Loading

ஸ்வரூப்பும் உத்ஷவியும் ஒருவரை ஒருவர் முறைத்திருக்க, சஜித்திடம் இருந்து அடி வாங்காமல் தப்பித்து மீண்டும் அறைக்குள் புகுந்த அக்ஷிதா, “அடடடடா… மறுபடியும் ரெண்டு பேரும் சண்டை போட ஆரம்பிச்சுட்டீங்களா?” என்றாள் இடுப்பில் கை வைத்து.

சஜித்தோ, ‘இங்க சண்டை போட்டு கூட பேச முடியல…’ எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

உத்ஷவி, “சஜி… நாங்க சென்னைக்குப் போறோம்.” என்று உறுதியாய் கூற, அதில் திகைத்தவன், “உங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போறோம்னு சொன்னோம் ஷவி” என்றான் முறைப்பாக.

“நான் வரல” அவள் வெடுக்கெனக் கூற,

ஸ்வரூப் அனலடிக்கும் பார்வையுடன் “நீ வர்றியா இல்லையான்னு யாரும் உங்கிட்ட ஒபினியன் கேட்கல. வரணும். தட்ஸ் இட்.” எனக் கர்ஜித்து விட்டு கோபத்துடன் அங்கிருந்து சென்றான்.

‘என்ன ஆச்சு இவனுக்கு’ என்று புரியாமல் சஜித் அவன் பின்னே செல்ல, அக்ஷிதா தான், “ஏண்டி அவன் கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்க” என்று வாயை விட்டு விட்டாள்.

அவளைத் தீயாக முறைத்த உத்ஷவி “யாரு நானா நானா நானா?” எனக் கோபத்தை அடக்க இயலாமல் கேட்க,

“சரி சரி… அவன் தான் உங்கிட்ட சண்டை போடுறான் போதுமா… நீ சந்திரமுகி அவதாரம் எடுக்காத…” எனத் தப்பித்து, நல்ல பிள்ளையாக சென்று படுத்துக் கொண்டாள்.

பூனை போல விஹானாவின் அறைக்குள் நுழைந்த ஜோஷித் குளியலறை வாசலில் நின்று, விரல்களால் ஒன்னு, ரெண்டு, மூணு என எண்ணிக்கொண்டிருக்க, சரியாக நான்கு சொல்லப் போகையில், “டார்ல்ஸ், ஷவி” எனக் கத்தியபடி, கதவைத் திறந்து முகத்தை மட்டும் நீட்டினாள் விஹானா.

“அடியேய் எங்கடி போய் தொலைஞ்சீங்க தண்ணி வரல” எனக் கத்திட, அவளுக்கு முகத்தில் சோப் போட்டதில், கண்ணில் பட்டு, கண்ணும் திறக்க இயலாமல் சதி செய்தது.

அதில் எதிரில் நின்றவனைப் பார்க்க இயலவில்லை.

அவனோ ஒரு நொடி சுவற்றில் கையைக் கொடுத்து ஆற அமர அவளை ரசித்து விட்டு, “தண்ணி வரலையாடி சீட்டர். ச்சு ச்சு…” எனப் பாவமாகக் கேட்டான்.

ஆடவனின் குரல் கேட்டதில் சிலிர்த்த ரோமங்களை எல்லாம் அடக்க இயலாமல் படக்கென கண்ணைத் திறந்தவள், கண் எரிந்ததில் மீண்டும் மூடிக்கொண்டாள்.

“அடப்பாவி நீ தான் தண்ணியை நிறுத்தி வச்சு இருக்கியா. கண்ணு எரியுதுடா பனங்கா மண்டையா?” எனக் கத்தினாள்.

“எனக்கு செம்மயா தூக்கம் வருதுடி. நீ எப்ப குளிச்சுட்டு வந்து எப்ப உன்னைப் பார்த்துட்டு நான் தூங்க போறது. அதான், வால்வை க்ளோஸ் பண்ணிட்டேன்” என்று ரசனையுடன் கூறிட,

“இப்ப என்னை ஏன் பாக்கணும்” எனக் கேட்டு கண்ணைக் கசக்கினாள்.

“இதோ இதுக்கு தான்” என வெளியில் தெரிந்த முகத்தின் அருகில் சென்றவன், இரு விரல்களால் அவளது கன்னம் பற்றி, நீர்த்துளிகள் படர்ந்திருந்த செவ்விதழ்களில் அழுந்த முத்தமிட்டு,

“குட் நைட் சீட்டர்” என்று மந்தகாசப் புன்னகையுடன் வெளியில் செல்ல, அவள் ஒரு கணம் செயலிழந்து விட்டாள்.

நடுங்கிய மேனிதனை அதன் போக்கில் விட்டு விட்டு, மீண்டும் உள்ளே புகுந்து கொண்டவள் ஷவரின் முன் நிற்க, தானாக தண்ணீரும் வந்தது. அவன் அதரம் தீண்டிய தன்னிதழ்களை ஒரு முறை வெட்கம் பொங்க தொட்டுப் பார்த்துக் கொண்ட விஹானாவிற்கு, அப்போதும் நிதர்சனம் உறைக்கவில்லை.

அதிலும், மறுநாள் ஆடவர்களின் வீட்டிற்கு செல்லப் போகிறோம் என்று அக்ஷிதா கூறிய போதும், ‘நல்லவேளை சென்னைக்கு போகல. இன்னும் கொஞ்ச நாள் அவன் கூட இருக்கலாம்’ என்ற எண்ணமே முதலில் வந்தது. மேலும் சிந்திக்க விடாமல், ஆடவனின் ஸ்பரிசம் அவளது மூளைக்கு வேலை  நிறுத்தம் கொடுத்திருக்க, அவளும் அவ்வின்பத்தில் மூழ்கிப் போனாள்.

மறுநாள் காலை, மலைக்கிராமத்தில் இருந்து சித்தூரின் மத்தியில் இருக்கும் ஆடவர்களின் மாளிகை நோக்கிப் பயணப்பட்டனர்.

மற்ற நால்வரும் ஜாலியாக பேசிக்கொண்டு வர, ஸ்வரூப்பும் உத்ஷவியும் மட்டும் இறுகிய மனதுடன் அமர்ந்திருந்தனர்.

அவர்களது மகிழுந்து மிகப்பெரிய பிரம்மாண்டமான வாயிற்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, கண்ணுக்கு எட்டும் தூரம் வரை, தோட்டமே நிறைந்து இருந்தது.

வண்ண வண்ணப் பூக்களின் தோட்டம் ஒரு புறமும், காய்கறித் தோட்டம் ஒரு புறமும், சுற்றிலும் வாழை மற்றும் தென்னை மரங்களின் அணிவகுப்பு ஒரு புறமுமென பசுமையாய் காட்சியளித்தது.

தோட்டத்தில் வேலை பார்க்கும் ஆள்களின் எண்ணிக்கையே ஐம்பதைக் கடந்திருக்க, இவர்களின் வரவு அறிந்து அனைவரும் வேலையை நிறுத்தி விட்டு, வணக்கம் கூறத் தொடங்கினர்.

அனைத்திற்கும் தலையசைப்பைக் கொடுத்தவர்கள், தோட்டத்தின் மத்தியில் வீற்றிருக்கும் ராஜ மாளிகையின் பிரம்மாண்ட வாயிலில் காரை நிறுத்தினர்.

“ஆத்தாடி… வீட்டுக்கும் கேட்டுக்கும் நடந்துட்டு வந்தாலே அடுத்த பசி வந்துடும் போலயே!” என அக்ஷிதா வியக்க,

“வீட்டுல தோட்டம் வைக்கலாம் இவனுங்க என்னடி தோட்டத்துக்குள்ள வீட்டைக் கட்டி வச்சுருக்கானுங்க…” என விஹானா கிண்டலடித்தபடி இறங்கினாள்.

இவர்களின் வரவை அறிந்ததும் மூன்று தாய்மார்களும் கண்ணீர் பொங்க அவர்களை அணைத்துக் கொள்ள,

“போங்கப்பா… இப்படியா வீட்டுக்கே வராம இருப்பீங்க. உங்களைப் பார்க்காம மனசே சரி இல்ல” என்று சித்தாரா மூவருக்கும் நெட்டி முறித்தார்.

ஜோஷித்தின் தாயான கனகரூபிணி, “இனிமே இப்படி எல்லாம் ஒரேடியா வெளில தங்கிடாதீங்கப்பா. ஏதோ, அந்த நேரத்துல உங்களோட முடிவுக்கு குறுக்க நிக்கக் கூடாதுன்னு தான் அமைதியா இருந்தோம்.” என முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள,

கையில் ஆரத்தி தட்டுடன் வந்த உமையாள், “சரி சரி… ரெண்டு பேரும் கண்ணைக் கசக்காம சிரிச்ச முகமா இருங்க. அவங்களே அலைஞ்சு திரிஞ்சு  வந்துருக்காங்க” என்று மூவருக்கும் ஆரத்தி எடுக்க,

உத்ஷவி தான், “பெரிய போருக்கு போயிட்டு வெற்றி வாகை சூடிட்டு வந்துருக்கானுங்க பாரு.” என மற்ற இருவரிடமும் நக்கலடித்தாள்.

“மெதுவா பேசுடி சமுத்திரம் பாய்ஸ்க்கு கேட்டா பொங்கிடுவானுங்க.” என விஹானா முணுமுணுக்க, அக்ஷிதாவோ, “டார்ல்ஸ் உள்ள இருந்து மீன் குழம்பு வாசம் ஆளை தூக்குது.” என்று ஆவலை அடக்கியபடி கூறியதில், “அடிப்பாவி…” என முறைத்தனர் இருவரும்.

தாய்மார்களை ஒருவாறாக சமன்செய்த மூவரில், ஸ்வரூப் தான் பெண்களை அருகில் அழைத்தான்.

“நீங்க ஏன் அங்கேயே நிக்கிறீங்க. வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா.” என்றதில் மறுநொடி மூவரும் அருகில் வந்திருக்க,

“ம்மா… இவங்க…” என மெல்ல இழுத்து, பின் “எங்க ப்ரெண்ட்ஸ். இவ்ளோ நாளா காணாமப் போன பசங்களைத் தேடுன இன்வெஸ்டிகேஷன்ல ரொம்ப உதவியா இருந்தாங்க.” என்றதும், பெண்கள் மூவருக்கும் வியப்பு தான்.

சித்தாரா, “அப்படியா… பாவம் பொம்பளைப்பிள்ளைங்களை கூட்டிக்கிட்டா வேலை வாங்குனீங்க. ஒழுங்கா சாப்பாடுலாம் குடுத்தீங்களா இல்லையா?” என்றவர், “உள்ள வாங்கம்மா” என அழைக்க, சஜித், “ம்ம்க்கும்… அது ஒன்னை தான் உருப்படியா பார்த்தாளுங்க.” என்றதில், ஏகத்துக்கும் முறைத்து வைத்தது பெண்கள் அணி.

அக்ஷிதாவோ, “காஞ்சுப் போன ரொட்டியைத் தவிர வேற எதையுமே கண்ணுல காட்டவே இல்லை ஆண்ட்டி இவனுங்க.” என முறையிட,

“அடிப்பாவி காலைல வரும் போது தான சிக்கன் பிரியாணி சாப்பிட்ட.” என ஜோஷித் அவளை முறைத்ததில்,

சஜித், “ஆமா சித்தும்மா. காலங்காத்தால பிரியாணி கேட்டு டார்ச்சர் பண்ணிட்டா.” என்றவனிடம்,

“இப்படி சொல்லிக்காட்டுறியே. அந்த பிரியாணி என் உடம்புல ஒட்டுமாடா காட்ஸில்லா.” என்றாள் மூக்கை சுருக்கி.

உத்ஷவி, “வேணும்ன்னா கம்மு வாங்கி தேய்ச்சுக்க டார்ல்ஸ் ஒட்டிடும்” எனக் கலாய்த்ததில், சஜித் சிரித்திட, ஜோஷித் அவளுக்கு ஹைஃபை கொடுத்துக் கொண்டான்.

ஸ்வரூப்போ, “உன் மொக்கையை கொஞ்சம் நிறுத்திடி…” எனக் கடிந்ததில்,

“நீ போடுற மொக்கையை விட கம்மி தான்டா டைனோசர்.” என்று அவன் கூறிய காதல் வசனங்களை மொக்கை என சூசகமாக கூறிட, அதனைப் புரிந்து கொண்டவன், அவளைப் பார்வையால் எரித்து, “தேவை இல்லாமல் என்கிட்ட அடி வாங்கிட்டு போகாதடி.” என்று எச்சரித்தான்.

விஹானா தான் “ஐயையயே நிறுத்துறீங்களா.” என்று அவர்கள் ஆரம்பித்த சண்டையை கலைத்தாள்.

மூன்று தாய்மார்களும் தான் திகைப்பு மாறாமல் உறைந்து நின்றனர்.

அதிலும் அவர்களது மகன்கள் பெண்களிடம் இத்தனை இலகுவாகப் பேசியே இன்று தான் பார்க்கின்றனர்.

ஸ்வரூப் அதன் பிறகே அவர்களது அதிர்ச்சியை உணர்ந்து, தொண்டையைக் கணைத்துக் கொண்டு, “ம்மா… நாங்க அப்பா சித்தப்பா எல்லாரையும் பார்த்துட்டு வரோம். இவங்களை ரூம்க்கு கூட்டிட்டு போங்க.” என்று உத்தரவிட்டு அங்கிருந்து நழுவி விட, மற்ற இருவரும் அவனுடன் சென்று விட்டனர்.

இவர்கள் செய்த கூத்தை தாய்மார்கள் மட்டுமா பார்த்தார்கள். ஹாலில் இருந்த அவனது அத்தைக் குடும்பமே பார்த்துக் கொண்டிருந்தது.

பூமிநாதன் இப்பெண்களை உடன் அழைத்து வந்ததில் எரிச்சலுற, யசோதாவிற்கு அவர்களை மரியாதை இல்லாமல் பேசியது கோபத்தைக் கொடுத்தது.

அதை விட, இஷானா கண் சிவக்கக் கோபத்தை அடக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள்.

“திருட்டு நாய்ங்களுக்கு வந்த வாழ்வைப் பாரு…” என பல்லிடுக்கில் கூற, அனன்யாவும் பாவனாவும், “இவளுங்களை அப்படியே வெளில அனுப்பி விட்டுடலாம் இஷா” என்றனர் சினத்துடன்.

“அனுப்ப தான போறேன்.” என வஞ்சத்துடன் பதில் அளித்தவள், அவர்கள் முன் சென்று நின்றாள்.

அதுவரையில் பெரியவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண்கள், இஷானா வந்ததில் அமைதி காக்க, அவள் பின்னால் வந்த பாவனாவோ குரலில் இனிமையைக் கூட்டி,

“சித்து அத்தை, இந்தத் திருடிங்களை ஏன் அத்தான் கூட்டிட்டு வந்தாங்க.” என யோசனையாகக் கேட்பது போல கேட்டிட, ஒரு கணம் பெரியவர்களின் முகத்தில் அதிர்வு தெரிந்தது.

இஷானா, “ப்ச், பிரச்சனை முடியற வரை இவளுங்களைத் தப்பிக்க விடாம பார்த்துக்கணும்ல. அதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஹவுஸ் அரெஸ்ட் பண்றாங்க. கடத்துனவனைப் பத்தி தெரிஞ்சதும் இவளுங்களையும் போலீஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிடுவாங்க.” என பாவனாவுக்கு விளக்கம் அழிப்பது போல அவர்களது தகுதியை உறைக்க வைத்தவள்,

“ஏதாவது ஸ்டோர் ரூம்ல அடைச்சு வைங்க அத்தை. இல்லன்னா, தண்ணி காட்டிட்டு எஸ்கேப் ஆகிடுவாளுங்க.” என்றாள் அவர்களை முறைத்தபடி.

விஹானாவும் அக்ஷிதாவும் அவர்களை முறைத்திருக்க, உத்ஷவியோ இஷானாவை ஆராய்ச்சியுடன் ஏறிட்டு, “சாத்தானோட தங்கச்சி வேதம் ஓதுறதைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கியா இஷானா” எனக் கேட்டாள் நக்கலுடன்.

சுறுசுறுவென ஆத்திரம் ஏற, அவளைத் தீப்பார்வைப் பார்த்தவளை கேலிப் பார்வையுடன் ஒதுக்கினாள்.

கனகரூபிணியும் உமையாளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சித்தாரா சற்று சிந்தித்து விட்டுப் பின்,

“இஷா… என் பசங்க இவங்களை ப்ரெண்ட்ஸ்ன்னு தான் சொன்னாங்க. இவங்க திருடுனாங்களோ இல்லையோ… ஆனா, என் பசங்களோட பொறுப்புல, அவங்க முழு நம்பிக்கை வச்சு கூட்டிட்டு வந்தவங்க கண்டிப்பா தப்பான பொண்ணுங்களா இருக்க முடியாது.” என்று தீர்க்கமாய் கூறிட,

அதனை ஒப்புக்கொள்வது போல உமையாள், “நீங்க வாங்கம்மா… வந்து ரெப்ரெஷ் ஆகுங்க. சாப்பிடலாம்” என்று கையோடு அழைத்துச் சென்றதில், மூவரின் மனதிலும் ஒரு வித குற்ற உணர்வு நிரம்பியது.

அறைக்குள் நுழைந்ததும், ஆளுக்கொரு திசையில் அமர்ந்து விட, விஹானா, “அதெப்படிடி அவள் நம்மளைப் பத்தி சொல்லியும் உள்ள விட்டாங்க.” என்று வியப்பாகக் கேட்டாள்.

“அவங்க பசங்க மேல அவ்ளோ நம்பிக்கை விஹா. நம்மளா இருந்தா கூட ஒரு செகண்ட் யோசிச்சு இருப்போம்.” என்ற உத்ஷவிக்கு, இங்கிருந்து கிளம்பும் வரை எதையும் திருடி விடக் கூடாது என்ற அச்சம் தான் முதன் முதலாய் மனதில் பிறந்தது.

அக்ஷிதாவோ, “கிரேட்ல டார்ல்ஸ். நம்ம சமுத்திரம் பாய்ஸ் மாதிரியே, அவங்க அம்மாக்களும் செம்ம ஸ்வீட்.” என்றாள் சிலாகித்து.

அந்நேரம் தேஜஸ்வின் உத்ஷவிக்கு போன் செய்ய, “சொல்லு தேஜா” என்றாள்.

“பாஸ் மூணு பேருக்கும் லைன் கிடைக்கல ஷவி எங்க இருக்காங்க” எனக் கேட்டான் பரபரப்பாக.

“அவங்க அப்பாவைப் பார்க்க போனாங்க தேஜா. எதுவும் முக்கியமான விஷயமா?”

“ஆமா… பசங்கள வாட்ச் பண்ணதுல, ஒரு விஷயம் ஒரே மாதிரி இருக்கு. எல்லாருமே நைட்டு நேரத்துல ஏதோ ஒரு காரணத்துக்காக மாத்திரை எடுத்துக்குறாங்க.” என்றதும்,

“ஷிட். அப்போ அதுல தான் ஏதோ பிரச்சனை இருக்கு தேஜா. ஸ்வரூட்ட சொல்லி உடனே மெடிக்கல் செக் அப் ஏற்பாடு பண்ண சொல்லலாம்.” என்று போனை வைத்து விட்டு அவசரமாக ஸ்வரூப்பைத் தேடி சென்றாள், கூடவே மற்ற இருவரும் அவளைப் பின் தொடர்ந்தனர், நேரப்போகும் அதிர்ச்சி அறியாமல்.

முதலும் முடிவும் நீ
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
99
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment