Loading

சீமை 19

 

 

வெளியே சென்ற மச்சக்காளையன் மனம் தன் பின்னால் வந்த மனைவியின் நினைப்பில் சுற்றி அலைய, வேலை கொள்ளாது வீடு திரும்பினான். அவன் போகும்போது இருந்த மனநிலைக்கு அப்படியே எதிரான நிலையில்,

 

 

“ஆடியில சேதி

சொல்லி ஆவணியில்

தேதி வெச்சு சேதி சொன்ன

மன்னவரு தான்… எனக்கு சேதி

சொன்ன மன்னவரு தான்.

சொந்தம் சொல்லி நெத்தியில

குங்குமத்த வச்ச என் மன்னவரு

மன்னவரு தான்…”

என்ற பாட்டோடு வரவேற்றாள் அவனை.

 

 

குரல் அடுப்பங்கரையிலிருந்து வர, கால்கள் தானாகவே அங்கு நின்றது. மச்சக்காளையன் வரவை உணர்வுகளால் கண்டு கொண்டவள் திரும்பி புன்னகைத்து,

 

 

“தெரியும் நீங்க வருவீங்கனு. அதா நீங்க ஆசைப்பட்ட மாதிரி சோத்துல விசம் கலந்துட்டு இருக்க. கொஞ்சமா தின்னு பாத்து எப்டி இருக்குனு சொல்றீங்களா.” கிளறிக் கொண்டிருக்கும் சோற்றை கரண்டியில் அள்ளி காமித்தாள்.

 

 

வந்தது தவறு என்பது போல் மச்சக்காளையன் பார்வை உருமாற, “உப்பு காரம் எல்லா சரியா இருக்குமானு தான யோசிக்கிறீங்க. அதுலா விசம் தெரியாத அளவுக்கு சரியா கலந்து இருக்க.” என்றாள் முன்பு கூறியதை விட அதிக குறும்போடு.

 

 

இவளை பேசி ஜெயிக்க முடியாது என்ற தோரணையோடு அவன் அங்கிருந்து நகர, “உங்களை ஏதாச்சும் பண்ணிடுவன்னு நெனைக்கிறீகளா மாமா.” என்றவள் வார்த்தையில் திரும்பினான்.

 

 

இருந்த குறும்பெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்திருந்தது. கசங்கிய முகத்தோடு பதிலுக்காக ஏறிடும் மனைவியின் பார்வையில் எதைக் கண்டானோ, “சீக்கிரம் சோறு பொங்கு காலைலயே சரியா சாப்டல.” என்றான்.

 

 

விஷம் என்று கேலி செய்த உணவை கேட்கும் கட்டியவன் வார்த்தையில் கோவில் மணியாக சிரித்து, “நெத்திலி கருவாடு தொக்கு பண்ணட்டுமா.” கேட்டாள் ஆசையாக.

 

 

பார்வை அடுப்பங்கரையில் இருக்கும் கீரை மீது பதிய, “கீரைய குழம்பா வெச்சுட்டு நெத்திலி கருவாடு தொக்கு பண்ணிடுற மாமா, சாப்ட நல்லா இருக்கும்.” என பதில் கொடுத்தாள் விழி உணர்ந்து.

 

 

பதில் கூறாமல் தலையாட்டி சம்மதித்தவன் அவளிடம் பேச்சு கொடுக்காமல் அடுப்பங்கரை பக்கமாகவே அமர்ந்தான். கணவனின் உத்தரவில் புன்னகையோடு அவனுக்கு விருப்பமான நெத்திலி கருவாட்டை செய்ய ஆரம்பித்தாள்.

 

 

“ஏ… மாமா நா வந்து இத்தினி நாளு ஆவுதே…ஒரு நாளு கூட கை ரூசி எப்டி இருக்குனு சொல்லவே இல்லியே.” 

 

 

பல நாட்களாக அவளுக்குள் தோன்றி கொண்டிருக்கும் கேள்வி இது. வந்த புதிதில் அவள் செய்த உணவை அதிகம் உண்ண மாட்டான். சில மாதம் சென்ற பின் கூச்சம் இல்லாமல் சாப்பிட துவங்கியவன் அடுத்த சில மாதங்களில் வேண்டும் என்று கேட்டு வாங்கி உண்ண ஆரம்பித்தான். 

 

 

பக்கத்திலிருந்து பரிமாறியவள் அவனின் விருப்பத்திற்கு ஏற்ப சமைக்கவும் ஆரம்பித்தாள். தட்டில் இருக்கும் உணவை உச்சிக்கொட்டி உண்பவன் அதை செய்பவளுக்கு மட்டும் பாராட்டை கொடுக்க மாட்டான். தினமும் அதை எதிர்பார்த்து தோற்றுப் போனவள் இன்று கேட்டு விட,

 

 

“தெரிஞ்சி என்னா பண்ண போற?” என்றான் குதர்க்கமாக.

 

 

கருவாட்டு கையோடு முன்னே வந்து நின்றவள், “புருச பாராட்டணுனு நெனைக்குறது குத்தமா மாமா. பாராட்ட வேணா குறைஞ்சபட்சம் இது நல்லா இல்லின்னு குறையாது சொல்லலாம்ல. அப்டி எதயாது வாய தொறந்து சொன்னா தான நானும் சரி பண்ணிக்க முடியும்.” என்றிட,

 

“நீ எதியும் சரி பண்ணிக்க வேணா. உனக்கு என்னா தெரியுதோ அத பொங்கி போடு. தின்னு உயிர் வாழ்ந்துக்குற.” என்றதில் கடுப்பானாள் சாமந்தி.

 

 

“என்னாமோ போனா போவுதுனு தின்னுற மாதிரி பேசுறீங்க. நா ஆக்கி போடுறது அம்புட்டு கேவலமாவா இருக்கு?”

 

 

“இவ்ளோ நேரம் அதைத்தான சொல்லிட்டு கெடக்க. உனக்கு புரியலன்னா நா என்னா பண்ண முடியும்.” என்ற மச்சக்காளையன் உள் மனது சிரித்தது நெஞ்சுக்கூடு ஏற இறங்க முறைக்கும் மனைவியின் செய்கையில்.

 

 

அவன் சிரிப்பதை அறியாத கட்டியவள், “ரொம்ப பேசாதீங்க மாமா… நாளைல‌ இருந்து பொங்கி போட மாட்ட. அண்ண தம்பி மூணு பேரும் தீ வெச்சி போன சோறதா தின்னணும்.” முறைப்பு அடங்காது பொங்கினாள்.

 

 

“நாங்க என்னாத்துக்கு தீ வெச்ச சோற திங்கணும்? எங்களுக்கு சமைக்க தெரியாதாக்கும். நீயி இந்த வூட்டுக்கு வரதுக்கு முன்னாடி வரைக்கும் என் சமையல் தான்னு தெரியும்ல.” என்றான் வீர தோரணையோடு காலரை உயர்த்தி.

 

“ஆமா…!” எனக் கொனட்டியவள் கருவாட்டை கழுவிக் கொண்டே, “அதா வந்ததும் பாத்தனே நீங்க சோறு பொங்கி போட்ட லட்சணத்தை. சட்டி எல்லாம் காஞ்சி சோறும் தீஞ்சு… போய் கெடந்தத. அந்த மாதிரி தீ வெச்ச சோற தின்னு தின்னுதா நீங்களும் நெருப்பா கொதிக்கிறீங்க போல.” மனைவியின் பேச்சு சிறிதும் கோபத்தை கொடுக்கவில்லை அவனுக்கு.

 

 

அவள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தந்தை தான் சமைத்துக் கொடுப்பார் மூவருக்கும். அவர் சென்ற பின் சமைக்க வேண்டிய கட்டாயம். தந்தை சமைப்பதை அருகில் இருந்து பார்த்தவன்  சோறு பொங்க முயற்சித்து கை, கால்கள் சூடு பட்டது தான் மிச்சம். 

 

 

அவன் சமைத்ததை அவனால் கூட வாயில் வைக்க முடியாத அளவிற்கு சுவை இருக்கும். வெளியில் சொல்ல முடியாமல் அவனது உடன்பிறப்புகள் இருவரும் உண்டு முடிப்பார்கள். வருடங்கள் பல கடந்த பின்பு தான் அதில் தேர்ச்சி பெற்றான். இருந்தும் தாயின் கை மணத்திற்காக ஏங்கிய குழந்தை அவன். 

 

 

சாமந்தி இங்கு வந்த பின்னர் பல போர்க்களம் அவன் உள்ளத்தில். அதில் பூ வைத்து அழகாக சிரித்த இடம் உணவு தான். முதலில் வேண்டா வெறுப்பாக உண்ணவன் உணவோடு சேர்த்து அவள் கொடுக்கும் அன்புக்கும் அடிமையானான். 

 

 

பேச்சு கொடுக்காமல் சிந்தனையில் சுழலும் கணவனின் எண்ணத்தை அறிந்தவள் எதையும் பேசாமல் சமையலை முடித்தாள். அவன் கேட்பதற்கு முன்னால் படையல் இட்டவள், 

 

“பழச என்னாத்துக்கு நெனைச்சுக்கிட்டு. இனி உங்க இஷ்டப்படி பொங்கி போட நா வந்துட்ட மாமா. எனக்குள்ள ஒரே ஒரு கொற மட்டும் தான்.” என்றவள் முகம் நோக்கினான் மச்சக்காளையன்.

 

 

“அதிகாரமா எனக்கு இத சமைச்சு குடுடின்னு நீங்க கேக்கலயேன்னு. அப்டி ஒரு நாளு கேப்பிங்கன்னு நம்பிக்கைல காத்துக்கிட்டு கெடக்க.” 

 

 

மனைவியின் அன்பில் சொக்கி போனவன் விழி அகலவில்லை அவளை விட்டு. அவள் கொடுக்கும் அன்பு வேண்டும் என்று உள்ளம் நொடிக்கு நொடி மன்றாட, என்ன தடையோ அவன் மனம் மட்டுமே அறியும். மேற்கொண்டு குழப்ப எண்ணாதவள் சாப்பிடுமாறு கூற, நெத்திலி கருவாடு தொக்கு அனைத்தையும் மறக்க வைத்தது.

 

 

***

 

“ஒளிரும்மா… காசு இருந்தா எடுத்து வரியா” சட்டைக்காலரை மடித்துவிட்டபடி குரல் கொடுத்தான் வாசலில் நின்று.

 

செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் விட்டவள், “இந்தா எடுத்து வர மாமா.” என்று நகர்ந்தாள்.

 

 

மகனின் பேச்சு திண்ணையில் படுத்து கொண்டிருந்த ஆண்டாளுக்கு பெரும் புகைசலை கொடுக்க, “கஷ்டப்பட்டு சம்பாதிக்குறவன் நீயி பணப் பொட்டிக்கு பாதுகாப்பு அவளா. வெளிய போற ஆம்பள இப்டி காசு வேணுனு கேக்குறது நல்லாவா இருக்கு. உத்தியோகம் புருச லட்சணம் பெரியவனே. சம்பாதிக்குற பணத்த உன் கையில வெச்சி குடும்பம் நடத்த பாரு.” என்ற மாமியாரின் பேச்சில் பிடித்தம் இல்லை என்றாலும் கவலை கொள்ளாமல் கொண்டு வந்த பணத்தை அவனிடம் நீட்டினாள்.

 

 

எண்ணிப் பார்க்காமல் சட்டை பையில் திணித்தவன், “அப்டித்தாம்மா நானும் இருந்த. ஒரு நாளு கையில சுத்தமா காசு இல்ல. ஆரு கிட்ட கேக்குறதுனு தெரியாம தவிச்சிட்டு நின்னப்போ என்னா மாமானு கேட்டவ கை நெறைய காச அள்ளி வந்து குடுத்தா. இது எதுனு விசாரிக்கும் போது அழகா ஒரு விசயம் சொன்னாம்மா” என்றவன் தாயை புன்னகையோடு பார்த்தான்.

 

 

மகனின் பேச்சை கேட்கும் ஆர்வம் இல்லாது வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவி வாயிக்குள் திணித்தார். இருந்தும் கூறினான், “நீங்க வூட்டு செலவுக்குனு குடுக்குற காசுல இருந்து செலவு போவ எடுத்து வெச்சன்னு. அன்னிக்கு தான் என் புத்திக்கு உரைச்சுது ஆம்பளைக்கு சம்பாதிக்க மட்டும் தான் தெரியும் பொம்பளைக்குத்தா சேத்து வெக்க தெரியும்னு.” என்ற கணவனின் புரிதல் மகிழ்வை கொடுக்க, ஆண்டாள் பற்றி கவலை கொள்ளாமல் கை பிடித்துக் கொண்டாள்.

