Loading

சீமை 28

“ஐயா ராசா… இப்ப நா என்னா பண்ணுவ. என் குலசாமிக்கு கண்ணு இல்லியா. என் புருசன பிரிச்சது போவாதுன்னு புள்ளைய பிரிக்க பாக்குதே. ஆரு கண்ணு உன் மேல பட்டுச்சினு தெரியலையே. ராசா கணக்கா சுத்திக்கிட்டு கெடந்த என் மகன அங்க கொண்டு போய் நிக்க வெச்சுட்டாங்களே. அவன் அறிவுக்கும் படிப்புக்கும் நிக்க வேண்டிய இடமா அது.” மகன் வரும்வரை ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தவர் பார்த்ததும் அவனை கட்டிக்கொண்டு பெரும் ஒப்பாரி வைத்தார் ஆண்டாள்.

“அம்மா எனக்கு ஒன்னு இல்லம்மா” என செந்தமிழன் அவரை சமாதானம் செய்து கொண்டிருக்க, “என்னாய்யா ஒன்னு இல்லினு சுலுவா சொல்லுற. உன்ன எதுக்குயா அங்க கொண்டு போய் உக்கார வெச்சாங்க.” ஒரே கேள்வியை பல வழிகளில் கேட்டுக் கொண்டிருந்தார் விடாமல்.

“நீயி நெனைக்குற மாதிரி பெரிய விசயம் எல்லாம் இல்லம்மா இது. சின்னதா சொசைட்டியில நடந்த பிரச்சனைக்கு விசாரிக்க கூட்டிட்டு போனாய்ங்க. பெருசு பண்ணாம அழுகைய நிறுத்து.”

“பெருசு பண்ணாம எப்டி ராசா இருக்க முடியும். ஏற்கனவே உங்க அப்பன ஜெயிலுக்கு தூக்கி குடுத்துட்டு உக்காந்திருக்க. உன்னயும் தூக்கி குடுத்துட்டா நா என்னா ராசா பண்ணுவ.”

“அம்மா அவன்தா சொல்றானே ஒன்னு இல்லினு அப்புறம் எதுக்கு ஒப்பாரி வெச்சுக்கிட்டு கெடக்க. ஆருக்கும் தெரியாத விசயத்தை நீயே காட்டி குடுத்துடாத.” என்ற பெரிய மகனின் வார்த்தையை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் பாட்டுக்கு அழுது கொண்டிருந்தார்.

“யம்மா! அண்ணதா நல்லபடியா வூட்டுக்கு வந்துடுச்சில அப்புறம் எதுக்கு அழுவுற” இமையவன்.

“பெத்தவ வயிறு எரியுறது உங்களுக்கு எங்கடா புரியும். ஒன்னு கெடக்க ஒன்னு ஆகி இருந்தா இவன பாத்திருக்க முடியுமா.”

“அதா எதுவும் ஆகலயே சும்மா அதியே பேசிக்கிட்டு கெடக்காம நகரும்மா. அண்ண குளிச்சிட்டு சாப்ட போவட்டும்.” எழில்குமரன்.

நான்காவது மகனை கடுமையாக முறைத்தவர் இரண்டாவது மகனை பார்த்து, “கொஞ்சமாது இவங்களுக்கு உன் மேல அக்கறை இருக்கானு பாருய்யா ராசா. என்னாமோ டவுனுக்கு போயிட்டு வந்த மாதிரி குளிச்சிட்டு சாப்பிட சொல்றாய்ங்க.” என முரண்டு பிடித்தார்.

“பெறவு உன்ன மாதிரி நடு வாசல்ல மடக்கி வெச்சு அழுக சொல்லுறியாம்மா.” என்ற இளையவனின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் அழுது கொண்டிருந்ததார்.

யார் சமாதானம் செய்தாலும் அடங்க மாட்டேன் என்பது போல் வீட்டின் உள்ளே கூட நுழைய விடாமல் கட்டியணைத்து அழுது கொண்டிருக்கிறார் ஆண்டாள். ஒரு கட்டத்திற்கு மேல் செந்தமிழினால் கூட அவர் அழுகையை சகித்துக் கொள்ள முடியாமல் போக,

“அய்த்த போவ‌க்கூடாத எடத்துக்கு போயிட்டு வந்துருக்காங்க குளிச்சிட்டு வரட்டுமே.” என்றாள் ஒளிர்பிறை.

அதுவரை அழுது கொண்டிருந்தவர் வெடுக்கென்று திரும்பி, “காலையில உன்ன ஏசுனதுக்கு உன் புருச அப்டி வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்தானே இப்ப பாத்தியா என்னா ஆச்சுனு.” என்றிட, ஒன்றும் புரியாமல் கணவனை பார்த்தாள்.

“அவன என்னாடி பாக்குற? சுத்த பத்தமா குலசாமிய தொடுன்னு உன் புத்திக்கு உரைக்காத நாளு இல்ல. நீ பண்ண பாவத்துக்கு காலையில அவன இரத்த காவு வாங்குன. இப்போ இவன போலீஸ் ஸ்டேஷனுக்கு போவ வெச்சிட்ட. இத பாக்கத்தான இம்புட்டு வேலையும் பாத்த. இப்போ உன் மனசுக்கு சந்தோசமா” என்றவரின் பேச்சு அங்கிருந்த எவருக்கும் பிடிக்காமல் போனது.

அன்னையை எதிர்த்துப் பேச வரும் மதுரவீரனின் கையை பிடித்தவள், “வேணா மாமா வுட்டுருங்க.” என்றாள் கெஞ்சிய முகத்தோடு.

மனைவியின் கெஞ்சலுக்காக அவன் பொறுமை காக்க, “இதே மாதிரி நடிச்சு நடிச்சு என் குடும்பத்த இங்க கொண்டு வந்துட்ட. இன்னும் என்னா பண்ண காத்திருக்க. தெரியாத்தனமா உன்னய வூட்டுல விளக்கு ஏத்த வுட்டு என் குடும்பவிளக்கு மொத்தமா அணைய போவுது.” என தலையில் அடித்துக் கொண்டார்.

“அம்மா நீயி பேசுற ஒன்னு கூட நல்லா இல்ல. அவளை கட்டிக்கிட்டு வந்தவன் நா இன்னு உயிரோடதா இருக்க. எம் முன்னாடியே என் பொண்டாட்டிய இப்டி பேசிக்கிட்டு இருந்தினா மருவாதி இருக்காது.” என்ற மதுரவீரனை தடுத்துக் கொண்டிருந்த மருமகள் மீது இன்னும் அவருக்கு கோபம் அதிகரித்தது.

“சும்மா பொண்டாட்டி பொண்டாட்டின்னு ஆடாத பெரியவனே. ஊரு உலகத்துல உனக்கு மட்டும்தா பொண்டாட்டி இருக்காளா. இன்னிக்கு என் மகன் ஸ்டேஷனுக்கு போனதுக்கு கூட இவதா காரணம் தெரியுமா உனக்கு?”

“வாய் இருக்குனு பேசிக்கிட்டே போவாதம்மா அப்டி என்னா பண்ணிட்டா இவ?”

“சொசைட்டிக்கு காலைல இவதா பால எடுத்துட்டு போறதா இருந்துச்சு. அப்புறம் என்னா நோவு வந்துச்சோன்னு தெரியல. என் புள்ளை கிட்ட குடுத்து இப்டி ஆக்கிப்புட்டா.” என்றவர் அத்தோடு நிறுத்தி இருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். ஆனால்,

“இவளுக்கு எந்த நோவு வரப்போகுது. புருச கூட இருக்க ஆசை வந்திருக்கும் அதா என் புள்ளைய அனுப்பி வுட்டுட்டா.” என்றார்.

மாமியார் விட்ட வார்த்தையில் காதுகள் இரண்டும் கூசியது மருமகளுக்கு. அவை முகத்தில் அப்படியே அருவருப்பான பாவனையாக வெளிவர, கலங்கும் கண்களை காட்டாமல் இருக்க முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“அம்ம்ம்ம்மா” என்ற மதுரவீரனின் ஒரே குரல் அக்கம்பக்கத்தில் இருக்கும் அத்தனை வீடுகளையும் அலறவிட்டது. எதிர் வீட்டில் இருந்த மச்சக்காளையன் குடும்பமும் அதில் இவர்கள் வீட்டை ஒன்று போல் திரும்பி பார்த்தனர்.

“ஆர என்னா பேசுறன்னு யோசிச்சு பேசு. பெத்தவளாச்சேன்னு நீயி பேசுற எல்லாத்துக்கும் பொறுமையா இருக்க. இதுதா உனக்கு முதலும் கடைசியுமா இருக்கணும். இனி ஒரு தடவ என் பொண்டாட்டிய தப்பா பேசுறத பாத்த அம்மானு கூட பாக்காம பேசுற நாக்க அறுத்திடுவ.” அந்தத் தெரு மொத்தத்திற்கும் கேட்டிருக்கும் அவன் கர்ஜித்த ஓசை.

அவன் கோப உச்சத்தை கண்டு திகைத்த சாமந்தி அவர்கள் வீட்டை நோக்கி நகர எழ, “வேணா உக்காரு” என தடுத்தான் மச்சக்காளையன்.

“இல்ல மாமா… அங்க ஏதோ பிரச்சன போல.” எனத் தோழிக்காக அவள் வருத்தப்பட,

“நீயி போனா இன்னு பெருசாவும். இருக்குற பிரச்சனைய முடிக்கவே இங்க வழி இல்ல. இதுல நீயி புதுசா ஒரு பிரச்சனைய உருவாக்கிட்டு வராத.” என போகக் கூடாது என்றதை பேச்சால் புரிய வைத்தான்.

தோழியின் வீட்டை திரும்பிப் பார்த்து வருத்தம் கொண்டவள் கணவன் வார்த்தையை மீற முடியாமல் அப்படியே முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்தாள்.

“எல்லாம் உங்களால வந்துச்சு. போற ஒரு எடம் வுடமா பிரச்சனை பண்ணிக்கிட்டே இருப்பீங்களா. நீங்கதான பிரச்சனை பண்ணீங்க எதுக்குடா அவன இதுல இழுத்து வுட்டீங்க.” வரும் வழியிலேயே முழு தகவலையும் தெரிந்து கொண்டவன் கடிந்தான் தம்பிமார்களை.

“நாங்க வேணுனே பிரச்சனை பண்ணல ண்ணா. அவருதா கணக்க தப்பா காட்டி ஏமாத்தப் பாத்தாரு. அது சம்பந்தமா பிரச்சனை பண்ணிட்டு இருக்கும் போது தமிழு அண்ண உள்ள வந்தாரு.” என முழுதாக சிலம்பன் பேச்சை முடிக்கும் முன்னர் பயந்து பேச்சை நிறுத்தி விட்டான்.

செந்தமிழனை “அண்ணன்” என்று குறிப்பிட்டதால் மச்சக்காளையன் முகத்தில் அப்படி ஒரு சீற்றம். கருவிழிகள் பொசுங்கிப் போகும் அளவிற்கு இருந்தது அவனின் பார்வை. சிலம்பனோடு பேச வந்த மொழியன் அப்பார்வையை உணர்ந்து பேச்சிழந்து விட்டான்.

“ஆருடா உனக்கு அண்ண? உனக்கு ஒரே ஒரு அண்ண நா மட்டும்தா எப்பவும் மறந்துடாத. தப்பு உங்க மேல இல்லினு மன்னிச்சு வுடுற. இனி ஒரு தடவ அந்த பக்கம் நீங்க போவக்கூடாது. முக்கியமா எவனையும் அண்ணனு சொல்ல கூடாது.” மதுரவீரனுக்கு குறைந்தது இல்லை மச்சக்காளையன் குரல் என்பதை நிரூபித்து விட்டான் அதிர்ந்து பேசி.

***

“மாமா” தடுக்கும் விதமாக கைப்பிடிக்கும் மனைவியின் கையை உதறிவிட்டவன்,

“இவ உனக்கு என்னாம்மா பண்ணிட்டா அப்டி? நா வாய மூடிட்டு இருக்குறதால என்னா வேணா பேசலாம்னு நெனைக்குறியா. உன் கூட பொறந்தவன் பொண்ணு தான இவ. என்னாமோ வேத்த ஆளு மாதிரி இந்தா பேச்சு பேசுற. நீ பேசுற பேச்சுக்கு வேற எவளாது இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் என் பொண்டாட்டியோட அருமை என்னான்னு.” விடாமல் புகைந்து கொண்டு இருந்தான் வார்த்தையால்.

“மாமா கோபத்துல வார்த்தைய வுடாதீங்க”

“வாய மூடு ஒளிரு. பேச வேண்டிய விசயத்தை பேசாம கம்முனு போனதால தான் இங்க வந்திருக்கு.” தடுக்கும் மனைவியை சத்தம் போட்டவன்,

“புருச கூட இருக்குறதுல அப்டி என்னா தப்ப கண்டுட்ட நீயி. என் பொண்டாட்டி மட்டும் இல்ல உலகத்துல இருக்க எந்த பொண்டாட்டியும் புருச கூட இருக்கணுனுதா நெனைப்பா. இவளை வுட நல்ல மருமக கெடைச்சிடுவாளா உனக்கு. உனக்கு இன்னும் நாலு பசங்க இருக்காயாங்க. அவங்களுக்கு வரவங்களை பாத்துட்டு அதுக்கப்புறம் என் பொண்டாட்டிய பத்தி பேசு.” என்றவன் திட்டு வாங்கியும் தடுத்துக் கொண்டிருக்கும் மனைவியை முறைத்துக் கொண்டே இழுத்துச் சென்றான் அவர்கள் அறைக்கு.

“எதுக்கு ம்மா உனக்கு இந்த வேண்டாத வேல. நீயி பேசுனது எனக்கு ஒன்னு சரியா படல. என்னிக்கும் அமைதியா இருக்க அண்ணனையே இப்டி பேச வெச்சுட்ட. ஆனாலும் அண்ண சொன்ன வார்த்தை நூத்துக்கு நூறு உண்மை. எங்களுக்கு வர்றவங்க எப்டி வருவாய்ங்கன்னு தெரியாது. ஆனா, மதினி அளவுக்கு இந்த வூட்டயும் உன்னயும் பாத்துக்குறது ரொம்ப கஷ்டம்.” என்ற செந்தமிழன் தன்னை சுத்தம் செய்வதற்காக பின் வாசல் பக்கம் சென்று விட்டான்.

குளிக்கச் சென்றவன் தன் உடைகளை கழட்டி வைக்க, பத்தாவது முறையாக கைபேசி அதிர்ந்து அடங்கியது. காதலி தான் அழைக்கிறாள் என்று தெரிந்தும் சூழ்நிலை சரியில்லாததால் எடுக்கவில்லை செந்தமிழன். இதற்கு மேலும் காக்க வைக்க விரும்பாமல் அதை எடுத்தவன்,

“மன்னிச்சிரு தேனுமா… ஒரு பிரச்சனைல மாட்டிக்கிட்ட. அதா உன்னோட போன எடுக்க முடியல.” திட்ட வந்தவள் இவனது வார்த்தையை கேட்டு குழப்பம் கொண்டாள்.

“என்னா சொல்றீங்க?” என்றவளுக்கு நடந்ததை விவரித்தான்.

அண்ணன் விஷயம் கேள்விப்பட்டு இன்றைய படிப்பிற்கு விடுமுறை கொடுத்த மீதமிருந்த அண்ணன் தம்பி மூவரும் ஒளிர்பிறையை நினைத்து வருத்தத்தோடு நகர, மகன் திட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டின் மூலையில் அமர்ந்து சத்தம் இல்லாமல் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார் ஆண்டாள்.

இன்று சபிக்கும் வாய் ஊர் பஞ்சாயத்தில் மருமகளை பெருமை பேச போவதையும், அவள் போல் ஒரு பெண் இவ்வுலகில் இல்லை என்று மார் தட்டும் தருணமும் இவரால் அரங்கேற போவதையும் அறிந்த அழுகை சிரித்தது.

சீமை 29

படுக்கை அறை அதிர நடந்து கொண்டிருந்தான் மதுரவீரன். கை இரண்டையும் பின்னால் பிணைத்துக் கொண்டவன் முகம் இறுகிய நிலையில் காட்சி அளித்தது.‌ கண் இமை முடிகள் ஒன்றோடு ஒன்று சேராத அளவிற்கு முறைத்துக் கொண்டே இருந்தான். அடிக்கடி தாடை ஓரத்தில் இருக்கும் எலும்புகள் புடைத்துக் கொள்வதை வைத்து கோபத்தின் அளவை தெரிந்து கொண்டாள் அவனின் மனைவி.

உள்ளே வரும் வரை கைப்பிடித்துக் கொண்டு வந்தவன் அறையினுள் வந்ததும் உதறித் தள்ளி விட்டு நடக்க ஆரம்பித்தவன் தான் பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் இவையே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. கட்டில் நுனியில் அமர்ந்துக் கொண்டு அவனையே பார்த்திருந்த ஒளிர்பிறை,

“மாமா” என்று அழைத்தாள்.

காதில் விழுந்தாலும் இருக்கும் கோபத்திற்கு பதில் கொடுக்காமல் அவன் நடந்து கொண்டே இருக்க, “தமிழு குளிக்க போய் இருக்கான் மாமா தலையில எண்ணெய் வெச்சிட்டு வாங்க.” என கணவனின் முறைப்பை வாங்கிக் கொண்டாள்.

அதில் தலையை குனிந்துக் கொண்டவள் சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து, “போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்தா தீட்டு பிடிக்குனு சொல்லுவாய்ங்க மாமா. அதா சொல்ற கொஞ்சம் எண்ணெய் வெச்சி குளிக்க சொல்லுங்க. இனி ஒரு தடவ அங்க போவக்கூடாதுல” சொல்லி முடிப்பதற்குள் பல ஏற்ற இறக்கங்களை கையாண்டது அவளுக்குள் இருக்கும் மூச்சுக்காற்று.

மனைவியின் வார்த்தைக்கு பின் கோபத்தில் நடந்த கால்கள் அவளை நோக்கி திரும்ப, நுனியில் அமர்ந்திருந்தவள் எழுந்து நின்றாள். தன் முகத்தை கட்டியவள் முகத்தோடு நெருக்கமாக வைத்தவன்,

“என்னா அம்மணி நீயி இப்டி இருக்க. பேசக்கூடாத வார்த்தைய பேசுறாங்க அப்ப கூட வூட்ல இருக்குறவங்க மேல அக்கறை படுற. அப்டி என்னத்த செஞ்சுட்டாங்க இங்க இருக்கவங்க.” இவ்வளவு ஏச்சுப் பேச்சுக்களை வாங்கிக் கொண்டும் தன் குடும்பத்தின் மீது அக்கறையாக இருக்கும் மனைவியின் குணத்தில் நொந்து போயே இவ்வார்த்தையை கேட்டான்.

பதில் கொடுக்காமல் ஒளிர்பிறை மௌனம் காக்க, “இந்த மாதிரி நீயி அமைதியா இருக்குறத பாக்கத்தா ரொம்ப வலிக்குது அம்மணி. பதிலுக்கு பதிலு ஏதாச்சும் பேசிடு. இல்லினா தாலி கட்டி கூட்டி வந்து உன்ன கஷ்டப்படுத்துறதா எம்மேலயே எனக்கு கோபம் வரும்.” என்றதற்கும் அவளிடம் பதில் இல்லை.

அதை உணர்ந்தவன் இருக்கும் கோபத்தை எல்லாம் ஒரே பெருமூச்சில் இழுத்து தன்னை நிதானித்தான். கணவனின் நிதானம் அவனிடம் திரும்பியதை அறிந்தவள்,

“அய்த்த ஒருத்தரு பேசுறது மட்டும்தா உங்க கண்ணுக்கு தெரியுது மாமா. ஆனா, நீங்க அஞ்சு பேரு பெத்த அம்மா கிட்டயே என்னை வுட்டுக் குடுக்காம பேசுற அந்த அன்புதா எனக்கு தெரியுது. கட்டிக்கிட்ட பொண்டாட்டிக்காக நீங்க குதிக்கலாம். உங்க கூட பொறந்தவங்க எதுக்காக குதிக்கணும்? அடிக்கடி சொல்லுவிங்களே என்னை வுட்டுட்டு வெளிய போறதா. அப்போ எல்லாம் இன்னிக்கு நீங்க பேசுன மாதிரி உங்க கூட பொறந்த நாலு பேரும் பேசுவாய்ங்க.” ஓரத்தில் ஒட்டி இருந்த கோபம் கூட இந்த பேச்சில் கரைந்து விட்டது மதுரவீரனுக்கு.

மனைவியோடு மெத்தையில் அமர்ந்தவன் அவள் கையை தன் உள்ளங்கையில் வைத்து தடவி கொடுத்து, “அதுக்காக அவங்க பேசுற பேச்சு எல்லாத்தியும் கேட்கணுமா. ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மணி எனக்கு.” என்றிட,

“அய்த்த பேசுறது எனக்கும் பிடிக்காதுதா மாமா. ஆனா, என்னா பண்ண முடியும். புடிக்காததை வுட புடிச்ச என் புருச எனக்கு பெருசா தெரியுறாரு. நா அவர மட்டும் இல்ல அவர எனக்கு குடுத்த அவங்க அம்மாவையும் நேசிக்குற.” கனிவான முகத்தோடு பேசும் ஒளிர்பிறையின் வார்த்தைக்கு இந்த முறை பதில் இல்லை அவளின் கணவனிடம்.

காமம் இல்லாத அன்பு முத்தத்தை பரிசளித்தான் நெற்றிக்கு. நெற்றியை அவன் உதட்டில் இருந்து நகர்த்தாதவள் அப்படியே கட்டிக்கொள்ள, “நீயி பேசுறத கேட்டு சந்தோசப்படவா இல்ல வருத்தப்படவான்னு தெரியல அம்மணி. ஆனா, நா ரொம்ப குடுத்து வெச்சவனு மட்டும் புரியுது. உன்ன கட்டிக்கலன்னா என் வாழ்க்கை என்னா ஆகி இருக்குனு நெனைக்கவே பயமா இருக்கு.” தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டவன் அனுபவித்து கூறினான்.

“என்னா மாமா ஆகி இருக்கப் போவுது. எதுத்த வூட்ல இருக்காரே அவர நீங்க அடிச்சி இருப்பீங்க. அவரு பதிலுக்கு உங்கள அடிச்சு இருப்பாரு. உங்கள பெத்தவருக்கு அடுத்து நீங்க ஜெயிலுக்கு போயி இருப்பீங்க அவ்ளோதா.” சாய்ந்திருந்த மார்பிலிருந்து நகர்ந்தவள் கேலியோடு புன்னகைக்க, “அடியே…” என அடிப்பது போல் கை உயர்த்தினான்.

“மதுரவீர கிட்ட சொல்லிடுவ” என்றவளை அடிக்க உயர்ந்த கை அவளின் காதை திருகி, “என்கிட்டயே என்னை பத்தி சொல்லுவியா.” என்றது அவள் குறும்பில் கலந்து கொண்டு.

“ஆமா சொல்லுவ”

“என்னா சொல்லுவ சொல்லு பாப்போம்” என்றதும் அவன் சட்டை கலரை பிடித்து தன்னோடு இழுத்தவள், “என்னை அடிச்சின்னா என் புருச மதுரவீர உன் கைய வெட்டிடுவாருனு சொல்லுவ.”  என்று உதட்டை அவன் சங்கில் பொருத்தினாள்.

சிரிக்கும் அசைவுக்கு ஏற்ப அந்த இடம் சுழிவோடு ஏறி இறங்க, அழுத்தமான முத்தம் தடை போட்டது அந்த செயலுக்கு. தாடைக்கு மேல் இருக்கும் உச்சந்தலையை நுகர்ந்து அங்கு இதழ் பதித்தவன் என்னமோ பேசினான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி. பதிலுக்கு காதல் மொழிகளை இடம் மாற்றியவள் பழைய நிலைமைக்கு மாற்றினாள்.

முற்றிலும் இருந்த கோபம் இருத்த இடம் தெரியாமல் ஓடிவிட, “கீழ போங்க மாமா.” என அனுப்பி வைத்தாள்.

“அம்மணி உன்ன என்னா செய்யுறதுனு புரியல.” என கொஞ்சலாக நொந்துக் கொண்டவன் இதழ் பதித்து விட்டு சென்றான்.

***

குளிக்க சென்றவன் காதலி அழைத்ததால் அவ்வேலையை செய்யாமல் பேசிக் கொண்டிருந்தான். யாரும் தன்னை கவனிக்கவில்லை என்ற எண்ணத்தில் அவன் பேசிக் கொண்டிருக்க, தொட்டிக்குப் பின்னால் அமர்ந்திருந்த மூன்று வானரங்களும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டது.

வருத்தத்தோடு பின் பக்கம் வந்த கவிநேயன் காதில், “என்னா ஆனாலும் சரி உன்ன என்னிக்கும் கைவுட மாட்ட தேனு.” என்ற செந்தமிழனின் பேச்சு சத்தம் காதில் விழுந்தது.

மூளை கார பொடியன் கண்களை உருட்டி ஒட்டு கேட்க ஆரம்பித்தான். செந்தமிழன் எதிர்ப்புறத்தில் விசயம் அறிந்து அழும் காதலியை தொடர்ந்து சமாதானம் செய்து கொண்டிருக்க, ‘இந்த பூனையும் பால் குடிக்குமா’ என்ற ஆச்சரியத்தோடு மீதமிருந்த இருவரையும் சத்தம் இல்லாமல் அழைத்து வர நகர்ந்தான்.

வருத்தத்தில் அமர்ந்திருந்த இருவரும், “கிறுக்கா என்னாடா உளறிட்டு கெடக்க. இந்த ஊருல ஆர சொன்னாலும் நம்புவடா நம்ப அண்ணன தவிர.” என்றார்கள்.

“அட! ஜெயில்ல இருக்க நம்ம அப்பா மேல சத்தியமா அண்ண ஒரு பொண்ணு கூட கடலை போட்டுக்கிட்டு இருக்கு.” என்றவன் அவர்கள் இருவர் தலையிலும் கை வைக்க,

“அட நார பயலே! அதுக்கு ஏன்டா என் தலையில கை வெக்கிற” என தட்டி விட்டான் இமையவன்.

“சரி இவன் மேல சத்தியம் பண்ற.” என எழில்குமரனின் மீது கவிநேயன் கை வைக்க, “கைய ஒடச்சி சோறாக்குற அடுப்புல வெச்சிடுவ.” வெடுக்கென்று தன் தலை மீது இருந்த கையை தட்டி விட்டான்.

“எடேய்! நா சொல்றதுல நம்பிக்கை இல்லினா என் கூட வாங்கடா.” என போராடி வர மறுத்தவர்களை எப்படியோ அழைத்து வந்தான்.

அதற்குள் பேசிக் கொண்டிருந்த செந்தமிழன் நீர்த்தொட்டி ஓரம் அமர்ந்து விட, எதுவும் கேட்கவில்லை மூவருக்கும். ஒட்டு கேட்கும்படி காதை தூக்கி வைத்திருந்த சிறியவனின் தலையில் அடித்த எழில்குமரன்,

“எதும் கேக்கலயேடா” என்றான்.

“ஆமாடா, இந்த கிறுக்கு பையன் எதியோ கேட்டுட்டு வந்து உளறிட்டு கெடக்கா” இமையவனும் எதுவும் கேட்காத கடுப்பில் அவன் தலையில் ஒன்று வைத்தான்.

திரும்பி அமர்ந்து அண்ணன்கள் இருவரையும் கடுமையாக முறைத்தவன், “என் கூட பொறந்திட்டு எப்டிடா இப்டி அறிவே இல்லாம கெடக்கீங்க.” என்று புலம்ப, இருவரும் மாத்தி மாத்தி அடித்து துவைத்தார்கள் அவனை.

“தேனுமா நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கும் அழுவாத.” காதலி அழுவதால் சற்று சத்தத்தை ஏற்றி செந்தமிழன் பேசினான். ஏற்கனவே கேட்ட மொழியன் கவனமாக அடுத்த வார்த்தையை கேட்க ஆரம்பிக்க, புதிதாக கேட்ட இருவரும் திகைத்தனர்.

“எடேய்! நம்ப அம்மாஞ்சி அண்ணனாடா  இது.” எழில்குமரன்.

“எனக்கு மயக்கமே வர மாதிரி இருக்கு என்னை புடிங்கடா.” என தரையில் சாய்ந்தான் இமையவன்.

“நா அப்பவே சொன்ன கேட்டீங்களாடா முட்டா பசங்களா. இதுக்குத்தா ஊமை ஊரக் கெடுக்குனு அம்மாம் பெரிய பழமொழிய வெச்சிருக்காய்ங்க போல.” என்றான் கவிநேயன்.

“தேன்மொழி நா சொல்றல அழுகய நிறுத்து.” என்றதும் மூவருக்கும் தூக்கிப் போட்டது.

உடனே யார் என்பதை கண்டு கொண்டவர்கள் வாயில் கை வைத்துக் கொண்டு மெதுவாக அவன் அமர்ந்திருக்கும் தொட்டிக்கு பின்னால் அமர்ந்தார்கள். வானரப் படைகளின் உளவு வேலையை அறியாதவன் ஏதேதோ பேசி வசமாக மாட்டிக் கொண்டான்.

“மனசு ஓரத்துல அந்த தேன்மொழியா இருக்காதுனு ஒரு சின்ன நம்பிக்கை இருந்துச்சுடா தம்பி.” இமையவன் சின்னவன் கவிநேயன் மடியில் சாய்ந்தான்.

“இந்த கூத்த இவன் எத்தினி நாளா பண்றானு தெரியலியே. எப்ப பாரு மரோ, செடி, கொடினு இவன் பேசிக்கிட்டு கெடந்தது அதுங்க மேல இருந்த அக்கறையில இல்லிடா. மதினி தங்கச்சி மேல இருந்த காதல் பைத்தியத்தால.” அரைகுறை மயக்கத்தில் எழில்குமரனும் அண்ணனைப் போல் இளையவனின் தலைப்பக்கம் சாய்ந்தான்.

‘பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டுடாய்ங்க போல’ மனதினுள் அண்ணன்களுக்காக வருத்தப்பட்ட கவிநேயன் ஏசுநாதர் போல் இருபுறமும் கைநீட்டி இருவரையும் அரவணைத்துக் கொண்டான்.

“நா இருக்கடா உங்களுக்கு” என தடவிக் கொடுக்க,

‘இதா வாய்ப்புனு இவன் வேல காட்டுறான்டா’ என பார்வை பரிமாற்றம் செய்தனர் மயங்கிய இருவரும்.

“தமிழு” என்ற பெரிய அண்ணனின் குரலில் திடுக்கிட்டவன் அவசரமாக “தேனு அண்ண குரல் கேக்குது நா அப்புறம் கூப்பிடுற.” என வைத்து விட்டான்.

அதற்குள் அழைத்த மதுரவீரன் அவன் அருகில் வந்து, “குளிச்சு முடிச்சிட்டியா” என விசாரிக்க, “இல்லினா குளிக்கலானு சட்டைய கழட்டுன அதுக்குள்ள ஒரு வேல வந்துடுச்சு.” பதட்டத்தோடு சமாளித்தான்.

“சரி கிழக்கால பாத்த மாதிரி கொஞ்சம் உட்காரு.” என்றதும் அவன் அப்படி அமர,

“அடுத்தவய்ங்க வம்ப உன் தலையில எதுக்கு போட்டுக்குற. ஏற்கனவே அப்பாவ தொலைச்சிட்டு நா தூக்கம் இல்லாம அலைஞ்சிக்கிட்டு கெடக்க. நீயும் எதையாச்சு பண்ணி என்னை நிம்மதி இல்லாம ஆக்கிபுடாத. உங்க நாலு பேருல ஆருக்காச்சு ஒன்னு ஆகி போச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாது தமிழு.” என்றவன் உச்சந்தலையில் நல்லெண்ணையை வைத்தான்.

“அவங்க அடுத்தவங்க இல்லியே ண்ணே ஒதுங்கி போக. என் தம்பிமார ஆராது அடிச்சா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா?” என்றவன் பேச்சில் கோபம் எழுந்தாலும் காட்டிக்கொள்ளாமல் மூன்று முறை எண்ணெய் வைத்து முடித்தவன்,

“குளிச்சிட்டு வா.” என அனுப்பி வைத்தான்.

அண்ணன் முகத்தை வைத்தே என்ன நினைக்கிறான் என்பதை புரிந்து கொண்டவன் பேச்சை வளர்க்காமல் குளிக்கச் சென்று விட, “என்னாமா அப்பாவியா நடிக்கிறான்டா.” புலம்பினார்கள் மூவரும்.

“அங்க உக்காந்துக்கிட்டு என்னாடா பண்றீங்க?” என்ற மதுரவீரன் குரலில் அலறி அடித்து எழுந்து நின்றவர்கள் திருதிருவென்று முழித்தார்கள்.

“உங்களை தான் கேக்குற எதுக்கு அங்க உக்காந்துக்கிட்டு இருக்கீங்க?”

“கண்ணாம்பூச்சி விளையாடுறோம் ண்ணே.” என கேவலமாக சமாளித்தான் இமையவன்.

“எருமை மாடு வயசுல என்னாடா இது விளையாட்டு. போய் புத்தகத்த எடுத்து படிங்கடா.” விரட்டி அடித்தான் மூவரையும்.

“இந்தக் கட்டபொம்ம கண்ணுல ஒரு துரும்பு கூட தப்பிக்காது போல டா. கடலை போட்டுக்கிட்டு இருந்த அவன் கூட கவனிக்கல.” மூவரும் புலம்பிக்கொண்டே ஓடினார்கள்.

தம்பிமார்களை அதட்டி விரட்டி விட்டவன் குளிக்கும் தம்பியின் இடத்தை திரும்பி பார்த்தான். நெற்றி சுருங்கி யோசனையில் முடிந்தது. கடைசியாக தம்பி பேசிய வார்த்தை அரைகுறையாக கேட்டதாக நினைவு‌. என்னவென்று கண்டு கொண்டவன் மனம் என்ன நினைக்கிறது என்று இறைவன் மட்டுமே அறிவான்‌.

சீமை 30

உச்சி வெயில் மண்டையை சூடாக்கியது சிலம்பனுக்கு. ஆனால், பக்கத்தில் அமர்ந்திருந்த மொழியனுக்கோ இதமாக இருந்தது. காரணம் அண்ணன் தாக்கும் வெயிலுக்கு ஏற்ப எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்து குளிர்வித்துக் கொண்டிருந்தான்.

அவர்களுக்கு பக்கத்தில் சாமந்தி சுடுநீர் வைத்துக் கொண்டிருக்க, “முடிய எதுக்குடா இப்டி பரட்டை மாதிரி வெச்சிருக்க.” தலையில் “தொப்” என்று அடித்தான் மச்சக்காளையன்.

சுகம் கண்ட உடல் அடித்ததில் அதிர, “தலையில எண்ணெய் வெச்சா தான மாமா. தெனமும் நாயா கத்திக்கிட்டு கெடக்க கொஞ்சமாது தேங்கா எண்ணெய்ய தலையில வெய்ங்கடானு. ஆம்பள புள்ளைங்க வெக்க கூடாதுனு சாக்கு சொல்லி தப்பிச்சிடுறாய்ங்க.” போட்டு கொடுக்கக் கூடாத நேரத்தில் போட்டுக் கொடுத்தாள் சாமந்தி.

முன்பு அடித்ததை விட உச்சந்தலையில் வேகமாக ஒன்றை வைத்தவன், “ஆமா இவரு நூறு பேரு கூட சண்ட போடுற அளவுக்கு ஆம்பளையா வளந்துட்டாரு தலையில எண்ணெய் வெக்க கூடாது.” என்றான்.

“அண்ணா காலையில நா சண்ட போட்டத நீயி பாத்து இருந்தினா இப்டி சொல்ல மாட்ட. அந்த சிவகுமார ஒத்த ஆளா சட்டைய புடிச்சி ஓங்கி ஒன்னு வெச்ச பாருங்க ஆளு அப்டியே மண்ணுல சாஞ்சிட்டாரு.”

“அண்ணே இவன் பொய் சொல்றா. அவரு தா இவன அடிச்சு அந்த மாதிரி படுக்க வெச்சாரு.” வெட்டி பந்தா காட்டும் தம்பி மானத்தை வாங்கினான் சிலம்பன்.

“உனக்கு பொறாமைடா கிறுக்கு பயலே உன்ன வுட சின்ன பையனா இருந்துட்டு அவர அடிச்சனு.” என்றவன் வாயில் அடித்த மச்சக்காளையன்,

“என்னாடா இது அவன வாடா போடானு பேசுற. அண்ணன்னு மருவாதி இல்லியா உனக்கு.” என அடக்கினான்.

அடி வாங்கிய தம்பியை கண்டு சிலம்பன் வாயை மூடி சிரிக்க, “நானாது பரவால’ண்ணா அவன தான் டா போடுற. அவன் உன்னயே டா போட்டுதா பேசுவா.” சிரிக்கும் அண்ணனை பழிவாங்க எண்ணிய மொழியன் பெரிய அண்ணனை வைத்து காய் நகர்த்தினான்.

அது சரியாக வேலை செய்தது சிரித்தவன் தலையில் ஓங்கி அடித்த பெரியவனால். அடி வாங்கியதும் அண்ணனை முறைக்காமல் தம்பியை சிலம்பன் முறைக்க, “ரெண்டு பேத்துக்கும் கொழுப்பு கொஞ்சம் கூடி போச்சுடா. எரியிற அடுப்புல தூக்கி போட்டாதா கொஞ்சமாச்சும் கொறயும்.” என்றவன் சிலம்பனுக்கு எண்ணெய் வைத்து தேய்த்து விட்டான்.

“தண்ணி சூடு போதுமானு பாருங்க மாமா” என்ற மனைவியை, “குளிக்கிற பதத்துக்கு சுடு தண்ணி கூட வெக்க தெரியாதா உனக்கு. என்னா சொல்லிக் குடுத்து வளத்தாங்க உங்க வூட்ல.” வம்பு இழுத்தான்.

“ஆங்க்கு….! என்னாத்த சொல்லிக் குடுக்காம உங்க வூட்டுக்கு அனுப்பி வுட்டுட்டாய்ங்க எங்க வூட்ல இருக்குறவங்க.”

“அப்டி வாய கோனதடி தயவு செஞ்சு. நீயி இழுக்குறத பாத்தா பச்ச புள்ள கூட பதறி ஓடும் போல.”

“மாமா” என்றவள் மேற்கொண்டு பேசாமல் முறைக்க, “வாய தவிர உருப்படியா ஒன்னு இல்ல உன்கிட்ட.” என மொத்தமாக வாரினான்.

“சும்மா குத்தம் சொல்லிக்கிட்டே இருக்காதீங்க. அன்னிக்கு ஒரு நாளு சுடு தண்ணி வெச்சு குடுத்ததுக்கு சூடு அதிகமா இருக்குனு குத்தம் சொன்னிங்க. சரினு அடுத்த நாளு கம்மியா குடுத்த அதுக்கும் ஒரு பேச்சு. தெனமும் ஒரு கொற சொல்லிட்டு இருக்கீங்களேன்னு உங்களை கேட்டு வெச்சா அதுக்கு ஒரு கொற சொல்லுறீக. உங்களை கட்டிக்கிட்டு படாதப்பாடு பட்டுக்கிட்டு கெடக்க நானு.”

“உன்னை ஆருடி கட்டிக்க சொன்னது? சுடுதண்ணி வெக்க கூட லாயக்கு இல்லதா உன்ன வெச்சிக்கிட்டு நா தான் இங்க படாதப்பாடு பட்டுக்கிட்டு கெடக்க.”

கணவனின் பேச்சில் சாமந்தியின் கோபம் பட்டென்று முளைத்தது. அதைக் கோப மூச்சால் ஏற இறங்க காட்டினாள் கணவனுக்கு. அவனோ கண்டும் காணாமலும் தன் வேலையை கவனிக்க,

“ரொம்பத்தா பேசுறாரு…எப்ப பாரு என்னை கட்டிக்கிட்டதயே கொற சொல்ல வேண்டியது. அப்டி என்னாதா என்னை கட்டிக்கிட்டு இவரு கெட்டு போயிட்டாருன்னு தெரியல. எல்லாம் என் நேரம்.” தான் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தவள் அடுப்பின் தணல் குறைந்திருப்பதை அறிந்து அடுப்பு மூட்டச் சென்றாள்.

அணைந்திருந்த விறகு கட்டையை நன்றாக எரியும் விறகு கட்டையோடு திணித்து நெருப்பை மூட்டியவள் உள்ளிருக்கும் சாம்பல்களை வெளியேற்றும் வேலையில் மும்முரமாக இருந்தாள்.

விறகு கட்டைகள் ஒன்றை ஒன்று உரசியதால் பத்திக்கொண்டது பட்டென்று. அதிக அளவு நெருப்பு புகைந்துக் கொண்டு வெளி வந்ததில் வைத்திருந்த செங்கல் கல்லின் ஓரத்தில் அணல் தெளித்தது. அதை அறிந்து முகத்தை பின்னுக்கு வைத்தவள் சாம்பலை வெளியேற்ற ஒரு விறகு கட்டையை மட்டும் உபயோகித்தாள்.

புலம்பிக் கொண்டிருந்த மனைவியை ஓரக்கண்ணால் ரசித்து கொண்டிருந்தவன், “நெருப்பு அதிகமா வருது பாரு” என எச்சரித்தான்.

“வந்தா வந்துட்டு போவுது வுடுங்க. உங்களுக்கு என்னா வந்துச்சு. எங்களுக்குதா எங்க வூட்டு ஆளுங்க ஒன்னுமே சொல்லி தரலயே. ஏதோ எனக்கு தெரிஞ்சதை பண்ணி கத்துக்குற.” என பார்வையை அவனிடம் வைத்துக் கொண்டு இடது கையால் சாம்பலை வெளியேற்றிக் கொண்டிருந்தாள்.

“வாய கொறடி” என்றவன் மீது இருக்கும் கோபத்தில் அவள் வேகமாக விறகு கட்டையை அடுப்பினுள் திணிக்க, செங்கல் ஓரத்தில் உரசிய விறகு கட்டை நெருப்பை உமிழ்ந்தது அவளை நோக்கி.

சுதாரித்துக் கொண்டவள் முகத்தை வெளிப்பக்கம் எடுத்துக் கொள்ள, பாய்ந்த நெருப்பு அவள் கையில் பட்டு அடங்கியது. எதிர்பாராத சமயத்தில் கையில் நெருப்பு பட்டதும், “மாமா…” அலறி துடித்தாள்.

ஏற்கனவே மனைவியை எச்சரித்தவன் மனம் அவள் செயல் சரியில்லை என்று உணர்த்தி இருக்க, கண்ட காட்சியில் பதறியவன் வேகமாக ஓடினான். அதற்குள் எழுந்து நின்று சூடு பட்ட இடத்தை கையால் மூடிக்கொண்டவள்,

“மாமா கையில சூடு பட்டுடுச்சு” என்றாள் வலியோடு.

மனைவியின் கையை பற்றியவன் சூடு பட்ட இடத்தை ஊதி குளிர்விக்க, “எரியுது மாமா வுட்டுடுங்க.” என கையை இழுக்க முயற்சித்தாள்.

“சொன்னா மட்டும் கோவம் பொத்துக்கிட்டு வருது. எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்க வேலைய கவனமா பண்ணுனு.”

“நானே வலியோட இருக்க மாமா. இப்ப போயி திட்டுறீங்க‌” என்றவள் அவன் அதட்டிய வருத்தத்தில் கையை விடுவித்துக் கொண்டாள்.

“கைய குடு இங்க” என அவன் சாமந்தியின் கைப்பற்ற, “ஒன்னு வேணா வுடுங்க. நா எது பண்ணாலும் உங்களுக்கு புடிக்காது. எப்ப பாரு திட்டிக்கிட்டேதா கெடப்பிங்க.” முகத்தை சிலுப்பிக்கொண்டு நகர்ந்தாள்.

“மதினி இத போடுங்க கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.” மதினியின் கையில் சூடு பட்டதை அறிந்த மொழியன் வேகமாக ஓடி எடுத்து வந்தான் பேனா மையை.

“வேணா நீயி போயி குளி.” அவனை அங்கிருந்து விரட்ட முயற்சிக்க, “மதினி அப்டியே விட்டா கொப்பளம் புடிச்சுக்கோ. அப்புறம் அரிச்சிக்கிட்டே கெடக்கும் உங்களால சமாளிக்க முடியாது.” சாமந்தியை சமாதானம் படுத்தும் நோக்கில் பேசினான் சிலம்பன்.

“எனக்கு எதுவும் வேணா வுடுங்க. நீங்க ரெண்டு பேரும் முதல்ல குளிக்க போங்க.” கணவன் மீது இருக்கும் கோபத்தில் மறுத்துவிட்டாள் முதல் உதவியை.

மனைவி பின்னே வந்தவன் அவள் செய்கைகளை பார்த்து, “நீங்க குளிக்க போங்கடா நா பாத்துக்குற.” என தம்பிகளை அனுப்பி வைத்தான்.

தன்னருகில் அமரும் கணவனின் முகத்தை பார்க்காது அவள் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள, கையை பற்ற முயற்சித்தான் மச்சக்காளையன். அவளோ விடாப்படியாக மறுத்துக் கொண்டிருக்க, அவளுக்கு நேராக கையை நீட்டினான்.

குனிந்து கொண்டிருந்தவள் பார்க்காதது போல் சிலையாக அமர்ந்திருக்க, நீட்டிய‌ கை அப்படியே இருந்தது. சில நொடிகள் கடந்து அந்தக் கையை நோக்கியவள் கணவனின் முகம் நோக்க, விழி அசைத்து செய்கை செய்தான் கையில் கையை வைக்குமாறு.

அவள் மறுத்து தலையசைக்க, முடிவாய் வைக்குமாறு கட்டளையிட்டான். கணவனின் பார்வைக்கு கட்டுப்பட்டு கைகளை அவன் உள்ளங்கையில் வைக்க, உடனே தன் புறம் எடுத்துக் கொண்டான்.

முன்பு ஊதியது போல் மெதுவாக ஊதிவிட்டு அவளின் எரிச்சலை குறைக்க முயன்றான். ஊதும் வேகத்தில் எரிச்சல் சற்று குறைந்தாலும் தாக்கு பிடிக்க முடியாமல் கையை இழுக்க முயன்றாள்.

அழுத்தமாக கைப்பிடித்துக் கொண்டவன் வலியை குறைக்க முயற்சிக்க, கையைக் காப்பாற்றும் செய்கையில் அவள் இறங்கினாள். தொடர்ந்து விலகும் மனைவியின் செய்கையில் கோபம் கொண்டவன் அழுத்தமான பார்வையோடு அவள் விழிகளை தாக்க, செய்து கொண்டிருந்த செயல் நின்று போனது அவளிடம்.

அருகில் இருந்த பேனா மையை தன் கையில் தடவியவன் தோல் உரசாமல் நெருப்பு பட்ட இடத்தில் வைக்க, “மாமா எரியுது” என்றாள் அவனோடு நெருங்கி அமர்ந்து.

“ஒன்னு இல்ல கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.” அவள் வலியை குறைக்கும் நோக்கோடு மற்றொரு கையால் தன்னோடு சேர்த்துக் கொண்டவன் சூடு பட்ட இடத்திற்கு மருந்து தடவினான்.

நெருப்பின் எரிச்சல் அடங்குவதாக இல்லை. விட்டு விட்டு எரிந்து நோகடித்தது அவள் கையை. சூடு பட்ட இடத்தை பார்த்துக் கொண்டே, “மாமா ரொம்ப எரியுது வுட்டுடுங்க.” என்றவள் விழியில் தேங்கி நிற்கும் விழி நீரை கண்டு அவன் உள்ளம் கலங்கியது.

மை தடவுவதை நிறுத்தியவன் விழிகளில் தேங்கி இருக்கும் நீரைத் துடைத்து, “நீயி இத பாக்காம கண்ண மூடிக்க. கொஞ்ச நேரத்துல சரியா போயிடும்.” என்றான் அக்கறையாக.

“ரொம்ப எரியுது மாமா வேணாமே” கெஞ்சும் மனைவியின் விழியில் அவன் உள்ளம் பெருமளவு வலியை சுமக்க, முகத்தைப் பற்றி நெஞ்சோடு சாய்த்து கொண்டான்.

கணவனின் கல் மார்பு அவள் வலியை சற்று குறைக்க, மருந்திடும் வேலையில் இறங்கினான். ஒவ்வொரு முறையும் நெருப்பு பட்ட இடத்தில் அவன் விரல் படும் பொழுது முணங்களோடு மார்பை ஒட்டிக்கொண்டு செல்ல, அவனது மற்றொரு கை மார்போடு சேர்த்துக் கொண்டே சென்றது.

முழுவதையும் தடவி முடித்தவன், “இன்னிக்கு முழுக்க தண்ணில கை வெக்காத. எல்லா வேலையும் நா பாத்துக்குற.” என்றான்.

வலி குறைந்த பின்னர் தான் அவன் மார்பில் இருக்கிறோம் என்ற எண்ணம் உருவாகியது. விலக மனமில்லாமல், “ம்ம்” என்ற ஓசையை கொடுத்து அப்படியே படுத்திருக்க, வலியோடு இருக்கும் மனைவியை விலக்க மனம் இல்லாமல் அவனும் அப்படியே அமர்ந்திருந்தான்.

கணவனின் எண்ணம் புரிந்து நன்றாக அவனோடு நெருங்கி அமர்ந்தவள் காயம் படாத மற்றொரு கையை அவன் முதுகின் பின்புறம் சுற்றிக்கொண்டு சுகமாக கண் மூடினாள். நெருப்பு பட்ட கையை அசையாமல் பிடித்துக் கொண்டவன் மனைவியின் செய்கையை அறிந்தும் அறியாது போல் அமர்ந்திருந்தான்.

குளித்து முடித்து வந்த கொழுந்தன்கள் இருவரும் மதினி இருக்கும் நிலையைக் கண்டு சிரித்துக் கொண்டார்கள். அவர்கள் அறியாததா தங்களோடு இருக்கும் அவளின் வலியை. அண்ணன் மனம் மாற வேண்டும் என்பதுதான் இருவரின் ஆசையும்.

மனம் மாறும் நொடி அவன் வாழ்வும் மாற போகிறது என்பதை அறிந்திருந்தால் ஆசை கொள்ளாமல் இருந்திருப்பார்கள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்