Loading

அத்தியாயம் 7

“அம்மா…” எனக் கூவியபடி அகமொழியின் வீட்டிற்கு வந்தாள் ரூஹி.

சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வசந்தி, “வா ரூஹி… என்ன இந்தப் பக்கம் ஆளையே காணோம்…” எனக் கேட்டார்.

“வேலைமா… ஹாஸ்டல்ல நைட்டு எட்டு மணிக்கு மேல போனா உள்ள விட மாட்டுறாங்க. அதான் வரவே முடியல.” என்றபடி அடுப்பு மேடையில் அமர்ந்து கேரட்டை ஒரு கடி கடித்தாள்.

“நீ ஏன் தனியா ஹாஸ்டல்ல இருக்க. இங்க வந்து இருன்னு பல தடவை சொல்லியாச்சு…” வசந்தி அலுத்துக் கொண்டார்.

“எனக்கு ஹாஸ்டல்ல இருந்தே பழகிடுச்சுமா… ரிங் வாங்கப் போகணும்னு ரிஷு சொல்லிட்டு இருந்தான். இன்னும் கிளம்பாம உப்புமா கிளறிட்டு இருக்கீங்க.”

“இதோ கிளம்பியாச்சுடா. நீயும் தான வர்ற?”

“இல்லமா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க போயிட்டு வாங்க. உங்களைப் பார்க்கவே இல்லையேன்னு தான் வந்தேன். அப்பா எங்கே?”

“குளிக்கிறாரு ரூஹி. நீயும் வரலாம்ல.” எனக் குறைபட்டுக் கொண்டவர், “உன் அப்பா எப்படி இருக்காரு…” என வினவினார்.

“ம்ம், ஜம்முன்னு தனிமையை ரசிச்சுட்டு இருக்காரு ஊட்டில…”

“அவரை இங்க கூட்டிட்டு வந்து வச்சுக்கலாம்ல.”

“சொல்லியாச்சுமா… கேட்டா தான. அவருக்கு அம்மா ஞாபகமா அங்க இருந்தா தான் மனசுக்கு ஆறுதலா இருக்குமாம். எமோஷனலா சொல்றப்ப எப்படி ஃபோர்ஸ் பண்றது” அவளிடமும் சிறு வருத்தம்.

“பேசாம, உங்க கிளாம்பிங் பிசினஸை ஊட்டிலயும் ஒன்னு ஸ்டார்ட் பண்ணிடுங்க.” வசந்தி ஐடியா குடுக்க,

“அதெல்லாம் யோசிச்சோம்மா… இடம் தான் அமையல. இடம் வாங்கிப் பண்ணனும்னா செலவும் அதிகம் ஆகும். அதுவும் ஊட்டில ரியல் எஸ்டேட் தாறுமாறு…” என்றவளுக்குத் தட்டில் உப்புமாவைப் போட்டுக் கொடுத்தார்.

“தேங்க்ஸ் மா…” என உப்புமாவை உண்டவளை முறைத்தபடி உள்ளே வந்தான் ரிஷான்.

“ஏண்டி, வரமாட்டேன்னு சொல்லிட்டு இங்க வந்து தின்னுட்டு இருக்க?”

“டேய், கடைக்குத் தான் வரலைன்னு சொன்னேன். இங்க சாப்பிட வரலைன்னு சொன்னேனா…” என நாக்கைத் துருக்கிட அவன் தலையில் அடித்துக் கொண்டான்.

——–

கேசவ நாயரின் இல்லமே பரபரப்பாக நகைக் கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது.

அமையா இன்னும் பள்ளிக்குக் கிளம்பாமல் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க சுஜாதா தான், “என்ன மோளே, அமையா ஸ்கூலுக்குப் போகலயா” என வினவினார்.

“இல்ல அம்மே… இன்னைக்கு ஸ்கூல் லீவ். நேத்தே சொல்ல மறந்துட்டேன்.” என்ற அன்விதாவிடம், “அப்போ நீ கடை முழுக்க ஓடுனதை யாராலும் தடுக்க முடியாது.” என்று சிரித்ததில் அவளிடமும் சிறு முறுவல்.

அந்நேரம் வரவேற்பறைக்குத் தனது கடிகாரத்தைக் கட்டியபடி வந்த அர்ஜித் அகன், மகளைத் தூக்கிக் கொண்டான்.

“அதான் ஞானும் வருனில்லே, பார்த்துக்கலாம்மா…” என்றபடி காருக்குச் சென்றான்.

அனகா கல்லூரிக்குச் சென்றிருக்க, மற்றவர்கள் நகைக் கடைக்குச் சென்றனர்.

அப்போது தான் கடைக்குள் நுழைந்த அகமொழியும், ரிஷானும் மோதிரங்களைப் பார்வையிட, வசந்தியும் பாஸ்கரும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பார்த்தனர்.

“ரிஷு, நீ சில்வர் பிரேஸ்லெட் பார்க்கணும்னு சொன்னீல்ல. போய் பார்த்துட்டு இரு. ஒவ்வொருத்தரா பார்த்தா லேட் ஆகிடும்…” என்றதும், அவனும் “சரி நீ செலக்ட் பண்ணி வை…” என வெள்ளிநகைத் தளத்திற்குச் சென்றான்.

வசந்தியின் அருகில் அமர்ந்து கொண்ட அகமொழி தாய் தந்தையுடன் மோதிரத்தில் மூழ்க, அந்நேரம் உள்ளே நுழைந்தனர் சுஜாதா, கோபால கிருஷ்ணன், கல்யாணி, கேசவ நாயர் நால்வரும்.

அன்று கடையும் சற்றுக் கூட்டமாக இருக்க, இருந்த மூன்று நாற்காலியில் பெரியவர்களை அமர வைத்து விட்டார் சுஜாதா.

அவர்களும் மோதிரம் பார்த்ததில் நிமிர்ந்து சுஜாதாவைப் பார்த்த அகமொழி, “நீங்க உக்காருங்க ஆண்ட்டி…” என எழுந்து கொண்டு வசந்தியின் பின்னே நிற்க, “சாரமில்ல மோளே நீ இரிக்கு!” என்றார்.

வசந்தியும் “சும்மா உக்காருங்கமா… கூட்டம் வேற இன்னைக்கு.” என்றதும் சுஜாதா முறுவலுடன் அமர்ந்து கொண்டார்.

சுஜாதாவின் சம்பந்தியும் அங்கு வந்திருக்க, அவர்களை வரவேற்றனர்.

“சஹானா எவிடே?” சுஜாதா கேட்டதில்,

“அவளும் மாப்பிள்ளையும் பேசிட்டு இருக்காங்க. பின்னாடி வராமெந்து பரஞ்சு…” என்றார் சஹானாவின் தந்தை.

இங்கோ கீழ் தளத்தில் அங்கும் இங்கும் ஓடிய அமையாவைப் பிடித்துக் கொண்டிருந்தான் அர்ஜித்.

சஹானா தான், “அதிக சேட்டையோ?” என அன்விதாவிடம் கேட்க, “ம்ம் ஆமா ரொம்ப…” எனப் புன்னகைத்தாள்.

“நிங்கள் எந்து செய்யனது?” அவளிடம் விவரம் கேட்ட சஹானாவிடம், “ஹவுஸ் வைஃப்” என்றாள்.

“ஓ… ஆமா, இந்தப் பொண்ணை வச்சுட்டு ஒரு பணியும் பார்க்க முடியாது போல.” எனும்போதே “சித்தப்பா கம்…” என மூச்சு வாங்கி நின்ற அர்ஜித்தை ஓட அழைத்தாள் அமையா.

“இவளுக்கு அஞ்சு வயசு உண்டாவில்லே. இனியும் ஏன் சிங்கிள் வார்த்தையாய் பரயனது…” எனக் கேட்டதில்,

“அவளுக்கு இன்னும் முழுசா சென்டென்ஸ் பேச வரல. நான் தமிழ், தெலுங்கு பேசுவேன், அவர் மலையாளம். சோ எல்லாம் மிக்ஸ் ஆகி அவளுக்கு டக்குனு எந்த லாங்குவேஜ் பேசன்னு புரியல…” அன்விதா விளக்கம் கொடுத்தாள்.

