Loading

ஸ்வரூப் அவ்தேஷ், மூச்சை இழுத்துப் பிடித்தபடி நடக்க, உத்ஷவிக்கோ அவனது தீண்டல் கூட உறைக்கவில்லை போலும்!

ரத்தக்கட்டு ஏற்பட்ட காலை அவ்வப்பொழுது பார்த்துக்கொண்டவள், அவனுடனே மெதுவாக நடந்து வந்தாள்.

அடிபட்ட போது கூட வலி தெரியவில்லை. இப்போது நடக்கும் போது, காலில் சுள்ளென்று வலி எழ, ஒரு காலை ஊண்டாமல் நின்றவனிடம்,
“வலிக்குதா? அடிபட்டப்பவே நல்லா தேய்ச்சு விட்டு இருக்கணும் ஸ்வரூ. ரத்தக்கட்டு பேண்ட் எய்ட் வேற இல்ல. இங்க ஹோட்டல்ல கேட்டுப் பார்க்கலாம், பர்ஸ்ட் எய்ட் கிட்ல வச்சு இருக்காங்களான்னு. என்னைப் பிடிச்சுட்டே நட.” என்றவாறு, அவளும் அவனை அணைத்தவாறு பிடித்துக் கொண்டாள்.

மழை சுத்தமாக நின்று விட்டதில், குடையை வாங்கி மடக்கி வைத்தாள்.

“என் வெயிட்ட உன் மேல போட்டா உன்னால நடக்க முடியாது விஷா. ஐ கேன் மேனேஜ்.” என்றான் அவளது அக்கறையை ரசித்தவாறு.

“அதெல்லாம் நடந்துடுவேன். நீ காலை ஸ்ட்ரெய்ன் பண்ணாத இன்னும் வீங்கிட போகுது.” என்றவள், அவனைத் தாங்கி நடக்க எத்தனிக்க, பாவம் அவளால் அடுத்த அடி கூட எடுத்து வைக்க இயலவில்லை.

சட்டென நின்று, அவன் வயிற்றைக் கதவு தட்டுவது போல தட்டிப் பார்த்தவளைப் புரியாமல் நோக்கியவன், “என்னடி செய்ற?” எனக் கேட்டதில்,

“இல்ல நீ சதையும் இரத்தமும் உள்ள மனுஷன் தானா. இல்ல இரும்புல செஞ்ச டைனோசரான்னு செக் பண்ணுனேன். என்ன ஒரு 250 கிலோ இருப்பியா?” எனப் பரிதாபமாகக் கேட்க, அவன் வாய் விட்டு சிரித்து விட்டான்.

“இல்ல அதை விட டபிள்” என நக்கலாக சிரிக்க, “ஆத்தாடி…! உனக்கு ஹெல்ப் பண்ண நினைச்சா, என் ஷோல்டர் கழன்றும் போல… அப்பறம் என் பாடியை தூக்கிட்டு போக நாலு பேர் வேணும்.” என எப்போதும் போல விளையாட்டாய் பேசிட, அவள் வாயில் சப்பென அடித்தான்.

“எதுல விளையாட்டுப் பேச்சு பேசுறதுன்னு விவஸ்தை இல்லையா உனக்கு? போடி முதல்ல.” என உஷ்ணத்துடன் கண்டித்து மெல்ல தள்ளி விட, அவள் இரண்டடி பின்னால் நகன்று விட்டாள்.

அந்நேரம் சஜித்தும் அக்ஷிதாவும் அங்கு வந்து விட்டனர். “இப்ப என்ன சொல்லிட்டேன்னு அடிச்ச.” என வாயை தேய்த்துக் கொண்டவள் சண்டைக்கு நிற்க,

அக்ஷிதா தான் “அடடா ஆரம்புச்சுட்டீங்களா? எப்ப பார்த்தாலும் ஆர்கியூவும் சண்டையுமா போட்டு எங்களை எண்டர்டெய்ன் செஞ்சுக்கிட்டே இருக்கீங்களே. உங்களுக்கு போர் அடிக்காதா?” என இருவரையும் வார,

ஸ்வரூப் கடுப்பாகி, “ஏய் அவளைக் கூட்டிட்டு போய் தொலை” என்று அக்ஷிதாவிடம் பாய்ந்தான்.

‘நான் என்ன செஞ்சேன்?’ என்ற ரீதியில் விழித்த அக்ஷிதா, உர்ரென்று நின்ற உத்ஷவியை இழுத்துக்கொண்டுச் செல்ல, சஜித் தான், “என்ன தான்டா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்.” என்றான்.

அதற்கு பதில் கூறாமல் சஜித்தின் உதவியுடன் அறைக்கு வந்து விட்டான்.

கட்டிலில் வந்து தொம்மென விழுந்தாள் அக்ஷிதா. “கிட்டத்தட்ட ஒரு வாரமா நாயா பேயா அலையிறோமே கிட்னாப் பண்றவனைக் கண்டுபிடிச்சா நமக்கு என்ன தருவாங்க டார்ல்ஸ்?” என விட்டத்தைப் பார்த்தபடி கேள்வி எழுப்பினாள்.

அவளருகில் உத்ஷவியும் சோர்வாகப் படுத்து விட, “ம்ம்ம்… சரோஜா தேவி யூஸ் பண்ணுன சோப்பு டப்பாவைக் குடுத்து நம்மளை பெருமைப்படுத்தி திரும்பி ஊருக்கு அனுப்பி விடுவானுங்க. ட்ரெயின் டிக்கட் மட்டும் ஃப்ரீயா போட சொல்லிடலாம்.” என்றதும், “சோ சேட்!” என உதட்டைப் பிதுக்கினாள்.

விஹானா இன்னும் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் தான் நின்றிருந்தாள். அக்ஷிதா வந்து கதவைத் தட்டியதில் தான், ஜோஷித் தன்னுணர்வுக்குத் திரும்பி அவன் அறைக்குச் சென்று விட்டான்.

இவளோ, அத்தனை சீக்கிரம் அவனது தீண்டலை விட்டு வெளியில் வர இயலாமல் அங்கேயே நின்றாள். இதழ்கள் வெட்க முறுவலை அவ்வப்பொழுது வெளிக்காட்டியபடியே இருந்தது.

“அடி விஹா… அந்த நாலு முடியை எவ்ளோ நேரம் காய வைப்ப. வந்து படு. அடுத்து விஜயவாடா போய் எத்தனை நாள் வாடணுமோ தெரியாது.” என்று அக்ஷிதா அவளை அழைக்க, அந்நேரம் கதவைத் திறந்து கொண்டு ஜோஷித் உள்ளே வந்தான்.

“வந்துட்டான்! அஞ்சு நிமிஷம் நிம்மதியா விட மாட்டானுங்க.” என்று உத்ஷவி முணுமுணுக்க,

அக்ஷிதா படுத்துக் காலை ஆட்டியபடி, “ஹே மேன். கேர்ள்ஸ் இருக்குற ரூம்க்குள்ள கதவைத் தட்டாம வர்ற. மேனர்ஸ் இல்ல உனக்கு.” என எகத்தாளமாகக் கேட்க, அவள் காலை கீழே தட்டி விட்டவன், “ஓ நீங்கல்லாம் கேர்ள்ஸ்ஸா எழுதி ஒட்டுங்க.” என முறைத்தவன், “விஹா… வா வெளில போகணும்” என்று அழைத்தான்.

அவனைக் கண்டதுமே மின்னிய விழிகளை அவனும் ரகசியமாக ரசித்துக் கொண்டு தானே இருந்தான். அவள் விருட்டென எழுந்து கொள்ள, உத்ஷவி, “ரூம்லா குடுக்குறீங்களே தவிர… கொஞ்ச நேரம் தூங்க விட மாட்டுறீங்களேடா. இப்ப எங்கடா போறோம்.” என்று மூச்சிரைக்க,

“உன்னை யாரு இப்ப கூப்பிட்டது. நீ மூடிட்டு தூங்கு. நான் என் அஸிஸ்டன்டை மட்டும் தான் கூப்பிட்டேன்” என்றதும்,

அக்ஷிதா, “அய்யயோ அப்போ உன் உடன்பிறப்பும் அஸிஸ்டன்டை வேலை வாங்குறேன்னு வந்துட போறான் ஜோ. என்னைக் கேட்டா நான் ஆழ்ந்த உறக்கத்துக்கு போய்ட்டேன்னு சொல்லிடுடா.” எனக் கெஞ்சலாகக் கூற, நமுட்டுப் புன்னகை புரிந்தவன், “அவன்லாம் வர மாட்டான். நீங்க ரெஸ்ட் எடுங்க.” என்று விட்டு விஹானாவை அழைத்துச் சென்று விட, அவளும் பின்னாடியே சென்று விட்டாள்.

“நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகணும்ன்னு தோணுதா பாரேன் இவளுக்கு.” என அக்ஷிதா கூற,

“அவள் என்ன கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கா போறா. அவளைக் கூப்பிட்டு வச்சு, ‘நல்லா யோசிச்சு பாரு. ராகேஷ் வேற என்ன என்ன செஞ்சான். லஞ்சுக்கு சைடிஷ் என்ன சாப்ட்டான்’னு வித விதமா விசாரிக்க தான் செய்வானுங்க.” எனக் கேலி புரிந்ததில் அக்ஷிதா வாயைப் பொத்திக்கொண்டு நகைத்தாள்.

எங்கு செல்கிறோம் என்று கூட கேளாமல் ஜோஷித்துடன் காரில் ஏறி அமர்ந்து கொண்டவளைக் கண்டு கர்வப்புன்னகை மின்னியது அவன் இதழ்களில். இருவரும் மௌன மொழியிலும், ஓரப்பார்வையிலும் அந்நிலையை ரசித்தபடி வர, முக்கால்மணி நேர பயணம் கடந்து, ஓரிடத்தில் காரை நிறுத்தினான் ஜோஷித்.

அதன் பிறகே சுற்றுப்புறத்தை பார்த்தவள், “எங்க வந்துருக்கோம் ஜோஷ்?” எனக் கேட்க, “இப்ப தான் இந்த கேள்வியை கேட்கணும்ன்னு தோணுச்சா உனக்கு” என்றான் இடுப்பில் கை வைத்து.

“நீயே சொல்லுவன்னு நினைச்சேன்.” என்றவளை ஒரு முறை ஆழ்ந்து நோக்கியவன், “வா” என ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றான்.

ரிஷப்ஷனில் பேசி விட்டு, உள்ளே செல்ல, அது என்ன விடுதி என்று தெரியாமல் குழம்பியபடி அவனுடன் நடந்தவள், அவன் ஒரு அறைக்குச் சென்றதும் அவளும் பின்னே செல்ல, அங்கு அவளது தம்பி விமல் தான் கட்டிலில் அமர்ந்திருந்தான்.

தமக்கையைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக்கொண்டவன், “அக்கா… உனக்காக தான் தூங்காம முழிச்சு இருந்தேன். நீ வருவன்னு ரிஸப்ஷன்ல இருக்கற தேவி மேம் சொன்னாங்க.” என்று மடமடவெனப் பேசிட, விஹானா இன்னும் திகைப்பில் இருந்து மீளாமல், கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளியைக் கூட துடைக்கத் தோன்றாமல், தம்பியை அணைத்துக் கொண்டாள் ஆதரவாக.

“எப்படி இருக்க விமல்? சா… சாரிடா. நானும் உனக்கு கேன்சர்ன்னு நினைச்சு… வேற இடத்துலயாவது செக் பண்ணிருக்கணும். ராகேஷ் சொன்னதெல்லாம் அப்படியே நம்பிட்டேன்.” என குரல் கமறக் கூறிட,

“விடுக்கா. உனக்கு முன்னாடியே இதெல்லாம் தெரியுமா என்ன… இப்ப நான் நல்லா இருக்கேன்க்கா. நீ வேலையை முடிச்சுட்டு வந்து என்னை உன் கூட கூட்டிட்டு போவன்னு இந்த அங்கிள் சொன்னாங்க. அதுவரை நான் இங்க இருக்கேன்க்கா. எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடிச்சு இருக்கு. ஸ்கூலுக்கு போயிட்டு இருக்கேன் தெரியுமா?” எனக் குஷியுடன் பேசியதில், கண்ணில் நிறைந்த நீருடன் ஜோஷித்தைப் பார்த்தாள்.

அவன் அடிக்குரலில், “ஏன் அவன் முன்னாடி அழுதுட்டு இருக்கடி. அவன் பயப்படப் போறான்” என்று கண்டிக்க, கண்ணீரை முயன்று உள்ளிழுத்துக் கொண்டவள், தம்பியிடம் அமர்ந்து ஆசுவாசமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.

இறுதியாக, எப்போது இவ்வாறு கவலையின்று மனம் விட்டுப் பேசினார்கள் என்று இருவருக்குமே தெரியவில்லை. விமல் பேச்சை நிறுத்தாமல், கொட்டாவி விட்டபடி வந்த உறக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசிட, ஜோஷித்தும் இருவரையும் தொந்தரவு செய்யாமல் வெளியில் சென்று விட்டான்.

நேரம் செல்வதை உணர்ந்து, விஹானா தான், “நீ தூங்கு விமல். நாளைக்கு ஸ்கூலுக்கு கிளம்பனும்ல. அக்கா சீக்கிரம் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்” என்று தம்பியைப் பிரிய மனமில்லாமல் அவனை உறங்க வைத்து விட்டு வெளியில் வந்தாள்.

அறை வாசலில் இருந்து இருட்டை வெறித்துக் கொண்டிருந்த ஜோஷித்தின் விழிகள் உறக்கமின்றி சிவந்திருந்தது. இத்தனை அலைச்சலிலும் தான் கேட்டதற்கிணங்க தன்னை அழைத்து வந்திருக்கிறான் என்று புரிய, தன்னை அடக்க இயலாமல் அவனைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டாள் விஹானா.

“தேங்க்ஸ் ஜோஷ்!” என்றவள் உணர்வுக்குவியலாய் நின்றிருந்தாள்.

சிறுவர்கள் மட்டும் இருக்கும் விடுதியாதலால் யாரும் பார்க்கும் முன், அவளை மெல்ல நகற்றி விட்டவனுக்கு அவளது அணைப்பை விடுவிக்க மனமில்லை தான்.

அவன் விலக்கியதுமே நிகழ்வு உணர்ந்தவள், மானசீகமாகத் தன்னை அறைந்துக் கொண்டாள். தன்னை என்னவென்று நினைத்திருப்பான்…  என்ற தவிப்பு அவளுள் அதிகமாக, அவன் பின்னே காருக்குச் சென்றாள் தலையைக் குனிந்து கொண்டு.

இதுவரையில் மற்றவர்கள் என்ன நினைத்தாலும் அவள் கவலை கொண்டதில்லை. இப்போது முதன் முறையாக, ஜோஷித்தின் முன்னே தன் சுயம் இழந்து, குற்றவாளியாகத் தன்னை எண்ணிக்கொண்டாள் விஹானா.

காருக்கு அருகில் வந்ததும், அவள் அணைத்துக் கொள்ள ஏதுவாக நின்றவன், பெண்ணவளையே குறுகுறுவெனப் பார்க்க, அவளோ தனக்குள் மருகிக்கொண்டிருந்தாள்.

அவனது பார்வை ஊசியாகக் குத்த, “சா… சாரி ஜோஷ்! தப்பா நினைக்காத. ஏதோ ஒரு… உணர்ச்சிவசப்பட்டு அப்படி… சாரி.” எனத் தனது செயலை எப்படி நியாயப்படுத்துவது என்று புரியாமல் திணறிக் கொண்டிருந்தவளைக் கூர்மையுடன் நோக்கியவன், பின் அவளது தவிப்பை புரிந்துக் கொண்டான்.

“நீ இப்போ என்னை ஹக் பண்ணலைன்னா தான் தப்பா நினைப்பேன் சீட்டர்!” என அவளருகில் நெருங்கி கிசுகிசுக்க, வெடுக்கென நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளை அவன் விழிகளுடன் கலந்தவன், அதில் தெரிந்த கலக்கம் கண்டு, யோசியாமல் இதழோடு இதழ் பொருத்தினான்.

அதிர்ந்த பாவையின் மேனியை சிறிது சிறிதாக தனது கட்டுக்குள் கொண்டு வந்தவன், முத்தத்தில் மூழ்க, விஹானாவும் கிறங்கிப் போனாள்.

அதிக நேரம் மூச்சுக்கு அவஸ்தைப்பட்டவள், அவளாகவே அவனை விலக்கிட, பாவையின் சிவந்த கன்னங்களும், இதழ்கள் பூசிய வெட்கப் புன்னகையும் அவனை எங்கோ இழுத்துச் சென்றது.

அவளோ அவனது முகம் காணவே நாணி, தலையை நிமிர்த்தாமல் அவனை சோதிக்க, அவனது ஒவ்வொரு அணுவும் அடுத்த முத்தத்தை வேண்டி நின்றது.

‘இது சரிப்படாது’ எனத் தன்னை அடக்கிக்கொண்டவன், காரைக் கிளப்ப, அவளும் நடுங்கிய கரங்களுடன் உள்ளே அமர்ந்தாள்.

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும், மற்றவர்களின் உணர்வுகளை உணர்ந்து கொண்டனர்.

அதுவே அவர்களுக்குள் காதல் மழையைத் தூவிக்கொண்டிருந்தது.

ஜோஷித்திற்கும் ஏதேதோ பேச ஆசை தான். ஆனால், அந்த கணம் கொடுத்த இன்பத்தில் இருந்து நீங்காமல் அதனை மனதினுள் பூட்டிக்கொண்டவன், மௌனத்திலேயே காதலைப் பகிர்ந்தான்.

அப்போதே, மனதினைப் பகிர்ந்திருந்தால், பின்வரும் பிரிவுகளை தடுத்திருப்பனோ என்னவோ!

காதல் கொண்ட மனம்தனில்
காயங்களும் மறைந்து விட…

காளையவன் கொண்ட நேசத்தில்
கன்னியவளும் தொலைந்து விட…

பேசா மௌனங்கள்
பிழையாகிப் போகுமோ
பின்னாளிலே!

முதலும் முடிவும் நீ!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
100
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment