Loading

தந்தையர்களைப் பார்க்கச் சென்ற ஆடவர்கள் மூவருமே மாத்திரையின் விளைவால் உறக்கத்தில் இருந்ததில், அவர்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்து விட்டு வெளியில் வந்தனர்.

யசோதா உர்ரென்ற முகத்துடன் இருந்ததை ஜோஷித் கண் காட்ட, ஸ்வரூப் சிறு புன்னகையுடன் அவரருகில் அமர்ந்து “என்ன அத்தை… எங்களைப் பார்க்காம ஒரு சுத்து இளைச்சுட்டீங்களா?” எனக் கரிசனத்துடன் கேட்டதில்,

“உங்களுக்குத் தான் இப்படி ஒரு அத்தை இருக்கேன்றதே ஞாபகம் வர மாட்டேங்குதே” என்றார் சிலுப்பலாக. அவருக்கு மறுபக்கம் அமர்ந்த சஜித், “உங்களை மறந்தா தான அத்தை ஞாபகம் வச்சுக்க” என ஐஸ் வைத்தான்.

அவரோ அதில் மெல்ல புன்னகைத்து, “என் பொண்ணு கிட்ட பேச வேண்டியத என்கிட்ட பேசுறீங்க மாப்பிள்ளை.” என்று கிண்டலாகக் கூற, அவனுக்கு என்னவோ அக்ஷிதாவின் நினைவே வந்தது.

அதில் அவன் முகத்தில் மலர்ந்தப் புன்னகை. அதனை ஒரு கணம் பார்த்து புருவம் சுருக்கிய ஸ்வரூப் யோசனையில் மூழ்க, பூமிநாதன் தான், “அந்த திருட்டுப் பொண்ணுங்களை ஏன்ப்பா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க. ஜெயிலுக்கு அனுப்பி இருக்க வேண்டியது தான.” என்று கடுகடுத்தார்.

ஜோஷித் எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “அவங்க எதையும் திருடவே இல்ல மாமா. எங்களுக்கு ஹெல்ப் தான் பண்ணுனாங்க” என்றான் அழுத்தமாக.

“ஹெல்ப்பாம் ஹெல்ப்பு” என்று தனக்குள் பொரிந்தவர், “அப்போ காசைக் குடுத்து அனுப்பி இருக்க வேண்டியது தான.” என்றதில்,

ஸ்வரூப் நிதானமாக, “சில விஷயங்கள் விலை மதிப்பில்லாதது மாமா. அதே மாதிரி தான் அந்தப் பொண்ணுங்களும். திருடிங்க தான். ஆனா, துரோகிங்க இல்ல. இப்போ எங்க ப்ரெண்ட்ஸா இங்க வந்துருக்காங்க. அந்த மதிப்பு கிஞ்சித்துக்கும் குறையக் கூடாது.” எனப் பொதுவாகவே கூறி, அனைவரையும் ஒரு பார்வைப் பார்க்க, அவனது அத்தைப் பெண்களுக்கு முகம் செத்து விட்டது.

அவசரமாக ஹாலுக்கு வந்த உத்ஷவி, சட்டென பேச்சற்று நின்று விட, பூமிநாதனும் யசோதாவும் அவர்களை அருவருக்கும் பார்வை பார்த்து விட்டு, எழுந்துச் சென்றனர்.

இஷானாவும், ‘இந்த கூத்து எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்கத் தான போறேன்.’ என கேலிச் சிரிப்பொன்றை உதிர்த்திட, அவர்களும் பெற்றோர்களின் பின் சென்றனர்.

ப்ரீத்தனை வேறு காணவில்லை என்ற பதற்றம் அனைவர்க்கும் இருந்தாலும், அதனை வெளிக்காட்டாமல் நடித்துக் கொண்டனர்.

ஜோஷித் கண்ணாலேயே “என்னடி?” என விஹானாவிடம் விசாரிக்க, “போன் பாரு” என சைகைக் காட்டினாள்.

அதன் பிறகே, தேஜஸ்வின் அழைத்தது தெரிய, ஸ்வரூப் அவனுக்கு அழைத்துப் பேசி, அவனது கூற்றில் புருவம் சுருக்கினான்.

“ஒவ்வொருத்தரும் யூஸ் பண்ணுற டேப்லட் லிஸ்ட் உங்களுக்கு அனுப்பி இருக்கேன் பாஸ்.” என்றதில்,

சஜித்தும் மடிக்கணினியை எடுத்து வந்து, அவர்கள் உட்கொள்ளும் மாத்திரை என்ன மாதிரியான விளைவுகளைக் கொடுக்கும் என்று ஆராய்ந்தான்.

அவனருகில் உத்ஷவியும் அமர்ந்து கூர்மையுடன் பார்க்க, “எல்லாம், சுகர் பிபி மாத்திரை மாதிரி தான் இருக்கு சஜி.” என்றாள் யோசனையுடன்.

ஜோஷித், “ஆனா, எல்லாம் வாலிபப் பசங்க ஷவி. அவங்களுக்கு எப்படி சுகர் பிபி இருக்கும்? அதுவும் அத்தனை பேருக்கும்.” என்றதில்,

“ஒருவேளை இல்லாத சுகர் பிபியை எல்லாம் வர வச்சு இருப்பானுங்களோ ஜோஷ்?” என விஹானா கேள்வியாகக் கேட்க, “இருக்கும்டி. சம்திங் ஃபிஷி.” என்றான் தாடையைத் தடவிக்கொண்டு.

ஸ்வரூப்போ, தீவிர சிந்தனையுடன், “தேஜா… காலைல இருந்து நைட்டு வரையான அவங்களோட ஆக்டிவிட்டீஸ் எனக்கு ஒன்னு விடாம வேணும். யூ காட் மை பாயிண்ட் ஒன்னு விடாம.” என அழுத்திக் கூற,

“ஓகே பாஸ்” என்றவன், “காலைல எந்திரிச்சு குளிச்சுட்டு வேலைக்குப் போறாங்க. அங்க வேலையை சிரத்தையா பார்க்குறாங்க. தென், ஈவினிங் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு, மாத்திரைப் போட்டுட்டு ஹெட் போன்ல பாட்டு கேட்டுட்டு தூங்குறாங்க. லீவ் நாள்லையும் பெருசா எந்த வித்தியாசமும் இல்ல. எங்கயும் அவ்ளோவா வெளில போறது இல்லை.” என்றான்.

“பாட்டுக் கேக்குறானுங்களா? அதுவும் ஹெட் போன்ல.” எனக் குழப்பமாய் கேட்ட ஸ்வரூப்பிடம், “ஆமா பாஸ் எல்லாருமே ஸ்மார்ட் போன் வச்சுருக்கானுங்க.” என்றதில், “இன்டரஸ்டிங்!” என்று போனை வைத்து விட்டான்.

அக்ஷிதாவோ, “எல்லாரும் இசை ரசிகர்களா இருப்பாங்க போல ஸ்வரூ.” என்றதில், “நீ வேற அக்ஷி. அவனுங்க யாருக்கும் பட்டன் போன் கூட யூஸ் பண்ணத் தெரியாது. இதுல எப்படி ஸ்மார்ட் போன் யூஸ் பண்றாங்க.” என கழுத்தைத் தேய்த்துக் கொண்டான்.

விஹானா, “அட இப்போ எல்லாம் கம்மி விலைல கூட ஸ்மார்ட் போன் வந்துடுச்சு ஸ்வரூ. அதுல இருக்குற பேசிக் ஆப்ஷன்ஸ ஈஸியா கத்துக்குறாங்க. அதுவும் மியூசிக் கேக்குறது எல்லாம், ப்ரெண்ட்ஸ் கூட சொல்லிக் குடுத்து இருக்கலாம்ல” என்றதும்,

“இருக்கலாம்… ஆனா எதையும் அக்செப்ட் பண்ணிக்க தான் முடியல விஹா. எதுவோ ஒன்னு நெருடிக்கிட்டே இருக்கு.” என்றான் பெருமூச்சுடன்.

கனகரூபினி அவர்களது வாதத்தினுள் புகுந்து, “கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுக்கலாம்ல. இந்த ஜூஸை குடிங்க முதல்ல.” என்று அனைவர்க்கும் கொடுக்க,

அக்ஷிதா, “என்னது ஜூசா?” என நெஞ்சில் கை வைத்துக் கொண்டவள், “அப்போ மீன் குழம்பு ஆண்ட்டி” என்று கேட்ட தோரணையில் சிரித்து விட்டார்.

“நீங்க தான் சீரியஸா ஏதோ பேசிட்டு இருக்கீங்க. சாப்பிட கூப்பிட்டா வருவீங்களோ மாட்டீங்களோன்னு ஜூஸை கொண்டு வந்தேன்” என்றதில், “நான் வருவேன் ஆன்ட்டி.” என்று முதல் ஆளாக நின்றாள்.

விஹானாவோ, “ஆண்ட்டி ஜூஸுக்கு பதிலா மீன் குழம்பை ஊத்தி குடுங்க குடிச்சுடுவா.” எனக் கேலி செய்திட, அத்தனை நேரமும் தீவிர யோசனையில் இருந்த ஜோஷித் அவ்தேஷ், பரபரப்புடன் “சஜி லேப்டாப்பைக் குடு.” என்று அவசரமாக வாங்கினான்.

சஜித்தும் உத்ஷவியும் மாத்திரைகளைப் பற்றிய ஆராய்ச்சியை விட்டுட்டு அவனைக் குழப்பமாக பார்க்க, ஸ்வரூப் “என்ன ஆச்சு ஜோ?” எனக் கேட்டான்.

“நம்ம ஹோட்டல்ல ஒருத்தனோட பர்ஸ்ல இருந்து சிப் எடுத்தோம்ல. அதுல இருக்குற டீடெய்ல்ஸ டீ கோட் பண்ண முடியலைன்னு சொன்னேன்ல. அதுக்கான கீ, ப்ரீத்தன் வச்சு இருந்த சிப்ல பார்த்த மாதிரி ஞாபகம் ஸ்வரா. ரெண்டு சிப்பும் எங்க?” என்றதில், ஸ்வரூப் இரண்டையும் கொடுத்தான்.

சில நிமிடம் செலவழித்து, அவன் எண்ணியது போன்றே டீ கோட் செய்து விட்டான்.

அந்நேரம் சித்தாரா, “தம்பி… அப்பா எந்திரிச்சுட்டாரு.” என்றதும், ஸ்வரூப்பும் சஜித்தும் எழுந்து விட, ஜோஷித் “ஷவி… இதுல லோட் ஆகிட்டு இருக்கு. இடையில நின்னுட்டா, அகைன் ரிட்ரைவ் பண்ணு” என்றிட அவளும் சரி என தலையசைத்தாள்.

டீ பாய் மீதிருந்த மடிக்கணினியின் மீதே பெண்கள் மூவருக்கும் கவனம் இருந்தது.

கம்பீரமாய் திடமான உடற்கட்டுடன் வலம் வந்து கொண்டிருந்த சாணக்கிய அவ்தேஷ், உடல் கறுத்து மெலிந்து வதங்கிய நிலையில் காட்சியளித்தார்.

வெகு நாட்கள் கழித்து பார்த்துனாளோ என்னவோ அவரது நலிந்த தேகத்தின் வித்தியாசம் தெரிய, ஸ்வரூப்பின் கண்கள் தானாகக் கலங்கிப் போனது.

“ப்பா…” என்ற மகனின் குரலில் கண்ணைத் திறந்தவர், “ஸ்வரா… எப்பப்பா வந்தீங்க. எப்படி இருக்கீங்க. போன வேலை என்ன ஆச்சு?” என்றவரின் குரலும் கண்களும் அந்த கம்பீரத்தைத் தொலைக்காததே ஒரு வித நிம்மதியைக் கொடுத்தது.

“முதல்ல உங்க உடம்பு எப்படி இருக்கு. நாங்க கேட்க வேண்டிய கேள்வியை நீங்க கேக்குறீங்க.” என மெலிதாய் முறுவலித்து அவரது கரத்தைப் பற்றிக்கொண்டான்.

“எனக்கு என்னப்பா… இப்ப விட்டாலும் எந்திரிச்சு ஓடி ஆடி வேலை செய்வேன். உன் அம்மா தான் என்னைப் படுக்கையை விட்டே எந்திரிக்க விட மாட்டுறா.” என்று போலியாய் சலித்தார்.

“நீங்க ஆடி ஓடுனதுலாம் போதும் பெரியப்பா. ஒழுங்கா ரெஸ்ட் எடுங்க.” என்ற ஜோஷித்தின் கூற்றில் புன்னகைத்தவர், “உங்களுக்கு போட்டியா வந்துடுவேன்னு உங்களுக்கு பொறாமை ஜோ.” என்றதில்,

“ஆமா, ஆமா… அப்பறம் எங்களோட கெத்து குறைஞ்சுடும்ல” என சஜித் சிரிப்பை அடக்கிக்கொண்டு கூற, அங்கு மெல்லிய சிரிப்பலை எழுந்தது.

அந்நேரம், சஜித்தின் தந்தையான நந்தகோபால் அவ்தேஷும், ஜோஷித்தின் தந்தையான பாரிராம அவ்தேஷும் உள்ளே வர, இரு மகன்களும் தத்தம் தந்தையரைக் கட்டிக்கொண்டனர்.

அவர்களது உடலில் ஆங்காங்கே காயம் இருந்தாலும், ஓரளவு நடமாடிக்கொண்டனர். சாணக்கியருக்கு மட்டும் எழுந்து நடக்க சில நாட்கள் தடை விதித்தது மருத்துவக் குழு. அதில் வீல் சேரில் தான் உலா வந்து கொள்வார்.

அன்பைப் பொழிந்து சற்று ஆசுவாசமானதும், சாணக்கியர் “உங்க கூட இருந்த பொண்ணுங்க எங்க?” எனக் கேட்க,

ஸ்வரூப் இதழ்களை வளைத்து, “ஐசியூல இருந்தாலும், எல்லா டீடெய்ல்ஸும் கலெக்ட் பண்ணி வச்சுடுறது” எனத் தந்தையைக் கிண்டலடிக்க,

“தம்பி… ஸ்வரா… வேகமா வாங்கப்பா. அக்ஷிதா பொண்ணுக்கு என்னமோ ஆகிடுச்சு.” என சித்தாராப் பதற, மூவரில் சஜித் அதிகமாகப் பதறி அடித்து ஓடி வந்தான்.

இதற்கு சற்று நேரம் முன்பு, ரிட்ரைவ் ஆன சிப்பில், ஒரு ஆடியோ இருந்தது.

“இது என்னடி ஆடியோ?” எனக் குழம்பிய உத்ஷவி அதை பிளே செய்ய, சத்தம் கம்மியாகக் கேட்டதில், பாக்கெட்டில் இருந்த ஹெட் போனை எடுத்து மாட்டினாள்.

“ஹே நான் தான் ஃபர்ஸட் கேட்பேன்” என்ற அக்ஷிதா, வேகமாக ஹெட் போனை மாட்டிக்கொண்டு, ஆடியோவைக் கேட்டாள்.

சிறிது சிறிதாய் அவள் முகம் மாறிப்போக, முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் பூத்தது. ஒரு மாதிரியாக நடுங்க ஆரம்பித்தவள், ஹெட் போனைக் கழற்றி விட, அவளைப் பிடித்த மற்ற இருவரும் தான் புரியாமல் விழித்தனர்.

“அக்ஷி என்னடி ஆச்சு?” என்ற விஹாவின் குரல் அவளுக்கு கேட்டதோ என்னவோ, நடுங்கி கொண்டிருந்தவள் இன்னும் அச்சம் விலகாமல் உதடு துடிக்க அமர்ந்திருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த கோலம் கண்டு சஜித் யோசியாமல் அவளருகில் அமர்ந்து அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு, “என்னடி கேடி ஆச்சு. ஏய் இங்க பாருடி.” என அவள் கன்னத்தை தட்டினான்.

“சஜூ” என அவனை அணைத்துக் கொண்டவளுக்கு இன்னும் நடுக்கம் மட்டும் நிற்கவில்லை.

உத்ஷவி, “இதுல வந்த ஆடியோ கேட்டதுல இருந்து தான் ஷிவர் ஆகுறா ஸ்வரூ” என ஸ்வரூப்பைப் பார்க்க,

ஜோஷித் “ஓ மை காட்! இதுல டவுன்லோட் ஆன ஆடியோ ஆட்டோமேடிக்கா டெலிட் ஆகுற போல கோடிங் பண்ணிருக்காங்க ஸ்வரா. இன்னும் ரெண்டு நிமிஷத்துல டெலிட் ஆகிடும். அதுக்கு அப்புறம் ரிட்ரைவ் பண்றது கஷ்டம்” என்றதுமே, ஹெட் போனை ஸ்வரூப் எடுத்திருக்க, அதனை வேகமாகத் தட்டி விட்ட அக்ஷிதா, “வேணாம் ஸ்வரூ கேட்காத” என்றாள் மூச்சு வாங்க.

“சஜி அவளை ரூம்க்கு கூட்டிட்டு போ!” என ஸ்வரூப் உத்தவிட்டும், அவள் செல்லாமல் முரண்டு பிடிக்க, சஜித் யோசியாமல் அவளை அலேக்காகத் தூக்கினான்.

ஸ்வரூப் ஹெட்போனை காதில் மாட்டியதில், உத்ஷவி ஒரு பக்கத்தை எடுத்து தனது காதில் மாட்ட விழைய, தனது கரம் கொண்டு தடுத்தான்.

ஜோஷித் முயன்ற போதும், “ரெண்டு பேரும் அமைதியா இருங்க.” என்று உறுமலுடன் சத்தமிட்டவன், கூர்மையாக ஆடியோவைக் கேட்கத் தொடங்கினான். இரண்டு நிமிடத்தில் அது தானாக டெலிட் ஆகி விட, ஹெட் போனை எடுத்து கண்ணை இறுக்கி மூடித் திறந்தவனுக்கும் வியர்த்து வழிந்தது.

“ஸ்வரூ உனக்கு ஏன் இப்படி ஸ்வெட் ஆகுது” விஹானா பதற்றமாகக் கேட்க, “ஐ ஆம் ஆல்ரைட்” என்றவன், தன்னை அடக்க அரும்பாடுபட்டான்.

“டேய்… உன் முகமெல்லாம் ஒரு மாதிரி ஆகிடுச்சு ஆல்ரைட்ன்னு சொல்ற…” என்ற உத்ஷவி அவன் கையைப் பற்றிக்கொள்ள, அவனது இதயத்துடிப்பு வெளியில் கேட்டது.

“ஜோ… ப்ரெஷர் மானிட்டர் இருக்கா.” என ஜோஷித்திடம் வினவ, தலையை ஆட்டியவனுக்கு ஸ்வரூப்பின் நிலையைக் கண்டதும் மனதில் வேதனை அதிகரித்தது.

அவர்கள் பின்னே வந்த தந்தையர்களும் நடந்த விஷயங்களையும், தங்களது மகன்களின் நடவடிக்கையில் ஏற்பட்ட வித்தியாசத்தையும் கண்டு குழம்பியும் வியந்தும் பின் பதறியுமாக இருக்க, உத்ஷவி ஸ்வரூப்பை சோபாவில் அமர வைத்து, அவன் முதுகை நீவி விட்டாள்.

“ரிலாக்ஸ்டா. ரிலாக்ஸ்.” என்றவள், “ஆண்ட்டி தண்ணி…” என்று குரல் கொடுக்க, சித்தாரா பதற்றத்துடன் நீரைக் கொடுத்தார்.

அதனை அவனுக்கு புகட்டியவள், “என்னடா ஆச்சு? உன்னை யாரு அதை கேட்க சொன்னது. அதுவும் தனியா…” என்று கடிந்தவள், அவனது பல்சை சரி பார்க்க, அது சற்று அதிகமாகவே இருந்தது.

அதற்குள் ஜோஷித் ப்ரெஷர் மானிடரை எடுத்து வந்து கொடுத்து, ஸ்வரூப்பின் மறுபக்கம் அமர்ந்து அவனை ஆதரவாகப் பிடித்துக் கொள்ள, உத்ஷவி, அவனுக்கு இரத்த அழுத்தத்தை சரி பார்த்தாள்..

“உனக்கு பிபி எப்பவும் நார்மலா தான இருக்கும்?” எனக் கேட்டிட,

ஜோஷித் “அதெல்லாம் நார்மலா தான் இருக்கும் ஷவி. இப்போ எப்படி இருக்கு?” எனக் கேட்க,

“கொஞ்சம் ஹையா இருக்கு.” என்றவளுக்கு கண்ணை திறந்தும் மூடியுமாகத் தன்னை நிதானப்படுத்த முயன்ற ஸ்வரூப்பைக் கண்டு மனம் கலங்கிப் போனது. கண்களும் தான். அதனை முயன்று மறைத்துக் கொண்டாள்.

ஜோஷித்தும் துடித்த இதயத்தை அடக்கிக்கொண்டு, “விஹா… சஜிக்கு பிபி பார்க்க தெரியும். அக்ஷிக்கு பார்க்க சொல்லு.” என்று மானிட்டரைக் கொடுக்க, அதனை வாங்கிக்கொண்டவள், ஸ்வரூப்பைக் கவலையுடன் பார்த்து விட்டு அறைக்குச் சென்றாள்.

உத்ஷவி”ஸ்வரூ டேக் அ டீப் ப்ரீத். மூச்சை நல்லா இழுத்து விடு.” என்று அவனது நெஞ்சையும் முதுகையும் நீவி விட, அவனும் முயன்று மெடிடேஷன் செய்து, தன்னை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தான்.

இதற்கிடையில் பெண்ணவளின் கரத்தை நொடி கூட தளர்த்தவில்லை அவன்.

“இப்ப ஹார்ட்பீட் நார்மல் ஆகிடுச்சா.” எனக் கேட்டபடி, தனது துப்பட்டா கொண்டு அவனது வியர்வைத் துளிகளை ஒத்தி எடுக்க, “இப்போ ஓகே டி. நீ ரிலாக்ஸ் ஆகு.” என்றான் அவளைப் பார்த்து.

அதன் பிறகே, அவனைப் போலவே தனக்கும் வியர்த்து வழிந்து, தவிப்பின் உச்சிக்கு சென்று, இதயத்துடிப்பு எல்லையைக் கடந்து துடித்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியதையே அவள் உணர்ந்தாள்.

ஜோஷித்தோ, “என்ன தான்டா இருந்துச்சு அந்த ஆடியோல?” எனக் கேட்டதில்,

ஸ்வரூப் சிவந்த விழிகளுடன், “இட்ஸ் மெஸ்மரைசிங் ஜோ. அதுல கேட்ட ஒரு மாதிரியான ஓலக்குரல், ஏதேதோ சத்தம், இட்ஸ்… இட்ஸ் கம்ப்ளீட்லி அப்நார்மல். என்னாலேயே டாலரேட் பண்ண முடியல. அக்ஷி எப்படி மேனேஜ் பண்ணுறான்னு தெரியல. அண்ட், வெறும் வெறும் ஒரு ஆடியோ மண்டைக்குள்ள போய் குடைஞ்சு உடம்பையே கண்ட்ரோல்ல எடுக்கும்ன்னு சொன்னா நம்ப முடியுதா? எஸ். நொவ் இட்ஸ் ஹேப்பனிங்.” எனப் படபடத்துப் பேசியதில், மற்ற இருவருமே உறைநிலைக்குச் சென்றனர்.

முதலும் முடிவும் நீ
மேகா

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
110
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    7 Comments

    1. Naveena Ramesh

      என்ன நடக்குதுனு கெஸ் பண்ண முடியல மா… செம்ம இன்ட்ரஸ்டிங் 🤩🤩

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    3. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    4. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.