 

 

“இந்த குடும்பத்துல எவ்ளோ செலவாகுது என்னா ஏதுனு கூட இன்ன வரைக்கும் எனக்கு தெரியாது. ஆனா, கைல காசு இல்ல குடுங்கனு மட்டும் ஒருநாளும் சொன்னது இல்ல என் பொண்டாட்டி. என்னா வருமானம் வருதோ அத நா கேக்கவே இல்லினாலும் என்கிட்ட சொல்லிடுவா. நீயி ஒரு நல்ல பொண்ணதாம்மா என் வாழ்க்கை துணையா சேத்து இருக்க கவலைப்படாத.” என அன்னைக்கு புத்தி சொன்னவன் பார்வையால் கை பிடித்து நிற்கும் மனைவியிடம் சைகை செய்துவிட்டு புறப்பட்டான் வெளி வேலைக்கு.

 

 

****

 

 

பள்ளி நிர்வாகம் மணி அடித்தது அனைவரும் கிளம்பலாம் என்று. பத்தாம் வகுப்பு முதலில் விட, அதற்கு மேல் உள்ள படிப்புகள் ஐந்து நிமிட இடைவெளிக்குப் பின் கிளம்பினார்கள். சிறுமயிலூர் கிராமத்திற்கு நேரத்திற்கு தான் பேருந்து வரும்.

 

 

நண்பர்களோடு கதை அளந்தபடி கவிநேயன் காத்திருக்க, நண்பர்கள் வட்டாரத்தோடு மொழியனும் அங்கு வந்தான். சிரித்த முகமாக இருந்த இருவரும் கடுகடுத்தார்கள் ஒருவரை ஒருவர் பார்த்து. சுற்றி இருக்கும் நண்பர்களுக்கு அவர்களின் பகை தெரியும் என்பதால் உசுப்பி விட்டார்கள்.

 

 

“எடேய்! உன்ன வுட சின்ன பைய உன்ன இப்டி மொறைக்குறத பாத்தா கேலி பண்ணுவாய்ங்கடா.” என்ற நண்பனின் வார்த்தையில் மொழியன் பற்கள் கடிப்பட,

 

“நீ பாட்டுக்கு செவனேன்னு தானடா நின்னுக்கிட்டு கெடக்க. அவன் என்னாமோ உன்ன அப்டி மொறைக்குறா.” என்றதில் கவிநேயன் மூக்கும் புடைத்தது.

 

 

இருவரின் நட்பு வட்டாரங்களும் அதை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டே செல்ல, பேருந்து வந்து நின்றது. ஏற்கனவே கூட்டம் நிரம்பி இருக்கும் பேருந்தில் முட்டிக்கொண்டு அனைவரும் ஏறினார்கள். உசுப்பி விட்ட நண்பர்கள் வட்டாரம் உஷாராக ஏறிக்கொள்ள, ஆத்திரம் கொண்டவர்கள் கடைசியாக ஏறினார்கள்.

 

 

ஒரே இடத்தில் இருவரும் கால் வைக்க, “எடேய், உனக்கு எம்புட்டு தைரியம் இருந்தா நா கால் வெக்குற எடத்துல கால வெப்ப.” என தட்டி விட்டான் கவிநேயனின் காலை.

 

“இது என்னா உங்க அப்பா வூட்டு சொத்தாடா.” மொழியினின் காலை சின்னவன் தட்டி விட்டான்.

 

 

இருவரின் கால்களும் சராசரியாக ஒரு முறை தட்டி விடப்பட, அந்த செயல் மீண்டும் அரங்கேறியது. அந்தக் கலவரத்திற்கு நடுவில் பின்னால் நின்றிருந்த அனைவரும் ஏறிக்கொண்டனர். சுதாரித்த கவிநேயன் ஏற முயல, தன்னை தள்ளிவிட்டு ஏறுவதாக எண்ணிய மொழியன் கீழே இறக்கி விட்டான்.

 

 

பின் முதுகில் கை வைத்து தன்னை இழுத்த மொழியனுக்கு தக்க பதில் கொடுத்தான் அவனை ஏறவிடாமல் தடுத்து. இருவரும் அவர்களை மறந்து அடித்துக் கொள்ள, அவர்களுக்காக நின்ற பேருந்து கிளம்பியது.

 

“எடேய்… பஸ் போவுதுடா கிறுக்கு பயலே.” என்ற சின்னவனின் ஓசையில் சுதாரித்த பெரியவன் பேருந்தை பிடிக்க ஓட, இளையவனும் பின் தொடர்ந்தான்.

 

 

ஆனால் பேருந்து அவர்களை விட வேகமாக ஓடி மறைந்தது. பிடிக்க ஓடி மூச்சு வாங்கியதுதான் மிச்சம் இருவருக்கும். அடுத்த பேருந்து வர இன்னும் அரை மணி நேரம் ஆகும். நடுரோட்டில் யாரும் இல்லாமல் இருவர் மட்டும் நின்றிருந்தார்கள் முறைத்துக் கொண்டு.

 

 

 

சீமை 20

 

செந்தனல் நாயகன் குறைவில்லாத ஆற்றலோடு உதிர்த்தான் கிழக்கில். மேல் எழும்பும் கதிரவனின் ஒளியை தன்னுள் வாங்கியவன் தலை உயர்த்தி அதை வரவேற்றான். செந்தமிழனின் கள்ளம் கபடம் இல்லா புன்னகையில் மகிழ்ந்ததோ தெரியவில்லை கதிரவனின் கதிர்வீச்சுக்கள் சிறுமயிலூர் கிராமத்தையே வெளிச்சமாக்கியது.

 

 

“என்னா தமிழு ஆரு நெனப்புல தனியா சிரிச்சுக்கிட்டு கெடக்க.” மாட்டுச் சாணத்தை கூடை நிறைய அள்ளி வந்த ஒளிர்பிறை வாளியில் இருக்கும் தண்ணீரில் கொட்டியவாறு கேட்டாள்.

 

 

“இந்தா வந்திருக்காரே இவர நெனைச்சி தான் மதினி. காலையில பதம்மா பூனை மாதிரி வந்துட்டு மதியத்துக்கு பெறவு என்னாமா நடுங்க வெக்குறாரு. சாயங்காலம் வர வரைக்கும் இவரோட தெனம் போராடுறதே நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு வேலையா போச்சு.” சொல்லியவன் முகம் குழந்தை போல் கலங்கமில்லாது புன்னகைத்தது.

 

 

நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த குடும்பத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறாள் ஒளிர்பிறை. மதுரவீரனை தான் மிகவும் பிடிக்கும் என்றாலும் தமிழின் மீது இருக்கும் எண்ணம் வேறாக இருக்கும். எதிரி கூட எதிரியாக எண்ண மாட்டான் இவனை. 

