Loading

பிறை 1

 

இடம் : நளிர்புறம் (கற்பனை ஊர்)

நேரம் : நிலா காயும் வேளை…

 

தன் சுகமான உறக்கத்திற்கு ஊறு விளைந்ததால் மெல்ல கண் மலர்த்தி பார்த்தாள் அவள். எப்போதும் தலைக்கு மேலே தொங்கும் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு பதில் கும்மிருட்டாக இருந்த வானத்தையே கண்டாள்.

 

உண்மையில் அது வானம் என்றெல்லாம் தெரியவில்லை. இருட்டாக இருந்ததாலும், இரவின் பனியை உணர்ந்ததாலும் அவளின் மூளை அப்படி எடுத்துக்கொண்டது!

 

சட்டென்று உண்டான அசாதாரண சூழலின் காரணமாக தூக்கத்திற்கு சொக்கிய கண்கள் நன்றாக விழித்துக்கொள்ள, தன் பெரிய கண்களை சுழற்றினாள்.

 

எங்கும் இருள் மயமாக இருக்க, அந்த குளிரிலும் பெண்ணவளுக்கு வியர்க்க துவங்கியது.

 

அப்போது அவள் பின்கழுத்தில் சூடான மூச்சுக்காற்றை உணர, வெளியே குதித்து விடுமளவிற்கு துடித்த இதயத்தை மெல்ல கட்டுப்படுத்தி பின்னே திரும்பிப் பார்த்தாள்.

 

அவளின் கண்களுக்கு வெகு அருகில் மின்னிய அந்த பழுப்பு நிறக் கண்களை கண்டதும் தூக்கிவாரிப்போட, அதே வேகத்தில் பின்னே சாய்ந்தாள்.

 

அந்த கண்களுக்கு கீழே வெள்ளையும் சிவப்புமாக தெரிந்த கோரப்பற்கள் அடுத்து அவளின் பார்வையில் விழ, பயத்தில் கத்துவதற்கு கூட சத்தம் எழும்பவில்லை அவளுக்கு.

 

அப்போதென்று பார்த்து, வானத்தில் பளீரென்று முதல் மின்னல் மின்ன, அந்த வெளிச்சத்தில் எதிரே தெரிந்த முழு உருவத்தை கண்டவளின் குரலுக்கு இம்முறை தொண்டைக்குழி வழிவிட்டது போலும். அவளின் குரல் அந்த இடத்தையே அதிரச் செய்யும் அளவிற்கு இருந்தாலும், அதே சமயம் ஒலித்த இடியின் சத்தத்தில் அமிழ்ந்து மறைந்து போனது.

 

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவளின் மூளை மந்தமாக விழித்துக் கொண்டு அங்கிருந்து நகருமாறு கட்டளை விதிக்க, அதை செயல்படுத்த எண்ணி கால்களை அசைத்தால், அவை எதிலோ மாட்டியிருந்தன.

 

‘ஐயோ, நான் சாகப்போறேனா?’ என்று எண்ணி பயந்தபடி அங்கும் இங்கும் அசைந்தவள், அடுத்த நிமிடம் எதனுள்ளோ விழுவது போலிருக்க, “ஐயையோ, நான் கீழ விழுறேன். என்னைக் காப்பாத்துங்க!” என்று கத்தினாள்.

 

திடீரென்று அந்த இடம் முழுவதும் வெளிச்சம் பரவ, “ஏன்டி இப்படி டெயிலி கனவு கண்டு என் உயிரை வாங்குற? நிம்மதியா ஒரு ராத்திரியை கழிக்க முடியுதா? ஹாவ்… ரத்தக்காட்டேரி மாதிரி இப்படி நடுராத்திரி கத்திட்டு இருக்க!” என்றவாறே உறக்கம் சுமந்த விழிகளுடன் வந்து சேர்ந்தாள் பிரத்யூஷா.

 

“கீழ விழுந்தவளுக்கு கை கொடுக்காம இப்படி திட்டிட்டு இருக்கியே, உனக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா பிரத்யூ?” என்று நம் கதையின் நாயகி சஞ்சீவனி வினவ, “ஒருநாள் விழுந்தா கை கொடுத்து தூக்கி விடலாம். இப்படி ஓயாம விழுந்தா எல்லாம் தூக்க முடியாது. அது சரி இன்னைக்கு என்ன, அந்த ரத்தக்காட்டேரி கனவா, இல்ல ஜாம்பி கனவா?” என்று பேசியபடி தன் ஒரே தோழியை தூக்கி விட்டாள்.

 

“இன்னைக்கு வேர்உல்ஃப் கனவு பிரத்யூ.” என்று ஆரம்பித்து தன் கனவு முழுவதையும் சொல்லி முடித்தாள்.

 

“அந்த ஐஸ் இருக்கே… ப்பா, அவ்ளோ பவர்ஃபுல் ஐஸ். மொத்த இடமும் கருப்பா இருந்தாலும் கூட, அந்த கண்ணுல இருந்து வந்த வெளிச்சம்… உஃப், பயமா இருந்தாலும், அழகா தான் இருந்துச்சு.” என்று சஞ்சீவனி கூற, “ஹும்ஹும், அந்த இங்கிலிஷ் சீரிஸ் பார்த்து பார்த்து இப்படி தான் வேம்பயர்ஸ் எல்லாரும் அழகா இருக்காங்க, வேர்உல்ஃப் கண்ணு அழகா இருக்குன்னு பினாத்திட்டு இருக்க. இதெல்லாம் சரி இல்ல சொல்லிட்டேன்.” என்றாள் பிரத்யூஷா.

 

அதைக்கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்த சஞ்சீவனியோ, “ஆனாலும், வேர்உல்ஃப்ஸ் ஸ்மெல் பேட். எப்படி அதோட எல்லாம் குடும்பம் நடத்துறது?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

 

“அடிப்பாவி, உண்மையை சொல்லு, ஏதாவது வேர்உல்ஃபை பார்த்து மயங்கி தொலைஞ்சுட்டியா? நீ சரியே இல்லடி.” என்று பிரத்யூஷா புலம்ப, சஞ்சீவனி தான் அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

 

ஒருவழியாக தோழியை சமாதானப்படுத்திவிட்டு, வேலைக்கு கிளம்ப ஆயத்தமானாள் சஞ்சீவனி.

 

குளிக்கும்போது கூட தனக்கு வந்த கனவையும் தோழியிடம் கூறியதையும் நினைத்து சிரித்துக் கொண்டிருந்தவளின், நடுமுதுகில் நீர் பட சுர்ரென்று எரிய ஆரம்பித்தது.

 

தன் கைகளை கொண்டு தடவி பார்த்தவளிற்கு லேசான தழும்பு தென்பட்டது. ‘இது எப்படி திடீர்னு வந்துச்சு? நமக்கு எதுவும் அடி படலையே!’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, அனிச்சையாக கனவில் கீழே விழுந்தது நினைவிற்கு வந்தது.

 

உடனே தலையை இடவலமாக அசைத்தவள், “ச்சேச்சே இல்ல, அது கனவு தான். எங்கயோ இடிச்சுருக்கேன். அது கூட தெரியாம இருந்துருக்கேன். அதான் தழும்பாகிருக்கும்.” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டாள்.

 

மேலும், இதைப் பற்றி பிரத்யூஷாவிடம் கூறி, அவளை பதட்டமடைய செய்ய வேண்டாம் என்றும் எண்ணினாள்.

 

காலை உணவை முடித்துக் கொண்டு இருவரும் ஒருவழியாக வேலைக்கு கிளம்பினர்.

 

அவர்களின் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியிருந்த நகரின் மையப்பகுதியில் ‘சஷா கஃபே’ என்ற பெயரில் சிறிய கஃபேயை நடத்தி வருகின்றனர் தோழியர் இருவரும்.

 

இவர்களை பற்றிக் கூற வேண்டுமென்றால், இருவரும் தற்சமயம் வரை ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்து வருகின்றனர். பிறந்த சிறிது நேரத்திலேயே அனாதை ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர் இருவரும்.

 

ஆச்சரியம் என்னவென்றால், இருவரும் ஒரே இடத்திலிருந்தே கண்டெடுக்கப்பட்டிருந்தனர். அப்போதிலிருந்து இப்போது வரை, இருவரும் சேர்ந்தே இருந்து வருகின்றனர்.

 

படித்து முடித்த பின்னர், தனி வீடெடுத்து, வங்கியில் லோன் எடுத்து, தங்களின் கனவான கஃபேயை திறந்து இதோ இந்த இடத்தில் நிற்கின்றனர்.

 

ஆம், நடுவீதியில் பலருக்கு நடுவே தங்களின் டியோவை நிறுத்தி அடிக்கடி கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னே பலர் வாகனங்களை நிறுத்தியிருந்ததால், என்ன நடக்கிறது என்று சரியாக தெரியவில்லை. சிலபல போலீஸ் தலைகள் மட்டும் தெரிந்தன. ஏதோ விபத்து என்ற செய்தி மட்டும் பகிரப்பட்டிருந்தது.

 

காலையில் நடந்த களேபரத்தில் ஏற்கனவே வேலைக்கு செல்ல தாமதமாகியிருக்க, இதில் செல்லும் வழியில் ஏற்பட்டிருந்த விபத்து வேறு தோழிகள் இருவருக்கும் எரிச்சலை உண்டு பண்ணியிருந்தது.

 

“எல்லாம் உன்னால தான் டி. காலையிலேயே எக்குத்தப்பா கனவு கண்டு கத்தி… ப்ச், உன்னால தான் லேட்டு.” என்று தன்னருகே நின்றிருந்த தோழியை பிரத்யூஷா இடிக்க, வலித்த கையை தேய்த்துக் கொண்டே அவளை திரும்பிப் பார்த்தாள் சஞ்சீவனி.

 

இரண்டு நொடிகள் என்றாலும் அவளின் கண்சிமிட்டா பார்வையில், “இப்போ எதுக்கு என்னை இப்படி வச்ச கண்ணு எடுக்காம பார்த்துட்டு இருக்க?” என்று எரிச்சலாக வினவினாள் பிரத்யூஷா.

 

“உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே. சீக்கிரம் வயசாகுற மாதிரி ஃபீலிங் இருக்கா என்ன?” என்று சம்பந்தமே இல்லாமல் சஞ்சீவனி வினவ, புருவம் சுருங்க அவளை நோக்கித் திரும்பினாள் பிரத்யூஷா.

 

கண்களின் வழியே அவளின் கேள்வியை புரிந்து கொண்டவளாக, “இல்ல இப்போ ரீசண்ட்டா நீ எனக்கு அம்மாவா மாறிட்டு வர மாதிரி எனக்கு தோணுது. நீ என்ன நினைக்குற?” என்று தோளை குலுக்கியபடி வினவினாள் சஞ்சீவனி.

 

“இது மட்டும் ரோடா இல்லாம இருந்துச்சுன்னா, உன்னை புரட்டி போட்டு மிதிக்கலாம்னு நினைக்குறேன் சஞ்சு.” என்று பல்லைக் கடித்தபடி கூற, “கூல் கூல் பிரத்யூ.” என்று தோழியை சமாதானப்படுத்தினாள்.

 

அப்போது போக்குவரத்து சீராக ஒவ்வொரு வாகனமாக காவலர்கள் ஏற்படுத்தியிருந்த சிறுபாதையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. விபத்து நடந்த பகுதி என்று தெரிவிக்கும் வகையில் தரையை நனைத்திருந்தது இரத்தம்.

 

“திடீர்னு அனிமல் அட்டாக்னு சொல்றாங்க.” போன்ற உரையாடல்கள் அவளின் செவியில் விழுந்தன.

 

அவற்றை எல்லாம் கண்டும் கேட்டும், ஒரு பெருமூச்சுடன் எதேச்சையாக அவள் திரும்ப, அவள் கண்ணில் நொடிக்கும் குறைவாக விழுந்தவனைக் கண்டு ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

 

அவள் வாயிலிருந்து வெளிவராத குரல் மனதிற்குள் மட்டும், ‘இது அவன் தானா?’ என்றது.

 

*****

 

சில நிமிடங்களுக்கு முன்…

 

காக்கி பேண்ட்டும், குளிருக்கு இதமாக ஜெர்க்கினும் அணிந்து, மற்றவர்களை நொடியினில் அவதானிக்கும் கண்களை மறைத்த குளிர் கண்ணாடியுடன் அங்கு பிரசன்னமானான் சர்வஜனன், அந்த பகுதிக்கு புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் காவல்துறை மேலாளர்.

 

அத்தனை நேரம் மந்தமாக இருந்த விபத்து பகுதி, அவன் வந்ததுமே பரபரப்பாக மாறியது.

 

“சரவணன், எனி லீட்ஸ்?” என்று வந்தவுடன் அவன் வினவ, “சார், இதுவரை ஃபூட் பிரின்ட்ஸோ வேற எந்த தடயமும் கிடைக்கல. நம்ம டீம் பக்கத்துல இருக்க இடத்துலயும் தேடிட்டு இருக்காங்க. விக்டிம் பாடில இருக்க காயங்களை பார்க்கும்போது ஏதோ மிருகம் தாக்குன மாதிரி தான் தெரியுது.” என்று அந்த சரவணன் எனப்பட்டவன் கூற, அவன் பேச்சில் கவனம் இருந்தாலும், பார்வையோ சுற்றிலும் அலசிக் கொண்டு தான் இருந்தது.

 

“தடயங்களை இன்னும் தேடிட்டு இருக்கீங்க, அனிமல் அட்டாக்கான்னு கன்ஃபார்ம் பண்ணல. அப்போ, இதுவரைக்கும் எந்த உருப்படியான வேலையும் நடக்கல அப்படி தான?” – மெதுவாக என்றாலும் அழுத்தமாக ஒலித்தது அவனின் குரல்.

 

அதில் அங்கிருந்தவர்கள் கைகளை பிசைய, அவனோ அதைக் கண்டு கொள்ளாமல், அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டிருந்த சடலத்தை உற்று பார்த்து, “இட்ஸ் சம்திங் எல்ஸ்.” என்று முனகினான்.

 

“இந்த ரோட்டுல இதுக்கு முன்னாடி இப்படி அனிமல் அட்டாக்ஸ் நடந்துருக்கா?” என்று அவன் வினவ, அங்கிருந்த மற்றொரு காவலர், “இல்ல சார். அப்படி எந்த ரிப்போர்ட்ஸும் இல்ல.” என்றார்.

 

“ரிப்போர்ட்ஸ்? ஏதாவது ஒரு கேள்விக்காவது கன்ஃபார்ம் ஆன்சர்ஸ் உங்ககிட்ட இருக்கா? போய் லோக்கல்ஸ் கிட்ட விசாரிங்க.” என்றவனின் குரல் எரிச்சலில் தோய்ந்திருந்தது.

 

அதில் அனைவரும் தங்களின் வேலையை கவனிக்க செல்ல, சர்வஜனனின் பார்வையோ சற்று தொலைவில் மழையினால் சகதியாக இருந்த மண்தரையில் தெரிந்த காலடித்தடத்தில் படிந்தது.

 

*****

 

அவனை அங்கு கண்டதும், என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே, “பிரத்யூ, நீ கொஞ்சம் முன்னாடி போய் வெயிட் பண்ணு.” என்று அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வாகனத்திலிருந்து இறங்கிவிட்டாள் சஞ்சீவனி.

 

வாகனம் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்ததால், பிரத்யூஷாவினால் இடையில் வாகனத்தை நிறுத்தவும் முடியவில்லை.

 

“இவளுக்கு இதே வேலையா போச்சு. வரவர விளையாட்டுத்தனம் ஜாஸ்தியாகிட்டே இருக்கு.” என்று புலம்பியபடி வாகனத்தை உருட்டிக் கொண்டிருந்தாள் பிரத்யூஷா.

 

இத்தனை வசவுகளுக்கும் காரணமானவளோ, ‘அவனை’ பின்தொடர்ந்து ஏதோ கனவில் நடப்பவளை போல சென்று கொண்டிருந்தாள்.

 

*****

 

சர்வஜனன் அந்த காலடி தடத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். மண்தரையில் சிறிது தூரம் விலங்கின் காலடி தடம் போல பதிந்திருக்க, இறுதியில் இருந்த காலடித்தடம் மட்டும் மனித காலடித்தடம் போல இருந்தது. அதன் பிறகான பாதை பாறைகளினால் நிறைந்திருந்ததால் எவ்வித காலடித்தடமும் தென்படவில்லை.

 

அந்த காலடித்தடங்களை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சர்வஜனன், அதை விரிவாக ஆராய சொல்ல வேண்டுமென்று என்று நினைத்து திரும்ப, சரியாக அவன் பின்னே வந்து நின்றவளின் மீது மோதிக் கொண்டான்.

 

அவன் வேகத்தில் கீழே விழப்போனவளை அனிச்சையாக தாங்கிக் கொண்டவனின் பார்வையில் முதலில் விழுந்தது என்னவோ, எதையோ சொல்லத்துடிக்கும் இதழ்கள் தான். பதட்டத்தில் உதட்டின் மீது வியர்வை துளிகள் அரும்பியிருக்க, அதைக் கண்டவன் மனதிலோ, அவளிடமிருந்து வார்த்தைகளை வாங்கி விடும் வேகம் ஊற்றெடுத்தது.

 

அவளுக்கோ அந்த பழுப்பு நிறக்கண்களை அத்தனை அருகில் கண்டதில் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது.

 

இருவருமே அவர்களின் அந்த நிலையை உணரவில்லை போலும்!

 

அப்போது கேட்ட, “சஞ்சு…” என்ற குரலில் தான் இருவரும் சுயத்தை அடைந்து சட்டென்று விலகினர்.

 

“இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?” என்ற பிரத்யூஷாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், எதிரே நின்றவனின் பார்வையையும் தாங்கிக் கொள்ள முடியாமல், தோழியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள் சஞ்சீவனி.

 

செல்லும் வழியெல்லாம், கேள்விகளால் துளைத்த தோழியை ஏதோ கூறி சமாளித்தவாறே சென்றவளை உற்று நோக்கியவனுக்கு, தன் பணி நினைவு வர, அதில் கவனத்தை திருப்பினான்.

 

இந்த சந்திப்பு அவர்களின் வாழ்க்கையில் விதி ஆடப்போகும் ஆட்டத்தின் முதல் படி என்பது இருவருக்குமே அப்போது தெரியவில்லை.

 

மாயம் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்