Loading

அத்தியாயம் 60

விடியும் முன்பே சென்னை வந்து சேர்ந்து விட்டனர் பெண்கள் மூவரும். நெஞ்சை அழுத்தும் பாரத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் உணர்வற்ற முகத்துடனே வீட்டிற்கு வந்தனர்.

மனதை கொள்ளையிட்ட ஆடவனின் பிரிவு, ஒட்டுமொத்த உணர்வுகளையும் அள்ளிச் சென்று ஜடமாக்கி விடுமா? எந்நேரமும் மூளைக்குள் ரீங்காரமிட்டு இலக்கின்றி வெறிக்கச் செய்யுமா? நிஜப் பாசத்தை இதுவரை கண்கூட காணாதவர்களுக்கு, உண்மையான அன்பை அள்ளித் தந்தவர்களை விட்டுக்கொடுக்க கூட இயலுமா? இயன்றதே! மூவரும் அவரவர் இதயத்தைக் கொன்று விட்டு, அவ்வப்போது இதயத்துடிப்பு இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டனர்.

இன்னும் கூட இன்னுயிர் தன்னை விட்டுப் பிரியாமல் இருந்ததில் வியப்பு தான்! என்ன உத்ஷவி இவ்வாறெல்லாம் தனக்கு பாதிப்பு ஏற்படவே இல்லை என்று இறுமாப்புக் கொண்டாள்.

“இந்த நேரத்துல ஹவுஸ் ஓனர் கதவை திறப்பானாடி.” என அக்ஷிதா நீண்டதொரு அமைதியைக் கலைக்க, அவரோ கையில் சாவியுடன் வாசலிலேலே நின்றிருந்தார்.

“என்ன சார் இங்க நிக்கிறீங்க?” என உத்ஷவி குழப்பமாகக் கேட்க, “உன்னை கல்யாணம் பண்ணிக்க போற தம்பி, நீங்க வர்றீங்கன்னு சொன்னாருமா.” என்றதில், உத்ஷவி திகைத்தாள்.

மற்ற இருவரும் உத்ஷவியை ஒரு மாதிரியாகப் பார்க்க, அவள் ஒன்றும் பேசாமல் சாவியை வாங்கிக்கொண்டு மாடிக்குச் சென்றாள்.

அங்கோ வீடே பளபளவென இருந்தது. இதுவும் அவனது வேலையாக தான் இருக்கும் என்று கடிந்து கொண்டாள்.

தூக்கம் கண்களைச் சுழற்றியதில் மூவருமே நன்றாக உறங்கி விட்டனர்.

பதினோரு மணி அளவில் உத்ஷவியின் அலைபேசி ஒலித்ததில் தான் அனைவருக்கும் உறக்கம் கலைந்தது.

மணியைப் பார்த்தவர்களுக்கு, எழுந்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. முன்பெல்லாம், தேனீ போல சுறுசுறுப்பாக சுற்றியவர்கள். இப்போது, கடந்த காலம் மறந்து, எதிர் காலம் இழந்து, நிகழ்காலத்தை ஏற்க இயலாமல் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்தனர்.

“செம்மயா போர் அடிக்குதுல. இவ்ளோ நாளா இன்வெஸ்டிகேஷன் அது இதுன்னு நல்லா டைம் போச்சு.” என அக்ஷிதா துக்கத்தை மறைத்துக் கொண்டு கூற, மற்ற இருவரும் அதனை ஆமோதித்தனர். மீண்டும் உத்ஷவியின் அலைபேசி அழைத்ததில், அவள் அதனை எடுத்தாள்.

பின் புருவம் சுருக்கி “வரேன்” என்று விட, “யாருடி ஸ்வரூவா?” எனக் கேட்டாள் ஆர்வமாக.

“அவன் எதுக்கு எனக்கு போன் பண்ண போறான்.” எனக் கோபத்துடன் கேட்டவள், “ராகேஷ்க்கு ப்ராஜக்ட் பண்றதுக்கு முன்னாடி வேறொரு ஆர்கனைசேஷன்ல ப்ராஜக்ட் பண்ணிட்டு இருந்தேன். அங்க இருந்து தான் புது ப்ராஜக்ட்ன்னு வர சொல்றாங்க” என்றதில், அக்ஷிதாவும் விஹானாவும் அதிர்ந்தனர்.

“நீ திரும்ப ப்ராஜக்ட் எடுக்கப் போறியா?” அக்ஷிதா கேட்டதில்,

அவளை உறுத்து விழித்தவள், “சோத்துக்கு பிச்சை எடுப்போமா?” என்று காய்ந்ததில், அவள் வாயை மூடிக்கொண்டாள்.

விஹானா தான், “நான் வேற வேலைக்கு ட்ரை பண்றேன் டார்ல்ஸ். நம்ம…” என ஆரம்பிக்க,

“நீ வேலை தேடி உன் தம்பியை பார்த்துக்கோ. எங்களுக்கு இடையில வராத.” எனக் கட்டளையாகக் கூறிய உத்ஷவி,

“ஏய் அக்ஷி… உனக்கு இன்னும் ஒரு வருஷப் படிப்பு தான இருக்கு. அதை படிச்சு முடிக்கிற வரை என்கூட இரு. அதுக்கு அப்பறம், ஏதாவது வேலை தேடிட்டு ஓடிடு. பட், ஆளாளுக்கு என்னை கண்ட்ரோல் பண்ண நினைக்காதீங்க. யாருக்காகவும் நான் மாற மாட்டேன்.” என்று திட்டவட்டமாகக் கூறியவளை, இருவரும் வருத்தத்துடன் பார்த்தனர்.

அவள் குளித்து கிளம்பும் வரை, உர்ரென்ற முகத்துடனே இருந்தவர்களை சட்டை செய்யாமல் கிளம்பியே விட்டாள்.

நேராக பேருந்து நிலையத்திற்கு சென்றவள், அங்கு நிழற்குடைக்கு அடியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் சோர்ந்து அமர்ந்தாள்.

காதினுள், “திருட்டு வேலைப் பார்க்காத.” என்ற ஸ்வரூப்பின் கண்டிப்புக் குரலே கேட்க,

‘ச்சை! அந்த ஆடியோ மட்டுமா மூளைக்குள்ள போய் உடம்பை கண்ட்ரோல் பண்ணுது. இந்த டைனோசரும் சேர்ந்து அதே தான் பண்றான். என் வாழக்கை இது. யாருக்கும் நல்லவளா இருந்து ஒன்னும் புடுங்க போறது இல்ல. என் வாழ்க்கைக்கு நான் மட்டும் போதும்.’ என உள்ளுக்குள்ளேயே கத்தித் தீர்த்தாள்.

அவளுக்கு நேர்ந்த அடிகள் அவளை அத்தனை சுலபமாக மாறவிடவில்லை.

கண்ணை மூடி ஒரு நொடி நிதானித்தவள், “என்னோட பாதை இது தான். என் தொழிலை நிறுத்தினாலும் பழக்கம் மாறாது. அந்த பழக்கத்துக்கும் திருட்டுப் பழி தான் வரும்ன்னு போது, ஏன் அந்தத் தொழிலை நிறுத்தி, என்னை நானே அடக்கிக்கணும். ஏன்? ஏன்? ஏன்?” இந்த கேள்வி தான் அவள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

“எனக்காகடி!” இப்போது ஸ்வரூப்பின் முகம் மனத்திரையில் வந்து அவளைக் கலங்கடிக்க, ஏற்பட்ட அழுத்தம் தாளாமல், தலையைப் பிடித்துக் கொண்டவள், “ஆஆஆஆ… ஆஆஆ…” என்று வெளிப்படையாகவே கத்தித் தீர்த்தாள்.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலையாதலால், அவளுக்குப் பைத்தியக்கார பட்டம் கொடுக்காமல் விட்டது சமூகம்.

அவள் செல்ல வேண்டிய பேருந்து வந்ததில், அதில் ஏறியவள், குரோம்பேட்டையில் இறங்கி, அலுவலகத்திற்கு அருகிலும் சென்று விட்டாள்.

அப்போது, சற்று தொலைவில் தெரிந்த மளிகைக் கடையில் சிறுவன் ஒருவனை, அந்தக் கடை முதலாளில் அடிப்பதைக் கண்டு, எதையும் யோசிக்காமல் அங்கு சென்றவள், “என்ன ஆச்சு?” என விசாரித்தாள்.

கடை முதலாளியோ, “ஏதோ போனாப் போகுது அனாதைப் பயலாச்சேன்னு கடைக்கு வேலைக்கு வச்சா, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்றான். கடையில இருக்குற தின்பண்டத்த திருடி திங்கிறதோட இல்லாம, காசையும் எடுத்து இருக்கான்” என்று மீண்டும் அச்சிறுவனை அடிக்க அவள் தடுத்தாள்.

அந்தச் சிறுவனோ அழுது அரற்றியபடி நிற்க, “நீ திருடுனியா?” எனக் கேட்டாள் அவன் கண்ணைப் பார்த்து.

“ரொம்ப பசிச்சுச்சுன்னு பிஸ்கட்டு மட்டும் தான் திருடுனேன்க்கா. சத்தியமா காசை எடுக்கல.” என அவன் மன்றாடும் குரலில் கூற, அவன் விழிகளோ ‘நீங்களாவது நம்புங்களேன்’ என்ற கெஞ்சலை ஏக்கத்துடன் தாங்கி நின்றது.

இதே பார்வையை எத்தனை பேரிடம் அவள் பார்த்திருப்பாள்! சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்லும் முன், எத்தனை முறை கெஞ்சி இருப்பாள். அவளை நம்பும் ஒருவர் கூட அவளது வாழ்வில் வரவில்லையே! இப்போது நம்புகிறேன், அனைத்தையும் விட்டு விடு என்கிறவனுக்கு எப்படிப் புரிய வைப்பது… சில வடுக்களும் ரணங்களும் இதயத்தோடு பிணைந்து பாறையாகி விட்டதை.

சட்டென தலையை உலுக்கி, மீண்டும் தனக்குள் இழையோடிய ஆடவனின் நினைப்பைப் புறம் தள்ளியவள்,

“அவன் தான் பணத்தை எடுக்கலைன்னு சொல்றான்ல சார்” என்று முதலாளியிடம் கூறியதில்,

“அப்படி தான் சொல்லுவான். போலீஸ்க்கு போன் பண்ணிருக்கேன். வந்து நாலு மிதி மிதிச்சா உண்மை தானா வெளில வரும்.” என்றார் சினத்துடன்.

“யோவ்… சின்னப் பையனை போய் போலீஸ்ல புடிச்சு குடுக்க நினைக்கிற. என்ன ஆளுய்யா நீ. பசிக்குத் தான திருடிருக்கான்.” என்று எகிறிட, “இந்தா பாரும்மா, ஒழுங்காப் போயிடு. நீயும் இவன் கூட கூட்டுக் களவாணின்னு கம்பளைண்ட் கொடுத்துடுவேன்” என்று மிரட்டினார்.

“எங்க குடுத்துடுவியா. குடுயா பாக்கலாம். நான் பார்க்காத ஜெயிலா.” என்று அவளும் சண்டைக்கு நின்றாள்.

பின், ‘இது சரிப்படாது’ என்று ஸ்வரூப்பிற்கு அழைக்கப் போனவள் சட்டென நிறுத்தி, தேஜஸ்வினுக்கு அழைத்தாள்.

‘தேஜா எங்க இருக்க?” எனக் கேட்டதில்,

“உனக்குப் பின்னாடி தான் இருக்கேன் விஷக்கிருமி” என்ற ஸ்வரூப்பின் குரல் கேட்டதில், ஒரு கணம் அதிர்ந்தவள், திரும்பி தனது கருவிழிகளை அங்கும் இங்கும் சுழற்ற, அந்த மளிகை கடைக்கு எதிரிலேயே காரில் சாய்ந்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனருகில் தேஜஸ்வினும் நின்றிருந்தான்.

அவளது முறைப்பில் மென் புன்னகையுடன் அவளருகில் வந்தவனிடம், “இவ்ளோ நேரம் வேவு பாத்துட்டு இருந்தியாடா?” எனக் கடுகடுக்க,

“நீயா கூப்புடுற வரை வெய்ட் பண்ணுனேன். அப்போ கூட மேடம் என்னைக் கூப்பிட மாட்டீங்க?” என்றான் புருவம் உயர்த்தி.

“நீ கல்யாணத்துல பிசியா இருப்பன்னு தான்…” என்றவள், “ஆமா நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு இங்க என்ன செய்ற?” எனக் குழப்பத்துடன் கேட்க, அதற்கு பதில் மொழி கூறாமல், அச்சிறுவனை மீட்டு தேஜஸ்வினுடன் அனுப்பினான். கடை முதலாளியையும் கண்டித்தவன், “இனிமே சின்ன பசங்களை அடிக்கிறதை பார்த்தேன், இந்த கடை இங்க இருக்காது.” என்று மிரட்டி விட்டு,
அவளை காருக்கு அழைத்து வந்தான்.

“சோ மேடம் எங்க போறீங்க?” எனக் கையைக் கட்டிக்கொண்டு கேட்டதில், “வீட்டுக்குத் தான்” என்றாள் தோளைக் குலுக்கி.

‘இங்க ஏன் வந்த’ என்று கேட்க வந்தவன், அதனைக் கேளாமல் “வா ட்ராப் பண்றேன்” என்றதும் அவளும் ஏறி அமர்ந்து கொண்டாள்.

வீடு செல்லும் வரை வேறு பேச்சுக்கள் எதுவும் இல்லை. பேசினால், மீண்டும் மீண்டும் காதலைக் கூறிய கலங்கடிப்பானோ என்ற பயத்தில் அவளும் பேசாமல் இறங்கிச் சென்று விட, வீட்டினுள் நுழைந்ததும் விஹானா “போன விஷயம் என்னடி ஆச்சு” எனக் கேட்டாள்.

“என்ன என்ன விஷயம்?” உத்ஷவி புரியாமல் கேட்க,

“அடி, ஏதோ ப்ராஜக்ட் எடுக்கத் தான போன. அதைத் தான் கேக்குறா” என அக்ஷிதா கூறியதும் தான், அவளுக்கு என்ன காரணத்திற்காக சென்றோம் என்றதே நினைவு வந்தது.

எப்படி இதை மறந்து விட்டு, அவனைக் கண்டதும் எதையும் யோசியாமல் அவனுடனே வந்து விட்டோம் என்று தன்னை மானசீகமாக அறைந்து கொண்டவள், “மறந்துட்டேன்” என்று இரு கைகளாலும் தலையை அழுந்தக் கோத, “எதே மறந்துட்டியா?” என்றனர் இருவரும்.

அந்நேரம் மீண்டும் ப்ராஜக்ட் விஷயமாக போன் வர, தன் மீதே எழுந்த ஆத்திரத்தை அடக்க இயலாமல் போனைத் தூக்கி எறிந்து விட்டு அறைக்குச் சென்றவள், கதவைப் பட்டென சாத்தினாள்.

“அடியேய் போனை ஏன்டி உடைச்ச?” என அக்ஷிதா வேகமாக அதனை சரி செய்யும் பணியில் இறங்கினாள்.

பின்னே, அதை வாங்க தனியாக திருடவேண்டுமே என்ற கவலை அவளுக்கு!

இப்படியே நேரமும் நகர, கதவு தட்டும் சட்டம் கேட்டதில், விஹானா யாரென திறந்துப் பார்த்தாள். வாசலில் நின்ற நபரைப் பார்த்ததும், ஒரு நொடி அவள் திகைக்க, “வா… வாங்க” என உள்ளே அழைத்தாள்.

உள்ளே வந்த பூமிநாதன், அந்த சிறிய அளவிலான வீட்டை அருவருக்கும் முகத்துடன் பார்த்தபடி நிற்க, அக்ஷிதாவும் அவரைக் கண்டு விழித்து, ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு, “உட்காருங்க அங்கிள்.” என்றாள்.

தங்களது தோழர்களின் மாமா என்ற ஒரே காரணத்திற்காகவே உள்ளே விட்டனர். மரியாதையாகவும் பேசினர்.

அவரோ முகம் சுளித்து, அந்த நாற்காலியில் அமராமல், “நீங்க இருக்குற இடத்துக்கு வர்றதே இரிடேட்டிங்கா இருக்கு. இதுல அங்கிளாம். அப்படி கூப்பிட கூட தராதரம் வேணும்” என்று அந்த நாற்காலியை காலால் எத்தி விட்டார்.

தன் காலடியில் நிற்கக் கூட, அதற்கு உரிமை இல்லை என சூசகமாக சொல்கிறாராம்!

இந்த சத்தத்தில் அறையில் இருந்து வெளியில் வந்த உத்ஷவி, “சரி சொல்லுங்க மிஸ்டர் பூமிநாதன். என்ன இதுக்கு உங்களுக்கு தராதரம் இல்லாத இடத்துல வந்து நின்னு உங்க மேல நீங்களே சேத்தைப் பூசிக்கிறீங்க” என்ற உத்ஷவியின் பேச்சில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது அவருக்கு.

“என்னை பேர் சொல்லிக் கூப்புடுற அளவு தைரியம் வந்துடுச்சா?” அவர் கோபத்தில் முகம் சிவக்க,

அவளோ அழுத்தத்துடன், “மட்ட மரியாதை இல்லாமல் அசிங்கமா பேசி இருப்பேன். ஸ்வரூப்போட மாமான்ற ஒரே காரணத்துக்காக தான் இந்த அளவு மரியாதையாவது ஒட்டிக்கிட்டு இருக்கு” என்றாள்.

‘எல்லாம் அவனுங்க குடுக்குற தைரியம். அதான் இப்டி வாய் நீளுது. எல்லாத்தையும் ஒட்ட அறுக்குறேன்.’ என தனக்குள் பொருமிக் கொண்டவர், கத்தையாகப் பணத்தை எடுத்து அவள் மீது வீசினார்.

அவள் அதனைக் கையில் கூடத் தொடாமல் அப்படியே கீழே விட, “இதை எடுத்துட்டு மூணு பேரும் கண்காணாத இடத்துக்கு ஓடிடுங்க. இல்லன்னா, மூணு பேரோட பொணம் கூட யாருக்கும் கிடைக்காது” என்று சினத்துடன் மிரட்டினார்.

அக்ஷிதா அதிர்ந்து, “நாங்க எதுக்கு ஓடணும்?” என்று கேட்க,

“என் வீட்டுப் பசங்களை கைக்குள்ள போட்டு, கல்யாணத்தை நிறுத்த வச்சுட்டு, இப்ப ஒன்னும் தெரியாதா மாதிரி கேள்வி கேக்குறியா? புத்திக் கெட்டு போய் கல்யாணம் பண்ணுனா உங்களை தான் பண்ணுவேன்னு மூணு பேரும் ஆட்டமா ஆடுறானுங்க. எல்லாம் வயசுல வர்ற மயக்கம் தான். அதுக்காக படுத்தோமா போனோமான்னு இல்லாம, அவனுங்களைப் புடிச்சுட்டு தொங்கிட்டு இருப்பீங்களா? அவனுங்களும் சனியங்களை விட்டுத் தொலையாம தலைல தூக்கி வச்சு குடும்ப மானத்தை வாங்குறானுங்க.” என சிறிதும் இரக்கமின்றிப் பேசியதில், மூவருக்கும் அதிர்வு தான்.

“என்னது கல்யாணத்தை நிறுத்திட்டாங்களா ஏன்?” விஹானா ஒன்றும் புரியாமல் கேட்க,

“உங்க தகுதி தெரியாம லவ் அது இதுன்னு உளறுறானுங்க. அதும் மூணு பேரும் சொல்லி வச்ச மாதிரி பேசி எரிச்சலை கிளப்புறாங்க. ப்ச், இங்க பாருங்க. எவ்ளோ காசு வேணாலும் வாங்கிக்கங்க, ஆனா, இனிமே உங்களை நான் இங்க பார்க்கவே கூடாது.” என்று மிரட்டிட,

“நீங்க நினைச்சாலும் இங்க பார்க்க முடியாது மாமா. அதான் நாங்க கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவோமே.” என்ற ஸ்வரூப்பின் அதிகாரக் குரல் கேட்டதில், படபடத்த இதயத்துடன் திரும்பி வாசலில் பார்க்க, அங்கு அவரது மருமகன்கள் மூவரும் அவரை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தனர்.

அத்தியாயம் 61

“அது வந்துப்பா…” பூமிநாதனுக்கு ஒரு கணம் வார்த்தைகளுக்கே பஞ்சமாகிப் போனது.

“அதான் வந்துட்டீங்களே சொல்லுங்க” ஜோஷித் சினம் குறையாமல் கேட்க, சஜித்தோ, “உங்க மக வயசு இருக்குற பொண்ணுங்ககிட்ட என்ன பேச்சு பேசுறீங்க மாமா.” என்றான் அதட்டலாக.

கண்ட அனாதைப் பெண்களின் முன்பு தன்னை கேள்வி கேட்கும் விதம் பிடிக்காமல், “நான் என்ன தப்பா பேசிட்டேன். உள்ளதை தான சொன்னேன்.” என்றவரோ, “நீங்க என் பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் பரவாயில்ல, இந்த பொண்ணுங்களை பண்ணிக்கக் கூடாது. நான் நடத்த விட மாட்டேன்.” என்று தீர்க்கமாக பேசி விட்டு வெளியில் சென்றார்.

ஜோஷித் “இந்த ஆளுக்கு என்னவாம்டா இப்ப” என எரிச்சலாக, ஸ்வரூப் யோசனையில் முகம் சுருங்கினான்.

உத்ஷவியோ கோபத்துடன் அவர் கொடுத்தப் பணத்தை எடுத்து, ஸ்வரூப்பின் மீது எறிந்தாள்.