 

 

எதிலும் பொறுமை எப்பொழுதும் தெளிவான சிந்தனை இதுதான் செந்தமிழனின் குணம். கொழுந்தனின் சிரிப்பில் பூவாய் சிரித்தவள், “உனக்கு மட்டும் எப்டித்தா இந்த மாதிரி எல்லாம் யோசனை வருதோ. தப்பி தவறி இந்த குடும்பத்துல பொறந்துட்ட தமிழு.” என்றாள்.

 

“ஏன் மதினி இப்டி சொல்றீங்க? ஒரே வயித்துல பொறந்த பிள்ளைங்க நாங்க ஒரே மாதிரி தான இருக்கோம். என்னா அவங்களுக்கு இத கவனிக்க நேரமில்ல.”

 

 

“அதான வுட்டுக் குடுக்க மாட்டியே உன் கூட பொறந்தவய்ங்களை. “

 

“வுட்டுக் குடுக்கிற மாதிரி அவங்க என்னிக்கும் நடந்துக்க மாட்டாய்ங்க மதினி.”

 

“எது? உங்க அண்ணன சொன்னா கூட நம்பிடுவ. உனக்கு அடுத்து பொறந்திருக்கு பாரு ஒரு மூணு… அதுல ஒண்ணு இல்லினா கூட இந்த ஊர வரைபடத்துல இருந்து எடுத்துடுவாய்ங்க.”

 

“இந்த வயசுல தான மதினி இந்த மாதிரி சேட்டை பண்ணிக்கிட்டு கெடக்க முடியும். பெரியண்ண எப்டி இருந்தாருனு உங்களுக்கும் தெரியும் தான. இப்ப பாருங்க ஆளு இருக்க இடமே தெரியமாட்டுது. ஒரு வயசுக்கு மேல தன்னால வாழ்க்க இதான்னு புரிஞ்சிடும் மதினி.”

 

 

“அவுனுங்களை ஒருத்தி வந்து திருத்துற வரைக்கும் திருத்த முடியாது தமிழு. ஒவ்வொன்னுக்கு கடவுள் நூறு வால குடுத்து அனுப்பி இருக்காரு.” ஒளிர்பிறையின் பேச்சைக் கேட்டு புன்னகைத்தான் செந்தமிழன். 

 

“நீ வேலைய பாரு, நா சொசைட்டிக்கு பால் எடுத்துட்டு போற. நேத்து இவங்க மூணு பேரும் சரியான நேரத்துக்கு பால் எடுத்துப் போவலன்னு திருப்பி அனுப்பிட்டாய்ங்க. நீ இந்த சாணிய கரைச்சு அப்டி ஓரமா வையி நா வந்து பாத்துக்குற.” என்றவள் திரும்பியதும் அதிர்ந்தாள்.

 

 

இமையவன் தொடப்பக்கட்டைப் பிடித்துக் கொண்டு, எழில்குமரன் மம்மட்டியை பிடித்துக் கொண்டு, கவிநேயன் ஆட்டுப்புழுக்ககளை அள்ளிய வாளியோடும் அவளை முறைத்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்.

 

 

அதிர்ந்த ஒரு நொடியில் தன்னை மாற்றிக் கொண்டவள், “என்னாய்ங்கடா காலங்காத்தால வேல வெட்டிய பாக்காம ஆளுக்கு ஒரு தெசைல நின்னுக்கிட்டு கெடக்கீங்க. சட்டுனு வேலைய முடிச்சுட்டு, தின்னுட்டு கெளம்புங்கடா.” என்றிட, மூன்று பேரும் ஒரே நேரத்தில் முன்னேறினார்கள்.

 

 

வரும் மூவர் படையில் யோசனைக்கு ஆளான ஒளிர்பிறை பின்னால் நகர, “மதினி நேத்து ராத்திரி என்னா சொன்னிங்க” என முறைப்போடு மூவரும் கேட்டார்கள்.

 

“என்னா சொன்ன” என்று பதிலுக்கு திருப்பி கேட்டாள்.

 

 

“உங்க மூணு பேர மாதிரி ஒரு கொழுந்தைய்ங்க கெடைக்க புண்ணியம் செஞ்சு இருக்கணுனு வாய் கூசாம பொய் சொன்னீங்க. இப்ப என்னாடானா சல்லி பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பசங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க. அப்போ நேத்து ராத்திரி எங்களை ஏமாத்தி வேல பாக்க வெச்சீங்களா.” என முற்றுகையிட்டார்கள்.

 

 

“அதுமட்டுமாடா நேத்து ராத்திரி இவங்க வூட்டுக்காரு தின்ன பாத்திரத்த வேற கழுவ வெச்சாய்ங்க. அதுவும் நீங்க தேய்ச்சாத்தா பளபளன்னு இருக்குனு சாக்கு சொல்லி.” கவிநேயன் சரியான நேரம் பார்த்து நேற்று இரவு அவள் சொன்னதை ஞாபகப்படுத்த, 

 

 

“எடேய், அப்டியே அந்த வாசல பெருக்கி வுட்டதையும் சேர்த்துக்கோங்கடா. சிவனேனு படிச்சுக்கிட்டு கெடந்த என்னிய புடிச்சி… உன்ன போல சுத்தமா பெருக்க இந்த ஊரு உலகத்துலயே ஆளு இல்ல ராசானு ஒரு கூடை ஐச வெச்சாய்ங்க என் தல மேல.” என பல்லை கடித்தான் எழில்குமரன்.

 

“என்னா மதினி வூட்டுக்குள்ளயே களவாணித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.” என்ற இமையவன் கேள்விக்கு திரு திருவென்று முழித்தாள் அவர்களின் செல்ல மதினி.

 

 

அவளின் நிலை உணர்ந்த செந்தமிழன் புன்னகையோடு அங்கிருந்து நகர பார்க்க, “தமிழுழுழு…” காற்றுக்கு கூட கேட்காத அளவிற்கு அவனை அழைத்தாள்.

 

 

“இது உங்களுக்கும் உங்க மூணு கொழுந்தய்ங்களுக்கும் நடுவுல நடக்குற பிரச்சனை மதினி. உள்ள நா வந்தா நல்லா இருக்காது. நீங்களே போர முடிச்சிட்டு வாங்க.” உதவி செய்ய மாட்டேன் என்பதை சுற்றி வளைத்து சொல்லியவன் நகர்ந்து விட்டான்.

 

 

“எங்களை தங்கம்னு சொன்னது பொய்யா?” இமையவன்.

 

“உங்கள மாதிரி சமத்து பசங்க இந்த ஊரு உலகத்துல இல்லினு சொன்னது பொய்யா” எழில்குமரன்.

 

 

“நீங்க ஒரு நாளு வூட்ல இல்லினாலும் இந்த வூடு நல்லா இல்லின்னு சொன்னது பொய்யா” கவிநேயன்.

 

 

இன்னும் அவளை முற்றுகையிட்டார்கள் நெருங்கி. பின்னால் நகர்ந்தவள் தெரியாமல் தண்ணீரோடு கலந்த சாணி வாளியை இடித்து விட, அதுவோ அவள் ஆடையில் கொட்டியது. அதை காலால் தடவிக் கொண்டே,

 

“என்னாய்ங்கடா இப்போ உங்களுக்கு பிரச்சனை? அப்டி சொன்னா தான நீங்க மூணு பேரும் வேலை பாப்பீங்க. இல்லினா வெட்டியா எதுத்த வூட்ல இருக்குற ரெண்டு பேத்த பத்தி கொறை சொல்லிட்டு இருப்பீங்க.” என்றவள் வாயை மூடிக் கொண்டாள் உளறி விட்டதை அறிந்து.

 

 

மூவரின் மூக்கும் முந்நூறு கிலோவுக்கு இருக்கும் போல அந்த அளவிற்கு முறைப்பை கனமாக கொடுத்தது. அதைக் கூட கண்டு கொள்ளாத ஒளிர்பிறை, “தள்ளுங்கடா எனக்கு வேல கெடக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல என் புருச வந்துருவாரு சோறு கேட்டு. அவருக்கு வேற அடுப்புல செஞ்ச சோறு தொண்டைக்கு இறங்காது. விறகு அடுப்புல சோறு வடிச்சே நா வீணா போயிடுவ போல.” என மூவரையும் தள்ளிக் கொண்டு நகர்ந்தாள்.

 

 

“மதீனீனீனீ…” வீடு அதிரும் அளவிற்கு மூவரும் குரல் கொடுத்தார்கள்.

 

 

அதிர் ஓசையில் அலறி அடித்து திரும்பியவள், “அட கொல்லையில போறவய்ங்களா… எதுக்குடா இப்டி சங்கு ஊதிக்கிட்டு கெடக்கீங்க?” என்றாள் காட்டமாக.

 

 

“இந்த மூணு அப்பாவி கொழந்தைகளை நம்ப வெச்சி வேலைய வாங்கிட்டு எங்க நகர பாக்குறீங்க. எங்களுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லிட்டு நகருங்க.” என்ற இமையவனை‌ மேலிருந்து கீழாக ஒரு மாதிரியாக பார்த்தாள்.

 

 

“மதினி எங்க மூணு பேரயும் உங்க கொழுந்தங்களா தான பாத்து இருக்கீங்க… எதிரியா பாத்தது இல்லியே, பாக்க வெச்சிடாதீங்க.” தன் பங்கிற்கு எழில்குமரன் பேச, அவனையும் அப்படித்தான் பார்த்தாள்.

 

 

டயலாக் பேசவில்லை என்றால் தான் இருப்பது மறந்துவிடும் என்பதால், “நியாயம் கெடைக்காம இங்க இருந்து நா நகர மாட்ட.” என்றான் கவிநேயன்.

 

 

மூவரையும் ஒரே போல் ஏற இறங்க பார்த்து, “த்தூதூ… காலங்காத்தால மூஞ்சி முகரைய பாரு. உங்களை எல்லாம் வீணா உக்கார வெச்சி சோறு போட்டதால தான்டா இந்த மாதிரி எகத்தாளமா பேசுறீங்க. ஒழுங்கு மருவாதையா இருக்குற வேலைய முடிச்சிட்டு ஓட பாருங்க. இல்லினா தெனமும் வேல செய்ய வுட்டுடுவ.” என்றதோடு கூட நிறுத்தாமல் அவர்களை இன்னும் அசிங்கப்படுத்தும் விதமாக, 

 

“மூஞ்சிய கழுவிட்டு வூட்டுக்குள்ள வாங்கடா ஒருத்தனையும் பாக்க சகிக்கல.” என்றாள்.

 

 

இதற்கு மேலும் அசிங்கப்படுத்த எதுவும் இல்லை என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்களை சுற்றி, “துரோகம்… துரோகம்…துரோகம்….” என்ற பாடல் வரிகள் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

 

 

“இனிமே நம்ம மதினி கிட்ட நம்ம மூணு பேரும் பேசக்கூடாது.”

 

 

“அவங்க கையால பொங்குற சோற திண்ணக்கூடாது.”

 

 

“அவங்க இருக்க தெசை பக்கமே போவக்கூடாது.”  ஆளுக்கு ஒன்றை சொல்லி சபதம் செய்ய கையை நீட்டும் பொழுது தான் ஒளிர்பிறை ஏற இறங்க பார்த்ததற்கான காரணத்தை அறிந்தார்கள்.

 

 

அவளை முறைக்கும் பொழுது கையில் வைத்திருந்த தொடப்பக்கட்டை, மம்பட்டி, ஆட்டுப்புழுக்கை வாளி என்ற மூன்றும் இப்பொழுது வரை அவர்கள் கையில் தான் இருக்கிறது. முகத்தை கோரமாக வைத்தவர்கள் கையில் இருப்பதை தூக்கி போட மறந்து விட்டார்கள். அதுவும் கழுவாத முகமும் அழுக்கு ஆடையும் ஜோக்கர்கள் போல் பார்க்க வைத்தது போல. 

 

 

****

 

“மதினி சொசைட்டிக்கு இன்னிக்கு நாங்களே பால் எடுத்துட்டு போறோம்.” என்ற சிலம்பனின் வார்த்தையில் வேகமாக பின்பக்கத்திற்கு ஓடினாள் சாமந்தி.

 

 

அவள் வருவதற்குள் கறந்து வைத்த பாலை சைக்கிளிலில் வைத்தவன், “மொழி நீ பின்னாடி உக்காரு.” என மிதிவண்டியிலும் ஏரி அமர்ந்து விட்டான்.

 

 

பாய்ந்து வந்தவள் மிதிவண்டியை பிடித்துக்  கொண்டு, “இங்க இருந்து ஒரு அடி இந்த சைக்கிள் நகர்ந்துச்சு ரெண்டு பேரு காலயும் ஒடைச்சு ராத்திரிக்கு கொழம்பு வெச்சிடுவ. என்றாள் மிரட்டலாக.

 

 

“மதினி சின்னப் புள்ளைங்களை இப்டி மிரட்டிகிட்டே இருக்காதீங்க.” என்ற மொழியின் தலையில் வேகமாக ஒரு அடி வைத்தவள்,

 

“காலைலயே வாய்க்கு வந்தத பேச வெக்காத. நேத்து எதுத்த வூட்டுக்காரனுங்க கூட சண்ட போடுறனு சரியான நேரத்துக்கு சொசைட்டிக்கு பால் எடுத்துட்டு போவாம அவங்க என்னிய ஏசுனாங்க. நீங்க கெளம்பி படிக்க போற வேலைய மட்டும் பாருங்க. எதுவா இருந்தாலும் நானே பாத்துக்குற.”

என்றவள் சொன்னது போல் மிதிவண்டியில் இருந்த பாலை கடினப்பட்டு தூக்கி தரையில் வைத்தாள். 

 

 

“மதினி அவுனுங்கதா…” என சிலம்பன் ஆரம்பிக்க, கைகாட்டி தடுத்தவள், “நாங்க எதுவும் பண்ணல அவுனுங்கதா எங்க கிட்ட வம்பு பண்ணாய்ங்க. அதானடா சொல்ல வரீங்க.” என்றாள்.

 

 

உடன்பிறந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “எவன்… எவன் கூட வேணா பிரச்சனை பண்ணி அடிச்சிக்கிட்டு சாவுங்க. காலைல வெள்ளன எழுந்து கஷ்டப்பட்டு பால கறந்து வெக்குற என் உழைப்பு வீணாப்போவுது. இனிமே ரெண்டு பேருல ஆராது ஒருத்தன் இதுல கை வெச்சாலும் சும்மா இருக்க மாட்ட சாமி ஆடிடுவ.” என்றவள் மீது கோபம் கொண்டார்கள் இருவரும்.

 

 

சாமந்தியோடு இருவரும் தொடர்ந்து வாக்குவாதங்கள் செய்து கொண்டிருக்க, வந்தான் அவளது கணவன். அண்ணனை கண்டதும் பதமான சகோதரர்கள் மதினியின் கையை விடாமல் சுரண்டி கொண்டே இருந்தார்கள்.

 

அவர்கள் இம்சை தாங்காமல், “இன்னிக்கு ஒரு நாளு உங்களுக்கு வாய்ப்பு தர. ஒழுங்கா எடுத்துட்டு போவல உங்க அண்ண கிட்ட சொல்லி உங்க ரத்தத்த இந்தப் பால் குண்டான்ல கறந்து வெக்க சொல்லிடுவ.” என்றவளுக்கு தெரியாது பிரச்சனையின் மையப்புள்ளி இதில் தான் ஆரம்பிக்கப் போகிறது என்று.

 

 

 

சீமை 21

 

சிலம்பன் பேசிக் கொண்டு மிதிவண்டியை ஒட்ட, பால் டின்னை பிடித்தபடி பின்னால் அமர்ந்து வந்தான் மொழியன். தினமும் பால் எடுத்துக்கொண்டு சொசைட்டிக்கு போவதை இருவரும் விரும்புவார்கள். ஆனால், எதிர் அணியோடு சண்டை பிடித்து அதை சரியாக செய்ய முடியாததால் இரண்டு நாட்களாக சாமந்தி தடை போட்டு இருந்தாள். அண்ணன் மனைவியை சமாதானம் செய்தவர்கள் ஒரு வழியாக இன்று கிளம்பி விட்டார்கள்.

 

 

“மொழி, இறங்கி பத்திரமா பாலை கீழ வையி.” என்றவன் ஓரமாக மிதிவண்டியை நிறுத்தினான்.

 

“யம்மாவ்! எம்புட்டு தூரம் இந்த எரும மாட்ட புடிச்சிக்கிட்டு வரது. என்னை வுட இது கணம் பெருசா இருக்கு.” புலம்பிக்கொண்டே கீழ் இறங்கியவன் பால் டின்னை கீழே இறக்க முயன்றான்.

 

 

வெகு நேரம் அமர்ந்திருந்ததால் முதுகு லேசாக முறுக்கிக் கொண்டிருந்தது அவனுக்கு. அதன் பலனாய் கீழே இறக்க முடியாமல் சைக்கிளோடு சேர்த்து சாய்க்க, “எடுபட்ட பயலே… பதினாறு லிட்டர் பால இறக்க கூட சத்து இல்லாம கெடக்க.” என்று தலையில் அடித்த சிலம்பன் அதை இறக்கி கீழே வைத்தான்.

 

 

“நாளைக்கு சைக்கிளை நா ஒட்டிக்கிட்டு வர, நீயி புடிச்சுட்டு வந்து பாரு அப்ப தெரியும் ஆருக்கு சத்து இல்லினு.” 

 

 

“எடேய்! நானுலாம் நூறு லிட்டர் பாலையே உள்ளங்கையில வெச்சு விளையாடுற ஆளு. பேச வந்துட்டான் பேச்சு.” 

 

“உன்ன போல வாய் சவடால் வுட இந்த சிறுமயிலூர் சுத்து வட்டாரத்துல எவனும் இல்ல டோய்.” என்றவனை முறைத்தவன்,

 

“பேசுனது போதும் புடி உள்ள போலாம்.” என்று தூக்கினான்.

 

 

“உண்மைய சொல்லிட கூடாதே உடனே பேச்ச மாத்திடுவ.” பேச்சை மாற்றி வேலையை கவனிக்க வைத்த அண்ணனை சாடை பேசிக்கொண்டே அவனும் உள்ளே சென்றான்.

 

சொசைட்டி அதிகாரியிடம், “சார் பால் கொண்டாந்து இருக்கோம்.” என்றிட, அவரோ கை காட்டினார் பொறுக்குமாறு.

 

 

ஏற்கனவே இவர்களுக்கு முன்னால் வந்தவரிடம் பாலை வாங்கி முடித்தவர், “இதுல கொண்டாந்து வைங்க.” என்றார்.

 

 

பதினாறு லிட்டர் பாலை எடை மீது வைத்தான் சிலம்பன். அங்கு வேலை செய்யும் நபர் வைத்த அடுத்த நொடியில் பால் பாத்திரத்தை கீழே இறக்கி வைத்தார். அதற்குள் வரவேண்டிய பால் ரசீதும் மெஷினில் இருந்து வந்துவிட, ஒன்றும் புரியவில்லை சகோதரர்களுக்கு.

 

 

“சார், பால் வெச்சதை நாங்க பாக்கவே இல்லியே.” 

 

 

“நீயி பாக்கலன்னா அதுக்கு நா என்னா பண்ண முடியும். கவனத்த இங்க வெக்காம வேற எங்கயோ வெச்சிருந்தா அதுக்கு நா பொறுப்பாக முடியாது.” மொழியன் வார்த்தையில் சிடுசிடுக்க ஆரம்பித்தார் அங்கு வேலை செய்யும் சிவகுமார்.

 

 

“சார், இப்ப என் தம்பி என்னா தப்பா கேட்டுட்டா. வெச்ச சீக்கிரத்துல எடையில இருந்து எடுத்துட்டீங்க. அதா பாக்க முடியல.”

 

“எடேய்! நா எடுத்துட்டன்னு சொல்லாத நீயி பாக்கலன்னு சொல்லு” என்றவர் பால் ரசிதை கையில் திணித்து,

 

“ஏதாச்சும் பாக்கணுனா இத பாத்துக்கோ.” என்று விட்டு வேலையை கவனித்தார்.

 

 

மனதினுள் சிவகுமாரை திட்டிய சகோதரர்கள் பால் ரசிதை பார்த்து அதிர்ந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த லிட்டர் கணக்கை விட குறைவாக அதில் காட்டியது. ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, “வேல முடிஞ்சிடுச்சு கெளம்புங்க.” என பாலை அங்கிருக்கும் சொசைட்டி அண்டானில் ஊற்ற தூக்கினார்.

 

அவர் கை மீது கை வைத்து, “சார், நாங்க பதினாறு லிட்டர் கொண்டு வந்தோம். இதுல பதிமூணு லிட்டர் தான் காட்டுது. மீதி பாலோட கணக்கு எங்க சார்?” என்ற சிலம்பனின் வார்த்தை காதில் விழாதது போல் கணக்கு புத்தகத்தில் எதையோ எழுதி சென்றார்.

 

 

“எங்க அண்ண உங்களைதா கேக்குறான்.” என சின்னவனும் கேள்வி கேட்க ஆரம்பிக்க, அப்போதும் அவரிடம் பதில் இல்லை.

 

 

“நாங்க எங்க வூட்ல எப்பவுமே பால அளந்துதா கொண்டாருவோம். அப்டி இப்டினு ஒரு லிட்டர் பால் குறைஞ்சா கூட பரவால. மூணு லிட்டர் பால் கணக்குல வரல. என்னான்னு கேட்டுக்கிட்டு இருக்கோம் நீங்க பாட்டுக்கு கணக்கு எழுதிக்கிட்டு கெடக்கீங்க.” மேஜையின் அருகே சகோதரர்கள் இருவரும் நின்று கொண்டு கேள்வி எழுப்ப, நிமிர்ந்து முறைத்தார்.

 

 

 

“மொறைச்சிக்கிட்டே இருக்காம பதில் சொல்லுங்க சார்.” என்ற மொழியனிடம், “எடேய், வந்தம்மா பால ஊத்தணும்மா கெளம்பி போனமானு இருக்கனு. இங்க எடை மிஷின் ஒன்னு நா இல்ல. அது என்னா வெயிட் காட்டுதோ அதுதா கணக்கு. தேவ இல்லாம கேள்வி கேக்காதீங்க மருவாதி கெட்டுப் போயிடும்.” என மிரட்டினார் சிவகுமார்.

 

 

“சார்…. இந்த மிரட்டுற வேல எல்லாம் எங்க கிட்ட வெச்சுக்காதீங்க. மனுச பொய் சொல்லலாம் அது எப்டி ஒரு மிஷினு போய் சொல்லும். அப்டின்னா அந்த மிஷினு சரியில்லன்னு தான அர்த்தம். அத என்னான்னு பாத்து சரி செஞ்சிட்டு அப்புறம் எங்க பால எடுங்க.”

 

 

“நீயி ஆருடா… என்னை அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்க. இவ்ளோ சட்டம் பேசுற உன்னோட பால எடுக்க முடியாது. இங்க இந்த மாதிரி தான் அளவு காட்டும். பாலை ஊத்த முடிஞ்சா ஊத்துங்க இல்லினா தூக்கிட்டு போய் மாட்டு மடியிலயே ஊத்தி வுடுங்க.” துணிச்சலாக மிரட்டாதீர் என்ற சிலம்பனிடம் குரல் உயர்த்தி பேசினார்.

 

 

அவரது பேச்சு சகோதரர்கள் இருவருக்கும் பிடிக்காமல் போனது. கூடவே ஏதோ ஒரு தவறு இங்கு நடப்பதாக உணர்ந்தவர்கள், “என்னாத்துக்கு சார் எங்க பாலை எடுக்க மாட்டன்னு சொல்றீங்க. நீங்க குடுத்த ரசீதுல தண்ணி அதிகமா கலந்ததுக்கான ஆதாரம் கூட இல்ல. எதுவும் செய்யாத சுத்தமான பால எடுக்க முடியாதுனு எப்டி சொல்லுவீங்க.” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

 

 

 

அந்த நேரம் வேறொரு நபர் பால் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். இவர்கள் சத்தத்திற்கு இடையே எடை இயந்திரத்தின் பக்கத்தில் பாலை வைத்துவிட்டு சிவக்குமாரை அழைக்க, “எடேய், ரெண்டு பேரும் இங்க இருந்து நகருங்க எனக்கு சோலி கெடக்குது.” என அவசரமாக விரட்ட ஆரம்பித்தார்.

 

 

அவர்கள் இருவரும் நகர மறுத்து புதிதாக வந்த நபரிடம், “அண்ணே நீங்க பால அளந்து கொண்டாந்திங்களா?” கேட்டிட, “பால் சட்டில அளவு வெச்சுதான்பா கொண்டாந்த” என்றார்.

 

 

“லிட்டர் போட்டு இருக்குமே அந்த சட்டியா ண்ணே.” 

 

“ஆமா தம்பி” 

 

எதில் அளந்தார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட மொழியன், “நீங்க அளந்து கொண்டாந்ததும் இதுல இருக்குறதும் சரியானு பாருங்க.” என்றான்.

 

 

“எடேய்! எல்ல மீறி பண்ணிக்கிட்டு இருக்கீங்க. என் எடத்துல வந்து என் வேலைய செய்ய நீங்க ஆருடா. திரும்பவும் சொல்ற வம்பு வளக்காம இங்க இருந்து நகருங்க. இல்லினா இனி ஜென்மத்துக்கும் உங்க வூட்டு பாலை எங்கியும் விக்க முடியாத படி பண்ணிடுவ.” என்றவரிடம் பேச்சில் அப்படி ஒரு அவசரம்.

 

 

“எங்க வூட்டு பாலை விக்க முடியாதுனு சொல்றதுக்கு உங்களுக்கு அதிகாரம் இல்ல சார்.  கஷ்டப்பட்டு மாடு வளத்து பால் கொண்டாந்து குடுத்தா அத ஏமாத்த பாக்குறீங்க.” நியாயமான பேச்சை சிலம்பன் முன்வைக்க,

 

“தப்பு எதுவும் செய்யலன்னா எதுக்காக இப்டி மொகம் வேத்து கொட்டுது. எங்களுக்குத்தான் இந்த மிஷினு தப்பா காட்டுச்சு சரி, அவருக்கு அப்டி காட்டு தான்னு பாத்துருவோம்.” மொழியன் அந்த நபரிடம் பாலை வாங்கி எடை இயந்திரத்தில் வைத்தான்.

 

 

சகோதரர்களின் காரியத்தில் மிகுந்த சீற்றத்திற்கு ஆளானா சிவகுமார், “எடேய்!” என மொழியனை தள்ளி விட்டார்.

 

சின்னவன் சுதாரிக்காமல் கீழே விழ, “மொழி” தாங்க ஓடினான் சிலம்பன்.

 

 

“ஒன்னு இல்லிடா வுடு.” என எழுந்துக் கொண்டான்.

 

தம்பியின் நலனை அறிந்தவன், “சார் எதுக்கு எந்தம்பிய தள்ளி வுட்டிங்க? அவன் என்னா பண்ணா இப்போ?” என குரல் உயர்த்தினான்.

 

“குரல ஒசத்தி பேசாதடா வாய ஒடச்சிடுவ.”

 

“சார், தப்பு பண்ணது நீங்க அத கேட்ட எந்தம்பிய தள்ளியும் வுட்டுட்டு குரல ஒசத்தாதன்னு சொன்னீங்கன்னா என்னா அர்த்தம்? என்னாத்துக்கு என் தம்பிய தள்ளி வுட்டீங்கன்னு முதல்ல காரணம் சொல்லுங்க சார்.”

 

“ஏய்! நீ ஆருடா என்னை கேள்வி கேட்க? என் வேலையில தலையிட்டா உன் தம்பிய மட்டும் இல்ல ஆரா இருந்தாலும் தள்ளி தான்டா வுடுவ. இனிமே உங்களை இந்த சொசைட்டி பக்கம் பாத்த உசுர எடுத்துருவ, ஓடுங்கடா.” 

 

 

“நாங்க என்னா தப்பு பண்ணோம் உங்களுக்கு பயந்து ஓட. நீங்க பேசுறதையும் பண்றதையும் பாத்தா இங்க எதுவோ தப்பு நடக்குற மாதிரி தெரியுது. அது என்னான்னு கண்டுபிடிக்குற வரைக்கும் இந்த இடத்தை வுட்டு போவ மாட்டோம்.”

 

 

நடக்கும் கலவரங்களை பார்த்துக் கொண்டிருந்த புதிதாக வந்த நபர், “என்னாத்துக்குப்பா இங்க சலசலப்பு?” என விவரம் கேட்டார்.

 

“நாங்க கொண்டாந்த பாலை வுட இங்க கொறவா எடை காட்டுது ண்ணே. என்னான்னு விவரம் கேட்டா அப்டித்தா இங்க நடக்கும் இஷ்டம் இல்லினா எடுத்துட்டு வராதனு சொல்றாரு. அதா உங்க பால எந்தம்பி எடை போட்டு பாக்கலானு தூக்குனா. அதுக்கு என்னாமோ சின்ன பையனு கூட பாக்காம புடிச்சு தள்ளி வுடுறாரு.” விளக்கம் கொடுத்தான் விரிவாக.

 

 

சிலம்பனின் பேச்சில் சந்தேகம் கொண்ட அந்த நபர் தன் பாலை எடை மீது தூக்கி வைத்தார். அவர் கொண்டு வந்த அளவை விட குறைவாக எடை இயந்திரத்தில் காட்டியது. திடுக்கிட்டவர் அந்த அதிர்ச்சி குறையாமல், 

 

“ஆமாம் தம்பி! நா கொண்டாந்த பாலையும் கொறைவாத்தான் காட்டுது. நீங்க சொல்றது உண்மைதா போல” என்றிட, சகோதரர்கள் இருவருக்கும் அவரை விட அதிக அதிர்ச்சி.

 

 

“இப்ப சொல்லுங்க சார், இதுக்கு என்னா காரணம் சொல்ல போறீங்க? எங்க வூட்டு பாலை தான் மிஷினு கம்மியா காட்டும். எல்லா வூட்டு பாலையுமா இந்த மிஷினு கம்மியா காட்டும். ஒரு லிட்டர் பாலோட கொழுப்ப பொறுத்துதான காசு குடுக்குறீங்க. அப்டி இருக்க ஒரு ஆளுக்கு மூணு லிட்டர் பாலு கொறச்சு போட்டீங்கன்னா என்னா அர்த்தம்.”

 

 

 

சிவக்குமாரின் முகம் நல்ல நிலைமையில் இல்லை. அனல் பக்கத்தில் நின்றால் எப்படி முகம் வேர்த்து சூடாகுமோ அதேபோல் ஒருவித உஷ்ணத்தோடு காட்சியளித்தது அவர் முகம். அதை மறைக்க காது நரம்புகளை புடைத்துக் கொண்டு,

 

 

“என்னாய்ங்கடா ஆளு செட் பண்ணிட்டு வந்து பிரச்சனை பண்றீங்களா. இத்தினி வருசமா இங்க பாலை கொண்டாந்து குடுத்துட்டு போற ஒருத்தர் கூட இந்த மாதிரி ஒரு கொற சொன்னது இல்ல. ஆர பழிவாங்க நீங்க ரெண்டு பேரும் பாலை கொண்டாந்து என் தலையில கட்ட பாக்குறீங்க. உங்க ஏமாளித்தனத்துக்கு நா ஆளு இல்ல. முதல்ல ரெண்டு பேரும் பாலை எடுத்துக்கிட்டு வெளிய போங்கடா.” என சிலம்பனை பிடித்து தள்ள, அவனோ நகராமல் முறைத்து நின்றான் விரைப்பாக.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்