Loading

பிறை 2

 

‘நம்ம கனவுல பார்த்த கண்ணும் அவரோட கண்ணும் ஒண்ணா? ஒருவேளை, நிஜத்துல பார்த்ததை கனவோட அட்டாச் பண்ணி பார்க்குறேனோ? இல்ல, கனவுல பார்த்த கண்களை அவருக்கு இருக்க மாதிரி கற்பனை பண்றேனா? ஐயோ, மண்டை குழம்பி கடைசில பைத்தியமாவே ஆகிடப்போறேன்!’ என்று சஞ்சீவனி மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க, “நீ எங்க டி பைத்தியமாவ? உன்னை இப்படி உட்கார வச்சு சுத்தி நின்னு பார்த்துட்டு இருக்கோமே, நாங்க தான் பைத்தியமாவோம்.” என்றாள் பிரத்யூஷா.

 

அப்போது தான் இறுதி வரியை சத்தமாக சொல்லி விட்டதை உணர்ந்த சஞ்சீவனி சமாளிப்பாக இளித்து வைத்தாள்.

 

“அக்கா, இன்னைக்கும் கனவா? கனவு கலைஞ்சு எழுந்ததும், கீழ இருந்தீங்களா, இல்ல பெட்ல இருந்தீங்களா?” என்று நக்கலாக கேட்டாள் ஸ்டெஃபி, அவர்களின் ‘சஷா கஃபே’யில் தோழியர் இருவருக்கும் உதவியாளினியாக இருப்பவள்.

 

“அட சும்மா இரு ஸ்டெஃபி. அக்கா… அக்கா… கனவுல வேர்உல்ஃப்பா வந்துச்சு? என்ன பண்ணுச்சு அது? உங்களை கடிச்சுடுச்சா என்ன? அது கடிச்சா நீங்களும் வேர்உல்ஃப்பா மாறிடுவீங்களோ?” என்று பயத்துடன் கேட்டாள் நஸ்ரின். இவள் ஸ்டெஃபிக்கு உதவியாளினி!

 

“பிரத்யூ, தயவுசெஞ்சு இதுங்க ரெண்டையும் அங்குட்டு இழுத்துட்டு போ. என்னை வேர்உல்ஃப்பா மாத்துற வரை விடமாட்டாங்க போல.” என்று விட்டால் அழுதுவிடுபவள் போல கூறினாள் சஞ்சீவனி.

 

“இங்க என்ன எங்க வாயை பார்த்துட்டு இருக்கீங்க? போய் கஸ்டமரை கவனிங்க.” என்று பிரத்யூஷா சத்தம் போட, “க்கும், அப்படியே கூட்டம் அலைமோதுது, நாங்க போய் கவனிக்க. இருக்குறது ஒரே ஒரு ஜோடி, அதுவும் கோல்ட் காஃபியை எதுவுமே செய்யாம கோல்டஸ்ட் காஃபியா மாத்துறது எப்படின்னு அரை மணி நேரமா ஆராய்ச்சியில இருக்காங்க. இதுல நாங்க போய் அவங்க உருகி வழியுறதை கவனிக்கணுமா?” என்று  ஸ்டெஃபி அலுத்துக்கொண்டாள்.

 

இருவரையும் சமாளித்து அனுப்பவே பிரத்யூஷா தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியதாக இருந்தது.

 

அதன்பிறகு சஞ்சீவனியை கவனித்தால், அவள் மீண்டும் தனக்குள் மூழ்கிப் போனவளாக இருந்தாள். அவளை அப்படி பார்க்க பிரத்யூஷாவிற்கு கவலையாக இருந்தது.

 

சிறு வயதிலிருந்தே, தோழியை தன் பாதுகாப்பிலேயே வைத்து வந்தவளுக்கு, ஏதோ தவறாக நடக்கப்போவதாக இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது.

 

அதன் காரணமாகவே அவளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பல கேள்விகளை கேட்டு, அதற்கு வம்படியாக பதிலையும் பெற்று கொள்கிறாள் பிரத்யூஷா.

 

இப்படியிருக்க, அவளின் பெருங்கவலையாக சமீபத்தில் இருப்பது, சஞ்சீவனி கனவைக் கண்டு பயந்து எழுவது தான்.

 

அவளின் கனவு தொல்லை கடந்த ஒரு வருடமாக தான் இருந்து வருகிறது. இந்த ஒரு வருடத்தில் எத்தனையோ முறை அவளை மருத்துவமனை அழைத்தும், வர மறுத்துவிட்டாள் சஞ்சீவனி.

 

இம்முறை கண்டிப்பாக அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று தீர்மானித்தவளாக தோழியின் தோள் மீது கைவைத்தாள் பிரத்யூஷா.

 

“சஞ்சு, என்கிட்ட எதையாவது மறைக்கிறியா?” என்று பிரத்யூஷா வினவ, ஒருநொடி அந்த தழும்பை பற்றி சொல்லி விடலாமா என்று எண்ணிய சஞ்சீவனி, தோழியின் முகத்தில் தெரிந்த கவலை ரேகையை பார்த்துவிட்டு, “ச்சேச்சே, அதெல்லாம் ஒன்னுமில்ல பிரத்யூ. ஒரு சின்ன கன்ஃப்யூஷன். அதான் யோசிச்சுட்டு இருந்தேன். நீ ஒன்னும் வொரி பண்ணிக்காத. ஐ’ம் ஆல்ரைட்.” என்று சமாளித்தாள்.

 

“அப்படி என்ன கன்ஃப்யூஷன்?” என்றவள் நினைவு வந்தவளாக, “ஆமா, அந்த போலீஸ் முன்னாடி ஏன் அப்படி பேந்த பேந்த முழிச்சுட்டு இருந்த? அவரை இதுக்கு முன்னாடி பார்த்துருக்கியா என்ன?” என்றாள் பிரத்யூஷா.

 

மீண்டும் அவன் நினைவை தோழியே ஏற்படுத்திவிட, மிகவும் சிரமப்பட்டு அதில் மூழ்கிவிடாமல் இருக்க முயன்றாள் சஞ்சீவனி.

 

பிரத்யுஷாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சமாளிக்க பார்க்க, “இப்போ இதுக்கு உண்மையை தான் சொல்லணும் சஞ்சு.” என்று கறாராக கூறினாள் பிரத்யூஷா.

 

அதற்கு மேல் மறைக்க விரும்பாதவளாக, அவள் கனவில் கண்ட அந்த பழுப்பு நிறக்கண்கள் அப்படியே விபத்து நடந்த இடத்தில் பார்த்த காவல்காரனுக்கு இருந்ததை பிரத்யூஷாவிடம் விலாவரியாக கூறினாள் சஞ்சீவனி.

 

“ப்பூ, இவ்ளோ தானா? நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்!” என்று பிரத்யூஷா சாதாரணமாக கூற, “பிரத்யூ, என்ன இவ்ளோ சாதாரணமா சொல்லிட்ட? நான் இங்க எவ்ளோ குழப்பத்துல இருக்கேன் தெரியுமா?” என்றாள் சஞ்சீவனி.

 

“அட சஞ்சு ரிலாக்ஸா இரு. அந்த கனவுனால ரொம்ப பயந்துருப்ப போல, அதான் நீ நேர்ல பார்த்த ஒருத்தரை கனவோட கம்பேர் பண்ணி பார்த்துருக்க.” என்று கூறிய தோழியை இடைமறித்தவள், “அப்போ நான் கனவுலயிருந்து முழிச்சதும் முதல்ல பார்த்தது உன்னை தான. அப்போ உன் கண்ணு தான ஹேசல் கலர்ல தெரிஞ்சுருக்கணும்.” என்றாள்.

 

“நான் உனக்கு ரொம்ப பார்த்து பழகுன ஆளு சஞ்சு. புதுசா ஒருத்தரை பார்த்ததும், அதுவும் அவருக்கும் ஹேசல் ஐஸ் இருந்ததும் உன்னை அப்படி கம்பேர் பண்ண வச்சுருக்கலாம். ஸீ, நீ கனவுல வேர்உல்ஃபை மனுஷ வடிவதுத்துல பார்க்கவே இல்ல. அப்பறம் எப்படி அவரு கூட லிங்க் பண்ற?” என்றாள் பிரத்யூஷா.

 

“நீ சொல்றதும் சரி தான். ஆனா, நான் ஏன் அப்படி யோசிச்சேன்னு தான் தெரியலையே!” என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே சஞ்சீவனி வந்து நிற்க, “எம்மா தாயே, ஆளை விடு. நீ தனியாவே புலம்பிக்கோ.” என்று பிரத்யூஷா அங்கிருந்து நகர முற்பட, அவளின் கைப்பிடித்து தடுத்த சஞ்சீவனியோ, “சரி, நீ ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டதால, இப்போதைக்கு அதை பத்தி யோசிக்காம வேலையை பார்க்கலாம்னு இருக்கேன்.” என்று கண்ணடித்தாள்.

 

அவள் நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன?

 

அவளை அந்நினைவிலிருந்து  வெளியே வரவிடக்கூடாது என்று விதி கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் போலும், அவர்களின் ‘கஃபே’ கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் சர்வஜனன்.

 

*****

 

சில மணி நேரங்களுக்கு முன்னர்…

 

தன் மீது மோதிய சஞ்சீவனியை கண்டுகொள்ளவெல்லாம் சர்வஜனனிற்கு அவகாசம் இல்லை. இவ்வளவு ஏன், அந்த வழக்கின் தீவிரத்தில், அவளை தற்காலிகமாக மறந்து போனான் என்றே கூறலாம்.

 

சரவணனிடம் அந்த காலடி தடங்களை ஆராய சொல்லியவன் மேலிடத்திற்கும் தகவலை சேர்ப்பித்தான்.

 

அதன்பிறகு இறந்தவரின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, சற்று இலகுவாக அமர்ந்தவனின் அலைபேசி ஒலியெழுப்பி அவனை கவனிக்க சொன்னது.

 

அவனுக்கு தற்சமயம் நெருங்கிய உறவென்று இருக்கும் அவன் தங்கை ரோஷினி தான் அழைத்திருந்தாள்.

 

இதுவரை எவருக்கும் காட்டிராத மென்புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்றான் சர்வஜனன்.

 

“ஹலோ அண்ணா, என்ன பண்ணிட்டு இருக்க? சாப்பிட்டியா?” என்று தங்கையின் குரல் உற்சாகமாக ஒலிக்க, அப்போது தான் உணவே உண்ணவில்லை என்ற நினைவு எழுந்தது.

 

அதைக் கூறினால் கண்டிப்பாக அவள் கோபப்படுவாள் என்பதை அறிந்து, பேச்சை திசை திருப்ப முயன்றான்.

 

“ரோஷி மா, என்ன ஜாலியா பேசுற? உன் புருஷன் பக்கத்துல இல்லயா?” என்று சர்வஜனன் வினவ, “இங்க தான் மச்சான் இருக்கேன்.” என்றான் ரோஷினியின் கணவன் ரோஹித்.

 

அதற்கு மேல் இருவரையும் பேச விடாதவளாக, “அண்ணா, இந்த முறை ஊருக்கு வரப்போ நான் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுவேன். என் குழந்தை பிறக்குறப்போ மாமாவோட அத்தையும் இருக்கணும்.” என்று கூற, பேச்சை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட, சற்று தீவிரமான குரலில், “ரோஹித், கொஞ்சம் அஃபிஷியலா பேசணும்.” என்றான்.

 

எப்போதும் நடக்கும் நிகழ்வென்பதால், “அப்போ நீங்க பேசுங்க, நான் தோசை சுடப்போறேன்.” என்று கழண்டு கொண்டாள் ரோஷினி.

 

அவள் சென்றதும், “சொல்லு சர்வா, என்கிட்ட தனியா ஏதாவது சொல்லணுமா?” என்று வினவ, மச்சானாகிப் போன நண்பனின் புரிதலில் அவனை மனதிற்குள் மெச்சிக் கொண்டான். “இப்போ ரோஷினி இங்க வரது சேஃப் இல்ல ரோஹித்.” என்றான்.

 

“என்னடா இப்போ இப்படி சொல்ற? அவ ஒருவாரமா ஊருக்கு போறேன். அண்ணனோட இருக்கப்போறேன்னு ரொம்ப ஆர்வமா இருக்கா. இப்போ போய், ‘நீ போகக்கூடாது’ன்னு எப்படி சொல்ல?” என்று ஆதர்ஷ கணவனாக ரோஷித் சங்கடப்பட, “இங்க இருக்க சிஷுவேஷன் அப்படி ரோஹித்.” என்ற சர்வஜனன் நடந்ததை அவனுக்கு விளக்கினான்.

 

“அப்போ இது நார்மல் அனிமல் அட்டாக் இல்லன்னு நீ சந்தேகப்படுறியா சர்வா?” என்று ரோஹித் வினவ, “அஃப்கோர்ஸ்டா, இஃப் பாசிபில், நீ மட்டும் வா. இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்.” என்றவன், தங்கையின் நிலையை அப்போது தான் உணர்ந்தவனாக, “சாரி டா, இந்த சிஷுவேஷன்ல உன்னை இங்க அலைய விடுறதுக்கு.” என்று இழுத்தான்.

 

“சில் மேன். அதெல்லாம் உன் தங்கச்சி ஒரு நாளைக்கு ஒன்னும் கரைஞ்சுட மாட்டா. நீ ஃபிரீயா விடு.” என்று நண்பனிடம் கூறியவன், அடுத்த நாள் வருவதாக வாக்களித்தான்.

 

இருவரும் அழைப்பை துண்டிக்கும் நேரம், அலைபேசியை பிடுங்கிய ரோஷினி, “இப்பவே போய் சாப்பிட்டுட்டு வேலையை பாரு அண்ணா.” என்று செல்ல கட்டளையை விதித்தாள்.

 

தங்கையின் கட்டளையை மீறாதவனாக சஷாவிற்குள் நுழைந்தான். அதுவும், காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் கஃபே என்பதாலும் தான்!

 

அவன் உள்ளே நுழைந்த சமயம், பிரத்யூஷாவிடம் வம்பு வளர்த்து, அவள் வெளியே விரட்டி விட, சஞ்சீவனியும் சிரித்துக் கொண்டே உள்ளறையிலிருந்து வெளியே வந்தாள்.

 

அப்போது, “எக்ஸ்க்யூஸ் மீ, ஒன் வென்னிலா லாட்டே அண்ட் ஒன் கோல்ட் காஃபி பிளீஸ்.” என்ற கம்பீரக்குரல் அவளை தடுத்து நிறுத்த, அக்குரல் நன்கு பரிச்சயப்பட்டது போல பட்டென்று அவளின் மூளைக்கு தெரிந்து போனது வந்தது அவனென்று.

 

அங்கு வேறு யாரும் இல்லாததால், அவனை கவனிக்க வேண்டிய பொறுப்பும் அவளையே சேர, ஒருவித பதட்டத்துடன், அவனை நிமிர்ந்தும் பார்க்காமல், “டென் மினிட்ஸ் சார்.” என்றாள்.

 

அவள் சாதாரணமாக இருந்திருந்தால், அவனும் கடந்து சென்றிருப்பானோ என்னவோ. அவளின் பதட்டமான உடல்மொழியை கண்டு கொண்டவன், சிறு புருவச்சுழிப்பை மட்டும் வெளிப்படுத்தி, “இட்ஸ் ஓகே. ஐ வில் வெயிட்.” என்று அவள் மறுமொழி கொடுப்பதற்கு இடம் கொடுக்காதவனாக, அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு அதே இடத்தில் நின்றான்.

 

‘ஐயையோ, இங்கேயே நிக்க போறானா!’ என்று அதிர்ந்தவள், அவனிடம் அதை சொல்லவும் முடியாமல், தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

 

மனதிற்குள் பலவித கேள்விகள் எழ, அதற்கு இடையே கைகள் அதன் வேலையை சரியாக செய்து வந்தன.

 

அவள் கூறிய பத்து நிமிடங்களில் இரு பானங்களையும் தயாரித்தவள், அப்போதும் குனிந்த தலை நிமிராமல் அவனிடம் நீட்ட, அவனோ அதை வாங்காமல் இருந்தான்.

 

‘என்னடா இது?’ என்ற கேள்வியுடன் அனிச்சை செயலாக அவனை நிமிர்ந்து பார்க்க, அதற்காகவே காத்திருந்ததை போல, அவள் கையிலிருந்ததை வாங்கிக் கொண்டான்.

 

அப்போது தான் அவனை நேருக்கு நேர் பார்த்ததை உணர்ந்தவள், சட்டென்று டிஸ்யூ பேப்பரை அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

அவள் தன்னை நிமிர்ந்து பார்த்ததிலிருந்து, அங்கிருந்து வேகமாக நகர்ந்தது வரை தன் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தவனுக்கு அவளை பார்த்த நினைவு எழ, ‘இவகிட்ட ஏதோ வித்தியாசமா தெரியுது. அப்பவும் சரி, இப்பவும் சரி, எதுக்கு என்னை பார்த்து பயந்து ஓடனும்? ஹ்ம்ம், இதையும் என்னன்னு கண்டுபிடிக்குறேன்.’ என்று சொல்லிக் கொண்டான்.

 

அவனிடமிருந்து தப்பித்து சென்றவளோ, ‘என்னை தேடி தான் வந்துருப்பானோ?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

 

*****

 

சரியாக சர்வஜனன் தன் வயிற்று தேவையை கவனித்துவிட்டு வெளியே வந்த சமயம், அவனுக்கு அந்த தகவல் வந்தது.

 

பிரேதப்பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இறந்தவரின் உடல் காணவில்லை என்பது தான் அந்த தகவல்!

 

மாயம் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்