்க இளைஞர்கள் மத்தியில பரப்பனும்.” எனப் பேசிக் கொண்டே செல்ல,

“ஐயோ மாமா…..இதுலா வேணாம் போர் அடிக்குற விசயம். காலேஜ்லதா கண்டதையும் சொல்லி கடுப்பேத்துறாய்ங்கன்னு பாத்தா நீங்க அதுக்கு மேல இருக்கீங்க.” என சலித்துக் கொண்டாள் தேன்மொழி.

காதலியின் சலிப்பு சொல்ல வந்த வார்த்தையை வெளியிடாமல் அவனுக்குள் தேக்கி வைத்தது. தன் வார்த்தைக்கு பதில் சொல்லாமல் இடைவெளி விடும் செந்தமிழன் கோபமாக இருப்பதாய் உணர்ந்தவள், “சாரி மாமா கோவமா இருக்கீங்க போல.” என்றாள் சிறு குரலில்.

“இல்ல தேனு உன் மேல எதுக்கு நா கோபப்பட போற. உன்ன மாதிரி தான இப்ப இருக்க இளைஞர்கள் எல்லாரும் இருக்காய்ங்க. அது என்னாமோ தெரியல எனக்கு இந்த மண்ணு மேலயும் இயற்கை மேலயும் அப்டி ஒரு காதல். ஒவ்வொரு தடவயும் உங்கள மாதிரி வெளிய வரணுனு நெனைக்கும் போது என்னை கட்டிப்போட்டு அதிகமா காதலிக்க வெக்குது. நீ வேணா பாரு ஒரு நாளு இல்ல ஒரு நாளு நா ஆசைப்பட்ட மாதிரி நெல்லுக்கு நடுவுல மீனு வளர்க்கத்தா போற.”

“அப்போ நீங்க என்னை காதலிக்கலயா?” என்றவள் பேச்சுக்கு சத்தமாக சிரித்தவன் நிலத்தில் கால் வைத்தான்.

“உன்ன காதலிக்காம பெறவு ஆர காதலிக்க போற தேனு. நா சொல்ற காதல் வேற. ஒரு நாளு என்னோட இருந்து பாரு அப்ப தெரியும் அந்த காதலோட மகிமை என்னான்னு.”

“சரி மாமா, உங்கள கட்டிக்கிட்டு உங்க கூட தான வாழப் போற அப்ப பொறுமையா வந்து எல்லாத்தியும் தெரிஞ்சுக்குற. இப்ப எனக்கு மணி ஆவுது கிளாஸ்க்கு போற.” என வைத்து விட்டாள்.

காதலியை வழி அனுப்பி வைத்தவன் இயற்கை காதலியை சந்திக்க தயாரானான். நிலத்தை காலம் காலமாக பயிரிடும் வேலைக்கு மட்டுமே பயன்படுத்த, அதில் தமிழ்நாட்டு வகை மீன்களை வளர்க்க ஆசை கொண்டான்.

அதன் கழிவுகள் இயற்கை உரமாக நெற்பயிர்களுக்கு மாறுவதால் பயிரும் நன் முறையில் வளரும் என்ற நம்பிக்கை அவனுள்.
ஏற்கனவே அம்முயற்சியில் நிறைய விவசாயிகள் இறங்கி இருப்பதால் அவர்களின் உத்வேகம் இவனை இன்னும் ஆசை கொள்ள வைத்தது.

****

தாம்பத்தியம் இருவரையும் மெய்சிலிர்க்க வைத்து மீண்டும் நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்திருந்தது. கலைப்பில் கணவன் மார்பில் முகம் பதித்தவள் சிறு உறக்கத்தையும் மேற்கொள்ள, கட்டியவளை கை வளைவுக்குள் வைத்த மதுரவீரனும் உறங்க ஆரம்பித்தான்.

உறங்கும் தம்பதிகளை அவனது கைபேசி ஒலி எழுப்பி விட, மணியைப் பார்த்து அதிர்ந்தாள் ஒளிர்பிறை. தரையில் தனித்து விடப்பட்ட ஆடைகளை அரைகுறையாக உடுத்தியவள் படி இறங்கி கீழே வருவதற்கு முன் எட்டிப் பார்த்தாள் செந்தமிழன் இருக்கிறானா என்று.

மதினியின் மனம் அறியாதவனா! சங்கடத்தை கொடுக்கக் கூடாது என்பதற்காகவே எப்பொழுதும் செல்லும் நேரத்தை விட முன்னதாகவே சென்று விட்டான். இயற்கை வெளிச்சத்தோடு கூரையை பாதுகாப்பிற்கு வைத்து குளித்து முடித்தவள் ஈரத்தோடு புது சேலையையும் உடுத்திக் கொண்டாள்.

அவள் வருவதற்குள் மதுரவீரன் கீழ் இறங்கி வந்துவிட, “மாமா தண்ணி நிக்குறதுக்குள்ள போயி குளிச்சிட்டு வாங்க.” என்றவளை இழுத்துச் சென்றான் முதுகு தேய்த்து விட.

இப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்தேன் என அவள் அவ்வளவு போராடியும் ஏற்றுக் கொள்ளாதவன் தன் வேலைகளை முடித்துவிட்டே வெளியில் அனுப்பினான். கணவனை மனதில் வசை பாடியவள் உள்ளே வர, ஆண்டாள் வரவேற்றார் பொறாமையோடு.

மாமியாரை கண்டும் காணாமலும் கடந்தவள் அடுப்பை பற்ற வைத்தாள். சமையலை ஆரம்பிக்கும் முன்னர் குளித்து முடித்து வந்தவன்,

“ஒளிரு அந்த சிகப்பு கலரு சட்டைய எங்க வெச்சிருக்க?” என சத்தமிட்டான்.

“மேல பொட்டியில வெச்சிருக்க மாமா”

“எங்கன்னு தெரியல, வந்து தேடி குடும்மா”

“தெரியலன்னா என்னா மாமா அர்த்தம்? அங்க வெச்ச சட்டைக்கு கை காலா இருக்கு பறந்து போவ.”

“நெசமாத்தா சொல்லுற ஒளிரு என் கண்ணுக்கு அந்த சட்டை தெரியல. கூட வேல பாத்தவங்க போன வேற போட்டுட்டாய்ங்க சீக்கிரம் வந்து எடுத்துக்குடு.”

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை பாதி அளவிற்கு குறைத்தவள் அவளது அறைக்கு விரைய, பாதி துணிகளை அள்ளி கீழே போட்டிருந்தான் மதுரவீரன்.

“ஒரு சட்டைய தேடுறன்னு இருக்க மொத்த சட்டையயும் கீழ தள்ளி இருக்கீங்க. இப்ப இத ஆரு மடிச்சு வெக்குறது? இதுக்குத்தா உங்கள எடுக்க வுடுறது இல்ல.” என்றவள் வந்த உடனே அவன் கேட்ட சட்டையை எடுத்துக் கொடுத்தாள்.

கூடவே, “பாக்குற எடத்துல தான மாமா அந்த சட்டை இருக்கு. அத வுட்டுட்டு எங்கயோ இருக்க சட்டை எல்லாத்தியும் கலைச்சி போட்டு வெச்சிருக்கீங்க. கண்ணு கிண்ணு கெட்டு போச்சா.” என அதி தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, கணவனின் திடீர் அணைப்பு அதை நிறுத்த வைத்தது.

“காணமுன்னு சொன்னா தான என் பொண்டாட்டி மேல வருவா. நா இப்டி வாசம் புடிக்குற மாதிரி கட்டி பிடிக்க முடியும்.” குறும்புடன் குளித்தவளின் வாசத்தை நுகர்ந்தான்.

தலைமுடியை இழுத்து தள்ளிவிட்டவள், “ஏற்கனவே இன்னும் சோறு பொங்கல மாமா. இதுக்கு மேலயும் தொந்தரவு பண்ணிட்டு இருந்தீங்க எல்லாரும் பட்டினியாதான் கெடக்கணும்.” என கண்டிப்பது எல்லாம் வீணானது அவனது மீசை காதோரம் ஊர்ந்ததில்.

பேச்சு நின்று இணங்கி செல்லும் மனைவியின் செய்கையில் குறும்பு மின்ன அவன் சிரிக்க, அந்தச் சிரிப்பு தான் தோல்வியை ஞாபகப்படுத்தியது அவளுக்கு. உடனே விட்டு விலகியவள் இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைக்க, இடுப்பில் இருக்கும் கைகளுக்கு நடுவில் தன் கையை நுழைத்தவன் பின்பக்க நடு முதுகை இணைத்து தன் புறம் இழுத்தான்.

முறைக்கும் பார்வை கண்ணடிக்கும் கணவனின் பார்வையோடு கலந்து செல்ல, ஈரமான உதட்டை இன்னும் ஈரம் செய்தான் தன் உதட்டில் இருக்கும் ஈரத்தை கொடுத்து. கட்டிய புது சேலை இருவரின் வேகத்தில் கசங்கிப் போக, முத்தம் திணறி போனது மூச்சுக்காற்று இல்லாததால்.

விலகிய பின் தான் புத்தி மீண்டும் அறிவுரை கூற, “ஐய்யோ மாமா வுடுங்க. இதுக்கு மேல நா இங்க இருந்தா அய்த்த என்னை விலாசிபுடும்.” என மன்றாடினாள்.

பாவம் பார்த்து விட்டவன் சட்டையை போட்டு விடும்படி கோரிக்கை வைக்க, நிறைவேற்றியவள் நெற்றியில் முத்தம் ஒன்றை கொடுத்து வெளியேறினாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்