Loading

கந்தனின் அலுவலகத்தில் அவன் முன்னால் அமர்ந்திருந்தார் நல்லசிவம். கந்தன் தான் அவரை வரச் சொல்லியிருந்தான். எதற்கென்று அவருக்குத் தெரியும்.

நண்பன் என்று நம்பிச் சூரிட்டி கையெழுத்துப் போட்டதன் விளைவு, இன்று கந்தன் முன்னே தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார்.

காளீஸ்வரனும் அவனது மகனும் ஊரை விட்டுச் சென்றுவிட்டதாகத் தகவல் கந்தன் காதிற்கு வர, அவர்களுக்காகச் சூரிட்டி கையெழுத்திட்ட நல்லசிவத்தைத் தொலைபேசி வழியே அழைத்துத் தனது அலுவலகம் வரச் சொல்லியிருந்தான்.

அவன் வரச் சொன்ன காரணம் அறிந்தவர், அடுத்த நாளே தலைகுனிவோடு அவன் முன்னே அமர்ந்தார்.

குரலைச் செறுமியவன், “விஷயம் உங்க காதுக்கு வந்திருக்கும்னு நினைக்கிறேன். என்ன பண்ணப் போறீங்க?” எனக் கேட்டான்.

“என்னை இப்படி ஏமாத்துவான் நான் நினைக்கவே இல்லைப்பா! பால்ய நண்பன், நியாயஸ்தனா இருப்பான் என்று நம்பினேன். அவன் பிள்ளையோட என்னை ஏமாத்திட்டு ஊரை விட்டுப் போவான்னு எதிர்பார்க்கல தம்பி! ஏமாந்துட்டேன் தம்பி!” எனத் தன்னை விட வயதில் குறைந்தவனிடம் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

“நீங்க மட்டுமா? நானும் தானே! சொல்லப்போனா, போனது என்னோட பணம். நான் உங்களை விடக் குலுங்கி அழணும். அழுதா மட்டும் பணம் திரும்ப வந்திடுமா? முதல்ல அழுறதை நிறுத்துங்க!” என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்.

அவரும் “என்னை மன்னிச்சிடுங்க தம்பி! என்னை நம்பிப் பணத்தைக் கொடுத்தீங்க! உங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறேன்னு தெரியல தம்பி” என வாயைப் பொத்திக் குலுங்கி அழுதார்.

“ஆனா எனக்கு நீங்கதான் பதில் சொல்லணும் சார். என் பணத்தை நீங்கதான் கொடுக்கணும், வட்டியோட!” என்று அவன் நிறுத்த, அவருக்கு நெஞ்சை அடைத்தது. அவனிடம் விவாதம் செய்ய முடியாது. ‘நான் ஏன் பணத்தைக் கொடுக்கணும்?’ என்று அவரால் கேட்டுவிட முடியாது.

பணம் கொடுத்த நொடியே “நீங்கதான் பொறுப்பு. உங்களிடம் தான் கேட்பேன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதோடு, கையெழுத்து வாங்கியது அவருக்கு நினைவில் இருந்தது.

“ஆனா என்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே தம்பி! சம்பாதிச்சுக் கடனைக் கட்டுற அளவுக்கு உடம்புல தெம்பு இல்லை தம்பி! என்னால பணத்தை எப்படித் தம்பி கொடுக்க முடியும்?”

“அதுக்காகக் காந்தி கணக்குல எழுதச் சொல்றீங்களா? நீங்கதான் சூரிட்டி கையெழுத்துப் போட்டீங்க. ஒன்னு உங்க நண்பர்கிட்ட இருந்து பணத்தை வாங்கிக் கொடுங்க, இல்லை நீங்கதான் கட்டணும். இல்லை, முடியாதுன்னு சொன்னா போலீஸ்க்குப் போக வேண்டியதுதான். கவர்மென்ட் ஆர்டரோடு வீட்டை சீஸ் (Seize) செய்வேன். மரியாதையோட வாழணும்னு நினைச்சா, நான் கொடுக்கிற டைம்க்குள்ள பணத்தைக் கொடுங்க… இல்லை கம்பிதான் எண்ணணும்” என்றான் கறாராக.

“தம்பி…” என்று அவர் மென்று முழுங்க,

“என்ன சார்?! எனக்கு உங்களைத் தவிர யார்கிட்ட போய்ப் பணத்தைக் கேட்க முடியும்? நீங்கதான் கொடுக்கணும். அது எப்படி என்னன்னு எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு வாரத்துல பணம் எனக்கு வந்தாகணும்” என்று கழுத்துப் பிடியில் நிறுத்தினான் அவரை.

“தம்பி! ஒரு வாரத்துல எப்படிப்பா?”

“எனக்கு உங்க மேலே நம்பிக்கை இல்லை சார்! நீங்களும் உங்க நண்பரைப் போல ஓடிப் போயிட்டா நான் என்ன பண்றது? எனக்குப் பணம் வேணும் சார், ஒரு வாரத்துல” என்று பிடிவாதமாக இருந்தான்.

“தம்பி! ஒரு வாரம்லாம் முடியாதுப்பா! ஒரு மாசம் டைம் குடுங்க, உங்க பணத்தை வட்டியோட அடைக்கிறேன். ஒரு வாரம் பத்தாதுப்பா! என் பொண்ணுக்கு வேற கல்யாணம் முடிவாகியிருக்கு” என்றார்.

விசுக்கென நிமிர்ந்தான் கந்தன். “என்ன சொல்றீங்க? உங்க பொண்ணுக்குக் கல்யாணமா?”

“ஆமாப்பா! என் பொண்ணு கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டா! கல்யாணம் பெருசா இல்லைனாலும் என் பொண்ணு கல்யாணத்துக்கு ஏதாவது செய்யணும் இல்லையாப்பா! கொஞ்சம் டைம் குடுங்க, வீட்டை வித்தாவது உங்க கடனை அடைக்கிறேன்” என்றார்.

நெற்றியைச் சுருக்கி யோசித்தவன், ‘இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் ஜனனியைத் தவறவிட நேரிடும்’ என்று எண்ணியவன், “நீங்க எனக்குப் பணம் தர வேணாம்… ஆனா அதுக்குப் பதிலா எனக்கு நீங்க ஒன்னு செய்யணும்” என்று பீடிகை போட்டான்.

“பணம் தர வேண்டாம்” என்றதுமே அவர் வாயைப் பிளந்தார். அடுத்த நொடியே “என்ன செய்யணும்?” என்று ஆவலாகக் கேட்டார். அதைச் செய்து முடித்தாவது இதிலிருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்று நினைத்தார்.

“என்ன செய்யணும் சொல்லுங்க தம்பி, செய்றேன்” என்றார் தீவிரமாக.

“உங்க மகளை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்! கல்யாணம் பண்ணிக் கொடுத்தால் நீங்க பணம் தர வேண்டிய அவசியமே இல்லை. இந்தப்பத்திரத்தைக் கிழிச்சுப் போட்டுடுறேன்” என்று அவர் முன்னே அவர் கையெழுத்திட்ட பத்திரங்களை எடுத்து வைத்தான்.

“தம்பி! என்ன இப்படிப் பேசுறீங்க? என் பொண்ணை எப்படி உங்களுக்குக் கல்யாணம் பண்ணித் தர முடியும்? அவ இன்னொருத்தனை விரும்புறா! அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறா! என் தப்புக்காக என் பொண்ணை எப்படித் தம்பி…?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது! உங்க பொண்ணைக் கட்டித் தந்தால், உங்க கடனைத் தள்ளுபடி செய்வேன். இல்லைன்னா ஒரு வாரத்துல நீங்க பணத்தைக் கொடுத்தே ஆகணும். யோசிச்சு முடிவைச் சொல்லுங்க! இப்போ நீங்க கிளம்பலாம்” என்றான்.

“தம்பி” என அவர் இழுக்க, “நான் சொல்றதைச் சொல்லிட்டேன்! இதுக்கு மேலே சொல்ல ஒன்னும் இல்லை, நீங்க கிளம்பலாம்” என்று வாசலைக் காட்டினான்.

அதற்கு மேலே எதுவும் சொல்லாது அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

‘ஜனனி! கல்யாணம் செய்துக்க விருப்பம் இல்லைன்னு மூஞ்சில அடிச்சது போலச் சொல்லிட்டு, இன்னொருத்தரை விரும்ப வேற செய்றியா? உன்னைக் கல்யாணம் பண்ணிக் காட்டுறேன்டி’ என்று விஷமமாகச் சிரித்துக்கொண்டான்.

மறுநாள் கௌரியும் நல்லசிவமும் ஜனனியைத் தேடி வந்தனர். இருவரும் அவள் வேலைக்குச் செல்லும் முன்னரே வந்துவிட்டனர். அவர்களுக்குக் காபி கொடுத்து உபசரித்தாள் ஜனனி. இருவரது முகமும் சோகத்தில் மூழ்கியிருந்தது. தலை நிமிர்ந்து பேச முடியாதபடி இருவரும் தரையைப் பார்த்தபடி இருந்தனர்.

“என்ன சம்பந்தி, ஏன் உங்க முகம் சோர்ந்து போய் இருக்கு? கலகலப்பா பேசுற மனுஷர் இப்படி அமைதியா, சோகமா இருந்து பார்த்தது இல்லையே! எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டார் நீலகண்டன்.

நல்லசிவம் சொல்லத் தயங்க, கௌரிதான் அழ ஆரம்பித்தார். “என்னத்தை அண்ணே சொல்ல? இவரால கடைசி வரைக்கும் என் பொண்ணுக்கு நிம்மதியே கிடைக்காது அண்ணே! இவர் செஞ்சிட்டு வந்த காரியத்தைக் கேட்டால் நீங்களே கோவப்படுவீங்க! தலையில இடி விழுந்தது போல ஒரு காரியம் செஞ்சிட்டு வந்திருக்கார் அண்ணே!” என்று கதறி அழுதார்.

பயந்து போன ஜனனி அவர் அருகே வந்து, “என்னம்மா அப்பா செஞ்சார்? என் நிம்மதியைப் பறிக்க அப்படி என்ன அப்பா செஞ்சார்? எதுக்கு நீ இப்போ அழுதுட்டு இருக்க? என்ன நடந்துச்சு சொல்லு?” என்று தாயை உலுக்கினாள்.

“என்னை மன்னிச்சிடு ஜனனிம்மா! அப்பா புத்தி கெட்டு ஒரு விஷயம் பண்ணிட்டேன். அது உன் தலையில வந்து விடியும்னு நான் எதிர்பார்க்கலம்மா! இப்போதான் உனக்கு நல்லது நடக்கப் போகுதுன்னு சந்தோஷப்பட்டேன். அதுல நானே மண்ணள்ளிப் போடுவேன்னு நினைக்கலம்மா! என்னை மன்னிச்சிடும்மா” என்று குலுங்கிக் குலுங்கி அழுதார்.

“ரெண்டு பேரும் பீடிகை போட்டு அழாம, விஷயம் என்னன்னு சொல்றீங்களா?” எனக் கடுப்பாகக் கத்தியிருந்தாள் ஜனனி.

நல்லசிவம் விஷயத்தைச் சொல்ல, கொதித்துப் போனாள் ஜனனி. “நீங்க திருந்தவே இல்லையாப்பா? என்னை எப்பவும் நெருக்கடியிலேயே (கழுத்து பிடியிலேயே) வச்சு உங்களுக்குச் சாதகமா எல்லாத்தையும் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டீங்களா? இப்போ எதுக்கு இங்க வந்தீங்க? என் மனசுல இருக்குற ஆசையை உதறித் தள்ளிட்டு உங்க கடனுக்காக அவனைப் கல்யாணம் பண்ணிக்கச் சொல்ல வந்தீங்களா?” எனத் தன்னுள் இருந்த மிச்சமீதி கோபத்தைக் கதறலாகக் கொட்டித் தீர்த்தாள்.

“ஐயோ! நிச்சயமா இன்னொரு முறை என் தவறுக்காக உன்னைப்பலிகடா ஆக்க மாட்டேன்மா! ஜெயிலுக்குப் போகிற சூழ்நிலை வந்தால்கூடப் போவேனே தவிர, நீ அவனைப் கல்யாணம் பண்ணிக்கணும்னு உன்னை வற்புறுத்த மாட்டேன்மா!” என்று அழுதார்.

“இப்போ பணத்துக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? என்ன செய்யப் போறீங்க?”

“தெரியலம்மா! அந்தப் பாவி காளி என்னை ஏமாத்துவான் நான் எதிர்பார்க்கலம்மா! இப்படி ஏமாந்து போய் நிப்பேன்னு நான் நினைக்கல! என்ன செய்யப் போறேன்னு தெரியல” என்று தலையில் அடித்து அழுதார்.

ஜனனியும் நந்துவும் என்ன செய்வதென்று யோசிக்க, “பேசாம இருக்கிற வீட்டை வித்து அந்தப் பையனோட கடனை அடைப்பதைத் தவிர வேற வழியே இல்லைம்மா.”

“வீட்டை வித்துக் கடனை அடைச்சுட்டா உங்க பிரச்சனை தீர்ந்திடுமா? அடுத்த வேளைக்கு என்ன பண்ணுவீங்க?”

“யாரையும் எதிர்பார்க்கக் கூடாதுன்னு கௌரவமா வாழ்ந்துட்டு இருந்தேன். இப்போ அதுக்கு அடுத்த அடி! முதல்ல கடனை அடைப்போம், அடுத்து என்ன செய்யலாம்னு பார்ப்போம். என் பேர்ல இருக்கிற வீட்டை வித்து, உன் பேர்ல அடமானம் வச்சுக் கடனை அடைக்கலாம்மா! ஏதாவது வேலைக்குப் போய் அடகு வச்ச வீட்டைத் திருப்பிக் கொடுக்கிறேன்” என்றார்.

தலைகுனிந்தபடி சொல்லும் அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தலைநிமிர்ந்து வாழ்ந்த மனிதன் இப்போது உடைந்து போயிருப்பதை அவளால் காண முடியவில்லை.

“வேண்டாம், என் பேர்ல இருக்கிற வீட்டை வித்திடலாம். மேற்கொண்டு வரப் பணத்தை எப்படியாவது ரெடி பண்ணலாம். இருக்கிற வீட்டை வித்துட்டுத் தங்க இடம் இல்லாம நீங்களும் அம்மாவும் வாடகை வீட்டுல தங்கி வேலைக்குப் போய் உங்களைக் காப்பாத்திக்கணும்ங்கிற நிலைமை உங்களுக்கு வர வேண்டாம். நான் இருக்கும்போது நீங்க ஏன் கஷ்டப்படணும்? இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்” என்று பெற்ற மகளாக அவரைத் தாங்கினாள்.

“வேணாம்மா, பெத்த கடமைக்காக நீ எங்களுக்காகச் செஞ்சது அதிகம். இனியாவது நீ உன் வாழ்க்கையைப் பார்க்கணும்மா. இந்தப் பிரச்சனையில நீ தலையிடக் கூடாதும்மா” எனக் கெஞ்ச,

“என்ன பேசுறீங்க? உங்களை எப்படியோ போங்கன்னு விட்டுட்டு நான் என் வாழ்க்கையில சந்தோஷமா வாழணுமா? முடியாது! இந்தப் பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன். நீங்க உடம்பை வருத்திக்காம போய் இருங்க!” என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னாள்.

“ஜனனிம்மா…” என்று இழுக்க, “போங்கப்பா! நான் பார்த்துக்கிறேன்” என்று அவர்களை அனுப்பி வைத்தவள், கடனை எப்படி அடைப்பது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு வெட்கமே இல்லையா? இன்னொருத்தனை மனசுல நினைச்சுட்டு இருக்கிறவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறியே! நீயெல்லாம் ஆம்பளையா?” எனத் தன் எதிரே இருந்தவனை நாக்கு பிடுங்குவது போலக் கேட்டு,

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்