Loading

பக்குவமாகக் கட்டிட்டு முடித்து, மாத்திரையின் பெயர்களையும் கூறியவளை, ஆராய்ச்சியுடன் அளவெடுத்தது ஸ்வரூப் அவ்தேஷின் விழிகள்.

அக்ஷிதாவும் விஹானாவும் குழப்பம் கொண்டு, “உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் டார்ல்ஸ்?” எனக் கேட்க, அவள் பதில் கூறவில்லை.

“நீ டாக்டரா?” ஸ்வரூப் அழுத்தக் குரலில் கேட்டான்.

அவளோ பக்கென சிரித்து, “நான் மட்டும் டாக்டரா இருந்திருந்தா, இந்நேரம் க்ளினிக் வச்சு கொள்ளையடிச்சு இருப்பேன்.” என்று கண்சிமிட்டியவளைக் கூர்மையுடன் ஏறிட்டான்.

அதில் சிலுப்பியவள் “நர்சிங் படிச்சு இருக்கேன்.” என்றாள்.

ஜோஷித் தான் வியந்து, “நர்ஸிங் படிச்சுட்டு, ஏன் இந்த திருட்டு வேலை?” என்று புருவம் நெறித்துக் கேட்டதில்,

“எனக்கு திருட தான் பிடிச்சு இருக்கு. நர்சிங் கோர்ஸும் நான் முழுசா கம்ப்ளீட் பண்ணல. என்னோட முதல் பேஷண்ட் நீ தான் ஜோ.” என நக்கலுடன் கூற, ஜோஷித் லேசாய் மிரண்டு, “எனக்கு என்ன மருந்து குடுத்த? லேசா கண்ணை கட்டுது. நெஞ்செல்லாம் எரியுது.” என்று பதறினான்.

“டேய் லூசு… தூக்க மாத்திரை குடுத்தா கண்ணை கட்ட தான் செய்யும். நெஞ்சு எரியுதா…? இன்னும் நாலு பாக்கெட் சிகரெட் குடி… நெஞ்சு மொத்தமா தீப்பிடிச்சுடும். போனா போகுதுன்னு ஃப்ரீயா ஹெல்ப் பண்ணுனா, வந்துட்டான் சந்தேக புத்தியோட.” என்று ஜோஷித்தை முறைக்க, ஸ்வரூப் உத்ஷவியை முறைத்தான்.

உத்ஷவியின் பேச்சில் தோழிகளிருவரும் வியந்து நிற்க, விஹானா தான், “அப்படியே அவனுக்கு சிகரெட்டை வாயில வச்சா கசக்குற மாதிரி ஒரு மாத்திரை குடு டார்ல்ஸ்.” என்று அவள் பங்கிற்கு ஜோஷித்தை வார, அவனுக்கோ உறக்கம் கண்ணை சுழற்றியது.

அதில் தூக்க கலக்கத்தில், “அதை முதல்ல உன் பாஸ் ராகேஷ்க்கு தான் குடுத்து இருக்கணும். அவன் மட்டும் என்ன சிகரெட்க்கு பதிலா சீனித்தண்ணியா குடிச்சான். அவன் கூட மட்டும் பி. ஏ வேலை பாக்க தான செஞ்ச” என்று உளற, விழி இடுங்க அவனைப் புரியாமல் பார்த்த உத்ஷவி அதே பார்வையை விஹானாவின் மீது திருப்பினாள்.

‘அட நாசமா போன… பணங்கா மண்டையா.. சல்லி சல்லியா நொறுக்கிட்டியேடா.’ எனத் திகைத்து, தயக்கத்துடன் உத்ஷவியை ஏறிட, அவள் சலனமற்று அவளை ஏறிட்டாள்.

அக்ஷிதாவோ, “அடிப்பாவி… நீ அப்போ திருடி இல்லையா?” என்று விழிகளை விரிக்க,

“உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்ல. நீங்க நேரடியா போய் திருடுறீங்க. நான் மறைமுகமா திருட ஹெல்ப் பண்றேன் அவ்ளோ தான்…” எனப் படப்படத்தவள், நடந்தவள் சுருக்கமாக அவர்களிடம் கூற, அக்ஷிதா சற்று முறைத்துப் பின் சமாதானம் ஆகி விட்டாள்.

உத்ஷவி தான், அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து, “இதுக்கு தான் யாரையும் கூட வச்சுக்குறது இல்ல.” என சுருக்கென கூறி விட்டு, இயல்பாக தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

தன்மீது கோபம் கொண்டு, அடித்திருந்தால் கூட விஹானா தாங்கி இருப்பாளோ என்னவோ, அவளது அலட்சியம் அவர்களுக்குள் இருக்கும் தோழமை உறவை அசைத்துப் பார்த்தது.

‘நீ எனக்கு ஒரு விஷயமே கிடையாது’ போன்ற உத்ஷவியின் நடவடிக்கை, விஹானாவை அதிகமாகத் தாக்கியது.

அப்படிப்பட்டவளிடம் மேலும் என்னவென்று சமாதானம் செய்வது என்ற வழி புரியாமல் அதிர்ந்திருந்தாள்.

உத்ஷவியின் திமிர் செய்கைகள் ஆடவனை மெல்லக் கவர்ந்திழுக்க, “நல்லவேளை நீ டாக்டர் ஆகல.” என்றான் கேலியுடன்.

அதில் நிமிர்ந்து ஸ்வரூப்பை ஏறிட்டவள் ஏனெனப் பார்க்க,

“முக்கியமான ஆபரேஷன் பண்ணும் போது, உன் டிசார்டரால, பாடி பார்ட்ஸ் மேல திருடுற அர்ஜ் வந்து, கையோட எடுத்து வச்சுக்கிட்டா. பேஷண்ட் செத்துருவான்.” என நமுட்டு நகையுடன் கூற,

அவனுக்கு அழகு காட்டிய உத்ஷவி, “இப்படி எந்த மாதிரியும் வரலாற்று சம்பவம் நடந்துடக் கூடாதுன்னு தான், நர்ஸிங்ல இருந்தே துரத்தி விட்டாங்க…” என வாயைப் பொத்தி நகைத்தாள்.

மறுகணம் விளையாட்டைக் கை விட்ட ஸ்வரூப், யோசனையுடன் மீண்டும் ஆராய்ச்சிப் பார்வையை தொடர்ந்தான்.

அந்நேரம், ஜோஷித்தைத் தாக்கியவனைப் பிடித்துக் கொண்டு வந்தான் சஜித் அவ்தேஷ்.

சஜித்திடமிருந்து விடுபட முயன்றதன் அடையாளமாக, முகம் வீங்கி கன்றிப் போய் இருந்தது.

சஜித் தவிப்புடன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஜோஷித்தை ஒரு முறை பார்த்து விட்டு, அப்புதியவனை பளாரென அறைந்தான். “ஏண்டா, என் அண்ணனை கொல்ல பார்த்த?” என்று உறுமிட, அவனோ வலியில் சுருண்டானே தவிர, வேறு பதில் கூறவில்லை.

“உன்ன தான் கேக்குறேன் பதில் சொல்லு…” என்று மீண்டும் அடித்ததும், கையை நீட்டி மெல்ல நிறுத்தக் கூறிய ஸ்வரூப்பின் சைகையில், தமையனின் முகம் பாராமல் நிறுத்திக் கொண்டவன்,

“ஏன், சார் இவனையும் மன்னிச்சு அனுப்பிடலாம்ன்னு நினைக்கிறீங்களா? சார் தான் ரொம்ப பொதுநலவாதி. நாங்கள்லாம் சொந்த கோபத்துக்கு பழி வாங்குறவங்க” என்று பல்லைக்கடித்தான்.

அவனை சலனமின்றி ஏறிட்ட ஸ்வரூப் அவ்தேஷ், உத்ஷவியின் புறம் திரும்பி, “இவனை இதுக்கு முன்னாடி பாத்துருக்கியா?” எனக் கேட்டான்.

புருவம் சுருக்கி சிந்தித்தவள், “இல்ல…” எனத் தலையசைக்க, மற்ற இருவரையும் நோக்கினான். அவர்களும் இல்லை என்றதில், மீண்டும் உத்ஷவியிடம், “அவனை கட்டிப்போடு.” என்றான்.

அங்கிருந்த ஒரு வார்டரோபில் கயிறையும் எடுத்து அவளை நோக்கித் தூக்கிப் போட, அதனைக் கேட்ச் பிடித்தவள், ‘ம்ம்க்கும்… இவனுக்கு அடியாள் வேலை வேற பார்க்கணுமா’ என நொந்தபடி, புதியவனின் அருகில் சென்றிட, சஜித் தான் ‘ஏன் அதை எங்ககிட்ட சொன்னா ஆகாதாமா?’ எனக் கடுகடுத்து, உத்ஷவியிடம் இருந்த கயிறை வெடுக்கென பறித்தான்.

அது, அவள் கையையும் உராய்ந்து சென்றதில், “ஸ்ஸ்…” என உள்ளங்கையைத் தேய்த்துக் கொண்டவள், “எருமை மாடு. உன் அண்ணனுக்கு நீ அடியாள் வேலை பார்க்கணும்ன்னா தாராளமா பாரு. அதுக்கு ஏன்டா என் கையை உடைக்கிற?” என்று முறைத்தபடி கூற,

அவனும் பதிலுக்கு முறைத்து, ஆடவனைக் கட்டிப் போட்டான்.

அதன் பிறகு, அவனிடம் எந்த கேள்வியும் கேட்கப்படாததே, லேசாய் உயிர் பயத்தைக் கொண்டு வந்திருந்தது. ஐந்து மணி நேரத்தில், வலியில் முகம் சுருங்கி கண் விழித்த ஜோஷித், அனைவரையும் சுற்றிப் பார்க்க,

பெண்களுமே அங்கேயே தான் இருந்தனர். தங்களின் மீது கத்தியை வீசி விடுவார்களோ என்ற பயமும் ஒரு காரணம் தான்.

அவன் விழித்து விட்டதில், விஹானா, “சீக்கிரம் கேளு.” என்றாள் அவசரமாக.

உடலை மெல்ல அசைத்து எழ முயன்றவனை, சஜித் தாங்களாக பிடித்து எழ வைக்க, “என்ன கேட்கணும்” என்றான் புரியாமல்.

“உனக்கு தூக்க மாத்திரை குடுத்து இருக்கு பனங்கா மண்டையா. மயக்கத்துல இருந்து எந்திரிச்சா நான் எங்க இருக்கேன்? எனக்கு என்ன ஆச்சுன்னு கேட்கணும்ல. அதான பாட்டர்ன்.” என்று யோசனையுடன் கேட்க, ஜோஷித்தும் சஜித்தும் அவளை புழுவைப் போல பார்த்து வைத்தனர்.

“சரி சரி… அதெல்லாம் வேணாம். வேற செண்டிமெண்ட் சீனாவது ஓட்டுங்க” என இருவரையும் பார்த்தாள்.

சஜித், “எதுக்கு செண்டிமெண்ட் சீன்?” எனக் குழப்பத்துடன் கேட்க,

“அட என்னடா நீயி… உன் உடன்பிறப்புக்கு அடி பட்டதுல உனக்கு கோபம் எல்லாம் போய், கண்ல இருந்து கண்ணீர் மழை பொழியல.” என்றதில், “இல்ல…” என்றான் அசட்டையாக.

ஆளாளுக்கு அடிபட்டதில், மனம் இளகி மூவரும் நன்றாகப் பேசிக்கொண்டால், அதனைப் பயன்படுத்தி, அவர்களைக் கரைத்து அங்கிருந்து தப்பித்து விடலாம் என திட்டமிட்டவர்களின் எண்ணத்தில் ஆசிட் ஊற்றினான் சஜித் அவ்தேஷ்.

‘நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே…’ என அக்ஷிதா கன்னத்தில் கை வைக்க, உத்ஷவி அவர்களின் உரையாடலில் கலந்து கொள்ளவே இல்லை.

முக்கியமாக, விஹானாவை ‘டார்ல்ஸ்’ என அழைப்பதைத் தவிர்த்தாள்.

அப்போது, டிராயரில் இருந்த துப்பாக்கி ஒன்றில் சைலென்சரை மாட்டிக்கொண்டிருந்த ஸ்வரூப் அவ்தேஷ், புதியவனின் முன் துப்பாக்கியுடன் நிற்க, அவன் மிரண்டான்.

துப்பாக்கியை அன்லாக் செய்தபடி, “உன்னை யார் அனுப்புனா, எதுக்கு இங்க வந்தன்ற உண்மையை சொல்ல போறியா? இல்ல, சஸ்பென்ஸோடையே சாகப் போறியா?” என அனலடித்தான்.

எச்சிலை விழுங்கியவன், “என்னை யார் அனுப்புனான்னு எனக்குத் தெரியல. ஆனா, உங்களையும் உன் கூட இருக்குற பொண்ணுங்களையும் கொல்லச் சொன்னாங்க.” என்றதில், பெண்கள் மூவரும் அதிர்ந்தனர்.

“யாரு சொன்னது?” மீண்டும் கூர்மையுடன் அவ்தேஷ் கேட்க, “எனக்கு தெரியாது…” என்று இடவலமாகத் தலையாட்டியவனை, கண்ணிமைக்கும் நேரத்தில் நெற்றிப்பொட்டில் சுட்டிருந்தான்.

அந்நொடியே அவன் மூர்ச்சையாகி இருக்க, பாவையரும் மூச்சு விட மறைந்திருந்தனர்.

“இதோட ரெண்டாவது மர்டர்…” அக்ஷிதா அச்சத்துடன் முணுமுணுக்க, விஹானாவிற்கோ இறந்தவனது பாடியை தங்களை புதைக்க சொல்லிவிடுவானோ என்ற மிரட்சி தோன்றியது.

உத்ஷவிக்கு ஏனோ கோபமும் எரிச்சலும் மின்னி மறைந்தது. ‘இவனுங்களோட சேர்ந்ததுக்கு, எங்களையும் சேர்த்து கொல்ல பாக்குறானுங்க.’ என ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்திட, அந்நேரம், சில கிராமத்து ஆட்கள் அங்கு வந்தனர்.

“ஐயா சாமி… என் புள்ளை காணாம போய்ட்டான்ய்யா. இனிமே, யாரும் காணாம போக மாட்டாங்கன்னு சொன்னீங்களே. இப்ப என் புள்ள எங்க போனானோ தெரியலையே.” என்று அழுது அரற்றனார் ஒரு பெரியவர்.

ஆடவர்கள் அதில் திகைத்து, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஸ்வரூப்பிற்கு கோபம் எரிமலையாக வெடித்தது.

தங்களை திசை திருப்பி விட்டு, நினைத்தது போன்றே கடத்தி விட்டனரே என்று கையை இறுக்கி மூடியவன், “உங்க பையனை தேடி பிடிச்சு உங்க கிட்ட ஒப்படைக்க வேண்டியது எங்க பொறுப்பு.” என்று பேசி அவர்களை அனுப்பி விட்டவன், இறந்த புதியவனை மேலும் கண்ணாபின்னாவென சுட்டான்.

“டாமிட்… அலெர்ட்டா இருந்தும் எப்படி நடந்துச்சு?” எனத் தலையைக் கோதி கொந்தளிக்க, ஜோஷித்தும் புரியாமல்,

“இதோட 21 ஆளுங்க காணாம போய்ட்டாங்க. அதுல நாகாவும் ஒரு ஆளு. நம்மளைக் கொல்லச் சொன்னதும், கடத்துனதும் ஒரே ஆளா இருப்பானோ?” என சந்தகத்துடன் வினவியவனுக்கு, தனக்காக தன்னைத் தாக்க வந்தவனை சரமாரியாகக் கொன்ற ஸ்வரூப்பின் மீதிருந்த ஆதங்கம் மெல்ல மறைந்தது.

அவன் எதிர்பார்த்தது, எப்போதும் எந்த நிலையிலும் தன்னை விட்டுக்கொடுக்காத சகோதரப் பாசத்தைத் தானே! அப்பாசத்தை அல்லவா அவன் அமைதி கேள்விக் குறியாக்கி விட்டது. அதே நேரம், அவன் ஸ்வரூப்பின் அன்பை சந்தேகம் கொண்டதில், அவன் மனமும் காயப்பட்டுப் போயிருக்கும் என்ற கோணத்தை மறந்து விட்டான்.

சஜித்திற்கே ஸ்வரூப்பின் பாராமுகம் என்னவோ போல் இருந்தது. இப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் செய்வதறியாமல் அவனும் திகைக்க,

உத்ஷவி பொறுமை இழந்தாள்.

“இங்க என்ன தான் நடக்குது?” என்று எரிச்சலாகக் கேட்டவள், “உங்க வீட்டுக்கு திருட வந்ததுல இருந்து தான் இவ்ளோ பிரச்சனையும்! நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருந்தோம். இப்ப நீ எல்லாரையும் கொன்னு எதிரியை உருவாக்கி, அவன் எங்களையும் சேர்த்து கொல்ல நினைக்கிறான். இதுக்கு மேலயும் நீ சொல்றதை கேட்டுட்டு என்னால இங்க இருக்க முடியாது ஸ்வரூப். நான் போறேன்.” என்று அழுத்தத்துடன் கூறியவளை அவனும் அதே அழுத்தத்துடன் பார்த்தான்.

“அப்படி எல்லாம் நீ கிளம்பிட முடியாது. அந்த ராகேஷ் பத்தி தெரிஞ்ச மூணு பேர் நீங்க மட்டும் தான். உங்களை வச்சு தான், மத்தவங்களை பிடிக்க முடியும். அது மட்டுமில்ல, என் வீட்ல நீ திருடி இருந்தா கூட, அந்த ராகேஷ் உங்களை கொன்னுருப்பான். இப்பவும் உங்களை கொலை பண்ண தான் நினைக்கிறாங்க.” என்று என்றுமில்லா பொறுமையுடன் விளக்கிட,

“சும்மா, இந்த பிலிம் காட்டுற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம். நீ நினைக்கிற மாதிரி எல்லாம், ராகேஷ் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது, மத்த ரெண்டு பேருக்கும் தெரியுமா தெரியாதான்னு நீயே கேட்டு தெரிஞ்சுக்க.” என்றிட,

சஜித், “ப்ச். போய் சாக போறியா. அதுக்கு எங்ககூட இருந்தா உயிராவது மிஞ்சும். இந்த கிராமத்துல 20 வாலிப பசங்க காணாம போயிருக்காங்க. அது யாருன்னு கண்டுபிடிக்கத் தான், நாங்க அலைஞ்சுட்டு இருக்கோம். காணாமல் போனவங்களை பத்தியும் எந்த தகவலும் கிடைக்கல…” என்று அவன் பங்கிற்குக் கூறினான்.

ஜோஷித்தும், “அது மட்டுமில்ல. நீங்க திருட வந்தீங்களே டாக்குமெண்ட்… அது எங்களோட ஆப்போனேன்ட் ப்ரீத்தனோட டாக்குமெண்ட் தான்.
எங்க கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குற கிராமங்களையும் மக்களையும் அழிச்சு, லக்ஷுவரி அபார்ட்மெண்ட் கட்டுறதுக்கான டாக்குமெண்ட் அது. கவர்ன்மென்ட்ல கோடி கணக்குல லஞ்சம் குடுத்து, அதுக்கான அப்ரூவல் வாங்கி இருக்கான். அத நாங்க எடுத்துட்டு வந்துட்டோம். மறுபடியும் அவன் அப்ரூவல் வாங்கணும்ன்னா, திரும்பக் கோடிக்கணக்கில செலவு பண்ணனும். அந்த ஒரிஜினலை வச்சு தான் அவன் மூவ் பண்ண முடியும். அதை தான் உங்களை திருடிட்டு வர சொல்லி அனுப்பி இருக்கான். அது அவன்கிட்ட இருந்தா…” என பேசிக்கொண்டே செல்ல, உத்ஷவி இடைநிறுத்தினாள்.

“சரி, அதான் நாங்க திருடலையே. அப்பறம் ஏன் எங்களை பிடிச்சு வச்சுட்டு இம்சை பண்றீங்க. இந்த விஷயத்துல நான் என்ன பண்ண முடியும்? உங்க கூட சேர்ந்து எவன் கையாலையும் சாக முடியாது என்னால. நீங்க சோசியல் சர்விஸ் பண்ணனும்ன்னா தாராளமா பண்ணுங்க. அதுல என்னை இழுக்காதீங்க. இதோ, இந்த ரெண்டு பேரையும் வச்சு டெஸ்ட் பண்ணிக்கங்க. நான் கிளம்ப தான் போறேன்.” என்று திட்டவட்டமாக உரைத்தவளை வெறித்த ஸ்வரூப், “கிளம்பு!” என்றான் உணர்ச்சி துடைத்த முகத்துடன்.

முதலும் முடிவும் நீ…
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
72
+1
5
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. Indhu Mathy

      ஜோ தூக்க கலக்கத்துல உளறுனதுல பிரண்ட்ஸ்குள்ள பிரிவு வந்துடுச்சு… ஷவி ரொம்ப கோபமா இருக்காளே விஹா மேல…. விஹா, அக்ஷிதாவை விட்டுட்டு போயிடுவாளா…. 🤔🤔🤔

      21 பசங்களை கடத்தி வச்சுருக்கிறது இவங்களை பிளாக்மெயில் பண்ணி இடத்தை அடையவா.. 🧐🧐🧐🧐