Loading

  1. அத்தியாயம் 20

ஸ்வரூப் கிளம்பச் சொன்னதில், தோளைக் குலுக்கிய உத்ஷவி, நகரப் போக, “டார்ல்ஸ் என்ன எங்களை விட்டுட்டு நீ மட்டும் டீல் பேசிட்டு இருக்க” என்று அக்ஷிதா அவள் கையைப் பிடிக்க அதனை உதறினாள்.

“ஏய் யாருடி நீங்க… அதான் ப்ராஜக்ட் ஒண்ணும் இல்லாம ஆகிடுச்சுல. அப்பறம் ஏன் சும்மா தொண தொணன்னு என் பின்னாடியே அலையிறீங்க. எங்கயாவது போய் தொலைய வேண்டியது தான.” எனக் கத்தி விட்டவள், அக்ஷிதாவின் அதிர்ந்த முகத்தைக் கண்டுகொள்ளாமல்,

“ஏய் நீ வேவு பார்க்க தான வந்த. வந்த வேலை முடிஞ்சுதுல? இனி என் பக்கம் வந்த கொன்னுடுவேன்.” என்று விஹானாவை விரல் நீட்டி எச்சரிக்க, விஹானாவிற்கு ஏனோ கண்ணைக் கரித்தது.

உத்ஷவிக்கு விஹானா ஏமாற்றியதிலேயே, தோழிகளின் புறம் சரிந்த மனம் மீண்டும் முருங்கை மரத்திற்கு ஏறியது. பொதுவாகவே யாரையும் நம்பாமல் அவளை மட்டுமே நம்பி வாழ்பவள். இப்போது, அனைத்தையும் முறித்துக்கொள்ளத் தயாராக நின்றவளைக் கண்டு அக்ஷிதா முகம் சுருங்கிப் போனாள்.

சஜித்திற்கு ‘என்ன பெண் இவள்’ என்ற ஆதங்கம் எழ, சுருங்கிப்போன அக்ஷிதாவின் முகத்தைக் கண்டு மனதில் ஏதோ நழுவிச் சென்றது.

ஜோஷித்தும் விஹானாவின் கலங்கிய விழிகளைக் காணாமல், தன்னை அடக்கிக்கொண்டான்.

அக்ஷிதா தான், “ப்ராஜக்ட் முடிஞ்சதுக்கு அப்பறமும் ஒண்ணா இருக்கலாம்ன்னு சொன்ன…” எனப் பாவமாகக் கேட்க, அவளுக்காக இளகிய மனதை நொடியில் இறுக்கிப் பிடித்துக் கொண்டவள், “ப்ராஜக்ட் முடிஞ்சுருந்தா தான.” என அசட்டையுடன் கூறி விட்டு, வெளியில் சென்று விட்டாள்.

“பாரு டார்ல்ஸ் இவளை… அப்படியே கழட்டி விட்டுட்டு போறா…” என அக்ஷிதா விறுவிறுவென அவள் பின்னே ஓட, ஸ்வரூப் இருவரையும் தடுக்காமல் கையைக் கட்டிக்கொண்டு நின்றான்.

சஜித் தான், ‘இவள் என் பர்ஸை குடுக்காம அல்பாயுசுல போய் சேர்ந்துடுவாளோ…’ என்ற யோசனை மிதக்க நின்றவனுக்கு, அவனது நிச்சயதார்த்த மோதிரம் அந்த பார்ஸினுள் தான் இருந்தது அப்போது தான் உறைத்தது.

மோதிரம் இல்லாமல் ஊருக்குச் சென்றால், ஆயிரம் கேள்வி வருமே! என மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான்.

அதையும் விட, விரலில் மோதிரம் இல்லாததைக் கண்டால், சகோதரர்கள் என்ன நினைப்பார்களோ என்ற சங்கடம் வேறு!

அவர்கள் கையில் நிச்சய மோதிரம் போட்ட படி இருக்கிறதே.

விஹானாவும் செய்வதறியாமல் தன்னைப் போட்டுக்கொடுத்த ஜோஷித்தைக் காட்டத்துடன் முறைத்து விட்டு அவர்கள் பின்னே செல்ல, “ஷவி நில்லு” என அவளைத் தடுத்து நிறுத்தினாள் அக்ஷிதா.

“ஒழுங்கு மரியாதையா போய்டு.” எனக் கண்டனத்துடன் எச்சரித்தவள், விஹானாவை ஒரு முறை முறைத்து விட்டு மீண்டும் நடையைத் தொடர, அக்ஷிதா விஹானாவின் மீது கோபம் கொண்டாள்.

“யார் கிட்டயும் உண்மையா இருக்க நமக்கு பிடிக்காததுனால தான், நம்ம கூட எல்லாம் யாருமே ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்க மாட்டாங்க. அவங்க பொருளை திருடிடுவோமோன்னு ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கும். அதையும் மீறி, நமக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாங்டிங் இருக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன் விஹா. நீ அதை ஒண்ணும் இல்லாம ஆக்கிட்ட. உன் பாஸ்க்கு நேர்மையா இருக்குறதுக்காக, எங்ககூட போலியா ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கிட்டதுனால தான், அவள் மொத்தத்துக்கும் ஒன்னும் வேணாம்ன்னு போறா…” என்று சத்தம் போட, விஹானாவின் கண்களில் ஒரு துளி கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“நான் போலியா நடிக்கலாம் இல்ல அக்ஷி. ப்ராஜக்ட் முடிஞ்சதும் உண்மையை சொல்லாலாம்ன்னு தான் இருந்தேன். எனக்கு மட்டும் என்ன ஆசையா? உங்ககிட்ட உண்மையை மறைக்கணும்ன்னு. அவ தான் புருஞ்சுக்காம போறான்னா, நீயும் புரிஞ்சுக்க மாட்டேங்குற…” எனக் கமறிய குரலில் கூற, அக்ஷிதா தான் இரு தலைக்கொல்லி எறும்பாய் தவித்துப் போனாள்.

முதலில் உத்ஷவியை சமன் செய்யலாமென்றெண்ணி அவளைத் திரும்பிப் பார்க்க, கண்ணுக்கெட்டும் தூரம் வரை அவளைக் காணவில்லை.

“எந்த பக்கம் போனான்னு தெரியலையே. விஹா நீ இந்த பக்கம் தேடு. நான் அந்த பக்கம் போறேன்” என்று விஹானாவின் பதிலை எதிர்பாராமல் விருட்டென காட்டுப்பக்கம் சென்றாள். அதிகாலை இருளில், அடர்ந்த மரங்கள் கொண்ட பகுதிக்குள் அக்ஷிதா நுழைய,

“ஏய் டார்லிங், கரெக்ட்டா வந்துடு திரும்பி. ஒரே இருட்டா இருக்கு…” என்று கடிந்தபடி விஹானா மறுபுறம் செல்ல, தூரத்தில் உத்ஷவி செல்வது தெரிந்தது.

“டார்ல்ஸ்” என அழைக்கும் போதே, அக்ஷிதா சென்ற திசையில் இருந்த மரங்களெல்லாம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

“காட்டுத்தீ…” எனப் புரிந்து கொண்ட விஹானா, “ஐயோ அக்ஷி எங்க போன. ஷவி இங்க வா. அக்ஷி தீக்குள்ள மாட்டிக்கிட்டா” என்று தொண்டை வற்ற கத்தினாள்.

ஏதோ தோன்ற, திரும்பிப் பார்த்த உத்ஷவி, எதிர்புறம் பற்றி எரிந்த நெருப்பையும், விஹானாவின் அலறலையும் கண்டு கொண்டு திகைத்தவள் யோசியாமல் அவளருகில் சென்றாள்.

“என்ன ஆச்சு விஹா? எப்படி தீப்பிடிச்சுது?” எனப் பதறிக் கேட்க, “தெரியல. அக்ஷி வேற இந்த பக்கம் தான் போனா…” என்றவளுக்கு பயம் நெஞ்சைக் கவ்வியது.

உத்ஷவிக்கும் செய்வதறியாத நிலை தான். முன்னே பின்னே, காட்டுப்பக்கமெல்லாம் வந்திருந்தால் தானே பழக்கமிருக்கும்? வேறு வழியற்று ஸ்வரூப்பின் உதவியை நாடி அவர்களின் குடிலை நோக்கி சென்றாள்.

அதற்குள் நிலவரம் அறிந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்கும் தீயணைப்புத் துறையினரை தொடர்பு கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் வரவழைத்து நிலையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

அப்போது சடாரென உள்ளே நுழைந்த உத்ஷவி, நிலமையைக் கூற, சஜித் சற்று பதறினான்.

“இதுக்கு தான் வெளில போகாதீங்கன்னு தலையால அடிச்சோம். அறிவே இல்லையா உங்களுக்குல்லாம். எங்க போனா அவ…” என ஒரு நொடி துடித்து அடங்கிய மனதை அடக்கிக்கொண்டு கேட்க, உத்ஷவி தான் ஒரு வித குற்ற உணர்ச்சிக்கு ஆளானாள்.

அக்ஷிதாவை காப்பாற்றச் சென்ற சஜித்தை, கரத்தை நீட்டித் தடுத்த ஸ்வரூப், “எனக்குப் புரியல. உங்களை நாங்க ஏன் காப்பாத்தணும்?” எனப் புருவம் சுருக்கி நிதானமாகப் பேச, விஹானா திகைத்தாள்.

“ஸ்வரூப் ப்ளீஸ் விளையாடாத. அவளை காப்பாத்துங்க…” என்று மூவரையும் பார்த்து கூறிட, ஜோஷித்தும் இரக்கப்பட்டு, “அந்த பொண்ணை முதல்ல காப்பாத்திட்டு பேசிக்கலாம் ஸ்வரா…” என வெகு நாட்கள் கழித்து தமையனின் முகம் பார்த்துப் பேசினான்.

ஸ்வரூப் அவன் புறமே திரும்பாமல், உத்ஷவியின் மீது மட்டுமே கவனமாக, “வீராப்பா பேசிட்டு போனது நீ தான? எவன் கையிலயாவது சாகட்டும்ன்னு விட்டுட்டு வராம, நேரம் கிடைக்கும் போது எங்களையே காலை வாரி விடுவீங்கன்னு தெரிஞ்சும், எங்களுக்கு இருக்குற பிரச்சனைக்கு மத்தியிலயும் உங்களை கூட்டிட்டு வந்தது தான் நான் பண்ணுன தப்பு. குரங்கு கைல பூமாலை மாதிரி, திருட வந்த உங்ககிட்ட இருந்து நல்ல விஷயத்துக்கு துணை போவீங்கன்னு நினைச்சது அதிக பட்ச முட்டாள்தனம். கெட் அவுட். உங்களை நீங்களே காப்பாத்திக்கோங்க.” என முடிவாகக் கூறி விட்டவனை உத்ஷவி தீயாக முறைத்தாள்.

“என்ன பழிவாங்குறியா டைனோசர். நான் தான பேசுனேன். அதுக்கு அவள் என்ன பண்ணுவா.” என நொந்தவள், கண்ணை ஒரு நொடி இறுக்கி மூடித் திறந்து, “சரி. நீ என்ன சொன்னாலும் கேட்குறேன். இங்க இருந்து போக முயற்சி பண்ண மாட்டேன். ப்ராமிஸ்.” என்று அவன் கையை எடுத்து அவள் கையை வைத்து, சத்தியமே செய்து விட்டவளை, அலட்சியத்துடன் பார்த்தான்.

“சத்தியத்தை மீற மாட்டன்னு நம்புறேன். மீறுனா, என் நாய்க்கு தான் பழியாகுவ. ஞாபகம் வச்சுக்கோ.” என்று கண்கள் சிவக்க மிரட்டியவன், சஜித்திடம் கண்ணைக் காட்ட, எப்போதடா சகோதரனிடமிருந்து உத்தரவு வருமென காத்திருந்தவன் போல, புயல் வேகத்தில் வெளியில் சென்றான்.

எங்க சென்று மாட்டி இருக்காளோ…? எனப் பதறிய இதயத்தை பலம் கொண்ட மட்டும் அடக்கி வைத்தவனுக்குப் புரியவே இல்லை, ஏன் தனக்குள் இத்தனை நடுக்கமென! தன்னுடைய நிச்சயதார்த்த மோதிரம் அவளிடம் இருக்கிறதே! என என்னென்னவோ எண்ணி, தனது மனதின் துடிப்பை நியாயப்படுத்த முயன்றவன், காட்டுப்பகுதியின் முன்னேயே மயங்கி இருந்தவளின் அருகில் அவசரமாகச் சென்றான்.

நெருப்பு அவர்களைத் தாக்கும் முன், அங்கிருந்து சென்று விட முயன்று, அவளைக் கையில் அள்ளிக்கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடி வந்தவன், வரும் வழியிலேயே “அக்ஷிதா… ஏய் கேடி இருக்கியா போய் சேர்ந்துட்டியா?” என அவளை எழுப்பிக்கொண்டே வர, அவளிடம் அசைவே இல்லை.

“அக்… அக்ஷி இங்க பாரு! கேடி. கண்ணைத் திற.” நேரம் செல்ல செல்லக் கெஞ்சவே தொடங்கினான்.

அதற்குள் குடிலும் வந்திருக்க, தீயணைப்புத் துறையினரும் காட்டுத்தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருந்தனர்.

பேச்சு மூச்சற்று மயங்கி கிடந்த அக்ஷிதாவைக் கண்டு பெண்களிருவரும் அதிர்ந்து விட்டனர்.

விஹானா தான், திகைத்திருந்த உத்ஷவியை உலுக்கி, “ஷவி… அவளுக்கு ஃபர்ஸ்ட் எய்டு பண்ணு” என அவசரப்படுத்த, தான் செய்த காரியத்தில் தன்னையே மானசீகமாக அறைந்து கொண்ட உத்ஷவி, அவளை சோதித்து நிம்மதி பெருமூச்சுடன், “பயந்து தான் மயங்கி இருப்பா போல.” என அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்க, சிறிது நேரத்தில் மயக்கம் கலைந்தாள் அக்ஷிதா.

அதன் பிறகே சஜித்தின் மூச்சும் சீரானது. ஜோஷித் தான், “ம்ம்…கேளு.” என்றான் மொட்டையாக.

கண்ணைச் சுருக்கி, நடந்ததை எண்ணிப் பார்த்த அக்ஷிதா, ஜோஷித்தின் கேள்வியில் புரியாமல், “என்ன கேட்கணும்?” எனக் கேட்டாள்.

சஜித் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “பொதுவா எல்லாரும் மயக்கத்துல இருந்து எந்திரிச்சா, நான் யாரு… எங்க இருக்கேன். எனக்கு என்ன ஆச்சுன்னு கேட்கணும்ல. அதான பாட்டர்ன்” என அவர்களைப் போலவே வார, அக்ஷிதா விழித்தாள்.

விஹானாவோ, “அவளே செத்து பொழைச்சு வந்து இருக்கா. மொக்கை பண்ணிட்டு இருக்கீங்க.” என்று இருவரையும் முறைக்க, ஜோஷித் தான், “இப்ப தெரியுதா. இதே மாதிரி தான் எங்களுக்கும் காண்டாகும், நீங்க மொக்கை போடும் போது!” என்று நக்கலடித்ததில், இருவரும் அசடு வழிந்தனர்.

உத்ஷவி எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக இருக்க, விஹானா அவளிடம் விழிகளாலேயே இறைஞ்சினாள்.

அவள் மீது கொண்ட கோபத்தைத் தொடர இயலாமல், மெல்ல முறைத்தவாரே, “வேற என்ன சொல்லி என் கூட உன்னை கோர்த்து விட்டான் அந்த ராகேஷ் டாக்…” எனக் கேட்டாள் உத்ஷவி.

“பெரிய டாஸ்க். மிஸ் ஆகாம பண்ணனும். அதே நேரம், நீங்க வேற யார்கிட்டயும் வேலை பார்த்துட்டு, அவனுக்கு எதிரா வந்துட கூடாதுன்னு சொன்னான். ஆனா, உங்க கூட ஸ்டே பண்ண ஆரம்பிச்சதும், அவன் சொன்னதெல்லாம் நான் மறந்து கூட போய்ட்டேன் டார்லிங். சாரி…” எனக் கெஞ்சலுடன் மன்னிப்பு கேட்க, ‘ம்ம்’ என்று சமாதானம் ஆனாள்.

“அடிப்பாவி இந்த ம்ம் – அ அப்பவே சொல்லிருந்தா நான் காட்டுப்பக்கம் போகாம இருந்துருப்பேன்ல” என அக்ஷிதா போலியாய் முறைக்க, உத்ஷவியின் இதழ்கள் மெல்லப் புன்னகைத்தது.

ஸ்வரூப் யாருடனோ அலைபேசியில் தீவிர உரையாடலில் இருக்க, சஜித்தை வருமாறு கூறி விட்டு வெளியில் சென்றான்.

அவர்கள் கிளம்பியதில் ஜோஷித்தும் எழுந்து கொள்ள, “நீ ஏன் எந்திரிக்கிற. ரெஸ்ட் எடு. நாங்க போய் பார்த்துட்டு வரோம்.” என்ற சஜித்திடம், “நானும் வரேன்.” என்றதில், போனில் பேசி முடித்து அங்கு வந்த ஸ்வரூப், “யாராவது ஒருத்தர் இங்க இருங்க. நம்ம வேலை முடியிற வரையாவது மூணு பேரையும் சேஃப்டி பண்ணனும்.” என ஈகோவை விட்டுக்கொடுக்காமல் கூற,

உத்ஷவி, “அப்போ உன் வேலை முடியவும் எங்களை பலி குடுத்துடுவியா?” என்று கண்ணைச் சுருக்கிக் கேட்டாள்.

“அது நீ நடந்துக்குறதை பொறுத்து!” என விழியுயர்த்தி அமர்த்தலாகக் கூறியவன், பாவையின் தீப்பார்வைக்கு ஆளானான்.

அத்தியாயம் 21

காட்டுத்தீ ஓரளவு கட்டுக்குள் வந்திருக்க, காணாமல் போன பையனைப் பற்றிய விசாரணையைத் தொடங்கினர், ஸ்வரூப்பும் சஜித்தும்.

பெயர் அன்பு. ஐந்தரை அடி உயரம். பள்ளிப்படிப்பை அறியாதவன். திடகாத்திரமான தேகம். காட்டு வேலை செய்து பெற்றோரை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவ்வளவு தான் அவனைப் பற்றிய தகவல்.

சித்தூரைத் தாண்டி, இதுவரை எங்குமே சென்றிருக்காதவனை யார் கடத்தி இருக்க முடியும்? என யோசனையுடன் இருந்த ஸ்வரூப்பிடம், அன்பின் தகப்பனான கருப்பன், “ஒருவேளை காட்டு விலங்கு ஏதாவது அடிச்சுருக்குமாய்யா. ஏதுக்கும், காட்டுக்குள்ள போய் தேடி பாக்கட்டுங்களா.” எனக் கலக்கத்துடன் கேட்க,

“ஏற்கனவே, ஊரை சுத்தி கேமரா வச்சு இருக்கோம். அதுல சந்தேகப்படுற மாதிரி ஃபுட் ஏஜ் இருக்கான்னு ஆளுங்க பார்த்துட்டு தான் இருக்காங்க பெரியவரே. கொஞ்சம் பொறுங்க. அன்புக்கு வேற எதிரி யாராவது?” எனக் கேட்டதில்,

“ஐயா, அவன் அதிர்ந்து கூட பேச தெரியாதவங்கய்யா. என் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டான். இப்ப என் புள்ள எங்க கஷ்டப்படுதோ” என தோளில் இருந்து துண்டால், வாயைப் பொத்தி அழுதார் அப்பெரியவர்.

அவரை பெருமூச்சுடன் பார்த்தவன், சஜித்திடம் “சித்தூர் எல்லைக்குள்ள இருக்குற கேமரா ஃபுட் ஏஜ் எல்லாம் கிடைச்சுதா…” என நடந்தபடி வினவ,

“கிடைச்சுது. ஆனா, அதுல சந்தேகப்படுற மாதிரி ஒண்ணுமே இல்ல. எல்லாம் நார்மலா தான் இருக்கு. எனக்கு என்னமோ அவனை வேற வழில தூக்கி இருப்பாங்களோன்னு தோணுது” என்றான் யோசனையாக.

அதில் சட்டென நின்ற ஸ்வரூப், “வேற வழின்னா? சித்தூரை சுத்தி அத்தனை பாதுகாப்பு இருந்தும், எப்படி கடத்தி இருக்க முடியும்? ஒண்ணு பாதுகாப்பு சரி இல்லாம இருக்கணும். இல்லன்னா, கடத்துனவன் சித்தூர சுத்தி இருக்குற இடத்துல தான் அத்தனை பேரையும் வச்சிருக்கணும்.” எனத் தீர்க்கமாக உரைத்தான்.

“ஆனா, நம்ம ஊர்ல வெளியூர் ஆளுங்க யாருமே இல்லடா. மூலை முடுக்கெல்லாம் நம்ம ஆளுங்க கட்டுப்பாட்டுக்குள்ள வச்சு விசாரிச்சுட்டு தான் இருக்காங்க. அப்படி கடத்தி நம்ம ஊருக்குள்ளேயே வச்சு இருந்தா நமக்கு தெரிஞ்சுருக்கும் தான? அதெப்படி, ஒரு சிசிடிவி கேமரால கூட எதுவும் சிக்காம போகும்?” எனக் குழம்பிட,

“அதான் எனக்கும் குழப்பமே. இத்தனை ஆம்பளைங்களையும் கடத்தி என்ன பண்ணுவானுங்க. ஆர்கன்ஸ் திருட்டு மாதிரி இருந்தா கூட, அட்லீஸ்ட் ஏற்கனவே கடத்துனவங்க பாடியாவது கிடைச்சு இருக்கணும்ல. ஒரே பாட்டர்ன்ல ஆம்பளைங்களை மட்டும் கடத்திட்டு இருந்த அந்த சைக்கோ, ஏன் திடீர்ன்னு நாகவல்லியை கடத்தணும்? இதுக்கும் ப்ரீத்தன்க்கும் சம்பந்தம் இருக்கும்ன்னு நினைக்கிறியா?” லேசர் விழிகளால் சஜித்திடம் வினவினான்.

“இருக்கலாம் ஸ்வரா. நம்மளோட ஆணி வேரையே அசைச்சு பார்க்கணும்ன்னு நினைக்கிறவன், நம்ம மேலயும் நம்மளை நம்பி இருக்குற மக்கள் மேலையும் கொலை வெறி புடிச்சு அலையுறான். அவனுக்கும் நமக்கும் நடக்குற பெர்சனல் போட்டிக்கு மக்களை பந்தாடுறான். அதுக்கு எக்ஸ்சாம்பிலே அந்த மூணு பொண்ணுங்க தான். அவளுகளை வேலை வாங்கிட்டு, உங்கிட்ட மாட்டிக்காம போட்டு தள்ளிடனும்ன்னு நினைச்சு இருப்பான். இப்போ, அவனால சும்மா இருக்க முடியல. அதான், எதையாவது செஞ்சுக்கிட்டே இருக்கான்.” என்று பல்லைக்கடித்தான்.

“வாட்எவர், இது எல்லாம் தியரி தான். பட் உண்மையா இதை யார் செய்றா. அவங்களோட மோட்டிவ் என்ன? கடத்தப்பட்டவங்களோட நிலைமை என்னன்னு நமக்கு தெரியணும். ஊஃப்… ஓகே மறுபடியும் முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்.” என்ற உரையாடலுடனே குடிலுக்கு வந்து விட்டனர்.

வெகு பார்மலாகப் பேசிய ஸ்வரூப்பிடம், “என் மேல கோபமா ஸ்வரா?” என சஜித் கேட்டதில்,

அதற்கு பதில் பேசாதவனாக, “இன்னும் கொஞ்சம் பேசிக் மெடிசின்ஸ் எல்லாம் வேணும். உத்ஷவிகிட்ட கேட்டு, மெடிசின்ஸ இங்கயே வர வை. நம்ம அடுத்த ஸ்டெப் இன்னும் கேர்ஃபுலா வைக்கணும். இனி ஒரு கடத்தல் இங்க நடக்கக் கூடாது” எனத் தீர்க்கத்துடன் கூறியவனின் கண்களில் அனல் பறந்தது.

“நான் கேட்டது இதை இல்ல…” என முணுமுணுத்த சஜித், ஜோஷித் கட்டிலிலும், மற்ற மூன்று பெண்களும் சோபாவில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்ததையும் கண்டு, “இந்த மூணு முட்டாள் பீசும் நமக்கு கொஞ்சமாவது யூஸ் ஆகுமா?” எனக் கேட்டதில், ஸ்வரூப் உத்ஷவியின் மீது பார்வையைப் பதித்தான்.

“நம்ம பங்களாக்குள்ள நம்ம வச்ச ரிஸ்க்கான இடங்களை தாண்டி, ஸ்மார்ட் டோரை ஹேக் பண்ணி உள்ள வந்து நம்மக்கிட்டயே பயமில்லாம பேசுறாளுங்க, முட்டாள் பீஸ்ன்னு சொல்ற. பட் எஸ் ஒரு விதத்துல முட்டாளுங்க தான். இருக்குற அறிவை தேவை இல்லாத விஷயத்துக்கு யூஸ் பண்ணி, வீணா போற ஃபில்டர் முட்டாள்ஸ்.” என சிறு நகை தோன்ற கூறியதில், சஜித்திற்கும் குறுநகை தோன்றியது.

அவர்கள் உள்ளே வந்த போதே, உறக்கம் கலைந்தது உத்ஷவிக்கு. இருவரும் தங்களை முட்டாள்கள் என்றதில், கொந்தளித்து எழுந்தவள், “ஆமா டா… போயும் போயும் உங்க வீட்டுக்கு திருட வந்தோம் பார்த்தீங்களா? நாங்க ஃபில்டர் முட்டாள்ஸ் தான்” என்று எகிறிட,

“உண்மையை சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்ன்னு சொல்லுவாங்க” என்று சஜித் அவளைக் கிண்டல் செய்ததில், உத்ஷவியின் கண்களில் நெருப்பு மழை பொழிந்தது. அவள் கத்தியதில் உறங்கிக் கொண்டிருந்த அனைவருமே எழுந்து விட, அக்ஷிதா தான், “இங்கயும் தீ வந்துடுச்சா?” எனப் பதறியபடி எழுந்தாள்.

விஹானாவோ, “ஏண்டி தூங்க விடாம டார்ச்சர் பண்றீங்க” என நெட்டி முறித்தாள்.

ஜோஷித், அவர்களை விடுத்து “போன வேலை என்ன ஆச்சு?” என சஜித்திடம் வினவ, அவனோ “வழக்கம் போல தான். முட்டு சந்துக்குள்ளயே முட்டிக்கிட்டு நிக்குது.” என்றான் சோகமாக.

உத்ஷவியின் கோப முகத்தைத் திருப்தியுடன் பார்த்த ஸ்வரூப்பைக் கண்டு நொடித்துக் கொண்டவள், “ஆளையும் பார்வையையும் பாரு. இவனுங்க கட்டு கட்டா காச சேர்த்து வச்சுக்கிட்டு, பொழுது போகாம சோசியல் சர்விஸ் பண்ணிக்கிட்டு திரியானுங்க. நமக்கு அப்படியா. நம்மளை பார்த்துக்குறதே பெரிய சர்விஸா இருக்கு…” என சத்தம் வராமல் முணுமுணுத்தபடியே இருந்தாள்.

அவள் தன்னைத் தான் ஏதோ திட்டுகிறாளென்று உணர்ந்த ஸ்வரூப், அவள் இதழ்களை நோட்டமிட்டு, வார்த்தைகளை சேகரிக்க முயல ஓரக்கண்ணில் அவனைப் பார்த்த உத்ஷவி, அவனது விழிகள் செல்லும் திசையைக் கண்டு கோப மூச்சுக்களைப் பொழிந்தாள்.

“எதுக்குடா என் லிப்ஸயே பாக்குற?” என நேரடியாகவே கேட்டு விட்டதில், சஜித்தும் ஜோஷித்தும் ஸ்வரூப்பைப் பார்க்க,

அவனோ, “ஆமா ஆமா பாக்குறாங்க. பெரிய உலக அழகி. பில்கேட்ஸோட பிலவ்ட் டாட்டர் இந்த அம்மா. அதென்ன சொல்வாங்க, ஹான்… தேன் சிந்தும் சிவந்த இதழ்கள் பாரு… நான் அப்படியே மெய் மறந்து பாக்குறதுக்கு. லிப் ரீடிங் பண்ணிட்டு இருந்தேன் திருடி…” என்றான் வெகு அசட்டையுடன்.

அதில் கடியானவள், “ஓஹோ… உங்களை மாதிரி ராஜ பரம்பரைக்குலாம், சைட் அடிக்க கூட பில்கேட்ஸ் டாட்டர் தான் வேணுமா? பட் எங்களுக்கு அந்த கண்டிஷன் எல்லாம் இல்லை. பார்க்க நல்ல கண்டிஷன்ல இருந்தாலே போதும்…” என்று விட்டு, வெளிப்படையாகவே ஸ்வரூப்பை சைட் அடிக்க, அவன் தான் ஒரு கணம் அவளது பார்வையில் திக்கு முக்காடினான்.

அவளது கேள்வியில், தம்பிகள் இருவரும் தவறாக எண்ணி விடுவனரோ என்று, அவளை வாரி இருக்க, அவளோ தன்னை இப்படி மடக்குகிறாளே என்றிருந்தது.

இருந்தும் கெத்தை விட்டுக்கொடுக்காமல், “என்னை உன்னால மடக்க முடியாது விஷா…” என்றான் இதழ்களை மடக்கி.

“உன்னை யாரு மடக்க போறா. நீ எல்லாம் ஷோ ரூம் பீஸ் ஸ்வரூப். பார்க்க மட்டும் தான் நல்லா இருக்கும்.” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு நக்கலடிக்க, அதில் பற்களை நறநறவெனக் கடித்தவன், “நீ அதுக்கு கூட ஒர்த் இல்ல” என்றான் பட்டென.

‘இப்ப எதுக்கு இப்படி 18+ கான்வெர்சேஷனா ஓட்டிட்டு இருக்குதுங்க’ என்ற ரீதியில் நால்வரும் விழிக்க, உத்ஷவி அவனை கேலி செய்யும் பொருட்டு, “சரி அப்போ லிப் ரீடிங் பண்ணேன்னு சொன்னியே. நான் என்ன பேசுனேன்னு சொல்லேன் பார்ப்போம்…” எனத் தெனாவெட்டாக சவால் விட்டவள், கால் மேல் கால் போட்டுக்கொண்டாள்.

அவனோ நக்கல் நகையுடன், அவள் முணுமுணுத்ததை அப்படியே கூறி இருக்க, உத்ஷவி தான் சற்று திகைத்து, பின் முறைத்தாள்.

“இன்னும் உனக்கு வேற என்ன என்ன திறமை இருக்குன்னு சொல்லிடு…” என்று எரிச்சலுடன் கூற, “அதெல்லாம் நிறைய இருக்கு. ஒவ்வொண்ணா காட்டுறேன்.” என விஷமத்துடன் இதழ் விரித்ததில், ‘இவன் எதை சொல்றான்’ என்ற ரீதியில் அவள் விழிகளை அகட்டிப் பார்த்தாள்.

“நான் திறமையை சொன்னேன் திருடி” என்று திருத்தி அவளது கற்பனை சக்திக்கு அணை போட்டதில், நாக்கை துருக்கி அழகு காட்டினாள்.

சஜித் தான் அக்ஷிதாவை நோக்கி, “அவ நர்ஸ், விஹானா பி. ஏ, நீ என்ன படிச்சு இருக்க?” எனக் கேட்டான் தோரணையுடன்.

இதுவரை இக்கேள்வியை தோழிகளும் கேட்டுக்கொள்ளாததால், இருவரும் அக்ஷிதாவைப் பார்க்க, “ஹேய் நீங்க சந்தேகமா பாக்குற அளவு எல்லாம் இங்க ஒண்ணும் இல்ல. பி. எஸ். சி பிசிக்ஸ் படிச்சுட்டு இருந்தேன். ஆனா பாதியோட நிறுத்திட்டேன்.” என்றாள் வேகமாக.

“ஏன்?” புருவம் சுருக்கி சஜித் கேட்க, “ஏன்னா? என்னை வீட்டை விட்டு துரத்திட்டாங்க. இருக்கவே இடம் இல்லையாம், இதுல எங்க படிக்க…” என அதற்கு தோள்க்குலுக்களைக் கொடுத்தாள்.

உத்ஷவி புரியாமல், “ஏன் வீட்டை விட்டு துரத்துனாங்க?” எனக் கேட்க, ஒரு நொடி முகம் மாறியவள், பின் மீண்டும் இயல்பாகி விட்டாள்.

“சொந்த வீட்ல திருடுனேன். துரத்திட்டாங்க.” என்றதும் சஜித், “சொந்த வீட்ல காசை எடுக்குறதுக்கு பேர் திருட்டு இல்லையே உரிமை!” என உடனடியாகப் பதிலளிக்க, சட்டென நிமிர்ந்தாள். 

“கரெக்ட்டு தான். ஆனா, நான் என் பெரியப்பா வீட்ல தான இருந்தேன். என் அப்பா ஒரு பிக் பாக்கெட் கேஸ். ஒரு பெரிய திருட்டு கேஸ்ல மாட்டி, ஜெயில்ல இருந்தாரு. அம்மாவும் அப்பாவை விட்டுட்டு போய்ட்டாங்க. அந்த நேரத்துல நான் பெரியப்பா வீட்ல இருந்து தான் படிச்சேன்.
எனக்கும் ஒண்ணும் திருடி வாழணும்ன்னு ஆச இருந்தது இல்லை. படிச்சு முடிச்சு வேலைக்கு போய் அப்பாவை ஜாமீன்ல எடுக்கணும்ன்னு தான் இருந்தேன்.

நம்ம மட்டும் முடிவு பண்ணுனா போதுமா… சுத்தி இருக்குற ஆளுங்களும் தான நம்ம என்ன ஆகணும்ன்னு முடிவு பண்ணனும். என் அப்பா திருட்டு வேலை பார்க்குறனால என்னையும் ஏதோ கொள்ளையடிக்க வந்த மாதிரி தான் என் வீட்டாளுங்க பார்ப்பாங்க. நான் அதை கூட கண்டுக்கிட்டது இல்ல. ஒரு கட்டத்துல, காலேஜ் ஃபீஸ் குடுக்குறதை நிறுத்திட்டாங்க.

அன்னைக்கு லாஸ்ட் டேட். பணம் தரலைன்னா எக்ஸாம் எழுத முடியாது. நானும் பொறுத்து பார்த்தேன், அவங்க தரல. அதான் நானே எடுத்துக்கிட்டேன். ஆட்டைய போட்டுட்டு போய் பீஸ் கட்டிட்டேன். அப்பறம், என்னை பயங்கரமா திட்டி அடிச்சு பெரியப்பா வீட்ல எல்லாரும் என்னை துரத்திட்டாங்க. இதுல ஹைலைட்டே என்ன தெரியுமா?” எனக் கண்ணை சுருக்கி கிசுகிசுப்பாகக் கேட்டாள்.

இத்தனை பெரிய விஷயத்தை அவள் என்னவோ வெகு சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்க, கேட்கும் அவனுக்குத் தான் ஏதோ போலானது. உத்ஷவிக்கே மனதில் ஒரு வித வருத்தம் தோன்றியது.

“என்ன?” சுரத்தையின்றி சஜித் கேட்க,

“அந்த லூசு பெரியப்பா, என் காலேஜ் புக்ஸ், நோட்ஸ், என் ஹால் டிக்கட், அவ்ளோ ஏன், என் ஸ்கூல் மார்க் ஷீட்ன்னு எல்லாத்தையும் எரிச்சுட்டாரு. அடுத்த நாள் எக்ஸாம்க்கு எழுத பேனா கூட இல்ல. இப்படி ஒரு சூழ்நிலை வரும்ன்னு தெரிஞ்சுருந்தா, அந்த காசை பீஸ் கட்டாமயாவது வச்சு இருப்பேன். அநியாயமா எழுதாத எக்ஸாம்க்கு காசு போய்டுச்சு” என பணம் போனதை எண்ணி வருந்தியவள்,

பின், “அப்பறம் அடுத்த வேளை சாப்பாடுக்கு என்ன செய்ய? அப்படியே என் அப்பா பிஸினஸையே நான் எடுத்து நடத்த ஆரம்பிச்சுட்டேன்…” என்று பெருமையுடன் கூறிக் கொண்டதில், அங்கு ஒரு கனத்த அமைதி நிலவியது.

முதலும் முடிவும் நீ…
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
74
+1
2
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.