Loading

அத்தியாயம் 58

உத்ஷவியால் அதற்கு மேல் அங்கு நிற்க இயலவில்லை. அறைக்குச் சென்று விட்டாள். மற்ற இரு பெண்களுமே அங்கு தான் இருந்தனர் என்றாலும், அவர்களது முகம் தாங்கிய வேதனையை நிமிர்ந்து பார்க்கவில்லை. அதே நேரம், ஏதோ ஒரு பாரத்தைச் சுமந்திருந்த தனது முகத்தையும் அவர்களிடம் காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.

அதன் பிறகு வெளியில் என்ன நடந்ததென்று மூவருக்குமே தெரியவில்லை. இரவு வேளையில் அனைவரும் உறங்கியதை உறுதி செய்து கொண்டு, தங்களது ஷோல்டர் பேகை மாட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தனர்.

என்னவோ, இந்த இடைப்பட்ட நாள்கள் முழுதும், ஏதோவொரு இனிய கனவுலகத்தில் வாழ்ந்தது போலொரு பிரம்மை. சில நேர வெறுப்பு! சில நேரம் வாக்குவாதம், சில நேரம் அச்சம், சில நேரம் கோபம், சில நேரம் தேடல், சில நேரம் ஓட்டம் என அனைத்து உணர்வுகளும் கலந்திருந்தாலும், அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கமான நட்பும், இயல்பாய் ஆறு பேருக்குள் தோன்றிய அன்புப் பொறியும் பல காலமாய் பழகியதொரு உணர்வை விட்டுச் சென்றது.

யாரும் அறியாமல், மெல்ல வாயிலை அடைந்திட, ‘இனி கார்டனை தாண்டி கேட்டுக்கு செல்லவே அரை கிலோமீட்டர் ஆகுமே’ என நொந்தாலும், ஓட்டமும் நடையுமாக கேட்டை அடைந்தனர்.

காவலுக்கு செக்கியூரிட்டி யாரும் இல்லாததைக் கண்டு, கேட்டைத் திறக்கப் போக, உத்ஷவியின் ‘போனிடெய்ல்’ கொத்தாக அவளவனிடம் மாட்டிக் கொண்டது.

திரும்பிப் பார்க்காமலேயே யாரென்று கண்டுபிடித்து விட்டவள், “ஆ, விடுடா வலிக்குது.” என்று பல்லைக்கடித்தாள்.

“எங்கடி திருடி எஸ்கேப் ஆகுற?” ஸ்வரூப் கோபத்தை அடக்கியபடி அதட்டினான்.

“இப்ப விடப் போறியா இல்லையா?” அவள் முகத்தைச் சுருக்கித் தப்பிக்க முயல, அவனது பிடி இறுகியதே தவிர இளகவில்லை.

மற்ற இருவருமோ பேயறைந்தவாறு நிற்க, அவர்களையும் கண்டனத்துடன் பார்த்தவன், “போறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? அட்லீஸ்ட் சொல்லிட்டுப் போக மாட்டீங்களா?” என்று கடிந்ததில், இருவருமே தயக்கத்துடன் உத்ஷவியை தான் பார்த்தனர்.

அதிலேயே, இதற்கு கதை திரைக்கதை வசனம் அனைத்தும் தன் மனம் கவர்ந்தவள் தான் என்று புரிந்து கொண்டவன், “நீயும் நல்லா இருக்காத. இவளுங்களையும் நல்லா இருக்க விடாத விஷக்கிருமி.” என்று வஞ்சித்து விட்டுப் பிடியைத் தளர்த்தினான்.

‘ஸ்ஸ்…’ எனத் தலையை தேய்த்துக் கொண்டவள், “இனி நீ என்ன சொன்னாலும், எங்க முடிவுல மாற்றம் இல்ல. கிளம்ப தான் போறோம்.” என்றாள் உறுதியாக.

“உன்னை யாருடி இப்ப இருந்தே ஆகணும்ன்னு கெஞ்சுனது. போறதுன்னா போய்க்கோ.” என அசட்டையாகக் கூறியவன், பின் “காலைல வரை வெய்ட் பண்ணுங்க. ஜெட்ல அனுப்புறேன்” எனக் கூறிட, அவர்கள் தான் செய்வதறியாமல் விழித்தனர்.

கோபப்பட்டு பேசினால் கூட பரவாயில்லை, அவன் நிதானமாகப் பேசியதில் மூவருக்கும் கிலி பிடித்தது என்னவோ உண்மை தான்.

அக்ஷிதா, “எங்களை காலைல வரை இருக்க வச்சு, நாய்க்கு பலி குடுத்துட மாட்டியே” என மிரட்சியுடன் கேட்க,

“அரை பைத்தியமே. அசிங்கமா என்னைப் பேச வைக்காத” என்று அவன் கடுப்புடன் கூறியதில், விஹானா, “இல்ல ஸ்வரூ. இப்பவே கிளம்புறோம்” என்றாள் மெல்லமாக. காலை வரை, இதே உறுதியுடன் இருக்க இயலுமா என்று தெரியவில்லை. எப்போது வேண்டுமானாலும், மனதில் பெருகி இருக்கும் காதல் அணை உடைந்து விடலாம்.

அவளை ஏற இறங்கப் பார்த்தவன், “வரும் போது தான் திருட்டுத்தனமா வந்தீங்க. போகும் போதும் திருட்டுத் தனமா தான் போவீங்களா. எல்லார்கிட்டயும் சொல்லிட்டு போகணும்ன்ற அறிவில்ல.” என்று அனலடிக்க,

“நீயே சொல்லிடு” என்று முணுமுணுத்தாள் உத்ஷவி.

அதில் அவளை முறைத்தபடியே, அவனது கார் ஓட்டுனருக்கு போன் செய்தான்.

“கார்ல போங்க. விஹா, ரீச் ஆகிட்டு கால் பண்ணு.” என்றிட, அவள் வேதனையை மறைத்தபடி தலையசைத்தாள்.

“உனக்கு ஒரு செருப்படி குடுக்க வேண்டியது இருக்கு. டைம் வரட்டும்.” என்று விஹானாவைக் கடினத்துடன் பார்த்தபடி கூறும் போதே, காரும் வந்து விட்டது.

அவள் பேந்தப் பேந்த விழித்து, “நான் என்ன செஞ்சேன் ஸ்வரூ?” எனப் பதற்றமாகக் கேட்க, அவன் பதில் கூறவில்லை.

‘என்ன உடனே போக சொல்லிட்டான்! இதுல உள்குத்து எதுவும் இல்ல தான?’ எனத் தனக்குள் குழம்பி மெல்ல முணுமுணுத்த உத்ஷவியிடம், “எந்த உள்குத்தும் இல்லடி திருடி” என்றான் நக்கலாக.

‘ஷப்பா… இவனைப் பத்தி வெளியவும் பேச முடியல வாய்க்குள்ளவும் பேச முடியல’ என நொந்து கொண்டாள்.

அவனோ மூவரிடமும் தீர்க்கமாக, “லிசன், இனிமே திருடுற எண்ணம் வந்துச்சு… மூணு பேரையும் சுட்டுத் தள்ளிடுவேன்.” என்றதில், விஹானாவும் அக்ஷிதாவும் “திருட மாட்டோம்” என வேகமாகத் தலையசைக்க, உத்ஷவி விறைப்பாக நின்றாள்.

“நீ சொன்னா நான் கேட்கணுமா?” என்ற பிடிவாதம் அதில் தொக்கி நிற்க, அவளை மட்டும் காரில் ஏற விடாமல் தடுத்தவன், “வெளில இருங்க. இவளை ரெண்டு நிமிஷத்துல அனுப்புறேன்” என்றதில், மற்ற இருவரும் காரில் ஏறினர்.

கார் கேட்டுக்கு வெளியில் சென்றதும், அவளது கையைப் பிடித்து வளைத்தவன், “ஏய், இனிமே திருடுனன்னு தெரிஞ்சுது. பிச்சுடுவேன்.” என மிரட்டினான்.

“என்னால திருடாம இருக்க முடியாது விடுடா” என அவள் முரண்டு பிடிக்க, “நீ பழக்கதோஷத்துல திருடுறதை சொல்லல. டாக்குமெண்ட் திருடுறேன், பார்முலா திருடுறேன்னு ஏதாவது 420 வேலை பார்த்தன்னு தெரிஞ்சுது…?” என மிரட்டலுடன் முடிக்க, “என்னடா பண்ணுவ” என்றாள் முறைப்பாக.

“என்ன வேணாலும் பண்ணுவேன். யூ காண்ட் கெஸ்” என்றவனின் கூற்றில் உள்ளர்த்தம் எதுவும் இருக்குமோ என்று சிந்திக்கும் போதே, அவளை தன்னருகில் இழுத்தவன், “இப்போ கூட ஒன்னும் குறைஞ்சு போகல. என் மேல இருக்குற காதலை ஒத்துக்கோ விஷா.” என்றான் ஆழந்த பார்வையுடன்.

“உளறாத டைனோசர்” என அவள் சலிப்புடன் கூற, அதில் பெருமூச்சு விட்டவன், ஒரு கணம் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அவளோ திகைத்து மருகி, அவனிடம் இருந்து விடுபட முயல, சில நொடிகளில் அவனே விலகினான்.

“என்னடா செய்ற?” உத்ஷவி கோபத்துடன் வினவ,

“ஒரு லாஸ்ட் ஹக்டி.” என்றதில், பற்களை நறநறவெனக் கடித்தவள், காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

கேட்டில் சாய்ந்து கையைக் கட்டியபடி, ஸ்வரூப் அவள் மீதான உரிமைப் பார்வையைத் தொடர, அவளோ முயன்று இயல்பாய் இருப்பது போல, அவனிடம் இருந்து திருடிய கூலிங் கிளாஸை அமர்த்தலாகப் போட்டுக் கொண்டாள்.

“ஃபைனலி என் டாஸ்க் கம்ப்ளீட்டட். அந்த டாக்குமெண்ட் தான் மிஸ் ஆகிடுச்சு. மை ஃபர்ஸ்ட் ஃபெயிலியர் ப்ராஜக்ட் உன்னோடது தான். பரவாயில்ல, உன் கல்யாணத்துக்கு அதை என்னோட கிஃப்ட்டா வச்சுக்க.” என்றவள், அவனை மேலும் கீழும் ஒரு முறை நன்றாகப் பார்த்து, “லாஸ்ட் டச் ஆப் சைட்டிங்.” என்றாள் குறும்பு மின்ன.

அவன் எதற்குமே எதிர்வினை ஆற்றவில்லை. “ம்ம்ஹும்? ஃபெயிலியர் ப்ராஜக்ட்ல மட்டுமா?” ஏளனத்துடன் வெளிவந்த அவனது குரலில் சிறு சீற்றமும் தெறிக்க, அவள் முகம் கன்றிப் போனது.

சட்டென விழிகளும் கலங்கிப் போக, அதனை அவள் அணிந்திருந்த குளிர் கண்ணாடி அழகாய் மறைத்துக் கொண்டது. அதனை மறைக்கத்தான் அணிந்து கொண்டாளோ?

—–

தனது அறையின் ஜன்னல் வழியே தெரிந்த மங்கையின் முகத்தைத் தான் வெறித்திருந்தான் ஜோஷித் அவ்தேஷ்.

மனதினுள் சினம் கனன்று கொண்டிருந்தது. அதனை விட, காதல் வலி நெஞ்சைப் பிசைந்தது.

உட்சபட்ச அழுத்தத்தில் இருந்தவன், கோபம் தாளாமல், சிகரெட்டை எடுத்து வாயில் வைக்க, அந்நேரம், “ஐயோ ஜோஷ் மூச்சு முட்டும். ப்ளீஸ். இந்த கருமத்தை விடவே மாட்டியா?” என்ற விஹானாவின் குரல் காதில் அசீரிரியாய் எதிரொலிக்க, “ஷிட்” என அதனைத் தூக்கி எறிந்தவன், மூச்சு முட்டும் காதலை சம்பந்தப்பட்டவளிடம் கொட்ட இயலாமல், அவளது தவிர்ப்பிலும் வார்த்தைகளிலும் வதங்கிப் போனான்.

ஒரு பெண்ணின் காதல் என்ன செய்யும்! யாருக்கும் அடிபணியா ஆண்மகனையும் காலடியில் விழ வைக்கும். ஊரையே அடக்கி ஆளும் கம்பீரத்தை, நொடியில் தகர்த்தி விடும். எத்தனை பெரிய வலியைத் தாங்கும் இரும்பு இதயத்தையும் இளக்கி விடும். அப்படித்தான் மூன்று ஆடவர்களும் இப்போது மொத்தமாக சுயம் இழந்து நின்றனர்.

சஜித்திற்கு தன்னிடம் சொல்லாமல் கிளம்பி விட்ட அக்ஷிதாவின் மீது கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“இருடி… சாண்டவிச் வாங்கிக்குடு பர்கர் வாங்கிக்குடுன்னு என்கிட்ட வராமலா போய்டுவ. உன்னைப் பார்த்துக்கிறேன்.: எனக் கறுவியவனுக்கு, அவளை மீண்டும் பார்க்கச் சொல்லி மனது உந்தியது.

ஆனால், வீம்பாக அவளைப் பாராமல் தவிர்த்தவன், “இங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு கூட தெரியாம, ஓடிப் போறாளுங்க.” என்று திட்டிக்கொண்டான்.

மனமோ மாலை வேளையில் நிகழ்ந்ததை எண்ணிப் பார்த்தது.

பெரியவர்களின் முன்னிலையில் ஸ்வரூப் அவ்தேஷிற்கு நலுங்கு வைக்கும் வைபவம் நிகழ, இஷானாவும் குதூகலத்துடன் அவனருகில் வந்து அமர்ந்தாள்.

அவனோ படக்கென எழுந்து கொண்டான்.

இஷானா நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனுக்கு சந்தனம் பூசி, ஆசி கொடுக்க வந்திருந்த பூமிநாதன், “என்னப்பா எந்திரிச்சுட்ட?” எனக் கேட்டார் புரியாமல்.

“சாரி மாமா, உங்க மகளுக்கு ஒரு சின்ன கிஃப்ட் குடுக்கணும்ன்னு நினைச்சேன். அதான் இப்பவே குடுத்துடலாம்ன்னு” என்று இழுத்ததில், சாணக்கியர், “அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம் தம்பி. சடங்கு நடக்கும் போது பாதில விடக் கூடாது” என்று கண்டிக்க,

அவனோ நக்கலாய் புன்னகைத்து, “நான் காட்டுற ஒளியும் ஒலியும் பார்த்துட்டு, விட்ட சடங்கை கன்டினியூ பண்றதைப் பத்தி யோசிங்கப்பா.” என்றவனை, இஷானாக் குழப்பமாகப் பார்த்தாள்.

“சஜி…” என ஸ்வரூப் குரல் கொடுத்ததும், அங்கு மணமக்களை வீடியோ எடுத்து, அப்போதே லைவ்வாக அதனைப் படம் பிடிக்கும் ஆளுயர ப்ரொஜக்டரும் இருந்தது. அதில், சஜித் வேறொரு பென்ட்ரைவை மாட்டி விட, அதில் ப்ரீத்தன் தெரிந்தான்.

“ப்ரீ…” யசோதா கத்தி விட, மற்றவர்கள் ப்ரீத்தனுக்கு ஏற்பட்ட காயத்தைக் கண்டு பதறி இளையவர்களைப் பார்த்தனர். அவர்களோ, வீடியோவில் கவனமாக, அதில் ப்ரீத்தன் தான் மூச்சிரைக்கப் பேசினான்.

“என்கிட்ட இருக்குற டாக்குமெண்ட்டைத் திருட பிளான் போட்டுக் குடுத்தது உன் தங்கச்சி தான?” ஸ்வரூப் கூர் விழிகளுடன் வினவ, அதில் ப்ரீத்தனின் முகத்தில் அதிர்வு.

ஏற்கனவே, அவனைப் பிரித்து மேய்ந்து விட்டதால், அடி தாள இயலாமல், “ஆ… ஆமா. இஷா தான் இந்த ஐடியாவைக் குடுத்தா. ராகேஷ்கிட்ட பேசி, பொண்ணுங்களை செலக்ட் செய்ய சொன்னாள். அப்ப தான், நீங்க யார் அனுப்புனதுன்னு தெரிஞ்சுக்க, அவங்களை ரொம்ப ஃபோர்ஸ் பண்ண மாட்டீங்கன்னு…” என எச்சிலை விழுங்க, மீண்டும் ஸ்வரூப்பின் குரல் கேட்டது.

“ஏன்? இதுல அவள் ஏன் இவ்ளோ இன்வால்வ்மெண்ட்டோட இருக்கா, ராகேஷ அவளுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டிட,

“அவளுக்கு நம்ம குடும்பத்தோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எல்லாம் பிடிக்கல. அந்த காலத்துல தாத்தாவுக்கு தாத்தா செஞ்ச சேவையை எல்லாம் இப்போ இந்த காலத்துக்கு செஞ்சு, பணத்தை வேஸ்ட் பண்றதுல அவளுக்கு உடன்பாடு இல்ல. அந்த நேரத்துல நானும் அப்பார்ட்மெண்ட் பத்தி பேசவும், அவள் அதுல இன்டரஸ்ட் ஆகிட்டா. அவளோட ஷேரையும் குடுத்து தான், அதுக்கான அப்ரூவல் வாங்கி இருந்தோம். உனக்கு தெரிஞ்சா நீ கண்டிப்பா ஒத்துக்க மாட்டன்னு, கல்யாணம் வரைக்கு ஒத்துப்போற மாதிரி இருந்துக்க நினைச்சா.

அதுக்கு அப்பறம், உன்னை கம்பெல் பண்ணி, தனியா கூட்டிட்டு போய்டலாம்ன்னு…” என்றவன் அவனது முறைப்பில் வார்த்தைகளை விழுங்கி விட்டு, “ராகேஷும் இஷானாவும் ஒரே காலேஜ்ல படிச்சாங்க. அவளோட சீனியர்.” என்றிட, வீடியோவும் அணைந்தது.

இஷானாவிற்கு வியர்த்து வழிந்தது. மொத்த குடும்பத்தின் உக்கிரப் பார்வையும் தன் மீது இருப்பதைக் கண்டு திணறிப் போனவளுக்கு தமையனின் மீது ஆத்திரம் பொங்கியது.

அனன்யாவும் பாவனாவுமோ ‘நல்லவேளை நாங்களும் கூட இருந்ததை சொல்லாம விட்டுட்டான்’ என்று நிம்மதி கொண்டனர்.

இதனால் தங்களது திருமணத்தில் தடை வருமோ என அஞ்சிய பாவனா, “ஏன்டி இப்படி பேராசை பிடிச்சு போய் இருக்க. அதுவும் ஊருக்கே நல்லது நினைக்கிற நம்ம குடும்பத்துல இருந்துட்டு” என்று எரிச்சலாய் பேச, அனன்யா அதனை ஆமோதிக்க, இஷானி தங்கைகளை உறுத்து விழித்தாள்.

அவர்களை அடக்கிய ஸ்வரூப், இஷானி முன்பு கையைக் கட்டிக்கொண்டு நிற்க, அவள் அதிகமாகத் துடித்த இதயத்துடிப்பை சீர்செய்ய இயலாமல் பயத்துடன் நின்றிருந்தாள்.

ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன், “எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் இஷா. நிஜமா சொல்லணும்ன்னா, எங்க கூடவே வளர்ந்ததுனால உன்மேல எனக்கு எந்த விதமான பீலிங்ஸ்ஸும் வந்தது இல்ல. நம்ம நிச்சயத்துக்கு அப்பறமும்!

கொஞ்ச நாளுக்கு முன்னாடி உன்னைப் பத்தி தெரிஞ்சு இருந்தா, கண்டிப்பா இதே இடத்தில உன் தோலை உரிச்சு இருப்பேன். ஆனா, இப்போ என்னால முடியாது. ஏன்னா இப்ப நானும் பெர்ஃபக்ட்டா இல்ல. ஒருத்தர் செய்ற தப்புக்கு சூழ்நிலையைக் காரணமா சொல்றதுல எனக்கு எப்பவுமே உடன்பாடு இருந்தது இல்ல. ஆனால் சில அனுபவங்கள், இப்போ எனக்கு தப்பு செஞ்சவங்களோட சூழ்நிலையையும் யோசிக்க வைக்குது.

உன் எண்ணத்துலயோ, உன் குணத்தையோ நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். எல்லாருக்குமே குடும்பத்தோட நெறிமுறைகளும், கடைபிடிக்கிற பாரம்பரியமும் பிடிக்கணும்ன்னு இல்ல தான். அதைக் கண்டிப்பா கடைபிடிச்சே ஆகணும்ன்னு இறுக்கிப் பிடிக்கவும் முடியாது தான். ஆனா, அதுக்கு நீ தேர்ந்தெடுக்க வழி இருக்கே அது மகா தப்பு.

ஊரைக் கட்டிக் காக்குற சேவை உனக்குப் பிடிக்கல. ஆனா, நம்ம முன்னோர்கள் நமக்காக விட்டுட்டுப் போன மரியாதை வேணும்.

நம்மளை எடுத்து வளர்த்த சொந்தம் வேணாம். ஆனா அவங்களால வந்த சொத்து மட்டும் வேணும்.

தலைமுறை தலைமுறையா, நம்மளை நம்பியே வாழுற மக்கள் வேணாம். ஆனால், அவங்க வாழுற மண்ணு வேணும்.

இது சுயநலத்தோட உச்சம். மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய நினைச்ச உன்னை என்னைக்கும் மன்னிக்க மாட்டேன். உனக்கு என்ன தண்டனை குடுக்குறதுன்னு வீட்டு பெரியவங்களே முடிவெடுக்கட்டும்” என்று மாலையைக் கழற்றி எறிந்து விட்டு வீட்டினுள் செல்ல, இஷானா திகைத்து நின்றாள்.

அவன் கோபத்தைக் கக்கி இருந்தால் கூட இந்த அளவு வீரியம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. இந்த நிதானம் அவளையே சுழற்றி அடித்தது.

அத்தியாயம் 59

பூமிநாதன் மகனையும் மகளையும் அதட்ட இயலாமல் பல்லைக்கடித்துக் கொண்டிருக்க, யசோதா இஷானாவின் கன்னத்தில் பளாரென விட்டார்.

“எவ்ளோ தைரியம் இருந்தா, அவனை வீட்டுல இருந்து பிரிக்க நினைச்சு இருப்ப. ஏதோ நல்ல மூட்ல இருந்ததுனால உன்னை உயிரோட விட்டுட்டுப் போயிருக்கான்.” என்று கடிந்து கொண்டார்.

நடந்த அபசகுணத்தை எப்படி சரி செய்வதென்று தெரியாமல் தாய்மார்கள் தவிக்க, பெரியவர்கள் மூவரும் அவளை முறைத்து விட்டு உள்ளே சென்றனர்.

தமையனை வீல் சேரில் அறைக்கு அழைத்துச் சென்ற இரு தம்பிகளும், “இப்ப என்னண்ணா செய்றது?” எனப் புரியாமல் கேட்க, சாணக்கியர் ஏதோ யோசனையுடன், “குழப்பத்தை சரி செய்ய நம்ம பசங்களே வருவாங்க” எனக் கூறி முடிக்கும் முன், ஸ்வரூப் அவ்தேஷ் உள்ளே வந்தான்.

அதில் மற்ற இருவரையும் அவர் கேலி நகையுடன் பார்க்க, அவர்களும் கமுக்கமாகப் புன்னகைத்துக் கொண்டனர்.

‘ஆக, நான் அப்போ இருந்து தவிச்சு மருகுறது தெரிஞ்சு இருக்கு இவருக்கு.’ என மனதினுள் வறுத்தபடி தந்தையை முறைத்தான்.

அவரோ, அப்போதும் “என்னப்பா?” என விளங்காதது போல வினவ, அந்நேரம் தாய்மார்களும் உள்ளே வந்தனர்.

தொண்டையை செருமிக் கொண்ட ஸ்வரூப், “என்னை மன்னிச்சுடுங்கப்பா. நம்ம குடும்பத்தோட நெறிமுறைகளை முதன் முறை தவறிட்டேன். இஷாவுக்கு மட்டும் இல்ல, எனக்கும் சேர்த்தே நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்.” என்று அனைவரின் முன்பும் தலை குனிந்து நின்றான்.

“என்னப்பா இது?” என சித்தாரா பதற, “ம்ம்” என்று சிறு உறுமலுடன் தடுத்த கணவனின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு அப்படியே நின்று விட்டார்.

“தண்டனைக் குடுக்குற அளவு நீ என்னப்பா தப்பு செஞ்ச?” பாரிராம் புரியாமல் கேட்க,

“நான் ஒரு பொண்ணை விரும்புறேன்.” என்றவன், உத்ஷவியைப் பற்றிக் கூறிட, அங்கு பலத்த அமைதி.

“இதுக்கு நாங்க மறுப்பு தெரிவிச்சா?” சாணக்கியர் கூர்மையாக வினவ,

“அதுக்கு தான் ஆரம்பத்துல தண்டனை குடுத்துடுங்கன்னு சொல்லிட்டேனே. அவள் மேல இருக்குற காதல் வெறும் என்னோட அபிப்ராயம் இல்லப்பா. என்னோட முடிவு.” என நிமிர்வுடனே பதில் அழைத்தான்.

“அந்த முடிவு உங்களுக்கு கண்டிப்பா பிடிக்காது. தாத்தாவோட சொல்லை மீறுற உறுத்தல் எனக்குக் கொஞ்சம் இருக்கு தான். ஒருவேளை அவர் உயிரோட இருந்திருந்தா, நேராவே பேசி இருப்பேன். கண்டிப்பா இஷாவோட கல்யாணம் பண்ணிக்க வற்புறுத்தி இருக்க மாட்டாரு” என்றான் உறுதியாக.

நந்தகோபாலோ “அதுக்காக அந்த திருட்டுப்பொண்ணையும் கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிச்சு இருக்க மாட்டாரு.” எனக் கோபத்துடன் உரைக்க,

“உங்க சம்மதம் இல்லாம என் கல்யாணம் நடக்காது.” என்றான் தீர்மானத்துடன்.

பாரிராம் அதிருப்தியுடன், “குடும்பத்துக்குத் துரோகம் பண்ணுனனால தான் இஷாவை நீ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்ற. அப்போ அந்த பொண்ணு மட்டும் செய்ய மாட்டாளா? நாளைக்கே வேற யாராவது பணம் குடுத்து, நம்ம வீட்ல திருட சொன்னா செய்ய மாட்டாளா?” என்று கேட்க,

“மாட்டாள். அவளை நான் நியாயப்படுத்த நினைக்கல சித்தப்பா. அவள் மேலயும் தப்பு இருக்கு. ஆனா, என்னைக்கும் எனக்கு துரோகம் பண்ண நினைக்க மாட்டா. அவள் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.” என்றான் மனப்பூர்வமாக.

“அந்த நம்பிக்கை எங்களுக்கு வரவேணாமா?” சாணக்கியர் அதட்டலுடன் கேட்க,

“வரணும். ஆனா, சில நம்பிக்கையும் அன்பும் உணர்வுப்பூர்வமா உணர்றதுப்பா. அதை வேற எப்படியும் ப்ரூவ் பண்ண முடியாது. அவள் திருட்டு வேலை பார்த்த ஒரே காரணத்துக்காக, உங்க எல்லார் முன்னாடியும் அவளை நிரூபிக்க வைக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்ல. என்மேல, என் பேச்சு மேல நம்பிக்கை இருக்குன்னா, அதே நம்பிக்கையை அவள் மேல நீங்க தாராளமா வைக்கலாம்.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவனைக் குடும்பமே வியந்துப் பார்த்தது.

அதே நேரம், ஜோஷித் அவ்தேஷ் கசங்கிய முகத்துடன் உள்ளே நுழைந்தான்.

அவனைக் கண்டதும், பாரிராம் “ஒருத்தி செஞ்ச தப்புக்காக மத்த ரெண்டு பேரை தண்டிக்கிறது நியாயம் இல்லை. உனக்கும் சஜித்க்கும் ஏற்பாடு செஞ்ச மாதிரி இந்த கல்யாணம் நடக்கட்டும் ஜோ.” என்று ஸ்வரூப்பை முறைத்தபடி கூற, அவன் தடுக்கவில்லை.

அவர்களும் இதற்கு உடந்தை என்று தெரியும் தான். ஒருவேளை ஜோஷித்தும் சஜித்தும் அப்பெண்களின் மீது விருப்பம் கொண்டிருந்தால், அது அவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும் என்றெண்ணி மறைத்து விட்டான். பாவம் அவனுக்கும் தம்பிகளின் காதல் மனம் பற்றி தெரியவில்லை.

ஜோஷித்தோ தலையை தரையில் புதைத்து, “எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க. நான் நம்ம குடும்பத்தோட நடைமுறையை மீறிட்டேன். எனக்கு நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் நான் வாங்கிக்கிறேன்.” என்றவன், எல்லாரும் அவனை பேச்சற்று பார்த்ததை கண்டு, “நான் நான் ஒரு பொண்ண விரும்புறேன். அவளைத் தாண்டி என்னால யாரையும் யோசிக்க முடியல.” என்றான் தீர்க்கத்துடன்.

ஸ்வரூப்பின் பார்வை அவன் மீது சுவாரஸ்யத்துடனும், கேள்வியுடனும் விழ, ஜோஷித் தமையனின் முகத்தை அறவே நிமிர்ந்து பார்க்கவில்லை.

ஸ்வரூப் சற்று சிந்தித்து பின் பிரகாசத்துடன் “விஹாவா?” எனக் கேள்வியாகக் கேட்க, அதற்கு தலையை மட்டும் அசைத்தான்.

அதில் தலையாட்டி புன்னகைத்துக் கொண்டவன், “நைஸ் செலக்ஷன்” என்றதில் சட்டென நிமிர்ந்தான் ஜோஷித்.

“உனக்கு என்மேல கோபம் இல்ல?” எனத் தவிப்புடன் வினவ அதன்பிறகே அவனது மனநிலைப் புரிந்தவன், “உன் விருப்பத்துக்கு நான் என்னைக்குத் தடையா இருந்து இருக்கேன்?” என்றான் சிறிதான ஏமாற்றத்துடன்.

உண்மை தானே! இதுவரை அவனோ சஜித்தோ எது செய்தாலும், எந்த முடிவெடுத்தாலும், அவன் தடையோ மறுப்போ சொன்னதே இல்லையே. சொந்த விருப்பு வெறுப்பிற்காக பழி வாங்கக்கூடாது அதிலும் பொது மக்கள் முன்பு வன்முறையைக் கையில் எடுக்க வேண்டாம் என்று தானே கூறினான். அதில் ஏற்பட்ட புரிதலின்மைக்கான தாக்கம் இப்போது வரை இருப்பதை உணர்ந்து, ஸ்வரூப் அவனை அடிபட்ட பார்வைப் பார்க்க, “சாரிடா…” என அவனைக் கட்டிக்கொண்டான்.

ஆனால், பெரியவர்களின் உஷ்ண மூச்சு அறையையே நிறைத்தது.

பாரிராம் மகனை அறையவே கை ஓங்கினார். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்.” என்று எகிறிட, சாணக்கியர் தம்பியை தடுத்தார்.

“விடுங்கண்ணா, நீங்க அமைதியா இருக்குறனாள தான் நானும் இவ்ளோ நேரம் பொறுமையா இவங்க உளறலை எல்லாம் கேட்டுட்டு இருக்கேன்.” என்று மகன்களை முறைத்திட, ஜோஷித் ஸ்வரூப்பைப் புரியாமல் பார்த்தான்.

“அப்பா, தப்பு என் மேல. இவனை ஏன் திட்டுறீங்க.” என்று தமையனுக்கு ஆதரவாக வர, அவன் கையைப் பற்றிய ஸ்வரூப் கிசுகிசுப்புடன் “அடங்குடா. உன்னை மாதிரி தான் நானும் வந்து நிக்கிறேன் இங்க…” என முணுமுணுத்து பின்னந்தலையைக் கோதிக் கொண்டான்.

அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்த ஜோஷித் “புரியலையே!” என யோசிக்க,

“அந்த விஷக்கிருமி உன் அண்ணியா வரணும்ன்னு உன் தலைல எழுதி இருக்கு.” என்று நெற்றியை நீவிக் கூறிட, ஜோஷித்தின் முகத்தில் வியப்பின் கீற்றல்.

“வாவ்!” என்றவன், தந்தையரின் கோப முகத்தில் வாயை மூடிக்கொள்ள, அடுத்ததாக உள்ளே சஜித் நுழைந்தான்.

யாருடைய முகத்தையும் பாராமல், “எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க” என்று ஆரம்பிக்க, ஸ்வரூப்பும் ஜோஷித்தும் நமுட்டு சிரிப்புடன் “இவன் அந்த சாப்பாடு ராமியை தனியா கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கிக் குடுக்கும் போதே நினைச்சேன்டா.” என்று இருவரும் நக்கலடித்துக் கொண்டனர்.

சித்தாராவிற்கு மகன்களின் முகத்தில் தோன்றிய குறும்பும் வனப்பும் புதிதாக இருந்தது. அது பிடித்தும் இருந்தது. வரப்போகும் மருமகள் திருடிகளாக இருப்பது உறுத்தினாலும் கூட, மகன்களின் ஆசையைத் தடை சொல்ல மனம் வரவில்லை.

அவரே சஜித்திடம் “நீயும் குடும்பத்தோட நெறிமுறையை மீறிட்டியாக்கும். அதுக்காக என்ன தண்டனை வேணாலும் குடுத்துக்கலாம். ஏன்னா நீ ஒரு பொண்ணை விரும்புற அது தான.” என்று கேட்டதில், அவனோ பாவம் பேந்தப் பேந்த விழித்தான்.

“ஆமா இது என் டயலாக்ல” என வடிவேலு பாணியில் கேட்டதில், உமையாள் முறைத்து வைத்தார்.

சகோதரர்கள் இருவரும் அவனை குறுகுறுவெனப் பார்த்ததில், சிறு குழந்தை போல முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ள, இருவரும் சற்று வெளிப்படையாகவே சிரித்து, பெரியவர்களின் காரப்பார்வையைப் பரிசாக வாங்கிக் கொண்டனர்.

அப்படியே நைசாக மூவரும் மொட்டை மாடிக்கு நழுவி விட, சஜித் விஷயம் அறிந்து இருவரையும் “நீங்களுமாடா!” என ஆச்சர்யத்துடன் கேட்டான்.

“இவளுங்களோட சேர்ந்து வர வர நமக்கு ஈனா வானாவே இல்லாம போச்சுடா…” என சஜித் வெகுவாய் வருந்திக்கொள்ள,

“அது என்னமோ உண்மை தான்” என்றான் ஜோஷித்.

பின், “நீ லவ்வ சொல்லிட்டியா?” எனக் கேட்க, “இல்ல. இந்தப் பிரச்னை முடியவும் சொல்லலாம்ன்னு பார்த்தேன். எங்க அது முடியிறதுக்குள்ள நமக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க போல.” என்றான் சலிப்பாக.

“ஆமா நீங்க ரெண்டு பேரும் சொல்லிட்டீங்களா?” எனக் கேட்க, ஸ்வரூப் நடந்ததைக் கூறினான். அதே போல ஜோஷித்தும் கோபத்துடன் விஹானா பேசியத்தைக் கூற, “அவளுக்கு கிறுக்கு எதுவும் பிடிச்சிருச்சா?” என்று சஜித் கடிந்தான்.

இதனிடையில், ஆண்களை எல்லாம் பத்திரமாக சென்னை பங்களாவில் அடைத்து வைத்தாகிற்று என்று தேஜஸ்வினிடம் இருந்து தகவல் வர, “இப்ப நம்ம பிளான் என்ன ஸ்வரா?” எனக் கேட்டான் சஜித்.

“நாளைக்கு சென்னை போறோம். பசங்களை மெடிக்கல் செக் பண்ணிட்டு, ட்ரக்கோட அடிக்ஷனை கண்ட்ரோல் பண்ணனும். அண்ட், எப்படி அவங்களை இதுல இருந்து வெளில கொண்டு வர்றதுன்னு தெரிஞ்சுக்கணும்.” என்றான் சிந்தனையுடன்.

மறுநாள் சென்னை செல்லவிருப்பதால் தான், தைரியமாக பெண்களை அனுப்பி வைத்ததை பாவம் அவர்கள் அறியவே இல்லை.

சென்னைக்குக் கிளம்பும் போதே, அத்தனை பாதுகாப்பையும் மீறி பத்ரி தப்பித்து விட்டான் என்ற செய்தி வர, “ஷிட்” என ஸ்வரூப் சுவற்றைக் குத்தினான்.

“எப்படிடா தப்பிக்க விட்டீங்க?” ஜோஷித் ரௌத்திரத்துடன் தேஜஸ்வினை வறுத்தெடுக்க,

“பாஸ்… அவன் ஒரு மாதிரி வித்தியாசமா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுட்டான். எந்த மயக்க மருந்தும் செல்லுபடி ஆகல. உங்களுக்கு கால் பண்ண நினைக்குறதுக்கு முன்னாடியே, ஆளுங்களை ரொம்பத் தீவிரமா தாக்கி, சுவரை எல்லாம் உடைச்சுட்டு தப்பிச்சுட்டான்.” என்றதில் மூவரின் முகத்திலும் எரிச்சல் தாண்டவமாடியது.

அதே நேரம், இவர்களிடம் இருந்து தப்பித்து சீற்றமும் ஆவேசமும் கலந்து தனது இடத்திற்குச் சென்றான் பத்ரி.

அவன் சென்ற இடம், மிகப்பெரிய பழைய அரண்மனை போன்று இருந்தது. சரியான பராமரிப்பு இன்றி, அழுக்கடைந்திருந்தது.

கோப மூச்சுக்கள் வாங்கியபடி, முறுக்கேறிய புஜத்துடன் அதனுள் நுழைந்தவனின் விழிகள் சிவந்திருந்தது சினத்தில்.

காவலுக்கு ஆங்காங்கே நின்ற ஆள்களெல்லாம் அவனுக்கு வணக்கம் தெரிவிக்க, அதனைத் தலையசைப்புடன் ஏற்றவன், சிசிடிவி கண்காணிப்பு அறைக்குச் செல்ல, அங்கு ஏகப்பட்ட ஸ்க்ரீனில் பலரது முகம் தெரிந்தது.

அதனை எல்லாம் கூர்மையுடன் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்க, அவனருகில் வந்த பத்ரி சட்டென இயல்பு மாறி, முட்டி போட்டு அமர்ந்து நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டான்.

பத்ரியை சப்பென தலையில் அடித்த அந்த மனிதனிடம், சாப்பாட்டிற்காக ஏங்கும் நாயைப் போல கையைத் தூக்கி நன்றியைக் காண்பித்து அடியை வாங்கிக்கொண்டவன், “அடுத்து என்ன பண்ண பாஸ்.” என்று பணிவுடன் கேட்டான்.

தனக்கு அடிமையான பத்ரியை உறுத்து விழித்தவன், “என் காலை நக்கு!” என்றிட, யோசியாமல் அத்தனை திடகாத்திரமான ஆண்மகன் அதனையும் செய்து விட்டு நிமிர, அந்த மனிதனின் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.

“எனக்கு வேணும். நம்ம ட்ரெயின் பண்ணுன அத்தனை பசங்களும் வேணும். என்னையே சோதிச்சுப் பார்க்குற அவ்தேஷ வாரிசுகள் மூணு பேரும் எனக்கு நாயா அடிபணிஞ்சு, என் காலடில இருக்கணும். இதெல்லாம் உடனே நடக்கல, ராகேஷ், மேகனா மாதிரி நீயும் சாக வேண்டியது தான்.” என்று மிரட்டி விட்டுச் செல்ல, அவனோ எஜமானின் பின் செல்லும் நாய் போல, நான்கு கால் பாய்ச்சலில் அவனைத் தொடர்ந்தான்.

முதலும் முடிவும் நீ!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
107
+1
5
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. Naveena Ramesh

      மெயின் வில்லனே இப்பதான் வரானா 😳😳😳😳😳 அடப்பாவிகளா 😳😳😳😳…

    3. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.