Loading

புகழைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவள், அப்படியே கண்ணயர்ந்து விட, காரினுள் அமர்ந்திருந்த படியே புகழும் உறங்கி விட்டான்.

மறுநாள் பொழுது அழகாகப் புலர, ஜன்னல் திரையை விலக்கினாள் ஹரிதா. வெளியில் புகழின் மகிழுந்து நிற்பதைக் கண்டு, ‘இவரு என்ன காலைலயே வந்துட்டாரா?’ எனக் குழம்பியவள், அப்போது தான், இரவு நிறுத்தப்பட இடத்திலேயே கார் நிற்பதைக் கண்டு, மெதுவாக வெளியில் சென்றாள்.

கார் ஜன்னலின் வழியே உள்ளே பார்த்தவள், அங்கு புகழ் சீட்டைச் சாய்த்து உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு என்னவோ போல் ஆகிவிட்டது.
அந்தக் கதவைத் தட்டியவள், அவன் விழிக்காமல் இருப்பதில் மேலும் அழுத்தித் தட்ட, அதில் உறக்கம் கலைந்தவன், அதன் பிறகே காரினுள்ளேயே உறங்கி இருக்கிறோம் என்றே புரிந்து, ஹரிதாவைப் பார்த்தான்.

அவள் அவனை முறைத்து விட்டு, வீட்டினுள் சென்று கதவைத் திறந்து வைக்க, ‘ஓ மேடம் எங்களை உள்ள வான்னு கூப்பிட மாட்டீங்களாக்கும்!’ என்று சிறிதாய் சிரித்தவன், காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

அதில், அவளுக்குத் தான் புசு புசு வெனக் கோபம் வந்தது. ‘தேவையா உனக்கு இது? மூடிக்கிட்டு வீட்ல இருக்காம, பாவம் பார்த்தீல. உனக்கு இது தேவை தான்’ எனத் தன்னையே திட்டிக் கொண்டவளுக்கு, அவன்மேல் கோபம் கோபமாக வர, அதனை அடக்கிக் கொண்டு, அலுவலகத்திற்கு கிளம்பலானாள்.

நேராக, அவளின் அலுவலகம் சென்றவள், சாத்விக்கின் அறைக்குள் நுழைந்து, அவளின் ராஜினாமா கடிதத்தை நீட்ட,
அவன் “ஹரி, சாரி பா. அவன் என் ஃப்ரெண்டுன்னு உன்கிட்ட சொல்லாம இருந்தது தப்பு தான்” என்று விளக்க முயல,
அவள் அவனை நிறுத்தி, “நான் இங்க வந்தப்போவே, உனக்கு நான் தான் அவரோட வைஃப்ன்னு தெரியும். அப்படித்தான? அவரு வைஃப் என்றதால் தான் நீ என்கிட்ட ஃப்ரெண்டு ஆன அப்படித்தான?” எனக் கேட்டாள் கூர்பார்வையுடன்.

சாத்வியோ “நான் உண்மையாவே உன்னை என் ஃப்ரெண்டா தான் நினைச்சேன். நீயா உன்னைப் பத்தி சொல்லுவன்னு வெயிட் பண்ணேன். ஒருவேளை நீ சொல்லிருந்தா, நானும் சொல்லிருப்பேன்” என்று தீர்க்கமாகக் கூறியவனை, கடுமையாக முறைத்தவள்,
“அதான் இப்போ எல்லாம் தெரிஞ்சுருச்சுல. நான் வேலையை விட்டுப் போறேன்.”

சாத்விக், “ஹரி, அவன் என் ஃப்ரெண்டா இருந்தாலும், என்னோட முழு சப்போர்ட் உனக்குத் தான்…! அவன் எந்த அளவு எனக்கு முக்கியமோ, அதைவிட எனக்கு நீயும் முக்கியம்! அவன் திடீர்னு இங்க வருவான்னு நானே எக்ஸ்பெக்ட் பண்ணல, நீ மீட்டிங் வர்றதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி தான், அவன் வர்றான்னே எனக்குத் தெரியும்” என்றவன், “ப்ளீஸ் ஹரி, எனக்காக! இந்த ஒரு தடவை மன்னிச்சுடேன்” எனக் கெஞ்சிட,
அதில் சற்று சமாதானம் ஆனவள், “சரி அவரு எதுக்கு மீட்டிங் வந்தாரு” எனக் கேட்டாள்.

அவன் பேந்த பேந்த விழித்து, “அது, இங்கே ஏதோ ஹோட்டல் கட்டப் போறானாம். அதான் வந்துருக்கான்” என்றவன்,
“நீ இன்னும் என்மேல கோபமா தான் இருக்கியா?” எனக் கேட்க,
அவள் பெருமூச்சு விட்டு, ‘இல்லை’ எனத் தலையாட்டினாள்.

அவன் அதனைப் பயன்படுத்தி “அப்போ நான் ஒன்னு சொன்னா கேட்பியா ஹரி?” என்று தூண்டில் போட, அவள் என்னவென்று புரியாமல் பார்த்தாள்.

அது வந்து, “நம்ம நேத்து ஒரு மீட்டிங் போயிருந்தோம்ல, அந்த எம்டி, இந்த ‘சைட் ஒர்க்’ முடியிற வரை, அவர் ஆல்ரெடி இங்க வச்சுருக்குற ஹோட்டலையும், மேனேஜ் பண்ண ஒரு ஆள் வேணும்னு கேட்ருந்தாரு. இப்போ உடனடியா ஆள் எடுக்க முடியலையாம். அதோட நீ ஹெல்ப்க்கு இருந்தா பெட்டர்ன்னு ஃபீல் பண்றாங்க… உனக்கு ஓகே வா?” என்று கேட்டிட,
அவள் “எப்படி சாத்வி, ரெண்டு கம்பெனியிலேயும் ஒரே நேரத்துல வேலை பார்க்க முடியும்?” என்று குழம்பினாள்.

சாத்வியோ “இல்ல. அந்த ஹோட்டல் ஒர்க் முடியிற வரை, நீ அங்கேயே ஒர்க் பண்ணு. அதோட கொஞ்சநாள் தான, நான் டெம்பரவரியா பி.ஏ செலக்ட் பண்ணிக்கிறேன். ப்ளீஸ் ஹரி. நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டேன்.” என்று கெஞ்சுவது போல் கேட்க, இதன் உள்குத்தை அறியாமல்,
அவள் “சரி ஆனால்…” என்று இழுத்தாள்.

“ஆனா ஆவன்னா எல்லாம் இல்ல. உனக்கு என்மேல கோபம் இல்லைல, அப்போ எனக்காக நீ இதைப் பண்ணி தான் ஆகணும். கோபம் இருக்குன்னா விடு. நான் வேற ஆளை ‘ஹயர்’ பண்ணச் சொல்லிக்கிறேன்.” என்று முகம் சுருங்கிக் கூறியதும்,
அவள்தான் “சரி சரி, நான் போறேன். உன் ஃப்ரெண்டு கூட சேர்ந்து என் கூட ‘கேம்’ ஆடிட்டு, இப்போ நல்லவன் மாதிரி பேசுறதப் பாரு” என்றவள்,

“இன்னொரு தடவை இந்த மாதிரி பண்ணுன… அதோட நான் உனக்கு ஃப்ரெண்டுன்றதையே மறந்துடு” என்றதும், அவனுக்குக் கண்ணெல்லாம் வெளியே வந்துவிட்டது.

‘அய்யோ…! நடக்கப் போறது தெரிஞ்சா, என்ன பண்ணப்போறாளோ தெர்லயே’ எனப் புலம்பிக் கொண்டு,
“ஹரி அப்படியே இதுல சைன் பண்ணிடு” என்று ஒரு பேப்பரை கொடுத்தான்.

அவள் புரியாமல், ‘என்ன இது’ எனப் பார்க்க,

“அது, நீ அங்க ஒர்க் பண்ணப் போற தான, அந்த ஹோட்டல் ஒர்க் முடியிற வரை, அங்க தான் ஒர்க் பண்ணனும்னு அக்ரீமெண்ட். ஜஸ்ட் ஒரு 3 ஆர் 4 மந்த்ஸ்ல காண்ட்ரேக்ட் முடிஞ்சுடும் ஹரி. திடீர்ன்னு நீ வேலை பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டீனா, அதான் இந்த முன்னேற்பாடு” என்று அவள் கேட்கும் முன் அனைத்திற்கும் பதில் கூறியவனிடம்,

‘நான் ஏன் அப்படி சொல்லப் போறேன்’ என்று விட்டு, எதையும் யோசியாமல் கையெழுத்து போட்டு விட்டாள்.

அவனுக்குத் தான், ‘சே! இப்படி பொய் சொல்றோமே’ என்று குற்ற உணர்ச்சியாகப் போய் விட்டது. ‘சொன்னால் இவ முறைப்பா சொல்லலைன்னா அவன் அடிப்பான்… இருங்கடா நானும் கல்யாணம் பண்ணிட்டு உங்களை சுத்தல்ல விடுறேன்.’ என்று மனதில் சாபம் விட்டுக் கொண்டு,

அவளிடம், “பார்க்கிங்ல ட்ரைவர் இருப்பாரு… அவருக்கு அந்த ஹோட்டல் அட்ரஸ் தெரியும். நீ இப்போவே கிளம்புறியா?” எனக் கேட்க, அவள் “ம்ம்” என்று விட்டுக் கிளம்பினாள்.

புகழ் சென்னையில் ஹோட்டல் வைத்திருப்பதும், பல ஊர்களில் கிளைகள் வைத்திருப்பதும் அவள் அறிந்ததே. ஆனால், இவள் இப்போது இருப்பது கோவையில்.

இங்கிருக்கும் அவனின் வியாபாரங்களைப் பற்றி அறியாது, பலியாடாய் தலையைக் கொடுத்து, ஹோட்டலில் முன் சென்று நின்றவளுக்கு, ஒரே சந்தேகம்.
‘இதே மாதிரி தான, சென்னைல புகழ் ஹோட்டல் இருக்கும். ஒருவேளை அவரை மாதிரியே கட்டிருக்காங்களோ?’ என யோசித்து விட்டு உள்ளே சென்றவள்,

அந்த ஹோட்டலின் பெயர் ‘ரிதம்’ என இருக்க, அவனின் ஹோட்டல் பெயர் ‘ருசி’ தான என்று நினைத்து விட்டு, ரிசெப்ஷனில் சென்று நின்றாள்.
அங்கு, அவளைப் பற்றிய விவரம் வாங்கிய அப்பணிப் பெண், அவளை அமரச் சொன்னாள். அவளும் ஓரிடத்தில் சென்று அமர்ந்து, அந்த ஹோட்டலின் வடிவமைப்பை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது ஒரு குறுஞ்செய்தி அவளைத் தழுவியது.

பூத்திருந்த கண்களுக்கு அறுசுவை விருந்தாக…!
என் நெஞ்சம் சேர்ந்தென் மஞ்சம் சேரும்
விநாடிக்காக…!
சேர்த்திருக்கிறேன் சில ரிதங்களை…!

என்று வந்திருக்க, அதனைக் கண்டவள் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாள், ‘இங்கேயும் வந்துவிட்டாரா?’ என்று. அப்போது ஒரு பெண் அவளை வந்து அழைக்க, கண்களால் அவன் உருவத்தைத் தேடிக் கொண்டே, உள்ளே சென்றாள்.

எம்.டி என்று பொறிக்கப்பட்ட அறையைக் காட்டி, “ஹியர் இஸ் த ரூம் மேம்” என்று அப்பெண் சொல்லிட, அவளுக்குச் சிறு புன்னகையுடன் நன்றியைக் கொடுத்தவள், உள்ளே சென்று அங்கு இருந்தவனைப் பார்த்து, அதிர்ந்து விட்டாள்.

சரியாக அப்போது மற்றொரு குறுஞ்செய்தி, அவளை நோக்கி வந்தது. அவன் அனுப்பியது இதைத் தான்,

நின்விழி நாணம் காணவே…!
நெடுந்தவஞ் செய்கிறேன்…!
கோப ராகம் விடுத்து!
காதல் தாகம் தீரடி!!!

இதனைக் கண்டவள், அவனைத் தீயாக முறைக்க ஆரம்பித்தாள்.

அதில் அவள் எதிரில் இருந்த புகழ், “வெல்கம் ஸ்வீட்டி… நல்வரவு!” என்று வரவேற்க, அவள் வேகமாக வெளியில் செல்ல எத்தனித்தாள்.

உடனே, அவள் முன் சென்று நெருங்கி நின்றவன், “எங்கே போற ஸ்வீட்டி?” என்று குறும்பாகக் கேட்க,
“இது உங்க ஹோட்டலா? ஏன் என்கிட்ட பொய் சொல்லச் சொன்னீங்க? நீங்களும் அவனும் கூட்டா? என்னால இங்க இருக்க முடியாது” என்று பல்லைக் கடித்துக் கூறினாள்.

புகழ், வசீகரமாகப் புன்னகைத்து, “எஸ், இது நம்ம ஹோட்டல் தான். நான் உங்கிட்ட பொய் சொல்லல ஸ்வீட்டி. உண்மையிலேயே ஹெல்ப்க்கு ஆள் வேணும்னு சாத்விகிட்ட கேட்ருந்தேன். அண்ட் அவன் என் ஃப்ரெண்டு மட்டும் தான், கூட்டு பொரியல்லாம் இல்ல!” என்று அவள் கேட்ட கேள்வி ஒவ்வொன்றிற்கும் வரிசையாகப் பதில் சொல்லியவன் இறுதியாக,
“நீ இங்க தான் இருந்தாகணும் ஸ்வீட்டி. உனக்கு வேற வழியே இல்லை” என்று கொஞ்சும் குரலில் கூறிட, அவள் மேலும் கடுப்பானாள்.
அவன் விடாமல், அவள் கையெழுத்திட்ட அக்ரீமெண்டைக் காட்டினான்.

“மேடம், இங்க தான் ஒர்க் பண்ணுவேன்னு இதுல சைன் பண்ணிருக்கீங்க? அப்டி நீங்க இங்கே ஒர்க் பண்ணலைன்னா, நான் கான்டராக்ட்ட கான்செல் பண்ணிடுவேன்… காண்ட்ரேக்ட் கான்செல் ஆனா…!” என இழுத்தவனை,
‘நீ என்ன வேண்டும் என்றாலும் கூறிக் கொள்… நான் இங்க இருக்க மாட்டேன்’ என்று விறைப்பாக நின்றாள்.

புகழ் அவளின் குணத்தை அறிந்து, “இந்த ‘காண்ட்ராக்ட்ல’ ஒர்க் பண்ண நிறைய லேபர்ஸ், கூலி வேலை பார்க்குறவங்க, பிளா பிளான்னு எல்லாரோட வேலையும் போயிடும். அவங்களுக்கு நான் அட்வான்ஸ் வேற குடுத்துருக்கேன். அப்போ, அதெல்லாம் திரும்பிக் கேட்டா, அவங்களால எப்படி குடுக்க முடியும்?” என்று யோசனையுடன் கேள்விக்கணைகளை தொடுத்தவனைப் பார்வையால் சுட்டெரித்தாள்.
அவனுக்குத் தெரியும், இந்தக் கட்டட வேலை பார்ப்பவர்களின் வருமானத்திற்கும், அவர்கள் நலனிலும் அவள் அதிக அக்கறை காட்டுவாள் என்று. அதோடு, அவர்களுக்கு முன் தொகையும் கொடுத்தால், அவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்ற அவளின் யோசனையை, அவன் எப்போதோ நடைமுறைப்படுத்தி இருந்தான்.

“இங்க பாருங்க! தேவை இல்லாம ஏன் என்னை இப்படி டிஸ்டர்ப் பண்றீங்க! நான் தான், நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்ல…? அப்புறம் எதுக்கு என் கிட்ட வம்புக்கு வரீங்க?” என்றாள் காரமாக.

“ஸ்ஸ்ஸ் காலைல கார சட்னி சாப்பிட்டியா ஸ்வீட்டி? இவ்ளோ காரமா இருக்க…” என்றவன்,
கண்ணாடி டம்பளரில் தண்ணீரை ஊற்றி “இதைக் குடி, கொஞ்சம் காரம் குறையும்” என்று சற்று நக்கலுடன் கூற, அவளுக்குக் கோபத்துடன் அவனின் பிடிவாதத்தால் கண்ணும் கரித்தது.

உதட்டைக் கடித்து கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்தியவளை கண்டவன், பெரு மூச்சு விட்டு அந்த அக்ரீமெண்டை கிழித்துப் போட்டான்.
“இந்த அக்ரீமெண்ட்ட காட்டி, உன்னை மிரட்டியாவது என் கூட இருக்க வைக்கலாம்னு தான் நினைச்சேன். பட்… என்னால முடியல. ஐ ஆம் நாட் தட் டைப் ஆஃப் கை. யூ நோ தட் வெரி வெல்!!! ப்ளீஸ் ரித்து, எனக்கு ஒரே ஒரு சான்ஸ் குடு! இல்ல உனக்குப் பிடிக்கலைன்னா நீ போ!” என்று நலிந்த குரலில் கூறியவன், அவளுக்கு முகம் காட்டாமல் திரும்பி நின்றான்.

“என் கேள்விக்கான பதில் தெரிஞ்சா, நான் உங்களுக்கு ‘செகண்ட் சான்ஸ்’ குடுக்கறதை பத்தி யோசிப்பேன்!” என்றிட, அவன் இறுகி நின்றான்.

“ஏன் புகழ், என்னை உங்களை விட்டு போகச் சொன்னீங்க? நான் உங்களை விட்டுப் போனதுக்கு அப்பறமும், என்னை நீங்கத் தேட கூட செய்யல, நான் உங்களுக்கு அந்த அளவுக்குத் தேவையில்லாம போயிட்டேனா, இப்போ மட்டும், எங்கே இருந்து வந்தது உங்களோட இந்த அக்கறை…?” என்று கேள்வியாக ஆதங்கத்துடன் வினவ, அப்போதும் அவனிடம் பலத்த அமைதி.

சிறிது நேரத்தில், “இனிமே அப்படி பண்ணமாட்டேன் ரிது, என்னை நம்பு!” என்று அமைதியாகத் தலையைக் குனிந்து கொண்டு சொல்ல,
“அப்போ நீங்க சொல்ல மாட்டீங்க. இல்ல…” என்று எரிச்சலானவள்,
“இங்க என்ன வேலை எனக்கு? சீக்கிரம் சொல்லுங்க!”

அவன் சட்டென அவள் புறம் திரும்பி, “நீ என் கூட இருப்பியா ரிது?” எனக் கண்ணில் மின்னல் வெட்டக் கேட்டிட,

“நம்ம பேச்சு வேலை சம்பந்தப்பட்டதா மட்டும் இருந்தா நான் இங்க இருப்பேன்…! அதுவும் த்ரீ மந்த்ஸ் மட்டும் தான். சொல்லுங்க! என் வேலை என்ன?”

அதில் ‘அது போதும்டி என் வெல்லக்கட்டி…!’ என மனதில் நினைத்துக் கொண்டவன், அவளை ஒரு சேரில் அமரச் சொல்லி, அவளுக்கு அருகிலேயே சேரை இழுத்துப் போட்டவன், சில ஃபைல்களை காட்டி, அதிலிருந்து ஏதோ விளக்கம் கூறிக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் ஒரு ஆம்புலன்ஸ் அவர்களின் ஹோட்டலை கடக்க, இருவருமே ஃபைலை பார்ப்பதை விட்டு விட்டு, ஒருவரை ஒருவர் பார்வையால் தீண்டிக் கொண்டிருந்தனர் பழைய நினைவுகளில்.

…………………………

ஸ்ட்ரக்ச்சருடன் இருவர் உள்ளே நுழைவதைக் கண்டு, வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தவள், புகழைப் பார்க்க, அந்த நேரம் மணிகண்டன் பதறி அடித்து அங்கு வந்தார்.

“என்ன ஆச்சு எதுக்கு ஆம்புலன்ஸ் லாம் வந்துருக்கு… உனக்கு ஒன்னும் இல்லைல ஹரி” என்று கேட்டிட,
“எனக்கு ஒன்னும் இல்ல அங்கிள்… உங்க பையன் தான் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி விளையாடிட்டு இருக்காரு” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல,

அவன் அவளை முறைத்து விட்டு, ஆம்புலன்சில் வந்த ஓட்டுனரிடம் நாராசமாகத் திட்டும் வாங்கி விட்டு, ஒரு வழியாக அனுப்பி வைக்க, மணிகண்டன் நடந்ததை அறிந்து அவனைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்தார்.

பின், அவரும் சென்று விட, அவள் சிரிப்பைத் தொடர்ந்தாள்.
அவள் சிரிப்பதைக் கண்டு கடுப்பானவன், “இப்படியா எழுதி வைப்ப…? நான் உனக்கு என்னமோ ஏதோன்னு பதறி ‘போன்’ பண்ணா, உனக்குக் காமெடியா இருக்கா?” என்று சற்று கோபமாகக் கடிந்து கொள்ள, அவள் முகம் சுருங்கிப் போனது.

“சாரி…” என்று மெல்லிய குரலில் அவள் கூறியதும்,

அவன் கலகலவெனச் சிரித்து, “பயந்துட்டியா? சும்மா லுலுலாய்க்கு திட்டினேன். ஆனால் இனிமே இப்படி டெத் நோட் சீன்லாம் உன் கதையில வைக்காதம்மா! முடியல திட்டு வாங்க” என்று கேலியாகக் கூற, அவனின் சாதாரண பேச்சில், சற்று மெல்லிய புன்னகையைக் கொடுத்தாள்.
அவள் சிரித்து கோபம் வந்தாலும், ஏன் அவள் வாடிய முகத்தைக் கண்டதும் இப்படி பேச்சை மாற்றினோம் என்றறியாது,
“சாரி. அம்மா அப்பா பத்தி, அப்பா சொன்னாரு” என்றான் சற்று வருந்திய குரலில்.

அதில் முணுக்கெனக் கண்ணில் நீர் கோர்க்க, அதனை அவனிடம் காட்டாது இயல்பாக இருக்க முயன்றவளின் முயற்சியை உணர்ந்தவன், “அவங்க இல்லைனாலும், உன்னை எப்போவும் பார்த்துகிட்டே தான் இருப்பாங்க. உன்கூடவே தான் இருப்பாங்க. இங்க உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்டே கேளு. என்னை உன் ஃப்ரெண்டா நினைச்சுக்கோ! ஓகே வா…?” என ஸ்நேகிதமாக, மென்மையாகப் பேசிட, அவள் “ம்ம்” எனத் தலையாட்டினாள்.

“சரி, நீ உன் டெத் நோட் ஸ்லீப்பிங்க கன்டின்யூ பண்ணு…! உன்னால இன்னைக்கு என் பொழுது சிறப்பா போயிடுச்சு” என்று நக்கலாகக் கூறியதில், அவனைப் பொய்யாக முறைத்தவள், அவன் செய்த வேலையை நினைத்துக் குறுநகை புரிந்தாள்.
……………………………………
“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்ற அலுவலகப் பெண்ணின் கதவு தட்டும் ஓசையில்,

ஹரிதா நிகழ்விற்கு வந்து அவளின் பார்வையை புகழிடமிருந்து திருப்பிக் கொள்ள, புகழ் தான், ‘கரடி… முக்கியமான ஃப்ளாஸ் பேக் போகும் போது வருது பாரு’ என்று முணுமுணுத்து விட்டு, “எஸ் கம் இன்!” என்றான்.

அவள் வந்து சென்றதும், மீண்டும் ஹரியைப் பார்த்தவன், அவள் அவனைப் பாராமல் ஃபைலை குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டதும், ஒற்றை விரலால், அவள் நாடியை பற்றி மெல்ல உயர்த்தினான்.அவனின் திடீர் தொடுதலில், குப்பெனச் சிவந்து விட்டவள், அவன் “ஐ லவ் யூ ரிது” என்றதில், சட்டென அவன் கையைத் தட்டி விட்டாள்.”வேலையைத் தவிர வேற பேசமாட்டேன்னு சொன்னீங்க…” என்று அழுத்திக் கூறியதில்,

“எஸ் ஸ்வீட்டி சொன்னேன். ஆனால், நீ மட்டும் ஃப்ளாஷ் பேக் போய் என்னை ‘சைட்’ அடிக்கலாம். அதையே நான் ப்ரசன்ட்ல பண்ணக் கூடாதா? ஹ்ம்ம்?” என்று குறும்பு பார்வைப் பார்த்து நக்கலாகக் கேட்க, அதில் அவள் மேலும் தடுமாறி விட்டாள். அவளின் கன்னச்சிவப்பை ரசித்தவன், அவளுக்குக் குறுஞ்செய்தி ஒன்றை பறக்க விட்டான்.

உன் கன்னத்து சிவப்போடு!
உந்தன் பட்டு இதழ்களும் ரத்தமெனச் சிவந்திட!
உதவிக்கு வந்திடவா
உயிரரசியே…???

அலைகள் தீண்டும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்