Loading

விக்ரம வேந்தனின் வீட்டு வாசலில் முகத்தைச் சுருக்கியபடி நின்ற தங்கையை முறைத்தாள் திலோத்தமா.

“கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா பவி?”

“தெரியாம தான தள்ளிவிட்டேன். அதுக்கு உன் க்ளாஸ்மேட் அப்படி முறைக்கிறான்” என மூச்சிரைத்தாள்.

“அவன் முறைக்கவே இல்லையே பேபி…”

“அதெல்லாம் இல்ல, என்னை முறைச்சான்” என்று வாதிட்டபடியே இருவரும் வீட்டை அடைந்தனர்.

நாள்கள் தெளிந்த நீரோடையாய் கடக்க, அக்னி வேந்தனின் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு, கல்லூரிக்கு வரத் தொடங்கினான்.

முன்பெல்லாம் பார்த்தாலும் பாராதது போல கடந்து கொள்ளும் அக்னியும் திலோத்தமாவும் சின்னப் புன்னகையை பரிமாறிக்கொண்டனர்.

அவ்வப்பொழுது அவனது உடல்நிலையைப் பற்றி விசாரிப்பதை அவளும் வழக்கமாக்கி இருந்தாள்.

ஒருமுறை, அக்னியிடம் தனது பிறந்தநாளுக்காக ட்ரீட் கேட்ட நண்பர்களிடம், “என் அண்ணா லாஸ்ட் பர்த்டேக்கே ட்ரிங்க் பண்ணதுக்கு கோபப்பட்டான்டா. திஸ் டைம் நோ பார்ட்டி” என்றதில், அவர்கள் மேலும் வம்பு பிடிக்க, பின் வீட்டிலேயே ட்ரீட் வைப்பதாக ஒப்புக்கொண்டவன், திலோத்தமா சைக்கிளை எடுத்துக் கிளம்புவதைக் கண்டதும் அவளருகில் சென்றான்.

“ஹாய் அக்னி…”

“ஹாய் திலோ! கிளம்பியாச்சா?” அவளது சைக்கிளை பார்த்தபடி கேட்டான்.

“ம்ம் ஆமா, இன்னைக்கு லேட் வேற. என் தங்கச்சி வெய்ட் பண்ணிட்டு இருப்பா ஸ்கூல்ல”

பள்ளியில் படிக்கிறாள் என்றதாலோ அல்லது தனது பார்வைக்கு குட்டிப்பெண்ணாய் தெரிந்தாலோ அவளை சரிவர கவனிக்கவில்லை அவன்.

“ஓ ரைட்! கமிங் சண்டே என் பர்த்டே. நீயும் என் பர்த்டே பார்ட்டில கலந்துக்கணும்” என்று அழைப்பு விடுக்க, அவள் நெளிந்தாள்.

“இல்ல அக்னி. நான் பார்ட்டில எல்லாம் கலந்துக்கிட்டது இல்ல” என்றாள் சங்கடமாக.

“நீ நினைக்கிற மாதிரி ட்ரிங்க்ஸ் பார்ட்டி இல்ல. வீட்ல தான் வைக்கிறேன். டின்னர் ஒன்லி. சரக்கு சைடிஷ் எல்லாம் இல்ல…” என நக்கலாய் கூறியதில் அவள் சிரித்தாள்.

அவனாக அழைக்கும்போது மறுக்கவும் மனது வரவில்லை. “வரேன் அக்னி” என்றவள், போகும் வழியிலேயே தங்கையிடம் விவரத்தைக் கூற, பவித்ராத்யா முறைத்தாள்.

“மறுபடியும் அந்த வீட்டுக்கா? வேணாம்கா… அந்த வீட்டுக்குள்ள போனாலே ஒரே நெகட்டிவ் வைபா இருக்கு” என முகம் சுளித்தாள்.

“எனக்கு ஒன்னும் அப்படி தெரியல. அவங்க ரெண்டு பேருமே நல்லா தான பேசுனாங்க”

“ஆனாலும் ஏதோ ஒன்னு பிடிக்கல!”

“எல்லாம் உன் மனப்பிராந்தி பேபி” திலோ கிண்டல் செய்ததில், “அப்படியா அப்போ அந்த பார்ட்டிக்கு நீ மட்டும் போயிட்டு வாக்கா” என்றாள் நாக்கைத் துருக்கி.

“நான் மட்டுமா? ம்ம்ஹும் நீயும் வா பவிமா” திலோ கெஞ்ச, “உன்னை தான் கூப்ட்ருக்காங்க. அப்ப நீ தான் போகணும்” என்ற தங்கையை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தாள்.

“சரி, நான் வரேன். ஆனா சேர்ந்து போக வேணாம். நீ முதல்ல போ. பார்ட்டி முடியிறப்ப நான் வரேன். ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு வந்துடலாம்” என்றதில், திலோத்தமாவும் சம்மதித்தாள்.

வார இறுதி நாளில் சொன்னதுபோன்றே திலோத்தமா கிளம்பி விட்டாள்.

“பவி பேபி… கரெக்ட்டா வந்துடுடா” என மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திவிட்டே கிளம்பியவள், போகும்வழியில் சின்னப் பரிசு ஒன்றையும் வாங்கிக்கொண்டே சென்றாள்.

இம்முறை வாட்ச்மேன் கேள்வி எதுவும் கேட்கவில்லை. ஏற்கனவே அங்கிருந்த தோட்டத்தில் அக்னியின் நண்பர்கள் நிறைந்திருந்ததால், அவர்கள் அருகில் சென்றாள்.

முதலில் விக்ரமே திலோத்தமாவைப் பார்த்து விட, “ஹாய்” என்றான் துள்ளலாக.

“ஹாய்…” தெரியாமல் வந்து விட்டோமோ என்ற தவிப்புடனே சிரித்து வைத்தாள்.

இந்த மாதிரியான பார்ட்டிகளுக்குச் சென்று அவளுக்கு துளியும் அனுபவம் இல்லை.

கல்லூரிக்கு வந்த பின், சொல்லிக்கொள்ள தோழியென்று யாரும் இருந்ததில்லை.

நிவேதா வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்க, திலோத்தமாவிடமும் புன்னகை முகமாய் காட்சியளித்தார்.

“ம்மா… உங்க பையன் கை உடைஞ்சதுக்கு யார் காரணம் சொல்லுங்க…” விக்ரம் நிவேதாவின் தோள் மீது கை போட்டு கேலியாய் வினவ, திலோத்தமாவின் முகம் வாடி விட்டது.

“யாரு விக்ரா?”

“இதோ இந்த மேடம் தான். இவங்களை காப்பாத்த போய் தான், சார் அடிபட்டு வந்தாரு” என்று சீண்ட, திலோத்தமாவிற்கு அழுகையே வரும்போல இருந்தது.

“சாரிமா. எனக்குத் தெரியாது இவ்ளோ பெரிய பிரச்சினை ஆகும்னு” எனக் கண்ணில் நீர் வைத்து விட,

நிவேதா, “அய்யயோ என்னமா நீ இதுக்குலாம் அழுதுட்டு இருக்க. சும்மா இரு விக்ரா…” என மகனை செல்லமாய் அதட்டி விட்டு, “அவன் நல்ல விஷயத்துக்கு தான அடி வாங்குனான். இப்ப தான் சரியாகிடுச்சே. இனி எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நிதானமா கையாளுவான். நீ ஒன்னும் பீல் பண்ணாதமா” என்று அவள் தலையை கோதினார்.

கண்ணைத் துடைத்துக் கொண்டு தலையை உருட்டியவள், விக்ரமை லேசாய் முறைத்து வைத்தாள்.

விக்ரம் இதழ் மடித்து சிரிப்பை அடக்கிட, அங்கு வந்த அக்னி வேந்தன் திலோத்தமாவின் சிவந்த கண்களைக் கண்டு திகைத்துப் பின், தமையனின் முதுகில் தட்டினான்.

“ஏன்’ண்ணா அவளை வர்ற நேரம் எல்லாம் அழுக வைக்கிற?”

“எனக்கு என்ன ஆசையா… நடந்ததை தெளிவா அம்மாட்ட சொன்னதுக்கு அழுகுறா உன் க்ளாஸ்மேட்டு நான் என்ன செய்ய…” என அப்பாவியாய் வினவ, “நான் என்ன வேணும்னேவா ஆளை வச்சு அடிக்க வச்சேன். நீங்க அப்டி தான சொல்றீங்க” என மீண்டும் அழத் தயாராக, இரு ஆண்களும் பொங்கிய சிரிப்பை அடக்கினர்.

“அவன் உன்னைக் கலாய்க்கிறான் திலோ. அது புரியாம சின்னப் பிள்ளைத்தனமா அழுதுகிட்டு…” எனும்போதே நண்பர்கள் அவனை கேக் வெட்ட அழைக்க, சவுந்திரவல்லியும் சிவக்குமாரும் தோட்டத்திற்கு வந்தனர்.

அவர்களிடமும் விளக்கிச் சொல்லி விடுவானோ என்ற பயத்தில் விக்ரமை பார்த்த திலோத்தமாவின் கண்களில் ஒரு நொடி விழுந்து எழுந்தவன், “இந்தப் பொண்ணு யாரு?” என்ற சவுந்திரவல்லியின் கேள்வியில் விக்கித்துப் போனாள்.

“அகியோட க்ளாஸ்மேட் பாட்டி…” என முடித்துக்கொள்ள, “சரி சரி” என்றவர் முதலில் அவளிடம் நன்றாகவே பேசினார்.

கேக் வெட்டி முடித்து, மாடியில் ஆங்காங்கே அமர்ந்து அரட்டை அடித்தனர் நண்பர்கள். பெண் தோழிகளும் வந்திருந்தாலும், திலோத்தமா நிவேதாவுடனே இருந்து கொண்டாள்.

நிவேதா வேலையாக அடுக்களைக்கு நகர, சிவக்குமார் வந்தவர்களிடம் படித்த பள்ளி பற்றியும், மதிப்பெண்களை பற்றியும் விசாரித்தார்.

கேள்வி திலோத்தமாவிடம் வந்து நிற்க, அவள் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்ததாக கூறியதில் சவுந்திரவல்லி அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தார்.

“அங்க படிச்சுட்டு, இந்த காலேஜ்ல எப்படி சீட் கிடைச்சுது?” சிவக்குமாரின் வினவளில் இருந்த மாற்றத்தை அவள் உணரவில்லை என்றாலும் அக்னியும் விக்ரமும் உணர்ந்து கொண்டு பேச வரும்போதே,

“ப்ளஸ் டூ – ல ஸ்டேட் ரேங்க் அங்கிள். ஐஐடி எக்ஸாம் எழுதினேன். அதுல 13 -த் ரேங்க். இந்த காலேஜ் கரெஸ்பாண்டண்ட், என் ஸ்கூல் ப்ரின்சிபலுக்கு தெரிஞ்சவர் தான், என் மார்க்ஸ் வச்சு எனக்காக ரெகமண்ட் பண்ணாரு. நான் என் வீட்ல ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் கிரேஜுவேட்… அதுனால ஸ்காலர்ஷிப்பும் கிடைச்சுது…” என்றவளை அனைவரும் வியப்பாய் ஏறிட,

“வாவ்… சூப்பர் திலோ” அக்னி வெளிப்படையாய் பாராட்டினான்.

விக்ரம் ஒற்றைப்புருவம் உயர்த்தி மெச்சுதலாய் ஏறிட, அதுவே அவளுக்கு கிரீடம் கொடுத்தது போலொரு உணர்வைக் கொடுத்ததோ என்னவோ விழிகளை சட்டென தாழ்த்திக் கொண்டாள்.

“காலேஜ்ல கூட இவள் தான் டாப் 10 ரேங்க்ல வருவாப்பா…” அவளை விட்டுக்கொடுக்காமல் அக்னி கூறிட, சவுந்திரவல்லி “உன் அப்பா என்ன பண்றாரு?” என ஆரம்பித்தார்.

அதற்கும் வெகுளியாய், “என் அப்பா ரெண்டு தெரு தள்ளி தான், மெக்கானிக் ஷாப் வச்சிருக்காரு பாட்டி. அங்க பக்கத்துலயே தான் வீடும் இருக்கு…” என்றதில் அவருக்கு முகம் கடுகடுத்தது.

அவளுக்கு எந்தப் பதிலும் கூறாது எழுந்தவர் நேராக அடுக்களைக்குத் தான் சென்றார்.

“ஏ நிவேதா… உன் பையனுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா என்ன?” என எடுத்ததும் திட்ட ஆரம்பிக்க, நிவேதா பதறி விட்டார்.

“என்னாச்சு அத்த…”

“கண்ட கண்ட சேரில இருக்குற பொண்ணுங்களை எல்லாம் ஏன் பிரெண்டுன்னு வீட்டுக்குள்ள விடுற. என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டியா. நம்ம வீட்ல வேலை பாக்குற வாட்ச்மேன் கூட வீட்டுக்குள்ள வந்தது கிடையாது. அவனை விட கம்மியா சம்பாதிக்கிற மெக்கானிக் கடைக்காரன் பொண்ணு, வீட்டுக்குள்ள சட்டமா உக்காந்து சரிக்கு சமமா பேசிட்டு இருக்கா. எனக்குப் பத்திக்கிட்டு வருது…” என வறுத்து எடுத்தார்.

தமக்கையை காண அவ்வீட்டினுள் நுழைந்த பவித்ராத்யா, யாரையும் காணாமல் தடுமாறி அடுக்களைப் பக்கம் சென்று விட, அங்கு சவுந்திரவல்லி பேசியதைக் கேட்டு கோபம் வந்தது.

“மொதல்ல அவளை வெளில அனுப்பு. இல்ல நடக்கிறதே வேற…” என நிவேதாவிடம் கரித்துக் கொட்டியதில் அவருக்கும் ஒன்றும் செய்ய இயலா நிலை.

விறுவிறுவென தமக்கையைத் தேடிச் சென்றவள், மாடியில் சத்தம் கேட்க, திடுதிடுவென அங்கு ஓடிச் சென்றாள்.

“மச்சி ரெஸ்ட் ரூம் ப்ளீஸ்” அக்னியின் நண்பன் ஒருவன் வினவ, “கம் டா” என அவனை அழைத்துச் சென்ற நேரம் பவித்ராத்யா தமக்கையை கண்டறிந்து வந்து விட்டாள்.

“அக்கா, அப்பா உன்னை உடனே வர சொன்னாரு…” என மற்ற யாரையும் பார்க்காது கூற, “என்ன ஆச்சு பவி?” என்றவளின் கேள்வியை சட்டை செய்யாது, “வா போலாம்” என்று வம்படியாக இழுத்தாள்.

“ஒரு நிமிஷம் இரு சொல்லிட்டு வரேன்…” என அக்னியைத் தேட, அவளோ காலில் சுடுதண்ணீர் கொட்டாத குறையாத துள்ளினாள்.

விக்ரம் தான் நிலையை உணர்ந்து, “நீ கிளம்பு திலோ. நான் சொல்லிக்கிறேன்” என்றதில், “ம்ம் சரிங்க வரேன்…” என்று தலையசைத்து விட்டுச் செல்ல, அத்துடன் அவனது இதய அசைவுகள் அவள் வசமிழந்து போனது.

“அக்னி அம்மாட்டயாச்சு சொல்லிட்டு வந்துருப்பேன் பவிமா. ஏன் இவ்ளோ அவசரமா இழுத்துட்டு வர்ற?”

“அக்கா, இனிமே இந்த வீட்டுப் பக்கம் நீ வந்த. அப்பறம் நான் செம்ம கோபமாகிடுவேன்” என்றவளை புரியாமல் பார்த்தாள்.

“அந்தக் கெழவி என்ன பேச்சு பேசுது தெரியுமா?” என நடந்ததை ஒன்று விடாமல் கூறிட, திலோத்தமாவின் முகம் கறுத்து விட்டது.

“மெக்கானிக் கடைக்காரர் பொண்ணுங்கனு அவங்களுக்கு அவ்ளோ இளக்காரமா? நம்ம வீட்டுக்குள்ள வந்தா கிரீஸ் ஒட்டி வீடு அழுக்காகிடுமோ?” என புலம்பித் தீர்க்க, “விடு பவி… அவங்க புரிதல் அவ்ளோ தான். நான் வந்தது அக்னிக்காக. இனி இங்க வர வேணாம் போதுமா!” என்று முடிவெடுத்துக் கொள்ள, “ம்ம்” என சமாதானம் அடைந்தாள் பவித்ராத்யா.

————–

விமானச் சீட்டில் தலையைப் பின்னால் சாய்த்து நினைவுகளில் மூழ்கி இருந்தவளின், செவியறையில் சூடான காற்று மோதியது.

அது அவளை சிலிர்க்கவும் வைக்க, சட்டென கண் விழித்தவள் வேகமாய் அருகில் பார்த்தாள்.

அங்கோ, அக்னி மகளின் புறம் சாய்ந்து அவளுடன் உரையாடிக் கொண்டிருக்க, காதை அழுந்தத் தேய்த்துக் கொண்டாள் பவித்ராத்யா.

“யாரோ ஊதுன மாறி இருந்துச்சே!” என்ற குழப்பம் வேறு.

அவள் புறம் திரும்பிய அக்னி, இரு புருவத்தையும் உயர்த்தி என்னவெனக் கேட்க, பலவீனமாய் தலையாட்டியவள் மீண்டுமொரு முறை சிலிர்த்த செவிமடலைத் தேய்த்துக் கொண்டாள்.

உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிய அக்னி, ஜன்னல் புறம் திரும்பி மெலிதாய் முறுவலித்தான்.

வீட்டை நெருங்க நெருங்க, விக்ரம வேந்தனின் நெஞ்சம் அதிகபட்சமாக துடித்தது.

அவனுக்கே அப்படி என்றால், திலோத்தமாவிற்கு!?

இரவு பத்து மணியைத் தாண்டி தான் அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“ம்மா… நீங்க அந்தப் பொண்ணை சும்மா விட்டுட்டு வந்துருக்க கூடாது!” பவித்ராத்யாவை குறித்துக் கூறினார் மனோஜ்.

“மனசு ஆறல மனோஜூ. ஏதோ என் பேரன் இப்ப தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சுருக்கான். அவனைக் கோபப்படுத்தக்கூடாதேன்னு தான் பொறுத்துட்டு வந்தேன். அவன் கண்டிப்பா அவளை சும்மா விட மாட்டான்.” சவுந்திரவல்லி அங்கலாய்த்தார்.

“விக்ரம் சென்னைல இருக்கறதா கனி சொன்னானே அத்தை…” இனியா வினவியதில்,

“ஆமா ஆமா… அந்த நாசமாப்போனவன் அப்படியே போய் தொலையட்டும்…” என்று கறுவிட, நிவேதாவிற்கு இதயம் வலித்தது.

அக்னிக்காகவே அவரும் காத்திருந்தார்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, காலிங் பெல் அடிக்க, நிவேதா வேகமாகச் சென்று கதவைத் திறந்தவர், அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

சர்வ நிச்சயமாக அங்கு விக்ரமை அவர் எதிர்பார்க்கவில்லை. அதிலும் வீல்சேரில்!

“விக்ரா…” எனக் கூவி விட்டவர், அவன் முன்னே அமர்ந்து, “ஏன் விக்ரா என்னை விட்டுப் போன. என்னாச்சு உனக்கு. ஏன் இப்படி உக்காந்துருக்க…” அவன் கன்னம் கையெல்லாம் தொட்டுப் பார்த்து கதறி விட்டார்.

விக்ரமின் விழிகள் நீரால் நிறைந்திருக்க, அவரை அரவணைக்க கூட இயலா நிலையில் “ம்மா” எனக் கேவினான்.

அக்னி வேந்தன் தான், “ம்மா உள்ள போய் பேசலாம். உங்களை ஆரத்தி கரைக்க சொன்னேன் என்ன ஆச்சு?” என வினவ, அதன்பிறகே அவர் திலோத்தமாவையும் அக்னியின் தோளைக் கட்டிப்பிடித்திருந்த அக்னிலாவையும் கண்டார்.

“இது…” என அவர் தடுமாற, “ம்ம் உங்க மருமகளும் உங்க பேத்தியும் தான்…” என்றதும், திலோத்தமாவிற்கு அவரை ஏறிட சங்கடமாக இருந்தது.

நிவேதாவோ, “ஐயோ என் தங்கம்” என்று அக்னிலாவின் கன்னம் கிள்ளிக் கொஞ்சியவர், “இருங்க வரேன்…” என்று வேகமாக உள்ளே சென்றார்.

சவுந்திரவல்லிக்கோ பேச்சற்ற நிலை. மனோஜ் சினத்தில் சிவந்து விட்டார்.

“என்ன அக்னி இது? உன்னை இக்கட்டான நிலைல நிறுத்தி காசை எடுத்துட்டு கண்டவள இழுத்துட்டு ஓடிப்போனவனை எதுக்காக இங்க கூட்டிட்டு வந்த?”

அவரின் கேள்வியில் விக்ரமின் முகத்தில் பெருஞ்சலனம்.

“உங்களுக்கு அவனைத் தனியா தண்டிக்கணும்னா தண்டிச்சுக்கோங்க சித்தப்பா. உங்களுக்கு இல்லாத உரிமையா. ஆனா, குழந்தை முன்னாடி எதுவும் பேச வேணாம். இது எல்லாருக்கும் பொருந்தும்” என்று சவுந்திரவல்லியையும் அழுத்தம் திருத்தமாகப் பார்த்துக் கூறிட, பல்லைக்கடித்து நின்றார் அவர்.

நிவேதா ஆரத்தியை எடுத்து வந்ததும், அக்னிலாவை திலோத்தமாவிடம் கொடுத்தவன், சற்று நகர்ந்து நிற்க, “வந்து விக்ரம் பக்கத்துல நில்லும்மா…” என்று கையைப் பிடித்து அழைத்தார் நிவேதா.

பவித்ராத்யாவும் தள்ளி நின்று கொண்டாள். இப்போதைக்கு இந்த அழைப்பே அவளுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால், அந்தப் பணத்தைப் பற்றி அக்னி கேட்டால் சங்கடம் தானே! இருகொல்லி எறும்பாய் திலோத்தமா தவிப்பதை காண சகியாது தானும் தவித்திருந்தாள்.

“வாங்க உள்ள வாங்க…” நிவேதா பரபரப்பாய் அழைத்தார்.

தன்னிடம் அனுமதி கேளாது நிவேதா தானாய் முடிவெடுத்து வரச் சொன்னதில் சவுந்திரவல்லிக்கு ஆத்திரம் வேறு.

திலோத்தமாவோ சவுந்திரவல்லியையும் மனோஜையும் மிரட்சியாய் பார்க்க, “நீ இப்படியே, விடிய விடிய வாசலிலேயே நிக்கிறியா?” என அதட்டினான் அக்னி.

அதில் திலோத்தமா விருட்டென உள்ளே வந்திருக்க, விக்ரமையும் அழைத்து வந்தான்.

நிவேதா ஏதோ கேட்க வரும்முன்னே, “ம்மா எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்…” என வீட்டினுள்ளே அமைந்திருந்த மின்தூக்கியின் மூலம் விக்ரமை அவன் அறைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.

திலோத்தமாவும் அக்னிலாவுடன் அவன் பின்னே செல்ல, விக்ரம் பல வருடம் கழிந்து தனதறைக்குள் நுழைந்தான்.

தூசியும் குப்பையுமாக இருக்குமென எதிர்பார்த்திருக்க, அதுவோ அத்தனை சுத்தமாக இருந்தது.

தினம் தினம் சுத்தம் செய்திருக்கிறான்! அவனன்றி வேறு யார் இதை செய்ய இயலும்! கணவனின் பேச்சை மீறி நிவேதா, தனது அறைப்பக்கம் கூட வந்திருக்க வாய்ப்பில்லை. தான் வருவேனென்று ஒவ்வொரு நாளும் காத்திருந்திருக்கிறானோ? வேதனை நெஞ்சை அரித்தது.

கலங்கிய விழிகளுடன் தம்பியை ஏறிட, அவனோ வீம்பாய் அவன் முகத்தைக் காண தவிர்த்தான்.

“சித்தப்பா மறுபடியும் அந்த ரூம்குள்ள போய் சொய்ங்னு மேல வருவோமா?” லிஃப்ட்டைக் குறித்து அக்னிலா வினவ, திலோத்தமா தயக்கத்துடன், “லேட் ஆச்சுல. தூங்கு நிலா…” என்று அதட்டினாள்.

“நீ வா பேபி. நம்ம மறுபடியும் சொய்ங்னு கீழ போலாம்” என்று அவர்களது அனுமதியை எதிர்பாராது அக்னிலாவை வாங்கிச் சென்றான்.

‘நம்மளை தனியா விட்டுட்டு எல்லாம் போயிடுச்சுங்க’ என முணுமுணுத்த பவித்ராத்யாவை சவுந்திரவல்லி தீயாய் முறைத்தார்.

தான் அத்தனை மிரட்டியும் எவ்வளவு தைரியம் இருந்தால் என் வீட்டில் நுழைவாய் என்ற எகத்தாளம் தெரிய, அன்று காலையில் அவர் பிடித்து இழுத்த பின்னலை முன்னால் எடுத்துப் போட்டுக் கொண்டாள்.

அவரைத் தாண்டி நடக்கும்போது, “அச்சச்சோ” எனப் பதற, அவரும் வேக வேகமாய் கீழே பார்த்து விட்டு “என்னடி” என்றார் கடுப்பாக.

“நான் நடந்து வந்ததுல தரையில கிரீஸ் ஒட்டிடுச்சு பாட்டி! ச்சு ச்சு!” என்று போலியாய் வருத்தப்பட்டு வயதானவரின் பிபியை அதிகப்படுத்தியவள், கேலியாய் நகைத்தாள்.

மகளின் ஆசைப்படி மின்தூக்கியிலேயே கீழே வந்த அக்னியின் கண்களில் இந்நிகழ்வு பட, சின்னதொரு சுவாரஸ்யம் மிளிர்ந்தது.

போதை தெளியும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 48

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
38
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்