Loading

அத்தியாயம் 38

“என்ன இவன் இன்னைக்கு இவ்ளோ பொலைட்டா பேசுறான்…” என எண்ணிய இஷானாவிற்கு முதலில் பயப்பந்து உருண்டோடியது. இடியே விழுந்தாலும், அத்தையைத் தவிர அவர் குடும்பத்தில் யாரிடமும், ஸ்வரூப் மென்மையாகவோ முகம் கொடுத்தோ பேசியதே கிடையாது. பூமிநாதனிடம் கூட மரியாதைக்காக நின்று இரண்டு வார்த்தைப் பேசுவான் அவ்வளவு தான்.

ஏனோ, சிறு வயதிலிருந்தே அத்தைக் குடும்பத்துடன் அவனால் ஒன்ற இயலவில்லை. அவனுக்கு மட்டுமல்ல அவனது சகோதரர்களுக்கும் தான். அத்தைப் பெண்கள் என்றால், சுவாரஸ்யத்துடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளும் இளைஞர்கள் மத்தியில், அத்தைப் பெண்களைக் கண்டாலே, காத தூரம் ஓடிவிடுவார்கள்.

அதையும் மீறி அவர்களிடம் பேசும் சூழ்நிலை ஏற்பட்டால், அவர்கள் கேட்கும் கேள்விக்கு ‘ஆமாம்’ ‘இல்லை’ என்றதோடு முடித்துக் கொள்வார்கள்.

பள்ளி, கல்லூரியிலும் கூட உடன் படிக்கும் பெண்களிடம் சகஜமாக இரு வார்த்தைகள் பேசி விடும் ஆடவர்களுக்கு, இப்பெண்களை மட்டும் பிடிப்பதே இல்லை. முதலில் அவர்களது தாத்தா அவர்களுடன் திருமணப் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் போது திகைக்கவே செய்தார்கள்.

ஸ்வரூப்பிற்கும் எரிச்சல் மிகுந்தது தான். ஆனால், குடும்பத்தின் வழக்கப்படி அவர்களைத் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்க, அவன் அமைதியாக ஒப்புக்கொண்டான். அவனது அமைதியில் மற்ற இருவருமே மறுக்க இயலாது போனது.

ஏன் பிடிக்கவில்லை என்று கேட்டால், பல காரணம் சொல்வார்கள்!

முதலில் அவர்களது பகட்டான வாழக்கையே காரணம். தனது ராஜ பரம்பரை என்ற முத்திரையை அனைத்து இடத்திலும் பயன்படுத்தி விடுவார்கள். பள்ளியிலும் கல்லூரியிலும் இவர்களுக்கென தனி இடம், தனி மரியாதையை நிச்சயமாக அளிக்க வேண்டும். இல்லையென்றால், பூமிநாதன் பேயாட்டம் ஆடி விடுவார்.

அவர்களுடன் பேசுவதற்குக் கூட, அந்தஸ்து வெகு முக்கியம். ‘ஏன் இந்த பாகுபாடு?’ என்று கேட்டால் கூட, மற்றவர்கள் எங்களை தவறாகப் பயன்படுத்தி, பெண்களின் இளகு மனதை மேலும் இளக்கி தங்களது குடும்பத்திற்கு எதிராக வந்து விடுவிடக் கூடாது என்றே, யாரிடமும் பேசுவதில்லை என்று சப்பைக் கட்டுக் கட்டுவார்கள்.

இஷானிக்கு திராட்சைப் பிடிக்கும் என்ற காரணத்தினாலேயே, சித்தூரில் அமைந்திருக்கும் ஒரு மலைக்கிராமத்தில், ஒரு நலிந்த விவசாயிக்கு சொந்தமான, திராட்சைத் தோட்டத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, அங்கே அவரையே தினக்கூலியாக்கி வைத்திருந்தார் பூமிநாதன்.

அதனை அறிந்து ஸ்வரூப் அவரைக் கண்டிக்க, பூமிநாதனோ கதையையே மாற்றி இருந்தார்.

அந்த விவசாயி, குடும்ப வறுமையில் அவதிப்படுவதாகவும், தோட்டத்தை விற்க இயலாமல் கஷ்டப்படுவதாகவும், அவரே முன் வந்து அந்த இடத்தை வாங்கியதும் அல்லாமல், அவருக்கு ஒரு வேலையும் போட்டுக் கொடுத்ததாகவும் கூறிட, பெரியவர்கள் அதனை அப்படியே நம்பி விட்டனர்.

ஆனால், இளையவர்கள் தான் அவரைத் தீயாக முறைத்து வைத்தனர்.

“இவருக்கு நடிக்க சொல்லியா தரணும்” என ஜோஷித் முணுமுணுத்துக் கொள்ள,

சஜித்தும், “எப்படித் தான் இவரு பொய்ய உண்மை மாதிரியே பேசி சமாளிக்கிறாரோ. இதே புத்தி தான் அவரோட நாலு பசங்களுக்கும் அப்படியே வந்துருக்கு. அத்தை மாதிரி ஒன்னு கூட இல்ல.” என்று சலித்தான்.

ஸ்வரூப்போ, “அத்தை மட்டும் விதிவிலக்காடா… அவங்களுக்கும் இதே புத்தி தான். ஆனா என்ன, குடும்பத்துல மேல இருக்குற பாசம் மட்டும் உண்மை. தாத்தாவுக்கு இதெல்லாம் புரியுதா… இல்ல புருஞ்சும் கண்டுக்காத மாதிரி இருந்துக்குறாரான்னு தெரியல. அது தான் கடுப்பா இருக்கு. இல்லன்னா, இந்த மாமன்காரனை எப்பவோ அடிச்சு துவம்சம் பண்ணிருக்கலாம். அவரோட பொண்ணுங்களும் பையனும் நம்ம வழிக்கு வந்துருப்பாங்க. இப்போ எல்லாம் நம்ம தலைமேல நின்னு ஆடுதுங்க. அதை நம்மளால தடுக்கக் கூட முடியல.” என்றான் சினத்துடன்.

“ம்ம்க்கும்… அவரைப் பொறுத்தவரை, அவரோட ஒத்த மருமகன் என்ன செஞ்சாலும் அதை நியாயப்படுத்த தான் பார்ப்பார். அப்போ தான அவரோட பொண்ணு மனசு குளிரும்… சரி விடு. கல்யாணத்துக்கு அப்பறம் சரி ஆகிடும்ன்னு தாத்தா சொல்றாரு. ஒருவேளை கல்யாணம் முடிஞ்சதும் நமக்கு மஞ்சக்கயிறு மேஜிக் மாதிரி அத்தை பொண்ணு மேல லவ்வு கிவ்வு வந்துடும் போல…” என மனதைத் தேற்றிக்கொண்டு ஜோஷித் சமாளித்தான்.

‘அப்படியே வந்துட்டாலும்…’ என சஜித் வாய்க்குள் முணுமுணுத்து விட்டு, “வரலாம்.” என்றான் அசட்டையாக.

ஸ்வரூப் தான் முகத்தை அஷ்டகோணலாக்கி, ‘லவ்வு கூட வர வேணாம். அத்தைப் பொண்ணுன்ற அட்ராக்க்ஷன் வந்தா கூட போதும்…’ எனத் தனக்குள் நொந்து கொண்டு, “உனக்கு அனன்யா மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு போல. அதான் லவ் வராதான்னு ஃபீல் பண்ற” என்று ஜோஷித்தை வாரினான்.

அதில் விழித்த ஜோஷித், “ஆமா ஆமா… லவ் மேரேஜ் பண்ணனும்ன்னு ரொம்ப ஆசை. அட்லீஸ்ட் அது எப்படியாவது நடக்காதான்னு நானும் ட்ரை பண்றேன். ம்ம்ஹும் ஒண்ணும் நடக்காது போல.” என்று முகத்தைச் சுருக்கிட,

சஜித்தோ, “எதுக்கும் அனன்யாவைக் கூட்டிட்டு வெளில எங்கயாவது போயிட்டு வாடா… லவ் ஃபீல் வரலாம். நீ தான் அவளைப் பார்த்தாலே பத்து ஸ்டெப் பின்னாடி போறியே” என்று கலாய்த்தவன், “பாத்துடா, லவ்வு வேற பொண்ணு மேல வந்துடப் போகுது.” என்று விளையாட்டாய் பேசிட,

“நீங்க மட்டும் என்னடா… நானாவது பத்து ஸ்டெப் தான் பின்னாடி போறேன், நீ எல்லாம் பாவனா வீட்டுக்கு வந்தான்னு தெரிஞ்சா, ரூமை விட்டே வெளில வர மாட்டுற.” என்றவன், நமுட்டுப் புன்னகை வீசிய ஸ்வரூப்பைக் கண்டு,

“நீ இவனுக்கும் மேல, இஷானி இருக்கான்னு தெரிஞ்சா, நாலு நாள் ஆனாலும் வீட்டுப்பக்கம் வர மாட்ட. என்னை மட்டும் சொல்ல வந்துட்டானுங்க.” என்று எகிறி, இருவரையும் முறைத்தான்.

அதில் அவர்களின் சிரிப்புச் சத்தம் அதிகமாகி, தங்களது பிடித்தமின்மையைத் தங்களுக்குள்ளேயே மறைத்து, அவர்களுடனான திருமண வாழ்வுக்கு முழு மனதுடன் தயாராகினர்.

ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்த இரு நாட்களிலேயே ப்ரீத்தனின் உண்மை முகம் தெரிய வந்ததில் ஆடவர்களுக்கு கடும் கோபம். ஆகினும், அண்ணன் செய்த தவறுக்கு தங்கைகளைத் தண்டிப்பது தவறு என்று தந்தையர்கள் அறிவுறுத்தியதில் பல்லைக் கடித்து அமைதிக் காத்தனர்.