“இதுக்கு தான நீ ஆசைப்பட்ட? இனி யார் யார் வந்து மிரட்டிட்டுப் போவாங்களோ. இதெல்லாம் தேவையா? உன்னை யாரு கல்யாணத்தை நிறுத்த சொன்னது. உன் மனசுல என்ன பெரிய தியாகின்னு நினைப்பா. இல்ல, எனக்கு வாழ்க்கைக் குடுன்னு உன் காலைப் பிடிச்சு கெஞ்சுனேனா? என் பிளாஷ்பேக் கேட்டு, பாவம் பார்த்து கல்யாணம் பண்ணனும்ன்னு நினைச்சா, ஊர்ல நிறைய பொண்ணுங்க உன் அந்தப்புரத்துல தான் இருக்கணும்.” என்றாள் ஆத்திரத்துடன்.

நெறித்த புருவத்துடன் அவளை நெருங்கிய ஸ்வரூப், “உலகத்துலயே உனக்கு மட்டும் தான் அநியாயம் நடந்த மாதிரியும், மத்தவங்க எல்லாரும் பார்ன் வித் டயமண்ட் ஸ்பூனோட வளர்ந்த மாதிரியும் பேசுற. உன்னை விட ஆயிரம் மடங்கு பிரச்சனை இருந்த பொண்ணுங்களை எல்லாம் பார்த்து தான் வளர்ந்தேன். ஜுவனைல்ல இருந்தனால உனக்கு பாக்குற எல்லாரும் க்ரிமினலா தெரியுறாங்க. இதே, ஒரு ஹோம்லயோ, ஆஷ்ரத்துலயோ போய் பாரு. அவங்க பேக் ஸ்டோரி எல்லாம் கேட்டா, உங்களோடது எல்லாம் எந்த மூலைக்குன்னு தோணும்.

அந்த கஷ்டத்துல கூட, நேர்மையா உழைச்சு முன்னேறணும்ன்னு துடிக்கிறவங்க தான் அதிகம். உன்னை மாதிரி திருடி இல்ல. உனக்கு என்னைப் பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா? நான் பொண்ணுங்களையே பார்த்தது தான் இல்லையா? சில உணர்வுகள் சில பிடித்தங்கள் எல்லார் மேலயும் வர்றது இல்ல உத்ஷவி. எல்லார் மேலையும் வந்தா அது காதல் இல்ல. உன்னை முதல் முதல்ல பார்த்தப்பவே எனக்குள்ள இருந்த தடுமாற்றம், உன்னைப் பத்தி தெரிஞ்சு, உன்கூட பழகுனதுக்கு அப்பறம் தான், அது காதல்ன்னே எனக்கு புரிய வச்சுச்சு.

முழு மூச்சா பிரச்சனை முடியட்டும்ன்னு வெய்ட் பண்ணுனேன். ஆனா, நீ ரொம்ப அசால்ட்டா என்னை விட்டுட்டு சென்னை போறேன்னு சொன்னப்ப தான், உன்மேல இருக்குற உரிமை உணர்வை என்னால மறைக்க முடியல. சோ டைரக்ட்டா சொல்லிட்டேன்.

அதுக்கு நீ என்ன பேர் வேணாலும் வச்சுக்கோ. பட் ஐ லவ் யூ. யூ காட் இட். இது வெறும் வார்த்தை இல்ல. என்னோட வாக்கு. ஐ லவ் யூ பாரெவர். நீ எப்படி இருந்தாலும், இதுக்கு அப்பறம் நீ திருடுனா கூட ஐ வில் லவ் யூ. இதைப் புருஞ்சு, சம்மதம் சொன்னா சொல்லு, இல்லன்னா வாயை மூடிக்கிட்டு இரு!” தன்னிலிருந்து வெளிப்பட்ட அத்தனை சினத்தையும் ஒன்றாகக் கொட்டித் தீர்த்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

அவனது பேச்சில் ஸ்தம்பித்திருந்தவளுக்கு, தன்னை அவன் ‘திருடி’ என்றது முதன் முறை வலித்தது. அது அவள் முகத்திலும் பிரதிபலிக்க, அவனுக்குப் புரிந்தாலும் தன்னை அடக்கிக்கொண்டவன், “நம்ம கண்டுபிடிச்ச பசங்களுங்கு மெடிக்கல் செக் அப் நடந்துட்டு இருக்கு. கிளம்பி வா.” என்று உத்தரவிட்டவன், போற போக்கில் மற்ற இருவரையும் முறைத்து விட்டுப் போக, அக்ஷிதாவிற்கு சஜித்தை மீண்டும் பார்த்ததில் சந்தோசம் என்றாலும், குழப்பமும் மிதந்தது.

அதில் அவளே, “ஸ்வரூ கல்யாணத்தை நிறுத்துனான்னா அதுல ஒரு பாய்ண்ட் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் ஏன் கல்யாணத்தை நிறுத்துனீங்க?” என்று கேட்க, சஜித்தும் ஜோஷித்தும் அவள் மீது தீப்பார்வை வீசினர்.

‘ஆத்தாடி, நம்ம எரிஞ்சுருவோம் போலயே’ என விழித்திட, ஜோஷித்தோ இப்போது விஹானாவைப் பார்த்து, “அது புரிய வேண்டியவங்களுக்குப் புரியும். அப்படி புரியலைன்னா, பக்கம் பக்கமா வசனம் பேசி எல்லாம் புரிய வைக்க முடியாது. அவன் சொன்னது காதுல விழுந்துச்சுல மூணு பேரும் வாங்க. எல்லாத்தில இருந்தும் பாதில ஓடுறதுல எந்த பிரயோஜனமும் இல்ல.” என்றவன், அவள் மீது சுட்டெரிக்கும் பார்வையை வீசி விட்டு நகர, அவளுக்கு கண்ணீர் கன்னத்தில் வழிந்து ஓடியது.

“இவன் ஏன் இப்ப சம்பந்தம் இல்லாம பேசுறான்.” எனக் குழம்பிய அக்ஷிதா, விஹானாவைப் பார்த்து அதிர்ந்து, “அவன் சொல்லிட்டு போற மொக்கை டயலாக்குக்கு நீ ஏண்டி அழுதுட்டு இருக்க.” எனப் பதறினாள்.

உத்ஷவியும் குழப்பத்துடன் விஹானாவைப் பார்க்க, அவள் இன்னும் மௌனமாய் கண்ணீர் வடித்ததில், உத்ஷவி சற்று திகைத்து, “விஹா நீ… ஜோவை…?” என முற்றுப்பெறாமல் நிறுத்த, அவள் அப்படியே மடங்கி, முகத்தை மூடி அழுதாள்.

சஜித், “ம்ம் பேசுறது எல்லாம் பேசிட்டு இப்ப அழுது என்ன ஆக போகுது.” என்றதில், அக்ஷிதா “என்ன பேசுனா?” எனக் கேட்க, “அதை அவகிட்டயே கேளு” என்று விட்டு, ‘நம்மளை பத்தி கொஞ்சமாவது கேட்குறாளா பாரேன் கேடி’ என்று கடுப்பை மறைத்து கொண்டு அவனும் சென்றான்.

அதன் பிறகே, விஹானா நடந்தது அனைத்தையும் அழுதபடி கூறி, “நீ சொன்னதுக்கு அப்பறம் தான், நான் செஞ்சது பெரிய தப்புன்னு புரிஞ்சுது ஷவி. ஜோஷும் ஒருவேளை லவ் அது இதுன்னு சொல்லிட்டா, என்னால உன்னை மாதிரி ஸ்ட்ராங்கா மறுக்க கூட முடியாது. எங்க, என்னை மீறி அவன்கிட்ட என்னை இழந்துடுவேனோன்னு தான், அவனை ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டேன்” என்று தேம்பியதில், உத்ஷவிக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

“லூசாடி நீ. நான் சொன்னது எனக்கு மட்டும் தான். அதைப் போய் பெருசா எடுத்து, இப்படி பேசிட்டு வந்துருக்க.” என அதட்டியதில்,

“நான் மட்டும் என்ன கவர்மெண்ட் வேலையா பார்த்துட்டு இருந்தேன். நானும் திருடி தான.” என்று விஹானா மூக்கை உறிஞ்ச, “அது மேடம் கிஸ் குடுக்குறப்ப தெரியலையாக்கும்” என அக்ஷிதா வம்பிழுத்தாள்.

அதில் நொடியில் சிவந்து போன விஹானாவைக் கண்டு இருவரும் கமுக்கமாக சிரித்துக் கொண்டனர்.

அதன் பிறகு அவசரமாக கிளம்பி கீழே காருக்குச் செல்ல, ஸ்வரூப் நேராக காரை பங்களாவை நோக்கி செலுத்தினான்.

அக்ஷிதா மீண்டும், “சரி நீ ஏன் கல்யாணத்தை நிறுத்தின” என இன்னும் அவன் முகம் பார்க்க தயக்கம் கொண்டு சஜித்திடம் வினவ,

அவனோ அவளை மேலும் கீழும் பார்த்து, “ம்ம் பர்ஸை திருடுன ஒரு திருடி என் மனசையும் சேர்த்து திருடிட்டா. பர்ஸை குடுத்தவ, அதை குடுக்காம சொல்லாம கொள்ளலாம் எஸ்கேப் ஆகிட்டா. அதான், மனசைத் திரும்பி வாங்குனதுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கேன்சல் பண்ணிட்டேன்.” என்று அனைவர் முன்னிலையிலும் சாடையாகப் பேசுவது போல காதலைக் கூறி விட, அக்ஷிதா இதனை எதிர்பாராமல் திருதிருவென விழித்தாள்.

“என்னடா பப்ளிக்கா ப்ரொபோஸ் பண்ணிட்டு இருக்க?” என ஜோஷித் நக்கலடிக்க,

“ஆமா, உங்க ரெண்டு பேர் மாதிரி எப்போ தனியா டைம் கிடைச்சு, எப்ப நான் ப்ரொபோஸ் பண்ணி, அது எப்ப இந்த அரை வேக்காடுக்கு புரிய. “என்றதில், ஸ்வரூப்பும் அத்தனை எல்லாம் இருந்த சினம் மறைந்து சிரித்தான்.

“இப்ப மட்டும் புருஞ்சுருக்குமாக்கும்.” எனக் கேலியாய் கேட்டதில்,

“இப்பவும் புரியலைன்னா, அதிரடி ரொமான்ஸ்ல இறங்கிட வேண்டியது தான்.” என வெட்கப்புன்னகையுடன் கூற, அக்ஷிதா இன்னுமே திகைப்பில் இருந்து வெளிவரவில்லை.

“ரொமான்ஸ்ஸா?” அவளிதழ்கள் சத்தமில்லாமல் முணுமுணுத்து, நெஞ்சம் படபடவெனத் துடிக்க, ஜோஷித், “அடேய் தெளிவா சொல்லு. ரொமான்ஸ்ன்ற டிஷ் எங்க கிடைக்கும்ன்னு கேட்டுற போறா.” எனக் கிண்டலடித்ததும், “அதெல்லாம் இல்ல எனக்குத் தெரியும்” என அவசரமாக பதில் அளித்தவன் அதன் பிறகே தனது மடத்தனம் புரிந்து, எழுந்த வெட்கத்தை மறைக்க இயலாமல் இதழ் கடித்து தலையைக் குனிந்தாள்.

அவளது செய்கையில் அத்தனை நேரமும், அமைதியுடன் இருந்த உத்ஷவியும் விஹானாவுமே நமுட்டு நகை புரிய, அங்கு மெலிதான சிரிப்பலை எழுந்தது.

பங்களாவிற்குள் நுழைந்திட, வாசலிலேயே தேஜஸ்வின் பதற்றத்துடன் காணப்பட்டான்.

அதில் மற்றவை மறந்து போக, ஸ்வரூப் “என்ன ஆச்சு?” எனக் கேட்டதில்,

“பாஸ்… எவ்ளோ மயக்க மருந்து டோஸேஜ் குடுத்தாலும் உடனே மயக்கம் தெளிஞ்சுடுறாங்க. இப்போதைக்கு இன்னும் ஒன் அவர் கன்டெயின் பண்ணலாம். அதுக்கு மேல டோஸேஜ் கொடுக்குறது அவங்க உயிருக்கே ஆபத்தா முடியும்ன்னு டாக்டர்ஸ் ஃபீல் பண்றாங்க.” என்னும் போதே, ஆடவர்களுடன் சேர்ந்து பெண்களும், அடித்தளத்திற்கு சென்றனர்.

அங்கு, பத்தொன்பது ஆடவர்களும் தனி தனி படுக்கையில் கிடைத்தப்பட்டிருக்க, இரண்டு மூன்று மருத்துவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அவர்களுக்கு தேவையான உபகரணங்களும் அங்கேயே செட் செய்யப்பட்டிருந்தது.

மருத்துவர்களின் முகத்தில் கடும் குழப்பம் மின்னியதில், ஜோஷித் “என்னாச்சு டாக்டர். ஏதாவது டீடெய்ல் கலெக்ட் பண்ண முடியுதா” எனக் கேட்டான்.

அவரக்ளில் ஒருவரான பிரதாப், “எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு சார். ஆனா, இவங்களுக்கு என்ன பிரச்சனைன்னே கண்டுபிடிக்க முடியல. கண்ணு முழிச்சாலே, போனைத் தான் தேடுறாங்க. டேப்லட் வேணும்ன்னு ஒரு மாதிரி நடுங்குறாங்க. ஆனா, அந்த டேப்லட்ல கூட மனுஷனை நடுங்க வைக்கிற மாதிரி எந்த கெமிக்கல்ஸ்ஸும் இல்ல.” என்றதில்,

உத்ஷவி, “அந்த ஆடியோ பத்தின தகவல் கிடைச்சா நமக்கு யூஸா இருக்கும் ஸ்வரூ.” என அவன் முகம் பார்க்காமல் கூறிட, அவனும் அவளைப் பாராமல், “அந்த சைக்கியாட்ரிஸ்ட்ட கையோட தூக்கிட்டு வர ஆள் செட் பண்ணிருக்கேன். அதுக்கு முன்னாடி, அவரோட பிஏவை தூக்கியாச்சு. நீ சொன்ன புக் என்னன்னு இனி அடிச்சே வாங்கிடுவோம். இனிமே நிதானமா ஸ்டெப் எடுத்து வைக்கிறதுல யூஸ் இல்ல. அடுத்த இறப்பு நடக்குறதுக்குள்ள, என்ன பிரச்சனைன்னாவது தெரிஞ்சுக்கணும்” என்றதில், அனைவரும் அடுத்த அறைக்குச் சென்றனர்.

அங்கு விக்னேஷ் கட்டிப் போடப்பட்டிருக்க, உள்ளே நுழைந்ததுமே ஸ்வரூப் அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

“லுக் விக்னேஷ்… ஜெயராமனுக்கும் இந்தப் பிரச்சனைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. அவர் வச்சிருந்த யூனிக் புக்ஸ், அதைப் பத்தின தகவல் எல்லாமே எனக்கு இப்ப வேணும்.” என்றிட, அவன் வாயைத் திறக்கும் முன், சஜித், “மவனே தெரியாதுன்னு மட்டும் ஏதாவது சொன்ன, வாய் கிழுஞ்சுரும்” என்றான் கையை ஓங்கி.

அவனோ பயத்தில் எச்சிலை விழுங்கியபடி, “நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. டாக்டருக்கு மனுஷனைப் பத்தி முழுமையா ஆராய்ச்சி செய்றதுல அதீத ஆர்வம். அதைப் பத்தி அவரே நிறைய தெரிஞ்சு, சில புனைவுகள் கூட எழுதுவார். மத்தபடி, முழுக்க முழுக்க அதைப் பத்தின ஆராய்ச்சிலேயே தான் இருப்பாரே தவிர, கடத்தல் செய்ய எல்லாம் முதல்ல அவருக்கு நேரமே இல்ல சார். அவரு இந்தியா வந்தா தான், அவர் கூட இருப்பேன். கனடா போய்ட்டாருன்னா, அப்பறம் இங்க இருக்குற அவரோட ஹாஸ்பிடலை மேனேஜ் பண்றது தான் என் வேலை.” என்றவனுக்கு எப்படிடா இவர்களிடம் இருந்து தப்பிப்பது என்ற பயமே ஆட்கொண்டது.

“உன் பேச்சை நம்பலாமா?” விஹானா சந்தேகமாகக் கேட்க, “டாக்டரே இப்ப கனடால இருந்து வந்துருப்பாரு. அவர்கிட்டயே நீங்க நேரடியா இதைக் கேட்கலாம்.” என்றதும், “அதெல்லாம் அவரை தூக்கியாச்சு. உனக்கு வேற ஏதாவது தெரிஞ்சா மறைக்காம சொல்லு. எனக்கா தெரிய வந்தா, நீ செத்துருவ.” என்ற ஸ்வரூப்பின் கர்ஜனையில் “நிஜமா தெரியாது” என்று தலையாட்டினான்.

“அவரு தான் தெரியாதுன்னு சொல்றாருல. டாக்டர்கிட்ட விசாரிக்கலாம். இவரை விட்டுடுங்க” என்று உத்ஷவி மெதுவாகக் கூற, “உன் அத்தானை அவ்ளோ சீக்கிரம் எல்லாம் விட்டுட முடியாது.” என்றான் ஸ்வரூப்பின் கூற்றில் அவள் திகைத்தாள்.

அத்தியாயம் 62

உத்ஷவி திகைத்துப் பார்த்து, உனக்கு எப்படி தெரியும்? எனக் கேட்க, “அன்னைக்கு நீ இவரை ஷாக்கிங்கா பார்க்கும் போதே தெரிஞ்சுடுச்சு. அண்ட் அன்னைக்கு இதே பேர் தான் சொன்னதா எனக்கு ஞாபகம். அண்ட் ஐ கெஸ்.” என்றதில், ‘எல்லாத்தையும் கெஸ்லயே கண்டுபிடிச்சு உசுர வாங்குறான்’ என பல்லிடுக்கில் திட்டிக்கொண்டாள்.

விக்னேஷ் தான் புரியாத பாவனையில் உத்ஷவியைக் கூர்ந்து பார்த்து விட்டு, “சவி” என அதிர்ந்து கேட்க, அவள் லேசாய் தலையாட்டினாள்.

“எப்படி இருக்க சவி? நீ எப்படி இங்க? உன்னை நான் எங்கள்லாம் தேடுனேன் தெரியுமா?” என்றான் வியப்பும் மகிழ்வும் கலந்தத் தொனியில்.

“எதுக்கு? தேடி, திரும்ப திருட்டுப் பழி போடவா” அக்ஷிதா கோபமாகக் கேட்க, “இல்லம்மா, இவள் அந்த தப்பு பண்ணிருக்க மாட்டான்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று உறுதியாகக் கூறியதில், உத்ஷவி அவரை சலனமற்று பார்த்தாள்.

“ப்ளீஸ் அப்படி பார்க்காதடா. எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு.” என்ற விக்னேஷ் கண் கலங்க அமர்ந்திருக்க, “ஒரு சின்ன பொண்ணை அதுவும் தப்பு செய்யாத பொண்ணை ஜுவனைல்க்கு அனுப்பி இருக்கானுங்க. நீ அதைத் தடுக்க கூட வேணாம். அதுக்கு அப்பறம் அவளை நீ பாத்துருக்கணுமா இல்லையா. இந்த அடி, உங்கிட்ட உண்மையை வாங்குறதுக்கு குடுத்தது இல்ல. நீ செஞ்சத் தப்புக்கு” என ஸ்வரூப் அதிகாரமாய் உரைத்தான்.

அதில் தலையை தாழ்த்திக் கொண்ட விக்னேஷ், “நிஜமாவே அதுக்கு அப்பறம் நான் நிறைய தடவை சவியைப் பார்க்க ஜுவனைல்க்குப் போனேன். ஆனா, ரங்கன் அங்க இருக்குற வார்டனை எல்லாம் கைக்குள்ளப் போட்டுக்கிட்டு, இவளைப் பார்க்க யார் வந்தாலும் விடக்கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கான். அப்படியும் இவளை அங்க இருந்து ரிலீஸ் பண்ற டைம்ல நான் அங்க வந்தேன். ஆனா, இவள் வேற எங்கயோ போய்ட்டதா சொன்னாங்க. அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் தேடிட்டு தான் இருந்தேன். என்னை நம்பு சவி” என்றவனின் கண்களில் அன்பும் பரிவும் குற்ற உணர்வும் அதிகமாய் தெரிந்தது.

“விடுங்க அத்தான்.” என்றவளுக்கு அந்த சூழ்நிலையே ஒரு மாதிரி கடினமாக இருக்க, தானாக ஸ்வரூப்பின் கையைப் பற்றிக்கொண்டாள்.

அவனும் அதற்கு அழுத்தம் கொடுத்து அவளை இயல்பாக்க, விக்னேஷ் மேலும் தொடர்ந்தான்.

“ஆனா, உனக்கு செஞ்ச தப்புக்கு விதி எங்களை நல்லாவே பழி வாங்கிடுச்சு சவி” என்றதில்,

அவள் “எதுக்கு அத்தான் இப்படி எல்லாம் பேசுறீங்க. உங்க மேல எனக்கு கோபம் எல்லாம் இல்ல. க… கவிக்குட்டி எப்படி இருக்கா அத்தான். இப்போ வளர்ந்து இருப்பாள்ல” எனக் கேட்டவளுக்கு ஒரு வயது குட்டி முகம் இன்னுமே நினைவில் பதிந்திருந்தது.

விக்னேஷோ குலுங்கி அழுதான். “அவள் பிறந்ததுல தினமும் நீ தான என் பொண்ணைப் பார்த்துக்குவ. உன் அக்காவுக்கு எப்பவும் அசால்ட்டுத் தானம் தான். அப்படி ஒரு நாள், குக்கரை அடுப்புல வச்சுட்டு, புள்ளையையும் வீட்டுக்குள்ள விளையாட விட்டுட்டு வாசல்ல நின்னு பக்கத்து வீட்டுப்பொண்ணோட கதைப் பேசி இருக்கா. குக்கர் தீஞ்சு வெடிக்கிற நிலமைல தான் அவளுக்கு ஞாபகமே வர, புள்ளையையும் தூக்கிட்டு அடுப்படிக்கு போய்… மொத்தமா வெடிச்சு சிதறிடுச்சு.” என்றவனும் வெடித்து அழுதிட, உத்ஷவி உறைந்துப் போனாள்.

“அத்… தான்… பாப்பா… அக்கா…” என அவளே அறியாமல் வெளிவந்த கண்ணீருடன் கேட்க, “ரெண்டு பேரையும் காப்பாத்த முடியல. ரொம்ப நேரமா உள்ளேயே இருந்து மூச்சுக்குத் திணறி இருக்காங்க. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனதும் ரொம்ப லேட். எல்லாம் உனக்கு செஞ்ச பாவம் தான்.” என்றவனை செய்வதறியாமல் பார்த்தாள்.

“ஆனா, நான் இவங்க சாகணும்ன்னுலாம் நினைக்கல அத்தான். அதுவும் கவிக்குட்டி…” என்று உதடு துடிக்கத் தளர்ந்தவளை ஸ்வரூப் ஆதரவாகப் பிடித்துக்கொள்ள, அவனும் இதனை எதிர்பார்க்கவில்லை.

விவரம் தெரியாத வயதில், அன்னை ஸ்தானத்தைக் கொடுத்த பிஞ்சை இழந்த வலி அவளை என்னவோ செய்தது.

“விஷா…! ரிலாக்ஸ்டி” என அவள் முதுகைத் தட்டிக் கொடுத்த ஸ்வரூப்பிடம், “ஒரு வயசுக் குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு டைனோசர்.” என்றவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

மற்றவர்களும் வருந்திட, அப்போது ஜெயரானையும் பிடித்துக் கொண்டு வந்தனர்.

“வாட் இஸ் திஸ் ஸ்வரூப். இப்படி இண்டீசன்ட்டா பிஹேவ் பண்ணி ஆளை விட்டுத் தூக்கிட்டு வர வைக்கிறீங்க. டிஸ்கஸ்டிங்” என்று அவர் முகத்தைச் சுருக்கிக்கொள்ள, ஜோஷித் “டாக்டர்… கொஞ்சம் உங்க பி. ஏ பக்கத்துல போய் உட்காருங்க.” என்றதும் தான், அவர் விக்னேஷ் முகத்தில் காயத்துடன் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

“உங்களை போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்றேன் பாருங்க.” என்று அவர் எகிறிட,

“அதெல்லாம் அப்பறம் பண்ணிக்கலாம். முதல்ல நாங்க கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க.” என்று ஆடவர்கள் உட்கொள்ளும் மாத்திரையைப் பற்றியும், அவர்கள் ஒரு ஆடியோ கேட்டு மெஸ்மரைஸாவது பற்றியும் கூறிட, ஜெயராமின் முகத்தில் கடும் அதிர்வு.

“வாட்? நிஜமாவே இதெல்லாம் நடக்குதா?” எனக் கேட்டவர், “அன்பிளீவபிள்.” என்றார் கண்ணாடியைக் கழற்றி.

“அதான் எங்களுக்கே தெரியுமே. வேற ஏதாவது சொல்லுங்க. முதல்ல நீங்க ஏன் மனுஷனோட மைண்டை எப்படி கண்ட்ரோல் பண்றதுன்ற புக்கை எல்லாம் படிக்கிறீங்க.” என்று கேட்டிட,

“அந்த புக்கை எழுதனதே நான் தான். ஹியூமன் மைண்ட்… இட்ஸ் ட்ரிக்கி.

நான் சைக்கியாட்ரிஸ்ட்டான காலத்துல இருந்தே, என்னோட வேலைல எனக்கு அவ்வளவு பிடித்தம். எப்பவுமே, எனக்கு வர்ற பேஷண்டோட மனநிலையைப் புருஞ்சு வச்சுக்கணும்ன்ற ஆர்வம் இருக்கும்.

பொதுவா, பேஷண்டோட மனசுல இருக்குற ஆழ் துயரங்களை நாங்க எங்களோட கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து தான் பேச வைப்போம். லைக் டாக்கிங் தெரபி, பேஷண்ட்டை ஆழ்ந்த உறக்கத்துக்குக் கொண்டு போய் அவங்களைப் பேச வைக்கிறதுன்னு சில டெக்னிக்ஸ் இருக்கு. அப்படி நான் ஒரு பேஷண்ட்க்கு தெரபி செசன் நடத்தும் போது தான், அந்த பேஷண்ட் என்னை ஆச்சர்யப்படுத்துற வகைல பேசுனாங்க.

அந்த பேஷண்ட்க்கு, இந்த உலகமே அவங்களோட காலடில இருக்கணும்ன்னு ஆசையா இருக்காம். நம்ம சும்மா ஒரு பேச்சுக்கு அப்படி சொல்லுவோம்ல. ஆனா, உண்மையாவே அந்த ஆசை பேஷண்ட்க்கு தீவிரமா இருந்துச்சு.

‘கம்பியூட்டரை ஒரே ஆளா கண்ட்ரோல் பண்ற மாதிரி, மனுஷனையும் அவனோட மூளையையும் கண்ட்ரோல் பண்ணி, என் இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கணும். எல்லாருமே எனக்கு அடிமைகளா இருக்கணும். லைக் ஒரு மொபைல் கேம் மாதிரி, அதுல வர்ற ஏ. ஐ கேரக்டர்ஸை நான் கண்ட்ரோல் பண்ற மாதிரி, எல்லாரும் எனக்காக வேலை செய்யணும். அதுக்காக நான் மைண்ட் ரீடிங் எல்லாம் கூட கத்துக்கிட்டு இருக்கேன். ஆனா, எனக்கு அது போதாது. என் ஆர்வத்துக்கு தீனி போட, ஏதாவது செய்யணும்ன்னு நினைச்சு, என் பிரெண்டை பயமுறுத்திப் பார்த்தேன். அவன் பயந்தான். அந்த பயம் அவன் மூளையை முடக்குது. யோசிக்கிறத் திறனை இழக்க வச்சுச்சு. அதே பயத்தை எந்த எந்த வழில காட்டணும்ன்னு ரிசர்ச் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இதை பார்த்து நான் ஏதோ தப்பா யோசிக்கிறேன்னு என் அப்பா, அம்மா இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க’ன்னு பேசிக்கிட்டே இருந்தவன், சட்டுன்னு விழிச்சுட்டான்.

ஐ மீன், அவன் என் தெரபிக்கு ரெஸ்பான்ஸ் பண்ணல. அவனாவே கண்ணை மூடிப் படுத்து இதெல்லாம் சொல்லிட்டு, கிளம்பிப் போய்ட்டான்.

அதுக்கு அப்பறம், அந்த பேஷண்ட் வரவே இல்லை. ஆனா, அந்த கான்செப்ட் படி நான் ரொம்ப ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சுட்டேன். அரிய விஷயத்தைக் கண்டறியிறதுக்காக இல்ல. ஒருவேளை அந்த மாதிரி நடந்தா, என்ன மாதிரியான பின்விளைவுகளை உலகம் சந்திக்க நேரும்ன்றதை இளைஞர்களுக்கு புரிய வைக்க தான் ஆராய்ச்சி செஞ்சேன். ஆனா, அந்த புக்கை எல்லாம் நான் பப்ளிஷ் பண்ணல. இன்னும் கூட அந்த பேஷண்ட் பேசுன பேச்சோட தாக்கம் என்னை விட்டு மறையல. இப்போ நீங்க சொன்னதுமே அந்த இன்சிடென்ட் தான் ஞாபகம் வருது.

அப்பறம் அந்த ஆடியோ கூட, கண்டிப்பா மெஸ்மரைஸ் செய்றதுக்கு அவங்க யூஸ் பண்ற வெப்பனா இருக்கலாம்.” எனக் கோடு விழுந்த நெற்றியில் தேய்த்தபடி அவர் கூற, மற்ற அனைவரும் அதிர்ந்தனர்.

ஸ்வரூப் அவசரமாக, “அந்த பேஷண்ட் பத்தின டீடைல்ஸ் இருக்கா?” எனக் கேட்க, “சாரி ஸ்வரூப், இது நடந்து கிட்டத்தட்ட 15 வருஷம் இருக்கும். அப்போ இருந்த பேஷண்ட் டீடெய்ல் எல்லாம் பைல்ஸ்ல தான் அட்டாச் ஆகி இருக்கும். நான் ஹாஸ்பிடலை வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ணும் போது, பைல்ஸ் எல்லாம் மிஸ் ஆகிடுச்சு. இருக்குற தகவல்களை கம்பியூட்டரைஸ் பண்ணினேன். ஆனா, அதுல அந்த பேஷண்டோட தகவல் இல்ல. ஐ தாட் ஐ மிஸ்ட் ஹிம்!

“அவனோட படிப்பு, ஜாப் பத்தி ஏதாவது தெரியுமா டாக்டர்?” சஜித் கேட்டதில்,

“ஜாபா? அந்த பையனுக்கு அப்போ 15 வயசு தான்ப்பா.” என்றதில், “வாட்?” என்றனர் ஒருசேர.

“எஸ். சின்ன பையன்! அடுத்து வரலைன்னதும், அவங்கக் குடுத்த அட்ரஸ்க்கு போய் பார்த்தேன். ஆனா எல்லாமே ஃபேக். ஏன் அப்படி செஞ்சாங்கன்னு தெரியல. அவனோட பேரண்ட்ஸை பார்க்கும்போது பொறுப்பான ஆளுங்களா தான் தெரிஞ்சாங்க.” என்றிட,

“இதென்ன வெட்ட வெட்ட பூச்சாண்டி கிளம்புது.” என நொந்த விஹானா, “இப்போ இந்த பசங்களை எப்படி சரி பண்ணுறது.” என்றாள் புரியாமல்.

“வேற ட்ரக் குடுத்து, அவங்களை நார்மலாக்கலாமா டாக்டர்” உத்ஷவி கேட்டதும், “முதல்ல நான் அவங்களை செக் பண்ணி பாக்குறேன் என் தெரபி மூலமா.” என்றிட, ஸ்வரூப் சந்தேகமாக, பத்ரியின் சிறு வயது புகைப்படத்தைக் காட்டினான்.

வார்டன் பரிமளாவின் வீட்டில் எடுத்த புகைப்படம் அது.

“நீங்க சொன்ன பேஷண்ட் இவனா?” எனக் கேட்க, அதனை உற்றுப் பார்த்தவர், “இவன் இல்லை” என்றதில், அவனுக்கும் மேலே யாரோ ஒரு எக்ஸ் இருப்பது புரிந்தது.

ஜோஷித், “பசங்களோட போன்ல இருக்குற ஆடியோ பதினஞ்சு நிமிஷம் லெந்த்ல இருக்கு ஸ்வரா. நீ கேட்டது வெறும் ரெண்டு நிமிஷம். அதுக்கே அவ்ளோ எஃபக்ட்ன்னா” என்றதில்,

அக்ஷிதா “அவனாவது ரெண்டு நிமிஷம் கேட்டான், நான் அரை நிமிஷம் கூட கேட்டு இருக்க மாட்டேன். பயத்துல ஹெட்போனை கழட்டிட்டேன். அதுக்கே தாக்குப் பிடிக்க முடியல.” என்றாள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு.

ஸ்வரூப், “எக்ஸ்சாக்ட்டா இவங்களுக்கு என்ன தான் நடக்குது டாக்டர். ஏன் வித்தியாசமா பிஹேவ் பண்ணி செத்துடுறாங்க. ஒரு ஆடியோ அண்ட் ஒரு மாத்திரை ஒரு மனுஷனை இந்த அளவு கண்ட்ரோல் பண்ணுமா?” என்றான் புரியாமல்.

“வொய் நாட் ஸ்வரூப்? உலகத்துலயே ரொம்ப கஷ்டமான புதிரான விஷயம் என்ன தெரியுமா?” எனக் கேட்டிட, அவன் என்னவெனப் பார்த்தான்.

“மனுஷனோட மைண்ட். அது எப்போ எப்படி மாறும்ன்னு அவனாலேயே கணிக்க முடியாது. ஒரு சிலர் நல்லா பேசிட்டு இருப்பாங்க. திடீர்ன்னு கோபப்படுவாங்க. சிலர் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி பேசுவாங்க. அப்படியே டக்குனு நார்மல் ஆகிடுவாங்க. மோஸ்ட்டா இந்த மாதிரி தன்னோட மனநிலையை மாத்திக்கிறவங்க, அவங்களோட மைண்ட்செட்டை அவங்க கண்ட்ரோல்ல வச்சுப்பாங்க. ரொம்ப எக்ஸ்ட்ரீம் – ஆ போற மாதிரி இருந்தா தே கேன் கண்ட்ரோல். ஆனா, அதே கண்ட்ரோல் அவங்ககிட்ட இல்லாம, எல்லாத்தையும் எக்ஸ்டரீமா காட்டுனா? அந்த மாதிரியான சிக்கல்ல தான் இவங்க மாட்டிருக்காங்க.

இவங்களோட ஆழ்மனசுல, அவங்களோட உடம்பும் மனசும் வேறொருத்தருக்கு அடிமைன்னு நம்ப வச்சு இருக்காங்க. அடிபணிஞ்சு போறது எப்படின்னு கத்துக்குடுத்து இருக்காங்க. சாதாரண மனுஷங்களை மாதிரி தான் இருப்பாங்க. ஆனா, அவங்களோட சுயத்தை இழந்துருப்பாங்க. அளவுக்கதிகமான பயத்தைக் காட்டி, இவங்களோட மனசை மரத்துப் போக வச்சிருக்கலாம். மனித மனம் எந்த வித எல்லைக்கும் உட்பட்டு சிந்திப்பது இல்ல. அதனோட பரிணாமங்கள் இந்த கண்டத்தை விடப் பெருசு. ஆனால், அதுக்கு ஏற்படுற பயம் கோபம், எதிர்மறை உணர்வுகளால், அதோட வீரியம் நமக்குத் தெரியறது இல்ல. என அவர் பேசிக்கொண்டே செல்ல,

அக்ஷிதாவோ, “எனக்கு ஏதோ சைக்காலஜி கிளாசுக்கு வந்த மாதிரியே பீல் ஆகுது. இந்த மனுஷன் விட்டா நம்மளை ஹிப்னோடைஸ் பண்ணிடுவாரு போல.” என முணுமுணுத்தாள்.

ஸ்வரூப்போ ஆழ்ந்த சிந்தனையுடன், “நீங்க சொல்றதை கேட்கும் போது இதுல இன்வால்வ் ஆகி இருக்குறவன் சைக்கோ பாத்தா இருக்கலாம். பட், இன்னும் என்னால நம்ப முடியல. ஐ அக்ரீ அந்த ஆடியோ மெஸ்மெரைசிங் தான். ஆனா, இதெல்லாம் ரியாலிட்டில சாத்தியமா?” என்றான் கண்ணைச் சுருக்கி.

“நம்ம கண்ணால பாக்குறத விட, பல மடங்கு அதிசயமும் விபரீதமும் நிறைஞ்சது இந்த பிரபஞ்சமும் மனிதனும். அவன் நினைச்சா, என்ன வேணாலும் செய்ய முடியும், நல்லதாவும் சரி கெட்டதாவும் சரி.” என்றவர்,

“அவங்களுக்கு உடம்புல அடி எதுவும் இருக்கா?” என பிரதாப்பிடம் வினவ, “இல்ல டாக்டர். உடம்புல காயம் இல்ல.” என்றார்.

“ஐ சீ…” என ஒருவனின் சட்டையைக் கழற்றி, அவன் உடலின் மீது கையை வைத்துப் பார்த்து சோதித்தார்.

“என்ன மாதிரியான ட்ரக்ஸ் இவங்க ப்ளட்ல கலந்துருக்குன்னு சீக்கிரம் அனலைஸ் பண்ணுங்க” என்றிட, “அதை செஞ்சுட்டு இருக்கோம். நைட்டுக்குள்ள ரிசல்ட் வந்துடும்” என்றார் பிரதாப்.

உத்ஷவி தான், “இவரைக் கூப்ட்டா குழப்பம் தீரும்ன்னு பார்த்தா, இவர் கூட கொஞ்சம் குழப்பி அடிக்கிறார் ஸ்வரூ.” என அவனிடம் ரகசியம் போல பேசிட,

“ப்ச்… ஏண்டா இந்த ஆளை தூக்கிட்டு வர சொன்னோம்ன்னு நினைக்க வச்சுடுவாரு போலடி.” என்று சலிப்பாய் கூறியதில், அவள் சோம்பல் நகை புரிந்தாள். ஒரு ஓரத்தில் கவிக்குட்டியின் நினைவு அதிகமாய் தாக்கியது. அதன் பிறகு விக்னேஷும் ஜெயராமனுக்கு உதவியாக இருக்க, உத்ஷவி அவனிடம் பேசிக்கொள்ளவில்லை.

“நம்ம ஒரே டிராக்ல போனா, இவர் ஏதோ புதுசா ஒரு டிராக்டரை கொண்டு வந்து நிறுத்தி வச்சிருக்காரு. இவரு பேசுறதைப் பார்த்தா நம்ம மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும் போல.” என விஹானாவும் நொந்து கொள்ள,

ஜோஷித், அவளைப் பாராமல், “சைக்கோ கில்லர்ன்னா கூட, கொலை தான பண்ணுவாங்க. இவன் என்னடா, கடத்தி வச்சு என்னென்னமோ பண்றான்.” என்றான் எரிச்சலாக.

அவனது பாராமுகம் விஹானாவைத் தாக்க, வாடிய முகத்துடன் அமைதி ஆகி விட்டாள்.

அக்ஷிதாவோ, “இவனை சைக்கோ கிட்னாப்பர்ன்னு வேணும்னா சொல்லலாம். எப்படியோ இந்த பசங்க நார்மல் ஆனா போதும் இப்போதைக்கு…” என்றிட, சஜித், “எனக்கு என்னமோ அந்த கிட்னாப்பருக்கும் ஷவி இருந்த ஜுவனைல்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோன்னு தோணுது.” என்றான் தடையைத் தடவியபடி.

ஸ்வரூப், “எனக்கும் சேம் டவுட் இருக்கு சஜி.” என்று உத்ஷவியைப் பார்க்க,

“எனக்குத் தெரிஞ்சு அங்க இருந்த எல்லாமே சைக்கோ பாத் தான் டைனோசர். இதுல நான் யாரைன்னு சந்தேகப்பட்டு சொல்றது.” என யோசித்தவளுக்கு, ஒன்றும் புலப்படவில்லை.

மயக்கத்தில் இருந்த ஒரு ஆடவன் விழித்து விட்டு, சுற்றி முற்றிப் பார்க்க, அக்ஷிதா “அய்யயோ… இப்ப ஒரு சம்பவம் இருக்கு.” என வெளிறினாள்.

ஜெயராமன், “ஸ்வரூப் அவனை ஸ்ட்ரெஸ் பண்ணாம, மிரட்டாம நார்மலா ட்ரீட் பண்ணுங்க. அவனும் நார்மலா இருப்பான்” என்றதில்,

ஸ்வரூப் மெல்ல அவனருகில் சென்று, “பரமன்” என அழைக்க, “அண்ணய்யா… நான் எப்படி இங்க வந்தேன். இது என்ன இடம்?” என்று மீண்டும் சுற்றிப் பார்க்க,

“ரிலாக்ஸ் பரமன், நம்ம ஊருக்குள்ள ஏதோ பிரச்சனை, அதான் ஒரு சேஃப்டிக்கு உங்களை இங்க வச்சிருக்கோம். நான் சொல்றவரை இங்க இருப்பீங்க தான?” என்று மென்மையாகப் பேசிட, “நீங்க சொல்லி இருக்க மாட்டோமா அண்ணய்யா. எப்போ அனுப்புறீங்களோ அது வர இங்க இருக்கோம்” என்றான் பணிவாக.

தன் மீது எத்துணை நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள்! இப்படி அனைவரையும் நாசப்படுத்தும் அந்த சைக்கோவை பிடித்து நாராகக் கிழிக்க வேண்டும் என்ற வெறி அதிகரித்தது ஆடவர்களுக்கு.

அத்தியாயம் 63

ஆடவர்களுக்கான மாற்று மருந்திற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட, இன்னும் சில அனுபவமிக்க மருத்துவர்கள் தேவைப்படுவதாக ஜெயராமன் கோரிக்கை விடுக்க, துரிதமாக அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.

அவர்களுக்குத் தேவையான நவீன உபகரணங்களை ஆந்திர முதலமைச்சரின் அனுமதியோடு, நிலைமையின் தீவிரத்தை உணர்த்தி, அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்க, அன்று இரவுக்குள் புது சோதனைக் கூடமே பங்களாவில் உருவாக்கப்பட்டது.

உத்ஷவி ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டு, அவனருகில் அமர்ந்த ஸ்வரூப் “என்னடி… இன்னும் கவிக்குட்டி பத்தி யோசிச்சுட்டு இருக்கியா?” எனக் கேட்க,

முகம் வாடினாலும், மறுப்பாக தலையசைத்தவள், “நான் ஜுவனைல்ல ஒரு வார்டன் யார் என்ன சொன்னாலும் கேட்பாரு, ஒரு மாதிரி வித்தியாசமா பிஹேவ் பண்ணுவாருன்னு சொல்லிருக்கேன்ல. எனக்குத் தெரிஞ்சு, அவர்கிட்ட இருந்தே இது ஸ்டார்ட் ஆகி இருக்கனும் ஸ்வரூ. ஆனா, எனக்கு என்ன ஒரு சந்தேகம்ன்னா, அப்போ அந்த பையனுக்கு ஒரு 17 வயசு இருக்கலாம். அவ்ளோ சின்ன பையன் எப்படி இதெல்லாம் செஞ்சுருக்க முடியும். அப்படி யாராவது ஜுவனைல்ல இருந்திருந்தா அது தெரிஞ்சோ தெரியாமலோ என்னையும் பாதிச்சு இருக்கும்ல.” எனக் குழம்பினாள்.

விஹானாவோ, “ஹே வெய்ட்… டாக்டர்கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வந்தவன் தான், இதெல்லாம் செஞ்சுருக்கணும்ன்னு அவசியம் இல்லைல. அவன் ஜுவனைல்ல இருந்துருப்பான்னு சொல்லவும் நம்மகிட்ட எந்த எவிடன்ஸும் இல்ல. நம்ம தப்பான பாதைல யோசிக்கிறோமோ?” எனக் கேட்டதில்,

சஜித், “இல்ல விஹா. டாக்டருக்கு அவன் பேசுனது எந்த அளவு பாதிச்சு இருந்தா, அதைப் பத்தி ரிசர்ச் பண்ண அவ்ளோ ஆர்வம் காட்டி இருப்பாரு.” என்றான்.

உத்ஷவி “ஒருவேளை நம்ம கெஸ் கரெக்ட்டுன்னு வச்சுக்குவோம். ஆனா, பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்த பேஷண்ட்டை எந்த டீட்டெயிலும் தெரியாம எப்படி கண்டுபிடிக்கிறது.” என்றதும்,

ஜோஷித், “இப்ப என்ன பிரச்னைன்னா, அவன் டென்சன் ஆகி, இன்னும் நாலு பேரைக் கடத்திட்டு போகாம இருக்கனும். ஊரை சுத்தி சிசிடிவி இருக்கு. ஆனா, அப்படியும் எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது. அதுக்கு முன்னாடி அவனைப் பிடிக்கணும்.” என்றான் தீவிரத்துடன்.

ஒற்றைக்கையை நெற்றியில் வைத்து, முகத்தை மூடி ஆழ்ந்த யோசனையில் இருந்த ஸ்வரூப், சட்டென நிமிர்ந்து, “டாக்டர்… அந்தப் பையனோட அப்பா, அம்மா என்ன வேலை பார்த்தாங்கன்னு ஏதாவது சொன்னாங்களா. அப்படி சொன்னது ஏதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” எனக் கேட்டான்.

“அந்த அட்ரஸே ஃபேக் – ஆ இருக்கும் போது, அதுவும் பொய்யா தானப்பா இருக்கணும், அதனால நான் அதைப் பெருசா எடுக்கல.” என்றதும், “ஃபேக்கா இருந்தா கூட பரவாயில்ல, சொல்லுங்க” என்றான்.

அவரோ யோசனையுடன், “அந்த அம்மா, ஏதோ கவர்மெண்ட் வேலை பாக்குறதாவும், அந்த பையனோட அப்பா ஹாஸ்பிடல்ல வேலை பார்க்குறதாவும் பொத்தாம் பொதுவா சொன்னதா ஞாபகம்” என்றதில், “ஓ!” என்றான் கழுத்தைத் தேய்த்து.

“ம்ம்க்கும் இங்க க்ளியர் க்ளூ கிடைச்சா கூட உண்மையை கண்டுபிடிக்க முடியல. இதுல ஜெனரலா சொன்னா, எங்கன்னு கண்டுபிடிக்க” என அக்ஷிதா அலுத்துக் கொண்டாள்.

ஸ்வரூப், ஜோஷித்தைத் தனியாக அழைத்து சில விவரங்கள் கூற, “நான் போய் பாக்குறேன்” என்று அவசரமாக வெளியில் கிளம்பினான்.

அதே சஜித்திடமும் சில உத்தரவுகளைப் பிறப்பிக்க, அவனும் தலையாட்டி விட்டு, வெளியில் செல்ல, “இங்க நாங்களும் இருக்கோம்” என்று உத்ஷவி முறைத்தாள்.

“ஒரு சின்ன கெஸ்டி. கரெக்ட்டான்னு தெரியட்டும் சொல்றேன்.” என்றவனை மூவருமே முறைத்து வைத்தனர்.

இதற்கிடையில் ஜெயராமன், “நாய் மாதிரி பிஹேவ் பண்ணி செத்துப் போனவங்களோட பாடி ஏதாவது இருக்கா ஸ்வரூப்” எனக் கேட்க, “ராகேஷோட பாடியை இங்க தான் ஃப்ரீஸ் பண்ணி வச்சுருக்கேன் டாக்டர், எப்படியும் யூஸ் ஆவான்னு” என்றவன் வேறொரு அறைக்குக் கூட்டிச்சென்று, மார்ச்சுவரி போலவே இருந்த ஐஸ்பெட்டியின் ஒரு ட்ராயரைத் திறக்க அதில் ராகேஷின் உடல் பதப்படுத்தப்பட்டு இருந்தது.

உத்ஷவியோ, “என்னடா வீட்டுக்குள்ள மார்ச்சுவரி வச்சுருக்க. எனக்கு என்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு.” என்றதில், அவளை காட்டத்துடன் பார்த்தவன், “இவன் எதுக்காவது யூஸ் ஆவான்னு, இவனுக்காக ரெடி பண்ணுனதுடி.” என்றதில்,

“என்னமோ லவர்க்கு தாஜ்மகால் கட்டுன மாதிரி சொல்ற…” என்று அக்ஷிதா சிரித்து, பின் அவனது முறைப்பில் வாயை கப்சிப்பென மூடிக்கொண்டாள்.

விஹானா தான் ராகேஷின் மீதிருந்த பார்வையைத் திருப்பவே இல்லை.

“செத்துப்போனா, உடம்புல இருந்த டேட்டூ மறைஞ்சு போய்டுமா ஸ்வரூ?” என ராகேஷைப் பார்த்தபடி அவள் கேட்க,

“நோ… மறையாது” என்றான். ஜெயராமனும் அதனை ஆமோதிக்க, “அப்போ இவன் ஷோல்டர்ல இருந்த அனகோண்டா டேட்டூ எங்கப் போச்சு?” என விசித்திரமாகக் கேட்டவளைக் கண்டு ஸ்வரூப் திகைத்தான்.

உத்ஷவியும் ராகேஷின் வெற்றுடலை நன்றாகப் பார்த்து, “லெப்ட் ஷோல்டர்ல இருக்கும்ல. நானும் பார்த்து இருக்கேன் டைனோசர். இவன் சில நேரம் ஸ்லீவ் லெஸ் போட்டு இருக்கும் போது தனியா தெரியும்.” என்றதில், “வாட் த ஃப****க்” என்று திறந்திருந்த ட்ராயரை காலால் எட்டி உதைத்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

அக்ஷிதா மிரண்டு, “நீ கத்துற கத்துல செத்தவன் எந்திரிச்சுற போறான்.” எனப் பயந்திட,

உத்ஷவி, “ஒன்னு சொல்லட்டா ஸ்வரூ. எனக்குலாம் ஏதோ வோட்கா அடிச்ச மாதிரி மண்டை மதமதப்பா இருக்கு. கண்ணுல பாக்குற எதுவும் உண்மையா இருக்க மாட்டேங்குது. உண்மை எதுவும் கண்ணுல தெரிய மாட்டேங்குது. டேட்டூ இல்லன்னா, இவன் ராகேஷே இல்லன்னு தான அர்த்தம்.” என்றவளுக்கு அட போங்கடா என்றிருந்தது.

“ஊஃப்” எனப் பெருமூச்சை வெளியிட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “ராகேஷ் ட்வின்ஸா?” என விஹானாவிடம் கேட்க, “யாருக்கு தெரியும்.” என்றாள்.

ஜெயராமன் “இவன் ட்வின்னா இருக்க வாய்ப்பு இருக்கு ஸ்வரூப். விசாரிச்சுப் பாருங்க. இவன் பாடியை டி. என். ஏ டெஸ்ட் பண்ண சொல்லலாம்.” என்றிட, அதற்கான ஏற்பாடும் அதிவேகத்துடன் நடைபெற்றது.

ஸ்வரூப், “நான் வெளில போயிட்டு வந்துடுறேன். அதுவரை இங்கயே இருங்க. எனக்கு அப்பப்போ அப்டேட் குடுத்துடுங்க” என்று கிளம்ப எத்தனிக்க, அவன் கையைப் பற்றிய உத்ஷவி “கேர்புல்லா இரு!” என்றதில்,

“ரொம்ப அக்கறை இருக்குற மாதிரி நடிச்சுக்காத.” என்று சீறி விட்டு சென்றான். இத்தனை நேரம் இருவருக்குள்ளும் இருந்த இதம் மீண்டும் தொலைந்து போனது.

உத்ஷவியின் முகத்தில் வேதனையின் சாயல் தெரிய, விஹானாவிற்கும் அதனைக் கண்டு வருத்தம் எழுந்தது.

“உண்மையை சொல்லுடி. நீ அவனை லவ் பண்ணவே இல்லையா?” எனக் கேட்டதில்,

அவள் பதில் கூறவில்லை.

“உன்ன தாண்டி கேட்குறா. பதில் சொல்லு. நீ தான அவனை சைட் அடிக்கிறேன் அது இதுன்னு வம்பிழுத்த.” என்று அக்ஷிதா முறைக்க,

“சும்மா விளையாட்டுக்கு பண்ணுனேன். அவன் சீரியஸா எடுத்துப்பான்னு நினைக்கல டார்ல்ஸ்.” என்றாள் கமறிய குரலில்.

“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல” விஹானா அழுத்தத்துடன் பார்க்க, உத்ஷவியின் கண்கள் கலங்கியது.

“இது வேணாம் டார்ல்ஸ். மாறிட்டா பரவாயில்ல, நான் மாறவே இல்லன்னா, இந்த ரிலேஷன்ஷிப்பே டாக்சிக்கா மாறிடும்.” என்றவளிடம், “அடியேய் லவ் பண்றியா இல்லையான்னு ஒரே கேள்வி கேட்டா, நீ சம்பந்தம் இல்லாம பதில் சொல்ற.” என்று விஹானாத் தீப்பார்வை பார்க்க,

கீழுதட்டை அழுந்தக் கடித்த உத்ஷவி, “இத்தனை நாள்ல அவனுக்கே என் மேல லவ் வந்துருக்கு. எனக்கு வராமலா இருக்கும்.” என்றவள், சட்டெனப் பொங்கிய கண்ணீரை மறைக்க இயலாமல், “என்னை அழ வைக்கிற உரிமையை அவனுக்கு யாருடி குடுத்தா. என்னை விட்டுட சொல்லுங்க டார்ல்ஸ்” என முகத்தை மூடிக் கேவியவளைக் கண்டு மற்ற இருவருக்கும் கண்ணீர் பொங்கியது.

“ஹே அழாதடி” என இருவரும் அவளை அணைத்துக் கொள்ள, தோழிகளிடம் தஞ்சம் புகுந்து அழுது தீர்த்தாள்.

அந்நேரம் அவளுக்கு போன் வர, கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டவள், அதனை எடுத்துப் பேசினாள்.

“வரேன்.” என்றதோடு முடித்துக் கொண்டவள் எழுந்து, “இருங்க வெளில போயிட்டு வந்துடுறேன்.” என்றதும், “எங்கடி போற?” என்றாள் அக்ஷிதா.

விஹானா “யாரு போன்ல ஸ்வரூவா?” எனக் கேட்டதில், ஒரு கணம் விழித்துப் பின் “ம்ம் ஆமா…” என பலவீனமாக தலையசைக்க, “சரி போ. பட் லவ்வ ஒத்துக்கோடி. அவன் உன்னை விட மாட்டான் எப்பவும்.” என்று ஆறுதல் அளித்து அனுப்பிட, அவளும் யோசனையுடன் வெளியில் சென்றாள்.

இரண்டு மணி நேரம் கழித்தே, ஆடவர்கள் ஒவ்வொருவராக அங்கு வந்தனர்.

“எங்க போன ஜோஷ்?” விஹானா கேட்டதில், அவன் எப்போதும் போல அவளைத் தவிர்த்து விட்டு, “இன்னும் ஸ்வரா வரலையா அக்ஷி?” எனக் கேட்டான்.

அவள் இல்லை என்று விட்டு, அவர்களுக்குத் தனிமை கொடுக்கும் பொருட்டு, அங்கிருந்து நகர, அப்போது தான் உள்ளே வந்த சஜித்தும் அவள் பின்னே சென்றான்.

ஜோஷித்தும் அவ்விடத்தை விட்டு நகர எத்தனிக்க, அவன் கையைப் பற்றிய விஹானா, “ஜோஷ்…” என மீண்டும் அழைக்க,

அவள் கையை உதறியவன், “உன்னை கொல்ற அளவு கோபத்துல இருக்கேன். எதையாவது பேசி, என்னை டென்ஷன் பண்ணாத.” என்று எச்சரித்தான்.

“டென்ஷனா இருந்தா, என்னை கிஸ் பண்ணிக்கோ!” தலையை ஆட்டி, விழிகளைத் தாழ்த்தி அவள் கூறிட, “ஏன் இப்படி தான் ராகேஷ்கிட்டயும் அட்ஜஸ்ட் பண்ணிப்பியா?” என வார்த்தைகளை நெருப்பாய் கொட்ட, அவள் மனம் துடித்துப் போனது.

அவள் கூறிய வார்த்தைகளின் வீரியத்தை இப்போது தான் முழுமையாக உணர்கிறாள்.

அதில், கண்ணீர் அருவிப் பெருக, இருக்கும் இடம் மறந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.

—-

அக்ஷிதாவின் பின்னால் வந்த சஜித்தை முதலில் கவனியாதவள், சட்டென திரும்பிப் பார்த்து, “ச்ச்சே நீ தானா… நான் பயந்தே போய்ட்டேன்” என்று ஆசுவாசமானாள்.

“நானே தான். இங்க என்ன பேய் பிசாசா இருக்கு” எனக் கேட்டபடி அவளை நெருங்க, அவளோ “இன்னும் பேய் பிசாசு மட்டும் தான்டா வரல. அதையும் வரவச்சுடாதீங்க.” என நொந்து கொண்டவள், அவனது நெருக்கம் உணர்ந்து மெல்லத் தள்ளிப்போனாள்.

அவனோ விடாமல் தொடர, சுவற்றில் முட்டி நின்ற அக்ஷிதா, “சஜூ…” எனப் பேச இயலாமல் திணற,

“எவ்ளோ தைரியம் இருந்தா, எவளுக்கோ என்னைத் தார வார்த்து குடுத்துட்டு நீ எஸ்கேப் ஆகலாம்ன்னு நினைச்சு இருப்ப. என்மேல பீலிங்ஸ்ஸே இல்லையாடி உனக்கு.” என்றவனின் கூற்றில் ஆதங்கமே மிதந்தது.

அக்கேள்வி அவளை உருக்குலைக்க, முணுக்கென கண்கள் தாங்கிய நீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதுவே அவளது நேசத்தை தெள்ளந்தெளிவாக உரைக்க, “கேடி… ஐ லவ்…” என ஆரம்பிக்க, வேகமாக அவனது வாயை மூடினாள்.

“சஜூ… எனக்கு எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. என்னை வீட்டை விட்டு துரத்தி நடுத்தெருவுல நின்னப்ப கூட எனக்கு பயம் இல்ல. ஏமாற்றம் இல்ல. ஆனா, உன் மேல ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டேனோ என்னவோ, நீ இல்லாத லைஃப் ரொம்ப பயமா இருக்கு காட்ஸில்லா.

இது தப்பா சரியா, இதெல்லாம் எங்க போய் முடியும்ன்னு எனக்குப் புரியல. அதைப் பத்தி பேசவோ யோசிக்கவோ நிஜமாவே எனக்கு இப்ப தைரியம் இல்ல. எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் உனக்கு நான் தகுதியானவளா இருக்கவே முடியாது. அதுக்காக, உன் மேல இருக்குற பீலிங்கை என்னால உதாசீனப்படுத்தவும் முடியல. நீ திரும்பி வந்தப்ப தான் எனக்கு என் உயிரே திரும்பி வந்த மாதிரி இருந்துச்சு. அதே நேரம், நீ காதலைப் பத்தி பேசும் போது என்னால சட்டுனு இதை ஏத்துக்க முடியல. எனக்கே கொஞ்சம் ஓவரா இருக்கு.” என்று பரிதாபத்துடன் பேசியவளை, அமைதியுடன் ஏறிட்டான் சஜித்.

தனது வாயை மூடி இருந்த அவளது கையில் மென்முத்தம் பதிப்பித்தவன், “என்ன தகுதி இருக்கனும்ன்னு நினைக்கிற கேடி? வேணும்ன்னா, போய் நாலு டிகிரி வாங்கி, அமிஞ்சிக்கரைல இடம் வாங்கிப் போட்டுட்டு வரியா.” என்று நக்கலுடன் கேட்க, அவன் கூறிய விதத்தில் மென்னகை எழுந்தது.

அவளைக் கண்டு அவனுக்கும் அதே இளநகைத் தோன்ற, “என் அத்தைப் பொண்ணுங்களும் தான் ராஜ வாழ்க்கை வாழ்ந்தாளுங்க. ஆனா, அதெல்லாம் அவங்களுக்கு பத்தல. எவ்ளோ பணம் இருந்து, மரியாதை இருந்து என்ன பிரயோஜனம் கேடி? அடிப்படை அறிவு இல்ல. மிருகத்துக்கு கூட தன்னோட இனம் மேல இருக்குற சின்ன அன்பு துளி கூட இல்ல. நீ சொல்ற தகுதி எல்லாம் பாவனாவுக்கு இருக்குன்னா, அப்போ ஏன் அவளை கல்யாணம் பண்ணிக்க தோணல.

வாழ்க்கையை வாழ, அதோட போக்குல ரசிச்சு, அனுபவிச்சு, பிரச்சனைன்னா துணையா நின்னு, ஆதரவுக்கு கை குடுக்குறது தான்டி காதலோடு பேசிக்கே. அதெல்லாம் நான் உங்கிட்ட மட்டும் தான் பார்த்தேன். அப்படி பார்த்தா, இந்த ஜென்மத்துல உன்னை விட தகுதியானவளை என்னால இனி பார்க்கவே முடியாது. பார்க்கவும் விரும்பல. இனி இப்படி சில்லித்தனமா யோசிக்காத.

எனக்கு உங்கிட்ட பிடிச்சதே, தலை மேல கடப்பாறை விழுந்தாலும் தள்ளி விட்டுட்டு, சாப்பாட்டுக்கு இம்பார்ட்டன்ஸ் குடுக்குற கியூட்நெஸ் தான். அதை விட்டுட்டு சீரியஸா பேசி காமெடி பண்ணாத. இப்போதைக்கு நம்ம இதைப் பத்தி பேச வேணாம். டைம் எடுத்துக்கலாம். ஓகே வா?” எனப் பேசி முடிக்க, அவள் அவனது பேச்சில் மலைத்து வியந்து நின்றாள்.

ஸ்வரூப்பின் குரல் கேட்டதில், “சரி வா… அடுத்து என்ன தலைவலி வரப்போகுதுன்னு தெரியல…” என்று அவள் கன்னம் கிள்ளி முத்தமொன்றை கொடுத்து விட்டு, அவளை இழுத்துச் செல்ல, அவளுக்கு தான் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் சட்டென நீங்கி வெட்கம் நிறைந்தது.

ஸ்வரூப் உள்ளே நுழைந்ததும், விஹானாவின் கண்ணீர் முகத்தைத்தான் பார்த்தான்.

ஜோஷித் அசையாமல் அவள் கண்ணீர் விடுவதை அசட்டையுடன் பார்த்திருக்க, ஸ்வரூப்பைக் கண்டதும் அழுகையை நிறுத்தி வேகமாக கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

அதில் ஜோஷித்தின் முதுகில் மெல்ல தட்டியவன், “அவள் தான் அறிவில்லாம ஏதோ பேசிட்டான்னா, நீ ஏண்டா அதைப் பிடிச்சு தொங்கிட்டு இருக்க.” என அதட்டிட, ஜோஷித்திற்கு மனம் ஆறவில்லை.

அந்நேரம் அங்கு சஜித்துடன் வந்த அக்ஷிதா, “என்ன நீ மட்டும் வந்துருக்க, ஷவி எங்க ஸ்வரூ?” எனக் கேட்க, ஸ்வரூப்பின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

“அவள் எங்கன்னு என்கிட்ட கேக்குற… இங்க தான இருந்தா?” என்றதில், விஹானாவும் நிமிர்ந்து “நீ தான் போன் பண்ணுனன்னு வெளில போனாளே. உன்கூட வருவான்னு தான் நாங்க நினைச்சுட்டு இருந்தோம்” என்றிட,

ஸ்வரூப் “ஏய் நான் அவளுக்கு போன் பண்ணவே இல்ல. எங்க போனா? எதுல போனா?” எனப் பதற்றமும் தவிப்பும் நிறைந்தபடி துடித்தான்.

அக்ஷிதாவும் விஹானாவும் திகைத்தனர். “நாங்க பார்க்கலையே. நீ போன் பண்ணுனன்னு சொன்னதும், நாங்க எதுவும்…” என அக்ஷிதா கூறி முடிக்கும் முன், நடுங்கிய கரங்களை அடக்கியபடி அவளது எண்ணிற்கு அழைத்திட, அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருந்ததில் முதன் முறை அடிவயிற்றில் ஒரு பயப்பந்து உருண்டது ஸ்வரூப் அவ்தேஷிற்கு.

முதலும் முடிவும் நீ
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
130
+1
4
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.