Loading

தேசம் 11

 

தன் இருப்பிடத்தில் காரை விட்டவன் அங்கிருந்து தள்ளாடி நடந்து வந்தான் வீட்டிற்கு. நான்கு சக்கர வாகனம் இருப்பது கூட இன்று வரை தெரியாது பிரார்த்தனாவிற்கு. அவனிடம் எதுவும் இல்லாதது போலவே காட்டிக் கொண்டவன் தனியார் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக பொய் சொல்லி இருக்கிறான். உண்மையாக சரவணப் பொய்கை தனியாக டிசைனர் டெக்னாலஜி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறான். 

 

ஒரு காலத்தில் தீவிரமாக காவல் துறையில் சேர பயின்று கொண்டிருந்தான். விதி அவனை வேறு பக்கம் மாற்றி பிரார்த்தனாவிடம் சேர்த்து விட்டது. என்றும் வீட்டை திறக்கும் பொழுது ஏதோ ராட்சசன் போல் அவளை சித்திரவதை செய்ய ஆர்வத்தோடு திறப்பவன் இன்று பூட்டிற்குள் சாவியை நுழைக்க முடியாமல் தடுமாறினான். 

 

 

கதவைத் திறந்ததும் மயங்கி படுத்து கொண்டிருக்கும் மனைவி தான் தெரிந்தாள். அவளைப் பார்த்ததும் உடைந்து அங்கேயே விழுந்தவன் முடிந்த மட்டும் கண்ணீரை கரைத்தான். நித்திரையில் இருப்பது போன்று படுத்திருந்த பிரார்த்தனாவிற்கு சுயநினைவு இல்லை. தன்னவன் தனக்காக வருந்துகிறான் என்பதை அறியாமல் அவள் இருக்க, மெல்ல அவளை நெருங்கியவன் முகத்தைப் பார்க்க முடியாமல் குற்ற உணர்வில் தவித்தான்.

 

முகத்தை தொட சென்றவன் அதை செய்ய முடியாமல் தலையில் அடித்துக் கொண்டு, “தனா! சாரி தனா… சத்தியமா இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கல. என்னை மன்னிச்சிடுமா தயவு செய்து மன்னிச்சிடு.” என அவளிடம் மன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்க எதையும் கேட்க முடியாத நிலையில் படுத்திருந்தாள். 

 

“தனாமா… எந்திரிடா என்னை எந்திரிச்சு பாரு.” 

 

“தனா, எந்திரி தனா” தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்க, அவளிடம் அசைவு இல்லை. 

 

தன்னால் தான் இப்படி ஒரு நிலையில் இருக்கிறாள் என்பதை மறந்தவன் அவள் காலை பிடித்துக் கொண்டு அப்படியே குறுகி படுத்தான். வாய்க்கு வந்ததை எல்லாம் புலம்பிக் கொண்டிருந்தான். திருமணத்தின் போது அவன் அணிவித்த மெட்டி கன்னத்தை உரச, அதில் முத்தமிட்டு தன் நெஞ்சோடு சேர்த்துணைத்துக் கொண்டான். 

 

“ஏன்டா இப்படி படுத்திருக்க… எந்திரிச்சு என் சட்டையை பிடிச்சு கேள்வி கேளு. என்னை அடி உன்னை இவ்ளோ கஷ்டப்படுத்துனதுக்கு என்னை அடி.” ஆவேசமாக எழுந்து அவள் கைகளைப் பிடித்து அடித்துக் கொள்ள ஆரம்பித்தான்.

 

கை மட்டும் தான் அசைந்ததே தவிர அவளிடம் சிறு அசைவில்லை. அடித்தடித்து ஓய்ந்தவன் அவள் முகத்தை தன் மடியில் வைத்துக் கொண்டு, “ரொம்ப கோவமா இருக்கியா தனா.” என கன்னத்தைப் பிடித்து அசைத்தான். 

 

 

அப்போதுதான் கவனித்தான் தன் கையில் ரத்த சிகப்புகள் அப்பி இருப்பதை. கண்டதும் கை கால்கள் எல்லாம் நடுங்கி அவளை தரையில் வைத்து, “அய்யோ!” துடிதுடித்து உடலை ஆராய்ந்தான்.

 

நான்கு மணி நேரத்திற்கு முன்னால் ஈவு இரக்கம் பார்க்காமல் அவன் செய்த செயலில் ரத்தம் கசிந்திருக்கிறது. அதை தன் விரல்களில் தொட்டுப் பார்த்து அஞ்சியவன் அவளை விட்டு தள்ளி அமர்ந்து, “தனா!” தலையில் அடித்துக் கொண்டு கதறினான். 

 

அவள் பெயரைத் தவிர வேறு எதுவும் உச்சரிக்க முடியவில்லை அவனால். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து பித்து பிடித்தவன் போல் அவளை சுற்றியே வலம் வந்தவன் தன் மணி பர்சில் இருக்கும் தாயின் புகைப்படத்தை எடுத்து,

 

“அம்மா, தனாவ பாருங்க எந்திரிக்க மாட்டேங்குறா. நீங்க அவகிட்ட சொல்லி எந்திரிக்க சொல்லுங்க. நான் பண்ணதெல்லாம் தப்பு தாம்மா இனிமே அவளை கஷ்டப்படுத்த மாட்டேன். நான் தெரியாம தான பண்ணேன் அவ கிட்ட சொல்லி புரிய வைங்கம்மா. அவளை நான் ரொம்ப காதலிக்கிறேன் அவ எனக்கு வேணும். கஷ்டப்படுத்துனதுக்கு எல்லாம் சேர்த்து சந்தோஷமா பார்த்துப்பேன்னு சொல்லுங்கம்மா. ஒரே ஒரு தடவை எந்திரிச்சு என்னை பார்க்க சொல்லுங்கம்மா ரொம்ப பயமா இருக்கு. நிறைய ரத்தம் போனா அவளுக்கு ஏதாச்சும் ஆகிடுமா…” என்ற வார்த்தையை உச்சரிக்கும் பொழுது தான் ஏதோ சிந்தனை ஓடியது உள்ளுக்குள்.

 

“அம்மா! என் தனாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா சரி படுத்திடலாம்ல.” ஆவேசம் கொண்டு எழுந்தவன் தன் தாயின் புகைப்படத்தை அப்படியே தூக்கி வீசிவிட்டு மனைவியை கையில் அள்ளினான். 

 

அவனின் அவசரம் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனையில் சேர்க்க வைத்தது. அங்கு ஆயிரம் கேள்விகளை சமாளித்து ஒரு வழியாக தன் மனைவிக்கு மருத்துவம் பார்க்க செய்தான். இருக்கையில் அமர்ந்திருந்தவன் எண்ணத்தில் அவளே நிறைந்திருக்க அவளைப் பற்றிய சிந்தனையில் தன் நினைவுகளை இழந்தான். 

 

 

“வந்திடு தனா என்கிட்ட வந்திடு. நான் பண்ணதெல்லாம் தப்பு தான். நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன் என்னை விட்டு மட்டும் போயிடாது. உன்னையும் இழந்துட்டு என்னால வாழ முடியாது.” என்றவனை தான் வருவோர் போவோரெல்லாம் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

அவர்களைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாதவன் கடவுளாக நினைக்கும் தன் தாயிடம் தொடர்ந்து வேண்டுதல்களை வைத்துக் கொண்டிருந்தான். அவன் வேண்டுதலை செவிமடுத்த கடவுள் நல்ல செய்தியை காதில் நிறைக்க, கையெடுத்து கும்பிட்டான் மருத்துவரை.

 

***

 

மனைவியை பார்க்க துணிவில்லாமல் அப்படியே வெளி இருக்கையில் அமர்ந்திருந்தவன் எண்ணத்தில் நேற்று இரவு நடந்தது ஓடியது. எப்படி இந்த தவறு என்று சிந்தித்தவனுக்கு விடை ஏதும் கிடைக்கவில்லை. செய்யாத தவறுக்கு இத்தனை நாட்களாக தன்னவளை காயப்படுத்தி இருக்கிறோமே என்ற ரணம் கொல்லாமல் கொன்றது.

 

 

வெகு நேரமாக எழ தயங்கிக் கொண்டிருந்தவன் ஒரு வழியாக கதவை திறக்க, தலையில் கட்டுடன் சோர்ந்து படுத்திருந்தாள். அவளைப் பார்த்ததும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைகை ஆறு உடைந்தது. சில அடி தூரத்தில் இருக்கும் பிரார்த்தனாவை நெருங்குவதற்குள் பல எரிமலைகள் அவனுக்குள் வெடித்தது. பக்கத்தில் அமர்ந்து ஊசி குத்தாத கையைப் பிடித்தவன் மென்மையாக வருடினான். 

 

“தனாமா! உன்னோட இந்த நிலைமைக்கு நான் தான காரணம். ஆனா, உனக்கு ஒன்னு தெரியுமா… என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணம். என் நிலைமையை சொல்லிக் கூட புரிய வைக்க முடியாது. வாழ்க்கையில எல்லாத்தையும் இழந்துட்டு அதுக்கு காரணமான உன்னை பழிவாங்க வந்தேன். நான் நினைச்சதை அடையும்போது நினைக்காததை கடவுள் நடத்திட்டான். இப்போ உன்கிட்ட உண்மையை சொல்லவும் முடியாம செஞ்சதை மாத்தவும் முடியாம குற்றவாளியா நிற்கிறேன். ” 

 

அவள் கேட்க மாட்டாள் என்ற தைரியத்தில் தான் மனதில் இருக்கும் அனைத்தையும் கொட்டினான். சற்று பாரம் குறைந்தது போல் இருக்க அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அப்படியே தலை சாய்ந்தான். சிறிது நேரத்தில் யாரோ அவன் தோள் தட்ட, நிமிர்ந்தான்.

 

எதிரில் அவனைப் போல் ஒருவன் நின்று கொண்டு, “ஏண்டா பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே பண்ணாதவன் மாதிரி கைய பிடிச்சு அழுதுட்டு இருக்க. அவ எந்திரிச்சா உன்னை ஏத்துப்பான்னு நினைக்கிறியா? இல்ல அவ அப்பன் உன்ன சும்மா விடுவான்னு நினைக்கிறியா. இந்நேரம் தான் பொண்ணுக்காக என்ன பண்ணிட்டு இருக்கானோ தெரியாது. உன் வாழ்க்கை இத்தோட முடிஞ்சிது. வாய்க்கு வாய் தனான்னு சொல்றியே அவ உன்னை வெறுத்து ஒதுக்கி தண்டனை கொடுக்க போறா. ஏற்கனவே அனாதையா வாழ்ந்துட்டு இருக்க நீ இவளையும் தொலைச்சிட்டு முழு அனாதையா வாழப் போற.” என்றது. 

 

மனசாட்சி சொன்ன வார்த்தையை ஒத்துக் கொள்ள முடியாமல் மிரண்டவன், “இல்ல, தனா என்னை விட்டு போக மாட்டா. நான் அவளை காதலிக்கிறதை விட அதிகமா அவ என்னை காதலிக்கிறா.” வாதம் செய்ய,

 

“அப்படியா!” கேலி செய்தது அவன் மனசாட்சி.

 

“போடா கிறுக்கு பயலே… அவ கண்ணு முழிச்சதும் பாரு உன் நிலைமை என்னன்னு. அங்க உன் மாமனார் இந்நேரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி இருப்பாரு.” 

 

 

இயல்பை மறந்து நடக்கப் போவதை மனக்கண்ணில் ஓட்டி பார்த்தான். மனசாட்சி சொன்னது நூறு சதவீதம் உண்மை என்றது தெளிவான எண்ணம். என்ன செய்து இதிலிருந்து தப்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

 

“என்னடா பயமா இருக்கா” என்ற கேள்விக்கு ஆமாம் என தலையாட்ட,

 

“இதுல இருந்து தப்பிக்க ஒரே வழி தான் இருக்கு.” என அவனுக்கு சாதகமாக நின்றது அவன் மனசாட்சி. 

 

உயிரோடு உயிராக வாழ்ந்த மனசாட்சி அவனுக்காக ஒரு திட்டத்தை கொடுக்க அதை அப்படியே செய்து தற்காலிகமாக இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தான். தற்காலிகம் என்பது நிரந்தரம் இல்லை என்பதை அறியாது மனைவி கண் விழிக்கும் நொடிக்காக காத்துக் கொண்டிருக்க, லேசாக அவள் விழி அசைய ஆரம்பித்தது. 

 

தலையெல்லாம் பாறையில் முட்டியது போன்று பாரமாக இருக்க விழி திறக்க முடியாமல் திறந்தவள் எதிரில் கண்ணீர் ததும்ப நின்றிருந்தான் கணவன். ஒருமுறை விழித்திறந்து பார்த்தவள் முடியாமல் கண்களை மூடிக்கொள்ள வேகமாக அவளை அணைத்தவன் குமுறி அழுதான். முடியாத நிலையிலும் கைகள் தடுத்தது கட்டியவனை.

 

 

தன்னை தள்ளி வைக்க முயல்கிறாள் என்பதை உணர்ந்து அழுத்தமாக நெருங்கினான். அருகில் வரும் நொடி பயந்து பிரார்த்தனா படுத்தப்படி நகர, அதில் குற்ற உணர்வு மேலும் தலைதூக்கி “சாரி தனா” மந்திரம் போல் காதோரம் கிசுகிசுத்தான்.

 

 

“தெரியாம பண்ணிட்டேன். கொஞ்ச நாளா என் மண்டைக்குள்ள என்னென்னமோ ஓடிக்கிட்டு இருக்கு தனா. ஏன் இப்படி பண்ண எதுக்கு பண்ணன்னு தெரியல. உன்கிட்ட சொன்னா நீ என்னை தப்பா நினைச்சு விலகிடுவியோனு பயந்து தான் எதுவும் சொல்லல. இவ்ளோ தூரம் ஆகும்னு எதிர்பார்க்கலை தனா.” என்றான். 

 

சரவணப் பொய்கையை விட்டு விலகியவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க, 

 

“நான் வேணும்னு எதுவும் பண்ணல என் மூளைக்குள்ள யாரோ உட்கார்ந்துட்டு இப்படி எல்லாம் பண்ண சொல்றாங்க. இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செஞ்சு என்னை நம்பு தனா” பேசினான்.

 

 

இவன் எவ்வளவு பேசினாலும் நம்பாத பார்வை அவளிடம். உடனே ஒட்டியவாறு படுத்து கொண்டவன் இறுக்கமாக அணைத்து, “யாரோ இப்படி பண்ணு அப்படி பண்ணுன்னு எனக்குள்ள சொல்லிட்டு இருக்காங்க. அதை பண்ணதும் சொன்னவங்க காணாம போயிடுறாங்க. எது நிஜம்னு தெரியாம தல ரொம்ப வலிக்குது. என்னை எப்படியாது இதுல இருந்து காப்பாத்து. எனக்கு ஏதாச்சும் ஆனா கூட பரவால்ல உனக்கு ஏதாச்சும் ஆகிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு.” பயந்து தாயிடம் ஒட்டும் பிள்ளை போல் அவளிடம் ஒட்டிக் கொண்டான்.

 

இதுவும் அவனின் நாடகத்தில் ஒன்று என்று அறியாதவள் சேலாக அவன் பக்கம் சாய்ந்தாள். நாளை இந்த நம்பிக்கை பொய்யாகும் பட்சத்தில் பிரார்த்தனா பொய்யாகப் போகிறாள் அவனிடம்.

 

தேசம் 12

 

பிறந்தகம் எதுவோ தெரியவில்லை கடல் பரப்பில் சுற்ற வேண்டியது தன் இயல்பை மாற்றிக் கொண்டு சின்ன தொட்டியில் நீந்தி கொண்டிருந்தது. இரண்டு சிகப்பு நிற மீன்குட்டிகள் பக்கத்தில் இருந்தவள் பார்வை அதையே வட்டமடித்தது. 

 

மருத்துவமனையை விட்டு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. கட்டியவன் கண்ணீரில் மனம் சிறிது கரைந்தாலும் வழக்கம் போல் பார்க்கும் அதே யோசனை பார்வையோடு தன் வட்டத்தை நிறுத்திக் கொண்டாள். மீண்டும் சிறையில் தான் வைக்கப் போகிறான் என்ற எதிர்பார்ப்போடு வந்தவள் எண்ணம் பொய்யானது. 

 

காதலிக்கும் பொழுது காட்டிய வீடும் இல்லாமல் கட்டிய பின் இருந்த வீடும் இல்லாமல் புதிதாக ஒரு வீட்டில் இருக்கிறாள் பிரார்த்தனா. வந்த சில நொடிகளில் கண்டு கொண்டாள் இதுதான் அவன் வாழ்ந்து கொண்டிருந்த உண்மையான வீடு என்று. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் பறைசாற்றியது இது அவனுடைய ரசனை என்று. 

 

இந்த மூன்று நாட்களும் பிரார்த்தனாவை விட்டு இஞ்ச் அளவு நகரவில்லை சரவணப் பொய்கை. அதைவிட பெரிய அதிசயமாக அவளுக்கு தேவையான அனைத்தையும் அவனே செய்து கொடுக்கிறான். ஏற்கனவே இரு முகத்தைப் பார்த்தவளுக்கு இதுவும் உன்னுடைய முகமா என்ற அடுத்த கேள்வி வந்துவிட்டது.

 

“தனாமா!” என்றவன் குரலுக்கு திரும்பாமல் இருக்க,

 

“எவ்ளோ நேரம் இங்கயே உட்கார்ந்துட்டு இருப்ப? நீ இப்படி உட்காருவேன்னு தெரிஞ்சிருந்தா இந்த ரெண்டு மீனையும் வாங்கிட்டு வந்திருக்கவே மாட்டேன்.” என்றான்.

 

அவன் பேச்சிற்கு பதில் கொடுக்காமல் பிரார்த்தனா அந்த இரு மீன்களையே பார்த்துக் கொண்டிருக்க, மீன் தொட்டியை தன் உள்ளங்கையில் வைத்தவன்,

 

“ஏய்! ரெண்டு பேரும் என் பொண்டாட்டிய வளைச்சி போட பார்க்குறீங்களா. அவளை நான் யாருக்கும் தர மாட்டேன். அவளுக்கு பிடிக்கும்னு தேடிப்பிடிச்சி உங்களை வாங்கிட்டு வந்தா… என்னையவே ஓரம் கட்ட பார்க்குறீங்க.” என்றவன் அந்த மீனைப் பிடித்து கீழே போட போக,

 

“என்ன பண்றீங்க?” பதறினாள்.

 

“பின்ன என்ன தனா நானும் பார்த்துட்டே இருக்கேன் இதுங்க வந்ததுல இருந்து இதுங்க கூடவே இருக்க. என்னை கொஞ்சம் கூட கண்டுக்கவே மாட்டேங்குற.” 

 

மீன் தொட்டியை அவனிடமிருந்து வாங்கி அந்த மீன்களுக்கு உயிர் கொடுத்தவள் எழுந்து வேறு பக்கம் நடக்க ஆரம்பித்தாள். ஒரு நொடி அவள் செயலை உள் வாங்கியவன் எதுவும் உணராதது போல்,

 

“தனாமா மதியம் என்ன சாப்பாடு செய்யட்டும்?” கேட்டான்.

 

இவனை கட்டிய நாளிலிருந்து உணவின் மேலிருந்த ஆசை போய்விட்டது பிரார்த்தனாவிற்கு. அப்படி இருக்க எப்படி பதில் சொல்வாள்? மௌனமாக இயற்கை காற்றை சுவாசித்தவாறு தோட்ட பக்கம் நடந்து கொண்டிருந்தாள்.

 

“உன்கிட்ட தான கேட்கிறேன்” என அவள் முன்னாள் நின்றவன்,

 

“பிரியாணி செஞ்சி தருவா” கீழ் கன்னத்தை பிடித்து ஆசையாக கேட்டான்.

 

எதிரில் நிற்பவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. காதலிக்கும் பொழுது இருந்த பாவம் இப்பொழுது இல்லை. திருமணத்துக்கு பின் இருந்த கோபமும் இல்லை. இவை அவள் பார்க்காத புதுமுகம். இந்த முகம் கட்டியவனுக்கு பொருத்தமாக இருப்பதாக உள் மனது அறிக்கை வைக்க,

 

“என்னை சுத்தி என்ன நடக்குது” ஆரம்பக் கேள்வியில் வந்து நின்றாள்.

 

 

“வேற யாரும் இல்ல தனா நான் மட்டும் தான். என் செல்ல பொண்டாட்டி பின்னாடி நடக்குற தைரியம் எவனுக்கு இருக்கு.” 

 

“என்னோட கேள்விக்கான பதில் இது இல்ல.”

 

“இந்த பதிலையும் மனசார ஏத்துக்கலாம்”

 

“தயவு செஞ்சு உண்மைய சொல்லுங்க”

 

மனதுக்குள் படபடப்பு உண்டாவதை சாமர்த்தியமாக மறைத்தவன் அவள் முன்பு முட்டி போட்டு, “நீ எதைப் பத்தி கேட்கிறேன்னு புரியுது. அதுக்கான விடை என்கிட்ட இல்ல. கடவுள் சத்தியமா நான் உன்ன ரொம்ப காதலிக்கிறேன். கல்யாணத்துக்கு அப்புறம் நடந்ததெல்லாம் என்னையும் மீறி நடந்தது. உன்ன அந்த மாதிரி ஒரு நிலைமையில பார்த்ததுக்கு அப்புறம் தான் புத்தி தெளிந்து பழைய நிலைமைக்கு வந்திருக்கேன். திரும்பவும் அதை பத்தி பேசி என்னை அந்த மாதிரி ஆக்கிடாத தனாமா.” என பாவமாக அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டான்.

 

 

இவன் மட்டும் தான் அணைக்கிறானே தவிர அவள் அணைக்கவில்லை. மருத்துவமனையில் இருந்து இங்கு அழைத்து வந்ததுமே வீட்டைப் பற்றி கேட்க நினைக்க, அதற்கு முன்பாக முந்தி கொண்டவன்,

 

“கல்யாணத்துக்கு அப்புறம் இந்த வீட்ல தான் நீ இருக்கணும்னு பார்த்து பார்த்து ரெடி பண்ண வீடு இது. வீட்ல சின்ன வேலை இருந்ததால அங்க கொண்டு போய் வச்சிருந்தேன்.” என்றான்.

 

அவளுக்குள் பலத்த சந்தேகம் உருவாகி வாய் திறக்க போகும் நேரம், “அந்த வீடு கொஞ்சம் கூட ராசி இல்லை தனா. அந்த வீட்ல தற்கொலை பண்ணிக்கிட்ட ஆத்மா இன்னும் இருக்கு. அந்த பேட் வைப்ரேஷன் தான் என்னை அந்த மாதிரி மாத்தி இருக்கும்னு நினைக்கிறேன்.” என்று விட்டான்.

 

“யாரு?” 

 

“என்னது யாரு” 

 

“தற்கொலை பண்ணது?” என்றதும் சட்டென்று வேர்த்து கொட்ட ஆரம்பித்தது முகம். 

 

உடல் முழுதும் நடுக்கம் கொண்டு தலை சுற்ற வைத்தது. வீட்டில் நடந்த அத்துயரங்கள் வரிசையாக அவனுக்குள் வந்து போனது. கட்டியவனின் செயல்களைக் கண்டு சந்தேகம் கொண்டவள் லேசாக தோள் மீது கை வைக்க, 

 

“அம்மா!” என அலறினான் வீடு இரண்டாகும் அளவிற்கு.

 

அதில் பயந்து அவளும் கத்த, சுதாரித்து, “ஹா…ஹா…! பார்த்தியா பேசுனாலே அந்த ஆத்மா பயம் காட்டுது.” கை தட்டி சிரித்தான். 

 

நெஞ்சில் வைத்த கையை எடுக்காமல் கணவனையே பார்த்து முழிக்க, “இங்க வாடா” என தோளோடு சேர்த்துக் கொண்டவன்,

 

“நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல பழசை பேச வேணாம்னு. ஒரு டாக்டரா உனக்கு தெரியாததா. இப்ப இருக்குறது மட்டும் தான் நிஜம். சீக்கிரம் புரிஞ்சிக்க பாருடா. என்னால உன்ன விட்டு விலகி இருக்க முடியல.” உச்சந்தலையில் முத்தமிட்டான்.

 

***

 

“நல்லா வாய திற தனாமா. இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டா எப்படி. உடம்ப கவனிக்கனுன்னு எண்ணமே இல்ல உனக்கு. கோழி மாதிரி ஒவ்வொரு பருக்கையா தின்னுட்டு இருக்க.” 

 

இரவு பத்து மணி வரை சாப்பிட அழைத்தவன் தன் கோபத்தை மறைத்துக் கொண்டு ஊட்டி விட ஆரம்பித்து விட்டான். வேறு வழி இல்லாமல் வாய் திறந்தவள் அவனையே பார்க்க, எதையும் கருத்தில் கொள்ளாமல் கண்ணும் கருத்துமாக அவன் செயலில் இருந்தான். 

 

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” 

 

“என்னன்னு கேட்க மாட்டியா” 

 

“உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன்.” 

 

எதற்கும் வாய் திறக்கவில்லை பிரார்த்தனா. மனைவி செயலில் எரிச்சல் வந்தாலும் கட்டுப்படுத்தி இயல்பாக இருக்க முயன்றான். இவள் மனதை மாற்றியே ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு முழு சாப்பாட்டை ஊட்டி முடித்தவன் வாயை துடைத்து விட்டு, 

 

“டூ மினிட்ஸ்ல வந்திடுறேன்டா” கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு சென்றான்.

 

மூன்று நாளாக முத்தம் கணக்கில்லாமல் தொடர, சிறு பூரிப்பு இல்லை வாங்குபவளிடம். பலமுறை காதலிக்கும் போது தொட்டு பேசி இருக்கிறான். சில நேரம் நெருக்கம் கூட வெட்கி போகும் இருவரின் காதலில். அதிகம் முன்னேறுவது இவளாக தான் இருக்கும். முதலில் விலகுபவன் முடியாமல் சேர்ந்து கொள்வான். அப்பொழுதெல்லாம் தெரியாத அந்நிய தன்மை தாலி கட்டி உரிமையாக நெருங்கும் இந்த பொழுது தெரிகிறது.

 

 

தீவிர யோசனையில் இருந்தவள் சடாரென்று அந்தரத்தில் தொங்க, அதிர்வோடு தூக்கியவனை பார்த்தாள். அவனோ வாயெல்லாம் பல்லாக, “சர்ப்ரைஸ்!” நெற்றி முட்டி நடந்தான். 

 

இறங்க முயல்வதை உணர்ந்து சரவணன் உடல் விரைத்தது. முடியும் வரை கட்டுப்படுத்தி கார் வரை அழைத்து வந்தான். இறங்கியதும் வர மறுத்து நகர, “தனாமா” பின்னால் நின்று கட்டி அணைத்தான். 

 

“ப்ளீஸ்!” 

 

“என்னை பிடிக்கலையா”

 

“தள்ளி நின்னு பேசுங்க”

 

“நான் தான தனா…உரிமை இல்லையா”

 

“தள்ளுங்க!” வேகமாக தள்ளி விட, அடிக்க கை உயர்ந்தது.

 

பிரார்த்தனா திடுக்கிட்டு விலக, அவள் மீது இருக்கும் கோபத்தை கார் மீது காட்டினான்.‌ இடது பக்க கண்ணாடி தூள் தூளானது இருவரின் கண் முன்னே. 

 

“என்னடி உனக்கு இப்ப பிரச்சனை? அதான் சொல்றேன்ல நடந்த எல்லாத்தையும் மறந்திடுன்னு. வேணும்னு பண்ணாதானடி அதுக்கு ஒரு காரணம் சொல்ல முடியும். ஏன் பண்ண எதுக்கு பண்ணன்னு எனக்கே தெரியல. பைத்தியக்காரன் மாதிரி அது இதுன்னு செத்துட்டு இருக்கேன்.” தலையை சுழற்றியவன் அவள் கையை பிடித்திழுத்து,

 

“எத்தனை நாளா என்னை தெரியும் உனக்கு. அந்த மாதிரி பண்ற ஆளாடி நான்? கொஞ்சம் கூட உன் புத்தி யோசிக்காத. ஒரு டாக்டராக கூட என்னை புரிஞ்சிக்க மாட்டேங்குற. நான் எதுவும் தெரிஞ்சு பண்ணல…” ஆக்ரோஷமாக கத்தினான். 

 

 

அந்த சத்தத்தில் அரண்டு சமாதானம் செய்ய அவனைத் தொட, “தொடாத தள்ளிப்போ! எனக்கு ரொம்ப கோவம் வருது. நீயே என்னை புரிஞ்சுக்கலனா வேற யாரு என்னை புரிஞ்சிப்பா. எல்லாரும் சொல்ற மாதிரி உண்மையாவே பைத்தியக்காரன் ஆகிட்டேன் போல. இந்த பைத்தியக்காரன் கூட எதுக்கு வாழனும்னு தோணி தான இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க. போ… உனக்கு யார் கூட வாழனும்னு தோணுதோ அவன் கூட போ.” தள்ளி விட, விழ போனாள்.

 

அதற்குள் அவனே பிடித்து, “என்னை விட்டு நீ போற அந்த நிமிஷம் உன் முன்னாடி பிணமா இருப்பேன். அதை பார்த்துட்டு சந்தோஷமா வாழு.” என்றான்.

 

 

“சரவணா”

 

“நான் பண்ண எல்லாத்துக்கும் நீ தான்டி காரணம். உன் மேல நான் வச்ச காதல் தான் காரணம். என்னை விட்டு நீ போய்ட கூடாதுன்னு செஞ்ச எல்லாமே தப்பா போயிடுச்சு என்ன பண்ண சொல்ற. கடைசில மண்டை குழம்பி உன்னையவே காயப்படுத்திட்டேன். சொன்னா புரிஞ்சுக்க தனா நான் நானா இல்ல. எனக்கு என்னமோ ஆயிடுச்சு…” என்ற பின் அவள் முன்பு கண் கலங்க அமர்ந்து,

 

“பயமா இருக்கும்மா தனா. தயவு செஞ்சு என் நிலைமையை புரிஞ்சிக்க. இதுக்கு மேல சத்தியமா முடியாது. செத்து வேணா போறேன்.” கையெடுத்து கும்பிட்டான்.

 

 

உவர் நீர் வழிந்தோட வயிற்றோடு அணைத்து அவன் கண்ணீரை துடைத்தாள். உடனே அவளோடு இணைந்து கொண்டான். ஆறுதல் அளிக்க அவளும் இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு முதுகை தடவ,

 

“இது போதும் எனக்கு. உன்கிட்ட இருந்து இது மட்டும் தான் எனக்கு வேணும். என்னை சந்தேகப்படாத நீ நினைக்கிற மாதிரி நான் எந்த தப்பும் பண்ணல.” என்றவன் முகம் இத்தோடு பிரச்சனை முடிந்தது என்ற நிம்மதிக்கு மாறியது.

 

 

அவ்வளவு எளிதில் முடியாது என்பதற்கு சாட்சியாக சில நிமிடங்கள் கழித்து அவனை விட்டு விலகியவள், “எல்லாத்தையும் நான் புரிஞ்சுக்கிறேன் சிலதை தவிர. எதுக்காக என்னை அந்த வீட்ல கொண்டு போய் அடைச்சு வச்சீங்க.” ஆரம்பித்தாள். 

 

“யாருக்கோ துரோகம் செஞ்சிட்டதா சொன்னீங்களே யாரது? வீட்டை விட்டு போகும்போது தடுக்காம இனி இப்படி பண்ணா ஓடிப் போயிட்டேன்னு சொல்லுவேன்னு சொன்னீங்களே ஏன்? போன உடைச்சீங்களே ஏன்?”

 

 

“ஏன்னா உன்னை எனக்கு பிடிக்கல. உன்ன டார்ச்சர் பண்ணனும்னு அங்க கொண்டு போய் வச்சேன். இந்த பதிலை தான நீ என்கிட்ட எதிர்பார்த்த அப்படியே வச்சுக்க. நான் கொடுமைகாரன்… சைக்கோ… கொலைகாரன். இங்க கூட உன்னை கொண்டு வந்து அடைச்சி தான் வச்சிருக்கேன். என் கூட வாழாத தப்பிச்சு போயிடு.” வெறி பிடித்து காரை மேலும் சேதப்படுத்தியவன் அங்கிருந்த பூத்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தான்.

 

பிரார்த்தனா தடுப்பதையும் மீறி தன் கோபம் அனைத்தையும் வெளிகாட்டியவன் அங்கிருந்து விறுவிறுவென கிளம்பி விட்டான். வீட்டை விட்டு வெகு தூரம் வந்தவன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு தப்பித்த நிம்மதியில் பெருமூச்சு விட்டான். 

 

“எதுக்குடா இப்ப பெருமூச்சு விடுற? நான் தான் சொன்னேனே இனிமே நீ தப்பிக்க முடியாதுன்னு. திரும்ப வீட்டுக்கு போக தான் போற அவ கேட்க தான் போறா.” மறு உருவம் உள்ளிக்குள் குரல் கொடுத்தது. 

 

 

“இல்ல, இனிமே தனா இதை பத்தி கேட்க கூடாது.”

 

“அதுக்கு மட்டும் வாய்ப்பில்ல ராசா.” என்ற மனசாட்சியை கடுமையாக திட்ட, “என்னை திட்டுறதை விட்டுட்டு உருப்படியா எதை

யாது செய்ய பாரு நான் கிளம்புறேன்.” இவனுக்கு தனிமை கொடுத்துவிட்டு அது மறைந்து விட,

 

“இதான் கடைசி…இதுக்கு அப்புறம் தனா எதை பத்தியும் பேச மாட்டா. பேசவும் விட மாட்டேன்.” என்ற உறுதிமொழி எடுத்தான். 

 

தேசம் தொடரும்

அம்மு இளையாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்