ஸ்வரூப் சொன்னது போன்று, நடராஜின் ஈமச்சடங்குகளை முடித்து விட்டு, ஆந்திராவை நோக்கிப் பறந்தனர்.

அவர்கள் தற்போது தங்கி இருக்கும் மலைக்கிராமத்திற்கு வந்து, அவர்களது காட்டேஜ் வாசலில் காரை நிறுத்த, அங்கு ஆடவர்களின் அத்தைப் பெண்கள் அவர்களை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

திருட்டுப் பெண்களும் ஆடவர்களுடன் வருவது கண்டு ஆத்திரம் மிகுந்தாலும், அதனை அடக்கிக் கொண்டு, “உங்களுக்காக எவ்ளோ நேரம் வெய்ட் பண்றேன் தெரியுமா ஸ்வரூப். ஏன் இவ்ளோ நேரம்? எங்க போனீங்க…” எனத் தேனாய் இனிக்கும் குரலில் அக்கறை கலந்துக் கேட்டாள் இஷானி.

கூடவே அவளது கரங்கள் அவனது கரத்தைப் பற்றிக்கொள்ள, ‘இவ்ளோ டிராஜிடில உனக்கு ரொமான்ஸு கேட்குது… ஹ்ம்ம்!’ என சிலுப்பிக் கொண்டு உத்ஷவி உள்ளே நுழைய, “ஏய்” என்ற இஷானியில் குரலில் நின்றாள்.

“நாங்க பெர்சனலா பேசணும். நீங்க மூணு பேரும் வெளில நில்லுங்க.” எனக் காட்டத்துடன் உத்தரவிட்டவள், விறுவிறுவென உள்ளே செல்ல, பாவனாவும் அனன்யாவும் அவர்களை முறைத்து விட்டு உள்ளே சென்றனர்.

ஆடவர்களும் மிகவும் அடக்கமாக அவர்களின் பின் செல்ல, விஹானாவிற்கு லேசாய் கடுப்பு எழுந்தது.

“பாத்தியாடி இவனுங்கள… ஆளைப் பார்த்ததும் நம்மளை கழட்டி விட்டுட்டானுங்க.” எனப் பொங்கிட,

அக்ஷிதாவும், “பார்க்க பளபளன்னு புதுசா போட்ட டைல்ஸ் மாதிரி இருக்காளுங்கள்ல… ஃபியூச்சர் வைஃப் வேற போகாம இருக்க முடியுமா டார்ல்ஸ்.”  என்றவள், “ஹ்ம்ம்… நான் கூட இன்வெஸ்டிகேஷன், க்ரைம்ன்னு திருட்டு வேலையை ஓரங்கட்டிட்டு புது பாதைல போயிட்டு இருக்கோம்ன்னு என்னை நானே பெருமையா நினைச்சுட்டு இருந்தேன். கடைசில, அவனுங்க ஜொள்ளு விடுறதுக்கு நம்மளை காவல் காக்க விட்டுட்டு போய்ட்டானுங்க. இதுக்குத் திருட்டு வேலையே எவ்வளவோ பெட்டர்” என்றாள் சோகமாக.

உத்ஷவியோ, “எப்படி எப்படி… இவனுங்களுக்காக நம்ம தூங்காம சாப்பிடாம கூட சேர்ந்து அலைவோமாம். சரியா குளிச்சு மூணு நாள் ஆகுது, பல்லு விலக்குறது கூட மறந்துப் போச்சு. வெயில்ல அலைஞ்சு அலைஞ்சு, மூஞ்சிக் கறுத்து, லிப்ஸ் எல்லாம் ட்ரை ஆகி, அகோரி மாதிரி இருக்கோமாம். இவளுங்க மேக்அப் கலையாம, போட்டுருக்குற ட்ரெஸ் நலுங்காம ஆர்டர் போடுவாளுங்களாம் நம்ம அதை செய்யணுமா.” என எகிறியதில்,

“நம்ம பார்க்க அகோரி மாதிரி ஆகிட்டோமா டார்லிங்…” என வெகுவாய் வருந்திய விஹானா, கார் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டவள், “ஓ மை காட்! ராகேஷ் ஆபிஸ்ல ஏசிக்குள்ள இருந்து ஏத்துன கலரை எல்லாம் ரெண்டே நாள்ல கறுக்க வச்சுட்டானுங்களே.” என உதட்டைப் பிதுக்கினாள்.

“இப்ப சொல்லு நம்ம அவ போட்ட ஆர்டரை மதிச்சு இங்க நிக்கணுமா? இல்ல உள்ள போய் அவனுங்களோட ரொமான்ஸை கெடுத்து விடலாமா.” என வேகமாக கதவை உடைக்காத குறையாக உள்ளே சென்றாள்.

“வீட்டுக்குத் திருட வந்தவளுங்களை எதுக்குக் கூட வச்சிருக்கீங்க ஜோ. ஜெயிலுக்கு அனுப்பி விட வேண்டியது தான” என அனன்யா கொந்தளிக்க,

“கண்டிப்பா அனுப்பியே ஆகணும் அனன்யா. செஞ்சத் தப்புக்கு தண்டனை அனுபவிச்சே தீரணும்” என அழுத்தம் திருத்தமாக அவளை கூர்பார்வைப் பார்த்தபடி ஜோஷித் கூற, உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியில் சிரித்து வைத்தாள் .

பாவனாவோ “அதான, நீங்க காரணம் இல்லாம எதுவும் செய்ய மாட்டீங்கன்னு நான் சொன்னேன். இவள் தான் கேட்கல” என சமாளித்து அசடு வழிய, இஷானி தான், “இருந்தாலும், தராதரம் இல்லாம அந்தப் பொண்ணுங்களை உங்களுக்கு சமமா நடத்துறது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கல ஸ்வரூப்.” என்றாள் எரிச்சலை அப்பட்டமாகக் காட்டி.

இந்த உரையாடல்களை எல்லாம் கேட்டபடி வாசலில் நின்ற மூவரும் கோபத்துடன் முறைக்க, ஸ்வரூப்போ உத்ஷவியின் புகைச்சலைக் கண்டு நிம்மதியுற்று, “உனக்குப் பிடிக்கலைன்னா, இனி செய்ய மாட்டேன் இஷா.” என்றான் சட்டென.

அதனை இஷானியாலேயே நம்ப இயலவில்லை போலும். பேந்தப் பேந்த விழித்தாள்.

ஸ்வரூப்போ யோசனையுடன் நெற்றியைக் கட்டை விரலால் நீவியபடி, இஷானியின் கையைப் பற்றினான்.

அதில் காரணமின்றி, உத்ஷவிக்கு வயிறு திகுதிகுவென எரிந்தது.

‘நம்ம சைட்டு, இன்னொருத்தியை சைட் அடிக்கிற வலி இருக்கே அந்த வலி…’ என முணுமுணுத்து வராத கண்ணீரைத் துடைத்துக் கொள்ள,

அக்ஷிதா, “இவன் என்னடி… ஒரு ரொமான்ஸ் காட்சி கூட ஓட்டாம ஓரமா நின்னுட்டு இருக்கான். அவன் ஃபியான்ஸி அவனை பார்வையாலேயே தின்னுடுவா போல.” என எந்த உணர்வையும் காட்டாமல் இறுக்கத்துடன் நின்ற சஜித்தைக் கை காட்டிக் கூற, விஹானாவின் விழிகள் அவளது அனுமதி இன்றியே ஜோஷித்தைப் பார்த்தது.

அவன், அனன்யாவை நக்கலுடனும், அழுத்தத்துடனும் பார்த்தது அவளுக்கு ரசனையுடன் பார்ப்பது போலொரு பிரம்மையை ஏற்படுத்த, அவளால் அவன் மீதிருந்த கண்களை அகற்றவே இயலவில்லை.

ஏதோ தோன்ற ஜோஷித், புருவம் சுருக்கி விஹானா நின்ற திசையைப் பார்க்க, அவள் சரட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டதில், அவன் இதழ்கள் மர்ம முறுவல் பூத்தது.

“கையைப் பிடிச்சு போஸ் குடுத்தது போதும். வேகமா பேசி முடிக்கிறீங்களா.” என உத்ஷவி நொடித்துக் கொள்ள, அவளை அதட்டும் முன் இஷானியின் கவனத்தைத் தன்புறம் திருப்பிய ஸ்வரூப்,

“இஷா டியர்… உனக்குப் பிடிக்காததை எல்லாம் ஒரு பேப்பர்ல எழுதிக் குடுத்தா, அதை பார்த்து எதை பண்ணலாம், இந்தத் திருடியை எப்படி நடத்தலாம், எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணி வேலை வாங்கலாம்ன்னு ஒரு க்ளாரிட்டி கிடைக்கும். இந்த வேலை எல்லாம் முடியிற வரை எனக்கும் அது ஒரு ஞாபகார்த்தமா இருக்கும். நீ ஏன் எனக்கு ஒரு லெட்டர் எழுதித் தரக் கூடாது.” என அவளைக் கிறங்க வைத்தான்.

அவனது பேச்சில் மயங்கிப் போன இஷானி, நொடி கூட யோசியாமல் “அதுக்கு என்ன? எழுதித் தந்துட்டாப் போச்சு…” என்றவள், அவசரமாக ட்ராயரில் இருந்து நோட்பேடை எடுத்து, மடமடவெனக் காதல் கடிதம் ஒன்றை எழுதத் தொடங்கினாள்.

“அடச்சை… ஞாபகார்த்தமா கிஸ்ஸோ ஹக்கோ கேட்டு, கண்ணுக்குக் குளிர்ச்சியா சீன் ஓட்டுவன்னு பார்த்தா, 80’ஸ் ஹீரோ மாதிரி லெட்டர் கேட்டுட்டு இருக்க.” என முகத்தைச் சுளித்த உத்ஷவியிடம், சிரிப்பை அடக்கிக் கொண்டு, “கண்ணுக்குக் குளிர்ச்சியா தான. டைம் வரட்டும் சீன் ஓட்டலாம்.” என்றான் அர்த்தப்பார்வையுடன்.

“அடி ஷவி. இவனுங்க இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டானுங்கடி. கல்யாணம் ஆகி, வீட்ல நாள் குறிச்சா தான் ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கே போவானுங்க போல.” என்று கலாய்த்தது சஜித்தின் காதிலும் விழ, திரும்பி அவளை முறைத்து வைத்தான்.

உண்மையில் அக்ஷிதாவிற்கு எந்த வித உணர்வும் எழவில்லை. உத்ஷவிக்கு ‘நம்ம சைட் அடிச்சவன்’ என்கிற உரிமையுடன் அவனுடன் விளையாட்டுத் தனமாக பேசினாளே தவிர அவளுக்கும் அவனது கொஞ்சல்கள் எல்லாம் பாதிக்கவில்லை.

ஆனால், விஹானாவிற்கு பாதித்தது. என்னவோ, இதுவரை உணராத வலி ஒன்று நெஞ்சைத் தீண்டுவதைத் தடுக்க இயலாமல் திணறினாள்.

இஷானியோ, வெகு சிரத்தையாய் கடிதத்தை எழுதி ஸ்வரூப்பிடம் நீட்ட, அதனை வாங்கிப் பார்த்தவனின் முகம் ஒரு நொடி இறுகியது.

அத்தியாயம் 39

“குட். சரி கிளம்பு. மீதியை நான் பாத்துக்குறேன்.” என்று ஸ்வரூப் கடினத்துடன் கூற, “இவளுங்களை மொதல்ல துரத்தி விடுங்க ஸ்வரூப்” என்றாள் இஷானி.

“யாரை, எப்போ எப்படி துரத்தணும்ன்னு எனக்குத் தெரியும் இஷா. நொவ் கெட் அவுட்.” என்றவனின் கர்ஜனையில், ‘இவ்ளோ நேரம் நல்லாத்தானே இருந்தான்’ என மிரண்ட பாவனாவும் அனன்யாவும் தெறித்து வெளியில் ஓடி விட, இஷானி உறுத்தலுடனும் பயத்துடனும் அங்கிருந்து சென்றாள்.

ஆனால், அந்த பயத்தில் சிறிது கூட இல்லாத உத்ஷவி, “நீ என்னடா அந்நியன் மாதிரி திடீர்ன்னு கொஞ்சுற திடீர்ன்னு கடிக்கிற. பாவம் அந்தப் பொண்ணு, உங்கிட்ட பேசுறதுக்குள்ள பைத்தியமே பிடிச்சுடும் போல அவளுக்கு.” என இஷானிக்காகப் பரிதாப்பட்டாள்.

“மூடிட்டு ரூமுக்கு போடி.” என்று எரிந்து விழுந்தவன், இஷானி கொடுத்து விட்டுச் சென்ற கடிதத்தில் இருந்த கையெழுத்தையே ஆத்திரம் பொங்கப் பார்த்திருந்தான்.

உத்ஷவியின் வீட்டிற்குச் சென்ற போது, ஸ்வரூப் பங்களாவின் ப்ளூ பிரிண்ட்டை டேபிள் மீது வைத்திருந்ததைக் கண்டான்.

“மேப் போட்டு திருட பிளான் பண்ணிருக்காளுங்க திருட்டு ராஸ்கல்ஸ்…” என்று மனத்தினுள்ளேயே இவர்களைத் திட்டியவன், அப்போது தான் ஒன்றைக் கவனித்தான்.

அந்த ப்ளூ பிரிண்ட்டிலேயே, ஆங்காங்கே அம்புக்குறிப் போட்டு, ஆடவர்களின் அறைகள் பற்றிய விளக்கத்தை எழுதி இருந்ததைக் கண்டவனுக்கு சுருக்கென இருந்தது.

அது இஷானியின் கையெழுத்து. அந்த உயர்ரக பேனாவைக் கூட, அவள் மட்டுமே உபயோகிப்பாள். அந்த மையை வைத்தே, அதனைக் கண்டறிந்தவனுக்கு, அத்தை மகள்களின் மீது சினம் பெருக்கெடுத்து ஓடியது.

அதே நேரம், நாகவல்லி இறுதியாக விசாரித்த கேஸ் பற்றிய தகவல் வர, ஸ்வரூப்பின் சந்தேகம் சரியாகிப் போனது.

சஜித் அலைபேசியில் கிடைத்த தகவலில் திகைத்து, “ஸ்வரா… நாகா கடைசியா, விசாரிச்சது பத்ரி பத்தின கேஸை தான். அது மட்டுமில்ல, கடத்தப்படுறதுக்கு முன்னாடி நாள், மேனகாவோட வீட்டுக்குப் போயிருக்கா. அவளோட அட்ரஸ்ஸும் கிடைச்சுடுச்சு.” என்றதும்,

ஜோஷித், “அப்போ அவங்களை பத்தின ரகசியத்தைத் தெரிஞ்சுக்கிட்டதுனால தான் அவளைக் கடத்தி இருக்காங்க ஸ்வரா.” என்றதும்,

“கடத்த மட்டும் தான் செஞ்சுருக்காங்களா? இல்ல கொலையே செஞ்சுட்டாங்களான்னு அந்த பாஸ்டர்ட்ஸைப் பிடிச்சா தான் தெரியும்.” என்ற ஸ்வரூப்பின் கூற்றில், அப்பெண்ணிற்காக மூவரும் வருந்தினர்.

அடுத்த சில நிமிடங்களையே மற்றொரு அலைபேசி அழைப்பு அவர்களை மேலும் திகைக்க வைத்தது.

ரயில்வே டிராக்கில் ஒரு பெண்ணின் பிணம் கிடைத்ததில், அப்பெண்ணைப் பற்றி விசாரிக்க, அது மேகனா என்றறிந்ததும் ‘என்னடா இது’ என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்போது தான், படுக்கையில் டொம்மென விழுந்த உத்ஷவி, “இன்னைக்கு ராத்திரியாவது நல்லாத் தூங்கணும் டார்ல்ஸ்.” என்றிட, அக்ஷிதா கொட்டாவி விட்டபடி, “ஆமா ஷவி. செம்ம டயர்டு. ப்ராஜெக்ட்ட கூட நம்ம இவ்ளோ சிரத்தை எடுத்து செஞ்சது இல்லை. இவனுங்க ரெஸ்ட் விடாம வேலை வாங்குறானுங்க” என்னும் போதே, ஸ்வரூப் அவர்களது அறைக்கதவைத் தட்டினான்.

அத்தனை நேரமும் ஜோஷித் பற்றிய யோசனையிலேயே உழன்ற விஹானா, பெண்களிருவரின் கொலைவெறி முகத்தைக் கண்டு புன்னகைப் பூக்க, “இவனுங்களை நம்பி தூங்க போறீங்களேடி. அடுத்து என்ன ஆப்போட வந்துருக்கானுங்களோ.” என்றவாறு கதவைத் திறக்க, ஆடவர்கள் சொன்ன செய்தியில் அவர்களும் குழம்பினர்.

உத்ஷவியோ, “அய்யய்யய்ய… என்னங்கடா இது பெரிய ரோதனையா இருக்கு. மேகனாவை சுத்தி தான் பிரச்சனைன்னு தெரிஞ்சு வழியைக் கண்டுபிடிக்கலாம்ன்னு பார்த்தா, இங்க மேகனாவே பிரச்சனைல மாட்டி செத்துருக்கா.” என்று தலையில் கை வைத்தாள்.

ஸ்வரூப்போ யோசனையுடன், “உனக்கு இப்ப மேகனாவைப் பார்த்தா அடையாளம் தெரியுமா திருடி” எனக் கேட்க,

“மனசாட்சி இருக்கா உனக்கு. அவளைக் கடைசியா நான் பார்க்கும் போது, எனக்கு 14 வயசு. கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு.” என்றதில், தலையை அழுந்தக் கோதியவன், “சஜி… அது உண்மையாவே மேகனா தானான்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கன்ஃபார்ம் பண்ணச் சொல்லு.” என்றதும்,

“நான் இதை ஆல்ரெடி சொன்னேன் ஸ்வரா. ஜுவனைல்ல இருக்கும் போது குடுத்த அங்க அடையாளத்தை வச்சு, அந்த பாடி மேகனா தான்னு போலீஸ் கன்ஃபார்ம் பண்ணிடுச்சு.” என்றான் உறுதியாக.

ஜோஷித் குழப்பத்துடன், “எனக்கும் இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு தோணுது ஸ்வரா. நம்மளோட அடுத்த மூவ் தெரிஞ்சு வச்சுருக்குற யாரோ தான், நம்மளோட அடுத்த டார்கட் மேகனான்னு தெரிஞ்சு அவளைக் கொலை செஞ்சு இருக்கணும். இல்லன்னா, அவளைப் போல ஒரு பாடியை செட் பண்ணிருக்கணும்.” என்று திட்டவட்டமாகக் கூறினான்.

“இப்படி கூடவா நடக்கும்?” அக்ஷிதா தலையை சொறிய,

விஹானா “பாசிபிள் இருக்குடி.” என்றதும், உத்ஷவி சில நொடிகள் தீவிர சிந்தனைக்குப் பிறகு,

“அது உண்மையாவே மேகனா தானான்னு தெரிய ஒரு ஐடியா இருக்கு டைனோசர். அவளோட பின்னங்கழுத்துல தடிமனா தழும்பு ஒன்னு இருக்கும். அது நார்மலா இருக்காது. கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். லைக் மரு வச்ச மாதிரின்னு சொல்லலாம். அந்த மாதிரி நான் எங்கயும் பார்த்தது இல்ல. இப்போதைக்கு அது ஒன்னு தான் ஞாபகம் இருக்கு.” என்றதும், அவள் கன்னத்தைத் தட்டிய ஸ்வரூப், “சூப்பர்… உடனே செக் பண்ண சொல்லலாம்” என்று அலைபேசியை எடுத்தான்.

அவளோ கன்னத்தைப் பிடித்தபடி, “இரும்புக் கையால இடிச்சுட்டுப் போறான் இடியட். என அவனைத் திட்டிட, அவனது ஆள்கள் மூலமாக இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.

அவர்களின் சந்தேகப்படியே, கிடைத்த பெண் பிணத்தில் அப்படி ஒரு அடையாளம் இல்லை என்றதும், மேலும் பரபரப்பாக மாறினர்.

விஹானாவும் ஏதோ யோசித்தபடி, “எனக்கு ஒரு விஷயம் தோணுது. அது அவ்ளோ முக்கியமான்னு தெரியல. ஆனா இவள் மருவைப் பத்திப் பேசுனதும் அதுவா ஞாபகம் வந்துடுச்சு” என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள்.

“நீ சொல்ற எல்லாமே ரொம்ப முக்கியம் தான் விஹா.” என ஜோஷித் அவளை ஊக்குவித்ததில்,

“ஒரு தடவை ராகேஷைப் பார்க்க ஒருத்தன் வந்துருந்தான். அவனோட பின்னங்கழுத்துலயும் இவள் சொன்ன அதே அடையாளம் இருந்துச்சு. அவன் முடியை நல்லாக் கரைச்சு விட்டுருந்தனால, தனியா தெரிஞ்சுச்சு. அவன்கூட கிட்டத்தட்ட அஞ்சு மணி நேரம் மீட்டிங் நடத்துனான் ராகேஷ். அவனுங்க கூட இன்னொருத்தனும் இருந்தான். அவன் தான் ப்ரீத்தன்னு நினைக்கிறன். ராகேஷ் அவனை ப்ரீன்னு கூப்பிட்டான்.” என்றதில் ஆண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, சஜித் அலைபேசியில் ப்ரீத்தனின் புகைப்படத்தைக் காட்டினான்.

“ஹான்… இவன் தான். இவன், ராகேஷ், அப்பறம் அந்த அடையாளம் இருக்குறவன் மூணு பேரும் தான் வளவள கொழகொழன்னு பேசிக்கிட்டே இருந்தானுங்க. அவனுங்க பேச்சுல ‘சிப்’ ன்ற வார்த்தை மட்டும் அடிக்கடி அடிபட்டிச்சு. அது மட்டுமில்ல, அந்த சிப்பை ப்ரீயைத் தவிர யாரும் பாதுகாப்பா பாத்துக்க முடியாதுன்னு ராகேஷ் சொல்லிட்டு இருந்தான்.” என்றதும் ஆடவர்கள் மூவரின் பார்வையும் கூர்மையானது.

“இந்த மீட்டிங் எப்ப நடந்துச்சு?” ஸ்வரூப் கேட்டதில்,

“உங்க வீட்டுக்குத் திருட வர்றதுக்கு ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி தான். அப்போ அப்போ, சிப் பத்தி போன்லயும் பேசிக்குவான். இப்போ வரை அது ப்ரீத்தன்கிட்ட இருக்க வாய்ப்பு இருக்கு ஸ்வரூ.” என்றதும்,

“அப்படி என்ன இருக்கும் அந்த சிப்ல” என்று சஜித் சிந்தனையுடன் கேட்டான்.

“அது தெரியல சஜி. அதைப் பத்தி, வெளிப்படையா மூணு பேருமே பேசிக்கல.” என்ற விஹானா, “நானும் அதை பெருசா நினைக்கல. ஏதாவது பிட்டு படமா இருக்கும்னு…” என மனதில் நினைத்ததை வெளிப்படையாகக் கூறி விட்டு பின் திருதிருவென விழித்தாள்.

ஜோஷித் தான், அவளைக் காட்டத்துடன் முறைத்து விட்டு, “ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் போல, சிப்ல பலான படத்தை அப்லோட் பண்ணி பாக்குறதுல…” என நக்கலாகக் கேட்க, அவன் வேறேதோ கூற வருவது போல இருந்ததில், முதலில் ‘ஆமா’ வெனத் தலையசைத்தவள், பின் பதறி, “டேய்… பனங்கா மண்டையா உனக்கு என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

அவளை அடி முதல் நுனி வரை காந்தப் பார்வையால் துளைத்தெடுத்தவன், ‘மிட்நைட் மசாலா ஃபீல் தான் வருது…’ என தனக்குள் எண்ணிக்கொண்டு, அதனை வெளியில் கூறாமல், விழுங்கிக் கொண்டான்.

உத்ஷவியும் அக்ஷிதாவும் விஹானாவிடம், “டார்ல்ஸ் அந்த சிப்ப எப்டியாச்சு எடுக்கணும்.” எனக் காதினுள் கிசுகிசுக்க, “நீங்க ஏண்டி இவ்ளோ ஆர்வமாக இருக்கீங்க” என்றதில், “ஒருவேளை பலான படமா இருந்தா…?” என்று நமுட்டு சிரிப்புடன் மூவரும் பேசிக்கொள்ள,

“நாங்க பேச வேண்டியதை எல்லாம் வெட்கமே இல்லாம இவளுங்களே பேசிக்கிறாளுங்க…” என்று சஜித் தலையில் அடித்துக் கொண்டான்.

ஸ்வரூப்போ ‘இவளுங்களை எல்லாம் ரெடிமேடா செஞ்சு அனுப்பினார் போல கடவுள்’ எனத் தீயாய் முறைத்ததில், மூவரும் கப்சிப் என அமைதியாகிக் கொள்ள, “எனக்கு அந்த சிப் வேணும். மூணு பேரும் போய் திருடிட்டு வாங்க.” என்று கேஷுவலாகக் கூறினான்.

உத்ஷவி, “இப்போ தான் நீ எங்க ரேஞ்சுக்கு டாஸ்க் குடுத்து இருக்க. திருடிடலாம் ஆனா எப்போ?” என தொழிலில் மூழ்கிக் கேட்டதில், “இப்போவே” என்றான் அழுத்தமாக.

அக்ஷிதா, “இப்பவா? என்ன விளையாடுறியா? உடனே எப்படித் திருட முடியும்? அது கஷ்டம்” என்றதில், சஜித், “பின்ன, இதுக்காக படிச்சு பாஸ் ஆகணுமா. திருடுறதுல என்ன கஷ்டம்.” என்று தேவையில்லாமல் வார்த்தையை விட்டான்.

உத்ஷவி அவனை மேலும் கீழுமாக முறைத்து, “ஓஹோ… படிச்சு பாஸ் ஆகுறது தான் கஷ்டம்ன்னு நினைச்சுட்டு இருக்கியா? திருடுறதுல இருக்குற கஷ்டம், பாலும் தேனும், முந்திரியும் பருப்புமா சாப்பிட்டு ஏசி கார்ல ரவுண்டு போற உங்களுக்கு எங்கடா தெரியும்.” என்று எகிறினாள்.

அக்ஷிதாவும், “ம்ம்க்கும்… முதல்ல பிளான் பண்ணனும். டைமிங் ஃபிக்ஸ் பண்ணனும், டூல்ஸ் ரெடி பண்ணனும். இருட்டா இருந்தா கூட என்ன பொருள் இருக்குன்னு தெரியுற மாதிரி கண்ணை ஷார்ப்பா வச்சுக்கணும்.” என்று மூச்சிரைக்க, அவளைத் தொடர்ந்து விஹானா, “அது மட்டுமா, சுவர் ஏறி குதிக்கணும். உங்களை மாதிரி கரண்ட் ஷாக்கு, புதைகுழி, நாய்ன்னு சேஃப்டியோட இருக்குற அத்தனையையும் சமாளிச்சு, வீட்டுக்குள்ள போகணும்” என்று முறுக்கினாள்.

உத்ஷவியும், “ஹேய் அது மட்டுமாடி, சிசிடிவி இருந்தா ஜாமர் வைக்கணும். ஸ்மார்ட் டோரை ஹேக் பண்ணனும். இதை எல்லாம் தாண்டி உள்ள வந்து, எது எங்க இருக்குனு தெரியாம யாருக்கும் சந்தேகம் வராம தேடணும். அப்படியும் ஒரு கட்டத்துல மாட்டிக்கிட்டா, உண்மையை சொல்லாம கன்டெயின் பண்ணனும். தர்ம அடி இலவசம் வேற” என மூக்கைச் சுருக்கினாள்.

ஸ்வரூப் காதைக் குடைந்து கொள்ள, சஜித் தான் மூச்சு வாங்கினான்.

ஜோஷித்தோ, “யம்மா பரதேவதைங்களா. திருடுறது கஷ்டம் தான் ஒத்துக்குறோம். அதுக்காக இப்படி பேசி கழுத்தை அறுக்காதீங்க.” என்று சலித்துக் கொண்டவனுக்கு, சிரிப்பும் வந்தது.

“அதெல்லாம் முடியாது. அதெப்படி இந்த காட்ஸில்லா இவ்ளோ அசால்ட்டா பேசலாம்.” என்று அக்ஷிதா சண்டைக்கு நிற்க, ஸ்வரூப் “ப்ச், இப்ப என்ன தான் பண்ண சொல்றீங்க?” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

உத்ஷவியோ, “இந்த தடவை எங்க கூட திருட அவனும் வரணும்.” என்றதும், சஜித் “எதே? நான் எதுக்கு வரணும். என்னால முடியாது. ஒழுங்கா ஓடிடுங்க.” என பின் வாங்கினான்.

“அப்போ சரி… நீங்க மூணு பேரும் போய் திருடிட்டு வாங்க.” என்று உத்ஷவி அசட்டையாக தோளைக் குலுக்கிக் கொண்டதில், ஸ்வரூப் அவளை விழி இடுங்க முறைத்தான்.

முதலும் முடிவும் நீ…
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
95
+1
4
+1
8

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments