Loading

பிறை 3

 

அவ்வப்போது பெய்து வரும் மழையினால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், இடையிடையே சூரியன் தன் இருப்பை காட்டிக் கொண்டு தான் இருந்தது.

 

ஆனால், அந்த பகலையும் இரவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர் போலும் அந்த கட்டிடத்தின் வடிவமைப்பாளர்கள். இதை, அங்கு இருப்பவர்கள் இரவினை மட்டுமே விரும்புபவர் என்றும் சொல்லலாமோ!

 

அந்த இருட்டில் எதுவுமே கண்களுக்கு தெளிவாக புலப்படவில்லை, அந்த கடிகாரத்தை தவிர.

 

அதைக் கட்டியிருந்தவனோ, அந்த இடத்தின் மத்தியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான். அந்த கடிகாரத்தின் பலனாக கிட்டிய சிறு வெளிச்சம் கூட அவனை அத்தனை எளிதாக அடையாளம் காட்டவில்லை.

 

அப்போது அவனருகே வந்த ஒருவன், “பாஸ், பிளான் சக்ஸஸ். மார்ச்சுவரிலயிருந்து பாடியை தூக்கிட்டாங்க.” என்றான்.

 

பதிலுக்கு அந்த பாஸானவனோ அவனை முறைத்திருக்க வேண்டும் என்பது அவனின் பம்மலிலேயே தெரிந்தது.

 

“நீங்க பிளானை சொதப்பாம ஒழுங்கா ஃபாலோ பண்ணியிருந்தா, இப்போ இப்படி மார்ச்சுவரிக்கு அலைய வேண்டிய அவசியம் இருந்திருக்காது, யூ யூஸ்லெஸ் பா****. இப்போ பாரு போலீஸ் சந்தேகப்பட ஆரம்பிச்சுருப்பாங்க.” என்று கத்தினான் பாஸ்.

 

“அது… அந்த நேரத்துல அங்க மனுஷங்க நடமாட்டம் அதிகமா இருக்கும்னு…” என்று காரணம் சொல்ல வந்தவனை தடுத்தவன், “இப்படி ஒவ்வொரு தப்புக்கும் காரணம் எக்கச்சக்கமா சொல்லலாம். ஆனா, இனி இன்னொரு முறை காரணம் சொல்ல உயிரோட இருப்போமான்னு யோசிக்கணும்!” என்று பாஸ் கூற, எதிரிலிருந்தவனுக்கோ பயத்தில் கால்கள் வெளிப்படையாக நடுங்கத் துவங்கின.

 

அப்போது அவனைக் காப்பது போல, பயங்கர அலறல் சத்தம் ஒன்று கேட்டது.

 

“ப்ச், இன்னும் எதுக்கு கத்திட்டு இருக்கான் அந்த *****?” என்று பாஸ் எரிச்சலில் வினவ, “பாஸ், அவன் அப்போலயிருந்து அவனை கொல்ல சொல்லி கத்திட்டே இருக்கான். நாங்க தான், அப்பப்போ ஊசி போட்டு அவனை மயக்கத்துலயே வச்சுருக்கோம்.” என்றான்.

 

“ஓஹ், கொல்ல சொல்லி சொல்றானா? ஹாஹா, அவனை நானே சமாதானப்படுத்துறேன். இங்க கூட்டிட்டு வா அவனை.” என்று கேலிச்சிரிப்புடன் பாஸ் கூற, தன் தலை தப்பிவிட்ட நிம்மதியில் வேகமாக சென்றான் அந்த பணியாளன்.

 

கைகளையும் கால்களையும் சங்கிலியால் கட்டப்பட்டு, இருவரால் இழுத்து வரப்பட்டான் அவன். மேலாடை இல்லாமல், கால்சராயும் பல இடங்களில் கிழிந்த நிலையில் பரிதாபமாக இருந்தான். ஆனால், அவன் வாயை சுற்றிலும் படிந்திருந்த காய்ந்த இரத்தத்தடம் வேறு கதை கூறியது.

 

அவனைக் கண்டதும் விவகார சிரிப்புடன் அவனை நெருங்கிய பாஸ், “அட ராகேஷ் சார், இடம் எல்லாம் உங்களுக்கு வசதியா இருக்கா?” என்று வினவியவன், அவன் கையிலும் காலிலும் இருந்த சங்கிலியை பார்த்து போலியாக வருந்தியபடி, “அட யாரது உங்களை சங்கிலியால கட்டிப்போட்டது?” என்றான்.

 

அதற்கு சிரித்த மற்ற இருவரையும் நோக்கி, “இடியட்ஸ், இவரு யாருன்னு தெரியுமா? இந்த ஏரியால மிகப்பெரிய பிஸினஸ்மேன்.” என்றவன், இப்போது அந்த ராகேஷிடம் திரும்பி, “அதுமட்டுமில்லாம, என்னோட இத்தனை வருஷ கனவை நனவாக்க எனக்கு உதவியா இருக்கப்போறவர்.” என்று இதழை வளைத்தான்.

 

ராகேஷோ, “பிளீஸ் பிளீஸ் ஜி, என்னைக் கொன்னுடுங்க. என்னால இப்படி… இல்ல இப்படி என்னால வாழ முடியாது. இது நரக வேதனை! ஐயோ, நான் என்ன பண்ணிட்டேன்! ஆஹ், உடம்பெல்லாம் வலிக்குதே.” என்று கதறினான்.

 

அவன் கத்தியதை ஒரு புருவச்சுழிப்புடன் பார்த்த அந்த பாஸ், எரிச்சலில் அவன் சங்கிலியை பிடித்து அருகில் இழுத்து, “உஷ், இப்போ என்ன பண்ணிட்டோம்னு இப்படி கத்திட்டு இருக்க? என்னத்துக்கு வாழ்றோம்னே தெரியாம வாழ்ந்தியே ஒரு வாழ்க்கை, அதை எடுத்துட்டு இப்போ வாழ்றதுக்கான காரணத்தை உனக்கு கொடுத்துருக்கேன் ராகேஷ். நியாயமா நீ எனக்கு விஸ்வாசமா தான இருக்கணும்?” என்று கூறி சிரித்தவன், “அப்பறம் என்ன காரணம்னு தெரியுமா? என்னோட அல்டிமேட் எய்முக்கு ஹெல்ப் பண்ணி, எனக்கு சேவை செய்றது.” என்றவன், இப்போது அந்த கட்டிடமே அதிரும்படி நகைத்தான்.

 

“சீக்கிரமே நான் நினைச்சது நடக்கும். நடத்திக் காட்டுவேன். அதுக்கு குறுக்க யாரு வந்தாலும் தடமே இல்லாம அழிச்சுட்டு போயிட்டே இருப்பேன்.” என்று கர்ஜித்தான். அவனின் கர்ஜனையில் அவனுடன் இருந்தவர்களே பயந்து தான் போயினர்.

 

*****

 

லாட்டேவை பருகிக் கொண்டே அங்கு வேலை செய்யும் சாக்கில் சுற்றித் திரியும் சஞ்சீவனியை பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான் சர்வஜனன். அவனின் பார்வையின் காரணம் அவனிற்கே சரிவர புரியாத போது பெண்ணவளுக்கு புரிந்து விடுமா என்ன?

 

அவளோ பயத்துடனும் பதட்டத்துடனும் தப்பும் தவறுமாக வேலை செய்து, அதற்கு பிரத்யூஷாவிடம் வேறு வாங்கிக்கட்டிக் கொண்டாள்.

 

‘இவன் இங்கிருந்து கிளம்புனா தான் என்னவாம்?’ என்று நினைத்த உடனே கடவுளும் ‘ததாஸ்து’ கூறியிருப்பார் போலும், அவன் லாட்டேவை பருகி முடித்துவிட்டு கட்டணம் செலுத்த வந்து கொண்டிருந்தான்.

 

‘எப்பா சாமி கிளம்பிட்டான்!’ என்று சந்தோஷப்பட, அதற்கு வேட்டு வைப்பது போல, கவுண்டரில் நின்றிருந்த பிரத்யூஷாவிடம், சஞ்சீவனியை நோக்கி கைகாட்டி ஏதோ கூறிவிட்டே சென்றான்.

 

அதற்கு பிரத்யூஷாவும் இவளை ஒரு மாதிரி பார்க்க, ‘அச்சோ, என்ன சொல்லிட்டு போனான் அந்த ஹேசல் ஐக்காரன்?’ என்று மனதிற்குள் நினைத்தவள், அங்கிருந்து நகர எத்தனிக்க, அவளருகே வந்த பிரத்யூஷா, “என்னடி நடக்குது இங்க?” என்று கூர்ப்பார்வையுடன் வினவினாள்.

 

“ஹா, என்ன நடக்குது? ஒன்னும் நடக்கலையே!” என்று சாதாரணமாக கூறுவது போல கூறிவிட்டு திரும்பி நடக்க முயற்சிக்க, அவளை தடுத்த பிரத்யூஷா, “அந்த போலீஸ்காரர் கிட்ட என்ன சொன்ன? அவரு வந்து ‘உங்க சர்வீஸ் நல்லா இருக்கு’ன்னு உன்னைப் பத்தி பாராட்டு பத்திரம் வாசிச்சுட்டு போறாரு!” என்றாள் பிரத்யூஷா.

 

“பாராட்டுனாரா?” என்று சந்தேகத்துடன் வினவிய சஞ்சீவனி எதேச்சையாக ஜன்னல் வழியே வெளியே பார்க்க, அங்கு அவளையே மர்மப்புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சர்வஜனன்.

 

அவன் பார்வை கண்டு சட்டென்று திரும்பிக் கொண்டவள், பிரத்யூஷாவிடம், “அப்படியெல்லாம் ஒன்னும் பண்ணல பிரத்யூ.” என்று முனகிவிட்டு அங்கிருந்து விரைந்து சென்று விட்டாள்.

 

அவளின் செயல்கள் அனைத்தையும் ஜன்னல் வழியே பார்த்த சர்வஜனனோ, லேசான புன்னகையுடன் அங்கிருந்து செல்லும்போது தான் அவனுக்கு அந்த அலைபேசி அழைப்பு வந்தது; பிரேதப்பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட உடல் காணவில்லை என்ற தகவல் வந்தது.

 

தகவல் கிடைத்த அடுத்த நொடி பிணவறை நோக்கி விரைந்தான் சர்வஜனன்.

 

அங்கு சென்றதும், கையை பிசைந்தபடி நின்ற சரவணனை, “உங்களை எதுக்கு இங்க அனுப்புனேன் சரவணன்?” என்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வினவினான் சர்வஜனன்.

 

“அது சார்…” என்று சரவணன் இழுக்க, “என்ன ஏதாவது காரணம் சொல்லப் போறீங்களா? நீங்க என்ன காரணம் சொன்னாலும், நடந்தது மாறப்போறது இல்ல.” என்று பெருமூச்சு விட்டவன், “பாடியை தூக்கிட்டு போனப்போ ஒருத்தர் கூடவா ஸ்பாட்ல இல்ல?” என்று கேட்டான் சர்வஜனன்.

 

“சார், நம்ம கான்ஸ்டெபில் பழனியப்பனை அடிச்சு போட்டு தூக்கிட்டு போயிருக்காங்க.” என்று சரவணன் கூற, “வாரே வா, போலீஸையே அடிச்சு போட்டு தூக்கிட்டு போயிருக்காங்கன்னு வெளிய தெரிஞ்சா ரொம்ப பெருமைல நமக்கு!” என்றவன் கண்களை மூடி கோபத்தை கட்டுப்படுத்தி, அதே நிலையில், “என் மூஞ்சியவே எதுக்கு பார்த்துட்டு இருக்கீங்க? போய் வேற ஏதாவது லீட்ஸ் கிடைக்குதான்னு பாருங்க. வெளிய விஷயம் லீக்காகுறதுக்குள்ள பாடி கிடைச்சாகனும். க்விக்!” என்று மற்றவனை விரட்டினான் சர்வஜனன்.

 

அன்றைய நாள் சற்று நேரம் கூட அமைதியை அவனுக்கு பரிசளிக்க விரும்பவில்லை போலும். அதன்பிறகு அழைப்பு மேல் அழைப்பு வந்து அவனை அலைகளிக்க, சஞ்சீவனியாவது அவள் அலைப்புறுதலுக்கு அர்த்தமாவது என்று அவளை மறந்து போனான் சர்வஜனன்.

 

*****

 

அதேசமயம் அந்த இருள் சூழ்ந்த இடத்தில், அதன் சொந்தக்காரனுக்கு வேலை, இல்லை இல்லை, சேவை செய்பவர்கள் சர்வஜனன் மற்றும் அவனின் குழுவினர் தீவிரமாக தேடி வரும் உடலை அவர்களின் பாஸின் முன்பு போட்டனர்.

 

“பாஸ், பாடியை தூக்கியாச்சு.” என்று ஒருவன் பெருமையாக கூற, முறைத்தே அவனுக்கு சாவு பயத்தை காட்டினான் அந்த பாஸ்.

 

பின்பு, அங்கிருந்தவர்களை பார்த்து, “யூஸ்லெஸ்!” என்று திட்டியவன், “லிங்கா எப்போ இங்க வரான்? அவனில்லாம எனக்கு ஒரு கையே உடைஞ்ச மாதிரி இருக்கு.” என்றான்.

 

“பாஸ், சின்ன பாஸ் வரதுக்கு ஒரு வாரம் ஆகும்னு சொன்னாரு.” என்று மற்றொருவன் பவ்யமாக கூற, “ஹ்ம்ம், அவன் வந்ததும் அவனோட ஸ்டைல்ல உங்களை டிரெயின் பண்ண சொல்லணும்.” என்று பாஸ் கூற, அங்கிருந்தவர்களின் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் துவங்கியது.

 

பாஸோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தன்முன் கிடந்த உடலை சுற்றி வந்து பார்த்துவிட்டு, “பரவால அந்த ராகேஷ், நல்ல திடகாத்திரமா இருக்குறவனை தான் சூஸ் பண்ணியிருக்கான். ஹ்ம்ம், குட் சாய்ஸ்!” என்றவன் பட்டென்று தன் இடது கை கட்டை விரலை கீறி அதிலிருந்து வடிந்த இரத்தத்தை இறந்து கிடந்தவனின் வாய்க்குள் வழிய விட்டான்.

 

பின் அங்கிருந்தவர்களிடம், “இவனையும் பெட்டில போட்டு பூட்டி வைங்க. பூட்டு ஒழுங்கா இருக்கான்னு ஒன்னுக்கு பல முறை செக் பண்ணிக்கோங்க. போன முறை மாதிரி பூட்டை உடைச்சு தப்பிச்சு போயிட்டான்னு சொன்னீங்க, போனவனுக்கு பதிலா உங்களை உள்ள போட்டு பூட்டிடுவேன் ஜாக்கிரதை.” என்று கட்டளையிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான் அந்த பாஸ்.

 

மற்றவர்களும் தங்களின் விதியை நொந்தபடியே இறந்தவனின் உடலை தூக்கியபடி அந்த தளத்திற்கு கீழே இருந்த ரகசிய தளத்திற்குள் நுழைந்தனர்.

 

அங்கு வரிசையாக நூற்றுக்கணக்கான பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் காலியாக இருந்த பெட்டிக்குள் அந்த உடலை வைத்து பூட்டிவிட்டு அவர்களின் பாஸ் சொன்னது போல ஒன்றுக்கு பலமுறை சரி பார்த்துவிட்டு கிளம்ப எத்தனிக்க, திடீரென்று பெட்டி படபடவென்று அடிக்கும் சத்தமும் அதற்கு போட்டியாக உறுமும் சத்தமும் கேட்டு, அவர்களின் இதயத்தை பலமாக துடிக்கச் செய்தது.

 

சிறிது நேரத்திலேயே அந்த சத்தம் பல திசைகளிலிருந்தும் கேட்க, மற்றவர்களோ அதன் தாக்கத்திலிருந்து வெளிவந்தவர்களாக, இது எப்போதும் நடக்கும் நிகழ்வு தான் என்பது போல அங்கிருந்து வெளிவந்தனர்.

 

*****

 

தேய்பிறை இரவு… நிலா அதன் முழு வடிவில் தோன்றாவிட்டாலும், வெளிச்சத்தை கக்கி இருட்டை போக்க முயன்று கொண்டு தான் இருந்தது.

 

படுக்கப்போகும் முன்னர் எப்போதும் போல, ‘இன்னைக்கு கனவுலயிருந்து கத்தி எழக்கூடாது!’ என்ற வேண்டுதலுடன் சஞ்சீவனி படுக்க, பிரத்யூஷாவோ, “நீயும் டெயிலி வேண்டிட்டு தான் இருக்க. ஆனா, அதுக்கான பலன் என்னவோ ஜீரோ தான்!” என்று கூற, “க்கும், இன்னைக்கு பாரு நான் கத்தவே மாட்டேன்.” என்று உறுதியளித்தாள் சஞ்சீவனி.

 

“ஆஹான், பார்ப்போம் பார்ப்போம்!” என்றபடி பிரத்யூஷா கண்களை மூடினாள்.

 

என்னதான் தோழியிடம் வீராப்பாக கூறிவிட்டாலும், சஞ்சீவனியின் மனமோ திக்திக்கென்று அடித்துக் கொண்டது உண்மையே. அதே பயத்துடன் அவள் கண்களை மூட, எங்கு முடிந்ததோ அங்கிருந்தே துவங்கியது அவளின் கனவு!

 

பழுப்பு நிறக்கண்களும், இரத்தம் படிந்த பற்களும் என கோரமாக காட்சியளித்த அந்த ஓநாய் உருவம் மெல்ல மெல்ல மனித உருவமாக மாற, அதை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள் சஞ்சீவனி.

 

தோற்றம் மாறினாலும், கண்கள் மட்டும் மாறவில்லை. அதே கண்கள்!

 

எதிரே நின்றிருந்தவனின் உருண்டு திரண்ட தோள்களும், வலிய புஜங்களும் அவளின் வாயை பிளக்கச்செய்ய, அரையாடை கூட முழுமையாக இல்லாத அவனின் கீழ்பாகமோ நாணம் கொண்டு கண்களை மூடச்செய்தது.

 

சில மணித்துளிகள் சத்தமில்லாமல் கழிய, சஞ்சீவனிக்கோ இதயம் துடிக்கும் சத்தம் நன்றாகவே கேட்டது. அதனுடன் இன்னொரு இதயத்துடிப்பும் கேட்க, குழம்பியவளுக்கு விடையாக முகத்தில் மோதியது சூடான மூச்சுக்காற்று.

 

தன் மூச்சுக்காற்றை அவள் மீது படரச்செய்து அவள் மூச்சுக்காற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்த மாயவனின் கரங்கள் பாவையை தூக்கிக்கொள்ள, அவளோ எவ்வித எதிர்வினையும் புரிய முடியாத நிலையில் இருந்தாள்.

 

இப்போதும் கண்களை மூடி இருந்தவளின் நாசியை பூக்களின் நறுமணம் தீண்ட, அவற்றைக் காணும் ஆர்வத்தில் லேசாக விழிகளை விரித்து பார்த்தவளின் வதனமோ, அங்கு பூத்துக்குலுங்கும் மலர்களின் வண்ணங்களுக்கு போட்டி போடும் விதத்தில் ஒளி வீசியது.

 

அதில் கவனத்தை வைத்திருந்தவளிற்கு, தான் யாரின் கரங்களுக்குள் இருக்கிறோம் என்பதெல்லாம் நினைவிலேயே இல்லை. செல்லும் வழியெல்லாம் அழகாக பூத்திருக்கும் மலர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவளின் மேனி, பஞ்சனையின் மென்மையை உணர, அப்போது தான் அவளுக்கு தான் இருக்கும் சூழ்நிலை நினைவுக்கு வந்தது.

 

தன் ரசனை என்னும் கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு பார்த்தவளுக்கு அந்த கட்டுமஸ்தான உடல் அருகே தெரிய, உடனே அங்கிருந்து தப்பித்து எழ முயன்றாள்.

 

அவள் முயற்சி அவனிடம் பலிக்குமா என்ன?

 

ஒரே பிடியில் மீண்டும் அந்த பஞ்சனையிலேயே விழச்செய்தவன், அவளின் பார்வையோடு தன் பார்வையை இணையச் செய்தான்.

 

இப்போது தான் அவன் முகத்தை முழுமையாக காண்கிறாள் பெண்ணவள்.

 

அவன் அவனே! சர்வஜனன்!

 

அதிர்ந்த பாவனையை முகத்தில் ஏற்றியபடி, “ச…ர்…வ…ஜ…ன…ன்…” என்று ஒவ்வொரு எழுத்தாக அவள் உச்சரிக்க, “ஆமா வனி, உன்னோட சர்வா தான், இந்த சர்வஜனன்!” என்று கூறியவன், அவள் மீது படர ஆரம்பித்தான்.

 

ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவளுக்கு, அவன் செயல் மேலும் பதட்டத்தை தர, எப்படி தப்பிப்பது என்று தெரியாமல், கண்களை மூடி, தன்மீது உலா வரும் அவன் கைகளுக்கு அணைகட்டி… ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு ஒரு வேகத்துடன் எழுந்து கண்களை திறக்க, அவள் இருந்ததோ அவளின் அறை!

 

“ச்சீ இப்படி ஒரு கனவா!” என்று மெல்ல முணுமுணுத்தவளுக்கு, இன்னமும் அவன் கரங்களின் வெம்மையை உணர்வது போன்றே தோன்ற, பரபரவென்று தன் மேனியை தேய்த்துக் கொண்டாள்.

 

அந்த சத்தத்தில், அரை தூக்கத்திலிருந்த பிரத்யூஷா, “இன்னைக்கும் ஆரம்பிச்சுட்டியா? சத்தம் போடாம படுத்து தூங்கு சஞ்சு.” என்று உளறிவிட்டு தன் தூக்கத்தை தொடர, சஞ்சீவனியோ, “இனி எங்க தூங்குறது?” என்று ஒரு பெருமூச்சுடன், தான் எப்போதும் நாடும் ஓவியத்தின் துணையை இப்போதும் நாடினாள்.

 

அவள் கைவண்ணத்தில் அழகாக உருவானது பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்த நந்தவனத்தின் ஓவியம்.

 

சஞ்சீவனியை கனவிலும் தொல்லை செய்தவனும் அங்கு தூக்கத்தை தொலைத்து தான் இருந்தான், அவன் கைகளில் கிடைத்த மற்றொரு வழக்கினால்!

 

மாயம் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்