“ஓ… நிங்கள் மலையாளி இல்லே?” என்ற சஹானா,

“கொஞ்சம் ஹைப்பரா இருக்கா… பொதுவே ஆட்டிசம் உள்ள குட்டிகள் இப்படித் தான் இருப்பாங்கன்னு கேட்டிருக்கேன்.” என்றதும் அன்விதாவின் முகம் சுண்டி விட்டது.

“இல்ல, அவளுக்கு ஸ்பீச் லேட். அவ்ளோ தான்…” என முகம் மாறாமல் இருக்க அரும்பாடுபட்டவள்,

“அர்ஜி… நீங்க போய் மோதிரம் பாருங்க. இவளை நான் பார்த்துக்கிறேன்…” என்றிட, “நீங்க ரெண்டு பேரும் போங்க ஏடத்தி…” என்றான்.

“ப்ச், நீங்க தான் போட்டுப் பார்க்கணும்.” என்றபடி அமையாவைத் தூக்கிக் கொண்டவள் விறுவிறுவென மாடிக்குச் சென்று விட, அர்ஜித் அவளை விசித்திரமாகப் பார்த்தான்.

சஹானாவும் அர்ஜித்தும் மட்டும் எஞ்சி இருக்க, “நிங்களுக்கு மூச்சு வாங்குது.” என்றாள் சிறு நகையுடன்.

அவனிடம் சின்னப் புன்னகை வீற்றிருக்க, பல மோதிரத்தைப் போட்டுப் பார்த்துக் கழற்றி விட்டாள் அகமொழி.

“எனக்கு எல்லாமே லூசா இருக்குமா…” பரிதாபமாகக் கூறியவளை நிமிர்ந்து பார்த்தார் சுஜாதா.

அவரிடம் இருந்த ட்ரேயில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்தவர், “இதை ட்ரை பண்ணிப் பாரு மோளே!” எனக் கொடுக்க, அவளும் புன்னகையுடன் அதனை வாங்கிப் போட்டுப் பின் அதுவும் லூசாக இருந்ததில் உதட்டைப் பிதுக்கினாள்.

அவளது செய்கையில் சிரித்த கோபால கிருஷ்ணன், “நினக்கு குட்டி விரல் போல மோளே. சரியா சாப்பிட மாட்டியா?” எனச் செல்லமாக அதட்டினார்.

பாஸ்கரோ, “அதெல்லாம் நல்லா சாப்பிடுவாங்க. பார்க்க தான் குச்சியா இருக்கா!” என்றதில், “அப்பா” என்று சிணுங்கினாள்.

“எந்தினா கண்ணு வைக்கனது?” கேசவ நாயரும் இவர்களது உரையாடலில் கலந்து கொண்டார்.

சுஜாதா, “மிண்டாதே மோதிரம் செய்யான் குடுத்துடுங்கமா…” என்றதில், “சரியாப்போச்சு, வர்ற சண்டே இவளுக்கு நிச்சயம்மா… இப்ப செய்யக் குடுத்தா வர லேட் ஆகுமே!” என்றார் வசந்தி.

அதில் விழி விரித்த சுஜாதா, “அட, என்டெ மகனுக்கும் சண்டே தன்னே நிச்சயம். அவனுக்கும் நிச்சய மோதிரம் வாங்கத் தான் நாங்களும் வந்தோம்.” என்றதும் வசந்தியும் பாஸ்கரும் மகிழ்ந்தனர்.

“ரொம்ப சந்தோசம்மா…” வசந்தி மனம் நிறையக் கூறினார்.

என்னவோ அவர்களைப் பார்த்ததும் பிடித்து விட்டது பெரியவர்களுக்கு. கல்யாணி மற்ற ஓரத்தில் அமர்ந்திருந்ததால், அவர் சம்பந்தியிடம் பேசிக் கொண்டார்.

பின் மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்க, “இந்தப் பையன் எவிடெ போயி, வந்தா போட்டுப் பார்த்து வாங்கிடலாம்ல.” என்று தேடினார் கோபால கிருஷ்ணன்.

அந்நேரம் அன்விதாவும் அமையாவும் மட்டும் வர, அன்விதாவின் முகம் இன்னும் சீராகவில்லை.

“மா அன்வி… அவரு ரெண்டு பேரும் எவிடே?”

“கீழ அம்மே…” என முடித்துக் கொண்டவள், அமையாவைக் கீழே விடாமல் பிடித்துக் கொண்டாள்.

“இவள் என்டெ மூத்த மருமகள், என்டெ பேரக்குட்டி…” என சுஜாதா வசந்தியிடம் பெருமையாக அறிமுகப்படுத்த, அன்விதா ஒப்புக்காகச் சிரித்து வைத்தாள்.

“ஹாய்!” அகமொழி அமையாவிடம் பேச, அவள் பேசாமல் வெட்கத்தில் திரும்பிக் கொண்டாள்.

“அட வெட்கமா?” அகமொழி சிரித்ததில் ஏற்கெனவே எரிச்சலில் இருந்தவளுக்கு இன்னும் கொஞ்சம் எரிச்சல் பரவியது.

“அவள் வெளி ஆளுங்ககிட்ட பழக மாட்டா!” எனப் பட்டெனக் கூறி இருக்க,

“ஆமா, சின்னப் பொண்ணு தான. டக்குன்னு முகம் தெரியாதவங்ககிட்ட அட்டாச் ஆக முடியாது…” என இயல்பாகக் கூற, அன்விதா லேசாய் முறுவலித்தாள்.

ஆகினும் அமையா துள்ளிக் குதித்துக் கீழே இறங்கியதில், அன்விதாவிற்குச் சலிப்பாக இருந்தது. என்னவாகினும் மகளை மற்றவர்கள் கேலிப் பொருளாகப் பார்ப்பதில் அவளுக்குப் பிரியம் இல்லை.

சில நிமிடங்கள் அமையா ஓர் இடத்தில் அமராமல் ஓடிக்கொண்டே இருந்ததைக் கண்ட அகமொழி, அமையாவைத் தூக்கிக் கொண்டாள்.

“பேபிக்கு என்ன வேணும்… அக்கா டாய்ஸ் தரட்டா!” என்றபடி தனது கைப்பையில் எதையோ தேட, “நீ அவளுக்கு அக்காவா?” என வசந்தி கிண்டலாகப் பார்த்தார்.

“ம்மா… இப்பவே ஆண்ட்டின்னு சொல்லி என்னை வயசானவளா ஆக்கப் பார்க்குறீங்களா?” எனக் குமுறி, “நீ என்னை அக்கான்னு தான் சொல்லணும், சரியா பேபி…” என்றதில் என்ன புரிந்ததோ அமையா தலையாட்டினாள்.

அன்விதாவிற்கு அவளை வாங்கவும் இயலவில்லை. சுஜாதா வேறு அகமொழியிடம் நன்றாகப் பேசினாரே.

கைப்பையில் துழாவி ரூபி கியூபை எடுத்தவள், பாஸ்கருக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமையாவை அமர வைத்து, “இதுல கலர்ஸ் சேருங்க பார்ப்போம்…” எனக் கொடுத்தாள்.

இடை இடையே “இது என்ன கலர்?” என விவரம் கேட்க, அவள் அனைத்தும் சரியாகச் சொன்னதில் “வாவ்… சூப்பரா கலர்ஸ் சொல்றீங்க… இருங்க, நான் எப்படிச் சுத்தணும்னு சொல்லித் தரேன்!” என்று அவளுக்குச் சுற்றிக் காண்பித்தாள்.

“ஒரே கலர் வரணும், சரியா…” என்றதும் வேகமாகத் தலையாட்டிய அமையா, அதில் மூழ்கிப் போனதில் அன்விதாவே அதிசயித்து விட்டாள்.

“ஒரு வண்டி டாய்ஸ் வீட்ல இருக்குங்க. ஆனா அதெல்லாம் ஒரே நாள்ல உடைச்சுடுறா. இப்படி எல்லாம் உக்காந்து விளையாடவே மாட்டுறாளே!” வாய் திறந்து அகமொழியிடம் இயல்பாகப் பேசினாள்.

“அவளுக்கு நார்மல் டாய்ஸ் பிடிக்கலையோ என்னவோ.. அவளை பிசியா வச்சுக்குற மாறி ஏதாச்சும் டாய்ஸ் ஆக்டிவிட்டீஸ் வாங்கிக் குடுத்துப் பாருங்க. அண்ட் மோர் ஓவர், துறுதுறுன்னு விளையாடுனா தான நம்மளும் எப்பவும் அலெர்ட்டாவே இருப்போம்.” என்று அகமொழி சிரிக்க, அன்விதாவும் புன்னகையைப் பெரிதாக்கினாள்.

“என்டெ பேரக்குட்டியா இது?” சுஜாதா ஆச்சரியமாகக் கன்னத்தில் கை வைத்தார்.

“உங்க பேத்தியே தான்…” எனக் கண் சிமிட்டிய அகமொழியைக் கண்டு நகைத்தவர், அவள் பெயரைக் கேட்டு அறிந்து கொண்டார்.

தன்னிடம் பேசிக்கொண்டே நின்ற சஹானாவின் முன்னே கடிகாரத்தை ஒரு முறை பார்வையிட்டவன், “ரிங் நோக்கான் போகலாமா? வெய்ட் செய்திட்டு இரிக்கும்…” என்றதும் அவளும் “ஓ போகால்லோ!” என அவனுடன் மாடி ஏறினாள்.

“நிங்கள்டெ சேட்டன் பொண்ணு பயங்கர சேட்டையா?” அவனிடம் கேட்டவளிடம்,

“ம்ம் ஆமா… விட்டா தென்னை மரத்துலயே கயறும். அத்தரைக்கும் சேட்டை…” என்றவனின் இதழ்களில் ரசனைப் புன்னகை.

“பக்ஷே ஐ காண்டாக்ட் செய்து சம்சாரிக்கினில்லாலோ… இவள்டெ வயசினு குறச்சு மெச்சூரா நம்ம சொல்றதைக் கேட்டுப்பாங்க தான. ஸ்பீச்சும் அத்தர வரலைன்னு சேச்சி பரஞ்சல்லோ… ஸ்டேபிளா இருக்காளான்னு டாக்டர்கிட்ட செக் செய்தூடே.” என்றவளைப் பாதிப் படியில் நின்று திரும்பி முறைத்தவன்,

“ஸ்டேபிளாந்து பரஞ்சால்?” என்றான் புருவம் சுருக்கி.

“என் பிரெண்டுடெ சேச்சி மகள் இப்படித் தான், ரொம்ப ஹைப்பர் ஆக்டிவா குறச்சு நேரம் கூட உக்கார மாட்டா. சரிக்கும் மிண்டவும் செய்யில்லா. கடைசியா அவளுக்கு ஆட்டிசம் உண்டென்னு பரஞ்சு… வளரே வெக்ஸ் ஆகிப் போயி. அதானு, இவளைக் கண்டதும் அங்கனே தோணியது”

“அது பற்றி நீ விஷமிக்கத் தேவை இல்லா. அவள்டெ அம்மய்க்குத் தெரியும் எந்து செய்யணும்னு. அப்படியே ஆட்டிசம் இருந்தா கூட, ஷீ நோ ஹொவ் டு ஹேண்டில்!” என வெடுக்கெனக் கூற சஹானா திருதிருவென விழித்தாள்.

“இல்லா ஜஸ்ட் பரஞ்சு…” என்றவளின் கூற்றைக் காதில் வாங்காது பெற்றோர்களை நோக்கிச் சென்றான்.

“ம்மா லேட்டாகுது. ரிங் ஒன்னு லூசா இருக்கு, இல்லைன்னா டைட்டா இருக்கு.” என அகமொழி எரிச்சலடையும் போதே, அங்கு அர்ஜித் அகன் வந்திருந்தான்.

“எவிடெ அர்ஜி போயது… வசந்திமா, இவன் தான் என்டெ மகன்!” என அறிமுகம் செய்ததில் அர்ஜித்திற்கு அவர்கள் யாரென்றே தெரியவில்லை என்றாலும் மரியாதை நிமித்தம் தலையாட்டிப் புன்னகை செய்தான்.

அகமொழி தான் ஆடவனைக் கண்டு திகைத்து நின்றாள்.

“இவருடெ மகளுக்கும் சண்டே நிச்சயமாம் கண்ணா!” என்றதும் ‘ஓ’ எனத் திரும்பி பார்த்தவனின் முகத்திலும் சிறு அதிர்வு. ஆனாலும் அவளைப் போல முகத்தில் அப்பட்டமாகக் காட்டாது, அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான்.

‘போயும் போயும் இவன் குடும்பத்தோடயா சாவகாசம் வச்சுருந்தோம்’ எனக் கடுப்படைந்த அகமொழியை நோக்கி வந்த ரிஷான், “என்னடி செலக்ட் பண்ணியாச்சா?” என அவள் தோள் மீது கை போட, அகமொழிக்குப் பக்கவாட்டில் சுஜாதாவின் பின்னால் நின்று கொண்டிருந்த அர்ஜித் அகன், ஓரப்பார்வையில் ஓராயிரம் தீக்கங்கை அனுப்பி வைத்தான்.

அவனைக் கண்டதும் அதிர்ந்த ரிஷான், “ஹேய், மறுபடியும் இவன்டி… வா ஓடிடலாம்…” என அவள் கையைப் பிடிக்க, “டேய்ய்ய்…” எனப் பல்லைக் கடித்தாள்.

வசந்தி தான் ரிஷானை அர்ஜித்தின் குடும்பத்திற்கு அறிமுகம் செய்ய, அவனோ நெளிந்தான்.

“ஓடிடவா அகா?” அர்ஜித் அகனின் பார்வையில் திணறிப் போயிருந்தான் பாவம்.

“போய் பிரேஸ்லெட்டுக்கு பில்லு போட்டுத் தொலை.” என்றதும் தான் தாமதம், திடுதிடுவென பில்லிங்கிற்கு ஓடி விட்டான்.

பின் சஹானாவை சுஜாதா அறிமுகம் செய்ய, அவளுக்கோ ‘சும்மா கடைக்கு வந்தவங்ககிட்ட ஏன் இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்காங்க.’ என்றிருந்தது.

அர்ஜித் தான், “மா அமையா எவிடெ?” எனத் தேடினான்.

பாஸ்கருக்கு அருகில் குனிந்து அமர்ந்திருந்தவளைக் கவனிக்கவில்லை போலும்!

“அதோ பாரு அர்ஜி… எவ்ளோ சமத்தா உக்கார்ந்திருக்கான்னு. ஈ பெண்ணு டாய்ஸ் கொடுக்கவும் அமைதியா விளையாடிட்டு இருக்கா!” என அகமொழியைக் கை காட்ட, அவன் அப்போதும் அவளின் மீது லேசர் பார்வை ஒன்றை வீசினான்.

அவளோ அவனுக்குச் சற்றும் குறையாது தீயைப் பரிசனுப்பி வைக்க, இவர்களின் யுத்தத்தை உணராத அன்விதா, அவளே ஒரு ட்ரேயில் இருந்து மோதிரத்தை எடுக்கச் சொல்லி, “அகமொழி இதைப் போட்டுப் பாருங்க… கரெக்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன்.” எனக் கொடுத்தாள்.

அகமொழியும் அதனைப் போட்டுப் பார்த்து, “ஆமாங்க கரெக்ட்டா இருக்கு… டிசைனும் நல்லாருக்கு.” என்றாள் தலையாட்டி. அதே போலவே கொஞ்சம் பெரிய அளவில் ரிஷானுக்கும் தேர்வு செய்ய, இடைப்பட்ட நேரத்தில் சஹானாவிற்கும் அர்ஜித்திற்கும் மோதிரம் தேர்வு செய்தனர்.

“ரிஷு எங்க அகா?” வசந்தி கேட்டதில், “அவன் இந்நேரம் ஹை வேஸ் தாண்டிருப்பான்.” என முணுமுணுத்தவளிடம், “என்ன சொல்ற?” என்றார் புரியாமல்.

“அவன் பில் கவுண்டருக்கு வரச் சொல்லிட்டான்மா… அவனுக்கு இது கரெக்ட்டா தான் இருக்கும்…” என்று கூற,

சுஜாதா தான், “அர்ஜி கண்ணா, இந்த மோதிரத்தைப் போட்டுப் பாரு. அந்தப் பையன் அளவு நினக்குச் சரியா தான இருக்கும்…” என்று கொடுக்க, அகமொழி சற்றே துணுக்குற்றாள்.

“கரெக்ட்டா வாங்கிடுங்க வசந்தி. டவுட்டோட எடுத்துட்டுப் போகக் கூடாது.” என அளவளாவ, அவனும் அகமொழி மீதிருந்த காரப் பார்வையைக் குறைக்காது தனது மோதிர விரலில் அணிந்தான்.

அவள் பாந்தமாய் அடங்கிப் போன மோதிரத்தைக் கடுப்பாய் முறைத்திட, “கரெக்ட்டா இருக்குமா…” என்றான் அர்ஜித்.

“அப்போ செரி” என்றதும், மோதிரத்தைக் கழற்றிய அர்ஜித் இரட்டை விரலில் அதனைப் பிடித்தபடி அவளை நோக்கி நீட்ட, அவளோ முகத்தில் ஒரு லாரி எரிச்சலைத் தேக்கியபடி கையை நீட்டினாள்.

டொம்மென அவள் கையில் போட்டதில், பிடிக்க இயலாமல் தவறி விழுந்தது.

“வேணும்னே தான கீழ போட்ட?” பல்லைக் கடித்து அவள் ஹஸ்கி குரலில் எகிற, அவனோ அசட்டையாகத் தோளைக் குலுக்கினான்.

அவன் காலுக்கடியில் விழுந்த மோதிரத்தை எடுக்க முயலும்போதே அவன் ஷூ காலால் அந்த மோதிரத்தின் மீது கால் வைக்க எத்தனித்தான்.

நிமிர்ந்து ஆத்திரத்துடன் ஏறிட்டவள், கண்ணாலேயே அவனை எரித்தாள்.

“மிதிக்கவா?” பார்வையிலேயே ஏளனத்தைக் கலந்து அவன் விழி உயர்த்த,

“மிதிச்சுப் பாரு…” என்ற அடக்கப்பட்ட குரோதம் அவளிடம்.

வசந்தியும் பாஸ்கரும் எழுந்ததில் அவள் சட்டென மோதிரத்தை எடுத்து விட்டு எழுந்து கொள்ள, “உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோசம்…” என சுஜாதா அகமொழியை நெட்டி முறித்தார்.

வசந்தி தான் அவளைத் திருகி, “பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ!” என்றதும், அவளும் மறுக்காது பெரியவர்கள் நால்வரிடமும் ஆசி வாங்கிட, அவர்களும் அவளை மனமார வாழ்த்தினர்.

“அப்போ நாங்க வர்றோம்மா…” என வசந்தி விடை பெரும்போதே, “அர்ஜி கண்ணா…” என சுஜாதா கண் காட்ட தாயின் விழியசைவு புரிந்தவன், முகத்தில் எரிச்சலை மறைத்து பாஸ்கர் மற்றும் வசந்தியின் காலில் விழுந்தான்.

“நல்லாருப்பா…” என்று இருவரும் மகிழ்வுடன் ஆசீர்வதிக்க, அங்கிருந்து எப்போதடா கிளம்புவோம் என்றிருந்தது அகமொழிக்கு.

இந்த நாடகமெல்லாம் முடிந்து அலுவலகம் சென்றதும் தான் அர்ஜித்திற்கு எரிச்சல் சற்று மட்டுப்பட்டது.

“என்னடா ரிங் எடுத்தாச்சா?” மடிக்கணினியில் புதைந்திருந்த பிரணீத் வினவ, “ம்ம்” என்றபடி தனது இருக்கையில் அமர்ந்தான்.

அந்நேரம் மேனேஜர் ஜெகன் வந்தவர், “சார்… அந்த கிளாம்பிங்கை இடிக்கணும்னு சொன்னீங்களே, ஜேசிபி கூடத் தயாரா இருக்கு.” என்றதும், ஏதோ ஒரு கோப்பில் புதைந்தவன், “வேண்டா!” என்றிட, “சார்?” என விழித்தான் ஜெகன்.

“வேண்டாந்து பரஞ்சில்லே…” என்று அழுத்தப் பார்வையில் அவரை அனுப்பி விட, பிரணீத் விழி விரித்தான்.

“என்னடா அதிசயம்… எடுத்த முடிவை மாத்திக்கிட்ட?”

“ப்ச், அந்தக் காந்தாரிக்கும் சண்டே எங்கேஜ்மென்ட் போலே. இந்து ஜூவல் ஷாப்ல அம்மா, அச்சாட்ட எல்லாம் ப்ளெஸிங்ஸ் வாங்கி… அவரும் அவளை ப்ளெஸ் செய்து. அது கொண்டு ஈ ஒரு பிராவஸ்யம் அவளைப் பிழைச்சுப் போகட்டும்னு விடறேன்.” என்று கடுகடுப்புடன் கூறியதில், “சரி தான்” என நிம்மதியடைந்தான் பிரணீத்.

இங்கோ ரிஷானை ஊருக்குப் பேருந்தில் ஏற்றி விட்டு, கிளாம்பிங் ஸ்டே’க்கு வந்து அமர்ந்த அகமொழிக்குத் தலை வலித்தது.

அப்போது அவளிடம் வந்த ரூஹி, “அகா, அந்தக் கேரளாக்காரனைப் பழி வாங்கணும்னு சொன்னீல…” என ஆரம்பிக்கும்போதே, “வேணாம்” என்றாள்.

“ஏன்?”

“அந்தப் பைத்தியக்காரன் இன்னைக்கு நகைக்கடைக்கு வந்தான்டி. அவனுக்கும் சண்டே எங்கேஜ்மென்ட் போல. என் அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வேற வாங்கிட்டான். அவங்களும் அவனை நல்லாருன்னு சொல்லிட்டாங்க. நல்லாருந்துட்டுப் போகட்டும் விடு…” என்றவள் நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள்.

“அடியேய்… என்ன விளையாடுறியா. சும்மா இருக்குறவளைச் சொறிஞ்சு விட்டுட்டு இப்ப என்னவோ டயலாக் விட்டுட்டு இருக்க?”

அவளை ஒரு மாதிரியாகப் பார்த்த அகமொழி, “என்ன பண்ணி வச்ச?” எனக் கேட்டதில், “இதைப் பாரு…” என அலைபேசியை நீட்ட, அதில் ஒரு இன்ஸ்டா செலிபிரிட்டி ஹிஸ்மிஸ்ட் ரிசார்ட் பற்றியான ரிவியூவில், கிழித்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தார்.

ஹில்மிஸ்ட் ரிசார்ட் எம்.டியான அர்ஜித் அகன், அவரது ரிசார்ட்டில் வேலை பார்க்கும் பெண்களைத் தனது படுக்கைக்கு அழைப்பதாக அங்கிருக்கும் சில பணிப்பெண்களே ஒப்புக் கொண்டதாகவும், அங்கு வேலை செய்யும் பெண்களைத் தனது இச்சைக்காகப் பயன்படுத்துவதாகவும் அந்த செலிபிரிட்டி தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க, அகமொழிக்கு மயக்கமே வரும்போல இருந்தது.

அகன் வசமாவாள்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 34

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
22
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment