Loading

அத்தியாயம் 51

ஸ்வரூப் அவ்தேஷின் கூற்றில் ஒரு நொடி விழி விரித்த உத்ஷவி, “ஆமா இவரு 24 மணி நேரமும் எனக்கு பாடிகார்ட் வேலைப் பார்ப்பார் பாரு. நீயே உன் ஆளு வந்ததும் என்னைக் கழட்டி விட்டுடுவ.” என நொடித்துக் கொண்டவளிடம் மறுத்து அவன் பதில் மொழி கூறவில்லை. முறைப்பையே பதிலாக்கினான்.

“சரி அதை விடு. பாவம் டைனோசர் தேஜா. அவனை வேலையை விட்டுத் தூக்கிடாத. இவ்ளோ ஹார்ஷா அடிச்சு வச்சுருக்க. அவன் உங்கிட்ட வேலை தான பாக்குறான். உன் அடிமை ஒன்னும் இல்லல.” என்று நேருக்கு நேராய் நியாயம் கேட்க,

அதையும் ரசித்துத் தொலைத்த இதயத்துடன், “அந்த அடி உனக்கு விழுக வேண்டியதுடி. ஜஸ்ட்டு மிஸ்ஸுன்னு சந்தோஷப்படு. நான் சொன்னதை செய்யலைன்னா, பனிஷ்மென்ட் ஹெவியா இருக்கும்ன்னு அவனுக்கே தெரியும்.” என்றான் கோபத்துடன்.

“தப்பு என் மேல தான. அவனை நீ அடிச்சது நியாயமே இல்லை டைனோசர்.” என்றவளைக் கடுமையாக முறைத்து விட்டு வெளியில் சென்றான்.

அங்கு தேஜஸ்வின் கண்ணில் நீர் தளும்ப தலையைக் குனிந்து கொண்டு நிற்க, ஜோஷித், “நீ ஏண்டா இப்படி நிக்கிற. போய் வேலையைப் பாரு.” என்றதில், “பாஸ் என்னை ஃபயர் பண்ணிட்டாரு சார்” என்றான் பரிதாபமாக.

“டேய் போய் வேலையைப் பாரு. அவன்கிட்ட நாங்க சொல்லிக்கிறோம்” என்று ஜோஷித் கூறும் போதே அங்கு ஸ்வரூப் வந்தான்.

“சாரி பாஸ். இனிமே இப்படி யாரையும் உள்ள விட மாட்டேன். என்னை வேலையை விட்டு அனுப்பிடாதீங்க.” என்று கெஞ்சலாகக் கூற,

“பேஸ்மெண்ட்ல ஒரு பொண்ணை கட்டிப் போட்டிருக்கோம். அவளுக்கு காவலுக்கு ஆளுங்களைப் போடு. அவள் மயக்கத்துல இருந்து எந்திரிச்சா என்னைக் கூப்டு. அவள் கட்டை அவுத்துறாத.” என்று அடுக்கடுக்காய் வேலைகளைக் கூறி அவன் வயிற்றில் பாலை வார்த்தான்.

“நான் பாத்துக்குறேன் பாஸ்.” என வேகமாகத் தலையாட்டியவன் நகரப் போகையில், “தேஜா” என்றழைத்த ஸ்வரூப், உத்ஷவியை ஒரு முறை பார்த்து விட்டு, “சாரி…” என்றதில் தேஜஸ்வினுக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது.

அவனுக்கு மேல் திகைத்தபடி நின்றிருந்தனர் ஜோஷித்தும் சஜித்தும்.

சஜித் தான், “வர வர நீ ஒழுங்கா கோபப்பட மாட்டேங்குற ஸ்வரா!” என நக்கலடித்திட, அவனைத் திரும்பி முறைத்தான் ஸ்வரூப்.

விஹானா தான் பேச்சை மாற்ற எண்ணி, “நீங்க போன விஷயம் என்ன ஆச்சு?” எனக் கேட்க, ஜோஷித் நடந்ததைக் கூறியதும், பெண்கள் மூவரும் “வாட்?” என அதிர்ந்தனர்.

உத்ஷவி, “அப்போ நீங்க காணாம போய்ட்டான்னு தேடிட்டு இருந்த நாகவல்லி தான் மேகனாவா. ஹொவ் இட் இஸ் பாசிபிள் ஜோ!” என நம்ப இயலாமல் கேட்க,

ஸ்வரூப் தான், “ஜுவனைல் வார்டன் பரிமளா வீட்டுக்குப் போய் சில போட்டோஸ் பார்த்தோம்ல அதுல தான் எனக்கு மேகனாவை எங்கயோ பார்த்த மாதிரி ஒரு ஃபீல் ஆச்சு. எங்கன்னு யோசிச்சுட்டு இருக்கும் போதே, அந்த பின்னங்கழுத்து அடையாளத்தைப் பத்தி சொன்னப்ப தான் எனக்கு கன்ஃபார்ம் ஆச்சு.

ஒரு தடவை என் அம்மா அவளுக்கு பூ வச்சு விடும் போது, அந்த அடையாளத்தைப் பார்த்துட்டாங்க. அதை பார்த்துட்டு, ‘ஸ்கின்ல பரவிடப் போகுது, இது மாதிரி மருவை நான் பார்த்ததே இல்ல. எதுக்கும் டாக்டர்கிட்ட காட்டு’ன்னு சொன்னாங்க. அவள் அதுக்கு ஏதேதோ சொல்லி சமாளிச்சா. அவளோட துரதிர்ஷ்டமோ என்னவோ அன்னைக்கு அவங்க பேசுனதை நானும் கேட்டுட்டேன்.

அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுது, அவளோட அம்மா, சென்னைல இருக்குற அவங்க தூரத்து சொந்தத்தோட வீட்டுக்கு அவளை லீவ்க்கு அனுப்பி வைக்க, அவள் அங்க இருக்குற பசங்களோட சேர்ந்து திருட்டு வேலை பார்த்தது. ஒரு மலைக்கிராமத்துல இருந்துட்டு திடீர்ன்னு சிட்டிக்கு போகவும் அவளால அங்க இருக்குற வசதியை விட முடியல. அதனால அங்கயே இருந்து எல்லா தப்பான விஷயமும் பண்ணிருக்கா.

ஆனா, அவளோட பெத்தவங்க அதை  மறைச்சு, சொந்தக்காரங்க வீட்ல இருக்குறதா எங்களை நம்ப வச்சுட்டாங்க.” என்று கூறி முடித்திட,
அக்ஷிதாவோ, “ப்பா… கேட்கவே பயங்கரமா இருக்கே. கூடவே இருந்துட்டு எவ்ளோ பெரிய வேலையைப் பார்த்து விட்டுருக்கா. அவளைத் தேடி நீங்க வேற நாயா பேயா அலைஞ்சீங்களே!” எனப் பரிதாபப்பட்டு ஆடவர்களின் முறைப்பையும் பரிசாக வாங்கி கொண்டாள்.

“ஆக… இருக்குற கெட்ட சக்தியெல்லாம் உன் ஊர்ல உன் வீட்ல தான் இருக்கு. அதை விட்டுட்டு நீ வெளில தேடி இருக்க…” எனக் கேலி போல உத்ஷவி கூற, அதில் ஸ்வரூப்பின் முகம் இறுகியது.

“ம்ம்… இதுல இன்வால்வ் ஆகி இருக்குற அத்தனை பேருக்கும் சாவு கன்ஃபார்ம்.” என்றான் ஏமாற்றம் தாள இயலாமல்.

அப்படிப் பார்த்தால், அவனது அத்தைப் பெண்களும் இதில் உள்ளனரே.

சஜித் யோசனையுடன், “அப்போ கடத்தப்பட்ட பசங்களும் சித்தூர்லயே இருக்க வாய்ப்பு இருக்குல்ல ஸ்வரா?” எனக் கேட்க,

ஜோஷித், “வாய்ப்பு இருக்கு சஜி. ஆனா நிகிலன் விஜயவாடான்னு ஏன் சொன்னான்?” என்றான் புரியாமல்.

“அதை மேகனாகிட்டயே கேட்கலாமே” என அக்ஷிதா கூறியதும்,

விஹானா, “எனக்கு என்னவோ அவள்கிட்டே இருந்து உருப்படியா எதுவும் கிடைக்காதுன்னு தோணுது.” என்றிட,

“நான் பேசிப் பாக்குறேன்” என்றாள் உத்ஷவி.

“பார்த்துடி அவளும் நாயா மாறிட போறா” என அக்ஷிதா பயம் காட்ட, ஜோஷித் அவளைக் கடிந்து, “உன் திருவாயை கொஞ்சம் மூடு.” என்றான்.

சஜித்தோ, “அது சாப்புட்றப்ப மட்டும் தான்டா மூடும்.” என்று கலாய்த்து விட்டு, “நீ போய் என்ன பேசப் போற.” எனக் கேட்கும் போதே, ஸ்வரூப் அவ்தேஷ் பரபரப்பாக மடிக்கணினியை எடுத்தான்.

“கைஸ்… இங்க வாங்க…” என்றதில், ஐவரும் அவனைச் சூழ்ந்து விட,

ஸ்வரூப் அவ்தேஷ் யோசித்தபடியே ஆரம்பித்தான்.

“நம்ம ஒரு விஷயத்தை மிஸ் பண்றோம். கடத்தப்பட்டப் பசங்க ஏன் ஒரே இடத்துல இருக்கணும். பிரிச்சு பிரிச்சு வச்சு இருக்கலாம்ல. எனக் கேட்டதில்,

உத்ஷவி புரியாமல், “பொதுவா கடத்துனா, கடத்துன எல்லாரையும் ஒரே இடத்துல தான டைனோசர் வைப்பாங்க” என்றாள் புரியாமல்.

“அதான் நம்ம செஞ்ச தப்பு. ஒரு இடத்தைத் தேடுறதுக்கு பதில், ஒவ்வொருத்தனையும் ஒவ்வொரு இடத்துல தேடி இருக்கனும்.” என்றதில், ஜோஷித் புரிந்து கொண்டான்.

“ஸ்வரா… எனக்கு இப்ப தான் இன்னொன்னும் ஸ்ட்ரைக் ஆகுது. அப்போ காடன் பஞ்சு ஆலைல வேலை பார்த்தேன்னு சொன்னது உண்மை. அவன் அங்க வேலை பார்த்து இருக்கான். ஆனா, அதுக்கு பக்கத்துலயோ அல்லது அந்த பஞ்சு ஆலைலயேவோ அவனை மெண்டலி டார்ச்சர் பண்ணிருக்கலாம். அந்த ட்ரக்கையும் குடுத்து இருக்கலாம். வெளில நார்மலா நடமாடுற எல்லாரும் நார்மலா தான் இருக்காங்கன்னு சொல்ல முடியாதுல.” என்று நிதானித்துக் கூறியதில்,

“எக்ஸாக்ட்லி ஜோ! இதான் என்னோட பாயிண்ட்டும். அப்போ மீது 19 பேரும் எங்கயோ ஒரு இடத்துல வேலை பார்த்துட்டு இருக்கலாம்ல மனுஷங்களோட மனுஷனா கலந்து.” என்றதும், சஜித் “ஓ! காட். இத்தனை லட்சம் பேருல எப்படிடா கண்டுபிடிக்கிறது. அதுவும் ஒவ்வொருத்தனையும். கண்டுபிடிச்சதும் அவனுங்களும் காடன் மாதிரியே ரியாக்ட் பண்ணுனா என்ன ஆகுறது.” என்றான் திகைத்து.

அக்ஷிதாவோ, “அட அட இருங்கப்பா. எனக்கு மண்டை குழம்புது. இதெல்லாம் கெஸ் தான?” எனத் தலையை சொறிந்திட,

உத்ஷவி “இல்ல டார்ல்ஸ். இப்டியா தான் இருக்கணும். இல்லன்னா இந்நேரம் கடத்தி வச்சிருந்த இடத்தை நம்மால கண்டுபிடிச்சுருக்க முடியும்ல.” என்றாள் சிந்தனையுடன்.

விஹானா, “சரி… ஆனா எந்த எந்த ஊர்ல இருக்காங்கன்னு எப்படி தெரிஞ்சுக்குறது. ஒருவேளை வெளியூரோ இல்ல வெளிநாட்டுலயோ இருந்தா?” எனக் கேள்வி எழுப்ப,

ஸ்வரூப், “வேலிட் பாயிண்ட் தான், எப்படியும் ஏர்போர்ட் போய் தான் வெளிநாட்டுக்கு போயிருக்க முடியும். அவங்களோட போட்டோஸ் வச்சு ட்ரேஸ் பண்ண பாக்கலாம். ஆனா, எனக்கு அவ்ளோ தூரம் அனுப்பி இருப்பாங்கன்னு தோணல விஹா. கண்டிப்பா ஆந்திராக்குள்ளயே தான் இருக்கணும்.” என்றதில், உத்ஷவி, “அதெப்படி இவ்ளோ ஸ்டராங்கா சொல்ற ஸ்வரூ?” எனக் கேட்டாள் கேள்வியாக.

அவள் கேட்டதற்கு பதிலாக சஜித் பேசினான்.

“சிம்பிள் ஷவி. கடத்தப்பட்ட எவனுக்கும் பாஸ்போர்ட் கிடையாது. ஒரு சிலருக்கு வோட்டர் ஐடி, ஆதார் கார்டு கூட கிடையாது. சித்தூரை சுத்தி இருக்குற ஒரு சில மலைக்கிராமங்கள் எல்லாமே ரொம்ப பிற்படுத்தப்பட்ட மலைக்கிராமம். அங்க இருக்குற மக்கள் இப்போ தான், கொஞ்ச கொஞ்சமா வெளில வர்றாங்க. அப்படி டெவெலப் ஆன கிராமத்துல இருந்தவ தான் நாகவல்லி. பட் சேட் ட்ரூத். அப்படி டெவெலப் ஆன அவங்க அடையாளத்தை அவங்களே அழிச்சிக்க ஆசைப்படுறாங்க.” என்றான் எரிச்சலாக.

ஜோஷித்தும், “அப்படி பாஸ்போர்ட் எடுக்கணும்ன்னா, போலி பாஸ்போர்ட்ல தான் போகணும். விசாவும் கொடுக்குறது கஷ்டம். சோ அந்த ரிஸ்க் எல்லாம் எடுத்துருக்க மாட்டானுங்க.” என்றவன்,

“எனக்கு என்னன்னா, அப்டி ஒருவேளை எல்லாருமே வெளில வேலை தான் பாத்துட்டு இருக்காங்கன்னா, அவங்க கடத்தப்படவே இல்லைன்னு ஆகிடும். சோ இத ஒரு கேசா நம்ம எடுக்க முடியாது. கடத்தலே நடக்காதப்ப, கடத்தல்காரனை எப்படி தேடுறது.” என இடுப்பில் கை வைத்து நின்றான்.

ஸ்வரூப் புருவம் நெறித்து “அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு. முதல்ல பசங்களை கண்ணுல பார்க்கலாம் ஜோ. தென் டிசைட்! நிறைய பேர் வேலை பாக்குற ஃபேக்டரி மாதிரியான இடத்துல இருந்து நம்ம இன்வெஸ்டிகேஷனை ஸ்டார்ட் பண்ணலாம்.” என்றதும்,

சஜித்தும் ஜோஷித்தும் அதற்கான வேலைகளில் இறங்கினர்.

அந்நேரம் தேஜஸ்வின் பதற்றத்துடன் ஓடி வந்தான். “பாஸ் பாஸ்” என மூச்சு வாங்கியவனை அலட்டாமல் ஏறிட்ட ஸ்வரூப் அவ்தேஷ், “மேகனா வியர்டா பிஹேவ் பண்ணி செத்துட்டா அதான?” என்றான் அலட்சியத்துடன்.

“பா… பாஸ் எப்படி பாஸ்? நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்க. அவளை கண்ட்ரோல் பண்ணவே முடியல. கட்டிப்போட்ட சேரோடயே எந்திரிச்சு, நாக்கை தொங்கப் போட்டு நாய் மாதிரி செஞ்சு தரையில முட்டி முட்டி செத்துட்டா பாஸ்.” என எச்சிலை விழுங்கிட, அனைவரும் திகைத்தனர்.

இது எதிர்பார்த்தது தான் என்பது போல ஸ்வரூப் நகர்ந்து விட, அக்ஷிதா “அவள் முட்டுற வரை வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தியா?” என்றதில்,

“அவள் எவ்ளோ ஃபோர்ஸா முட்டுனா தெரியுமா? தரையே பேந்துருச்சு. ரெண்டே முட்டுல மூர்ச்சையாகிட்டா.” என்றதில், விஹானா “நல்லவேளை நம்ம பேச போகல. இல்லன்னா அந்தக் கருமத்தை கண்ணால வேற பார்த்து இருக்கணும்.” என்று உடலை உதறிக் கொண்டாள்.

அவளது நடுக்கத்தில் அவள் கையைப் பிடித்த ஜோஷித், “ரிலாக்ஸ்டி” என்றிட, “எங்க ரிலாக்ஸ்சா இருக்குறது ஒன்னு நீங்க கொலைப் பண்றீங்க இல்லன்னா, நீங்க இருக்குற இடத்துல கொலை நடக்குது. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு…” என சந்தானம் பாணியில் நொந்திட, ஜோஷித் உதட்டை மடித்து சிரித்தான்.

“ரொம்ப டென்ஷனா இருந்தா, ஒரு கார் ரைட் வித் கிஸ் போலாமா?” என அவள் மட்டும் கேட்கும் வண்ணம் கிசுகிசுப்பாய் கூறி பெண்ணவளின் முகத்தை ஆராய,

அதுவோ செவ்வானமாய் சிவந்து விட்டது. அச்சிவப்பில் அவன் இதழ்களிலும் ஒரு கர்வப்புன்னகை.

அத்தியாயம் 52

அதன் பிறகு, இருவரும் பேசிக்கொள்ளக் கூட நேரமில்லை.

காணாமல் போன ஆண்களைத் தேடும் பணியில் தீவிரத்துடன் ஈடுபட்டது அறுவர் குழு.

ஆந்திரா முழுக்க, ஸ்வரூப்பின் ஆள்களை வைத்து தனி தனி குழுவாகப் பிரித்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இவர்களும் ஒரு சில இடத்தில் நேரில் சென்று விசாரிக்க, எந்த முன்னேற்றமும் இல்லை.

காரில் ஏறி அமர்ந்து கதவை அறைந்து சாத்திய ஸ்வரூப்பிற்கு எரிச்சல் வந்தது.

உத்ஷவி அவனை அமைதிபடுத்தும் பொறுத்து, “நம்ம ஆளுக்கொரு பக்கம் பிரிஞ்சு தேடலாம் ஸ்வரூ.” என்றதில்,

சஜித் “விளையாடுறியா? அந்த பத்ரி எப்ப நீ தனியா கைல கிடைப்பன்னு நேரம் பார்த்து காத்துட்டு இருக்கான்.” என்றான் எச்சரிக்கையாக.

“டேய்… ஓவர் சீன் போடாதீங்கடா. இந்நேரம் வரைக்கும் நீங்க அவனை விட்டு வச்சுருப்பீங்களாக்கும். அதுவும் உன் அண்ணன்காரன பத்தி எனக்குத் தெரியாதா. இந்நேரம் அவனுக்கு கை போச்சோ கால் போச்சோ!” எனப் பரிதாபத்துடன் கன்னத்தில் கை வைத்துக் கொள்ள, ஸ்வரூப் ஒற்றைப் புருவம் உயர்த்தி அர்த்தப்பார்வை வீசினான் கண்ணாடி வழியே.

‘இவன் வேற, எப்படி ஒரு ஐப்ரோவை தூக்கி பாக்குறானோ… நம்ம ட்ரை பண்ணுனா வர மாட்டேங்குது.’ என சலித்துக் கொண்டாள்.

ஜோஷித் தான், “கை கால்லாம் இன்னும் உடையல. மயக்கத்துலயே தான் இருக்கான். கண்ணு முழிச்சு செத்து கித்து போய்ட்டா, என்ன பண்றது. அதான், பசங்களை காவலுக்கு வச்சுட்டு, அவனுக்கு அப்ப அப்ப மயக்க ஊசி போட சொல்லிருக்கோம்.” என்றதில், விஹானா, “அடப்பாவிகளா அப்போ உண்மையாவே அவனைத் தூக்கிட்டீங்களா?” என வாயில் கை வைத்தாள்.

அக்ஷிதா யோசனையுடன், “டேய் சமுத்திரம் பாய்ஸ் எனக்கு ஒரு டவுட்டு” என ஆரம்பிக்க, மூவருமே அவளைத் திரும்பி முறைத்தனர்.

அவளோ அதனைக் கண்டுகொள்ளாமல், “உங்க க்ளோன் எதுவும் வெளில சுத்துதா?” எனக் கேட்டதில், அனைவருமே புரியாமல் பார்க்க,

“இல்ல… எங்க கூட தான சுத்துறீங்க. இந்த மாதிரி வேலை எல்லாம் எந்த கேப்புல பாக்குறீங்கன்னே தெரிய மாட்டேங்குது.” என வாரியதும், சஜித், “நீ சாப்புடுற நேரத்துலயும் தூங்குற நேரத்துலயும் தான்” என்றான் நக்கலாக.

“உங்களுக்குல்லாம் பசி தூக்கம்லாம் வராதா.” என முறைக்க,

“வரும்டி. ஆனா, அதை நாங்க ஃபுல் டைம் ஜாபா பண்றது இல்லை.” என்றதில், உத்ஷவி கெக்க பெக்க வென நகைத்தாள்.

விஹானாவோ உடன் சேர்ந்து சிரிக்காமல், “உன் வாயை வச்சுட்டு சும்மா இருடி. நீ க்ளோனிங்ன்னு சொன்னதும் எனக்கு நெஞ்சே பக்குன்னு ஆகிடுச்சு. அன்னைக்கு அப்படி தான் நோக்கு வர்மம் டாங்லின்னு பயமுறுத்துன… எங்க நம்மளும் நாயா மாறி செத்துருவோமோன்னு உள்ள அள்ளு விடுது” என மிரட்சியை வெளிப்படையாகவே காட்டினாள்.

அவற்றை எல்லாம் விட பெரிய அளவிலான தாக்குதலை அவர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை என்பதே வருத்தத்திற்குரியது!

பின் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கியவர்கள், கிட்டத்தட்ட நான்கு நாட்கள் இடைவெளியில் காணாமல் போன ஒரு இளைஞனைக் கண்டறிந்தனர்.

கடப்பாவில் இருக்கும் நிலக்கடலை எண்ணெய் தொழிற்சாலையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான் அன்புமணி.

அவன் கடத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவனைத் தேடி எங்கெங்கோ அலைந்தவர்களுக்கோ, அவனைப் பிடித்து விசாரிக்கையில், வெளியூரில் பிழைப்புத் தேடி வந்ததாகக் கூறியதில் எங்கு சென்று முட்டுவது என்று தெரியவில்லை.

“உன்னை யாருமே கடத்தலையா?” சலிப்புடன் ஸ்வரூப் கேட்டதில், “என்னை யாருங்க அண்ணய்யா கடத்திருக்க முடியும். அதுவும் நீங்க இருக்குற ஊர்ல எங்க மேல யாராவது கை வைக்க முடியுமா” என்றான் அன்புமணி.

“அப்பறம் ஏண்டா, உன் அப்பா அம்மாகிட்டலாம் பேசாம இருந்த. அவங்கள்லாம் நீ எங்க போனன்னு தெரியாமல் தவிச்சு போயிருக்காங்க” என்று கடிந்தான் சஜித்.

“அது…” என ஒரு நொடி தயங்கியவன், ‘உங்க கிட்ட சொல்லிட்டு வராம இருந்தது எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு அதான் அப்பாட்ட பேசி உங்ககிட்ட சொன்னா சங்கடமா இருக்குமேன்னு பேசல அண்ணய்யா.” என உப்புப் பெறாத காரணம் கூறியதில், ஸ்வரூப்பிற்கு தான் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

அவன் மட்டுமல்ல, அவனுக்கு அடுத்து ஐந்தாறு நபர்களை வெவ்வேறு ஊர்களில் பிடித்து விட்டனர். அனைவருமே அடிப்பிறழாமல் அதே வரிகளைப் பேசிட,

“இது என்ன டைனோசர் பெரிய ரோதனையா இருக்கு. ஸ்க்ரிப்ட் பேப்பரை படிச்சு ஒப்பிக்கிற மாதிரி ஒப்பிக்கிறானுங்க.” என்றவள், “பேசாம எல்லாரையும் சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டு போய்டலாமா, எல்லாரும் ஸ்டேபிளா தான் இருக்காங்களானு தெரிஞ்சுக்க?” எனக் கேட்டாள் சிந்தனையாக.

“அப்படி நல்லா இருக்குற பசங்களை வம்படியா கூட்டிட்டு போறது எந்த அளவு ரிஸ்க்குனு தெரியல விஷா. அவங்களும் வியர்டா செத்துட்டா, பிரச்சனை வேற மாதிரி போய்டும்.” எனத் தலையை அழுந்தக் கோதினான் ஸ்வரூப் அவ்தேஷ்.

உத்ஷவியும், “உண்மை தான். இப்போ அவங்களுக்கு ஏதாவது ஆனா, பழி கடத்துனவன் மேலயோ இல்லை இந்த குழப்பத்துக்கு காரணமானவங்க மேலயோ வராது. உங்க மேல தான் வரும். நல்லா வேலை பார்த்துட்டு இருந்த பசங்களை நீங்க விசாரிச்சதுனால தான் ஏதாவது ஆகிடுச்சுன்னு பேச்சு வந்துட்டா ரொம்ப கஷ்டமா போய்டும்.” என்று கவலையுடன் கூற,

“பழி வந்தா கூட பரவாயில்ல ஷவி. காடன் மாதிரி இவனுங்களும் சாகக் கூடாது. அதான் எங்களுக்கு பெரிய பயமே!” என்று ஜோஷித் பெருமூச்சு விட்டான்.

அதில் கனிந்த உத்ஷவி, “லூசு மாறி பேசாத ஜோ. பழியும் வரக்கூடாது பசங்க சாகவும் கூடாது. அதுக்கு என்ன வழின்னு யோசிக்கலாம்.” என்றதும்,

அக்ஷிதா, “அவங்களை சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டு போனா தானப்பா பிரச்சனை. ஜஸ்ட் ஒரு நார்மல் மெடிக்கல் செக் அப் பண்ணிப் பார்க்கலாம்ல. அதுல ஏதாவது தப்பா தெரிஞ்சா அடுத்த கட்டத்துக்கு போகலாம்.” என்று யோசனை கூற,

விஹானா, “இது நல்ல ஐடியான்னு தோணுது. அப்படி பிரச்சனை இல்லைன்னாலும், இருக்கறதா சொல்லி கூப்பிட்டு, தனியா விசாரிச்சுப் பார்த்தா உண்மையை சொல்லிடுவாங்க.” என்று அதனை வழி மொழிந்தாள்.

“எனக்கும் இந்த ஐடியா சரின்னு படுது ஸ்வரூ. உங்க இன்ஃப்ளுயென்ஸ் யூஸ் பண்ணி, ஃபேக்டரி முழுக்க எல்லாருக்கும் மெடிக்கல் செக் அப் ஏற்பாடு பண்ணுங்க. அப்போ யாருக்கும் சந்தேகம் வராதுல. நமக்கும் லீட் கிடைச்ச மாதிரி இருக்கும்.” என்று உத்ஷவி ஆர்வத்துடன் வினவினாள்.

ஸ்வரூப் மூவரையும் பாராட்டும் தொனியில் பார்த்து, “கிரேட் மூவ். பட் கேர்ள்ஸ்… இந்த சூழ்நிலைல அந்த பசங்களை டச் பண்றதே ரொம்ப ஆபத்துன்னு தோணுது. வீ ஹேவ் டு வெய்ட். கொஞ்சம் நிதானமா ஹேண்டில் பண்ணலாம்.” என நெற்றியை நீவிட,

“எப்பிடிடா?” என ஜோஷித் கேட்டான்.

“முதல்ல மீதி பேரும் கிடைக்கட்டும். அவங்களோட டெய்லி ஆக்டிவிட்டிஸ் ஒன்னு விடாம ஃபாலோ பண்ணலாம். லைக் அவங்க எடுத்துக்குற டேப்லெட், பிஹேவியர், ஸ்லீப்பிங் பேட்டர்ன்னு ஒன்னு விடாம வாட்ச் பண்ணனும். அதுக்கு அப்பறம், நீங்க சொன்ன மாதிரி ஒரு மெடிக்கல் செக் அப் அரேஞ்ச் பண்ணிடலாம்.” என்றான் நிதானத்துடன்.

சஜித்தோ, “ஆனா அவ்ளோ அக்கியூரேட்டா ஒருத்தனோட மூவ்மென்ட்ஸை வாட்ச் பண்ணனும்ன்னா, ரூம் மேட்டா தான் இருக்கனும் ஸ்வரா?” என குழப்பத்துடன் வினவ,

“எக்ஸாக்ட்லி. நம்ம ஊர் பசங்க வேலை பார்க்குற ஒவ்வொரு ஃபேக்டரில இருந்தும் ஒருத்தனைப் பிடிங்க. அவனை வச்சு, மூவ் பண்ணலாம். மோஸ்ட்லி, ரூம்மேட் மாதிரி இருந்தா பெட்டர்.” என்றதும், அடுத்தடுத்து அந்த வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர்.

மீதி காணாமல் போன ஆட்களையும் பிடித்து, அவர்களையும் விசாரித்து, பின் அவர்களை எந்நேரமும் வாட்ச் செய்ய, அவர்களுக்குளேயே ஒரு ஆளை நியமித்து, சிறிதும் ஓய்வின்றி ஆந்திராவையே சுற்றித் திரிந்தனர் மூன்று ஜோடிகளும்.

பத்து பதினைந்து நாட்கள் விடாத அலைச்சலில், ‘இனி ஏதாவது தகவல் வந்த பின்னே, அதனை வைத்து ப்ரொசீட் செய்யலாம்’ என்ற எண்ணத்தில் மலைக்கிராமத்தின் காட்டேஜிற்கு வந்து விட்டனர்.

அக்ஷிதா டொம்மென கட்டிலில் விழுந்து, “லீட் கிடைச்சுதோ இல்லையோ, ஆந்திரா முழுக்க சுத்திப் பார்த்தாச்சு.” என்றவள், “என்ன… ஒரு ஆந்திரா மீல்ஸ் கூட சாப்பிடல. எனக்கு வருத்தம்ப்பா ரொம்ப வருத்தம்.” என்று வெகுவாய் வருந்திட, சஜித் அவள் மீது தலையணையைத் தூக்கி எறிந்தான்.

“நீ அதை மட்டும் தான்டி சாப்பிடல. வெஜ் ஹோட்டலுக்கு போனா, மூஞ்சியைத் தூக்கி வச்சுக்க வேண்டியது. இப்ப வந்து ஆந்திரா மீல்ஸ் சாப்பிடலையாம்.” என அவளருகில் அவனும் ஆசுவாசமாக அமர்ந்தான்.

விஹானாவோ “எனக்கு ஒரே கசகசன்னு இருக்கு. நான் பக்கத்து ரூம்ல குளிக்க போறேன். ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு யாரும் என்னைத் தேடாதீங்க.” எனச் சொல்லி விட்டு குளிக்க சென்று விட்டாள்.

“ரெண்டு மணி நேரமா? அதுவரை டேங்க்ல தண்ணி இருந்தா தானடி” எனத் தலையில் அடித்துக் கொண்டான் ஜோஷித் அவ்தேஷ்.

இப்போதைக்கு, காணாமல் போனவர்களைக் கண்டறிந்து அவர்களது வீட்டிற்கு தகவல் சொல்லியாகி விட்டது. அதுவே சற்று ஆசுவாசமாக இருந்தது ஆடவர்களுக்கு.

இதன் பிறகே உண்மையான பிரச்சனைத் தொடங்கப் போகிறது என்று உணராமல் சற்று இலகுவாக இருந்தனர்.

நான்கு நாட்களுக்கு முன்னர் தான், பெற்றவர்களும் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு, வீட்டிற்கு திரும்பி விட்டதாக செய்தி வந்தது. அவர்களைக் காண வேண்டி, நெஞ்சம் அரிக்க, ஸ்வரூப் அவ்தேஷ், “இப்போதைக்கு பசங்க கிடைச்சுட்டாங்க. ஆனா, இன்னும் நம்ம அப்பாக்களை யாரு அட்டாக் பண்ணுனான்னு தெரியல… ஒரு கெஸ் இருக்கு. டைம் வரும் போது மாட்டட்டும்.” என்றான் கூர்விழிகளுடன்.

அதில் அப்போது தான் மெத்தையில் படுத்த உத்ஷவி சட்டென எழுந்து, “ஆனா ஊனா கெஸ் பண்றேன்னு கிளம்பிடுற டைனோசர் நீ.” எனக் கொந்தளித்தாள்.

அவன் வசீகரப் புன்னகையுடன், “இனி இங்க இருந்து ஒண்ணும் ஆகப் போறது இல்ல. ஊர்லயும் நிறைய வேலை பெண்டிங் இருக்கு. சோ, கிளம்பலாம்” என்றான்.

“அப்போ நம்ம இன்வெஸ்டிகேஷன் அவ்ளோ தானா?” எனக் கேட்ட அக்ஷிதாவை ஒரு மார்க்கமாகப் பார்த்த உத்ஷவி, “இந்த அம்மா பெரிய சி. ஐ. டி சங்கரு. இன்வெஸ்டிகேஷன்ற பேர்ல ஊர் சுத்திட்டு தான வந்தோம். இன்னும் ஏன் நாயா மாறி சாகுறாங்கன்னு கூட கண்டுபிடிக்கல.” என்றாள் சலித்தபடி.

சஜித்தும், “அதுக்கான ஏற்பாடு பண்ணிருக்கோம்ல ஷவி. கண்டிப்பா லீட் கிடைக்கும்.” என உறுதியாகக் கூறியதும், “அப்போ சரி, அப்படி உண்மை என்னன்னு தெரிஞ்சா, எங்களுக்கு ஒரு போன் பண்ணி சொல்லிடுங்க.” என்றதும், ஜோஷித், “ஏன் நீ எங்கயும் முக்கியமான வேலையா போறியா?” என ஏகத்துக்கும் கிண்டலாய் கேட்டான்.

அவனை முறைத்தவள், “நாங்க சென்னைக்குப் போறோம். நீங்களும் வீட்டுக்குப் போக போறீங்கள்ல.” என அவள் இயல்பாகக் கூற, ஸ்வரூப் புருவம் சுருக்கினான்.

அத்தியாயம் 53

“நாங்க வீட்டுக்குப் போறோம்ன்னு சொன்னேன். உன்னை ஊருக்குப் போக சொல்லலையே” என ஸ்வரூப் ஏளனத்துடன் கூற,

அக்ஷிதா, “அப்போ எங்களை இங்கயே ஹவுஸ் அரெஸ்ட் பண்ணப் போறீங்களா?” எனக் கேட்டாள் விழி விரித்து.

“ஏய் அரை லூசு… நீங்களும் எங்க கூட வீட்டுக்கு வாங்க.” என அவசரமாய் சஜித் அவளை அழைத்தான்.

அதில் அக்ஷிதா “நாங்களா?” என வியப்பாய் கேட்க, உத்ஷவியும் தயங்கினாள்.

“நாங்க எதுக்கு சஜி.” என்றதில், ஸ்வரூப்பின் பார்வை இன்னும் அவள் மீது தீவிரமடைய, அவனது பார்வையைக் கண்டு குழம்பியவளிடம் ஜோஷித் விளக்கம் கூறினான்.

“அடிப்பாவிங்களா! நாங்க ஏதோ மூணு பொண்ணுங்களைக் கூட்டிட்டு சுத்துறோம்னு இந்நேரம் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும். ஒரு மரியாதைக்காக வெளிப்படையா கேட்காம இருக்காங்க. ஆனா நாங்க சொல்லணும்ல. இப்போ உங்களை அப்டியே அனுப்பி விட்டா தப்பாகிடும். சோ வீட்டுக்கு உங்களை கூட்டிட்டு போய் இன்ட்ரோ குடுத்துடுறோம். அது மட்டுமில்ல, இன்னும் பிரச்சனை முழுசா முடியல. அதுவரை உங்க சேஃப்டியும் முக்கியம்.” விஹானா கிளம்பிவிடுவாளோ என உள்ளுக்குள் தோன்றிய பதற்றத்தை வெளியில் காட்டாமல் கெத்தாகப் பேசினான்.

மற்ற இருவரையும் கூட சமாளித்திட இயலும், இந்த உத்ஷவி எதையாவது பேசி, இவர்களைக் குழப்பாத வரையில்.

பெண்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதில் மூன்று ஆடவர்களும் உறுதியாக இருக்க, அப்போதும் கூட மற்றவர்களின் காதல் மனதை அறிந்திடவில்லை.

ஜோஷித் நைசாக நழுவி விஹானா சென்ற அறைக்குள் புக, இங்கு அக்ஷிதா “அப்போ எங்களைக் கூட்டிட்டு போய் என்னன்னு இன்ட்ரோ குடுப்ப
சஜூ ? உன் பர்ஸை பிக் பாக்கெட் அடிச்சது நான் தான்னா?” என கண் சிமிட்டிக் கேட்டாள்.

அதில் இதழ் பிரித்துப் புன்னகைத்தவன், ‘இல்ல என் மனசையே பிக் பாக்கெட் அடிச்சது நீ தான்னு’ என மனதினுள் எண்ணிக்கொண்டு, “என் பர்ஸ எப்ப டி தருவ? என் எங்கேஜ்மெண்ட் ரிங்க் வேணும்.” என அவளை வம்பிழுத்தான்.

“அது எந்த சேட்டு கடைல ஏலத்துல இருக்கோ யாருக்குத் தெரியும்…” என்றதில் அவன் முறைக்க, “எனக்கு பீசா வாங்கிக்குடு. உன் பர்ஸை திருப்பி தரலாமா வேணாமான்னு யோசிச்சு முடிவு பண்றேன்.” என்றாள் மூக்கை சுருக்கி.

“அடிங்க…” என அவன் அவளை துரத்திட, அக்ஷிதா வெளியில் ஓடி விட்டாள்.

இருவரது உரையாடல்கள் காதில் விழுந்தாலும் கவனம் என்னவோ உத்ஷவியின் மீதே இருந்தது ஸ்வரூப் அவ்தேஷிற்கு.

அவனது பார்வை உறுத்தினாலும், “நல்லா யோசிச்சுக்கோ உன் வீட்டுக்கு வரணுமான்னு. வந்தா பாதி பொருளை சுருட்டிட்டு போய்டுவேன்.” என்ற எச்சரிக்கையுடன் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அந்த அறை மூன்று பெண்களுக்காக ஒதுக்கிய அறை தான். அவனோ பார்வை மாறாமல், சோபாவில் அமர்ந்திருந்த தோற்றம் மாறாமல் அதே இடத்தில் நிலைத்திருக்க, சிறிது நேரத்தில் குளியலறையில் இருந்து வந்தவள், “நீ ஏன் இப்படி உட்கார்ந்தே இருக்க. போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான?” என்றாள் புரியாமல்.

அதில் எழுந்து, அவளருகில் வந்தவன், கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு, மெல்ல அவள் முன் குனிந்து, “என்னையவே சுருட்டி உன் பாக்கெட்குள்ளே வச்சுக்கிட்ட. இதுக்கு அப்பறம் என் வீட்டுப் பொருளை எடுத்தா என்ன எடுக்கலைன்னா என்னடி திருடி?” என்றான் கண்களில் ரசனை மின்ன.

அவள் ஒரு கணம் விழித்து விட்டு, “நீ என்ன நியூஸ் பேப்பரா டைனோசர்… சுருட்டி மடக்கி வைக்கிறதுக்கு…?” எனக் கேலியுடன் வினவ, அவனோ முறைப்பதற்கு பதிலாக மென்னகைப் புரிந்தான்.

ஏனோ அப்புன்னகை அவளை அந்நிமிடம் வாரி சுருட்டிப் போனது என்னவோ உண்மை தான்.

“ஐ மீன் இட்!” துளைக்கும் பார்வையுடன் அழுத்தமாகக் கூறினான்.

தேவையே இன்றி உத்ஷவியின் இதயத்துடிப்பு அதிகமாக, “என்ன மீன் பண்ற? எனக்குப் புரியல.” என்றவளுக்கு உண்மையாகவே அவனது கூற்றும் பார்வையும் செயலும் புரியவே இல்லை.

அவனோ எந்தவித ஒப்பனை பேச்சும் இன்றி, நேரடியாக “ஐ லவ் யூ விஷா!” என்றிட, அவளோ ஸ்தம்பித்தாள். 

“உனக்குப் பைத்தியம் எதுவும் பிடிக்கலையே…?” உத்ஷவி திகைப்புப் பரவ வினவிட,

“இன்னும் முழுசா பைத்தியம் பிடிக்கல…” என அவளை ஆழ்பார்வைப் பார்த்தபடி கூறினான் ஸ்வரூப். அவன் இதழ்களில் குறும்புப் புன்னகை தவழ்ந்தபடி இருந்தது.

“எப்பவும் கல்லை முழுங்குனவன் மாதிரியோ இல்ல ஜெயில் வார்டன் மாதிரியோ முறைச்சுப் பார்த்துக்கிட்டே தான இருப்ப. இப்ப எதுக்கு சும்மா சும்மா சிரிச்சுட்டு இருக்க” எனப் புருவம் நெறித்துக் கேட்டவளுக்கு, அவனே வித்தியாசமாகத் தெரிந்தான்.

“லவ் வந்தா சில சேஞ்சஸ் வருமாம் திருடி. உனக்கு அப்படி எதுவும் சேஞ்சஸ் வரல?” எனக் கண்ணோரம் சுருங்கக் கேட்டான் ஸ்வரூப் அவ்தேஷ்.

“அது லவ் வந்தா தான?” தோள் குலுக்களுடன் பதில் அளித்தவளைக் கண்டு சன்ன சிரிப்புடன், “அப்போ உனக்கு என் மேல லவ் வரல?” என்றவன், நெற்றியை ஒரு விரலால் நீவிக் கொண்டான்.

“உன் மேல எனக்கு எதுக்கு லவ் வரணும்” சற்றே சீறலுடன் அவள் வினவ, “எனக்கு வந்துருக்கே. அப்ப உனக்கும் வந்துருக்கணும் தான.” என அர்த்தப்பார்வை வீசியவன்,

நிறுத்தி நிதானமாக, “12 வயசுலயே கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க ரெடி ஆகிட்ட தான. இப்ப 25 வயசே ஆகிடுச்சு. சோ, நம்ம குழந்தை பெத்துக்கிட்டா நீ குழந்தையைக் கொஞ்சலாம். நான் உன்னைக் கொஞ்சுவேன்.” என அவளைத் திகைக்க வைத்தான்.

“யூ நோ வாட் விஷக்கிருமி. இப்போ எல்லாம் எனக்கும் கூட கவிதை தோணுது. சீக்கிரமே கவிஞன் ஆனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல” என்று சிறு வெட்க முறுவலுடன் தலைக் கோதியவன், அவளைப் போன்றே கூறி, பெண்ணவளை வாயடைக்கச் செய்தான்.

“இப்ப எல்லாம் நீ ரொம்ப கியூட்டா தெரியுற. இல்ல, என் கண்ணுக்கு மட்டும் அழகாத் தெரியிறியா…” என இதழ் மடித்து யோசிக்கும் பாவனை வீசியவன்,

“சரி அந்த ஆராய்ச்சியை நான் நம்ம ஃபர்ஸ்ட் நைட் அப்போ வச்சுக்கிறேன். ஐ லவ் யூ திருடி ஃபிரம் மை பாட்டம் ஆஃப் த ஹார்ட்…” என அவனது இதயத்தைக் குத்திக் கூறினான்.

மலங்க மலங்க விழித்த உத்ஷவி, “இதுக்கு பேர் லவ் இல்ல டைனோசர் பைத்தியக்காரத்தனம். பத்து பதினஞ்சு நாளா, சரியாத் தூங்காம காணாமப் போன பசங்களைத் தேடி அலைஞ்சதுல உனக்கு ஹாலுசினேஷன் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். அதான் உன் பியான்சிகிட்ட பேச வேண்டிய டயலாக்க எல்லாம் என்கிட்ட பேசிட்டு இருக்க…” எனத் தலையை சொறிந்தவள்,

அவனை உலுக்கி, “கோட்டை சாமி… கனவுல இருந்து எந்திரி. நான் உன் பியான்சி இஷானா இல்ல உத்ஷவி.” எனக் கவுண்டமணி காமெடி போன்று கிண்டலடித்தாள்.

அதில் அவள் இரு கைகளையும் பிடித்து அவளது முதுகுக்கு பின்னால் கட்டியவன், அவனது வெப்ப மூச்சுத் தீண்ட நெருங்கி நின்று,

“ஹாலுசினேஷன் தான்டி. எங்க பார்த்தாலும் உன் முகம் மட்டும் தான் தெரியுது. எதைப் பத்தி யோசிச்சாலும் உன் ஞாபகம் தான் வருது. எந்த வேலை செஞ்சாலும் உன் வாசம் தான் எனக்கு உயிர்ப்பைக் குடுக்குது. உன் கையைப் பிடிக்காத கொஞ்ச நேரம் கூட என்னோட உயிரோட்டம் நின்னு போயிடுது.” என அழுத்தம் திருத்தமாக தன் மனதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் ஆண்மகன்.

அவளோ அவன் மூச்சை சுவாசிக்காமல் இருக்கும் பொருட்டு மூச்சை உள்ளிழுத்து அது முடியாமல் பெருமூச்சுகள் வாங்கினாள்.

அவன் பேசியது எதுவும் அவளுக்கு ரசிக்கவில்லை. ரசிக்கவும் முடியவில்லை.

அவள் பதில் பேசும் முன்னே, கள்ளப் புன்னகையில் அவளைக் கொள்ளையிட்டவன், “நான் பேசுறது கிரிஞ்சா இருக்குல்ல. பட் ஐ லவ் திஸ் கிரிஞ்ச். ஐ லவ் யூ. ஐ லவ் யூ டோட்டலி.” எனத் தீவிரத்துடன் உரைத்தவனது குரல் கிறக்கத்துடன் தேய்ந்தது.

பட்டும் படாமல் அவள் மேனியுடன் உரசி நின்ற ஆடவனது தேகத்தில் பல மின்னல்கள் ஊற்றாகப் பாய, “ஷால் ஐ ஹக் யூ திருடி?” எனக் கேள்வியுடன் அவள் முகம் பார்த்தவன், அதுவோ இன்னும் அதிர்வில் இருந்து வெளிவராததைக் கண்டு,

“ஓகே. இதுக்கும் சேர்த்து ஷாக் ஆகிக்கோ.” என அவளைத் தன் மார்புடன் புதைத்துக் கொண்டான்.

ஆடவனின் அணைப்பில் சிலையாக சமைந்து நின்ற உத்ஷவிக்கு, சில நிமிடம் கழித்தே உணர்வு மீண்டது.

அவனை வெடுக்கென தள்ளி விட்டவள், “என்னடா காமெடி பண்ணிட்டு இருக்க. எல்லாம் புருஞ்சு தான் பேசுறியா?” என எரிச்சலானாள்.

“உனக்கு என்னைப் பார்த்தா எப்படி தெரியுது. நான் ஒரு  முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிப்பேன். அப்படி முடிவு எடுத்துட்டா செத்தாலும் மாற மாட்டேன். இந்த கொஞ்ச நாள்ல என்னோட அழுத்தம் பத்தி உனக்கு தெரிஞ்சுருக்குமே விஷா.” என்றான் விழி இடுங்க.

கண்ணை இறுக்கி மூடித் திறந்தவள், “நீ என்னை லவ் பண்ற, சரி… இப்ப என்னை என்ன பண்ண சொல்ற?” என சலனமற்றுக் கேட்க,

“சிம்பிள்! லவ் மீ பேக்.” என்றான் அசட்டையுடன்.

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டவள், “தென்? உன் அந்தப்புரத்துல வந்து உனக்கு சேவை செய்யணுமா? உனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறமும்…” என பல்லிடுக்கில் கோபத்தை அடக்கியபடி அவள் வினவ,

“ப்ச்…” எனப் பின்னந்தலையை சிறு கேலி நகையுடன் கோதிக் கொண்டவன், “அந்த பத்ரி உனக்கு தேவை இல்லாத வார்த்தை எல்லாம் கத்துக் குடுத்து வச்சிருக்கான் விஷா. அந்தப்புர சேவை…! ம்ம்… கேட்க நல்லா தான் இருக்கு.” எனக் குறுஞ்சிரிப்பை வீசியவனைப் பார்வையால் எரித்தாள் அவள்.

“பட், அன்ஃபார்ச்சுனேட்லி. என் வீட்ல அந்தப்புரம் எல்லாம் இல்லடி திருடி. உன்னை லவ் பண்றது பின் வாசல் வழியா வர வச்சு சல்லாபிக்கிறதுக்கு இல்ல, உன்னைக் கல்யாணம் செஞ்சு, உரிமையா உன் கையைப் பிடிச்சு, என் வீட்டோட ராணியா முன் வாசல் வழியா கூட்டிட்டு போறதுக்கு.” என்றவன் ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி நிதானமாக அவளுக்கு உறைக்கும் படி உரைத்தான்.

அவளோ இன்னுமா திகைத்து “என்னது க… கல்யாணமா?” என்றதில்,

“ஆமா, லவ் பண்றது கல்யாணம் பண்ண தான? கல்யாணம் பண்ணுனா தான குழந்தை பெத்துக்க முடியும்.” என்று புரியாமல் பேசியவன், அதன் பிறகே, அவளது குழப்பம் புரிந்து, இதழ் மடித்து புன்னகைத்தான்.

“கல்யாணம் பண்ணிக்காம குழந்தைப் பெத்துக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லடி திருடி. ஆனா, என் பொண்டாட்டியையும் என் குழந்தையையும் யாரும் முறை தவறி வந்துட்டாங்கன்னு சொல்லிடக் கூடாது.” என்றவனின் கருவிழிகளில் காட்டிய அழுத்தத்தில், ஜனனியின் கூற்று நினைவு வந்து சுள்ளென மனதைத் தைத்தது.

தலையை உலுக்கிக் கொண்டவள், “நீ பேசுறது எல்லாம் ரொம்ப அபத்தமா இருக்கு ஸ்வரூ.” எனக் கோபமாக அவள் பார்க்க,

“ஓஹோ… மேடம் என்னை சைட் அடிச்சதுலாம் அபத்தம் இல்லையோ?” எனக் கேட்டான் குறும்பாக.

“ஸ்வரூப்… நிறைய பேர் காஸ்டலியான நகை கண்காட்சிக்கு போறது, அந்த நகை அத்தனையையும் வாங்குறதுக்காகவோ, வாங்கி கழுத்துல போட்டுக்குறதுக்காகவோ இல்ல. யூனிக் டிசைன்ஸை பார்த்து, ரசிக்கிறதுக்கு. 

நீ யூனிக் பீஸ் டைனோசர். உன்னை பார்க்கலாம். ரசிக்கலாம். ஆனா, சொந்தமாக்கிக்கணும்ன்னு நினைக்கிறது முட்டாள்தனம். அந்த ஃபில்டர் இடியாட்டிக் முடிவை நான் என்னைக்கும் எடுக்க மாட்டேன்.” எனத் திட்டவட்டமாகக் கூறி அழுத்தத்துடன் நின்றவளை, மெல்ல மெல்ல தலைக்கேறிய சினத்துடன் வெறித்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

முதலும் முடிவும் நீ
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
101
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. Meenakshi Subburaman

      அவனே ஏதோ கொஞ்சம் நேரம் தான் சிரிச்சு பேசுறான் அதையும் நீ ஏன் மா பேசி கடுப்பாகி முறைக்க வைக்குற, அவன் பேசுறதுல நியாயம் இல்லை தான் அதை அடைய அவன் இன்னும் எவ்வளவோ போராட வேண்டி இருக்கு பார்ப்போம்