Loading

மாயோன் – 4

‘அபிமன்யு’ என்ற பெயரை கேட்ட விக்ரமனின் முகம் நொடியில் மாறியது… அவன் முக மாற்றத்தை தனக்குச் சாதகமாகப் பார்த்த சத்யன், “என்ன சார் பதிலே காணோம்” என்று நக்கல் தொனியில் கேட்க…

கண்களை மூடி திறந்த விக்ரமன்… அடுத்தக் கணமே சத்யனின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்தவன்… “இதுக்கு மேல உன் வாயில இருந்து ஒரு வார்த்தை வந்தது… போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன். என்னைப் பத்தி உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்… என்னைக் கோபப்படுத்திப் பார்க்காத? அந்தச் சினிமாக்காரனை பத்தி நீ பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும் புரியுதா?” என்றவன் நன்றாகத் துப்பாக்கியை அவன் நெற்றி பொட்டில் வைத்து அழுத்தினான்.

விக்ரமனை மிரட்சியுடன் பார்த்த சத்யன், “சாரி சார் இதுக்கு மேல அதைப் பத்தி பேச மாட்டேன்…” என்று அவன் கண்களைப் பார்த்து கூற…

“ம்ம்ம்” என்ற விக்ரமன் துப்பாக்கியை எடுத்து தன் நெற்றியின் மீது வைத்து தட்டிக் கொண்டவன், ஏதோ எண்ணத்துடன் முன் இருக்கையில் இருந்த சத்யனை பார்த்து, “சாரி சத்யன்… கொஞ்சம் எமோசன் ஆகிட்டேன்… டோன்ட் மைண்ட்” என்று கூறினான்.

“ஐ னோவ் யூ! நான் எதுவும் தப்பா எடுத்துக்கல சார்?” என்று கூறி சத்யன் இதமாகப் புன்னகைக்க… தானும் அவனுடன் சேர்ந்து புன்னகைத்துக் கொண்டான் விக்ரமன்.

*****

நந்தினியோ கீர்த்திக்கு தேவையான அனைத்தையும் ஒரு பைல் போட்டு எடுத்து வைத்தாள்… அவளை நாளைக்கு ஊருக்கு அனுப்புவதற்காக…

அடுத்து நேராகத் தன் தாயை தேடி வந்தவள், வாசலில் நின்றவாறே, அறைக்குள் எட்டி பார்த்தாள். படுத்திருந்தபடி அவளது முகத்தைக் கண்ட அம்பிகா… வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு… தலையணையில் முகம் சாய்க்க… அதனைப் பார்த்து மெல்லிய வலி நிறைந்து புன்னகையை உதிர்த்தவள்… மெல்ல எட்டு வைத்து அவர் அருகில் சென்று அமர… அவரோ மற்ற பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

“அம்மா” என்ற நந்தினி அவரது கன்னம் தொட போக… அவளது கையைத் தட்டி விட்ட அம்பிகா, “என்னைத் தொல்லை பண்ணாம இங்க இருந்து கிளம்பு” என்றார் கோபத்துடன்…

“ஏன்மா நான் தொட கூடாதா” என்று கேட்ட நந்தினியின் கண் கலங்க, அதைக் கண்ட தாய் உள்ளத்தால் அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடித்து வைக்க முடியவில்லை. உடனே கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவர், “நீ ஏன்டி இப்படி எல்லாம் பண்ண… அம்மா உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சி இருந்தேன் தெரியுமா? மகிழன் பாவம்டி ரொம்ப நல்லவன்… அவனுக்கு நீ பண்ணது துரோகம்டி இந்தப் பாவத்தை நம்ம எங்க போய்த் தொலைக்கிறது” என்று அவர் கண்களில் கண்ணீருடன் பேசினார்.

“புரியுது ம்மா… தப்பு தான், ஆனால் எல்லாமே கைமீறி போச்சு ம்மா… இனி ஒண்ணுமே பண்ண முடியாது” என்று நந்தினி வலியுடன் கூறினாள்.

“இல்லை நந்தினி… இப்போ கூட நீ சரின்னு சொன்னா கண்டிப்பா மகிழன் உன்னைக் கல்யாணம் பண்ணிப்பான். அவ்ளோ ஏன் இந்தக் குழந்தையைக் கூட அவன் தன் சொந்த குழந்தை மாதிரி பாசமா பார்த்துப்பான். அவன் அவ்ளோ நல்லவன்டி கண்டிப்பா உன்னை ஏத்துப்பான்” என்று அவர் ஆர்வத்துடன் கூற… விரக்தியா சிரித்தாள் நந்தினி.

“நல்லவனா ஒருத்தன் இருந்தால் அவனை எப்படி இளிச்சவாயனா, ஆக்கலாம்னு தான் இந்த உலகம் யோசிக்கும் போல… ஏன் ம்மா… இதே மாமா உன்னோட பையனா இருந்து, அவருக்கு என்னை மாதிரி ஒரு பொண்ணை நீ கல்யாணம் பண்ணி வைக்கச் சம்மதிப்பியா? உன் மகன் என்றால் ஒரு நியாயம், அதே மத்தவங்க மகன் என்றால் வேற ஒரு நியாயமா? என்ன ம்மா இதெல்லாம்?” என்று அவள் வலியுடன் கேட்க…

“நந்தினி…” என்று அவர் பதறி விட்டார்.

“எனக்குப் புரியுது ம்மா நீ, நான் நல்லா இருக்கணும்னு நினைச்சி எனக்கும், மாமாக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுற… நீ சொல்லுறது உண்மை தான், கண்டிப்பா அவரு என்னை நல்லா பார்த்துப்பாரு…

என்னோட கடந்த கால வாழ்க்கையைப் பாத்தி, அவரு தவறி கூட என்கிட்ட கேட்டு என்னைக் காயப்படுத்த மாட்டாரு தான்.

என் மேல உள்ள அன்பால.. என்னோட இந்தக் குழந்தையைக் கூட அவரு நல்லா பார்த்துப்பாரு தான்.

ஆயிரம் மடங்கு சந்தோசத்தை எனக்குக் கொடுப்பார்… ஆனால் அவருக்கான சந்தோஷத்தை யாரும்மா கொடுப்பா? எல்லாத்தையும் மறந்துட்டு நான் அவரு கூட வாழ்ந்தாலும்… கடைசி வரை இப்படி ஒரு மனுஷனுக்கு ஆரம்பத்தில் இருந்து உண்மையா இருக்க முடியலையே அப்படிங்கிற குற்ற உணர்வு என் தலையை மண்ணுல புதைச்சாலும் மனசை விட்டு அகலாதேம்மா… போதும்மா அந்த மனுஷனை இப்போ வரை நம்ம சுயநலத்துக்காகத் தான் பயன்படுத்திக்கிட்டு இருக்கோமோன்னு ரொம்ப வலிக்குது ம்மா… அவரு நல்லவருங்குறதுக்காக நம்ம சுமையை அவர் தலையில சுமத்த பார்க்காதீங்கமா… இனியாவது அவரு நல்லா இருக்கட்டும்…”

“இல்லை நந்தினி… நான் வேணும்னா மகி கிட்ட” என்று அம்பிகா ஆரம்பிக்க…

“போதும் ம்மா… கடவுளுக்கு எச்சில் இலையில் படையல் போட வச்சி என்னைப் பாவி ஆக்கிடாத, நான் இதுவரை பண்ண பாவத்தையே எங்க போய்த் தொலைக்கப் போறேன்னு தெரியல…” என்று வலியுடன் கூறிவிட்டு வாசல் வரை வந்தவள்… ஒரு கணம் அம்பிகாவை திரும்பி பார்த்து “ம்மா நாளைக்கு நீங்க எல்லாரும் கோயம்புத்தூர் கிளம்பனும் தூங்குங்க”

“என்னடி சொல்லுற? என்ன திடீர்ன்னு”

“அது வேற ஒன்னும் இல்லைம்மா நீங்க அங்க இருக்குற கோவிலுக்கு எல்லாம் போகணும்ன்னு சொல்லுவீங்க இல்லை… அதான் கொஞ்ச நாள் எல்லாரும் அங்க தங்கி, கோவிலுக்கு எல்லாம் போய்ட்டு வாங்க…”

“எல்லாரும்னா அப்போ நீயும் வர்றியா”

“இல்லை ம்மா எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு… நீ, மாமா அப்புறம் கீர்த்தி எல்லாரும் போய்ட்டு வாங்க”

“நீ தனியா எப்படி டி? நீயும் எங்க கூட வா”

“புரிஞ்சுக்கோ ம்மா எனக்குக் கொஞ்சம் தனியா இருக்கணும், அது தான் நான் வரல… நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க” என்று அவள் ஏதோ காரணம் சொல்லி அம்பிகாவை சரி கட்டினாள்.

“சரி நந்தினி கீர்த்தி எங்க? அவள் இன்னும் காலேஜில் இருந்து வரலையா?” என்று அம்பிகா கேட்க…

“இல்லை ம்மா… மாமா அவளை அழைச்சிட்டு வருவதா சொல்லி தான் போனாரு… வந்திடுவாங்க… எப்பவும் போல அவரை ஏதாவது கடைக்கு அழைச்சிட்டு போய், ‘மாமா அதை வாங்கிக் கொடு, இதை வாங்கிக் கொடு’ன்னு சொல்லி தொல்லை பண்ணிட்டு இருப்பாள் வந்திடுவாங்க” என்று கூறி இயல்பாகப் புன்னகத்தபடி அவர் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

மகிழன் கீர்த்தியை அழைத்து வர கிளம்பும் போது தான்… அவளுக்கு விபத்து என்று வினோதினி கூற… பதறி அவள் கூறிய மருத்துவமனையை அடைந்திருந்தான் மகிழன்…

கீர்த்தியோ மெல்ல கண் சுருக்கி முழிக்க… அவள் அருகில் வந்தான் மகிழன், “டேய் பாப்பா என்ன ஆச்சுடா… இப்போ எப்படி இருக்கு” என்று அவன் ஆதரவாக அவள் தலையை வருடி கொடுக்க… அவளோ அவனைப் பார்த்து மெல்ல புன்னகைக்க முயன்றவள் மீண்டும் வலியில் முகம் சுருக்க… “ஒன்னும் இல்லைடா நீ ரெஸ்ட் எடு…” என்றவன் அங்கு நின்ற வினோதினியின் அருகில் வந்தான்.

“நீ வீட்டுக்கு போம்மா… நேரம் ஆச்சு நான் பாத்துக்கிறேன்… தனியா போய்டுவியா?” என்று அவன் கேட்க…

“அதெல்லாம் கவலைப்படாதீங்க அண்ணா… விட்டா நான் ஊரையே வித்துடுவேன்… நானே போயிக்கிறேன்” என்ற வினோதினி அங்கிருந்து செல்ல பார்க்க…

“நீ ஊரை மட்டுமில்லை உலகத்தையே வித்திடுவன்னு பார்த்தாலே தெரியுது. நான் ஆட்டோ பிடிச்சி கொடுக்குறேன்… நீ வீட்டுக்கு போய்ட்டு சொல்லு…” என்றவன் வெளியே வந்து வினோதினியை ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தான்.

அதனைக் காரில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர் விக்ரமனும், சத்யனும்…

“சார் எள்ளு எண்ணெய்க்கு காயுது… நான் எதுக்குக் காயனும்” என்று சத்யன், இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு வெளியே வாட்ச்மேன் வேலை பார்ப்பதை குறிப்பிட்டு கேட்க…

“என்னடா நக்கலா??? வர வர ரொம்பப் பேசுற சத்யன்…” என்று விக்ரம் கூற அமைதியானான் சத்யன்.

விக்ரமனோ காரில் அமர்ந்த படியே… மடிக்கணினியில் தன் வேலையைப் பார்க்க தொடங்கி இருந்தான். பின்னர் மெதுவாகப் பேச்சை தொடர்ந்த சத்யன், “பைல் நந்தினி கிட்ட இல்லைன்னா வேற எங்க போய் இருக்கும்” என்று கேட்க…

“அவள் பொய் சொல்லுறாள் சத்யன்… கண்டிப்பா பைல் அவள் கிட்ட தான் இருக்கும்… வேற யாருகிட்டயும் இருக்க வாய்ப்பில்லை… அதை எப்படியும் வாங்கிடலாம். பட்… அதுக்குள்ள… அந்த ரெண்டு பேரும் எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க வேண்டியது ரொம்ப முக்கியம்… ஆமா… மூணு வருஷம் அவள் பின்னாடி சுத்தினியே… அவனுங்க ரெண்டு பேரை பத்தி ஒரு க்ளூ கூடவா உனக்குக் கிடைக்கல?” என்று விக்ரமன் கேட்க, இதழ் பிதுக்கி கொண்டான் சத்யன்.

“நீங்க வேற சார்… அவளுக்கு ஒரு அத்தை மகன் இருக்கான் அப்படின்னு கூட அவள் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் என்கிட்ட சொன்னாள்… அந்த அளவுக்குக் கேடி, பயங்கர உஷார் பார்ட்டி… அவள் கிட்ட எல்லாம் ஒரு உண்மையை வாங்கணும் அப்படின்னா தலைகீழ நின்னு தண்ணி குடிச்சா தான் உண்டு… அப்போ கூட அவள் ஒரு உண்மையையும் சொல்ல மாட்டாள்… எனக்கு என்னமோ அவள் போன ஜென்மத்தில் சூர்ப்பனகையா பொறந்து இருப்பான்னு தோணுது… அரக்கி”

“ஓ அதுக்குத் தான் அவள் மூக்கை அறுத்தியோ?” என்று விக்ரமன் நக்கலாகக் கேட்க… சத்யனின் வாய் மூடி கொண்டது.

“ஒன்னு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ சத்யா… தன்னோட நலனை மட்டும் எண்ணி வாழுறவன் இந்த உலகத்துக்கு இன்னொரு உயிரை கொண்டு வர தகுதி இல்லாதவன்… நான் சொல்ல வருவது உனக்குப் புரியும்னு நெனைக்கிறேன்…” என்று கூற…

“புரியுது சார்… இப்படி நீங்க தப்பு சரி எல்லாம் பாக்குறதால!! நான் ஒன்னு கேட்கவா சார்?”

“ம்ம்ம் என்ன கேட்க போற? இந்தத் தப்பு, சரி எல்லாம் பிரிச்சி பார்த்து அவளை உயிரோடு விடப் போறீங்களா? அப்படின்னு கேட்க போற அது தானே”

“அதே தான் சார்” என்றான் சத்யன்.

“அது கண்டிப்பா நடக்காது சத்யன்… நாளைக்கு மட்டும் அவள் அந்தப் பைலை, பத்தியும், அவங்க ரெண்டு பேரை பத்தியும் சொல்லலைன்னா… அது தான் அவளோட கடைசி நாளா இருக்கும்… அவளுக்கு இந்தப் புத்தர் போதனை எல்லாம் சரி பட்டு வராது சத்யா… ரத்தம் பார்த்து பழக்க பட்டவளுக்கு… ரத்தத்தைக் காட்டி தான் புரிய வைக்க முடியும்…” என்ற விக்ரமனின், வார்த்தையிலும், கண்களிலும் அத்தனை வன்மம் வெளிப்பட்டது…

இங்கு மருத்துவமனையில் இருந்த மகிழனுக்கு நந்தினியிடம் இருந்து அழைப்பு வர… அழைப்பை ஏற்றவன், “ம்ம்ம் சொல்லு” என்று கூறிய அடுத்த நொடி. நந்தினி அழுதபடியே பேச தொடங்க… பதறிப் போனான் மகிழன்…

“என்ன ஆச்சு நந்தினி எதுக்கு அழற?”

“அது மாமா… அம்மா திடீரெனக் கீழ விழுந்து உடம்பு அசைவே இல்லாமல் இருக்கவும்… நான் பக்கத்துல இருக்கவங்களை உதவிக்குக் கூப்பிட்டு… அம்மாவை பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்கேன்… நீங்க கீர்த்தியை அழைச்சிட்டு உடனே வாங்க?” என்று நந்தினி கூற… மகிழனோ என்ன செய்வது என்று புரியாமல் வருத்தத்துடன் நின்றான்.

“நந்தினி இங்க பாப்பாவுக்கும் ஒரு சின்ன ஆக்சிடென்ட். அவளும் ஹாஸ்பிட்டலில் தான் இருக்கா…”

“அச்சோ அவளுக்கு என்ன ஆச்சு?”

“பெருசா ஒன்னும் இல்லை… சரி நீ இரு… நான் இங்க நர்ஸ் யாருக்கிட்டயும் கீர்த்தியை பார்த்துக்கச் சொல்லிட்டு வரேன்” என்றவன்… அங்கிருந்த நர்ஸ் ஒருவரிடம் கூறி விட்டு… தன் அத்தையைப் பார்க்க நந்தினி கூறிய மருத்துவமனைக்குச் சென்றான்.

அவன் வெளியே வருவதை யோசனையுடன் பார்த்த சத்யன்.. மடிக்கணினியில் வேலையாக இருந்த விக்ரமனிடம் கூற… அவனோ மகிழனை பார்த்து சலிப்பாக இருபக்கமும் தலை ஆட்டி கொண்டான்.

“பொறுப்பே இல்லை சார் இவனுக்கு… அந்தப் பொண்ணை ஹாஸ்பிட்டலில் தனியா விட்டுட்டு இந்நேரத்துல இவன் எங்க போறான்… ஒருவேளை இவன் எப்படியும் இப்படிப் பாதியில போயிடுவான்னு தான் நம்ம இப்படி நைட் வாட்ச்மேன் வேலை பார்க்கிறோமோ?” என்று அவன் சிரித்த படியே கேட்க… அவனை அனல் தெறிக்கப் பார்த்த விக்ரமன்… “மூடிட்டு வண்டியை எடு… யாரு எப்படிப் போனால் நமக்கென்ன…” என்றவன்.. ஒரு கணம் மருத்துவ மனையைப் பார்த்தவாறே சத்யனிடம் வண்டியை எடுக்கச் சொல்ல… அவனும் காரை எடுத்தான்…

இங்குக் கீர்த்திக்கோ ட்ரிப்ஸ் முடிந்திருந்தது. அதைக் கவனிக்காமல் அங்கிருந்த நர்ஸ் போனில் கேம் விளையாடி கொண்டிருக்க…

ட்ரிப்ஸ் முடிந்ததும் அந்தக் குழாய் வழியே கீர்த்தியின் கையில் இருந்து ரத்தம் மேலேற தொடங்கியது.

ட்ரிப்ஸ் முடிந்த உடன் ட்ரிப்ஸ் குழாய் வழியே, கீர்த்தியின் கையில் இருந்து ரத்தம் மேலேற… அவளது முகம் உடனே வலியில் சுருங்க ஆரம்பித்தது… அவளது முனகல் சத்தம் கூட அங்கிருந்த செவிலியர் காதில் கேட்கவில்லை…

விக்ரமனின் கார் நுழைவாயிலை நெருங்கிய நேரம் மனம் கேட்காமல், “டேய் வண்டியை நிறுத்து” என்று விக்ரமன் கூற… மெலிதாகச் சிரித்துக் கொண்ட சத்யன் வண்டியை நிறுத்தினான்.

“காலம் கடந்து காதல் வந்தால், உணர்வுகள் அதிகமா வெளிப்படும்னு சொல்லுவாங்க… அது உண்மை தான் போல” என்று சத்யன் கிண்டலாகக் கூறவும்…

அவனை முறைத்து பார்த்த விக்ரமன் “அப்போ எனக்கு வயசாகிடுச்சின்னு சொல்லுற? அப்படித் தானே!” என்று கேட்டான்.

“அப்போ நான் காதல்னு சொன்னது உங்களுக்குப் பிரச்சனை இல்லை? அப்படித் தானே” என்று அவன் எதிர் கேள்வி கேட்டான்.

அவனது கேள்விக்கு ஒரு முறைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்த விக்ரமன், நேராக மருத்துவமனையின் உள்ளே நுழைந்து கொண்டான்.

கீர்த்தி இருந்த அறைக்குள் விக்ரமன் மாஸ்க் அணிந்த படியே நுழைந்தான்… யாரோ கதவை திறப்பதை அறிந்து கொண்டு, அப்போது தான் அந்த நர்ஸ் நிமிர்ந்து பார்த்தாள்.

உள்ளே வந்த விக்ரமனின் கண்கள் அங்கே படுத்திருந்த கீர்த்தியின் மீது படிய… அப்போது தான் அவளது கையில் இருந்து குருதி, ட்ரிப்ஸ் குழாய் வழியே மேலேறுவதைப் பார்த்தான்.

உடனே சுற்றும் மறந்தவன் பதறியபடியே… அவள் கையில் இருந்து அந்த நீடிலை முறையாக நீக்கினான்.

அப்போது தான் அதனை அங்கிருந்த செவிலியர் பார்க்க… நெஞ்சம் படபடத்தபடி நின்றவள் உடனே தன்னைச் சுதாரித்துக் கொண்டு, தன் தவறை மறைக்கும் பொருட்டு… “யார் சார் நீங்க? நீங்க பாட்டுக்கு உள்ள வர்றிங்க?” என்று அவள் கேட்ட அடுத்த நொடி விக்ரமனின் கரம் அவளது கன்னத்தில் இடியாய் இறங்கியது.

அவன் அடித்த வேகத்தில் சுருண்டு கீழே விழுந்தவள்… ஒரு கையால் தன் கன்னத்தைப் பொத்தியபடியே அவனை ஏறிட்டு பார்த்தாள்.

“பண்ணுறதும் பண்ணிட்டு எவ்ளோ திமிரு இருந்தால் இப்படிப் பேசுவ?” என்றவன் மீண்டும் அவளை அடிக்கக் கை ஓங்க… அப்போது அங்கு வந்த சத்யன் அவனைத் தடுத்து நிறுத்தினான்.

“சார் விடுங்க… என்ன ஆச்சு…”

“விடு சத்யா… வேலையை ஒழுங்கா கவனிக்காமல் என்ன பண்ணி வச்சிருக்கா பாரு… நான் மட்டும் வரலன்னா என்ன ஆகியிருக்கும்… இவளை…” என்றவன் செவிலியர் கையில் வைத்திருந்த போனை பிடுங்கி சுவரின் மீது வீசி எறிந்தான்…
அது சுக்குநூறாக உடைந்து சிதறியது. அதனைப் பார்த்து பதறிய சத்யன்…

“சார் ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்” என்று கூறி விக்ரமனை சமாதானம் செய்ய முனைந்தான்.

“டாக்டர்ஸ் எப்படிக் கடவுளுக்குச் சமமானவங்களோ! அதே போலத் தான் செவிலியர்களும், இப்படிக் கொஞ்சம் கூட அதைப் புரிஞ்சிக்காம பொறுப்பில்லாமல் நடந்துக்கிற இவளை மாதிரி ஆளுங்க எல்லாம் இந்த இடத்தில் இருக்கத் தகுதி இல்லாதவங்க… இப்பவே மேனேஜ்மெண்ட்ல பேசி இவளை இந்த வேலையை விட்டு அனுப்பனும்.” என்று விக்ரமன் கோபத்துடன் கூற… பயந்து போனாள் அந்தச் செவிலிய பெண்.

“சாரி சார் இனிமேல் இந்த மாதிரி, தப்பு நடக்காது” என்று அந்தப் பெண் மன்னிப்பு கேட்கவும்… அவளைச் சலிப்பாகப் பார்த்த விக்ரமன் “தெரியாமல் தப்புப் பண்ணுறவங்களை மன்னிக்கலாம்… தெரிஞ்சே தப்புப் பண்ணுறவங்களை… என்னால ஒரு நாளும் மன்னிக்க முடியாது, நீ இந்தத் தொழிலுக்குத் தகுதி இல்லாதவள்” என்று கூறினான்.

“சார் ப்ளீஸ் என்மேல கம்ப்ளைன்ட் பண்ணிடாதீங்க… எனக்கு வயசான ஒரு அம்மா, ரெண்டு குழந்தைங்க, எல்லாரும் என்னை நம்பி தான் இருக்காங்க ப்ளீஸ் சார் வேண்டாம்”

“சோ வாட்… இது எல்லாம் நீ முன்னாடியே யோசிச்சி இருக்கணும்” என்று கூறியவன்… ஒரு நொடி யோசித்து விட்டு, “உன் பேர் என்ன?” என்று கேட்டான்.

அவளோ தயங்கியபடியே அவளது பெயரை கூறினாள்… அதனைக் கேட்டவுடன் உடனே வெளியே வந்து யாருக்கோ போன் செய்தான் விக்ரமன்.

“நான் விக்ரமன் பேசுறேன்” என்று கூற… அந்தப் பக்கம் அழைப்பை ஏற்றது இந்த மருத்துவமனையின் உரிமையாளர் ராஜன் (தனியார் மருத்துவமனை)

“சொல்லுங்க விக்ரமன் என்ன ஆச்சு எனக்குக் கால் பண்ணி இருக்கீங்க?” என்று அவர் பதட்டமாகக் கேட்க… அவனோ அனைத்தையும் கூறி முடித்தவன்… மீண்டும் அறைக்குள் வந்தான்.

பத்து நிமிடம் கழித்து மீண்டும் விக்ரமனுக்கு இந்த மருத்துவமனை உரிமையாளரிடம் இருந்து அழைப்பு வந்தது… “நான் எங்க ஹாஸ்பிட்டலில் கேட்டுட்டேன் விக்ரமன்… இது வரை அந்தப் பொண்ணு மேல எந்த மிஸ்டேக்கும் பதிவாகல… மேலும் 5 வருசமா எங்க ஹாஸ்பிட்டலில் தான் வேலை பாக்குறாங்க போல… கொஞ்சம் கஷ்டப்பட்ட பேமிலி… ஹஸ்பண்ட் வேற இறந்துட்டாரு போல… உங்களுக்கு ஓகேனா வேலையை விட்டு எடுத்திடலாம் விக்ரமன்… ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று அவர் கூற..

“வேண்டாம் முதல் முறை தானே ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம்” என்ற விக்ரமன் அங்கே பதட்டத்துடன் நின்ற அந்தச் செவிலியரை பார்த்து, “இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங், என் கண்ணு முன்னாடி நிற்காத முதலில் இங்க இருந்து போ…” என்று கூறினான். அவளோ விட்டால் போதும் என்று அங்கிருந்து சென்று விட்டாள்.

விக்ரமனோ இன்னும் கண் விழிக்காமல் இருந்த கீர்த்தியின் அருகில் உள்ள இருக்கையில் கோபம் குறையாமல் அமர்ந்திருந்தான்.

‘இவ்ளோ பிரச்சனை நடந்து இருக்கே கொஞ்சமாவது ரெஸ்பான்ஸ் இருக்கா பாரு’ என்று சத்யன் படுத்திருக்கும் கீர்த்தியை பார்த்துச் சொல்லிக் கொண்டான்.

“சார் இப்படியே இங்க இருக்குறதா பிளானா” என்று சத்யன் கேட்க… அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த விக்ரமன், “நீ வெளியே இரு” என்று கூறினான்.

“ஏன் சார் ஏதாவது முக்கியமான செயலா?” என்று கேட்டவன் பின் அசடு வழிய அவனைப் பார்த்தான்.

“வெளியே போடா… இவள் மாமன் திரும்பி வந்தா சொல்லு” விக்ரமன் கூற

“இவ்ளோ நாள் உங்க கூட இருந்து, இந்த ஒரு வேலையைத் தான் நான் பண்ணாமல் இருந்தேன், இன்னிக்கு அதையும் பண்ணனுமா?” என்று அவன் சலிப்பாகக் கேட்க…

“ஏன் பண்ண மாட்டியா?” என்று கேட்டு விக்ரமன் ஒற்றைப் புருவம் உயர்த்த… அமைதியாக வெளியே சென்றான் சத்யன்.

******
இங்கு அம்பிகாவை அட்மிட் செய்திருந்த மருத்துவமனைக்கு வந்த மகிழன், அங்கு விசாரித்து அவர்கள் அறையைத் தேடி பிடித்து வந்து சேர்ந்தான்.

அங்கு வந்த மகிழனின் கண்களில் பட்டது என்னவோ டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்த நந்தினி தான்.

நந்தினியிடம் பேசிவிட்டு டாக்டர் செல்ல… கண்களில் கலக்கத்துடன் திரும்பிய நந்தினி எதிரில் மகிழனை கண்டு ஊமையாக அழுதாள்.

“என்ன ஆச்சுக் கண்ணம்… நந்தினி?” என்று மகிழன் கேட்க, வலியுடன் அவனைப் பார்த்தவள், “அம்மாவுக்கு அதிக பிரசர்னால ஒரு பக்கம் கை, கால் வராமல் போயிடுச்சு மாமா…”

“என்ன சொல்லுற நந்தினி… தள்ளு” என்றவன் அவளை விலக்கி விட்டு அறைக்குள் சென்று பார்க்க… அங்கு அம்பிகாவோ கை, கால் இழுத்தபடி பெட்டில் படுத்திருந்தார். அதனைப் பார்த்த மகிழனின் கண்கள் கலங்கி போனது. அவர் அருகில் வந்தவன் “அத்தை” என்று அழைக்க, மெல்ல கண் திறந்தார் அம்பிகா.

மகிழனை கண்டு, “ஆ…ஹா..ஹ்ஹ” என்று அவர் ஏதோ பேச துடிக்க… அவரது உடல் அதற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் போகவே, அவரது வாயோரம் உமிழ் நீர் வழிய ஆரம்பித்தது… அதனை அருகில் இருந்த டிஷு பேப்பர் கொண்டு துடைத்து விட்டாள் நந்தினி…

“அத்தை ஒன்னும் இல்லை எல்லாம் சரி ஆகிடும்” என்று மகிழன் அவரைச் சமாதானப்படுத்த, அம்பிகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அவரது கஷ்டத்தைப் பார்க்க முடியாமல் வெளியே வந்தான் மகிழன். அவனைத் தொடர்ந்து நந்தினியும் வெளியே வந்தாள்.

“அப்படி என்ன ஆச்சு நந்தினி? ஏன் இப்படி” என்று அவன் இயலாமையுடன் கேட்க…

“எனக்கும் தெரியல மாமா. அம்மா ரூம்ல ஏதோ சத்தம் கேட்டது. என்னன்னு போய்ப் பார்த்தால் அவங்க உடம்பு நடுங்க, தரையில் படுத்திட்டு இருந்தாங்க… நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க மாமா… அம்மாவுக்கு சீக்கிரமே சரி ஆகிடும்”

“ம்ம்ம்” என்ற மகிழன் அப்படியே சுவரில் சாய்ந்து நின்றான்.

“மாமா… கீர்த்திக்கு என்ன ஆச்சு அவளுக்கு எப்படி இருக்கு?”

“அவளுக்குச் சின்ன ஆக்சிடெண்ட் தான்… சரி நந்தினி நீ அத்தையைப் பார்த்துக்கோ நான் போய் ஸ்ருதியை பார்த்துட்டு வரேன்” என்று கூறியவன் அங்கிருந்து செல்ல போக… அவனது கையைப் பிடித்துத் தடுத்தாள் நந்தினி.

“மாமா இரு நானும் வரேன்”

“இல்லை நந்தினி நீ அத்தையைப் பார்த்துக்கோ… நான் போய் அவளைப் பார்த்துட்டு வரேன்”

“இல்ல மாமா எனக்கு அவளைப் பார்க்கணும் போல இருக்கு ப்ளீஸ். ஊசி போட்டு இருக்காங்க… இனி நல்லா தூங்குவாங்க இங்க எனக்குத் தெரிஞ்ச நர்ஸ் இருக்காங்க, அவங்க கிட்ட சொல்லிட்டு வரேன். அவங்க நம்ம வரும் வரை அம்மாவை கவனமா பார்த்துப்பாங்க” என்று கூறியவள்… அங்கு உள்ள நர்ஸிடம் கூறிவிட்டு, மகிழனுடன் சேர்ந்து கீர்த்தியை காண வந்தாள்.

******

இங்கு இன்னும் கண்விழிக்காமல் இருந்த கீர்த்தி மயக்கத்தில் இல்லை, தூக்கத்தில் இருந்தாள்.

படுத்திருந்த கீர்த்தியின் அருகில் வந்து நின்றான் விக்ரமன்… காற்றில் அலைபாயும் அவளது கூந்தலை காணும் போது, அவனது மனமும் அதற்கேற்ப அலைபாய்ந்து கொண்டு தான் இருந்தது.

அவள் பக்கம் அமர்ந்து கொண்டவன், தனது விரல் கொண்டு அவள் முகத்தில் படர்ந்திருந்த முடிகளை மெல்ல நீக்கினான். அவனது அந்த மெல்லிய தொடுகை பெண்ணவளுக்குச் சிலிர்ப்பை கொடுக்க… அவன் புறம் திரும்பி படுத்துக்கொண்டாள்.

இவ்வளவு நேரம் மயக்கத்தில் இருக்கிறாள்! என்று அவன் நினைத்திருக்க… அவளோ அவன் தொடுகைக்குச் சிலிர்த்து திரும்பி படுக்கவும், அதனைப் பார்த்து மெலிதாக இதழ் பிரித்துச் சிரித்துக் கொண்டான் விக்ரமன்.

மெல்ல அவள் காதோரம் மீசை முடி உரச குனிந்தவன், “உன்னை மனசு ரொம்பத் தேடுதுடி… என்னன்னு சொல்ல முடியாத ஒரு வலி என்ன ரொம்பக் காயப்படுத்துது. என் உணர்வுகளை உன்கிட்ட காட்ட முடியாமல்… தினம், தினம்… மனசு ரணமா வலிக்குதுடி… இந்த உணர்வுகளை எனக்குள்ள வச்சி வச்சி… என்னோட சுயத்தை நானே கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு இருக்கேன்… எனக்கு நீ வேணும்… இதுக்கு மேலையும் நீ இல்லாமல் என்னால இருக்க முடியாது… சீக்கிரமே உன்னை எனக்கே, எனக்கா என் பக்கத்துலயே வச்சிக்கப் போறேன்…” என்றவன் அவளது நெற்றியில் பட்டும் படாமல் ஒரு முத்தம் கொடுத்தான்.. அவளோ தூக்கத்தில் மெதுவாக முகம் சுருக்க… மெதுவாக அவளை விட்டு விலகினான்.

பின்னர்ப் புன்னகையுடன் அவளைப் பார்த்தவன்… தனது கழுத்தில் இருந்த. “vs” என்று எழுத்து பதித்த இரட்டை சங்கிலியை கழட்டி அதில் ‘s’ என்று எழுத்து இருந்த சங்கிலியை தன் கழுத்தில் போட்டு கொண்டவன்… ‘v’ என்ற எழுத்து பதிந்த சங்கிலியை, மெதுவாகக் கீர்த்தியின் தலையைத் தனது ஒற்றைக் கை கொண்டு தூக்கியவன், அவளது தூக்கம் கலையாமல், அதனை அவளது கழுத்தில் போட்டு விட்டான்.

 

பின்னர் மென்மை கொண்ட அவளது விரல்களை இதமாகத் தன் கைக்குள் அடக்கி கொண்டவனுக்கு… முதல் முதலாக அவளைப் பார்த்து ஞாபகம் கண் முன் வந்து போனது.

ஏ பெண்மையே! கர்வம் ஏனடி வாய் வரை வந்தாலும்
வார்த்தை மரிப்பது ஏனோ ஏனோ ஏனோ…
ஏ ஸ்வாசமே! உடல் மேல் ஊடலா…
என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாதே…..

நான்கு வருடங்களுக்கு முன்பு… அப்போது கீர்த்திக்கு வெறும் பதினாறு வயது தான்… தெருவில் தனது நண்பர்களுடன் ஹோலி விளையாடி கொண்டிருந்தாள்…

அவளது முகத்தில் கலர் அதிகம் பூசாமல் இருந்தது. காரணம் அப்போது தான் விளையாட்டை ஆரம்பித்து இருந்தனர்.

கீர்த்தியோ ஒரு பெண்ணைத் துரத்தி கொண்டு ஓடியவள், அந்தப் பெண்ணை நோக்கி கலர் பொடியை வீச, அது அப்போது டாக்டர் கோட்டில்… கம்பிரமாகக் காரில் இருந்து இறங்கிய விக்ரமனின் முகத்தில் பட்டது.

ஒருகணம் அவன் கண்ணை மூடி திறக்க… அவன் முகம் முழுவதும் கலர் நிறைந்திருந்தது…

அதனைப் பார்த்து தன் தளிர் நாக்கை கடித்துக் கொண்ட கீர்த்தி, அவன் அருகில் வந்து அவனது கையைப் பிடித்துக் கீழே இழுக்கப் பார்க்க… அப்போது தான் அவளை நோக்கி கிழே குனிந்து பார்த்தான் விக்ரமன்.

அழகான பிள்ளை முகம், அதிலே சிறு கள்ள தனம் கொண்டு அவனைப் பார்த்தவள்… “டௌன்” என்று கூற… அவனோ அவளைப் புரியாமல் பார்த்தவன் பின்னால் திரும்பிப் பார்க்க… அவளோ அவனது கைகளைச் சுரண்ட… அவனோ மீண்டும் குனிந்து அவளைப் பார்த்தான்.

“உங்களைத் தான் கொஞ்சம் டௌன் பண்ணுங்க” என்று அவள் பிள்ளை முகம் சுருங்கி… கண்கள் விரித்து அவனிடம் ஹிந்தியில் கூற… சிரித்த படியே அவனை நோக்கி குனிந்தான் விக்ரமன்…

அவன் முகத்தில் இருந்த கலரை தன் தளிர் கரம்கொண்டு கீர்த்தித் துடைக்க… அவனோ உறைந்து போய் நின்றான்… ஏனோ அவளது கையின் மென்மை அவனை உறைய செய்தது… மீண்டும், மீண்டும் அந்த மென்மை வேண்டும் என அவன் மனம் ஆசைப்பட்டது.

தன்னால் அவனது முகத்திலும், மார்பிலும் படர்ந்த நிறத்தை தன் கரம் கொண்டே அவள் நீக்க போராட… அதனைச் சிரித்த படியே பார்த்துக் கொண்டிருந்தான்…

“சாரி அங்கிள்” என்று அவள் பாவமாக அவன் முகம் பார்க்க… விக்ரமன் முகம் நொடியில் மாறியது.

“என்ன பார்த்தா அங்கிள் மாதிரியா இருக்கு?” என்று அவன் சற்று கோபத்துடன் கேட்க…

“ஆமா அங்கிள் நீங்க பெருசா இருக்கீங்க… அப்புறம் மீசை எல்லாம் இருக்கு” என்று செய்கை செய்தபடியே அவள் கூறும் போது விக்ரமனின் மனம் முதல் முறையாக அவளிடத்தில் மண்டியிட்டுப் பணிந்தது…

“சரி உன் பேரு என்ன?” என்று அவன் கேட்க… அவனைச் சந்தேகமாகப் புருவம் சுருக்கி பார்த்த கீர்த்தி.

“சொல்ல மாட்டேன்… தெரியாதவங்க கிட்ட எல்லாம் பேர் சொல்ல கூடாதுன்னு என் மகி மாமா சொல்லி இருக்காரு” என்று அவள் மூக்கு சிவந்து முகம் திருப்ப… அவளை அப்படியே அள்ளி கொள்ள ஆசை வந்தது விக்ரமனுக்கு… அந்தப் பொல்லாத ஆசையை முளையிலேயே கிள்ளி எறிய தவறியவன் தான் இன்று இப்படி நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்கிறான்.

“அப்போ தெரியாதவங்கள இங்க எல்லாம் டச் பண்ணலாமா?” என்று தனது நெஞ்சை குறிப்பிட்டு அவன் எதிர் கேள்வி கேட்க… அவளோ திருதிருவென முழித்தபடியே அவனைப் பார்த்தவள்,

“அது உங்க மேல நான் தானே கலர் போட்டேன் அது தான்… அதைத் துடைக்க ஹெல்ப் பண்ணேன்” என்று கூறியவள் இதழ் பிதுக்கி அவனைக் கோப பார்வை பார்த்தாள்.

“எதுவா இருந்தாலும் சரி இனிமேல் யாரையும் இப்படி இங்க எல்லாம் டச் பண்ணி பேச கூடாது புரியுதா?” என்று அவன் கூற…

“சரி அங்கிள் இனிமேல் உங்களை அங்க எல்லாம் டச் பண்ணி பேச மாட்டேன்” என்றவளை பார்த்துச் செல்லமாக முறைத்தவன்…

“என்னைத் தவிர, வேற யாரையும்னு சொன்னேன்” என்றான் அழுத்தமாக… அவன் ஏன் அப்படிப் பேசினான் என்று அவனுக்கும் தெரியவில்லை… அவனை மீறி அவன் உணர்வுகள் வெளிப்படுத்திய வார்த்தைகள் அது.

“புரியல அங்கிள்” என்று அவள் மழலையாய் முகம் சுளிக்க… அப்போது அவனுக்கு அழைப்பு வந்தது, போனை எடுத்தவன் திரையில் தெரிந்த, ‘தேவன் சக்ரவர்த்தி’ என்ற பெயரை பார்த்து விட்டுப் போனை ஆஃப் பண்ணி வைத்தான்.

“உனக்கு இப்போ எதுவும் புரியாது… உனக்குப் புரியுற வயசு வரும் போது நானே சொல்லி தரேன்” என்றவன் தன் காருக்குள் இருந்து ஒரு பெரிய சாக்லெட்டை எடுத்து அவள் கையில் கொடுத்தான்…

அதனைப் பார்த்து முகப் பூரிப்புடன், அவன் கையில் இருந்து வாங்கிக் கொண்டவள், “ஐய் பெரிய சாக்லேட் எனக்கா?” என்று ஆசையாகக் கேட்க…

“உனக்குத் தான்… ஆனால் இப்படித் தான் யாரு சாக்லேட் கொடுத்தாலும் வாங்குவியா?” என்று அவன் பொய் கோபத்துடன் அவளைப் பார்க்க…

அவன் கொடுத்த சாக்லெட்டை தனக்குப் பின்னால் மறைத்து கொண்டவள், “அப்போ திரும்ப கேட்பிங்களா? இது எனக்கு இல்லையா?” என்று அவள் பாவமாகக் கேட்டதைப் பார்த்த விக்ரமனுக்கு இப்போதே அவளைத் தூக்கி முத்தாட வேண்டும் என்ற ஆசை… பேயாகத் தலை விரித்து ஆடியது… (கிட்னி திருடன், அவள் குழந்தையா இருக்கும் போதே என்ன வேலை எல்லாம் பாத்து இருக்கான் பாருங்க! பிராடு டாக்டர்)

“இல்லை உனக்குத் தான், திரும்ப எல்லாம் கேட்க மாட்டேன். ஆனால் ஒரு கண்டிஷன்… நீ உன் பேரை சொன்னால் இந்தச் சாக்லேட் மட்டும் இல்லை இன்னும் நிறைய வாங்கித் தருவேன்” என்று அவன் கூற… பிள்ளை முகம் மாறாமல் அவனை முறைத்து பார்த்தவள்… சுற்றும் முற்றும் பார்த்தபடி அங்கிருந்து ஓடி சென்றாள்.

“ஏய்” என்று அவன் சிரித்தபடியே அவளை அழைக்க… அவளோ சற்றுத் தூரம் தள்ளி நின்றபடி “என் பேரு ஸ்ருதி… நல்லா இருக்கு இல்லை… எனக்கு இந்த ஒரு சாக்லேட் போதும்… சாரி அங்கிள்… பாய்” என்றவள் பட்டாம்பூச்சி ஆகச் சிறகடித்து அங்கிருந்து மறைந்து சென்றாள்.

அப்போது அவன் நெஞ்சில் பதிந்த அவளது ஓவிய முகம் இப்போது வரை ஆணியடித்ததைப் போல அவனது நெஞ்சில் பதிந்திருந்தது…

மாயோன்  அவனின் மலரோவியமாக அவள்? அவர்கள்!!

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்